அன்றொரு நாள்: ஜனவரி:9

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


சட்டாம்பிள்ளை


இந்தியாவின் விடுதலை வேட்கை கும்பினிக்காரர்கள் காலத்திலேயே தென்பட்டது.அதற்கு முன்னும், ஆங்காங்கே தேசாபிமானத்தின் இருக்கை மங்கலாக புலப்பட்டது. கலோனிய ஆட்சியின் போது, அதனுடைய தாயகமான இங்கிலாந்தின் நாடாளுமன்றமும், அரசும், உயர்கல்வியை தேடி அங்கு சென்று திரும்பிய சிந்தனையாளர்களின் முற்போக்கு எண்ணங்களும் தூண்டிய அரசியல் நடவடிக்கைகளின் நற்பயனாக, சென்னை மாகாணத்தில் முதல் சட்டமன்றத்தின் முதலாவது இருக்கை, ஜனவரி 9, 1921 அன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில், நடந்தேறியது. 132 உறுப்பினர்களில், 34 உறுப்பினர்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்டவர்கள். மூன்று நாட்களுக்கு பிறகு, கன்னாட் கோமகன் துவக்கி வைத்தார். ஆளுனர் வெலிங்டன் பிரபுவின் முதல் உரை ஃபெப்ரவரி 14 அன்று.


இந்த சட்டமன்றத்தின் பின்னணி வரலாற்றை தெரிந்து கொள்வதில் தப்பில்லை. பிற்காலத்து ஏற்ற தாழ்வுகளை ஒப்புமை செய்ய உதவும். சென்னை மாகாணம் பெரிது. அதில் தற்கால தமிழ் நாடு மற்றும் ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய ஆந்திரப்பிரதேசம் ஆகியவை அடக்கம். பிரச்னைகள் ஒன்றும் தலை தூக்கியதாக வரலாறு கூறவில்லை. இனங்கள் யாவையும் இணக்கத்துடன் இருந்தார்கள். பம்பாய், கல்கத்தா மாகாணங்களும் அப்படியே. 1773-ம் ஆண்டின் முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் வங்காள ஆளுநர் அனைத்து மாகாணங்களின் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் 1833 மற்றும் 1853 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்த சட்டங்களின் படி தொடங்கின. 1861 மற்றும் 1892 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ‘இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் கீழ்’ சட்டம் இயற்றும் மன்றங்கள் துவக்கப்பட்டன. 1861ம் வருடத்திய பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தின் சட்டம் நிஜமாகவே முற்போக்கானது. வைஸ்ராயின் ஆலோசனைக்குழுவை அமைச்சரகத்தின் முன்மாதிரியாக மாற்றியமைத்தது. இது ஜனநாயகத்தின் முதல் படி. 1833 வருட சார்ட்டர் சட்டம் பிடுங்கிய சட்டமியற்றும் ஆளுமை, நாடாளும் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனலாம். இரண்டாவது உசாத்துணை, அதை ‘மிண்டோ- மார்லி’ சீர்திருத்தம் என்று தவறாகக் குறிப்பிடுகிறது. 1892ம் வருடத்திய பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தின் சட்டம் முற்போக்கானது மட்டுமல்ல. சற்றே புரட்சிகரமானது. நிதி நிலையை விவாதிக்க அனுமதித்ததால், கேள்விகள் எழுப்ப அனுமதித்ததால், ஜனநாயகம் துளிர்த்தது எனலாம். மாகாணங்களில் சட்டமன்றங்கள் அதிகரிக்கப்பட்டன. இந்த சட்டம் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை மதித்து இயற்றப்பட்டது எனலாம். வருடம்: 1892.


இந்தியாவின் சட்டதிட்டங்களில், மிகவும் விவரமானதும், முற்போக்குடன், கனமான அரசியல் பண்புகளை அருமையாக அலசி, பொறுப்புடன் தரப்பட்ட ஆவணம் 1909ம் வருட மிண்டோ-மார்லி சீர்திருத்தம். இது என்னுடைய ஆய்வின் கருத்து. அதன் கீழ் முதல் முறையாக சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நேரடித் தேர்தலுக்கான காலகட்டம் உருவாகவில்லை. இந்த சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நியமிக்கப்படும் கூடுதல் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50-ஆக உயர்த்தப்பட்டது.1919-ம் ஆண்டு மாண்டேகு -செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசு சட்டத்தின் கீழ் மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையே சட்டம் இயற்றும் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது பெரிய விஷயம். அது தான் இந்தியாவின் தற்கால மத்திய/மாநில அரசு என்ற ஃபெடரல் அமைப்புக்கு வித்திட்டது. இச்சட்டத்தின்கீழ் மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாத ஆளுநர் அந்த சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றும் அதிகாரத்தை பெற்றார். அதனுடைய சிக்கல்களை பற்றி, வாய்ப்பு கிடைத்தால், பிறகு பேசலாம்.


உகந்த தருணம் கிடைத்த போது, 1921லிருந்து 2011 வரை நடந்த வரலாற்றை, நானோ, மற்றவர் யாரோ எழுதலாம். நலன் பயக்கும்.


இன்னம்பூரான்

09 01 2012


உசாத்துணை:

http://www.assembly.tn.gov.in/history/history.htm

http://site4any.wordpress.com/2011/03/28/தமிழக-சட்டமன்றத்தின்-வரல/

இணைப்பு: தவறாமல் பார்க்கவும். சிறிது. ஆனால் பெரிது.

http://query.nytimes.com/mem/archive-free/pdf?res=9800EEDC153CE533A25756C1A9679C946095D6CF--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:20, 13 ஜனவரி 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜனவரி:9&oldid=9212" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2012, 16:20 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,114 முறைகள் அணுகப்பட்டது.