இப்போது பெல்ஜியத்திலிருந்து-ஒரு மாதவன் இளங்கோ

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வல்லமை என்னும் இணைய இதழ், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது அது மாத இதழ் அல்ல. இருப்பினும் ஒவ்வொரு மாத முடிவிலும்  போட்டிக்கு என்று வந்து சேரும்  சிறுகதைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்து அதற்கு ;பரிசும், பின் ஒரு வருட முடிவில் பரிசு பெற்ற கதைகளில் சிறந்த மூன்றுக்கு அவற்றின்  தர வரிசையில் மூன்று பரிசுகள் என்றும், இவையெல்லாவற்றையும் கடைசியில் ஒரு புத்தகமாக வெளியிடுவது என்பதும் அதன் நோக்கம். 

வல்லமை இணைய இதழின் ஸ்தாபகரும் வழி நடத்துபவருமான அண்ணா கண்ணனுக்கு, என்னுடன் இருக்கும் நட்பின்  உரிமை கொண்டு ஒவ்வொரு மாத கதையின் தேர்வை என் பொறுப்பில் விட்டு, கடைசியில் வருட முடிவில் சிறந்த மூன்று கதைகளின் தேர்வைச் செய்ய  நாஞ்சில் நாடனின் சம்மதத்தைப் பெற்றார்.

முதலில், இதில் எனக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் வல்லமையின் வாசகப் பரப்பு இந்த பூகோளப் பரப்பையே தன்னதாக்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதற்கும் மேல், என் ஆரம்ப அவநம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் வகையில், ஒவ்வொரு மாத முடிவிலும் வந்த எழுத்துக்களில் சிலவாவது, மனதுக்கு மிகவும் சந்தோஷமும் உற்சாகமும் தருவனவாக, சொல்லும் விஷயத் தேர்வும் எழுத்துத் திறனும் கொண்டனவாக இருந்தன.  இவ்வாறு எனக்கு படிக்க உற்சாகம் தந்தனவாகவும் புதிய எழுத்துத் திறனைக் காணும் மகிழ்ச்சியைத் தருவனவாகவும் இருந்தவை பெரும்பாலும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களதாக இருந்தன. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் என்று இப்பூமியின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி ஆஸ்திரேலியா, நியூஸீலாந்து வரை வல்லமை கண்ட தமிழ் வாசகப் பரப்பும் தமிழ் எழுத்தாளர் பரப்பும் விரிந்திருந்தது. இதில் ஒரே ஒருவர் தான் ஈழத் தமிழர், கே. எஸ். சுதாகர். ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்தவர். மற்ற அயலகத் தமிழர் எல்லாம் கோவை, சேலம் திருப்பூர் காரர்கள். ஒருவர் பம்பாய்க்குக் குடி பெயர்ந்தவர்.  

இதை நான் குறிப்பாகச் சொல்லக் காரணம், எந்தக் காரணத்துக்காயினும் அயல் நாடுகளுக்குக் குடிபெயர்ந்த தமிழகத் தமிழர்கள், திரும்பவும் சொல்லவேண்டும், தமிழகத் தமிழர், தம் வேலையுண்டு தம் சம்பாத்தியம் உண்டு என்று கர்மமே கண்ணாகயிருந்தவர்கள். தமிழ் நாட்டிலிருந்து தம் அடையாளங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற அவர்கள், தமிழை மாத்திரம் உடன் எடுத்துச் செல்லவில்லை. செல்வதில்லை. ஆனால் ஈழத் தமிழர் தம் மொழியையும், தாய் மண்ணை விட்டுச் சென்ற ஏக்கத்தையும் உடன் எடுத்துச் சென்றவர்கள். அவர்கள் புலம் பெயர் வாழ்க்கையும் இழந்துவிட்டவற்றின் சோகமும் இழக்காத உடன் எடுத்துச் சென்ற தமிழில் பதிவு பெற்றன. கூலி வேலை செய்து பிழைக்கச் சென்ற மலேயா சிங்கப்பூர் தமிழருக்கு அங்கு தமிழ் வாழ்க்கையும் தமிழும் கிடைத்தது. ஆயினும் தம் மலேசிய வாழ்க்கையைத் தமிழில் பதிவு செய்ய ஒரு நீண்ட காலம் தேவைப் பட்டிருக்கிறது. இதில் வெகு சிறப்பாக நம் பார்வைக்கு வரும் ஜெயந்தி சங்கர், இங்கிருந்து சென்றவர். அபூர்வமாக, ஆச்சரியம் தரும் வகையில் தமிழில் எழுதும் ஒரு மலையாளியும் உண்டு. கமலா அரவிந்தன்.

