ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையின் இலக்கியப் பணி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையின் இலக்கியப் பணி
ம.திருமலை

பொருளடக்கம்


முன்னுரை

அதியன்தான் இன்றில்லை இருந்திருந்தால்
அடடாவோ ஈதென்னவிந்தை! இங்கே
புதியதொரு ஆண் ஒளவை என வியப்பான்
பூரிப்பான் மகிழ்ச்சியிலே மிதப்பான், மற்றோர்
அதிமதுரக் கருநெல்லிக்கனி கொணர்ந்தே
அளித்துங்கள் மேனியினைக் காதலிக்கும்
முதுமைக்குத் தடை விதிப்பான் நமது கன்னி
மொழி வளர்க்கப் பல்லாண்டு காத்திருப்பான்.
(கவிஞர் மீரா, மேற்கோள்: ச. சாம்பசிவன், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை. ப. 118)
என்ற கற்பனை நயம் செறிந்த பாடலில் கவிஞர் மீரா உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளையைப் புகழ்ந்து கூறுகிறார். 5-9-1902-இல் தோன்றி, 1981இல் தமது எழுபத்தொன்பதாம் வயதில் பூதவுடலை நீத்த உரைவேந்தர் இன்றும் நம்மிடையே அவரது நூல்களின் வழியே வாழ்கின்றார்.


ஒளவை துரைசாமிப் பிள்ளையின் வாழ்வு

இன்றைய திண்டிவனத்திற்கு அருகில் ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் கர்ணிகர் மரபில் சுந்தரம்பிள்ளை-சந்திரமதி இணையரின் ஐந்தாம் மகனாகப் பிறந்த ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, அவ்வூரிலேயே தொடக்கக் கல்வி பயின்று திண்டிவனத்தில் அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்று சிறப்பாகத் தேறினார். தொடர்ந்து வேலூர் ஊரிசுக் கல்லூரியில் அந்நாளைய இண்டர் மீடியட் என்னும் இடைநிலை வகுப்பில் பயிலத் தொடங்கினார். எனினும் சூழ்நிலைகள் உந்தித் தள்ள, படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டுச் சுகாதார ஆய்வாளார் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார்.

ஒளவை அவர்களின் தந்தையார் இலக்கியப் பயிற்சியும் கவிதையியற்றும் திறனும் உடையவராகத் திகழ்ந்தமையினால் ஒளவைக்கும் இளமையிலேயே இலக்கிய ஆர்வம் மிக்கிருந்தது. இதனால் முறையாகத் தமிழ் இலக்கியம், இலக்கணம் பயிலும் பெருவிருப்புடன் சுகாதார ஆய்வாளர் பணியைத் துறந்து கரந்தைத் தமிழ் சங்கத்தில் தமிழவேள் உமாமகேசுவரனாரிடம் தமிழ் பயிலச் சென்றார். தமிழவேள் உமா மகேசுவரனார், கரந்தைக் கவியரசு சு.வேங்கடாசலம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முதலான சான்றோர்களிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் முதலியன பயின்று 1930-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வித்துவான் தேர்வெழுதி வெற்றி பெற்றார். கரந்தையில் பயின்ற காலத்திலேயே ஏடு பெயர்த்து எழுதும் பணியில் ஈடுபட்டவர் அவர். தமிழவேள் உமாமகேசுவரனாரின் தனிப்பட்ட அன்பிற்குரியவராக இருந்த ஒளவை துரைசாமிப் பிள்ளை அவருடைய ஆசிரியரைப் போன்றே ஆங்கிலப் புலமை மிக்கவராகவும் திகழ்ந்தார். ஒளவையின் வாழ்க்கைத்துணைவியாக அமைந்தவர் லோகாம்பாள் அம்மையார் ஆவார். இவர்களின் இல்லறத்தின் பயனாகப் பதினொரு மக்கள் பிறந்தனர்.


ஆற்றிய பணிகள்

கரந்தையில் கல்வியை முடித்த பின்னர், வட ஆர்க்காடு மாவட்டக் கழக, (District Board) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராக இவர் பன்னிரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார். உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் போது பணி நிமித்தமான இடர்ப்பாடுகளுக்கு நடுவில் இலக்கியக் கட்டுரைகள் எழுதுதல், ஏட்டுச் சுவடி படித்துச் சோதனை செய்தல், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சொற்பொழிவுகள் நிகழ்த்துதல் என உழைத்து வந்த ஒளவை பெரும்புகழ் பெற்று விளங்கினார். அவரது பெருமைகளை உணர்ந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவரைத் தன்பால் ஈர்த்துக்கொண்டது. 1943ஆம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகத் தொண்டாற்றினார். இந்தக் காலகட்டத்தில் தான் சைவ இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் முதலிய அரிய நூல்கள் இவரால் எழுதப் பெற்றன. புறநானூறு நூலுக்கு உரை எழுதும் பணியையும் இங்கு மேற்கொண்டார்.


தியாகராசர் கல்லூரியில்

ஒளவை அவர்களின் அருமை பெருமைகளை உணர்ந்த கலைத்தந்தையவர்கள் மதுரைத்தியாகராசர் கல்லூரியில் 1951-இல் பேராசிரியராகப் பணி நியமனம் செய்தார். ஆசிரியப் பணியை ஊதியம் பெறும் பணி என்று கருதாமல், தெய்வீகப் பணியாகவே கருதிச் செயல்பட்டுப் பெயரும், புகழும் பெற்றார். ஒளவையவர்களிடம் பாடம் பயின்று தமிழை வளப்படுத்தித் தாமும் வளம் பெற்று வாழ்ந்த மாணவர்கள் பலராவர். அவர்களுள் தமிழகச் சட்டமன்றத் தலைவராகக் கடமையாற்றிய புலவர் க.கோவிந்தனும் ஒருவர். ஒளவை துரைசாமிப்பிள்ளையின் வாழ்வு பல்வேறு ஏற்ற இறக்கங்கள் கொண்டது. எனினும் பிள்ளை எச்சூழலிலும் தமிழ்ப் பற்றினையும் கடும் உழைப்பினையும் கைவிடவில்லை. வாழ்வில் அவர் பெற்ற பல்வேறு பெருமைகளுக்கெல்லாம்-உரைவேந்தர் விருது உள்பட-அவரது அயராத உழைப்பே காரணம் எனலாம். இன்றுபோல் தகவல் தொடர்புச் சாதனங்கள், மின்னணுத் தொடர்பியல் வசதிகள் இல்லாத காலத்தில் கடும் உழைப்பின் வழியே அவர் சிகரங்களை எட்டிப் பிடித்தார். இன்றைய தலைமுறை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி இதுவாகும்.ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை எழுதிய நூல்கள்

ஒளவை துரைசாமிப் பிள்ளையின் மாணவர்களுள் சிலர் தம் ஆசிரியரைப் பற்றிய நூல்களை வெளியிட்டுள்ளனர்.

