அர்த்தனாரி தத்துவம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
 
Arth.jpg

பிருங்கி முனிவர் அதிதீவிர சிவபக்தர். ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன். கயிலைநாதன் தான் என்று உணர்ந்த பிருங்கி முனிவர் ஆழ்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்கிவந்தார். ஒரு முறை கையிலாயத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கும்போது அங்கே வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கிவிட்டு பார்வதியைத் திரும்பியும் பாராமல் சென்றதைக் கண்டு பார்வதி மனம் வருந்தினாள்.


இந்த பிருங்கி முனிவரை நம்மையும் வணங்கச் செய்ய வேண்டும் என்னும் ஆசையால் சிவனை மிகவும் நெருங்கி உட்கார்ந்தாள். அப்போதும் பிருங்கி முனிவர் வண்டு ரூபமெடுத்து சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நுழைந்து சிவனை மட்டும் வணங்கிச் சென்றார்.


இதனால் கோபமுற்ற பார்வதி , தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப் போகட்டும் என்று சபித்தாள். பிருங்கி முனிவரின் கால்கள் முடமாகிப் போனது, இறைவா காப்பாற்று என்று பிருங்கி முனிவர் வேண்டவே சிவன் அவருக்கு ஒரு ஊன்று கோல் அளித்தார்.


பார்வதி தன்னை அவமதித்த பிருங்கி முனிவருக்கு ஆதரவாக சிவன் செய்த செயலைக் கண்டு சிவனிடம் கோபித்துக் கொண்டு பூலோகம் வந்து தனக்கும் சிவனுக்கும் இடையே இடைவெளியே இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டு தவம் செய்ய ஆரம்பித்தாள்.


சிவன் ஒரு மர்மமான புன்னகையுடன் பார்வதியைத் தேடிக்கொண்டு பூலோகம் வந்தார். உமையே உன் தவத்துக்கு மெச்சினோம். இன்றிலிருந்து உனக்கும் எனக்கும் இடைவெளியே இல்லாமல் நாம் இருவரும் இணைந்தே இருப்போம் .நான் அதற்கு ஒரு வழி சொல்கிறேன் . நீ என்னுடன் கலந்துவிடுவாயாக. என்று கூறி பார்வதியை தன்னோடு சமபாகமாக இனைத்துக் கொன்டார்.

அதாவது சிவனும் பார்வதியும் ஒன்றாக இணைந்து இணைந்து பாதி சிவனாகவும் பாதி பார்வதியாகவும் ஒரே ரூபமாக மாறிக் காட்சி அளிக்கத் தொடங்கினர். இவ்வாறு தவமிருந்து தன் கணவனுடன் இரண்டறக் கலந்த நாள்தான் கேதார விரத நாள். சுமங்கலிகள் 21 நாள் விரதமிருந்துதீபாவளி தினத்தன்று அர்த்தநாரீஸ்வரரை பஞ்சாட்ஷர மந்திரத்தை தூய மனதோடு சொல்லி வேண்டினால் கணவனின் அன்பு கிடைக்கப் பெற்று , கணவனும் மனைவியும் தீர்க்கஆயுளுடனும், தீர்க்க சுமங்கலி பாக்கியத்துடன், தீர்க்க ஆரோக்கியத்துடனும் தீர்க்க ஐஸ்வர்யமாகவும் சகலவிதமான பாக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.


இந்த விரதம் இருக்கும் போது இலவம் பஞ்சில் நூற்கப்பட்ட இருபத்தோரு இழைகளை மஞ்சள் பூசி முதல் நாளிலிருந்து ஒவ்வொரு முடிச்சாகப் போட்டு தீபாவளி நாளன்று அந்த நூலை ஒன்றாக முடிச்சிட்டு பெண்கள் இடது கையில் கட்டிக் கொண்டு இறைவனை வணங்கி கணவனையும் வணங்கி கேதார விரத்த்தை நிறைவு செய்வர். ஆண்களும் இந்த இழையை வலது கையில் கட்டிக் கொள்ளலாம்.


