சித்தாந்த அத்துவிதம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சித்தாந்த அத்துவிதம்

முனைவர் கி.லோகநாதன் 1986

அடியேனது பல சிறுநூல்களில் இதுவும் ஒன்று. பிறகாலத்தில் நான் எழுதிய பல நூல்களில் இங்கு விளக்கப்படும் கருத்த்துக்களை நான் பல்வேறு வகையில் பயன்படுத்தி உள்ளேன். இச்சிறு நூலையும் இறந்துபடாது காக்க இப்பொழுது சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்கின்றேன்.

உலகன், 20-4-12

சித்தாந்த அத்துவிதம்-1


1.0

அடிப்படையாக இரண்டு வகைய அத்துவிதக் கருத்துக்கள் உண்டு. அ) அறிவத்துவிதம், ஆ) பொருளத்துவிதம் என்றவாறு இவை அழைக்கப்படும். அறிவத்துவிதம் என்பது, வெவ்வேறாகிய உயிர்கள் பிணைக்கப்பட்டு அறிவில் எவ்வித வேற்றுமைகளும் தோன்றாது ஒன்றென நின்று இயங்குவது, இது ஆழ்ந்த காதலால் கவரப்பட்டு ஈருயிரும் ஓருயிராய் இயங்கும் தம்பதிகளிடையே இருக்கின்ற உறவு போன்றது. அவன் விரும்புவதே அவள் விருப்பமாகவும் அவன் செயலே அவள் செயலும், அவன் இன்பமே அவள் இன்பம் அவன் உடமையே அவள் உடமை என்றவாறு உணர்வு நிலையில் முற்றிலும் ஒன்றுபட்டு ஒருங்கியங்குதலே அறிவத்துவிதம் எனும் இரண்டற்ற ஒருமை நிலையாகும்.

1.1

இனி பொருளத்துவிதமாவது, ஒரேப் பொருள் பல்வேறு சூழ்நிலைகக்ட்கு ஏற்ப வெவ்வேறாகத் தோன்றுவது என்பர். ஒரே வெள்ளைக் காகிதம் அல்லது தனக்கென்று ஓர் வண்ணம் இல்லாத படிகம், அதன் மேல் விழும் ஒளியின் வண்ணத்திற்குக் ஏறபவே தன் வண்ணமென அவ்வண்ணத்தைக் காட்டி நின்று வெவ்வேறு பொருள் என்றவாறு ஓர் பொருள் வெவ்வேறாகத் தோன்றி நிற்கும். இதுபோலத்தான் இப்பிரபஞ்சம் வெவ்வேறு பொருட்களின் தொகுதி என்று தோன்றுவதும் ஆகும். இப்படி உலகை அறிந்து உண்மையில் வண்ணங்களை நெதித்துவிட்டால் பேதமில்லை என்று உணராது தோற்றத்தில் மயங்கிக் கிடப்பதே மித்தியா ஞானம். இவ்வாறு கருதச் செய்வது ஓர் வகைய மாயா சத்தி. இந்த தோற்ற வேறுவாடுகளை நெதித்து மூலத்தில் பொருள் ஒன்றே அது பிரமம்மே என்று உணர்வதே மெய்ஞானம் என்று செல்லும் இந்த பொருளத்துவிதம் மாயாவாத வேதாந்தத்திற்கு அடிப்படையானது

1.2

இனி இன்னொருவகையான பொருளத்திவிதமும் உண்டு--- இதனை விசிட்டாத்வைதம் என்பர். ஒரே பொருள் பிளந்து பிளந்து விருத்தியடைந்து சித்தும் அசித்துமாய் பலவாகி பரிணமித்து நிற்கும். மண்ணே சட்டி பானை குடம் தட்டு என்று பலவாகப் பரிணமிப்பது போல இவ்வுலகும். இத்தகையப் பரிணாமங்கள் மூலப்பொருளின் வெவ்வேறு அங்கங்களே அவ்வகையில் ஓர் பொருள் அங்கமெனும் போது தனித்ததோர் பொருள் எனினும், ஒன்றின் கிழமைப் பொருளாக திகழ்தலின் அது தனித்த சுயம்பு அல்ல.

இவ்வாறு சித்தும் அசித்துமாய் விளங்கும் உலகப் பொருட்கள் ஒரே முலப்பொருளின் வெவ்வேறு வளர்ச்சிகள்- சித்தாகிய சிலந்தி தன்னுளிலிருந்தே அசித்தாகிய வலையை உருவாக்குவதுபோல, ஈசுவரன் தன்னுளிருந்தே சித்தும் அசித்துமாகிய இந்த உலகை உருவாக்குகின்றான் என்று கூறுவதே விசிட்டாத்வைதம் எனும் கோட்பாடு ஆகும்.