1.ஊர்ப்பெயர்- வரலாற்றாராய்ச்சி (அச்சாகவில்லை)
2.ஐங்குறுநூறு உரை
3.ஒளவைத் தமிழ்
4.சிலப்பதிகார ஆராய்ச்சி
5.சிலப்பதிகாரச் சுருக்கம்
6.சிவஞானபோதச் செம்பொருள்
7.சிவஞானபோத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும்
8.சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
9.சீவக சிந்தாமணிச் சுருக்கம்
10.சூளாமணி
11. சைவ இலக்கிய வரலாறு
12.ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
13.தமிழ்த்தாமரை
14.தமிழ் நாவலர் சரிதை பழைய உரையும்
15.திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
16.திருவருட்பா மூலமும் உரையும், (9தொகுதிகள்)
17.திருவோத்தூர் தேவார திருப்பதிகவுரை
18.தெய்வப்புலவர் திருவள்ளுவர்
19.நந்தாவிளக்கு
20.நற்றிணை உரை
21.பதிற்றுப்பத்து உரை
22.பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு
23.பரணர்
24.புதுநெறித் தமிழ் இலக்கணம் ( 2பகுதிகள்)
25.புறநானூறு மூலமும் உரையும் (2பகுதிகள்)
26.பெருந்தகைப் பெண்டிர்
27.மணிமேகலை ஆராய்ச்சி
28.மணிமேகலைச் சுருக்கம்
29.மதுரைக்குமரனார்
30.மத்தவிலாசம் மொழிபெயர்ப்பு
31.மருள்நீக்கியார்
32.யசோதர காவியமும் மூலமும் உரையும்
33.வரலாற்றுக்கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்)
34.Introduction to the study of Thiruvalluvar

1.தி.நா. அறிவொளி, ஒளவை துரைசாமிப்பிள்ளைவாழ்க்கைக் குறிப்பு. 2.கோமான். ம.வி. இராகவன், ஆசிரியப் பெருந்தகை ஒளவை துரைசாமி , 3.பி.வி.கிரி. (தொ.ஆ.) உரை வேந்தர்க்கு ஒரு நூற்றாண்டு. 4. கு.சிவமணி, 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர் ஒளவை சு.துரைசாமி(கருத்தரங்கக் கட்டுரைகள்) இவை தவிரப் பண்டிதமணி வித்துவான் சாம்பசிவனார் சாகித்திய அகாதெமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை என்ற நூலினை எழுதியுள்ளார்.உரை எழுதும் பணி

ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்களின் தமிழ்ப்பணிகளில் தலை சிறந்தது அவரது உரை விளக்கப் பணி. உரையின் முதன்மை நோக்கம் பாடலின் பொருளை வாசகர்களுக்கு விளங்க வைத்தல். பாடலின் கருத்துக் குவியலுக்கிடையே பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் நயங்களை வெளிக்கொணர்ந்து பாடலின் சிறப்பினை மிகுதிப் படுத்துதல், ஆழ்ந்திருக்கும், கவிஞரின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து படைப்பின் உண்மைத் தன்மையை உலகிற்கு உணர்த்துதல்
ஆகிய கடமைகள் ஓர் உரையாசிரியருக்கு உண்டு. சுருங்கக் கூறின் ஒரு தொல்பொருள் ஆய்வாளன், புதை பொருள் ஆய்வாளன் போல உரையாசிரியர் செயல்பட வேண்டும். ஒளவையவர்கள் தாம் உரை வரைந்த நூல்களில் மேற்குறிப்பிட்டவாறு தம்மை இனங்காட்டுகிறார். அவரது பல்துறை அறிவு நலம் அவரது உரைகளிற் புலனாகிறது. ஒரு பாடல் சான்று காணலாம்.
இவர்யார் என் குவையாயின், இவரே
ஊருடன் இரவலர்க்கருளித் தேருடன்
முல்லைக்கீத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பிற்கோமான்
நெடுமாப் பாரிமகளிர்; யானே
தந்தை தோழன் இவரென்மகளிர்
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே
நீயே, வடபான் முனிவன் தடவினுட் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேணெடும்புரிசை
உவரா ஈகைத் துவரையாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போர் அண்ணல்
தாரணியானைச் சேட்டிரு ங்கோவே
ஆண் கடனுடைமையிற் பாண்கடனாற்றிய
ஒலியிற் கண்ணிப் புலிகடிமால்
யான்தர இவரைக் கொண்மதி வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல்
பொன்படுமால் வரைக்கிழவன் வென்வேல்
உடலுநர் உட்குந் தானைக்
கெடலருங் குரைய நாடு கிழவோயே (புறநானூறு. 201)
பொதுவாக ஒளவையின் உரையில் 1. முன்னுரை. 2. பாடல், 3. உரை 4. வினைமுடிவு கூறுதல் 5. விளக்கமுறை ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன.


இப்பாடலுக்கு அதன் அடிகள் கிடந்தவாறே அரிய விளக்கங்களை முதற்கண் வரைந்துள்ளார் ஒளவை. தோல் நீக்கிய பின் பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துண்டு மகிழ்வது போலப் பாட்டினுள் ஒவ்வொரு கருத்தாக எடுத்து வரன்முறையில் தெளிவுபடுத்துவது. (ச. சாம்பசிவன், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, ப. 62) என்று கலையன்னையார் இராதா தியாகராசனார் கூறுவதைப் போன்று ஒளவையார் உரை இப்பாடலுக்கு அமைந்திருக்கிறது. உரைப்பகுதியை அடுத்து புலிகடிமால் என்பது இவனுக்கொரு பெயர். வேளே, அண்ணல், இருங்கோவே, புலிகடிமால், கிழவ, நாடு கிழவோய், நீ இப்படிப்பட்ட உயர்ந்த குடியிற் பிறந்த வனாதலால், யான் தர இவரைக் கொண்மதி எனக்கூட்டி வினை முடிவு செய்க, யான் இவருடைய தந்தை தோழனாதலானும் அந்தணனாதலானும் யான் தர இவரைக் கோடற்குக் குறையில்லையென்பது கருத்து (ஒளவை துரைசாமிப் பிள்ளை, புறநானூறு. ப.3) என்று விளக்கம் தருகிறார். இவ்வாறு கூட்டி வினைமுடிவு செய்ய உதவுதலை ஒரு சிறிய உதாரணம் கொண்டு விளக்கலாம். பல அடி நீளமுள்ள நுண்ணிய நூற்கண்டு ஒன்றில் சிக்கல் விழுந்துவிட்ட பிறகு, அதனை விடுவித்து நூற்கண்டை ஒழுங்கு படுத்துதற்கு முயற்சி செய்யும் ஒருவர் ஏதேனும் ஒரு பகுதியின் நுனியைப் பற்றிக்கொண்டு சிரிது சிறிதாகச் சிக்கலை விடுவித்து நூற்கண்டினைச் சரி செய்து சுருட்டி வைப்பதைப் போன்று கவிதையின் சிக்கலை விடுவிக்கப் புரிய வைக்கிறார் என்று கூறலாம்.

உரையின் மூன்றாவது பகுதியாக விளக்கம் என்ற பகுதியை அமைக்கிறார். தேருடன் முல்லைக்கீத்து என்பதற்குத் தேருடன் புரவியும் முல்லைக்கு ஈத்தான் என்று பழைய உரைகாரர் கூறும் உரையை மென்மையாக மறுக்கிறார் ஒளவை. இவ்வாறு கூறாது, முல்லைக்கொடியின் நிலை கண்டு பிறந்த அருளால் முன்பின் நினையாது உடனே தேரை ஈந்தான் என்றிருப்பின் சிறப்பாக இருக்கும். (புறநானூறு. பகுதி-II ப.3) என்று கூறுகிறார். தேருடன் என்ற சொல்லில் உள்ள உடன் என்பதற்குப் பழைய உரைகாரர் கூறும் பொருளை விட ஒளவை கூறும் பொருள் சிறப்பாகவும் பொருத்தமாகவும் உள்ளது. அந்தணன் புலவன் என்பதற்கு வெறும் சொற்பொருள் கூறாமல், அந்தணரும் மகட்கொடை நேர்தற்குரியவர் என்பது தோன்ற அந்தணன் என்கிறார் என்று விளக்கம் தருகின்றார். உரையாசிரியர், பாடலுக்கு வெறும் சொற்பொருள் மட்டும் கூறும் கடப்பாடு உரையவரல்லர். சொற்களுக்குப் புறமாக நின்றிருக்கும் மெய்ம்மைகளையும் எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடுடையவர் என்பது இதனால் பெறப்படுகின்றது. வடபால் முனிவர் என்பதற்கு விசுவபுராணசாரம் என்னும் தமிழ் நூலையும் இரட்டையர் செய்த தெய்வீகவுலாவையும் துணையாகக் கொண்டு, வடபால் முனிவர் என்றது சம்பு முனிவனாக இருக்கலாம் என டாக்டர் உ.வே.சா. ஐயரவர்கள் ஊகிக்கின்றார்கள் (புறநானூறு. பகுதி II ப.3) என்று விளக்கம் தருகின்றார். உரையாசிரியர் பன்னூற்புலமை மிக்கவராக இருக்க வேண்டும் என்பதற்கு இப்பகுதி சான்றாகிறது.