பிரிவுச் சோகமும் வேதனைப் பட்ட வாழ்வும் இழப்புகளும்,  தொடர்ந்த தமிழ்ப் பிரக்ஞையும் இன்றி, இலக்கிய மலர்வு சாத்தியமில்லை போலும்,.

ஆனால் அப்படியும் ஒரு விதி ஒன்றை உருவாக்கிவிட முடியாது தான்.  என் அவநம்பிக்கையை மீறி, தமிழகத்திலிருந்து அயல் நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவர்கள் தம் அயலக வாழ்வைப் பதிவு செய்வதை சமீபத்தில் காண்கிறோம். சமீப காலமாகத் தான். இது நேர்ந்துள்ளது, அயல் நாடுகளுக்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இலக்கியம் தோன்றத் தொடங்கிய பின் நிகழ்வது இது. அது ஒரு காரணம். இரண்டாவது இத்தலைமுறையினர், வேலை வேட்டைக்கும் அப்பால் தமிழ் எழுத்துக்களில் ஆர்வமும் தாம் வாழும் சூழலைப் பதிவு செய்யும் ஆர்வமும் இவர்களிடம் காணப்படுகிறது. அவர்கள் உணர்வுகளில் வேற்றுக் கலாசாரத்தில் வாழும் புதிய அனுபவம் தரும் உற்சாகம் மாத்திரமல்ல, முரண்களும் மனித உறவு நெருக்கடிகளும், கடைசியில் இவை எல்லாவற்றையும் மீறக் கூடுமானால், அவ்வப்போது மலரும் மனித நேயமும் கூட காணக் கிடைக்கிறது. 

வல்லமை இணைய இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி, இவ்வாறான எதிர்பாராத ஆச்சரியங்களையும் தந்துள்ளது. முதலில் அனேகமாக மிச்சிகனிலிருந்து எழுதும் பழமை பேசி. அந்தியூர்க்காரர். அவர் எழுதுவதைப் பார்த்தால் அவர் இன்னமும் தன் கொங்கு வாழ்க்கையையும் மனிதர்களையும்  அவர்களுக்கேயான தமிழையும் இன்னமும் அவர் மிச்சிகனில் இருந்தும் மறக்கவில்லை என்று தோன்றும். நிஜமாகவே,  பழமை பேசி தான் அவர். அதே சமயம் அவர் பழமை பேசி மாத்திரமே இல்லை. ஏனெனில், அவரது எழுத்துக்களில், தற்போதைய அமெரிக்க வாழ்க்கையும் அதே அளவில் இடம் பெறுகிறது. வல்லமை இணையத்தில் சிறுகதைப் போட்டியில் தான் பழமை பேசியை நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல திறமையான எழுத்து, நல்ல பரிச்சயம் தோன்றும் எழுத்து என்று சொல்லத் தோன்றும் இவர் எனக்கு வல்லமை மூலம் தான் தெரிய வந்தவர் வேறு எங்கும் எழுதியிருக்கிறாரா தெரியாது. போட்டியின் போது ஒவ்வொரு மாதமும் இவரது எழுத்து வந்து முன்னிற்கும். நிறைய, வெகு சுலபமாக, இயல்பாக எழுதிவிடும் திறமை. 

பழமை பேசி போல, வல்லமை மூலம் எனக்குத் தெரிய வந்தவர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதும் கே. எஸ் சுதாகர் ஈழத்திலிருந்து குடி பெயர்ந்தவர். ஈழத் தமிழர், புலம் பெயரும் வரலாற்றுக் காரணங்களால் தமிழையும் மறந்தவரில்லை. தம் பிறந்த மண்ணையும் மறந்தவரில்லை. புலம் பெயர்ந்த அனுபவங்களையும் மறந்தவரில்லை. அவர்கள் எழுத்தில் எல்லாமே இடம்பெறும். இவையெல்லாம் ஒரு காலத்தில் ஆவணங்களாகவும் கூட கவனம் பெறும் தகுதி கொண்டவை. 

