சீதாலட்சுமி - நினைவலைகள் 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

--Dev 05:42, 12 மார்ச் 2010 (UTC)--Dev 19:01, 28 பெப்ரவரி 2010 (UTC)இக்கட்டுரைகள் சீதாலட்சுமி அவர்களால் மின்தமிழ் மடலாடல் குழுவில் எழுதப்பட்டவை.

சீதாலட்சுமி: மின்னஞ்சல்:


பொருளடக்கம்

பகுதி 10

அம்மாவின் அறிவுரைகளில் சில -“பணி செய்யும் பொழுது எளிய உடைகளுடன் இருப்பது நல்லது. பிறரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தோற்றம் இருக்கக் கூடாது. கிராமத்தினரின் மதிப்பையும் நம்பிக்கையும் பெறும் வண்ணம் அவர்களுடன் பழக வேண்டும்.சாதி, மதம். அரசியல் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும். குடும்பங்களுடன் ஒன்றிப் பழகினால் ,நாம் சொல்லுவதைக் கேட்க ஆரம்பிப்பார்கள். சின்னச் சின்ன பிரச்சனைளை முடிந்த மட்டும் தீர்க்க வேண்டும். பணிப் பட்டியலில் இல்லையே என்று எண்ணக் கூடாது. சமுதா யத்திற்கு நல்லது என்று நினைப்பதைச் செய்வது முக்கிய கடமையாக எண்ண வேண்டும். தன்னிடம் இருப்பதையும் கொடுத்து செய்யும் சேவையே சமுதாயப் பணி. அப்படியிருக்க சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்பவர்களின் கடமை இரட்டிப்பாகின்றது. முதலில் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். சமூக சேவை புனிதமான பணி.” இதயத்தில் பதிவு செய்து கொண்டேன்.


சுதந்திரப்போராட்டத்தின் பொழுது மக்களிடையே ஒரு வேகம் இருந்தது. பெண்களும் நிறைய பங்கு கொண்டனர். அந்த வேகத்துடன் மகளிர் நலப்பணிகளும் ஆரம்பமாயின. துர்க்கா பாய் தேஷ்முக்கின் சாதனைகள் வரலாற்றில் ஆழப்பதிந்தி ருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் பொழுது போர் வீரர்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து பொருட்கள் சேகரிக்கப் பட்டு அனுப்பப்பட்டன. அதனை வெற்றியுடன் செய்த திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்கள் ஆரம்பித்ததுதான் மகளிர்நலத் துறை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி , அம்புஜம்மாள், மஞ்சுபாஷிணி அவர்கள், கிளப்வாலா ஜாதவ் அவர்கள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், திருமதி. சரோஜினி வரதப்பன் இன்னும் பல பெண்கள் சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உழைத்தவர்கள்.


எத்தனை பேர்கள் இருந்தாலும் காந்திஜியின் வார்தாவைத் தமிழகத்தில் அமைத்த திருமதி சவுந்திரராஜன் அவர்களின் சேவை ஒரு வகையில் சிறப்பு பெற்றிருக்கின்றது. கிராமங்களில் மனம் ஒன்றிப் பணியாற்ற ஊழியர்களை உருவாக்கிய இல்லம் காந்திகிராமம்.


அந்தக்காலத்தின் காந்தீய உணர்வை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றேன் காந்திக் கட்சி என்றுதான் நினைப்பேன். கதர்த்துணி அணிந்தவர் யாராவது குடிப்பதைப் பார்த்தால் சண்டைக்குப் போய் விடுவேன். “கதர்த் துணியைக் கழற்று. அதைப் போட்டுக் கொண்டு அயோக்கியத்தனம் செய்யாதே “ என்று கத்துவேன். அது சீருடையன்று.


பெரும் தலைவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு அவர் வழி நடக்கின்றோம் என்று கூறிக்கொண்டு சுய நலத்துடனும், சுரண்டலும் செய்து கொண்டு இருப்பவரைப் பார்க்கும் பொழுது இந்த வயதிலும் அன்று கண்ணகிக்கு இருந்த சக்தி வரக்கூடாதா என்று துடிப்பேன்.

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கிலோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ

அன்றே முழக்கமிட்டான் பாரதி. இன்றையச் சூழலில் சுயநலத்துடன் அலைவோரைப் பார்க்கும் பொழுது “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று சேர்ந்து பொங்குவோமா? சாதியை ஒழிப்பதாகக் கூறி நூற்றுக்கணக்கான சாதிகளும் அதனால் சண்டைகளும் தோன்றி சமுதாயம் அமைதியை இழக்க ஆரம்பித்துவிட்டதே! இதற்குப் பொறுப்பானவர்களை என்னவென்று அழைப்பது?


ஆங்கிலேயன் நம்மை அடிமைப் படுத்தி நாட்டைச் சுரண்டி னான். ஆனால் சில நன்மைகளும் ஏற்பட்டன என்பதை மறுப்பதிற்கில்லை. துண்டு துண்டாக இருந்து, நமக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததை மாற்றி ஒன்றுபடுத்தி ஓர் இந்தியாவை உருவாக்கிக் கொடுத்தானே! அன்னியன் செய்த நன்மையை இப்பொழுது அழிக்க ஆரம்பித்திருக் கின்றோம்.

”கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? ” - இதுவும் பாரதி பாடியதே!