ஒளவையவர்கள் இலக்கியப் புலமையுடன் வரலாற்று அறிவும் கொண்டு விளங்கினார்கள் என்பதையும் இப்பாடலின் உரைப்பகுதி கொண்டு உணரலாம். உவரா ஈகைத் துவரையாண்டு என்ற தொடருக்கு உரை வரையுமிடத்து துவரையென்றது, வட நாட்டில் நிலங்கடந்த நெடுமுடியண்ணல் இருந்து ஆட்சி புரிந்த துவரை என்றும் அவன் பாலிருந்து மயை மாதவனான குறுமுனிவன் கொணர்ந்தவர் வேளிர்கள் என்றும் பதினெண் குடியினரென்றும் நச்சினார்க்கினியர் குறிக்கின்றார். (புறநானூறு, பகுதி-II ப. 3) என்று தமக்கு முந்தைய உரையாசிரியரின் கருத்தை மேற்கோள் காட்டுகின்றார். இத்துடன் நில்லாது துவரை மாநகர் நின்றுபோந்த தொன்மை பார்த்துக் கிள்ளிவேந்தன், நிகரில் தென்கவிர் நாடு தன்னில் நிகழ்வித்த நிதியாளர் என்ற கல்வெட்டுச் சான்றினையும் எடுத்து மேற்கோள் காட்டி, (Pudukkottai State Inscription, p. 120) துவரை பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே தொன்மையுடையதாய்க் கூறப்படுகிறது என்பதை நிறுவி நச்சினார்க்கினியர் கூற்றை வலுப்படுத்துகிறார்.

இப்பாடலில் புலிகடிமால் என்ற தொடருக்கு ஒளவையவர்கள் பன்முக விளக்கம் கூறுகிறார். புலிகடிமால் என்றது ஹொய்சள என்ற தொடரின் தமிழ்ப் பெயராகக் கருதுவதுமுண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் இருந்து ஆட்சி செலுத்திய ஹொய்சள வேந்தருடைய கல்வெட்டுக்களுள், பண்டை நாளில் யது குலத்தில் தோன்றிய சளவென்ற பெயரினனான வேந்தனொருவன் சஃகிய மலைகளிடையே (மேலைவரைத் தொடர் Western Ghats) வேட்டை புரியுங்கால் முயலொன்று புலியொடு பொருதுவது கண்டு வியப்புற்று இந்நிலம் மிக்க வன்மை நல்கும் பெருநிலம் போலும் என எண்ணியவனாய், அவற்றைத் தொடர்ந்து சென்றானாக, அங்கே தவம் புரிந்து வந்த முனிவனொருவன் புலியைக் கண்டு, சளனே போய்ப் புலியைக் கொல்க (அதம் ஹொய்சள) என வேந்தனைப் பணித்தலும் அவன் உடைவாளையுருவிப் புலியைக் கொன்றான். முனிவர் அருள் பெற்று மீண்ட சளவேந்தன் அது முதல் ஹொய்சளன் எனப்பட்டான்; அவன் வழிவந்தோர் தம்மை ஹொய்சளர் எனக் கூறிக்கொள்வாராயினர் என மைசூர் நாட்டுப் பேலூர் மாவட்டத்தில் பேலவாடியில் உள்ள நரசிம்ம ஹொய்சள தேவர் கல்வெட்டொன்று (Epi. Car. Vol. 1 BLL 171)கூறுகிறது. (புறநானூறு, பகுதி-ii,u. 2-3) இவ்வாறு ஒரு தொடருக்கு விளக்கம் தரக் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்தாண்டிருப்பது பிள்ளையவர்களின் பரந்து பட்ட அறிவை எடுத்துக் காட்டுகிறது.

ஹொய்சள என்பதற்கு அதாவது புலிகடிமால் என்பதற்கு மேற்காட்டப்பெற்ற கல்வெட்டுச் சான்று தருவதுடன் ஒளவையவர்கள் மனநிறைவு அடைந்துவிடவில்லை. இச்செய்தி நம்பகத் தன்மையுடையது தானா என்ற வினாவை மனத்தில் எழுப்பிக் கொண்டு மேலும் தமது தேடலைத் தொடர்கின்றனர். மைசூர் மாநில பேலூர்க் கல்வெட்டுச் செய்தியை, அதே பகுதியில் கிடைத்த ஹொன்னாவரத்துக் கல்வெட்டுச் செய்தியுடன் ஒப்பிட்டு ஆய்கிறார். இரண்டாவதாகக் குறிக்கப்படும் கல்வெட்டில் மேற்கூறப்பட்ட கதை சற்று மாற்றத்துடன் இடம் பெற்றிருப்பதை எடுத்துக் காட்டுகிறார். அதாவது புலியை முயல் துரத்திய பகுதி இல்லாமல், முனிவனின் அருளினால் மன்னன் சசகபுரத்தை ஆட்சி செய்யத் தொடங்கியதும், அவ்வூர்த்தெய்வமான வாசந்திகை புலியுருவத்தில் வந்து போரிட சளன் அவளை வென்றான். இதனால் ஹொய்சள என்ற பெயர் ஏற்பட்டதாக ஒரு செய்தியை வீரவல்லாள தேவனின் கல்வெட்டினை மேற்கோள் காட்டி ஒளவை விளக்குகிறார். (புறநானூறு, பகுதி-II ப.4) இவ்வாறு கல்வெட்டுக்களில் கூறப்படும் கதைகளை எடுத்துக்காட்டுவதுடன் ஒளவை நின்றுவிடவில்லை.

பாடலின் சொற்பொருளையும் குறிப்பிட்ட பகுதியினரிடையே வழக்கத்தில் இருக்கின்ற சொற்களையும் பயன்படுத்தி ஒரு முடிவுக்கு வருகிறார் ஒளவை. அப்பகுதியக் காண்க. நாற்புறமும் மலைமுடிகள் சூழ்ந்த இடத்தைத் தடவென்றும் கோட்டமென்றும் கூறுதலால், முனிவன் தடவென்றது, முனிவனொருவன் இருந்த மலைமிசை இடைநிலமென்றும், அந்நிலத்து வாழ்ந்த வேளிர் தலைவனொருவன், அப்பகுதிக்குக் கிழக்கில் உள்ள புலிநாடென்றும் பன் நாடென்றும் வழங்கிய கன்னட நாட்டு வேந்தனை வென்றது பற்றியே புலிகடிமால் எனப்பட்டான் என்றும் கொள்வது நேரிதாகத் தோன்றுகிறது. (புறநானூறு, பகுதி II ப.4) என்று ஒளவை அறிவுசார்ந்த விளக்கம் தருகின்றார். இறை நம்பிக்கையும் உணர்வும் கொண்டிருந்தாலும் ஒளவை அவர்கள் இலக்கியங்களுக்கு உரை எழுதும்போது உண்மையைக் கண்டறிவதிலேயே ஆர்வங்கொண்டிருந்தார்கள். தமது தனிப்பட்ட உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் வரலாற்று ரீதியான விடயங்களில் கலந்து விடவில்லை. இலக்கியத்தை இலக்கியமாகவும் வரலாற்றை வரலாறாகவும் பகுத்துக் கையாண்ட பெருமிதத்திற்குரியவர் ஒளவை எனலாம்.