ஆனால் இவர்களது அடுத்த தலைமுறை தமிழறிந்த தலைமுறையாக இருக்குமா என்பது சந்தேகம் தான். தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவதும் தமிழ் படிப்பதும் குறைந்து வருவது மட்டுமல்லாது, மிக முக்கியமாக, மதிப்பிழந்தும் வருவது சோகம் நிறைந்த உண்மை. அப்படி இருக்க அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடி பெயர்ந்துள்ளவர்களின் எதிர்கால தமிழ் பற்றி சோகிப்பதில் அர்த்தமில்லை..

மூன்றாவதாக, திருப்பூர்க் காரர். மாதவன் இளங்கோ. இப்போது பெல்ஜியத்தில் லூவன் என்னும் நகரில் வாழ்பவர். இளம் வயதினர். பெல்ஜியத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக பணிசெய்து வாழ்ந்து வருபவர். நிறைந்த வாசிப்பு ஆர்வம் அவரது இயல்பில் இருக்க, அத்துடன் தானும் எழுத வேண்டும் என்ற ஆசையும் தன்னில் துளிர்க்கக் காண்பவர். ஆசை பற்றி எழுதினாலும், வல்லமையில் வந்த அவரது எழுத்தில், அவரையும் பரிசுக்குத் தகுதி கொண்டவராகக் தேர்வு பெறும்  திறமையும் தெரிந்தது. 

திறமையும்  எழுத்தார்வமும் ஒரு புறம் இருக்கட்டும். அவரது எழுத்தில் பெல்ஜிய வாழ்க்கையின் அனுபவங்களும், தமிழ் மண்ணின் அனுபவங்களும் இடம் பெற்றன. அவற்றின் கலாசார முரண்களும், அவற்றினிடையே வாழும் நிர்ப்பந்தங்களும், பின் இவற்றையெல்லாம் மீறி, அடியோட்டமாக காணும் மனித நேயமும் இந்த எழுத்தின் சிறப்பு என்று சொல்லவேண்டும். வல்லமை இணைய இதழின் போட்டியில் தேர்வு பெற்ற இவரது இரண்டு கதைகளோடு பதினைந்து கதைகள் கொண்ட ஒரு தொகுப்பே “அம்மாவின் தேன் குழல்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. 

இத்தொகுப்பின் முன்னுரையில் மாதவன் இளங்கோ இரண்டு மிக முக்கிய மான தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஒன்று,  அம்மாவின் தேன் குழல் வல்லமை போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றது தான் தான் தொடர்ந்து எழுதக்காரணம் என்கிறார். இதை நாம் பரிசு பெற்றதன் சந்தோஷத்தில் பிறந்த வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்,. பரிசு உற்சாகத்தைத் தரலாம், அதுவே எல்லாமாகிவிடாது. ஆனால் அவரது இன்னொரு கருத்து மிக ஆழமானது, விசேஷமானது.  ” இந்தச் சிறுகதைகள் இருவேறு நாடுகளைக் காட்டிலும், இரு வேறு உலகங்களில் வாழும் மனிதர்களை இணைத்துப் பார்க்கும் முயற்சி எனக் கூறவேண்டும்.” என்கிறார். 

