தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே!


இது என் மனதில் பல நாட்களாக இருந்த ஒரு சந்தேகம். தில்லையிலே குடி கொண்டிருப்பவர் கோவிந்தராஜர். அதிலும் அவரின் கதையும் அனைவரும் அறிந்ததே. மஹாவிஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கையில் ஆதிசேஷன் பாரம் தாங்காமல் தவிக்க, இறைவனைக் காரணம் கேட்கிறார். அப்போது தன் உள்ளத்துள்ளே நடனமாடும் நர்த்தனசுந்தரநடராஜரின் அருட்கோலத்தையும் நடனத்தையும் ரசித்தே தான் அஜபா ஜபம்(மனதிற்குள்ளாகவே ஜபித்தல், இதன் மேலதிக விளக்கம் இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல என்பதால் மன்னிக்கவும்) ஜபித்ததையும் கூறத் தானும் காணவேண்டும் என்று ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்துத் தில்லை வந்து வியாக்ரபாதரோடு சேர்ந்து திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதும், அங்கேயும் பெருமாள் ஶ்ரீகோவிந்தராஜராக வந்து ஈசனின் திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதாகவும், தாம் கண்ட இக்கோலத்தை இவ்வுலக மக்களும் காணவேண்டி அவ்வண்ணமே காட்சி தரப் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் பிரார்த்தித்ததும், அவ்வாறே இன்றுவரை இருவரும் காட்சி தருவது அனைவரும் அறிவோம். சிதம்பர ரகசியம் தொடருக்காக வேண்டிப் பல புத்தகங்களைப் படித்தபோதும், பல குறிப்புகளைத் தேடியபோதும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் அவர்கள் கீழ்க்கண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் பெருமாள் திருமொழியைப் பல்வேறு சமயங்களில் படிக்க நேர்ந்தபோதும் தில்லை விளாகம் ஶ்ரீராமரைப் பற்றித் தெரிய வந்தபோதும் இதுதான் சரியானதாய் இருக்கவேண்டும் எனப் புரிந்து கொண்டேன். பலநாட்களாய் மனதில் உருப்போட்டு வைத்திருந்த ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


தில்லையிலே நடராஜரும் கோவிந்தராஜரும் ஒருசேரக் கோயில்கொண்டு அனைவரையும் அருள் பாலித்து வருவதை அறிவோம். தில்லையம்பலம் பொன்னம்பலம் எனில் கோவிந்தராஜர் குடி கொண்டிருக்கும் கோயிலைத் திருச்சித்திரகூடம் என்கிறோம். ஆனால் நம் தமிழ்த்தாத்தாவுக்கோ திருச்சித்ரகூடம் என்றால் அங்கே ஶ்ரீராமர் அன்றோ குடியிருக்கவேண்டும். மேலும் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் அவர் ராமரைக் குறித்தே பாடியுள்ளாரே. ஒரு இடத்தில் பள்ளி கொண்ட பெருமானைக் குறித்து எதுவும் சொல்லவில்லையே என்றெல்லாம் யோசனை பிறந்திருக்கிறது. ஆகவே அவர் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பெருமாள் திருமொழியில் ராமாயண சம்பவங்களே இடம்பெறுவதால் ஶ்ரீராமரை மூலவராய்க் கொண்ட வேறொரு கோயிலே இது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்.


ஆனால் குலசேகராழ்வாரோ எல்லாக் கோயில்களிலும் உள்ள பெருமாளை ஶ்ரீராமராகவே கண்டார் என்பார்கள். உதாரணமாகத் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாளைக் கூட


மன்னு புகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்

கன்னிநன்மா மதிள்புடை சூழ் கணபுரத்தென் கண்மணியே

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ.”


என்ற தாலாட்டால் துதிக்கிறார். ஆனால் இதே குலசேகராழ்வார் திருச்சித்ரகூடம் குறித்த பாடலில்,


“தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்

திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை.”


என்று பாடி இருக்கிறார். ஶ்ரீராமன் எங்கெல்லாம் கோயில் கொண்டிருக்கிறானோ அங்கெல்லாம் மாருதியும் கட்டாயமாய் இருப்பான். ஆனால் சிதம்பரம் கோயிலில் மாருதி இல்லை. ஆனால் குலசேகராழ்வார் அதே திருச்சித்ரகூடம் குறித்த பாடல் தொகுப்பில் வேறொரு இடத்தில்


“தில்லைநகர் திருச்சித்ரகூடந்தன்னுள் அந்தணர்களொரு மூவாயிரவரேத்த”


என்றும் குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பிட்ட வரிகள் குழப்பத்தைக் கொடுக்கும். தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்கள் என்பார்கள் அல்லவா? ஆகவே மூவாயிரம் அந்தணர்கள் ஏத்திப் பாடிய காரணத்தால் தில்லைச் சிதம்பரத்தையே திருச்சித்ரகூடம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் அது தவறு என்பதே தமிழ்த்தாத்தாவின் கூற்று. அவர் சொல்லும் காரணம் வருமாறு:


தமிழ்த்தாத்தா வாழ்ந்த காலத்துக்கு சுமார் நூறாண்டுகள் முன்னர் பழைய தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள தில்லை விளாகம் என்னும் ஊரில் ஶ்ரீசீதா, லக்ஷ்மண, அநுமத் சமேத ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் விக்ரஹங்களோடு, ஶ்ரீநடராஜர், சிவகாமி அம்மையின் விக்ரஹங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கேள்விப்பட்ட தமிழ்த்தாத்தா செய்த ஆய்வில் இந்தத் தில்லை விளாகமே உண்மையான திருச்சித்ரகூடம் என்று கண்டறிந்திருக்கிறார். ஏனெனில் இந்த ஊரின் பெயரே தில்லை விளாகம் என்று இப்போது கூறுகிறார்கள். தில்லை சம்பந்தப்பட்டிருப்பதால் நடராஜர் இங்கே இருந்திருப்பதும் நிச்சயமாகிறது. அதோடு ஶ்ரீராமரும் இங்கே இருந்து கண்டெடுத்திருக்கிறார்கள் எனில் ஶ்ரீராமரும், நடராஜரும் சேர்ந்தே இங்கிருந்திருக்க வேண்டும். ஆகவே இதைத் தான் தில்லைத் திருச்சித்ரகூடம் என்றழைத்திருக்க வேண்டும். பின்னர் காலப்போக்கில் தில்லை விளாகம் என மாறி இருக்கலாம்.


அதிலும் ஶ்ரீநடராஜர் விக்ரஹம் அம்பல ஊருணி என்னும் குளத்தருகே கண்டுபிடிக்கப்பட்டதால் அம்பலம் ஒன்று இங்கே இருந்திருக்கிறது. ஆகவே திருவெண்காட்டை ஆதி சிதம்பரம் எனச் சொல்வதைப் போல் இதையும் இரண்டாவது சிதம்பரமாகச் சொல்லி இருக்கலாம். சிதம்பரம் தீக்ஷிதர்களில் சிலர் இங்கே இருந்து வழிபாடுகள் நடத்தி இருக்கலாம். மேலும் ஶ்ரீராமர், சீதா, லக்ஷ்மண, அநுமத் சமேதராய்க் காட்சி கொடுக்கும் சந்நிதிகளையே சித்ரகூடம் என்பார்கள். எப்படிப் பெருமாள் சந்நிதிகளில் கருடாழ்வார் முக்கியமோ அதைவிட முக்கியமாய் ஶ்ரீராமர் சந்நிதியில் அநுமன் இல்லாமல் இருக்கமாட்டார். ஆகவே தில்லை விளாகம் ஶ்ரீராமர் கோயிலையே தில்லைத் திருச்சித்ரகூடம், என்று அழைத்திருக்கவேண்டும். இந்தக் கோயில் விக்ரஹங்கள் அந்நியப்படையெடுப்பின் போது பூமியில் புதைக்கப்பட்டுப் பின்னர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டெடுக்கப்பட்டுக் கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. முதலில் ராமர் குடும்பத்தினரின் விக்ரஹங்களே கண்டெடுக்கப்பட்டாலும் இதற்குச் சுமார் 30 ஆண்டுகளிலேயே நடராஜர் விக்ரஹமும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 1862-ஆம் ஆண்டு ஶ்ரீராமர் குடும்பமும், 1892-இல் ஶ்ரீநடராஜர், சிவகாமி விக்ரஹங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஶ்ரீராமர் குடும்பத்தினரின் விக்ரஹங்களின் அமைப்பும், ஶ்ரீநடராஜர், சிவகாமி விக்ரஹ அமைப்பும் ஒரே மாதிரியாக இருந்ததாலும் இவை இரண்டும் ஒரு காலத்தில் ஒருசேரக் கோயில் கொண்டிருந்திருக்கவேண்டும் என்பதும் தாத்தா அவர்களின் தீர்மானமான கருத்து. ஆகவே தில்லைத் திருச்சித்ரகூடம் என்பது தில்லை விளாகமாகவே இருக்கவேண்டும். ஏனெனில் சீதா, லக்ஷ்மணரோடு மட்டும் ஶ்ரீராமர் இருந்து அருள்பாலிக்கும் தலங்களையே திருச்சித்ரகூடம் என்பார்கள். பட்டாபிஷேஹ ராமர் என்றால் சகலமான உறவினர்கள், நட்பு வட்டங்கள் சூழ அமர்ந்திருப்பார். ஶ்ரீராமர் தனித்து சீதையோடும், லக்ஷ்மணனோடும் இருந்தது பஞ்சவடியும், சித்ரகூடமும் மட்டுமே. இதிலே பஞ்சவடியிலே ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் சென்ற துக்கமான சம்பவம் நடந்ததால் சித்ரகூடத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, சீதை, ராமர், லக்ஷ்மணர் மூவர் மட்டும் அநுமனோடு காட்சி கொடுக்கும் தலங்களே சித்ரகூடம் எனப்படும். தில்லைவிளாகம் ராமர் மிகவும் பிரபலமானவர். 


கீதா சாம்பசிவம்

--Ksubashini 06:40, 22 டிசம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 22 டிசம்பர் 2012, 06:41 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,114 முறைகள் அணுகப்பட்டது.