அன்றொரு நாள்: ஆகஸ்ட் 12

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அவளொரு பெண். அவளொரு யுவதி. அவளொரு அழகிய வசீகரிணி. அவளொரு புதிர். யாரை சொல்கிறீர்கள்? அஃப்ரோடைட்? ஹெலன் ஆஃப் ட்ராய்? மோனா லீஸா? சிலம்பின் மாதவி? அன்னை தெரஸா? இல்லை. இத்தனை அடைமொழிகளுக்கு ஏகபோக உரிமை கிளியோபாட்ராவுக்கே. ஆனால். பொத்தாம்பொதுவாக, பெரும்பாலோர் அங்குமிங்கும் புரிந்து கொண்ட சூழ்ச்சிக்காரி அல்ல, நான் குறிப்பிடும் கிளியோபாட்ரா. அவளொரு பெண். அவளொரு யுவதி. அவளொரு அழகிய வசீகரிணி. அவளொரு புதிர். அதே பெண்ணரசி தான். ஆனால் அவள் வேறு.

“இரண்டாயிரம் வருடங்களாக, பொய்யும், புனைசுருட்டுமான அழுக்குத்திரையால் மூடப்பட்டு கிளியோபாட்ரா ‘ரதி/காமக்கிழத்தி/சூழ்ச்சிராணி...’ என்றெல்லாம் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளாள். அதை சுரண்டி எடுத்து, அவளுடைய ராஜ தந்திரத்தையும், அரசியல் திறனையும் அலசி, அவலை ஒரு ராணுவ தடவாள ஒப்பந்த வல்லுனராகவும், பெருமை கொள்ளும் அன்னையாகவும், நகைச்சுவையுடன் அளவளாவுபவராகவும், ஆய்வு பல செய்து, ஆதாரங்களுடன் திருமதி ஸ்டேஸி ஸிஷ்ஃப் அளித்திருக்கும் கிளியோபாட்ராவின் வாழ்க்கைச்சரித்திரம், ஒரு அருமையான, தராதரமுள்ள நூல். அவர் கிளியோபாட்ராவை நிஜமாகவே புனருத்தாரணம் செய்து விட்டார்...” ~ இது ஒரு மதிப்பீடு.

‘...ஷேக்ஸ்பியர், தாந்தே போன்ற பெரிய எழுத்து மன்னர்களையும், மன்கீவிச்ஸ் போன்ற பிரபல சினிமா டேர்க்டர்களையும் ஒரு வழி செய்து விட்டார், இந்த ஆசிரியர். பெண்ணினத்தை ஆடுமாடாக நடத்திய காலகட்டத்தில் கிளியோபாட்ரா ராஜ்யபாரம் வகித்த அருமை,பெருமையை ஸ்தாபிதம் செய்து விட்டார். அவருடைய சொல் ஆளுமை அபாரம். நம்மை தொன்மை எகிப்துக்கு அழைத்துக்கொண்டு செல்லும் லாகவத்தை பாருங்கள். ~ இது ஒரு மதிப்பீடு.

‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியை’ போல, 269 மதிப்பீடுகளை முதல் ஈடாக பெற்ற நூல்: Stacy Schiff (2010) Cleopatra, A Life: NY: Littile Brown & Company


இனி திருமதி ஸ்டேஸி ஸிஷ்ஃப்: “...நான் செய்தது, இடம், பொருள், ஏவல் ஆகியவற்றை ஒழுங்காக பொருத்தியது...காகிதம் நொறுங்கிவிடுகிறது. அவளிருந்த இடம் 20 அடி நீருக்கு அடியில். ஏசு பிறப்பதற்கு முன்னால் மடிந்தவள். முதல் முதலாக, அவளது வாழ்க்கைச்சரித்திரம் எழுதியவர்கள் அவளை கண்டது கூட இல்லை. கெட்டிக்காரத்தனமாக, தடாலடிக்கு பின்னால் தன்னை மறைத்துக்கொண்டவள் கிளியோபாட்ரா...ஒன்று கவனித்தீர்களா? அவளை பற்றி, ஆஹா! ஊஹூ! என்று எழுதிய லூகான், ஆப்பியன், ஜோசஃபஸ், டியோ, ஸுயோடினியஸ், ப்ளூடார்க் ஆகியோர் ஆண்கள், ரோமானியர்கள். அவள் இறந்த நூறு வருடங்களுக்கு பிறகு, அவளை இழித்துப் பேசியவர்கள்... ஒரு காகித ஆவணம் கிடைக்கவில்லை அதையெல்லாம் பற்றி. ஆனால், இறந்த பின், ஒரு எரி நக்ஷத்திரமாக, வீடீயோ விளையாட்டாக, சொலவடையாக, சிகரெட்டாக, சூதாடும் கருவியாக, கேபரே களியாட்டமாக, (ராஜாஜி புகையிலை, காந்தி ஆட்டுக்கால் சூப்பு போல!) எலிசெபெத் டேலருக்கு மறு பெயராக, அவதரித்து உள்ளார்....18 வயதில், 10 வயது சகோதரனுடன் கூட்டமைப்பு! ராணியானாள். அவனை ஒதுக்கி வைத்தாள்; அவனுடன், தந்தை சொல்படி திருமணம். பேருக்குத்தான். தந்தையின் வெற்றிகளும் அவளுக்கு பாடம்; அவருடைய தவறுகளும் பாடம். ஒன்பது மொழிகள் பேசுவாள். ரோமாபுரியை வென்றவள் அல்லவா. ஜூலியஸ் சீசர் எம்மாத்திரம்? அவனை கைக்குள் போட்டுக்கொண்டாள். அவனுக்கு ஒரு பிள்ளையும் பெற்றுக்கொடுத்தாள். நிகரலாபம் அவளுக்கே! பிற்காலம், மார்க் அந்தோனியையும் வளைத்துப்போட்டாள்.
துரதிஷ்டவசமாக, ஆக்டியம் போரில் மார்க் அந்தோனி தோற்றுப்போய் தற்கொலை செய்து கொண்டான். கிளியோபாட்ராவும் ஒரு நச்சுப்பாம்பை தன்னை கடிக்கவிட்டு, மாண்டதாகக் கூறப்படுகிறது: ஆகஸ்ட் 12, 30 கி.மு.
சில படிப்பினைகள்:
வரலாறும் ஆய்வும் அலசலுக்கும் உட்பட்டதே;
மெய்கீர்த்திகள் பொய்கீர்த்திகளாக இருக்கலாம்;
தமிழகமும் வரலாற்று ஆய்வுக்களமாகத் திகழவேண்டும்.
இணைத்துள்ள உள்ள படம் ந்யூ யார்க் டைம்ஸ் இதழின் காப்புரிமை.
இன்னம்பூரான்
12 08 2011

உசாத்துணை ( பல பக்கங்களை இங்கு படிக்கலாம்)http://www.amazon.com/dp/0316001929/ref=rdr_ext_tmb--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:09, 16 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஆகஸ்ட்_12&oldid=7902" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 16 ஆகஸ்ட் 2011, 13:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,418 முறைகள் அணுகப்பட்டது.