புலிகடிமால் என்பதற்கு ஒளவையவர்கள் மேலும் விளக்கங்கள் கூறுகிறார். அந்நாளில் அப்பகுதியை ஆண்ட ஆந்திர சாதவாகன வேந்தருள் புலிமாய் என்பான் சிறந்து விளங்கினமையின் ஒருகால் அவனை வென்றது பற்றி இருங்கோவேள் புலிகடிமால் எனப்படுவானாயினன் என்றும் கொள்ளலாம். மேனாட்டு யவனரான தாலமியும் இப்புலிமாய் வேந்தனைக் குறித்துள்ளார். சாதவாகனராட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்திருக்கிறது. அந்நாளிலேயே துவராவதி (துவரை) நகரம் அந்நாட்டில் இருந்திருக்கிறது. ஸ்ரீபுலுமாவி, புலிமாயி எனக் காணப்படினும் கன்னட மொழியில் அது புலிமெய் என வழங்கும் என்றும் புலிபோலும் மெய்வலியுடையனென்பது பொருளென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவ்வாற்றால் ஹொய்சாள கதையிலும் இது பொருத்தமாதல் காணப்படும் என்று கூறுகிறார். (புறநானூறு, பகுதி II ப.5) இதனால் உண்மைப் பொருளை உணர்ந்து கூறுவதற்கு ஒளவை அவர்கள் மேற்கொண்ட உழைப்பும் துன்பமும் புலனாகின்றன.


இதுவரை கூறப்பெற்ற விளக்கங்களைப் படித்துவரும் மாணவனின் உள்ளத்தில் இயல்பாகப் பிறிதொரு வினா தோன்றுகிறது. மைசூர்ப்பகுதியை ஆண்டு வந்த புலிகடிமாலுக்கும் தமிழ்நாட்டில் கபிலர் கூறும் இருங்கோவேளுக்கும் என்ன தொடர்பு?? என்ற வினாதான் அது. இவ்வினாவிற்குரிய விடையையும், ஒளவையவர்கள் கூறுகிறார். இப்புலிகடிமால் வழிவந்த இருங்கோவேளிர்களுட் பலர் புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்திருந்தனரென அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள் காட்டுகின்றன என்று உரையை நிறைவு செய்கிறார் பிள்ளையவர்கள். புறநானூறு 201-ஆம் பாடல் இருபது அடிகள் உடையது. இதற்குப் பிள்ளையவர்களின் உரை நான்கு பக்கங்கள் வரை நீண்டு செல்கிறது. பல்துறை அறிவு, உண்மை காணும் நேர்மை, பிறரை மறுக்கும்போது இனிமையுடன் மறுத்துரைத்தல், கடின உழைப்பு, வாசகனுக்குச் சென்று சேரும் முறையில் எளிமைப் படுத்திக் கூறுதல், மூலநூலிலுள்ள எந்தச் சிறிய குறிப்பினையும் தவறவிட்டு விடாமல் முழுமையாக உரை காணுதல் முதலிய பண்புகள் இருந்தமையினால்தான் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் உரைவேந்தர் எனப்பட்டார்.

எண்பொருள வாகசெலச் சொல்லித் தான் பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. (424)
என்ற குறட்பாவுக்குரிய முழுமையான சான்றாக ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் திகழ்கின்றார்.திருவருட்பா உரை


ஒளவை துரைசாமிப்பிள்ளையவர்கள் திருவருட்பா முழுமைக்கும் (5818 பாடல்கள்) உரை வரைந்திருக்கிறார். புறநானூற்று உரையில் அவரது வரலாற்றறிவும் இலக்கியச் சுவையுணர்வும் புலப்படுகின்றவெனின், திருவருட்பா உரையில் அவரது பக்தி இலக்கிய ஆழமும் அனுபவமும் புலப்படுகின்றன. திருவருட்பா முழுமைக்கும் சைவ சித்தாந்தக் கண்கொண்டு உரை வரைந்திருக்கிறார்கள். ஒரு சில பகுதிகளைக் காணலாம்.

திருவருட்பா ஆறாம் திருமுறையில் பிள்ளைச் சிறு விண்ணப்பம் பகுதியில்,
இன்சுவை உணவு பலபல எனக்கிங்
கெந்தை நீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின்சுவை உணவென்றுண்கின்றேன்; இன்னும்
நீதரு வித்திடில் அது நின்
தன் சுதந்தரம் இங்கெனக்கதில் இறையும்
சம்மதம் இல்லை நான் தானே
என் சுதந்தரத்தில் தேடுவேன் அல்லேன்
தேடியதும் இலை ஈண்ட
(திருவருட்பா தொகுதி -8 – பாடல் 3394)
என்ற பாடலுக்கு ஒளவையவர்கள் உரைவரையும்போது, மிக நுட்பமான அவரது பார்வை புலப்படுகின்றது. இன்சுவை உணவு பலபல என்பதற்குச் சுவையினும் உருவினும் வேறாயவை என்றற்குப் பலபல என்று குறிக்கின்றார். (திருவருட்பா, தொகுதி -8 ப. 300) என்று விளக்கம் கூறுகின்றார். பாடலில் வரும் ஒரு சீரைக்கூட விட்டுவிடாமல் விளக்கம் தர முயற்சி செய்யும் அவரது மனப்போக்கு இதில் காணப்படுகின்றது. இதில் ஆன்மாவின் சுதந்திரமின்மை விளக்கியவாறாம் என்று சித்தாந்த ரீதியில் பாடலின் முழுப்பொருளைச் சுட்டுகிறார். மேலும் இறைவனின் பண்புகள் தோன்ற, மேலும் பல தருதலும் விரித்தலும் பிறவும் எல்லாம் திருவருளின் தனியுரிமையாம் என்பதை அது நின்றன் சுதந்திரம் என்றும் திருவருளின் வரம்பகன்ற சுதந்திரத்தின் ஆன்மாக்கள் இடைபுகல் இன்மையும் அருமையும் விளங்க, எனக்கதில் இறையும் சம்மதம் இல்லை என்றும் திருவருள் நலங்களை நாடித் தேடுவது என்னுடைய சுதந்தரமாகாமையின் தேடுவேனல்லேன் தேடியதும் இல்லை என்றும் எடுத்துரைக்கின்றார். (திருவருட்பா, தொகுதி-8 ப. 300) என்று நுணுக்கமாகப் பொருள் கூறுகின்றார்.

சித்தாந்த அடிப்படையில் உரை கூறும்போது, மூலத்தின் பொருளை விளக்குவதற்குச் சில சமயங்களில் சில சொற்களை வருவித்துப் பொருள் கூறும் முறையையும் இவர் பின் பற்றுகின்றார்.

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே. (திருவருட்பா, தொகுதி-8, 4073)

இப்பாடலில் தப்பேது நான் செயினும் என்ற தொடருக்கு உரை கூறும் பிள்ளையவர்கள் முக்குண வயத்தால் தவறு செய்தல் உயிர்கட்கு இயல்பாதலால், தப்பேது நான் செய்யினும் எனவும் கூறினார் என்று உரை கூறுகிறார். தான் ஏதேனும் தவறுகள் செய்தாலும் பொறுத்துக்கொள்ளுமாறு வள்ளலார் பாடலில் வேண்டுகிறார். எனினும் ஒளவையவர்கள் உரையில் உயிர்கள் தவறு செய்வதற்குக் காரணம் முக்குணங்கள் என்று தமது உரையில் நிறுவுகின்றார். ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் நுண்மாண் நுழைபுலத்திற்கு இது ஒரு சான்றாகும். இதைப் போன்ற பல சான்றுகளை அவரது உரைகளிற் காணவியலும்.