2.0

அநாதிப்பொருளாக பதி பசு பாசம் எனும் முப்பொருளுண்மையை வற்புறுத்தும் சைவம் கூறும் அத்துவிதம் அறிவத்துவிதமாகும்- எத்தகையப் பொருளத்துவிதமும் அல்ல. இந்த அறிவத்துவிதமே முத்தி நிலையில் இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் அந்நியமின்மையைக் கூறும் சுத்தாத்வைதமும் ஆகும். பொருள் வகையில் ஆன்மாவும் இறைவனும் வேறு என்ற உணர்வு இருந்தாலும் அறிவில் வேறல்ல ஒன்றே அந்நியமின்மையின் என்ற உனர்வும் உண்டு. மலங்களை எல்லாம் போக்கிய சுத்தமாகிய அமலனாகிய ஆன்மாதான் இவ்வாறு இறைவனோடு ஒன்றித்து பொருளில் வேறென்றாலும் அறிவில் வேறல்ல என்று நிற்க முடியும்

தொடரும்

சித்தாந்த அத்துவிதம்-2

3,0

இந்த வேதாந்தப் பொருளத்துவிதங்கள் எவ்வாறு தோன்றி இருக்கலாம்?

முதலில் அநாதிப்பொருளியலில் பதியினைப் போல பசுவும் பாசமும் அநாதி எனும் சைவங் கூறும் அறிவத்துவித விளக்கத்தைக் காண்போம்

ஆணவ மல பந்தத்தால் அஞ்ஞான இருளில் கிடக்கும் ஆன்மாக்கள், இறைவனின் திருவருள் என்னும் ஒளிப் பாய்ந்து அந்த ஞான அந்தகாரத்தை கிழித்து துமித்து ஒருபுடை நீக்க, ஆன்மாக்கள் இச்சா ஞான கிரியா சொரூபிகளாக எழுந்து அசுத்தமாயையின் ஈர்ப்புக்கு ஆளாகி மயங்கி பசுவாகி தனக்கென பல செயல்களை ஆற்றி கன்ம ஈட்டத்தையும் மெய்யாக்குகின்றன. இலிங்கவுருக்களாகிய மந்திரத் திருமேனிகளை அகத்தே பிரதிட்டை செய்து தனது இச்சாஞானக் கிரியா சத்தியினால் அந்த ஆன்மாக்கள் பல்வேறு வினைகள் ஆற்ற வழிசெய்து, அந்த அருளது வீழ்ச்சியை மிகுக்கும் புண்ணிய வினைகளினால் இச் சத்தியை வளர்த்து அதன்வழி உயர்ந்த இலிங்கவுருக்களைப் பெற அடிகோலி அதன்வழி ஆணவ இருளை சிறிது சிறிதாக அகற்றவும் உதவுகின்றான் அமலனாகிய பரசிவனாகிய இறைவன். இந்த ஞான அந்தகாரத்தின் ஆணவ மலம் நீங்க நீங்க ஆன்மா சுத்தமாகி அசுத்தமாயையின் ஈர்ப்புக்கு மயங்கி வீழ்வது போக்கி அதனால் ஆகாமிய கன்மம் ஈட்டுவதும் இல்லாதாக்கி அதனால் எல்லா மலங்களிலிருந்தும் நீங்கி சுத்தமாகி அமலமாகி சிவத்துவம் பெற்று சிவபெருமானுடன் ஒன்றித்து அந்நியமின்றி அறிவத்துமாய் நின்று வீடுபேறு மகிழும் ஆன்மா.

இனி இம் முப்பொருள் உணமையில் குறையிருந்தால் என்னவாகும்?

3.1

இனி இந்நிலையில் ஆன்மாக்களும் சுத்தாசுத்த மாயை கன்மம் இலங்கவுருக்களாகிய தெய்வடிவங்களாகிய மந்திரசொரூபங்கள் அறிவிற் பட ஆனால் ஆணவ மலம் படாதொழிய, ஆன்மா ஆணவத்தால் பந்திக்கப்பட்டு சமலனாக, அமலனாகிய பதியிடமிருந்து பொருள் வகையில் வேறாகி நிற்கின்றது என்ற கருத்தும் தோண்றாது போகின்றது. இறைவன் அநாதியே அமலன் என்ற கருத்தும் எழாது போகின்றது. போகவே மாயை முக்குணத்து பிரகிருதி மாயையாகி, சித்தாகிய ஆன்மா முக்குணங்களில் தாமத குணத் தாக்கத்தால் ஞான அந்தகாரத்தில் கிடக்கின்றது, அதுபொழுது இராசதம் சாத்வீகம் போன்ற குணங்கள் மேம்பட இந்த அந்தகாரம் நீங்கும் என்றும் கூறப்படும். மேலும் இறைவனை திருமாலாக்கி இந்த மாயையை தனது உடம்பாகக் கொண்டு சர்வேச்வரனாக்கி தனது உடம்பிலிருந்து சித்து அசித்தாகிய அனைத்தையும் படைக்கின்றான என்று கூறி விசிட்டாத்வைத பொருளத்துவிதம் கூறுவர். வீடுபேறு என்பது, தனது சுதந்திரத்தை முற்றிலும் இழந்து இறைவனது திருவுடம்பில் முற்றிலும் அடங்கி ஒன்றாகி வேறற நிற்பதுவே என்றும் கூறுவர். இதனால் ஆன்மா தன் சுதந்திரத்தை முற்றிலும் இழக்க வற்புறுத்தும் பிரபத்தி மார்க்கத்தையே தக்க சாதனமாகவும் வற்புறுத்துவர்.