தன் முன்னுரையில் தன் அனுபவம் ஒன்றைச் சொல்கிறார் இளங்கோ. தனக்கு ஒரு சைக்கிள் தேவையாக இருக்க, லூவன் நகரின் புறநகரான ஹெரண்ட்டிற்கு செல்கிறார். அங்கு 40 யூரோவிற்கு ஒரு பழைய சைக்கிள் கிடைக்கும் என்று நண்பர் தகவல் சொல்ல, அவர் சென்றது ஒரு பெரிய தோட்டம் சூழ்ந்த வீட்டிற்கு. மணி அடித்து சற்று தாமதமாக கதவைத் திறந்தது ஒரு வயதான பெண்மணி. அவர் அந்த பெரிய வீட்டில் தனியாக இருக்கிறார்.  சற்று நேரத்தில் தன் மகன் வந்து விடுவான் என்று சொல்லி உள்ளே அமரச் செய்கிறாள் அந்த வயதான மாது. அவர் டச்சு மொழியில் பேச,   டச்சு சரிவரத் தெரியாத இளங்கோ ஆங்கிலத்தில் பதில் அளிக்க,  அந்த மாதின் உதட்டில் ஒரு புன்னகை.  டச்சு தெரியாத இந்தியன் என்ற ஏளனம் தொனிக்கும்  புன்னகை  என்று சொல்ல வேண்டும்.   இது மிக சகஜமாக எங்கும் பெறும் அனுபவம், பழகிக்கொள்ள வேண்டிய அவசிய அனுபவம் என்று வேறு இடத்தில் இளங்கோ  சொல்கிறார். மகன் வருகிறார். சிலமாதங்களுக்கு முன் தன் கணவனை இழந்த மாது அவள், அதனால் தான் கணவனின் சைக்கிள் விற்கப்படுகிறது என்றும். ஆண்ட்வெர்பில் தன் குடும்பத்தோடு வசிக்கும் தன் மகன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வந்து, பழைய வீட்டில் தனித்திருக்கும்  தன் தாயைப் பார்க்க வருவதாகவும்   மகன் சொல்ல,  அந்த மாது அழத் தொடங்கி விடுகிறாள்.  இளங்கோ அவர் அருகில் செல்ல, அந்த மாது இளங்கோவின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் வடிக்க, இளங்கோ “ஸ்டெர்க், ஸ்டெர்க்” என்று தைரியமாக இருக்கும்படி ஆறுதல் சொல்ல, பதினைந்து வருடப் பழைய சைக்கிள் இன்னம் புதிது போல இருப்பது தன் கணவர் அவ்வளவு சிரத்தையோடு அதைப் பராமரிப்பார் என்று  பெருமையோடு சொன்ன அந்த மூதாட்டி, தன் மகனிடம், ”அந்த சைக்கிளை இலவசமாகவே  தந்துவிடேன் இவருக்கு” என்று சொல்கிறார். கடைசியில் இவர்கள் விடைபெற்றுச் சொல்லும் போது தன் மகனிடம் என்ன சொன்னார்? என்று இளங்கோ கேட்க, தன் மறைந்த கணவரின் சைக்கிள் ஒரு நல்ல கைகளிடம் செல்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று சொன்னதாக அவர் மகன் சொல்கிறார்.  ஏளனப் புன்னகையில் தொடங்கியது எங்கு முடிகிறது?, ஆச்சரியம் தான். ஆச்சரியம் மட்டுமல்ல, அதுவே கடைசியில் பெறப்படவேண்டிய  ஒரு உண்மையும் தான்.


அமைதியின் சத்தம் என்று ஒரு கதை. இது லண்டனில் நடப்பது. லண்டனில் க்ராய்டன் பகுதியில் உள்ள 14அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் ஆறாவது தளத்தில் வாடகை சற்றுக் குறைவு என்ற காரணத்துக்காக குடி பெயர்கிறது குடும்பம் ஒன்று. கணவன் மனைவி, ஐந்து  வயதிலும் இரண்டு வயதிலும் இரண்டு குழந்தைகள். ஓடி விளையாடும் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் விளையாட்டு அதற்கு இயல்பான சத்தமுடன் தான் இருக்கும்.  இது அந்தத் தளத்தில் அடுத்து இருப்பவருக்கு இடைஞ்சலாக இருப்பதால், குழந்தைகள் விளையாட்டுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் தட தடவென்று சுவரை இடிப்பது போன்று பயங்கர சத்தம் எழும். குழந்தைகள் எழுப்பும் சத்தம் அவர்களுக்கு தொந்திரவாக இருப்பதைச் சொல்கிறார்கள் என்று தெரிகிறது. அந்த சுவர் இடிபடும் சத்தம் இவர்களுக்கு தாங்க முடியாத எரிச்சலாக இருக்கிறது. இது சில நாட்கள் அடிக்கடி நிகழ, ஒரு நாள் போலீஸ் வீட்டுக்கு வர, பக்கத்தில் இருக்கும் நண்பரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்து வந்த கணவனை எதிர்கொண்டது சிரித்த முகத்துடன் சில போலீஸ் காரர்கள். குழந்தைகள் சத்தம் அதிகமாக இருப்பதாக கம்ப்ளெய்ண்ட் வந்துள்ளதாகவும், “உங்கள் மனைவியை அழைத்துக்கொண்டு போய் அவர்களைப் பார்த்தோம். குழந்தைகள் விளையாடும் இடத்தில் சத்தம் இருக்கத் தான் செய்யும் என்றும் இருந்தாலும் அவரகளோடு கொஞ்சம் அனுசரித்துப் போனால் நல்லது, இதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று சொல்லிச் செல்கிறார்கள் 