நம்மை நாம் நமக்காக ஆண்டு கொண்டிருக்கின்றோம். ஒரு வினாடி யாவது மனச்சாட்சியுடன் இருந்து பார்ப்போமே! நம்மால் முடியாது. அந்த ஒரு வினாடியிலும் குறுக்கு வழியில் ஆதாயம் தேடிப் போகும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது மனம். வரலாற்றை என்ன தான் நாம் மாற்றி எழுதினாலும் உண்மை சாகாது. ஒரு நாள் விழித்தெழுந்து கைகொட்டிச் சிரிக்கும். “அப்பொழுது நான் இருக்க மாட்டேன்” என்கின்றாயா ? நம் சந்ததிகளுக்கு இந்த அவமானத்தையா சேர்த்து வைப்பது? காலம்தான் பதில் சொல்ல முடியும்.நான் குறிப்பிட்டு யாரையும் குறை கூறவில்லை. தவறு செய்கின்றவன் மறைத்துச் செய்யவில்லை. எல்லோருக்கும் தெரிந்தே செய்கின்றான்.


பாரதியின் எட்டயபுரம் என்னை வளர்த்தது. காந்திகிராமம் எனக்குப் பயிற்சி கொடுத்தது. அதுதான் இக்காலத்துக்குப் பொருந்தாமல் புலம்புகின்றேன். பணிக்களத்தில் வேகத்தை விட விவேகம் வேண்டும்.


சம்பளம் வாங்கிக் கொண்டு பணி செய்கின்றவர்களும் ஆத்மார்த்தமாக உழைக்கின்றோம் என்று கூற முடியாது. ஆட்சி பீடத்திலிலிருந்து அடியில் இருக்கும் மனிதன் வரை வேகமாக மாறிக் கொண்டு வருகின்றோம். அந்த மாற்றம், வாழும் முறைகளையே ஆட்டம் காண வைக்கின்றதே! நம்மை நமக்கு உணர்த்த நம்மில் சிலராவது முயல வேண்டும். நான் எழுதுவது சிறு தொண்டு.


கிடைத்த பயிற்சிகள், அறிவுரைகள் இவைகளுடன் களத்தில் இறங்கினேன். வாடிப்பட்டி வாழ்க்கை வசந்தகாலம் என்றால் அது மிகையாகாது. அங்கு செல்லும் முன் திண்டுக்கல்லில் நான்கு மாதங்கள் பணியாற்ற நேர்ந்தது. அங்கு சென்றவுடன் எனக்குப் பிடித்தமான பணி கிடைத்தது.


திருச்சி வானொலி நிலையத்தார் திண்டுக்கல் வந்து நேரடியாக ஒரு நிகழ்ச்சியைப் பதிவு செய்ய இருந்தார்கள். அதன் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கிராமீயக் கலைஞர்களை திண்டுக்கல் வரவழைத்து மேடையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும். பொது மக்கள் பார்வையாளர்கள். புதியவள் என்று தயங்காமல் எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு செய்தேன். கிராமம் கிராமமாகச் சென்று கலைஞர் களைச் சந்தித்து, அங்கேயே அவர்களை பாடச் சொல்லி ஆடச் சொல்லி, சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு திரையரங்கிலுள்ள மேடையில் நிகழ்ச்சிகளை நடத்தினோம். எல்லோராலும் பாராட்டப்பட்டதுடன் எனக்கு வானொலி அறிமுகமும் கிடைத்தது. அத்துடன் நாட்டுப்புறப் பாடல்கள் நிறையக் கற்க முடிந்தது..பஞ்சம்பட்டி கிராமம் மறக்க முடியாது. அங்குதான் நிறையப் பாடல்கள் கற்றுக் கொண்டேன். திண்டுக்கல்லிடம் விடை பெற்றேன்.


வாடிப்பட்டி

ஐந்தாண்டுகளில் நான் முற்றிலும் மாறினேன். வாழ்க்கை அரங்கத்தில் எனக்குப் பல வேடங்கள் கிடைத்தன. எனக்கு ஏணிப்படியைத் தந்தது அந்த கிராமம். போராட்டங்கள் கூட இனித்தன. சுவையான அனுபவங்கள். இலக்கியத்தரம் வாய்ந்த நட்புகள். என் திறமைகளை எனக்கே எடுத்துக் காட்டியது அந்த சின்ன கிராமம்.


பணிக்கால அனுபவங்களை எழுதும் பொழுது என் நினை வலைகள் முன்னும் பின்னும் போய்வரும். சில செய்திகளை உடனுக்குடன் சொல்லுவது அந்த செய்திகளின் வலுவைக் கூட்டும்.. அக்காலத்தில் அரசு இயந்திரம் சுழன்ற விதம் கூறும் பொழுது அது அறிக்கை யாகத்தான் இருக்கும். சில செய்தி களைச் சுட்டிக் காட்டும் பொழுது அந்த வரிகளை மேலும் ஒரு முறை படித்து அதற்குள் புதைந்திருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.