3.2

இனி ஆணவ மலத்தோடு கன்மமும் மாயையும் அநாதிபொருட்களே என்று அறிவிற்படாது போக என்னவாகும்? ஆன்மாவும் இறைவனும் தான் அநாதிப் பொருட்களாக நிற்கும். இங்கு இறைவன் பிரமன் ஆகி ஆன்மாவும் அந்த பிரமமே, வேறாகத் தோன்றுவது மித்தை என்றும் பகரப்படும். மேலும் உலகம் பலவாறாகத் தோன்றுவதும் கற்பிதங்களே, அகம் பிரமம் அஸ்மி போன்ற உபநிடத மகாவாக்கியங்கள் இதைத் தான் கூறுகின்றன, வேதங்கள் சுருதி என்பதால் அவை பொயல்ல என்றவாறு ஆதி சங்கரரின் மாயாவாத வேதாந்த பொருளத்திவிதம் செல்லும்.

3.3

இதனால் ‘வேதாந்தத் தெளிவு சைவ சித்தாநதம்’ என்று கூறுவது அவ்வளவு சிறப்பல்ல. சித்தாந்தத்து முழுமையான உண்மையான அநாதிபொருளியலை பிழையாக குறையாக உணர்ந்தமையாலேயே வேததந்த பொருளத்துவிதங்கள் தோன்றியுள்ளன என்று கூறுவதே சிறப்பு.

3.4

சைவத்தின் முப்பொருள் உண்மை வேதங்களுக்கும் முற்பட்ட சுமேருத் தமிழ் இலக்கியங்களில் காணகிடக்கின்றது என்பதால், அதனின் குறைவான பிறழ்ச்சி அறிவுகளே வேதாந்தப் பொருளத்துவிதங்கள் என்பது தெளிவு,

தொடரும்

சித்தாந்த அத்துவிதம்-3

4.0

இனி இந்திய தரிசனங்களில் சைவ சிதாந்தத்தோடு ஒப்பிட்டுக் காண வேறு பல பிறழ்ச்சிகளும் அதனால் குறைகள் பலவுள்ள தரிசனங்களும் உண்டு. அவை யாவை என இனி சிறிது காண்பம்.

4.1

இனி பசுவாகிய ஆன்மாவும் பதியாகிய சிவசத்தியும் அநாதிப் பொருட்களாக காண வராது போக என்னவாகும்? உயிர்களின் குணங்களும் இறைவனது ஐந்தொழில்கள் போன்றவையும், அநாதியே உள்ளதாக காணவரும் மாயை மேல் ஏற்றப் பட அது தானே இயங்கும் பிரகிருதி மாயையாகக் காணவும் வரும். இந்த முக்குணத்து மாயையே தானே திரிந்து திரிந்து பிளந்து பிளந்து பலவாகி உயிர்களைப் போன்றும் அவற்றின் குணங்களைப் போன்றும் பல விருத்திகளைத் தரும். எப்படி வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர இவற்றில் இல்லாத சிவப்பு வண்ணம் தோன்றுகின்தோ அதேப் போல ஆன்மாக்கள் தெய்வங்கள் என்றெல்லாம் பல இந்த விருத்திகளில் தோன்றும். இவை எல்லாம் வெற்றுத் தோற்றமேத் தவிற உண்மையில் அநாதியாக அப்படி ஒன்றும் இல்லை என்றும் கூறுவர்.

இதுவே நிரீச்சுர சாங்கியம் எனப்படும் பண்டைய ஓர் இந்திய தரிசனத்தின் அடிப்படையாகும்.

தானியங்கி முக்குணத்து பிரகிருதி மாயை என்பது ஓர் வியக்கத்தக்க தற்கால அறிவியல் கருத்துப் போன்று விளங்குவது ஓர் அதிசயம் தான்.

4.2

இனி இதன் இன்னொரு வடிவமே புத்தர்களில் ஒரு சாரார் போற்றி மகிழும் கணபங்க வாதமாகும். இவர்கள் மாயையைக் கூட மறுத்து எல்லாப் பொருட்களளயும் தோன்றியவுடன் அழிந்து போகும் கணங்களின் ஓட்டத்திற்கு இறக்க , இருப்பது எல்லாம் இந்த கணங்களின் தோற்ற மறைவே, ஒன்று அழிய பிரிதொன்று அதன் சார்பினில் தோன்றி நித்தியமான ஓர் பொருள் உண்டு-- ஆன்மா இறைவன் மாயை என்றெல்லாம் அநாதிப் பொருட்களாகப் பல உண்டு எனும் பொருள் மயக்கத்தை உண்டு பண்ணி மலைவிக்கும். ஆழ தியானித்து இருப்பதெல்லாம் கணங் கணம் தோன்றி மறைவனவே என்று உணர வீடு பேறு என்பதாக இவர்கள் விளக்கம் செல்லும். இவர்களில் சித்து-அசித்து என்ற பேதத்திற்கு காரணமும் விளக்கமும் தேடிச் செல்வோர் ஈசுர சாங்கியவாதிகளாக வைபாடிக யோகாசார புத்தசமயிகளாக எழுவர். சுத்த சைதன்யமே எல்லாம் என்ரவாறு இவர்களில் சிலர் சொல்லிச் செல்வர். தாறுமாறாக ஓடும் இந்த சைதன்ய ஓட்டத்தை தியானத்தின் வழி நிதானப் படுத்தி அமைதி அடைவதே நிர்வாணம் என்றெல்லாம் கூறிச் செல்வர்.