கேதார விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கவேண்டும் என்று அம்பிகை வேண்டிக்கொள்ளவே சிவ. பெருமானும் அப்படியே ஆகுக என்று வரமளித்தார். இன்றும் சேலத்திலே திருச்செங்கோடு என்னும் திருத்தலத்தில் மலைமேல் சிவனும் பார்வதியும் இணைந்திருக்கும் இந்த அர்த்த நாரீஸ்வரர் திருக்கோலத்தை கண்டு வணங்கி மகிழலாம்.


அர்த்த என்றால் பாதி நாரி என்றால் பெண் ஆகவே தன்னுடலிலே பார்வதிக்கு பாதியை சிவன் அளித்த நாள் கேதார விரதம் . மலைமேல் இருக்கும் இந்த ஆலையத்தில் இன்னொரு சிறப்பு உண்டு. இந்த அர்த்த நாரீஸ்வர்ர் குடிகொண்டுள்ள கர்ப்பக் கிருஹத்தில் அர்த்த நாரீஸ்வரர் சிலாரூபத்தின் பாதத்தின் அடியில் ஒரு சுனை உள்ளது. அந்தச் சுனை எப்போதும் வற்றுவதில்லை. அர்ச்சகர் அர்ச்சனை செய்துவிட்டு அந்தச் சுனையிலிருந்து நீரை இரு கைகளாலும்பக்தர்களின் மீது அள்ளித் தெளிப்பார்.


இப்போது மானுட வாழ்வில் அர்த்தநாரி என்னும் தத்துவம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
உலகில் இருக்கும் எல்லா ஜீவராசிகளிடமும் சாத்வீகமும் , மூர்க்கமும் சேர்ந்தே இருக்கின்றன.
அதே போல் மனிதர்களிடமும் ஆண் பெண் வித்யாசமின்றி சாத்வீகமும் ,மூர்க்கமும் இரண்டும் இருக்கின்றன. "எல்லா ஆண்களிடமும் - தேவனும் , ராக்ஷசத் தன்மையும் சாத்வீகமும் மூர்கமும் எல்லா பெண்களிடமும் - தேவதையும் , ராக்ஷசத் தன்மையும் , சாத்வீகமும் , மூர்கமும் இருக்கிறது . நாம் எதை வளர்க்கிறோமோ அதற்கேற்ற பலன் அடையலாம் .ஆகவே நம் வாழ்க்கை நம் கையில்.


"திருமணம் என்கிற ஒரு புது பந்தத்தினால், வெவ்வேறு குடும்பப் பாரம்பரியம், வெவ்வேறு இயல்புகள், வெவ்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட இருவர், அதாவது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு கூறையில் , ஒரே இடத்தில், வாழ ஆரம்பிக்கிறார்கள்.

இருவருடைய குணாதிசயங்களும் ஒத்துப் போக வேண்டும். பாலுடன் நீரைச் சேர்த்தால் அந்த ரசாயன மாற்றம் நிகழ்ந்து இரண்டும் ஒன்றாகக் கலக்க அதற்குரிய நேரம் எடுத்துக் கொள்ளும். அப்படி இருக்க இரு வித்யாசமான குணாதிசயங்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு ஒத்துப் போய் இணைவதற்கு கால அவகாசம் வேண்டும். ஆகவே வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம் .


ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கல்யாணம் செய்துகொள்வது என்பது இயலாத காரியம். முழுமையாக புரிந்துகொள்ளல் முற்றிலும் இயலாத ஒன்று. முப்பது வருடம் ஒன்றாக வாழ்ந்த பிறகும் முழுமையாகப் புரிந்து கொள்ளல் , ஏற்படுவதும் இல்லை இதுதான் உண்மை.


ஆகவே ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் தவறு கண்ட இடத்தில், தைரியமாக ,ஆனால் மனம் புண்படாத வகையில் ,எடுத்துக் கூறி தங்களை தாங்களே சரி செய்துகொண்டு, சமன் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளலாம் .


அப்படி இல்லாமல் தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்று எண்ணி யதார்த்தமான உண்மைகளைச் சொல்வதற்கு கூட தைரியமில்லாமல் இருந்துவிட்டு பிறகு காலம் கடந்த பிறகு வருத்தப் படுவதில் அர்த்தமில்லை.
இப்போது திருமணம் ஆன சில காலங்களுக்குள்ளேயே விவாகங்கள் விவாகரத்துக்களாக மாறுவதற்க்கு மேற்கூறிய தைரியமில்லாமை தான் மூல காரணம். ஒரே கூரையின் கீழ் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும்போதே ஒருவரை ஒருவர் சார்ந்தும் வாழ ஆரம்பிக்கிறோம்.