வாடிப்பட்டியில் பணியில் சேர்ந்தேன். என்னுடைய பணிப்பெயர் சமூகக் கல்வி அமைப்பாளர். கூப்பிடுகின்ற வர்கள் எஸ். இ. ஓ அம்மா என்று அழைப்பார்கள். ஏற்கனவே கூறியிருந்தபடி சமூகக் கல்வி பொறுப்பில் முக்கியமாக விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஓர் ஆண் அமைப்பாளர் பதவி உண்டு. ஆனால் சில மாதங்கள் அது வெற்றிடமாக இருந்தது. அதன்பின் அந்த இடத்திற்கு வந்தவர் பெயர் ருத்ரதுளசிதாஸ். இளம்பாரதி என்ற புனைபெயரும் உண்டு. பிற்காலத்தில் சாகித்ய அக்காடமி விருது முதல் பல விருதுகள் வாங்கியவர். 47 புத்தகங்களுக்குச் சொந்தமானவர். அவர் வேலைக்கு வந்த பொழுது சாந்தமான நல்ல பிள்ளை. நான்தான் சுட்டிப் பெண்.


பகுதி 11

1957 - சுதந்திரம் பெற்று பத்தாண்டுகள் கழிந்து விட்டன. எப்படி
இருக்கின்றோம்? ஊன்றிப் பார்க்க வேண்டியது நம் வரலாறு.
.
பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் 32 வட்டாரங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் வாடிப்பட்டி வட்டாரம். மதுரையிலிருந்து 16 மைல் (அப்பொழுது மைல்கள் என்றுதான் கூறுவோம்) தூரத்தில் மதுரை திண்டுக்கல் பாதையில் அமைந்திருந்தது. ஊழியர்களின் அமைப்பு முன் சொன்னதே தான். நான் வேலையில் சேர்ந்த பொழுது சமூகக் கல்வி அமைப்பாளர் (ஆண்) பதவி காலியாக இருந்தது. இரு பொறுப்புகளும் நானே பார்த்தேன். என் அணுகுமுறையைப் பார்க்கலாம். ஒரு மாலைப் பொழுதில் ஒரு கிராமம் சென்றேன். அதுதான் முதலில் செல்லும் நாள். எனக்கு யாரையும் தெரியாது. வயலிலிருந்து இன்னும் பலர் திரும்பவில்லை. நடமாடிக் கொண்டிருந்த சிலர் என்னை வியப்புடன் பார்த்தார்கள். பள்ளிச் சிறுவர்கள் அப்பொழுதுதான் பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்தார்கள். அம்மா வந்து சமைக்க வேண்டும். இரவில்தான் சுடுசோறு கிடைக்கும். எனவே குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே போய்க் குழந்தைகளுடன் பேச்சுக் கொடுத்தேன். சீக்கிரம் நண்பர்களாகி விட்டனர். அங்கே இருந்த ஒரு மரத்தையொட்டி மேடொன்று இருந்தது. அதில் போய் உட்கார்ந்து கொண்டு கதைபேச ஆரம்பித்தேன். புதியவளின் வருகை, வந்தவுடன் சிறு பிள்ளைகளுடன் பழகுவதைப் பார்க்கவும் பிள்ளை பிடிப்பவளோ என்ற சந்தேகம் வந்திருக்கலாம். அவர்கள் முகபாவம் சரியில்லை.. அவர்களில் ஒருவர் அருகில் வந்து “நீங்க யாரும்மா?” என்று கேட்டார். “நான் உங்க ஊர் எஸ்.இ.ஓ அம்மா‘ (Social Education Organiser) என்று சொல்லி அலுவலகம் பற்றியும் கூறவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர். இப்பொழுது பிள்ளைகளைப் பாடச் சொன்னேன். பாடினார்கள். என்னைப் பார்த்து “டீச்சர் நீங்களும் ஒரு பாட்டு பாடுங்களேன் “ என்று கேட்டார்கள். இந்தக் கேள்விக்காகத்தான் காத்திருந்தேன். தயங்காமல் “முருகா நீ வர வேண்டும் “ என்ற பாட்டைப் பாடினேன். கூட்டம் சேர ஆரம்பித்தது. இன்னொரு பாட்டையும் பாடினேன். பாட்டை நிறுத்தி அவ்வூர் பிரச்சனைகளை யதார்த்தமாகக் கேட்பது போல் பேச்சைத் தொடங்கினேன் .இருட்ட ஆரம்பித்தது. யாரோ ஒருவர் ஹரிக்கேன் லைட் கொண்டு வந்து வைத்தார். மின் இணைப்பு இன்னும் அவர்கள் ஊருக்கு வர வில்லை.


வேலைகளிலிருந்து பெண்களும் ஆண்களும் திரும்ப ஆரம்பித்தனர். பெண்மணிகள் சமைக்கப் போனதால் ஆண்கள் தான் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். சில பிரச்சனைகளின் தீர்வுக்கு வழிமுறைகள் கூறினேன். சிறுவர்கள் வீட்டிற்குப் போக ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் சில பெண்கள் வந்தனர். பெண்களிடம் அவர்கள் குடும்பங் களைப் பற்றியும் , ஊரில் இருக்கும் வசதிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். ஒருத்தி என்னிடம் அவர்கள் வீட்டிற்குச் சாப்பிட அழைத்தாள்.. உடனே, “ எங்க வீடுகள்ளே சாப்பிடுவீங்களா? என்ற ஒரு கேள்வியும் கேட்டாள். “யார் வீட்டிலும் நான் சாப்பிடுவேன். கவிச்சை மட்டும் சாப்பிட மாட்டேன்” என்றேன். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. இன்னொருத்தி “எங்க வீட்லே காய்கறிச் சமையல்தான் எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க “ என்று அழைத்தாள். விருந்தோம்பல் பண்பு இன்னும் போகவில்லை. ஆனால் சாதிஉணர்வு மட்டும் வேரூன்றி இருந்தது. அதனை யொட்டிய பயமும் தெரிந்தது.அய்யாவை நினைத்துக் கொண்டேன். பல வீடுகளுக்குச் சென்று சில நிமிடங்கள் இருந்து பேசினேன். எல்லோருக்கும் சந்தோஷம். கடைசியில் சாப்பிடக் கூப்பிட்டவள் வீட்டிற்குச் சென்றேன். ஒரு தட்டைக் கழுவி எடுத்து வந்தவள் தயங்கி, “ அம்மா, இலை இல்லை. எங்க தட்லே சாப்பிடுவீங்களா? நல்லா கழுவிட்டேன் “ என்று அவள் கூறவும் என் மனம் வாடியது. ஏ சமுதாயமே, என்ன கொடுமை. மனிதன் பிறக்கும் பொழுது சாதி இல்லையே, இந்தக் கொடுமை எப்பொழுது, எப்படி நேர்ந்தது?


மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதமே கிடையாத பொழுது சாதி மட்டும் எப்படி வரும்?
“ நான் சாப்பிடுவேன். எனக்கு சாதி கிடையாதும்மா ?” என்றேன். முகம் மலர்ந்து உணவு படைத்தாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இன்னும் சில பெண்கள் வந்தார்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன். இருட்டிவிட்டதால் பஸ்ஸில் ஏற்றி விட ஊர்க்காரர்கள் சிலர் வந்தனர். இன்றைய சம்பவம் காட்டிய செய்தியைப் பார்ப்போம். சுதந்திரம் வந்து பத்தாண்டுகள் கழித்தும் மின் இணைப்பு இல்லாத கிராமங்களா, அப்படியென்றால் வளர்ச்சிப் பணிகள் சரியாக நடைபெற வில்லையா என்ற ஐயம் ஏற்படலாம். விளக்கம் கூற வேண்டியது என் கடமை. சுதந்திரம் கிடைத்து ஆட்சியில் உட்கார்ந்தவர்கள் சுதந்திரத் திற்காகப் போரடியவர்கள். கிடைத்த சுதந்திரத்தைப் பாதுக்காக்க வேண்டுமென்ற அக்கறையுடன் என்னென்ன அடிப்படை தேவைகள் எதுவோ அவைகளில் கவனம் செலுத்தினார்கள். மதிப்பிற்குரிய டாக்டர். அம்பேத்கார் அவர்கள் சட்டங்கள் எழுதினார். அவர் யார்? ஒரு தலித். அந்த அறிவுஜீவியின் படைப்புதான் இன்றும் நாட்டில் இருக்கின்றது. சட்டங்கள் தீட்டிய பின்னர் வளர்ச்சித் திட்டங்களில்தான் கவனம் செலுத்தினர். அணைகள், பாதைகள், மருத்துவ மையங்கள், பள்ளிகள் போன்றவை கட்டப்பட்டன. தேவைகள் அதிகம் . மக்கள் கூட்டமும் அதிகம். ஒரு நாளைக்கு ஒரு தொழிற்சாலை என்பார் முன்னால் ஜனாதிபதி, அந்த நாள் தமிழ்நாடு தொழில் அமைச்சர் திரு வெங்கட் ராமன் அவர்கள். மின்னிணைப்பும் கொடுத்துக்கொண்டு வந்தனர். ஆனால் தன்னிறைவு பெறவில்லை. மின்னுற்பத்தி போதவில்லை. இன்றும் அதில் கஷ்டப்படுகின்றோம். ஒரு பக்கம் மின் உற்பத்தி அதிகப்படுத்தும் முயற்சி, இன்னொரு பக்கம் தேவைகள் அதைவிட வேகமாக வளர்கின்றது. ஆக. அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை யளிக்கப் பட்டது.மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்தவர்கள் நதிகளைத் தேசிய உடமையாக்கி யிருந்தால் இன்று தமிழகம் தண்ணீருக்காக அல்லல்பட வேண்டியிருந்திருக்காது. மனிதன் ஒரு பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் சுலபத்தில் மாற்றமாட்டான். முடியாது. விவசாயம் மிகவும் இன்றியமையாதது. உற்பத்தியை அதிகப் படுத்த, நாற்று நடுவது முதற்கொண்டு ஜப்பானீய முறை என்ற புதிய உத்திகள், புதிய உரங்கள் அரசு பரிந்துரைத்தன. மாடுகள், கோழிகளில் உயர் சாதி கொடுத்து கலப்பினம் உருவாக்க உதவி செய்தனர். கூட்டுறவு முறையின் முக்கியத்துவத்தை உணரச் செய்து அதன் மூலம் ஒருங்கிணந்த பல திட்டங்கள் உருவாக்க முனைந்தனர். இவைகளில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட பயிற்சி முகாம்கள் மூன்று நாள்கள், ஐந்து நாள்கள் நடந்தன. அதிகாரி முதல் எல்லோரும் வந்து பயிற்சி கொடுக்க வேண்டும். சிலர் கிராமத்திலேயே தங்க வேண்டும். வசதிகளை எண்ணித் தயங்க முடியாது. பள்ளியின் தரையில் அல்லது பெஞ்சுகளில் படுத்துக்கொள்வோம். ஒரே அறையில் ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம் என்று தங்குவோம். முக்கியமான ஒரு தகவலை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். அன்று பாதை போட வேண்டுமென்றால், பள்ளிக் கட்டடம் கட்டவேண்டுமென்றால் அரசு பாதிப்பணம் தான் கொடுக்கும். மீதிப் பாதிக்கு அந்த ஊர்மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.என்ன அருமையான விதிகள் இருந்தன! இதனால் இருந்த பயன்களைப் பார்ப்போம். அன்று இலவசங்களைத் தேடவில்லை. கூலிவேலைக்கு மக்களே வேலை செய்யலாம் இதற்குப் பெயர் ‘சிரமதானம்”.மண் சுமக்க, கல் சுமக்க எல்லோரும் வருவார்கள். அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை கலந்து கொண்டு மண் சுமப்பார்கள். அங்கே சாதி, மதம், மொழி, அந்தஸ்து எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லோரும் ஓரினம். ஒன்றாக உழைத்தோம். அய்யா பெரியாரின் முழக்கம் அங்கும் உண்டு.


