மார்கழியும் திருவேங்கடத்தானும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


திவாகர்


திருவேங்கடமலையில் கோயில் கொண்டுள்ள திருவேங்கடவன் தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு அருள் பாலிப்பவன் என்பது இந்த கோயில் ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்போர் அனைவருக்கும் தெரியும்.


Govinda1.jpg
பொதுவாக பாரதத்தில், அதுவும் தென்னிந்தியப் பகுதிகளில், குறிப்பாக தமிழ் பேசும் பகுதிகளில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏராளமான கோயில்கள், மாட கோபுரங்கள், கோயிலுக்கான நந்தவனங்கள், நீர் நிலைகள் என எழுப்பப்பட்டன. எண் தோள் ஈசருக்கு எழுபது மாடக்கோயில் அமைத்தான் கோச்செங்கணான் எனும் சோழன் (ஐந்து/ஆறாம் நூற்றாண்டு) என்று ஒன்பதாம் நூற்றாண்டு திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். ஆதித்த சோழன் காலத்தில் (ஒன்பதாம் நூற்றாண்டு) காவிரிக்கரை ஓரம் எல்லாம் சிவ-விஷ்ணு ஆலயங்கள் எழுப்பப்பட்டன. பிற்கால பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்ட கோயில்களின் எண்ணிக்கை அளவிடமுடியாது. சைவத் திலகங்கள் நால்வரும், வைணவத் திலகங்கங்கள் பன்னிருவரும் ஒன்பதாம் நூற்றாண்டு முடிவதற்குள்ளேயே ஏராளமான கோயில் தெய்வங்களைப் புகழ்ந்து பாடிப் போய்விட்டனர். இவர்களுக்குப் பிறகும் ஆயிரக்கணக்கான கோயில்கள், பெருங்கோயில்கள் எழுந்தன. ஆனால் இத்தனை கோயில்களும் ஆகமவிதிகளுக்குட்பட்டுக் கட்டப்பட்டவையாகும். அந்த விதிகளின் படி கட்டுமானப் பணிகளைக் கட்டி எந்தக் கோவிலுள் எந்தத் தெய்வம் குடிகொண்டதோ அவர்களுக்கேற்ப பூசை ஆராதனைகளையும், வழிபாட்டு முறையையும் வகுத்துக் கொடுத்தனர். இந்த வழிபாட்டு முறையைத்தான் ஆதியிலிருந்து சிறிதும் பிறழாமல் எல்லாக் கோயில்களிலுமே பின்பற்றப்பட்டு காலம் காலமாக வழிபாடுகள் செய்யப்படுகின்றன.


ஆனால் ஆகம விதிகளுக்குட்படாத கோயில் ஒன்று உண்டென்றால் அது திருவேங்கடவன் கோயில் மட்டுமேதான். கி.பி, முதலாம் மூன்று-நான்கு நூற்றாண்டுகள் வரை அவன் வெறும் சிலையாகத்தான் மலைவாசிகளால் பூசிக்கப்பட்டான். அந்தச் சிலையோ மற்ற தெய்வங்கள் சிலை போல கிடையாது. சங்கு சக்கரதாரியான திருவேங்கடவன் மார்பில் மழுவும், உடம்பில் பாம்பும் படர்ந்து கிடக்கும். ஆகையினால் சிலையாக நின்றது துர்க்கையா, திருமாலா, சிவனா அல்லது முருகனா என்று சொல்லி அவனை ஒரு சமயத்துக்குள் கட்டி வைக்கமுடியாது. எத்தனையோ சமயங்களில் எத்தனையோ சச்சரவு வந்திடினும் சச்சரவுகள் அனைத்தையும் அவனே முன்னின்று தூண்டிவிட்டு பின் போக்கிக் கொள்கிறானோ என்றுதான் ஒவ்வொரு சமயம் தோன்றும்.