ஆதலினால் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித் தனி அந்தரங்கம் , தனித்தனி சுதந்திரம் எல்லாம் உண்டு என்று ஒப்புக் கொண்டாலும் , தனித் தனி மரியாதை உண்டு என்று ஒப்புக் கொண்டாலும், தம்பதிகள் இருவருக்கும் பொதுவான அந்தரங்கம் பொதுவான சுதந்திரம் ,பொதுவான மரியாதை அன்பு , பாசம் ,நேசம் , எல்லாம் ஏற்படும், காலம் தான் தாம்பத்ய காலம் - அதற்குப் பெயர்தான் தாம்பத்யம்- இனிமையான தாம்பத்யம். இல்லையென்றால் அது வெறும் ஒப்பந்தம்தான்.


தாம்பத்யங்கள் வெறும் ஒப்பந்தங்களாக மாறக்கூடாது! இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன், அவள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் , என்று மூன்றாம் மனிதர்களைப் போல, ஒதுங்கி ஒதுங்கி பழகுவது வாழ்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும் .


“அழ அழச் சொல்பவர் தமர் “ என்று ஒரு பழமொழி உண்டு . நாம் சொல்லும்போது அவர்களுக்கு கோபம் வந்தாலும், வருத்தம் வந்தாலும் அதற்காக அவர்கள் நம்மை உதாசீனப் படுத்தினாலும் அவர்களுக்கும் நமக்கும் நன்மை தரக்கூடிய விஷயங்களை தைரியமாக சரியான நேரத்தில் எடுத்துச் சொல்லி புரியவைப்பது என்று பொருள்.
தெரிந்தோ தெரியாமலோ, தவறான பாதையில் செல்பவர்களை தட்டிக் கேட்கவும் நல்ல பாதையில் நடப்பவர்களை தட்டிக் கொடுத்து பாராட்டவும் நிச்சயமாக தைரியம் வேண்டும் ,அல்லது அந்த தைரியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


அப்போதுதான் அவர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றி நம்மையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். எவ்வளவு சொன்னாலும் கேட்ககாதவர்களை யாரும் மாற்ற முடியாது காலம்தான் ,அவர்களுடைய அனுபவம்தான் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.


“ இச்சகம் பேசுவது” என்று ஒன்று உண்டு. . மனதில் தீய எண்ணத்தை வைத்துக்கொண்டு நம் நன்மைக்காகப் பேசுவதைப் போன்ற தோற்றத்துடன் பேசுவதைத்தான் இச்சகம் பேசுவது என்பர். இது கேட்பவர்களுக்கு இதமாக இனிமையாக மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் கேட்பவர்களுக்கு பிற்காலத்தில் படு பயங்கரமான நஷ்டங்களையும் ஏற்படுத்தும். (உதாரணம் ராமாயணக் கூனி என்னும் மந்தரை)


சொல்பவர்களுக்கு உடனடியான லாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்று , ஆகவே நம் மேல் உண்மையான அக்கரை இருப்பவர்கள் இதமாக சொல்வார்கள், அதையும் தாண்டி நம் நன்மைக்காக இடித்துரைக்கவும் செய்வார்கள். இதம் , இச்சகம் , இடித்துரைத்தல் இந்த மூன்றிற்கும் உள்ள வேறுபாடுகளை உணரவேண்டும். இதை உணராதவர்கள்தாம் பிரிதல், விவாகரத்து புரிதல் என்கிற நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.


அர்த்தனாரி என்ற சொல்லுக்கு பாதி பெண் என்று அர்த்தம்.பாதிப் பெண் என்றாலே பாதி ஆண் என்றும் பொருள் வருமல்லவா. ஆகவே தாம்பத்யம் சிறக்க வேண்டுமென்றால் ஆணும் பெண்ணும் புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே இல்லறம் இனிமையானதாக இருக்கும்.