காங்கிரஸ் கட்சி, திராவிடக்கட்சி, திராவிட முன்னேற்றக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் இருந்தன. ஆனால் பொதுப்பணி யில் அந்தப் பிரிவினைகள் பாதிப்பை உண்டாக்கவில்லை. எல்லோருக்கும் தங்கள் ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் இருந்த ஒருமித்த உணர்வு அன்று நல்ல காரியங்களின் பொழுதும் இருந்தது. ஊர் நன்மைக்கு வசூல் செய்யும் பணத்தில் கையாடல் செய்யாத பண்பு இருந்தது. ஏன் இப்பொழுதும் எல்லைப்புறச் சண்டைகள் யுத்தமாக மாறும் பொழுதும் ஒன்றுபடுகின்றோம். மற்ற நேரங்களில் முரண்பாடுகள். சுதந்திரப் போராட்டத்தின் பொழுது எப்படித் தங்களிடம் இருப்பதைப் பொது நன்மைக்காகக் கொடுத்தார்களோ அதே போல் திராவிடக் கட்சிகள் வளர்ந்த பொழுதும் தங்களிடம் இருக்கும் பாத்திர பண்டங்களைக் கூட அடகு வைத்துச்சோறு போட்ட குடும்பங்களை நான் பார்த்திருக்கின்றேன். முதலில் அடிமைத்தனம் போக்கத் துடித்தோம். அடுத்து சாதி என்ற கொடுமையிலிருந்து விடுபடும் எழுச்சியில் ஒன்றுபடும் உண்மையை உணர முடிந்தது. அய்யா அவர்களோ அல்லது அறிஞர் அண்ணா அவர்களோ ஊருக்கு வந்தால் கூட்டம் வரும் அப்பொழுது வருகின்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இல்லாதவர்களும் வள்ளல்களானார்கள். அரசியலில் வசைபாடுதலை நிறுத்த முடியாது. குறை கூறாமலும் இருக்க முடியாது. அதுதான் அரசியல். ஆனால் ஒரு கட்சி, கட்ட ஆரம்பித்த கட்டடம் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரவும் அது பூர்த்தி செய்யபடாமல் நிறுத்தப்பட்டு மொட்டை கோபுரமாக நிற்கின்றதே, அவைகள் அவலச் சின்னமாகத் தெரியவில்லையா?


இது ஓர் உதாரணம்தான். எல்லா இடங்களிலும் இப்படி என்று கூறவில்லை. இதே போல பல திட்டங்கள் குறைப்பிரசவமாகி விடுகின்றன. மக்களின் வரிப்பணம் போவதுடன் மக்களுக்குத் தேவை யானதும் கிடைக்காமல் போய்விடுகின்றதே, இதை அரசியல் வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்குக் கட்சி கிடையாது. கூடாது. யார் திட்டம் போட்டாலும் அக்கறையுடன் செய்து முடிக்க வேண்டியவர்கள். வளர்ச்சிப் பணிகள் ஏதாவது காரணங்களால் முடங்கும் பொழுது அதனால் ஏற்படும் விளைவுகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அரசுப் பணியாளர்கள் அரசியல்வாதி களாகக் கூடாது. எந்த அரசு வரினும் அவர்கள் போடும் திட்டங்களை நிறைவேற்று வதுதான் அவர்கள் கடமை. மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மனப் புழுக்கம் அதிகமாகி யாரை வெறுக்கின் றோமோ அந்த வெறுப்பு ஆழமாக மனத்தில் பதிந்து விடுகின்றது.நல்லவர்கள் வெறுப்பைத் தேக்கிப் பேசாமல் ஒதுங்கக் கூடாது. சமுதாயம் நன்றக இருக்க, நடுநிலையுடன் தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். பயமோ தயக்கமோ கூடாது. எப்படி? அவர்கள் தான் ஒருமித்துக் கூடி வழி காண வேண்டும். நடக்கும் தவறுகளுக்கு எல்லோருக்கும் பங்குண்டு. அரசு, அரசியல், மக்கள் மூவரும் இணைந்ததுதான் சமுதாயம் சுதந்திரம் கிடைத்தவுடன் பணிகளை அக்கறையுடனும் , பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் தான் ஆரம்பித்தோம். ஆனால் நாளாக நாளாக எல்லாம் தேய்வு நிலை நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டன. இத்தனை சூழ்நிலையிலும்.