புகார் செய்தவர்கள் வீட்டில் இருப்பது ஒரு வயோதிக தம்பதிகள். கிழவிக்கு உடல் நலம் கெட்டு ஹாஸ்பிடலிலிருந்து சமீபத்தில் தான் திரும்பி யிருக்கிறாள். அவளுக்கு சத்தம் ஒத்துக்கொள்ளவில்லை. சமாதானமாகப் போகச் சொல்கிறார்கள். இரவு 7 லிருந்து மறுநாள் காலை 7 மணி வரை குழந்தைகள் தூங்கட்டும். பிறகு ஒரு குழந்தை பள்ளிக்குப் போகும். மற்றது தனியாக இருக்க சத்தம் போடாது.  ஒரு குழந்தை பள்ளியிலிருந்து 4 மணிக்குத் திரும்பும். ஆக, மாலை 4 லிருந்து தூங்கப்போகும் இரவு 7 மணி வரை சத்தமில்லாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. சத்தம் அதிகமானால், மூன்று முறை சுவத்தைத் தட்டுவார்கள். சத்தமில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆனால் இது சாத்தியமாவதில்லை. மறுபடியும் போலீஸில் புகார். விசாரிக்கும் ;போலீஸுக்கு இரண்டு தரப்பும் சரி என்றே தோன்றுகிறது. கடைசியில் அந்தக் கிழவர் “நீங்கள் ரொம்ப தொல்லை கொடுக்கிறீர்கள். இந்த இடத்தைக் காலி செய்து வேறு இடம் சென்று விடுங்கள். வேறு வழியில்லை. அந்த செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்,’ என்கிறார்.
ஆனால் தொல்லை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கிழவி அழத் தொடங்க, இது பொறுக்காத  கிழவரும்  கத்துகிறார் டச்சு மொழியில்,”டாட் பர்டோமே” என்று. இதற்கு அர்த்தம், ”உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போங்கள்”

மறுபடியும் போலீசுக்கு புகார். மறுபடியும் சமாதானப் பேச்சுக்கு வந்த போலீசிடம் தான் வேறு இடத்துக்கு குடி பெயர முடிவு செய்துவிட்டதாகச் சொல்ல அது தான் சரியான முடிவு என்று அவரகளும் சந்தோஷப் படுகிறார்கள்.

ஒரு நாள் அந்த வீட்டிலிருந்து சுவரை இடிக்கும் சத்தம் ஏதும் வரவில்லை. என்னவென்று பார்த்தால், அந்தக் கிழவி இறந்து விட்டாள் என்றும். கீழே அதி காலையில் கிழவியின் சடலத்தை ஃபுயூனரல் ஹோமுக்கு ஒரு வேன் எடுத்துச்செல்வதைப் பார்த்ததாகவும்  நண்பன் சதீஷ் சொல்கிறான். 

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன தான். இரைச்சல்தான். ஆனால் சுவரை இடிக்கும் ஓசை நின்றுவிட்டதை மனம் ஒப்ப மறுக்கிறது.  சத்தம் பொறுக்காத மூப்படைந்த நோய் வாய்ப்பட்ட கிழவி ஒரு புறம்.  தன் பருவத்துக்கு ஏற்ற இயல்பான விளையாட்டும்  இரைச்சலுமான குழந்தைகள் மறுபுறம். கோபக்கார டச்சுக் காரர்கள் தான். “உங்கள் நாட்டுக்கே போ” என்றவர் தான். வேறு இடத்துக்குக் குடி பெயரும் செலவைத் தருகிறேன் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டவர். இருந்தாலும்……. மரணத்தை நெருங்கிய நாட்களை அமைதியாகக் கழிக்க முடியவில்லை அந்தக் கிழவியால். அந்தக் கிழவியின் பேரன் பேத்திகள் என்ன செய்திருக்கும்?