5.0

உலகில் இயங்கும் அனைத்தும் சித்து என்றும் அசித்து என்றும் பேதப்பட்டு இருப்பது உண்மை என்றாலும், அநாதியே ஆணவ மலத்தால் பந்திக்கப்பட்ட ஆன்மாக்கள் இல்லை என்றால், எப்படி உலகில் விளங்கும் சித்துப் பொருட்களுக்கு விளக்கம் காண்பது?

அநாதியே இருப்பதாக புருடன் பரகிருதி என்ற இரண்டு உண்டு. இந்த புருடனே பரபிரம்மம் அதன் மாயையில் தோன்றும் பிரதிபிம்பங்களே உயிர்களாகிய சித்துப் பொருட்கள் என்றவாறு சாங்கியம் தழுவிய ஓர் தரிசனம் போதிக்கப்படுகின்றது. இது சித்தாந்த சிகாமணி போன்ற வீர சைவ நூற்களில் காணக் கிடக்கின்ற கருத்துமாகும்

5.1

இங்கு சாங்கீயத்தின் கைவல்யம் எனும் வீடுபேறு பற்றிய கருத்தையும் சிறிது தெரிவிக்க வேண்டும். ஆன்மாவே புருடன். அது பிரகிருதி மாயையோடு கலந்து புனர்ந்து பந்தப்பட்டு கிடக்கும்போதே பலவகையான துக்கங்கள் துயரங்கள் வேதனைகள் போன்றவை. ஓர் ஆடவன் ஓர் பெண்ணுடன் காமவேட்கையின் காரணமாக இன்பங் கருதி இணைந்து வாழப் புகும் போது, அந்த பந்தமே துக்கத்தின் துயரத்தின் காரணமும் ஆகின்றது. காமம் போக்கி துறவு தலைப்பட்டு பிரிந்து சென்றாலே அப்படிப்பட்ட துக்கங்களிலிருந்து விடுதலை. அதேப் போலத்தான் இந்த புருடனாகிய ஆன்மா பிரகிருதி மாயையின் பிடியிலிருந்து விடுபட்டு தனித்து நிற்க, துக்கங்கள் துயரங்கள் யாதுமில்லாத சுதந்திர நிலை அமையும் அதுவே கைவல்யம் என்றும் இதனை அடைவதே வாழ்க்கையின் நோக்கு என்றும் கூறுவர். இதனால் இந்த சாங்கீயத்தின் தாக்கத்தால் துக்க விசாரணை இந்திய தரிசனங்களில் ஓர் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

அநாதிப்பொருளாக ஆன்மா உள்ளது, அதேப் போல எல்லா துக்கங்களுக்கும் மூல காரணமாக ஆணவ மலம் உண்டு அது அநாதியே ஆன்மாவை பந்தித்திருக்கின்றது என்ற உண்மை கிட்டாது போக, கைவல்யம் போன்ற இப்படிப்பட்ட பிறழ்ச்சி துறவு விளக்கங்கள் என்று காண்க. உண்மையானத் துறவு ஆன்மா சுத்தமாகுவது என்ற கருத்தும் அன்பேத் தானாகுவது ஏன்ற கருத்தும் இல்லாது போவதைக் காண்க.

தொடரும்

சித்தாந்த அத்துவிதம்-4

6.0

மேலே சைவத்தின் அறிவத்துவிதம் எவ்வாறு முப்பொருள் உண்மையை ஏற்றுக்கொள்ளும் அநாதிப்பொருளியலோடு தொடர்புடையது என்று கண்டோம். பிற தரிசனங்கள் இதனைத் திரித்தும் குறையாகவும் கொண்டிருப்பதாலேயே அவை அறிவத்துவம் கூற முடியாது வீழ்வதையும் கண்டோம்.