சிலவற்றில் வளர்ச்சிகள் இருக்கின்றன. நம்மிடையே நம் முன்னோர்கள் விதைத்த , வளர்த்த சில திறமைகள் , குணங்கள் இன்னும் துணைபுரிகின்றன. என்று முற்றிலும் அவைகளையும் நாம் அழிக்கின்றோமோ அன்று நாம் நாமாக இருக்க மாட்டோம். இந்த வேதனையைக் கண்ணீருடன் சொல்லுகின்றேன் ”வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ? ”


பகுதி 12

வாடிப்பட்டி வட்டாரத்தில் சோழவந்தான் பகுதி எழில் நிறைந்த பகுதி. பச்சைப் பசேலென்று வயல் வெளிகள். காற்றிலே சிலிர்க்கும் நெற்பயிர் நம் மனத்தை வருடி அங்கே உட்காரச் சொல்லும். வரப்புகளில் உட்கார்ந்து அவற்றுடன் பேசுவேன். பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பேன். அக்கரையில் தென்கரை. தென்னை மரங்கள் உயர்ந்து நின்று நம்மை வரவேற்கும். இந்த வேலை கிடைத்ததில் நான் அதிருஷ்டசாலி. என் ரசனைகளுக்கேற்ற பணி. என் திறமைகள் அனைத்தும் பயன்படுத்த முடிந்த அற்புதமான பணி. ஒவ்வொரு வருக்கும் தன் வேலையில் திருப்தி இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பணிகளும் சிறக்க முடியும். சிலருக்குத்தான் விரும்பியவை கிடைக்கும்.


வயலில் புது முறை நடவு. ஜப்பானிய முறை நடவு. முதல் நாளே சோழவந்தான் சென்று கிராம நல ஊழியர் முத்தையா வீட்டில் தங்கினேன். அதிகாலையில் நானும் அவரும் புறப்பட்டு வயலுக்குச் சென்றோம். நான் வயலில் இறங்க வேண்டும். இந்த சேலைக் கட்டில் இறங்கி வேலை செய்ய முடியாது. இதனை அறிந்து மாற்றுடை எடுத்து வந்திருந்தேன். ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மரத்தின் பின் சென்று சேலைக் கட்டை மாற்றிக் கொண்டேன். கிராமத்துப் பெண்கள் என்னை வியப்புடன் பார்த்தனர். இப்பொழுது அவர்களில் நான் ஒருத்தி.


வயலில் இறங்கும் பொழுது கொஞ்சம் கஷ்டம். பிடித்து இறக்கி விட்டனர். ஏற்கனவே கிராம நல ஊழியர் இன்னொரு பக்கம் இருந்தார். நாங்கள் நாத்தை எடுத்து வரிசையாக நட ஆரம்பித்தோம். எங்களைப் பார்த்து மற்றவர்களும் செய்தனர். இரு வரிசை முடியவும் நான் மேலே வந்து விட்டேன். மற்றவர்களுக்கு இப்பொழுது சுலபமாக நட முடிந்தது.


அவர்களை நடவுப் பாட்டுப் பாடச் சொன்னேன். அவர்கள் பாடிக் கொண்டே அசைந்து அசைந்து நாற்று நடுவதும் எனக்கு நாட்டியமாகப் பட்டது. நாட்டுப்புறப் பாடல்கள் எத்தனை வகைகள்! வேலையின் கடினம் தெரியாமல் இருக்க ஏற்றப்பாட்டு முதல் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு பாட்டு. மனிதன் இசையுடன் இசைந்து வாழ்ந்திருக்கின்றான். ஆனால் இப்பொழுது அந்த இசை எங்கே? பாட்டுப் பெட்டிக்குள் அடங்கி விட்டது. தாலாட்டை நாம் ரசிப்போம். தாலாட்டை விட ஒப்பாரிப் பாட்டு மிகவும் அருமை. தாலாட்டில் வம்சத்தின் பெருமைகளும், பிள்ளைமேல் கொண்ட ஆசையும் வரும். ஒப்பாரியில் இவைகளும் வரும். அத்துடன் வயிற்றெரிச்சல் முதல் எண்ணுகின்ற எல்லாம் கொட்டலாம். நான் பார்த்த பணியில் ஒவ்வொரு வினாடியும் உயிரும் உணர்வும் கலந்து வாழ்ந்தேன். அங்கிருந்து நானும் முத்தையாவும் புறப்பட்டு புதிதாகக் கட்டி முடித்திருந்த ஹரிஜன காலனிக்குச் சென்றோம். ஹரிஜனங் களுக்குப் புதிய குடியிருப்பு வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வந்த திட்டம். பல திட்டங்கள் சிறந்த நோக்கத் துடன் தீட்டப்படும். எக்கட்சி ஆட்சிக்கு வரினும் அவர்கள் காலங்களில் சில புதிய திட்டங்கள் வரும். ஆனால் நடை முறைப்படுத்தும் பொழுது சில குறைகள் நேர்ந்து விடுகின்றன. அவைகளில் சில பார்ப்போம். நம் குறைகளைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை. அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாமே.