இலக்கிய வரலாற்றாசிரியர்

ஒளவை துரைசாமிப் பிள்ளையின் எழுத்துப் பணிகளுள் தலை சிறந்து நிற்பது அவரது சைவ இலக்கிய வரலாறு ஆகும். வரலாறு என்பது சமூக உறவுகளின் இயக்கத்தின் விளைவாகும். மன்னர்களின் கால வரிசைப்படியான பட்டியலோ அல்லது அவர்களின் தலைசிறந்த போர்ச்செயல்களோ வரலாறாவதில்லை; குறிப்பிட்ட காலத்தில் சமூகம் எவ்வாறு இயங்கியது என்பதை அறிவித்தல்தான் வரலாறு அமைகின்றது. இதே முறையில் இலக்கிய வரலாறு என்பதும் நூற்பட்டியல் தருவதில் அடங்குவதில்லை. இலக்கிய வகைகள் தோன்றுதல், வளர்தல், அதாவது மக்களிடையே செல்வாக்குப் பெறுதல், பின்னர் வேறு இலக்கியவகை தோன்றும்போது அதன் ஒளியில் ஒடுங்குதல் முதலிய நிகழ்வுகளும் இவற்றிற்கான சமூக, அரசியல், உளவியல் காரணங்களை எடுத்துரைப்பதிலும் தான் இலக்கிய வரலாறு அமைகிறது.

ஒளவை துரைசாமிப் பிள்ளையின் சைவ இலக்கிய வரலாறு கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் தோன்றிய சைவப் பெரியோர்களின் படைப்புக்களைப் பற்றி விரிவாக ஆராய்கின்றது.


இலக்கிய வரலாற்றின் நோக்கம்ஒளவையவர்களின் சைவ இலக்கிய வரலாறு நூலினை இப்போது முழுமையாகப் படிப்பவர்கள், அந்நூலில் தெளிவான ஒரு முறையியலை அவர் பின்பற்றியிருப்பதை உணரமுடியும். முதற்கண் இத்தகையதொரு நூலினைத் தாம் எழுத முனைந்ததற்கான காரணத்தைக் கூறுகிறார்.

தமிழ் இலக்கியங்களைப் பல பகுதிகளாகப் பகுத்துக் கொண்டு வரலாற்றைக் காண்பது முறையாகத் தோன்றினமையின் அவ்வகையில் சைவ இலக்கியப் பகுதி என்பால் எய்திற்று.
இலக்கியங்களின் தோற்றம், பேணற்பாடு முதலிய கூறுகளை உணர்தற்கு அவை தோன்றிய காலத்து நாட்டு வரலாற்றறிவு பெருந்துணையாகும்…. இத்தகைய பொது வரலாறு தெரிந்திருப்பது பெரிதும் நன்று. (சைவ இலக்கிய வரலாறு. ப. VII)

இத்தகைய பொது வரலாறு இல்லாததால், கிடைக்கும் துணைகளைக் கொண்டு இந்தச் சைவ இலக்கிய வரலாறு தோன்றி வெளிவருகின்றது என்று ஒளவையவர்கள் கூறுவதால் இலக்கிய வரலாற்றின் நோக்கம், பயன், அதனை எழுதுவதில் உள்ள இடர்ப்பாடுகள் முதலியவை பற்றிய தெளிவுடன் இருந்திருக்கிறார் என்பது புலனாகின்றது.


இலக்கிய வரலாறெழுதியலில் முதல்நிலை (Historiography)சைவ இலக்கிய வரலாற்றினை விவரிக்கும் முயற்சியில் முதல் படிநிலையாக, அக்காலத் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றினைக் கோடிட்டுக் காட்டுகிறார் பிள்ளையவர்கள். இப்பகுதியில், பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள், நாட்டுப் பிரிவுகள், மன்னர்கள் பற்றிக் கூறுகிறார். கி.பி. 575 முதல் 900 வரையுள்ள காலப்பகுதியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்து வந்த பல்லவர், பாண்டிய அரச மரபினர்களைப் பற்றிய செய்திகளையும் அவர்களது மொழி, சமயச்சார்பு நிலைகளையும் முதற்கண் விளக்குகிறார். இக்காலப் பகுதியில் புத்த சமயத்தின் நிலையைப் பற்றி வரையறை செய்து கூறுகிறார். ஒரு காலத்தில் அரசியலாதரவு பெற்று நிலைபேறு கொண்ட புத்த சமயம் கி.பி. ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளை எய்துதற்குள் தன் செல்வாக்கினை இழப்பதாயிற்று என்று கூறுகிறார். (சைவ இலக்கிய வரலாறு, ப. 15) இக்காலத்தில் புத்த சமயத்தின் நிலை நடைமுறைப் பயன்பாட்டினை இழந்து வெறும் கொள்கை நிலை அளவில் நின்றது. அவருடைய சங்கங்கள் புத்த சமயக் கருத்துக்களை மாணவர்க்கு உரைப்பதும், அவர்கள் துணையாக நாட்டிற்புகுந்து நாட்டவர்க்குப் புத்த தருமத்தை விரித்துரைத்துப் பரப்புவதும் ஏனைச் சமயத்து அறிஞர்களோடு சொற்போர் செய்வதுமே அவர்கள் பெரும்பாலும் மேற்கொண்டிருந்த கொள்கைகளாகக் காணப்படுகின்றன என்று கூறுகிறார். (சைவ இலக்கிய வரலாறு. ப.15)


புத்த சமயத்தின் நிலையை ஆராய்வது போல, சமண சமயத்தின் நிலையையும் ஆராய்கிறார் ஒளவை. இதன் நிலையும் புத்த சமயத்தின் நிலையை ஒத்து, மக்கள் வழக்கிலில்லாமல் கோட்பாட்டு முரண்பாடுகளுடன் வாழ்கின்ற நிலையை எய்தியது என்று கூறுகிறார். இவ்விடத்தில் பிள்ளையவர்கள் மிக முக்கியமான ஒரு கருத்தினைக் கூறுகின்றார். அக்காலத்தில் வேந்தரிடையே நிகழ்ந்த போர்கள் கோயில்கட்குக் கேடு செய்ததில்லை. பிற்காலத்தே கோயில்கள் பெருஞ்செல்வ நிலையங்களாக மாறியது காரணமாகப் பகைவர் கைபட்டுச் சீர்குலைந்தன. இது நிற்க பல்லவர் காலத்தே இக்கல்விக் கடிகை பகைவரது தீச்செயல்கட்கு இரையானதற்கு அரசியலில் தொடர்பு வைத்துக்கொண்டதே காரணமாகும் (சைவ இலக்கிய வரலாறு, ப.26). இது எவ்வளவு ஆழ்ந்த சிந்தனை என்பதனை அண்மைக்காலத்தில் வெளிவந்த கோ. கேசவன் போன்றோருடைய ஆய்வுகள் காட்டுகின்றன. பொருள்முதல்வாதம் பற்றிய அறிமுகம் ஏதும் இல்லாமலேயே ஒளவை இக்கருத்தினைக் கூறியிருப்பது வியப்பாக உள்ளது. இதன் பின்னர், சைவ சமயம் மக்களிடையேயும் சிந்தனையாளர்களிடையேயும் வாழ்ந்திருந்ததை எடுத்துக்காட்டுகிறார். இதன் தொடர்ச்சியாகச் சைவ இலக்கியங்கள் பற்றிய வரலாற்றுக்குப் பிள்ளையவர்கள் வருகின்றார். ஒரு வரலாற்றை எழுதத் தொடங்குவதற்கு முன்னர், ஒளவையவர்கள் செய்து கொள்கின்ற முன் வரைவுத் திட்டங்களும், ஆய்வு முறையியலும் வியப்பிற்குரியவை. பிறரால் பின்பற்றத் தக்கவை. முதற்கண் நாட்டின் புவியமைப்பு, அரசியல், சமயம், பின்னர் இலக்கியங்கள் என்றவாறு பருப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கு (Macro to Micro) ஆய்வுப் பயணத்தை ஒளவை மேற்கொண்டிருப்பது புலனாகிறது.