இனி இதனோடு தொடர்புடைய நியாய அல்லது நய விசாரணக்கு வருவோம்

முப்பொருள் உண்மையை நன்றாக உணர்ந்த சைவம், புண்ணியம் பாவம் என்ற இருவினைகட்கும் நல்ல ஓர் தெளிவினைக் கொண்டுள்ளது. புண்ணியங்களைச் செய்யச் செய்ய ஆன்மா சுத்தமாகி சலோகம் சாமீப்பியம் சாரூப்பியம் என்றவாறு இறைவனை நெருங்கி முடிவில் சாயுச்சியமாகி அணுத்துவம் போக்கி சிவத்துவம் பெற்று இறைவனோடு ஒன்றித்து நின்று வீடுபேறு மகிழும். அதுபொழுது இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் உள்ளத் தொடர்பு அறிவத்துவித நிலையாகும். இந்த ஞான வளர்சிக்கு பக்குவ முதிர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது நயவிசாரணயாகும். நந்நயம் எது அந்நயம் எது என்று விசாரித்து அகத்தே செறிந்திருக்கும் மலங்களைப் போக்குவதே நந்நயம் அதாவது புண்ணியம் அதற்குப் புறம்பாக மலங்களின் தொடக்கை அதிகரிப்பதுவே அந்நயம் அதாவது பாவம் என்ற தெளிவில் வாழவைப்பதே சைவமாக இருக்கின்றது. ஆணவ மலம் அநாதிப்பொருள் அது அநாதியே ஆன்மாக்களை பந்தித்திருக்கின்றது என்ற ஞானத் தெளிவு இல்லையெனில் இத்தகைய நயவிசாரணை சைவத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்க முடியாது.

அப்படி என்றால், இத்தகைய அநாதிபொருளியலைக் கொண்டிராத ஏனைய இந்திய தரிசனங்கள். எப்படிப்பட்ட நயவிசாரனையைக் கொண்டுள்ளன?

6.1

முதலில் ஆதி சங்கரரின் மாயாவாத வேதாந்தத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு அநாதிபொருளாக ஒரே ஒரு பொருள் தான் உண்டு__ பரப்பிரம்மமே எல்லாம், ஆன்மாவும் உணமையில் இந்த பிரம்மமே, வேறாகத் தோன்றுவதெல்லாம் மித்தை. அநிர்வசனமாகிய, இஃதென்று கூறமுடியாத ஓர் மாயாசக்தி இப்படிப்பட்ட மயக்க அறிவினை உண்டாக்கி வேதங்கள் கூறும் பிரம்மஞானத்திலிருந்து மக்களை பிறழ்ந்துச் செல்ல வைக்கின்றது. இந்த மயக்கதிலிருந்து விடுபட்டு ஆன்மா உண்மையில் பிரம்மமே என்று உணர்வதற்கு உதவுதே நந்நயம், அதற்குப் புறம்பாகச் செல்வதே அந்நயம் என்றவாறு இங்கு நய விசாரண செல்லும்.

இதனால் நந்நயங்களாகிய புண்ணிய காரியங்கள் தான் எவை? எனில் இப்பாறு அதன் விளக்கம் செல்லும்

வேதங்களை ஓதுதல், ஓதுப்படும்போது அவற்றை செவிமடுத்தல் வைராக்கியமாக இருந்து வேறு யாதையும் நோக்காது வேதப் பொருளையே சிந்தித்தல் என்றவாறு வேதமயமாகிய வாழ்க்கையே புண்னிய வாழ்க்கை, இவ்வாறு வாழ்ந்தால் முடிவில் மயக்கமெல்லாம் இழந்து தான் உண்மையில் பிரம்மமே என்று உணர்ந்து அத்வைதம் மகிழும் மகா வாக்கியங்களாகிய ‘அகம் பிரமம் அஸ்மி’
‘தத் துவம் அசி’ என்பன போன்ற வேத வாக்கியங்களின் பொருளை செவ்வே உணர்ந்து பொருளத்துவிதம் மகிழும்

6.2

இப்படிப்பட்ட வேதாந்த விளக்கத்தில் பல சிக்கல்கள் உண்டு. முதலில் நாம் காண வேண்டியது ‘நந்நயம்__அந்நயம்’ என்ற நய பேதம் உலகப் பொது, மக்களாக பிறந்த அனைவரும் கொண்டாடி தமது வாழ்க்கையை செவ்வே நடத்தி உயர முயற்சிக்கின்றனர். வேதங்களைப் பற்றியும் இன்னும் இதுபோன்ற வேறு சுருதிகளை அறியாத மக்களும் நயவிசாரணையில் ஈடுபடுவது ஓர் மறுக்க முடியாத உலகியல் உண்மையாகும். ஆதி சங்கரரின் அத்துவித வேதாந்தம் இந்த உலக உண்மைக்கு விளக்கம் தராது வீழ்கின்றது.

உண்மையில் அத்துவித வேதாந்தத்தில் நயவிசாரணையே இல்லை, புண்ணியம் எது பாவம் எது என்று விளக்கமுடியாத பயனற்ற தரிசனமே இந்த மாயாவாத வேதாந்தம்.

6.3

இந்தக் குறைபாடு சைவத்திற்கு இல்லை. ஆணவமலம் எல்லா ஆன்மாக்களையும் பந்தித்திருக்கின்றது எனும் போதும் அதனோடு தொடர்புடையதே நய விசாரனை எனும் போதும், அப்படிப்பட்ட ஒழுக்கம் உலகப் பொதுவாகவே கொள்ளப்படுகின்றது. இந்த உண்மை வேதங்களையோ ஆகமங்களையோ பிரமாணமாகக்கொண்டு நிறுத்தப்படுவதும் இல்லை. சைவத்திற்கு சுருதி எனப்படும் பிரமாண நூற்கள் யாதுமில்ல. இந்த பரந்த விரிந்த உலகே ‘அவன் அவள் அது எனும் அவை” எனச் சுட்டபப்டும் உலகே ஞானமறை, சுருதி என்பதொடு அது உலக உயிர்கள் அனைத்திற்கும் பொது என்றிருக்க, நய விசாரணையும் உலகப் பொதுவாகவே திகழ்கின்றது.

