அன்றொரு நாள்-பிப்ரவரி - 26

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்


வீர சுதந்திரம் வேண்டி நின்றார், வீர சாவர்க்கர், 1905ல். தேசாபிமானத்தை நிலை நிறுத்த, முதல் முறையாக, விதேசி பகிஷ்காரம், அன்னியநாட்டுத்துணி எரித்தல் எல்லாம் செய்து புரட்சிக்கு வித்திட்டவர், அவர். வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களுக்கு ஆணிவேர் சுதந்திரம். கவிதை பாடினார், நூல்கள் வடித்தார். நாடகங்கள் எழுதினார். அடிப்படையில், வன்முறையில் நம்பிக்கை வைத்த புரட்சியாளர். அந்த வழியில் அரசியலர்,ஜாதி மதத்தை அறவே வெறுத்து. 1857ம் வருட ‘சிப்பாய் கலகத்தை’ முதன் முதலாக சுதந்திரப்போராட்டம் என்று புத்தகம் எழுதினார். அது தடையும் செய்யப்பட்டது. ஆர்வத்துடன் என் போன்றவர்களால் படிக்கவும் பட்டது. (எழுபது வருடங்களுக்கு முன்னாலேயே, தமிழாக்கம் இருந்ததாக, ஞாபகம்.) அவருக்கு ஹிந்துமத கோட்பாடுகள், மரபுகள், தொன்மை சமாச்சாரங்களில் ஆர்வம் குறைவு. பகுத்தறிவு, நாத்திகம், மனித நேய கோட்பாடுகள், ஆன்மீகத்தைத் தவிர்த்தத் தத்துவ விசாரணைகள், அதுவும் மேற்கத்திய போக்கில், மீது தான் ஆர்வம். எனினும், அவர் தான் ஹிந்துத்வம் என்ற ‘அகண்ட பாரத’ வழிமுறையை வகுத்தவர்.

நமது மெத்தனங்களில் ஒன்று, ஆளுமை ஒதுக்கினால், நாமும் ஒதுக்குவது. கண்டால் தான் காமாட்சி நாயக்கன்! யதா ராஜா! ததா கூஜா! இதை விட அநாகரீகமான அடிமைத்தளை வேறு ஒன்றுமில்லை. மனம் விட்டு பேசுகிறேன், வலி பொறுக்காமல். சர்தார் படேலுக்கு உதட்டளவில் மரியாதை. ஒரு படி கீழே நேதாஜிக்கு. ராஜாஜி என்றால் தள்ளுபடியே. ஏன்? இந்திரா காந்தி தலையெடுத்தபின் அத்தை விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு இருட்டடிப்பு. இந்த அழகில், வினாயக தாமோதர் சாவர்க்கரை ( 28 May 1883 - 26 February 1966) , அவரது அஞ்சலி தினமாகிய இன்று நினைவு கூர்ந்தால், யார் யார் கண்டனக்குரல் எழுப்புவார்களோ, யான் அறியேன். பொருட்படுத்தவும் இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே, என் மனசாக்ஷியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு. காங்கிரஸ் கட்சியை சார்ந்தது எங்கள் குடும்பம். இருந்தும், சிறுவனான என்னை, என் தந்தை வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களை தரிசிக்க, மதுரை ஹிந்து மஹா சபையின் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றார். அவருடன், டாக்டர் மூஞ்சேயையும், மற்றொரு தலைவரையும் (ஷியாம்பிரசாத் முக்கர்ஜி?) அருகிலிருந்து கண்டோம். பாரிசவாயுவினால் நலம் குன்றியிருந்தார், சாவர்க்கர், என்று ஞாபகம். 1966ல் சல்லேஹனம் இருந்து (உணவு, நீர், மருந்து எல்லாவற்றையும், சக்கரவர்த்தி சந்திரகுப்த மெளரியர் மாதிரி உயிரை பரித்யாகம் செய்து விடுவது) ஆத்மஹத்தி செய்து கொண்டார். அவரை பற்றி சில வார்த்தைகள்.