அன்று ஹரிஜன காலனி கட்டும் பொழுது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த புறம்போக்கு நிலங்களில் கட்டடங்கள் அமைந்தன. இருக்க இடம் கொடுக்கும் நோக்கமாக அப்பொழுது இருந்தது. ஆனாலும் அவர்களை சமுதாயத்தை விட்டு நாமும் தள்ளியே வைத்தோம். ஊருக்குள் அவ்வளவு பெரிய இடம் இருக்காது, அல்லது ஊரார் விரும்பார். இப்பொழுது சமத்துவபுரம் வீடுகள் வருகின்றன. எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனாலும் தெரிந்த மட்டில் அற்புதமான திட்டம். இதில் அக்கறை குறைந்தால் நோக்கம் சிதறிவிடும். உயர் ஜாதியுடன் பல ஜாதி மக்களும் கலந்து வாழும் திட்டம். முதலில் குழந்தைகள், பின்னர் பெண்கள் சேர்ந்து வாழும் இடம். சாதி காழ்ப் புணர்ச்சி மாற வாய்ப்புள்ள திட்டம். ஆனால் சில ஜாதிகளில் குடி வராமல் இருந்தாலோ, அல்லது இடம் மாறிச் சென்றாலோ பின்னர் இஷ்டம் போல் குடிவைக்க ஆரம்பித்து விட்டால் நோக்கம் சிதறி விடும்.


கட்சி எதுவாயினும் அவரவர் காலத்தில் நல்ல நோக்கத்துடன் சில திட்டங்கள் ஆரம்பிக்கின்றார்கள். அவைகளை அரசுப் பணியாளர்களும் அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும். அவ்வப்பொழுது ஆய்வு செய்து குறைகளை நீக்க வேண்டும். சத்திரத்து சமையல்காரர்கள் போல் ஆகிவிடக் கூடாது. நாட்டுப்பற்று எல்லாத் தரப்பினர் களிடமும் குறைந்து வருவதை மறுக்க முடியாது. அரசியல் வாதிகளையே குறை கூறிக் கொண்டிருக்கின்றோம். சுயநலமும் சுரண்டலும் எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. ஒரு நாள் எல்லோரும் சேர்ந்துதான் வீழ்ந்து மடிவோம்.


இன்னொரு உதாரணமும் காட்டுகின்றேன். சென்னையில் குடிசைகளை நீக்கி கட்டடங்கள் கட்டி குடியிருப்பு செய்கின்றோம். கொத்தவால் சாவடியிலும், கப்பல்களிலும் கூலி வேலை செய்வோரை ஆதம்பாக்கம் போன்ற தூரத்தில் குடியிருப்பு வைத்தால் அவர்கள் தொழில்கள் செய்ய முடியாது. குற்றங்கள் மலியும். எனவே புதுக் குடியிருப்பு களை ஏற்படுத்தும் பொழுதும் கவனம் தேவை.


பயணத்துடன் ஆங்காங்கே இது போன்று கொஞ்சம் மாறிச் செல்ல வேண்டியிருக்கின்றது. உடனுக்குடன் ஒத்த விஷயங்களைப் பேசினால் தான் அதற்குரிய நல்ல பலன் கிடைக்கும். நான் கதை சொல்ல வில்லை. ஒரு ஊரில் ராஜா இருந்தார் என்று ஆரம்பித்து கல்யாணம், பிள்ளைப் பேறு என்று வரிசையாகச் சொல்ல முடியாததற்குக் காரணம், இது சமுதாய வரலாறு. குறைகளைக் காட்டி, முடிந்த மட்டும் சில ஆலோசனை களையும் அவ்வப்பொழுது சொன்னால் பலன் கிடைக்கும். குறை கூறுதல் எளிது. ஒருவர்மேல் ஒருவர் குற்றம் கூறுவது சுலபம். ஆனால் இது கூட்டுப் பொறுப்பு. அரசியல்வாதிகள் திட்டம் தீட்டு கின்றனர். அரசுப் பணியா ளர்கள் செயல்படுத்த ஆவன செய்கின்றனர். ஆனால் களப்பணி செய்வது யார் ? மக்கள், காண்டிராக்டர்கள். தவறு காணும் பொழுது மக்கள் உடனுக்குடன் கேட்க வேண்டும். இதைப் படிக்கவும் உங்கள் முணுமுணுப்பு கேட்கின்றது. நாங்கள் சொன்னால் யார் கேட்பார்கள் என்றுதானே. நம் சக்தி நமக்குத் தெரிய வில்லை.நமக்குள் ஒற்றுமையில்லை. சின்ன ஆதாயம் கிடைத்தால் நாம் பிரிந்து விடுகின்றோம். தப்பு இல்லையா? அதனால்தான் கூறுகின்றேன். நடக்கும் தவறுகளுக்கும் எல்லோரும் பொறுப்பு. வாய்பேசாமல் ஒதுங்கி இருப்பவர்களுக்கும் பொறுப்புண்டு. யாரும் தங்கள் கடமையைத் தட்டிக் கழிக்கக் கூடாது.


பயணம் தொடருவோமா?