தொடரும்

சித்தாந்த அத்துவிதம்-5 (Final)

7.0

இனி விசிட்டாத்வைதம் கூறும் வேதாந்த பொருளத்வைதத்தைக் காண்போம். சர்வேஸ்வரனாகிய இறைவன் மாயையை தன் உடம்பாகக் கொண்டு தன்னுள்ளிருந்தே ஒர் சிலந்தி போல சித்தும் அசித்துமாக இந்த உலகினைப் படைத்து சித்தாகிய ஆன்மாக்கள் தன் உடலில் ஒட்டாது தூரமாக இருப்பதைப் போக்கி முற்றாக ஒடுங்கி தன்னின்று வேறிலாது இருப்பதே முத்தி என்று விளக்கம் தரும் இதுவே விசிட்டாத்வைதம் என்று கண்டோம். இதனாலேயே தன் சுயத்தை முற்றிலும் இழக்கத் தரும் பிரபத்தியே சிறந்த மார்க்கம் என்று பரிந்துரைக்கப்டுவதையும் கண்டோம்.

இனி இங்கு சித்தாகிய ஆன்மாக்கள் அநாதியல்ல, இறைவனது படைப்பே எனில், பல பிரச்சினைகள் எழுகின்றன. அவ்வாறு இறைவனே ஆன்மாக்களை சித்தும் அசித்துமாகிய தன்னிடமிருந்தே உருவாக்கி உலகில் உலாவிடுகின்றான் எனில், ஏன் அவற்றை தூரமாக்கி அந்நியமாக்கி அல்லற்பட வைக்க வேண்டும்? இதுவொரு லீலை, சர்வேஸ்வரனது ஆனந்த விளையாட்டு எனில், அதுவும் பொருந்துமாறில்லை. துக்கம் துயரம் கலக்கம் வெறி கொடூரம் கொலைவெறி போன்றவை ஏன் ஆன்மாக்களின் குணங்களாக இருக்கவேண்டும் என்பதற்கு இங்கு விளக்கம் இல்லை. சைவர்கள் அநாதியாயுள்ள ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பந்திக்கப்பட்டு இருப்பதாலேயே இறையருள் பதிய இச்சாஞானக் கிரியா சத்திகள் கூடி வர புண்ணியம் பாவம் என்ற முறையில் வினைகள் ஆற்றி அதற்கேற்ப இன்பமும் துன்பமும் அனுபவிக்கின்றன என்று கூறி தெளிந்து பிறரையும் தெளிவிப்பர்.

7.1

இனி விசிட்டாத்வைதத்தின் இந்த சிக்கலிலிருந்தும் சித்தாந்தத்திற்கு வேறாக இருக்கும் வகையில் ஓர் மாற்றத்தை அநாதிபொருளியலில் கொண்டு வரலாம். மாயையை தன் உடம்பாக கொண்டிருக்கும் சர்வேஸ்வரனுக்கு வேறாகவும் அநாதியாகவும் சித்தாகவும் ஆனால் மாயையில் கிடப்பதாகவும் ஆன்மாக்கள் இருக்கின்றன, அவை மாயையின் தாமதகுண மேலீட்டால் பாவங்கள் செய்து துன்பப்படுகின்றன, இவற்றை இரட்சிக்கவே சர்வேஸ்வரன் அவற்றை மேலேற்றி சாத்வீக குணமே மேலோங்கி நிற்குமாறு உதவி தன்னுள் பிரிப்பின்றி வேறின்றி இருத்திகொள்கின்றான் என்றவாறு இந்த நயவிசாரணைக்கு விளக்கம் கூறலாம்.

ஆயினும் இதுவும் சிக்கலைத் தீர்த்தபாடில்லை. தாமத குணம் ஓர் ஆன்மாவை மந்தனாக்கும், அறிவிலே தெளிவின்மையைக் கொண்டு வரும் ஆனால் கொலைவெறி போன்ற கொடூர எண்ணங்களைக் கொண்டு வராது. ஒன்றினை அழித்து இல்லாது போக்க வேண்டும் என்ற அழிப்பு வெறி தாமத குணத்திற்கு இல்லை. தாமத குணம் மிக்கிருக்க மந்தம் சோம்பல் செயலற்ற நிலை போன்றவையே மிக்கிருக்க கடுஞ்சினம் பொல்லா வெறுப்பு கொலைவெறி போன்றவை தோன்றா. இப்படிப்பட்ட அழிப்புச் சிந்தனைகளை உற்பவிப்பது ஆணவமலமே யாகும். இதுவே அந்தகாரத்தைக் கொண்டு வரும் வகையில் அழிக்கவும் செய்யும், ஆன்மாக்கள் பால் மேலோங்கி நிற்க கொலைவெறியையும் உண்டு பண்ணும். ஆணவ மலம் தாமத குணம் அல்ல, எவ்வித குணமும் எழாவகை ஓர் ஞான அந்தகாரத்தை இயல்பாய் உண்டு பண்ணுவதாகும்.