சைவ இலக்கியங்கள் பற்றிய வரலாற்றுப் பகுதியில் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாரூரர், சேரமான் பெருமான், ஏனாதி சாத்தஞ்சாத்தனார், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், சேந்தனர், நந்திக்கலம்பகம், ஒளவையார், சிலர் கண்டராதித்தர், நம்பியாண்டார் நம்பி, வேம்பையர்கோன் நாராயணன் போன்றோர் பற்றி ஆய்கின்றார். இப்பகுதியிலும் முன்னர்க் கூறப்பட்டது போன்றே ஆய்வு முறை தெளிவாகப்பின்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு சான்றோரைப் பற்றிக் கூறும்போதும் 1. அவர் பற்றிய வரலாறு (பெரிய புராணத்தின் அடிப்படையில்) 2. பிற நூல்களில் அடியார் பற்றிக் கூறப்படும் குறிப்பு, 3. அடியவரின் கால ஆராய்ச்சி, 4. அடியவர் வரலாற்றாராய்ச்சி (இதில் அடியவர்களின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் செய்திகளின் முரண்பாடுகளை ஆய்கிறார்), 5, திருப்பதிகங்களின் எண்ணிக்கை, 6. திருப்பதிகங்களின் ஆராய்ச்சி (இப்பகுதியில் பாடல்களின் உள்ளடக்கச் செய்திகள் முறையாக ஆராயப்படுகின்றன.), 7. பாடல்களில் சிறப்பித்துக் கூறப்படுகின்ற பிற சான்றோர், 8. பாடல்களில் இடம்பெறும் திருத்தலங்கள், 9, திருப்பதிகங்களின் இலக்கிய நலங்கள், (சொல் நலம், அரிய சொல்லாட்சிகள், முந்துநூல் வழக்கு), 10. சான்றோர்களைப் பற்றிய கல்வெட்டுச் செய்திகள் என்றவாறு இயல்களை அமைத்திருக்கிறார். இன்றைய ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் ஒளவையிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய அரிய செய்தியாக இது தோன்றுகிறது. இந்நூலில் உள்ள பதினைந்து இயல்களிலும் இதே மாதிரியான வைப்புமுறை உள்ளது என்று கூறவில்லை. இவற்றுள் ஒன்றிரண்டு கூடியும் குறைந்தும் மாறியும் தேவைக்கு ஏற்ப அமைக்கப் பட்டுள்ளன. ஆய்வுப் பொருளுக்கு ஏற்ற அணுகுமுறை இயல் வைப்புமுறைகளை அமைத்துக்கொள்ளுதல், அதே சமயம் உண்மை அறியும் நோக்கில் அமைந்திருக்கின்றன. ஆய்வுப் பயணத்தடத்திலிருந்து விலகாமை என்ற அரிய பண்புகளைக் காண முடிகிறது.

பெருவழக்காகக் காணப்படுகிற இலக்கிய வரலாறுகளில் எடுத்துக்காட்டப்படும் பாடல்களைத் தவிர்த்துப் புதிய பாடல்களைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தும் முறையினையும் ஒளவை பின்பற்றியுள்ளார்.


சமுதாய ஏற்பினை இனங்காணுதல்

குறிப்பிட்ட ஓர் இலக்கியப் படைப்பிற்கு அல்லது இலக்கியாசிரியனுக்குச் சமுதாய ஏற்பு எந்த அளவுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கணக்கிட புள்ளிவிவர அணுகுமுறை இன்றைய ஆய்வுகளில் பயன்படுத்தப் படுகிறது. இதற்காக ஆய்வுக்குரிய இலக்கியத்திற்குப் பிற்பட்ட காலங்களில் தோன்றிய இலக்கியங்கள், இலக்கிய மல்லாத பிற சான்றுகள் முதலியவற்றில், (Extra Literary or Non literary sources) தரவுகளைத் தேடித் தொகுப்பது உகந்த அணுகுமுறை என்று ஒப்பிலக்கியம் கூறுகிறது. திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் போன்ற பெருமக்களுக்கு எத்தகைய சமுதாய ஏற்பு இருந்தது என்பதைக் கல்வெட்டுக்கள், மக்கள் வரலாறுகள், கோயில் ஆய்வுகள், வழிபாடுகள் முதலிய துறைகளின்று தொகுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு ஒளவை மதிப்பீடு செய்கின்றார். ஒரு சான்று காணலாம். திருநாவுக்கரசரின் எடுத்த பொற்பாதம் என்ற தொடர், பிற்காலத் தில்லைக் கல்வெட்டு ஒன்றில், இவை அருளால் ஊர்க்கணக்கு எடுத்த பொற்பாதப் பிரியன் எழுத்து என்று இடம் பெறுகின்றது. தில்லையில் ஊர்க்கணக்கராக இருந்த ஒருவர் பற்றி இவ்வாறு கூறப்படுகிறது. இதன்மூலம் திருநாவுக்கரசரின் பதிகங்கள், பதிகத் தொடர்கள் மக்களிடையே பெற்றிருந்த செல்வாக்கினை உணரமுடியும்.

ஒளவையவர்கள் ஒரு சிறிய தரவினைக் கூட விட்டுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக செய்தி. ஏனாதி சாத்தஞ்சாத்தனார் என்ற சைவப் பெருமகனாரைப் பற்றி எழுதி முடித்தபின், ஏனாதி என்ற சொல்லாராய்ச்சியில் ஏற்பட்ட அரசியல்களை முழுமையாக ஆராய்கின்றார். ஏனாதி என்பது அரசன் தானை வீரன் ஒருவனின் திறன்களை வியந்து அளிக்கும் பட்டம் என்று விளக்கியபின் மு.இராகவையங்கார் கூறும் கருத்தினை மறுக்கிறார். இராகவையங்கார் ஏனாதி என்ற சொல் சேனாதி என்பதன் திரிபு என்று குறிப்பிடுவதை மேற்கோள் காட்டி, ஸேனாபதி, சேனைத் தலைவர் என்ற சொற்களே தமிழில் வழங்கி வருகின்றன என்ரும் சேனாதி என்ற சொல் தமிழிலேயே இல்லாதபோது மு.இராகவையங்கார் கூறுவது தவறு என்று கடிந்துரைக்கின்றார். தோன்றியிராத சொல்லொன்றை நாட்டி அதன் திரிபு இத்தமிழ்ச் சொல்லெனச் சொல்லுவது ஆராய்ச்சியாளர்பால் மறந்தும் தோன்றக்கூடாத குற்றமாகும் (சைவ இலக்கிய வரலாறு, ப.294) என்று உறுதிபடக் கூறுகின்றார். ஒரு மொழியைப் பிறிதொரு மொழிக்கு அடிமைப் படுத்துவது அம்மொழியைப் பேசும் மக்கள் உள்ளத்தை அடிமைப் படுத்தும் சூழ்ச்சி என்பதை உலக வரலாற்றறிவு வெளிப்படுத்திவிட்டது. (சைவ இலக்கிய வரலாறு, ப. 295) என்கிறார். இத்தகைய மொழிப்பற்றும், உண்மையை உரைக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் மனப்பதைபதைப்பும் உண்மை ஆய்வாளருக்கே உரியன; வணிக நோக்கில் இன்று வெளிவந்திருக்கின்ற நூற்றுக் கணக்கான இலக்கிய வரலாறுகளில் ஒன்றி லேனும் இத்தகைய தூய தமிழ் உள்ளத்தினைக் காணலரிது.


