அன்றொரு நாள்: அக்டோபர் 14

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


சில வருடங்களுக்கு முன் எனக்கு சமூகவியலில் ஆய்வு செய்வதில் உதவிய பேராசிரியர் ஆங்கிலேய - பெளத்தர். மனம் மாறி மதம் மாறிய சான்றோர்கள் பல உண்டு. மதம் மாறுவதும் உண்டு; மாற்றப்படுவதும் உண்டு. 14 வயதில் என்னை கிருத்துவனாக்குவதற்கு படாத பாடு பட்டார்கள். ஆனால், உண்மையில் கிருத்துவத்தின் மேன்மையை உணர்த்தியவர் முயற்சிக்கவேயில்லை. இன்று கூட அண்டை வீட்டிலிருந்த அருமை நண்பர் சீனியர் பாதிரி. அவர் ஒரு சொல் கூட சொன்னதில்லை. ஆனால், பக்கத்து சர்ச்சில் இருப்பவர்கள் கனிவுடன் அவர்கள் சமயம் சார்ந்த கூட்டங்களுக்கு அழைக்கிறார்கள்.


மேல்நாடுகளில் கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து வந்த மார்ட்டின் லூதர், கத்தோலிக்கத்தை சென்றடைந்த கார்டினல் ந்யூமென், பிரும்மஞானசபைக்கு, பல பாதைகளில் பயணித்த பின், வந்து சேர்ந்த அன்னி பெஸண்ட், சிவப்பழமாய் திகழ்ந்து சமரச சன்மார்க்கம் தழுவிய திரு.வி.க. அவர்கள், சமய ஆர்வம், சம்பிரதாயம், ஹிந்துத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை, வைணவர், பல மதங்களின் உட்கருத்தை புரிந்து கொண்டவர், தொன்மையின் அருமையை வெளிச்சம் போட்டுக் காட்டியவர், மதமாச்சரியத்தை அறவே கடந்தவர், தனக்கென்று தனித்துவ ஆத்மபோதனை படைத்துக்கொண்டவர், உண்மையான செக்யுலர் மனிதர் ஆகியவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த ராஜாஜி ஆகியோர் வரிசையில் தான் நாம், அக்டோபர் 14, 1956 ல் நடந்த ஒரு மத மாற்ற நிகழ்ச்சியை நோக்கவேண்டும். அநாவசிய விமரிசனங்கள் பல உண்டு. அதை நாம் பொருட்படுத்தலாகாது. ஏனெனில், நம்மால் மற்றவர் மனதில் புகுந்து அதி நுட்ப விஷயங்களை ஆராய இயலாது.


கிட்டத்தட்ட இருபது வருடங்களாக, ஹிந்து மதத்தின் மீது தன்னுடைய ஈடுபாடு குறைந்து கொண்டே வருவதை கவனித்து வந்த பாபா சாஹேப் அம்பேத்கார் அவர்கள், இடை விடாமல், மதமாற்றம் பற்றி சிந்தித்திருக்கிறார். மே 22, 1936 லக்னெளவில் நடந்த ஒரு தலித் மகாசபையில் இஸ்லாமியர், கிருத்துவர், சீக்கியர், பெளத்தர் எல்லாம் கடை விரித்திருக்கின்றனர். ஜகஜீவன் ராம் வந்திருந்தார். பாபா சாஹேப் வரவில்லை. எனினும், இருபது வருடங்களுக்குப் பிறகு, அவர் 1956ல் மதம் மாறிய போது, 380 ஆயிரம் தலித் சமுதாயத்தினரை அவரே மதம் மாற்றியதில், அரசியல் கலவையோ, சமுதாய திருப்புமுனையோ இல்லை என்று சொல்லமுடியாது என்றாலும்,. 1937லியே, இவருடைய பெளத்தத்துறவி நண்பர் லோகநாதர் ‘பெளத்தம் உன்னை விடுவிக்கும்’ என்ற நூலை எழுதி, அதை தலித் மக்களுக்கு சமர்ப்பணம் செய்ததை நோக்கினால், அந்த பார்வை உறுதி படும் என்றாலும், ஒரு விசாலமான பார்வையில் நோக்கினால் நாம் குற்றமும் குறையும் காணமாட்டோம்.

பல்லாயிரக்கணக்கான வருடங்களின் அடக்குமுறைக்கு இப்படியும் எதிர்ப்பு அமையலாம். நந்தனார் கீர்த்தனை பாடினோம்; ஆனால், வருடம் ஒரு முறை தான் கோயிலுள் வர அனுமதிப்போம் என்றோம். திருப்பாணாழ்வாரை தோளில் சுமர்ந்து, மேளதாளத்தோடு அரங்கனை தரிசிக்க, அழைத்து வந்தார், லோகசாரங்கமுனி. அது ஆண்டவன் கட்டளையாம். அத்துடன் விட்டார்கள். இரட்டை டம்ளரும், கந்து வட்டியும், கட்டப்பஞ்சாயத்தும் இன்றும் நடைமுறையில். 1956க்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், ஆதாயம் பல கருதி, பலர் கிருத்துவரானவர்கள், சாதி வேற்றுமையையும் உடன் கடத்தி சென்றார்கள். அதனால் தான், நம்மால் மற்றவர் மனதில் புகுந்து அதி நுட்ப விஷயங்களை ஆராய இயலாது.


தான் சம்பந்தப்பட்டவரை பாபா சாஹேப், பல வருடங்கள் ஆழ்ந்து படித்து, தெளிவடைந்து, சிந்தித்தபின் தான் பெளத்த மதம் மாறியதற்கு சான்றுகள் உளன. அவரை பின்பற்றுவோர்களில் எத்தனை பேர் இன்று புத்த மதத்தை தழுவியவர்கள், அவர்களில் எத்தனை நபர்கள் 22 பிரமாணங்களையும் கடை பிடிக்கிறார்கள், எந்த அளவுக்கு அவர்கள் அகிம்ஸை, வாய்மை, நேர்மை போன்ற பண்புகளை கடை பிடிக்கிறார்கள் என்று நான் பார்க்கவில்லை. அக்டோபர் 14, 1956 அன்று பாபா சாஹேப் பெளத்தம் தழுவியதும் ஒரு திருப்பு முனை. தலித் சமுதாயத்திற்கும் அது ஒரு திருப்புமுனை, ஓரளவாவது. இந்தியா அரசியல்/சமுதாய தளங்கள் இந்த திருப்புமுனைகளை, பொது ஜன நலம் கருதி, உரிய முறையில் தங்களை சீர்திருத்திக்கொள்ளாமல், புறக்கணிப்பதில் ஆதாயம் தேடின என்று நான் நினைக்கிறேன். உசாத்துணையில் இருக்கும் அரிய நூலை படித்தால், நான் சொல்வது சரி என்று படலாம்


இன்னம்பூரான்

14 10 2011

http://www.buddhistchannel.tv/picture/ambedkar-s.jpg


உசாத்துணை:

http://www.sangharakshita.org/_books/Ambedkar_and_Buddhism.pdf--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:36, 19 அக்டோபர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2011, 12:06 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,104 முறைகள் அணுகப்பட்டது.