அதை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் வேண்டாத சுயகௌரவங்களை மனதில் கொண்டோ, அல்லது மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் வரும் தேவையற்ற துர்போதனைகளை மனதில் கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக வாழ ஆரம்பிக்கும் போதுதான் வாழ்க்கை சொர்கத்திலிருந்து நரகத்துக்கு தள்ளப்படுகிறது. ( உதாரணம் ராமாயணக் கைகேயி ).


திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்றொரு சொற்றொடர் உண்டு. அப்படி சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறதோ இல்லையோ, இணைந்து இயைந்து வாழ்ந்தால் சொர்கமாக மாற்றிக் கொள்ளும் வழி இருக்கிறது. இதில் விஞ்ஞான ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நிறைய பொருள் உள்ளது. இயற்கையாகவே ஆணும் பெண்ணும் கலக்காவிட்டால் அங்கு உயிர்கள் உருவாகவே முடியாது. உலகில் பிறந்த எந்த பிறப்பும் ஆண் தன்மையும் பெண்தன்மையும் கலந்து பிறந்ததே.


ஆணுக்குரிய தன்மை, பெண்ணுக்குரிய தன்மை இரண்டும் விகிதசாரக் கலப்பில் வித்யாசப் படலாம் ஆனால் கலப்பு இல்லாமல் இருக்கவே முடியாது. அந்த விகிதசாரம் எந்த அளவில் இருந்தால் குழந்தைகள் ஊனமில்லாமல் பிறக்கும் என்கிற அளவுகோலைத்தான் ஆன்மீக ரீதியாக ஜாதகப் பொருத்தம் என்றும் விஞ்ஞான ரீதியாக உடற்கூறுப் பொருத்தம் என்றும் சொல்கிறார்கள்.


ஆகவே ஆண் தன்மையோடு கலக்கும் பெண் தன்மையின், அல்லது பெண் தன்மையோடு கலக்கும் ஆண் தன்மையின் , விகிதசார மாறுதல், ஏற்றதாழ்வு, இவைகளினால்தான் ஆண் என்றோ பெண் என்றோ , அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட படைப்பான அலி என்றோ , அரவாணி என்றோ ஆகிறது.


பெண்கள் ஏழு பருவத்தைக் கடந்து வருகிறார்கள்
1. பேதை : ஐந்து வயதிலிருந்து ஏழு வயது வரை இருக்கும் பெண்களை பேதை என்பர் , ஏதுமறியாப் பேதை நான் என்று பழைய திரைப்படங்களில் வசனம் வரும் . இந்தக் காலங்களில் வெகுளி அறியாமல் கள்ளங்கபடம் இல்லாமல் இருப்பர் பெண்கள்.


2. பெதும்பை : - ஏழு வயதிலிருந்து பதினோரு வயது வரையில் பெண்களை பெதும்பை என்று சொல்வர். இந்தப் பருவத்தில் இருக்கும் பெண்கள் அப்போதுதான் ஓரளவு சுற்றுப் புறச் சூழலை மனதில் வாங்கி புரிந்தும் புரியாமலும் இருக்கும் பருவம்.


3. மங்கை :- பன்னிரண்டு வயதிலிருந்து பதிமூன்று வயது வரையில் இருக்கும் பெண்களை மங்கை என்று அழைப்பர். ,அதாவது ஆங்கிலத்தில் டீன் ஏஜ் தொடங்கும் பருவம் ஆகிய தர்ட்டீன் என்னும் பதிமூன்று வயதைத் தொடும் நேரம். இந்த நேரத்தில் அவர்களின் புரியும் உணர்வுகள், அதிகப்படும். உடலும் அதற்குரிய பருவத்தை அடைந்து பெரியவளாகும் தகுதியை அடையும் பருவம். இந்தக் காலங்களில் வீணான கற்பனைகள் வளரும். அவர்களது உடல் வளர்ச்சியை அவர்களே வியந்துகொள்ளும் காலம். அவர்களின் வாளிப்பை அவர்களே நேசிக்கும் காலம். தான் பெரிய அழகி என்று கருவம் வரும் காலம். பொதுவாக கருவம் வந்தாலே அடி விழும் என்கிற அனுபவம் கொண்ட பெரியவர்கள் எச்சரிக்கை செய்யும் காலம். அந்த எச்சரிக்கைகளை காதிலே வாங்காமல் உல்லாசமாகப் பட்டாம் பூச்சியைப் போல் ஓடி ஆடி மகிழும் காலம். இந்தக் காலங்களிதான் பல பட்டாம் பூச்சிகள் விட்டில் பூச்சிகளாக மாறி விளக்கை நோக்கி ஓடி அதிலே விழுந்து தம் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளும் காலம்.


