அன்றொரு நாள்: ஜனவரி:10

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


ஆவணப்பிரியா


’ஷெவாலியெ’ குருவப்பப்பிள்ளை தான் தமிழ்நாட்டு சாமுவேல் பெபிஸ். நாள்தோறும் குறிப்பு எழுதியவர். அவை தொலைந்து விட்டதால், அவருடைய மருமகன் ஆனந்தரங்கம் பிள்ளையை அந்த புகழ் வந்தடைந்தது. வம்சமே நாட்குறிப்பு வம்சம் போல தோன்றுகிறது. இவருடைய தம்பி திருவேங்கடம்பிள்ளை, ரெங்கப்பத் திருவேங்கடம்பிள்ளை, முத்து விஜய திருவேங்கடம்பிள்ளை ஆகியோர்களும் நாட்குறிப்பாளர்களே. பெரம்பூரில் பிறந்து வளர்ந்து, ஃபிரன்ச் மொழி கற்று, புதுச்சேரி கவர்னரான டூப்ளே பிரபுவின் தலைமை துபாஷியும், மொழிப்பெயர்ப்பாளரும், ஆலோசகரும் ஆன ஆனந்தரங்கம் பிள்ளையோ ((1709-61 A.D.), பல்லக்கில் உலா வரும் வீ.ஐ.பி. பாக்கு வியாபாரம், சாராய ஆலை, துணி ஏற்றுமதி, ‘ஆனந்தப்புரவி’ என்ற பாய்க்கப்பல் என்றெல்லாம் செல்வம் ஈட்டுவதில் பன்முகம். அதனால் தான் 1736ல் தொடங்கிய அவருடைய 25 வருட நாட்குறிப்புகளின் தொகுப்பு, ஒரு வாழ்வியல் இலக்கியம். திரிவேணி சங்கமம் போல, ஒரு பேசும் வரலாறு, ஊர்வம்பு, அரசியல் நுணுக்கங்கள், நவாபு, ராஜா, நைஜாம் பற்றிய தகவல்கள், வதந்திகள், ஆங்கிலேயர், ஃபிரன்ச்சுக்காரன், வணிக உத்திகள், சமுதாயம், சட்டம், போர், அடிமை ஏற்றுமதி என்று ஒரு பலபட்டறை கருவூலம். பிரபல எழுத்தாளர் சா. கந்தசாமி கூறியது போல, அவர் ஒரு புலவர் அல்ல. எழுதியது, பேசும் மொழியில். அவர் பயன்படுத்திய ‘ஒப்பந்தம்’, ‘உடன்படிக்கை’,‘வாக்குமூலம்’, ‘கேளிக்கை’, ‘விண்ணப்பம்’ ‘விருது’, ‘பேட்டை’ போன்ற சொற்கள் இன்றும் வழக்கில் உளன. 1924லிலியே அதனுடைய பெருமையை அறிந்த வ.வெ.சு. ஐயர் அவர்கள், சுத்தானந்த பாரதியாருடன் கலந்தாலோசித்து, அதிலிருந்து சில சுவையான பகுதிகளை, “சித்திரகுப்தனைப் போல ஒன்று விட்டிடாமல் குறித்து வைத்த புஸ்தகமே இப்பிரதாப தினசரியாகும்” என்று குறிப்பிட்டு, தமது ‘பால பாரதி’ இதழில், பதிப்பித்தார்.
ஆனந்த ரங்கம் பிள்ளை 2012ம் வருட ‘தானே’ புயல் பற்றி எழுதியது:


“அஸ்தமித்தவுடனே துவக்கி, பெருங்காற்றடித்தது... இந்தக் காற்றினுடைய பிரதாபம் இன்னமட்டென்று ஒருவிதமாய்ச் சொல்லக்கூடாது...இந்த முப்பது நாழிகைக்குள்ளே பட்டணத்திலே ஒரு மரமாகிலும் தப்பவிடாமல் ஊரிலே உண்டான மரங்களெல்லாம் படுகாடாய் விழுந்து போனதும், சிறிது மரங்களை முறுக்கி முறித்துப் போட்டதும், அதுவுமல்லாமல் பட்டணங்களுக்குள்ளே தோட்டந் துரவுகள், தென்னை மரம், மாமரங்கள் எப்பேர்ப்பட்ட மரமும் ஒன்றாகிலும் தப்பாமல் படுகாடாய் விழுந்து போச்சுது... அந்த மதகைப் பிடுங்கிக் கொண்டு அந்த வெள்ளம் ஓடிற்று. அந்த வெள்ளத்திலே உப்பாற்றிலே வந்து விழுந்து உப்பாற்றிலே கட்டியிருந்த வீடுகள் பேரிலே ஒரு முழ வெள்ளம் வந்து அங்கே கட்டியிருந்த மூன்று தெருவும் படுகாடாய் விழுந்துபோய், வீடுகள் வெள்ளத்தில் முழுகிப்போய், அந்த வெள்ளத்திலே வீடுகளை அடித்துக் கொண்டு போனதும், மாடுகள் கன்றுகள் செத்ததும், மனுஷர் செத்ததும் இப்படியாக வெகு சேதப்பட்டு அந்த வெள்ளம் இப்படி பட்டணத்து மேலே திரும்பினபடியினாலே, பள்ளத்துத் தெருக்களிலேயெல்லாம் அரை மட்டும் தண்ணியும் பெருந்துடை மட்டும் தண்ணியும் நின்றபடியினாலே, பள்ளத்தாக்கிலே யிருந்த வீடுகளெல்லாம் அநேகமாய் விழுந்து போச்சுது...பட்டணமெல்லாம் தெருவுக்குத் தெரு பிணநாற்றமாய் இரண்டு மூன்று நாள் மட்டுக்கும் வீதியிலே புறப்படக்கூடாமல் இப்படி அவஸ்தைப்பட்டுப் போச்சுது..

.” .

நீங்க ஒண்ணு! அந்தக்காலத்து சூறாவளியை பற்றி எழுதப்பட்டது, அது. படிக்கிறீர்களா, இல்லையா என்று பார்க்கக் கதை விட்டேன்! இந்த வம்சாவளியின் நாட்குறிப்புகளில், ஒரு சகாப்தத்திற்கு வேண்டிய அளவு பாமர கீர்த்திகள் இருக்கின்றன. ஜனவரி 10, 1761 அன்று அவர் மறைந்தார் என்று தமிழ் விக்கிப்பீடியாவும், அது நடந்தது ஜனவரி 16, 1761 என்று ஆங்கில விக்கிப்பீடியாவும் கூறுகின்றன.


இன்னம்பூரான்
10 01 2012
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00litlinks/pillai/graphics/titlepagemax.jpg


உசாத்துணை:
http://books.google.co.uk/books?hl=en&id=fd59Yw2I_QQC&dq=Pillai,+Ananda+Ranga&printsec=frontcover&source=web&ots=sKG8HG2hTk&sig=rbyd1JNnXvVLlnWKlG84GqviR5w&sa=X&oi=book_result&resnum=1&ct=result#v=onepage&q=Pillai%2C%20Ananda%20Ranga&f=false
http://www.keetru.com/visai/oct05/sivasu.php
http://www.hindu.com/fr/2011/03/25/stories/2011032550540200.htm
http://www.hindu.com/thehindu/br/2002/03/05/stories/2002030500160400.htm
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:24, 13 ஜனவரி 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜனவரி:10&oldid=9213" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2012, 21:54 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,257 முறைகள் அணுகப்பட்டது.