8.0

இனி பிராமணர்களால் பிரஸ்தானத்திரயத்தில் ஒன்று எனப் போற்றப்படும் பகவத் கீதை எவ்வாறு நந்நயம் அந்நயம் என்பவற்றை விசாரித்து நந்நயமே செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு வரும் நயவிசாரணையை எப்படி விளக்கும்?

இங்கும் சிக்கல் இல்லாமல் இல்லை.

பகவத் கீதை இரண்டு கருத்துக்கள் இங்கு மிகவும் முக்கியம்.

ஒன்று ஆன்மாவை பற்றியது, பிறிதொன்று நிஷ்காமிய கர்மத்தைப் பற்றியது.

ஆணவ மலத்தால்ல் பந்திக்கப்பட்ட பசுவே ஆன்மா என்றிலாது, ஆன்மா என்பது பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை, கொல்வதும் இல்லை கொல்லப்படுவதும் இல்லை. பிறப்பு என்பது ஓர் ஆடையை எடுத்து உடுத்துவதுபோல, மாயையால் ஆகிய ஓர் உடம்பை அணிந்துகொண்டு உலகில் உலாவுவது. மரணம் என்பது நைந்துபோன ஆடையை கழற்றி வீசுவதுபோல, பாழாகும் இந்த உடலை வீசி எறிந்துவிட்டு இன்னொரு உடலை மலைவது. இவ்வாறு பிறந்தும் இறந்தும் வரும் ஆன்மா என்றும் மாறாது ஒரே படித்தாய் இருக்கும். அதற்குப் பிறப்பும் இறப்பும் இல்லை, அது கொல்லப்படுவதும் இல்லை கொல்வதும் இல்லை.

இனி கொலைபோன்று தோன்றும் ஓர் வினையைச் செய்ய வேண்டி இருக்கும் போது, அர்ச்சுனன் போரின் காரணமாக தன் உறவினர்களையே கொல்ல வேண்டியிருப்பதை நினைத்து கவல்வது துக்கிப்பது துயர் அடைவது என்பதற்கெல்லாம் காரணம் உலகப் பற்றே, அந்த பற்றையெல்லாம் போக்கி தன் பிறப்பின் வர்ணத்தின் கருமத்தை நிஷ்காமிய கரமமாக ஆற்றினால், போரில் தன் எதிரிகளைக் கொன்றால் அது புண்னியமுமல்ல பாவமும் அல்ல, அவற்றிற்கு அப்பாற்பட்டது. இந்த பற்றற்ற நிலையை எப்படித் தலைபடுவது?
பற்றற்ற நிலைஏ தன் இயல்பாக கொண்டிருக்கும் இறைவனையே முற்றிலும் சார்ந்து அவனையே பற்றிக்கொண்டு நின்றால் அது மெய்யாகும். ஆக இறைவனை முற்றிலும் சார்ந்து, எதை செய்தாலும், கொலை செய்தாலும் கூட அது பாவம் ஆகாது, துக்கத்தைத் தராது.

8.1

இந்த கீதாவுபதேசத்திலும் சிக்கலகள் இல்லாமல் இல்லை. முதலில் நாம் காணவேண்டியது கீதை கூறும் கர்ம விளக்கமே. நிஷகாமிய கர்மம் எனும் போது, காமிய கர்மமும் உண்டெனப் பெறுகின்றோம். பலனை எதிர்ப்பார்க்காது செய்யபப்டுவது நிஷ்காமியம் என்றால், ஓர் பலனை எதிப்பார்த்து அதன் காரணமாகச் செய்யப்படுவது காமிய கர்மமாகின்றது, இதுவே சாதாரண முறையில் மக்களும் பிற உயிர்யினங்களும் செய்யும் வினைகள் ஆகும். நோக்கு ஒன்றினைத் தேற்றி( intentions), அதை அடைவான் பொருட்டே தக்க செயல் ஒன்று செய்யப்படுகின்றது. இப்படிப்பட்ட வினைகளே அந்த நோக்கங்களுக்கு ஏற்ப புண்ணியம் என்றும் பாவம் என்றும் ஆகி, இன்பம் தரும் இதமென்றும் துன்பம் தரும் அகிதமென்றும் ஆகின்றது.