இலக்கியப் பரவல் பற்றிய ஆய்வுபிற நாடுகளில் சைவ இலக்கியங்கள் ஏற்படுத்தி யிருக்கிற தாக்கத்தினையும், ஒளவை அளவிட்டுக் கூறியுள்ளார். சேந்தனாரில் திருப்பல்லாண்டு இந்தோனேசியாவில் திருமண வீடுகளில் பல்லாண்டு பாடு என்று கேட்டுக்கொள்வதும் உடனே பெண்கள் மான்கடில் என்று தொடங்கிப் பாடுவார்கள் என்றும் ஜி.கே. வான்புரோக்(G.K. Vanborough, The People in the East Indies, pp. 349-50)`என்பவரின் நூலினை மேற்கோள் காட்டி ஒளவை நிறுவுகிறார். எனினும் இது மொழியியல் ஆய்வு அடிப்படையில் உறுதிப் படுத்தப்பட வேண்டியது. இன்று காண அரிதாக உள்ள கடின உழைப்பும் ஆய்வு நேர்மையும் ஒளவையிடம் இருந்ததை உணர்ந்து கொள்ளலாம்.காப்பிய ஆய்வு


ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்களின் மிகக் குறிப்பிடத்தக்க அடுத்த பகுதி அவர் எழுதியுள்ள சிலப்பதிகார ஆராய்ச்சி, மணிமேகலை ஆராய்ச்சி, சீவகசிந்தாமணி ஆராய்ச்சி முதலியவையாகும். இதே முறையில் இந்நூல்களுக்கெல்லாம் அவர் எழுதியுள்ள உரைநடை வடிவிலான சுருக்க நூல்கள் மிகவும் முக்கியமானவை என்று தோன்றுகின்றன. இத்தகைய நூல்களுள் சீவகசிந்தாமணி ஆராய்ச்சி இங்குப் பேசப்படுகின்றது. இந்நூல் சீவக சிந்தாமணி பற்றிய முழுமையான உள்ளடக்க ஆய்வாகிறது. நூலாசிரியர், நூல்பாடிய வரலாறு, நூலாசிரியர் காலம், நூற்பொருள், கிளைக்கதைகள், கதைமாந்தர் குணம் செயல்கள், நூற்பொருள் ஆராய்ச்சி உள்ளிட்ட இருபது இயல்களில் சீவகசிந்தாமணியின் நலன்கள் முழுதும் விரித்துரைக்கப்படுகின்றன. ஒளவையவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் இக்காவியம் பற்றி விமரிசையாகக் கூறியிருப்பினும் இது சமூகத்தில் ஏற்படுத்திய எதிர் விளைவுகளைக் குறிப்பிடவும் தவறவில்லை. வினைக்கொள்கையின் (Theory of Karma) பயன் பற்றி இந்நூலில் பிள்ளை கூறுவது புதிய கோணத்தில் அமைந்திருக்கிறது. அவர் ஒருவர் பிறரால் துன்புறுத்தப்பட்டபோது துன்பம் செய்தார் பால் வெறுப்புற்று மேலும் பகை வளர்வதற்குரியவற்றைத் தாம் செய்து கெடாது அரண் செய்தல் வேண்டி, அவரால் தமக்குற்ற துன்பத்திற்குக் காரணம் தமது பண்டை வினையே என அமைதல் வேண்டும் என்றற்கெழுந்த வினையுணர்வுக் கொள்கை என்று கூறுவது (சீவக சிந்தாமணி ஆராய்ச்சி, ப. 239) புதிய அணுகுமுறையாகத் தோன்றுகிறது. சீவக சிந்தாமணி சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தால் இவ்வினையுணர்வுக் கொள்கை அழுத்தம் பெற்றது என ஒளவை கூறுகிறார். வினையுணர்வுக் கொள்கையை எல்லாச் செயற்கண்ணும் புகுத்தி, அதன் வீறுபாடு நாட்டு மக்கள் மனத்தில் வேரூன்றி நிற்பதற்கு இக்காவியமும் இதனைப் பின்பற்றி எழுந்த நூல்களும் காரணமாயின. இதன் பயனாக மக்கள் மனத்தில் தமக்கென இறைவன் அருளிய மனவுணர்வு வன்மையொன்று உளது. அதனால் செயற்கு உரியவற்றைத் தீதறச் செய்து ஒருவர் நலமடைதல் கூடும் என்ற தன்னம்பிக்கை (Trust in one’s own self) குன்றுவதாயிற்று (சீவகசிந்தாமணி ஆராய்ச்சி, ப. 240) என்று துணிந்து கருத்துக் கூறுகிறார்.

ஒரு காவியத்தை எவ்வாறு படிக்க வேண்டும் என்றும் எதற்காகப் படிக்க வேண்டும் என்றும் பிள்ளையவர்கள் தெளிவான கருத்துரைகளை முன்வைக்கிறார். காவியத்தைப் படிக்கும்போது தள்ள வேண்டுவனவற்றைத் தள்ளிக் கொள்ள வேண்டுவனவற்றைக் கொண்டு படித்தல் வேண்டும். காவியத்தை எதற்காகப் படிக்க வேண்டும் எனில், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், உணர்வுகளை மேம்படுத்திக்கொள்ளவும் பண்புகளைச் செம்மைப் படுத்திக்கொள்ளவும் தான் படிக்க வேண்டும் என்ற கருத்தினைக் கூறுகிறார். இலக்கியத்தினைச் சமுதாயப் பயன்பாட்டுக்கு உரியதாகக் கருதும் பிள்ளையவர்களின் பார்வையும் இதில் புலனாகிறது.

இன்றைய ஓர் ஆய்வு என்ற வகையில் பல ஆய்வுகளுக்கு இந்நூல்கள் முன்மாதிரியாக அமைகின்றன. இன்றைய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைத் தொடங்கும் முன்னர் இத்தகைய நூல்களை ஆழ்ந்து கற்றால் அவர்களது ஆய்வுப் பார்வை கூர்மை பெறக்கூடும்.


கட்டுரை நூல்கள்: ஒளவைத் தமிழ்ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதியுள்ள ஒளவைத் தமிழ் என்ற நூல் அவரது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக (1953-ல்) வெளிவந்திருக்கிறது. தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் பற்றி ஒளவையவர்கள் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இவை. இவற்றிலும் பிள்ளையவர்களின் தனித்த ஆய்வுத் திறனைக் காணமுடிகின்றது. எந்தவொரு இலக்கியப் படைப்பினையும் தனித்த நிலையில் கணித்துவிட இயலாது. ஓர் இலக்கியத்திற்கு அதற்கு முந்தைய இலக்கிய மரபுகளில் வித்துக்கள் காணப்படும். அவ்விலக்கியத்தின் காலத்திற்குப் பின்னரும் அதன் வீச்சுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இது இயக்கவிதி, ஒளவையவர்கள் இதனை பிரக்ஞை பூர்வமாக அறிந்தோ அல்லது அறியாமலோ தம் ஆய்வுகளில் செய்து காட்டுகிறார். மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பற்றிய ஆய்வில் பாவைப்பாடல்களின் தோற்றத்திறனைப் பண்டைய இலக்கியங்களில் தேடுகிறார். பாவைப்பாடல்களின் பல்வேறு திறன்களை ஆராய்கிறார். தமிழகத்தில் புகழ் பெற்ற பாவைப்பாடல்கள் சயாம் நாட்டிலும் நிலவுவதைப் பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டுகிறார். முடிசூட்டு விழாவில் ஓதப்படும் மந்திரம் லோரிபாவாய் என்றழைக்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறார். திருவெம்பாவை, திருப்பாவை
விழா லோ-ஜின் – ஜா என்றழைக்கப்படுவதையும் சுட்டுகிறார். இதற்காக இந்திய அரசு வெளியிட்டுள்ள பல்வேறு கல்வெட்டுத் தொகை நூல்களிலிருந்தும் சான்றுகள் காட்டுகின்றார். H.G. குவாரிட்சு என்பாரின் சயாம் நாட்டு அரசு வாழ்க்கை (The Lord Chamberlain Department of the Court of Siam) என்ற ஆங்கில நூலின் கருத்துக்களையும் தக்கவாறு மேற்கோளாகப் பயன்படுத்துகிறார்.