ப்ரஸ்ஸல்ஸில் வாழும் கிருஷ்ணமூர்த்திக்கும் அம்மாவின் தேன் குழலுக்கும் என்ன சம்பந்தம்? லூவனில் இருக்கும் கார்த்தி, ப்ரஸ்ஸல்ஸில் இருக்கும் வெகு வருஷங்களாகப் பார்க்காத கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கச் செல்கிறான். கிருஷ்ணமூர்த்தி விமான நிலையத்திலேயே கார்த்திக்கை அடையாளம் கண்டு தன் இடத்துக்கு இட்டுச் செல்கிறான். ப்ரஸ்ஸல்ஸ், லூவனை, டேய் மச்சி, என்று அழைத்துக்கொள்ளும் நண்பர்கள். கிருஷ்ணமூர்த்தி ப்ரஸ்ஸல்ஸ் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கும் தமிழ் பிரகிருதி. சமீபத்தில் தன்னிடமிருந்த வோக்ஸ்வாகன் அலுப்புத் தட்ட இப்போது ஒரு ஆடி கார் வாங்கியிருக்கிறான் .ப்ரஸ்ஸல்ஸ்க்கும் லூவனுக்கும் இடையில் டெர்வூரன் என்கிற ஸ்மால் டவுனில் வருஷம் ஆறு லட்சம் வாடகையில் ஒரு ஃப்ளாட்டில் வாசம். அவனுடைய பையனை ஒரு பிரிட்டீஷ் ஸ்கூலில் சேர்ப்பதற்காகத் தான் இந்த இடம் தேர்வு. கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு போகிறார்கள். மூன்று பேருக்கு பெரிதாகத் தோன்றும் அந்த  வீட்டை அவன் மனைவி வித்யா நன்றாக அழகாகத் தான் பராமரிக்கிறாள். அவள் பொழுது போக்கே அதுதான். க்ரிஷ், உனக்கு ”போன்” என்று வித்யா சொல்ல, அது ஒரு எஸ்டேட் ஏஜெண்டின் அழைப்பு. ஒரு பெரிய வீடாகப் பார்த்துப் போக விருப்பம் க்ரிஷ்-க்கு. ”இதே போதுமேடா மச்சி? என்று கார்த்திக் சொல்ல, இல்லைடா, வித்யா இப்போ கார்டன் ஆர்க்கிடெக்சர் பண்றா, கொஞ்சம் இதவிட பெரிய வீடா பாக்கணும் என்று டெர்வூரன் மச்சி பதில் சொல்கிறான். தஞ்சாவூர் கிராமத்திலிருந்து கிளம்பி இங்கு டெர்வூரனில் இருக்கும் க்ரிஷ் மச்சியின் பயணம் அதிசயிக்கத் தக்கது தான். இப்போது க்ரிஷின் அம்மா தஞ்சாவூரில் தான் இருக்காளா? என்று லூவன் மச்சி கேட்க, இல்லை சென்னையில் மைலாப்பூரில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறாள் என்று பதில் வருகிறது. ”கோவில், குளம், என்று அலையும் தன் அம்மாவுக்கு இங்கெல்லாம் சரிப்படாது. அவள் இருக்குமிடம் தான் அவளுக்கு ஒத்து வரும்” என்றும் பதில் வருகிறது. ”வரும் சம்மருக்கு கொஞ்ச நாளைக்கு அம்மாவை அழைத்துவரலாமா என்று தின்க் பண்ணிக்கொண்டிருப்பதாகவும்” இந்த மச்சி சொல்கிறான்.

ஒரு வாரம் இப்படி டெர்வூரன் மச்சி வீட்டில், லூவன் மச்சி பொழுது கழிகிறது. ஒரு மாதம் கழித்து திரும்ப சென்னை போகும் சந்தர்ப்பம் வரும் என்றதும், கிரிஷ் தன் அம்மாவுக்கு ஒரு சாக்லெட் பாக்கெட் வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று  நினைத்திருந்தது மறந்துவிட்டது என்று சொல்ல, க்ரிஷின் மனைவி, ”ஏன் போகும் வழியில் ஏர்ப்போர்ட்டிலேயே வாங்கிக் கொள்ளலாமே,” என்கிறாள். அதுவும் நல்ல ஐடியா தான் என்று க்ரிஷ் தன் அம்மாவின் மைலாப்பூர் அட்ரஸ் தருகிறான். கார்த்திக்கே வழியில் வித்யா சொன்னபடி சாக்லெட் பாக்கெட் ஒன்று வாங்கிக் கொள்கிறான்.