இங்கிலாந்தில், இந்திய விடுதலை புரட்சியாளன் என்று 1910ல் கைது செய்யப்பட்டார்; 50 வருட தீவாந்திர சிக்ஷை வழங்கப்பட்டது. தப்பித்து மார்ஸேல்ஸ் என்ற ஃப்ரென்ச் நகருக்கு ஓடிவிட்டார். பிடிப்பட்டு, இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டார். அந்தமானில் சிறை வைக்கப்பட்டார். அங்கு தான் ஹிந்துத்துவ தேசாபிமானம் என்ற கருத்தை, சிந்தித்து, சிந்தித்து, கோட்பாடாக வகுத்தார். சிறையில் அவருடைய தேகாரோக்யம் முழுதும் குலைந்தது. 1920லியே, திலகர், காந்திஜி, வல்லபாய் படேல் ஆகியோர் இவரது விடுதலையை கோரினர். காரணங்களும், கண்டனங்களும் பல கூறப்பட்டாலும், ஆங்கில அரசின் தயை நாடி, வன்முறையிலிருந்து விலகுவதாக மன்னிப்பு கடிதம் கொடுத்து, 1921ல் வெளிவந்ததை பற்றி நான் பெரிது படுத்தப்போவதில்லை. தீவிரமாக ஹிந்துத்துவ தேசாபிமான பிரச்சாரத்தில் இறங்க, அவருக்கு வேறு உபாயம் கிடைக்கவில்லை என்பது என்னமோ உண்மை. காங்கிரஸ் கட்சியை கண்டனம் செய்தார். அண்ணல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டார்.

அவருடைய ஹிந்துத்துவ தேசாபிமானம் சமய சின்னத்துக்குள் அடங்க வில்லை; அந்த எல்லைக்குள் வளைய வரவில்லை. ஹிந்து மதம், சமணம், பெளத்தம், சீக்கிய மதம் எல்லாம் அவருடைய அகண்ட பாரதத்தில் ஒன்று சேர்ந்து இயங்கின. தன்னை வெளிப்படையாகவே நாத்திகன் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். இஸ்லாமிய பிரிவினைக் கொள்கைகளும், அந்த சமயமும், கிருத்துவமும் நாட்டின் எல்லை தாண்டிய விசுவாசம் வைத்திருந்ததை அவர் ஆதரிக்கவில்லை. சாதி வெறியையும், தீண்டாமையையும் ஒழிக்கப் பாடுபட்டார். ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களை திரும்பவும் கொணர முயன்றார். ஹிந்து மஹாசபையின் அக்ராசனராக 1937லிருந்து 1943 வரை பணி புரிந்த சாவர்க்கர், முஸ்லீம் லீக் உடனும், கம்யூனிஸ்ட்களுடனும் சேர்ந்து இரண்டாவது உலக யுத்தத்தில் இங்கிலாந்தை ஆதரித்தார்.ஹிந்துக்களை ராணுவத்தில் சேர தூண்டினார். 1947க்கு பிறகு ஹிந்து மஹா சபையில் பிளவுகள் தோன்றின. ஷியாம் பிரசாத் முக்கர்ஜி, கருத்து வேற்றுமையினால் உப அக்ராசனர் பதவியிலிருந்து விலகினார்.

1947ல் சுதந்திரம் வந்தாலும் வந்தது; 1905லியே சுதந்திர யக்ஞத்தில் ஈடுபட்ட சாவர்க்கர் இருட்டடிப்பு செய்யப்பட்டார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் மக்கள் திரள் திரளாக கலந்து கொண்டாலும், அவருடைய ராணுவ நோக்கை மரியாதை செய்யும் வகையில் ராணுவ வண்டி கொடுங்கள் என்ற (அநாவசிய) வேண்டுகோளை, பாதுகாப்பு அமைச்சர் சவான் நிராகரித்தார். மஹாராஷ்ட்டிர மாநில சார்பில் ஒரு அமைச்சர் கூட மயானத்துக்கு வரவில்லை. நாடாளுமன்ற மரியாதை தர, அவைத்தலைவர் மறுத்தார். சவானோ, மொரார்ஜி தேசாயோ அந்தமான் சென்ற போது, இவர் இருந்த சிறையின் குச்சு அறையை பார்வையிட மறுத்தனர்.