ஆக, ஏனைய ஆலயங்களில் உள்ள தெய்வங்களுக்கு பூசை செய்வது போல இவனுக்கு பூசை செய்வது இல்லை. திருவேங்கடவனின் ஆகமமே தனி.. அவன் பூசை கூட அவன் எப்படி விரும்புகிறானோ அப்படித்தான் நடக்கும் போல. நான்காம் நூற்றாண்டுவாக்கில் அவனுக்காக வேண்டி முதன்முதலாக ஒரு குளம் வெட்டப்பட்டது. இந்தக் குளம் கூட ஒரு தனிமனிதனால் தோண்டப்பட்டதாகச் சொல்வர். சில ஆண்டுகள் கழித்து அங்கு வேட்டையாட வந்த தொண்டைமான் எனும் பல்லவமன்னன் சிலையாக நின்றவனுக்காக வேண்டி, ஒரு கூரையும், தாழ்வாரமும் கட்டிக்கொடுத்தான். பின் படிப்படியாக அவன் கோயில் வளர்ந்தது. அவன் கோயில் மதிள்கள் மலைவாசி அரசனால் எழுப்பப்பட்டது. அவர்கள் துர்க்கையின் பக்தர்கள். அதனால் துர்க்கையின் வாகனமான சிம்ஹத்தை மதில் மேல் சிலையாக வடித்துப் பொறுத்தினார்கள். பிறகு பிற்கால பல்லவ மன்னர்கள் அந்தக் கோயிலுக்கு ஏனைய கோயில்களைப் போல சுற்றுப்பிரகாரங்கள், அங்கேயே மடைப்பள்ளி போன்றவை கட்டிக் கொடுத்தார்கள். சோழர்கள் காலத்திலும் இந்தக் கோயில் கட்டுமானப் பணியில் ஏதும் மாற்றமில்லை என்றாலும் ராமானுஜர் மட்டும் இந்தக் கோயிலுக்கான பூசை விதானங்களை ஸ்ரீவைஷ்ணவர்கள் மட்டுமே செய்யவேண்டிய்து (அது வரை அப்படி இல்லை) என்ற வரைமுறையைக் கொண்டுவந்தார். அப்படியும் திருவேங்கடவன் பூசை கைங்கரியங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. 15 ஆம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ச்சியுற்றதோடு மட்டுமல்லாமல் தென்னகமெங்கும் இந்துக்களுக்கும், கோயில்களுக்கு மிகப் பெரிய மறுமலர்ச்சியைத் தந்த விஜயநகர ராஜாக்கள்தான் முதன் முதலாக திருமலைக் கோயிலும் ஏனைய கோயில் போல ஆகம சாஸ்திரத்துக்கு உட்பட்டாகவேண்டும் என்று செயல்பட்டார்கள். ஆனாலும் மூலவருக்கான பழைய பூசை முறையில் ஒரு சில மாற்றங்கள் – அதாவது மார்கழியில் அவனுக்கு சேலைதான் ஆடை. திருப்பாவைதான் பள்ளியெழுச்சி, வில்வத்தால்தான் பூசை என வந்தது. மாதங்களில் சிறந்தது மார்கழி அல்லவா.. அந்த சிறந்த மாதத்தில் அவனுக்கு என்ன பிடித்ததோ அவைகள் எல்லாம் அவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அந்த ராஜாக்கள் ஏனைய மற்ற மாதங்களில் அவனோடு சம்பந்தப்பட்ட திருவிழாக்கள், உற்சவமூர்த்தி ஊர்வலங்கள் என்று விரிவுபடுத்தி, திருவேங்கடவனுக்கான ஒரு புராணக்கதையையும் உருவாக்கி அக் கதையையும் வெகுவாகப் பரப்பினார்கள். அப்படி எழுந்ததே இன்றைக்கு சொல்லப்படும் திருவேங்கட மகாத்மியம், ஆகாசராஜன் கதை, பத்மாவதி பரிணயம், ஸ்ரீனிவாசகல்யாணம் போன்றவை.


17-18,19 ஆம் நூற்றாண்டுகளில் பெரும் மந்த கதியை சந்தித்தது இந்தக் கோயில், வெள்ளைக்காரரகள் தேசமெங்கும் ஆட்சியைப் பிடித்துக் கொண்டு ஆரவாரம் செய்யும் அந்த இருநூறு ஆண்டுகளில் எவ்வித ஆரவாரமுமில்லாமல் மிக அமைதியாக தனக்கான பூசைகளைப் பெற்றுக்கொண்டிருந்தான் திருவேங்கடவன். ஒருகட்டத்தில் மேலே மலேரியா பரவுகிறது என்று சொல்லி மலை மேலே ஏறுவதற்குக் கூட வெள்ளைக்காரர்கள் கீழே உள்ளவர்களுக்கு தடை போட்டனர். (காரணம், மேலே போய்விட்டு கீழே வந்தால் வந்தவர்கள் மூலம் இவர்களுக்கும் பரவி விடுமே என்ற பயம்தான்).


எது எப்படியானாலும் திருமலையில் மூலவராய்க் கோயில் கொண்ட அந்த திருவேங்கடவன் மட்டும் தான் எப்படி ஆதியில் இருந்தானோ அப்படியேதான் இன்றும் இருந்து கொண்டு தனக்கான பூசைகளைப் பெற்றுக்கொள்கிறான் என்றே சொல்லவேண்டும். சாதாரண மாதங்களில் அவனுக்கு செய்யும் பூசையில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் இந்த மார்கழியில் அவன் தோற்றம் ஏதோ புதிய பொலிவுடன் இருப்பது போலத் தெரியும்.


ஒருநாளைக்கு இருபத்து நான்கு மணிநேரமும் தூங்காமல் நின்றுகொண்டு இந்த உலகைக் காத்து வருபவனுக்கு இந்த மார்கழியில் அதிகாலையில் சுப்ரபாதம் பாடுவது மாறி அவன் ஆடை மாறி, திருப்பாவைப் பாடல்களால் குளிர்விக்கப்படுகிறான். விதம் விதமான பூ மலர்களால் அர்ச்சிக்கப்படுபவன் அவன். ஆனால் இந்த சிறந்த மாதத்தில் மட்டும்தான் தான் என்றும் விரும்பும் வில்வ இலைகளை மட்டுமே ஏற்றுக்கொள்வான்.


ஏன், எதற்கு இப்படி இந்த மார்கழியில் மட்டும் மாற்றம் என்றால் என்ன சொல்ல முடியும்.. அது அவன் கருணை.. திருவேங்கடத்தான் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமல்லவா.. அவன் என்ன நினைத்து செயல்படுகிறானோ அதுதானே நடக்கும்.

--Ksubashini 18:29, 20 டிசம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 20 டிசம்பர் 2012, 18:29 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,462 முறைகள் அணுகப்பட்டது.