சென்னை வெயிலுக்கு பெல்ஜியம் சாக்லெட் உருகாமல் இருக்குமா? அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு மைலாப்பூர் செல்கிறான், க்ரிஷின் அம்மாவைப் பார்க்க. காரெல்லாம் போகாத ஒடுங்கிய தெருவில் இருப்பதாக ஒரு கடைக்காரர் சொல்ல, காரை நிறுத்தி நடக்க ஆரம்பித்து ஒரு குறுகிய தெருவின் ஒரு பழைய வீடு பராமரிப்பு இல்லாத வீடு முன் நின்று  ”பாலாம்மா வீடு தானே இது?” என்று கேட்க, ”பாலா மாமிதானே, இன்னிக்கு ப்ரதோஷம். கோயிலுக்கு போயிருப்பா” என்று பதில் வருகிறது. காத்திருந்து கடைசியில் கதவைத் திறக்கும் மாமியாகத்தான் இருக்கணும் என்று கார்த்திக் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள, மாமி முகம் மலர்ந்து, ”கார்த்தியா வாங்கோ, கிச்சா மூணு நாள் முன்னாலே சொன்னான். நேக்குத் தான் அடையாளம் தெரியலை” என்கிறாள். அவளின் ஈரஸ்வரம் மனதை என்னவோ செய்கிறது. உள்ளே போன மாமி, “காபி சாப்பிடறேளா”” என்று கேட்கிறாள். ”வேறே வீடு கிடைக்கலையாம்மா?” என்று கேட்க, “என்னப்பா பண்றது, முன்னே இருந்த வீட்டுக்கு பன்னிரண்டாயிரம் கேட்டா, கிச்சா தோப்பனாருக்கு எட்டாயிரம் தான் பென்சன் வர்ரது. இவ்வளவு வாடகை கொடுக்க முடியாதுன்னுட்டு இங்கே வந்துட்டேன். கிச்சா என்னமோ புதுசா வீடு வாங்கப் போறேன்னு சொல்லிண்டிருந்தானே வாங்கிட்டானா?, எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறதா வேண்டிண்டு இருக்கேன். அவனோட அப்பா போனப்பறம் கிச்சா ரொம்ப சிரமப் பட்டுட்டான். இதுக்கு மேலே அவன் சிரமப் படவேண்டாம்” என்று பாலா மாமி பேசிக்கொண்டு போகிறாள். அவள் பேச்சு பூராவும் கிச்சாவைப் பத்தின, அவன் குழந்தையைப் பத்தின கவலையாகவே இருக்கிறது. கடைசியில், “நீ போறப்போ சொல்லுப்பா, அவனுக்கு கொஞ்சம் சீடை, தேன் குழல் பண்ணி வச்சிருக்கேன். எடுத்துண்டு போய்க் கொடுக்கறயா? “ என்று கேட்கிறாள், பாலா மாமி. ”அடிக்கடி ஆத்துக்கு வந்துண்டு போயிருப்பா” என்றும் வேண்டிக்கொள்கிறாள்.

இதுவும் ஒரு கலாசார முரண் தான். வாழுமிடமும் வாழ்ந்த இடமும் பிளவு பட்டுப் போன, போகிற கதை. வாழ்ந்த இடத்தையும் மனிதரையும் முற்றாக மறந்துவிட்ட வாழும் இடத்தில் மூழ்கிவிட்ட மனிதரின் கதை.

இவையெல்லாம் இதுகாறும் பேசப்படாத கதைகள். இப்போது பேசப்படத்  தொடங்கியுள்ளது.
அம்மாவின் தேன் குழல் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன. 
வெங்கட் சாமிநாதன்/22.1.2015
______________________________________________________________________________
 அம்மாவின் தேன்குழல்: (சிறு கதைத் தொகுப்பு) மாதவன் இளங்கோ: வெளியீடு: அக நாழிகை பதிப்பகம், மதுராந்தகம் – 603306 பக்கம் -144 விலை ரூ 130.பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2015, 17:11 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,427 முறைகள் அணுகப்பட்டது.