4. மடந்தை :- பதினான்கு வயதிலிருந்து 20 வயது வரை பருவ காலம் என்று சொல்லக் கூடிய பருவம். இந்தப் பருவத்துப் பெண்களுக்கு மனதில் இயற்கை அளவில்லாத வரண ஜாலங்களை அள்ளி வீசும் .


5. அரிவை :- 20 வயதிலிருந்து 26 வயது வரை தன்னிச்சையாக முடிவெடுக்கும் பருவம்


தெரிவை : - 27 வயதிலிருந்து 31 வயது வரை எடுக்கபட்ட முடிவுகள் எப்படிப்பட்ட பலன்களைத் தருகின்றன. எங்கே தவறு செய்தோம், அல்லது எங்கே சரியான முடிவுகளை எடுத்திருக்கிறோம் என்று உணர்ந்து அதற்காக வருந்தவோ, அல்லது மகிழவோ செய்யும் காலம்


பேரிளம் பெண் – 32 வயதிலிருந்து நாற்பது வயது வறை விளைவுகளின் சுகங்களையோ அல்லது கனத்தையோ உணர்ந்து தன்னையே உணரும் காலம்.


கருப்பையில் கரு உருவாகும்போதே ( XY chromosomes make a man a man ) ( xx chromosomes make a woman awoman கலப்பின் விகிதாசாரத்தை வைத்து தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. XY கலப்பாக இருந்தால் ஆணாகவும் xx கலப்பாக இருந்தால் பெண்ணாகவும் , XXY அல்லது xxx கலப்பாக இருந்தால் திரு நங்கையாகவும் ஜனனமெடுக்கும் பிறவிகள்.
ஜாதகத்தில் ராசிப் பொருத்தம், நக்ஷத்திர பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம்,யோனிப் பொருத்தம் , தினப்பொருத்தம் ,மஹேந்திரப்பொருத்தம் இன்னும் பிற பொருத்தங்கள் பார்ப்பது வழக்கம்.


விஞ்ஞானத்தில் ரத்தத்திலுள்ள வகைப் பொருத்தம், ஜீன் பொருத்தம் குடும்ப பாரம்பரியப் பொருத்தம் இன்னும் பிற பொருத்தங்கள் . இவைகளை கணக்கில் கொண்டுதான் ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும். பொருத்தங்கள் சரியாக இல்லை என்றால் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.


இந்த உலகமே கணிதமயமானது. இங்கு பெரியோர்களால் வகுக்கப்பட்ட சாஸ்திரங்கள், அல்லது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நவீனவழி முறைகள் எல்லாமே பல வகையான கணிப்புகள் ,கணக்குகள்தாம்.


நமக்குப் புரியவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக எதையுமே ஒப்புக் கொள்ளாமல் , எந்த வழியில் பயணிக்க வேண்டும் என்கிற தெளிவில்லாமல் நம்மை நாமே குழப்பிக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள்தான், தடுமாற்றங்கள்தான் இப்போதய விவாகரத்துக்களுக்கு காரணம்.


பெண்ணுக்குளே ஆணும் உண்டு. ஆணுக்குள்ளே பெண்ணும் உண்டு ஒன்றுக்குள் இரண்டும் ஒன்றாகிப் பின் இரண்டாகி ,பின் பலவாகி மீண்டும் ஒன்றாவதுதான் உலக நியதி. அதுதான் அர்த்தநாரி தத்துவம்.
“வேதியல் படித்தால் தெரியும்
வேதம் படித்தாலும் புரியும்,
வேதியல் விந்தை வேதம் தான்
வேதியலின் தந்தை வேதம்
வேதியலின் வர்கமூலம்”
அன்புடன்
தமிழ்த்தேனீ


--Ksubashini 19:40, 18 டிசம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"http://www.heritagewiki.org/index.php?title=அர்த்தனாரி_தத்துவம்&oldid=11843" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 18 டிசம்பர் 2012, 19:40 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,089 முறைகள் அணுகப்பட்டது.