ஒளவையவர்களின் சங்க இலக்கிய அறிவும் சித்தாந்தத் தெளிவும் ஏனைய கட்டுரைகளில் நன்கு புலனாகின்றன.நந்தா விளக்கு

இவருடைய பிறிதொரு கட்டுரைத் தொகுதி நந்தாவிளக்கு என்ற நூலாகும். இக்கட்டுரை நூலின் தொடக்கத்தில் கட்டுரை என்பதற்கு விளக்கம் தருகிறார். எடுத்த ஒரு பொருளைப் பற்றி எழும் நினைவுகளைக் காரண காரிய நெறியில் முறைப்படுத்திப் பிறர் உள்ளம் கொள்ளும் வகையில் எழுதிக்காட்டுவன கட்டுரைகள் (முன்னுரை, ப.1) என்று கூறுகிறார். பண்டைத்தமிழகம் என்ற கட்டுரையில் தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறை செய்து காட்டுகிறார். பண்டைத்தமிழர் நாகரிகம், வேளிர்கள் செய்த நற்பணிகள் முதலியவை பற்றிக் கூறுகிறார். ஒரு காலத்தில் சேரவரசு கொங்குநாடு முழுவதும் பரவி இருந்ததைக் குறிப்பிட்டு, இரண்டு வஞ்சி நகரங்கள் தலைநகராக இருந்தன என்பதைக் கூறுகிறார். இரண்டாவது வஞ்சி நகரம் கருவூராக மாறிற்று என்று கூறிப் பிற்காலச் சோழவேந்தரின் கொங்கு வஞ்சி இராசராசபுரம் என்ற பெயர் பெற்று முடிவில் அதுவும் தேய்ந்து தாராபுரம் என்ற பெயருடன் இன்று நிலவுவதாயிற்று என்று கூறுகிறார். (நந்தா விளக்கு, ப.12. நாகலிங்கம் அண்டு கம்பெனி, புது மண்டபம், மதுரை 1954) இதேபோல் நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் , கல்வெட்டுக்கள் பற்றியும் ஒளவையவர்கள் அரிய செய்திகளைக் கூறியுள்ளார்.


வரலாற்று நூல்கள்பிள்ளையவர்களின் இலக்கிய அறிவும் வரலாற்றறிவும் புலப்படும் பிறிதொரு நூல் மதுரைக்குமரனார் என்ற நூலாகும். இதில் கோனாட்டு எறிச்சலூர் மதுரைக்குமரனார் பாடிய பாடல்களை ஆராய்ந்திருக்கிறார். இதில் கோனாடு என்பது இன்றைய புதுக்கோட்டைப் பகுதி என்பதை நிறுவுகிறார். வரலாற்றினை எழுதும்போதும் இலக்கிய நயத்துடனான நடையினைப் பயன்படுத்துதல் இவரது தனித்தன்மை ஆகும். இளஞ்சேட்சென்னியின் வீரத்தையும் வலிமையையும் மக்களும் சான்றோரும் பலபடப் பாராட்டுவது உண்டு என்று கூறும் பிள்ளை பின்வருமாறு எழுதுகிறார். சான்றோரிடையே வேந்தர்களின் போர்ச்செயல்கள் பொருளாகப் பேச்சு நிகழுமேயன்றி வேறு பொருள் பற்றிய பேசுதற்கு இடமேது? வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் மக்கள் உள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. (ப.98) என்றெழுதுகிறார். இதில் வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும் என்பது தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாவாகும். இந்நூற்பாவின் ஒரு வரிசை உரைநடையிலேயே தக்கவாறு பெய்து எழுதும் திறன் பெற்றிருந்தார் பிள்ளையவர்கள். ரசிகமணி டி.கே.சி. முத்தொள்ளாயிரம், கம்பராமாயணத்தில் மிகுதியாக ஈடுபாடு கொண்டு அவற்றைப் பயில்வதிலும் பிறர்க்கு எடுத்துரைப்பதிலும் காலத்தைச் செலவிட்டவர். அதுபோல் ஒளவை துரைசாமிப் பிள்ளை சங்க இலக்கியச் சுவையில் தன்னை மறந்து தலைப்பட்டவர் என்பதை இச்சிறிய நூல் எடுத்துக்காட்டுகிறது. சங்க இலக்கியங்களைப் பயில்வது பண்டிதர் தொழில். நமக்கு பாவங்கள் நிரம்பிய முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் போதும் என்று டி.கே.சிதம்பரநாத முதலியார் கூறியதாக ஒரு செய்தி அவரைப் பற்றிய நூல்களில் உண்டு. ஒளவையின் சங்க இலக்கிய நூல்களை டி.கே.சி. படிக்கவில்லை. படித்திருந்தால் அவரது பார்வை சங்க இலக்கியங்களில் படிந்திருக்கும். மேலும் சில புதுவரவுகள் சங்க இலக்கியங்களைப் பற்றி வந்திருக்கும் என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறு என்ற நூலும் ஒளவையவர்களின் வரலாற்று அறிவுக்குத் தக்க சான்றாக அமைகின்றது.

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் சித்தாந்த நூல்கள், வரலாறு என்றவாறு பலவகைகளில் தமது எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர். இவருடைய நூல்கள் பலவற்றிலும் ஆழ்ந்து பயணம் மேற்கொள்ளும் ஒருவன் எந்த இடத்திலும் முரண்பாட்டினைக் காணவியலாது. நந்தா விளக்கு நூலில் கருவூர்ச் சேர மன்னர் வரலாற்றைப் பற்றிக்கூறும் செய்திகள் பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு என்ற நூலில் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பற்றிக் கூறுமிடத்திலும் அதிகமான இலக்கிய மேற்கோள்கள் இடம் பெறுகின்றன. இவ்வாறு மறதியோ முரண்பாடுகளோ இல்லாமல் பல்வேறு நூல்களை எழுதுவது சாதாரணமான மனித மூளையின் செயல்பாடு என்று கருதமுடியாது. இன்று தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பயன்படுத்தப்படுகின்ற பெருங்கணினி (Super Computer) போல் நினைவாற்றலும் செய்திகளை ஒருங்கிணைக்கும் செயல்திறனும் உடைய மூளையினை உடையவர்களால் தான் இது போன்ற செயல்களைச் செய்யவியலும். ஒளவை துரைசாமிப் பிள்ளை இறையருளினாலும் தமது இடையறாத தொடர்ந்த படிப்பினாலும் முயற்சியினாலும் இத்தகைய திறன்மிகு அறிவாற்றலைப் பெற்றிருந்தார் என்று தோன்றுகிறது.

சங்க நூற்கடலில் தோய்ந்தெழு கொண்டல்
சைவசித்தாந்தத்தின் திலகம்
மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை மலர்த்தும்
வான்சுடர், வள்ளலார் நூலின்
இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி
இமயத்தைப் புலமையால் தாழ்த்தும்
துங்கமார் ஒளவை நம் துரைசாமித்
தோன்றல்……..
என்னும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரின் கவிதை மிகையன்று. உண்மை.

நன்றி : அரிமா நோக்கு: 3:2 ஏப்ரல் 2009

இக்கட்டுரையைத் தட்டச்சு செய்து வழங்கியவர் திருமதி. கீதா சாம்பசிவம்.

--Ksubashini 15:22, 6 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 6 ஆகஸ்ட் 2011, 15:23 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,736 முறைகள் அணுகப்பட்டது.