அன்றொரு நாள்: நவம்பர் 13

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன் (13 11 1850 ~.. 12 1894)


பிரதிபலிப்பு, எதிரொலி, பிம்பம், நிழல் ஆகிய/அவை போன்ற சொற்கள் ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பை குறிக்கலாம் என்று எழுதும் போதே, எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது. இன்றைய தினம் 1850 ல் எடின்பரோவில் பிறந்து, வக்கீல் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, பிரிட்டனில் சிறுகதை இலக்கியத்திற்கும், குழந்தைகள் இலக்கியத்துக்கும் வித்திட்டு, புதினங்கள் பல எழுதி, வாசகனோடு ஒரு அன்யோன்ய உறவை ஏற்படுத்திக்கொண்டு, நாடகம், கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனம், இலக்கிய கோட்பாடுகள்,வாழ்க்கை வரலாறு,பயணக்கட்டுரை, இதழிலக்கியம்,காதல் கதைகள், சிறுவர் சாகசக்கதைகள், கற்பனை ஓட்டங்கள்,கட்டுக்கதைகள்,எல்லாவற்றிலும் சக்கை போடு போட்டு, புகழ் படைத்த ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன் எங்கே? பாடபுத்தகத்தைத் தவிர வேறு ஆங்கிலபுத்தகத்தை கல்லூரி செல்லும் வரை கண்ணில் காணாத நான் எங்கே? இது நிற்கவேண்டாம்!


பாளையங்கோட்டை சைண்ட் சேவியர் கல்லூரியில் இண்டெர்மீடியட். தமிழில் மட்டுமே படித்த எனக்கு ஆங்கிலத்தில் மட்டும் சொல்லிக்கொடுத்தால் என்ன புரியும்? சுட்டுப்போட்டாலும் ஒரு சொல் கூட புரியவில்லை. ஒரு நாள் காலை குடுகுடுப்பைக்காரன், ‘நல்ல காலம் பொறக்குது‘ என்று சொல்லிவிட்டு போக, அன்றே அதுவும் பிறந்ததே, அதை சொல்லுங்கள்! டைஃபாய்ட். நோ காலேஜ். ஆனால் உசிரு ஊசல். எப்படியோ பிழைத்துக்கொண்டேன். நோ காலேஜ். அவ்வளவு நாட்கள் போகவில்லை. பொழுது போவது எப்படி? அங்கொரு முனிசிபல் நூலகம். ஆர்தர் மீ எழுதிய என்ஸைக்ளோபீடியாவிலிருந்து நிறைய ஆங்கில நூல்கள். சில தமிழ் நூல்கள். Kidnapped என்ற ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுடைய நூல் எடுத்து வந்தேன். அன்றிரவு தூங்கவில்லை. அடுத்த நாள்: ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுடைய Treasure Island. தினந்தோறும் ஆர்தர் மீ படனம். சில மாதங்களுக்கு பிறகு, ‘நீ எல்லா புத்தகங்களையும் படித்து விட்டாய்‘ என்றார், லைப்ரேரியன். மேலும் படிக்க வசதி செய்து கொடுத்தார். அன்று பிடித்த புத்தக மோகம் இன்று வரை விடவில்லை.


1954: நேர் காணல். ஏதோ ஒரு கேள்விக்கு சொல்ல நேர்ந்தது, ‘ நான் உங்கள் முன்னால் வந்ததற்கு ஹேது ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனும், பாளையங்கோட்டை முனிசிபல் நூலக லைப்ரேரியனும் தான்.” போதும் சொந்த சாஹித்யம்.


மறுபடியும் ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுக்கு வருவோம். ஜனரஞ்சகத்துக்கு புகழ் பெற்ற ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனின் புகழ் மங்க தொடங்கியது முதல் உலக யுத்த காலகட்டத்தில். மரபுக்கு மாண்பு மங்க ஆரம்பித்தது. 1973ல் வெளிவந்த ஆக்ஸ்ஃபோர்ட் இலக்கிய தொகுப்பில் உள்ள இரண்டாயிரம் பக்கங்களில், இவருடைய பெயர் காணவில்லை! இப்போது கொஞ்சம் பரவாயில்லை. நூலகத்தில் முன்வரிசையில் இவருடைய Treasure Island. மறுபடியும் படிக்கப்போகிறேன்.


இன்னம்பூரான்.
13 11 2011
http://www.trussel.com/rls/rls5n.jpg


உசாத்துணை:
http://www.robert-louis-stevenson.org/life--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:32, 15 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_நவம்பர்_13&oldid=8763" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2011, 12:32 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,176 முறைகள் அணுகப்பட்டது.