பகவத் கீதை பற்றுற்ற நிலையில் செய்யப்படும் இத்தகைய வினைகளை எவ்வாறு விளக்கும்? ஆன்மாக்களுக்கு பற்றுத் தலைப்படுதல் எவ்வாறு ஆகின்றது? அநாதியே ஆன்மாக்களை ஆணவமலம் பந்தித்திருக்க இந்த ஆன்மாக்கள் அஞ்ஞான அந்தகாரத்தால் சார்ந்ததின் வண்ணமாக நின்று காணவருவதையெல்லாம் பற்றிக்கொண்டு பற்றுற்று வாழும் என்றவாறு சைவ சித்தாந்தம் விளக்குதல் போன்று பகவத் கீதையும் ஆங்கு விளங்கும் சாங்கீயத் தரிசனமும் விளக்கமுடியாது வீழ்வதைக் காண்க.

8.2

மேலும் இன்னொரு பெருங்குறையும் உண்டு: மரணம் என்பது நைந்துபோன சட்டையைக் கழற்றி வீசுவதுபோன்ற ஓர் சாதாரண விசயமா? மேலும் எல்லா மரணங்களும் ஒரே தன்மைத்தா? போரில் எதிரிகளை ஒருவன் கொன்று குவித்தால் அவன் மாவீரன் என்று போற்றப்படுகின்றான். ஆனால் சாதாரண நிலையில் ஒருவன் நகைகளைத் திருடுவதற்காக ஓர் மாதின் கழுத்தை அறுத்துக் கொன்றால் ஏன் அவன் கடுமையாகத் தண்டிக்கபடுகின்றான்? ஏன் இவ்வாறு கொலையும் அதனால் ஆகும் மரணமும் வெவ்வேறு ஆகின்றது? ஏன் ஒன்று புண்ணியமாக பிரிதொன்று பெரும் பாவமாகின்றது?

பகவத் கீதையின் சாங்கிய தரிசனம் இதற்கு விளக்கம் தருவதாக இல்லை. சைவத்தில் இது இவ்வாறு விளக்கபடும் ஆணவ மலத் தாக்கத்தின் ஒருவன் அரக்கனாக பல அட்டூழிய்ங்களைச் செய்ய அவனை கொன்று மரணமடையுமாறு செய்தல் ஓர் பெரும் புண்ணியமே, அச்செயலும் ஓர் பெரும் வீரச்செயலே! எந்த பாவமும் செய்யாத நல்ல பல மக்களை அழிக்கும் இத்தகைய அரக்கர்களை அழிப்பது ஓர் அருட் செயலே ஆகும், புண்ணியமே ஆகும். ஆனால் ஒருவன் உள்ளத்தில் ஆணவ மலம் மிக்கிருக்க கொலைவெறி கொண்டு சொத்து நகைபோன்றவற்றை அபகரிக்க மக்களைக் கொல்வது பெரும் பாவமாகும். ஆணவ மல மிக்கீட்டால் அரக்க குணத்து செயல்கள் யாவும் பாவமே, கண்டிக்கத் தக்கவையே!

இவ்வாறு தான் கொண்டிருக்கும் முப்பொருளுண்மையின் அநாதிபொருளியலை கொண்டிருக்கும் சைவ சித்தாந்தம் தக்க முறையில் உலக இயற்கைக்கு முரண்படாது அறிவிற்கு பொருந்தி வருகின்ற விளக்கங்களைத் தந்து மகிழ்விக்கின்றது.

9.0

முடிவுரையாக ஒன்று இங்கு கூறுதல் வேண்டும். இந்து சமயம் இந்திய தரிசனங்கள போன்ற துறைகளில் பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கி நிற்பதாலும், மிகப் பழையான சாத்திரங்களாக வேதங்களும் உபநிடதங்களும் இதுவரை கருதப்படுவதாலும் வேதங்களிலிருந்தே இந்திய தத்துவ தரிசனங்கள் அனைத்தும் தோன்றி வளர்ந்துள்ளன என்ற பிழையான கருத்து பரவி ஓர் வலுவான இடத்தைப் பெற்றுவிட்டது. ஆயினும் இது ஓர் உண்மை அல்ல. வேத வேதாங்களுக்கும் முற்பட்டும் அவற்றின் தோற்றுவாய்க்கு காரணமாகவும் சுமேருத் தமிழ் இலக்கியங்கள் உண்டு. இந்த உண்மை இப்பொருழுதே அறியப்பட்டு வருகின்றது என்பதொடு, ஆங்கு ‘சூருப்பாகின் நெறி’ ‘ஈன்னன்னை சீர்பியம்’ ‘கேசி கோயில் பாட்டு’ என்பன போன்ற பல நூல்களின் சைவ சித்தாந்தம் சார்ந்த ஆழ்மான தத்துவக் கருத்துகளும் பதிவாகி உள்ளன. இதனால் இங்கு கூறுவதுபோல, சைவ சித்தாந்தத்தின் அநாதிபொருளியல் மிகப்பழமையானது, அதன் பல்வேறு பிறழ்ச்சி வடிவங்களே வேத வேதாதங்களும் சாங்கீயம் போன்ற பிற தரிசனங்களும் ஆகும்.

சித்தாந்த அத்துவிதம் முற்றும்
பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"http://www.heritagewiki.org/index.php?title=சித்தாந்த_அத்துவிதம்&oldid=10872" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2012, 01:43 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,770 முறைகள் அணுகப்பட்டது.