சாவர்க்காரின் தீவிர ஹிந்துத்வ சிந்தனைகள், பாரபக்ஷமற்ற, மதவெறி தணித்த இந்திய ஜனநாயகத்தின் ஒற்றுமை பண்பாட்டை குலைக்கும் என்று ஒரு கட்சி; ஜனநாயக மரபை குலைக்காமல், மக்களின் அபிலாஷையை தான் அவரது சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன என்பது எதிர் கட்சி. காமன் எரிந்த கட்சி/எரியாத கட்சி விதண்டாவாதம் போல் இது இருக்கிறது. அவருடைய படைப்புகளிலிருந்து சிந்தனைகளை நடுநிலையில் வைத்து ஆராய்வது தான் நியாயம் என்ற ஆய்வு ஒன்றை, ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் தந்துள்ளார். இரு சாராரும், சாவர்க்காரின் தத்துவம், சிந்தனை, கருத்துக்கிட்டங்கி ஆகியவற்றை மேலெழுந்தவாரியாகத்தான், அவரவரது பிரசார பீரங்கிகளுக்கு பயன் படுத்தினர். அது நியாயமில்லை என்கிறார். அந்த ஆய்வுகட்டுரையை வடிகட்டி, சுருக்கி தமிழாக்கம் இங்கே செய்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இரு காரணங்கள்: 1. ஆய்வுகட்டுரையே சுருக்கி அமைக்கப்பட்டிருப்பது. 2. இந்தியாவில், ஆய்வின்மையால், வரலாறு நடுநிலை பிறழ்ந்து இருப்பது. இன்று ராமச்சந்திர குஹா, கோபால்கிருஷ்ண காந்தி போன்றோரின் படைப்புகள் போன்ற ஆய்வுகள் பெருகவேண்டும். உதாரணத்திற்கு, சில வினாக்கள்.

சாவர்க்காரின் ஹிந்துத்வத்தின் முழு பரிமாணம் என்ன?
திரு.வி.க. அவர்கள் தேசபக்தன் இதழிலிருந்து ஏன் விலக நேரிட்டது?
ராஜாஜி ஸர். ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸிடம் என்ன சொன்னார்? ஏன்?
சர்தார் படேலின் எந்த எச்சரிக்கையை நேரு ஏற்கவில்லை? ஏன்?
சாவர்க்கர் பற்றிய ஆய்வுகட்டுரையை பிறகு தான், பெரும்பாலோர் கேட்டால், அலசவேண்டும். இப்போதைக்கு:

சாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன. வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.
ஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல, சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது.
ஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன் பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.
சமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.
சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

இன்னம்பூரான்

25 02 2012

http://www.kamat.com/database/pictures/philately/s272.jpg


உசாத்துணை:

http://www.savarkar.org/

http://www.savarkarsmarak.com/

Wolf, S.O (2010): Vinayak Damodar Savarkar’s‘Strategic Agnosticism’:A Compilation of his Socio-Political Philosophy and Worldview: Working Paper No. 51: Heidelberg Papers in South Asian and Comparative Politics: Retrieved on Feb 24, 2012 from https://docs.google.com/viewer?a=v&q=cache:T7DvOdXjgJ8J:archiv.ub.uni-heidelberg.de/volltextserver/volltexte/2010/10414/pdf/HPSACP_Wolf.pdf+savarkar+utilitarian+humanist&hl=en&pid=bl&srcid=ADGEESiMazwIuo_woe1GTyJEUXYMGbGNmRo8E3ISs1a3mellCeCT-2ur02Got4FrG84PhQKoW2_ALdxrNgvVoW48h_N8rw9KbwseGI-Y4g3pujTAT-JVQ1tWTsgE5-Qw4UQzUxD_ErQu&sig=AHIEtbQ3YVQu24_Gij9LQPRCS6wvycB19A--பவள சங்கரி திருநாவுக்கரசு. 17:01, 5 மார்ச் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2012, 17:01 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,170 முறைகள் அணுகப்பட்டது.