அன்று மாலை மகளிர் மன்றம் சென்றேன். ஏதோ அதற்குத் தனிக்கட்டடம் என்றோ, பெரிதாகக் கூட்டம் என்றோ இல்லை. ஒரு வீட்டில் கூடிப் பேசுவோம். அந்த மகளிர் மன்றத்தில் எல்லோரும் ஏதோ கூலி வேலை செய்கின்றவர்கள். நான் சென்றால் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சி. பல பிரச்சனை களைக் கொண்டு வருவார்கள். கூலி வாங்கும் இடத்தில் பிரச்சனைகள். என்னிடம் சொன்னால் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று பிரச்சனைகளைத் தீர்ப்பேன். குடும்பச் சண்டை என்றால் புருஷன் ,பொண்டாட்டியை கூட்டி வைத்துப் பேசுவேன். ஒரு வீட்டுக் குப்பையைப் பக்கத்து வீட்டுப் பக்கம் போடும் சண்டையும் வரும். நோய்கள் பற்றியும் வரும். வாரம் ஒரு முறை தவறாது அங்கு போவது என்று வைத்துக் கொண்டிருந்தேன். அர்த்தமற்று பக்கத்து வீட்டுக்காரியுடன் போடும் சண்டை களுக்கு பஞ்சாயத்து வைப்பது ஒவ்வொரு வாரமும் நடக்கும். வாழ்க்கையில்தான் எத்தனை கோணங்கள் ? எல்லாம் படிப்பினைகள் மேலக்கால் கிராமம் போக வேண்டிய வேலை வந்தது. அங்கு சென்று வேலையை முடித்துவிட்டு முனியம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். அவ்வூர் போனால் மதியச்சாப்பாடு அங்கேதான். அன்று போனபொழுது அவள் வீட்டில் புதிய இளைஞன் ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். அவன் யார் என்று விசாரித்தேன்“என் மவன் பெரிய கருப்பன்”
“இதுவரை பார்த்ததில்லையே!” ”ஆமாம், அவன் ஜெயிலுக்குப் போய்ட்டு இப்போத்தான் வந்தான். ஆறு மாசமா ஜெயில்லேதான் இருந்தான் “ .


எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஆனால் முனியம்மாள் சாதாரணமாகச் சொன்னாள். வாடிக்கையாகிப் போன ஒரு விஷயம்போல் பேசினாள். இதுவரை தன் மகனைப்பற்றி எதுவும் சொன்னதில்லை.
“ஏன் ஏதாவது திருடினானா ? “ “இல்லேம்மா, எங்க எசமான் ஒருத்தரை வெட்டச் சொன்னாரு. இவனும் போய் வெட்டினான். சாட்சி சரியில்லைனு விட்டுட்டாங்க”
நான் பேச முடியாமல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். முதல் அனுபவம். அதைப்பார்த்து அவளே தொடர்ந்து பேசினாள் “எங்க ஊர்ப்பக்கம் இது சாதாரணம். எங்க முதலாளிங்க என்ன சொன்னாலும் செய்வோம். சாப்பாட்டுக்கு அய்யா ஒரு குறவும் வைக்கமாட்டாருங்க,
எங்களுக்கு எல்லாம் எங்க எஜமான்தான்.”


இதுதான் கொத்தடிமை வந்த வழி;இவர்கள் ஹரிஜனங்களில் ஒரு பிரிவினர். முனியம்மா மகனை எழுப்பினாள். அவனும் தள்ளாடிக் கொண்டே எழுந்திருந்தான். குடித்துவிட்டுப் படுத்திருந்திருக்கின்றான். முனூ முணுத்துக் கொண்டே எழுந்தவன் ஒரு புதியவளைக் கண்டதும் விழித்தான். முனியம்மாதான் பேசினாள் “கருப்பா, கடைக்குப் போய் ரெண்டு வடை வாங்கிட்டு வாடா . அவங்க சாப்பிடணும்” .“ஹூம்” கொட்டிவிட்டு வீட்டுக்குப் பின்னால் சென்றான். என்னைவிட நான்கு அல்லது ஐந்து வயது பெரியவனாக இருப்பான். குழந்தை முகம். இவன் அம்பு. எய்கின்றவன் எவனோ!? கொலைகாரனாக்கப் பட்டவன். அவன் தொழில் அது. இந்தப் பெரிய கருப்பன் என் வாழ்க்கையில் இன்றியமையாதவனாகப் போகின்றான் என்பது அப்பொழுது நான் உணரவில்லை.என் நினைவில்லத்தில் முக்கியமானவர்களுடன் இவன்இருக்கின்றான். இன்றும் எனக்குள் வாழ்கின்றவனை உங்களுக்கு இப்படி அறிமுகப்படுத்த நேர்ந்ததே என்று வருந்துகின்றேன்.


கருப்பன் வடை வாங்கி வந்ததும், சாப்பிடும் பொழுது அவனுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தேன்,. அவ்வளவுதான். “அக்கா,” என்று கூப்பிட்டான். ஏனோ அவன் மீது ஒரு பாசம் பிறந்தது. சில உணர்வுகளுக்கு நமக்கே அர்த்தம் தெரியாது. வயதில் மூத்தவன். ஆனால் எனக்கு அவன் தம்பி. இனி அவன் என்னைத் தொடர்ந்து சில காலம் வருபவன்; அப்பொழுது நீங்களும் அவனைப் புரிந்து கொள்வீர்கள் .


வாடிப்பட்டியில் என் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். என் தோழி சரோஜா வந்தாள். அவள் முகத்தில் கலவரம். ஏதோ சொல்லத் துடிக்கின்றாள். ஆனால் தயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள். “என்ன சரோ, சொல்ல நினைப்பதைச் சொல்லு. எதுவானாலும் சொல்லு” சரோ மெதுவாகச் சொன்னாள். செய்திகளைக் கேட்டவுடன் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டேன். அவளுக்கோ அதிர்ச்சி. அவள் சொன்னது. என்னைப் பற்றியது. பெரிதாக இரு வதந்திகள். அசிங்கமாகப் பேச ஆரம்பித்திருக் கின்றார்கள். அதைச் சொல்லத்தான் அவள் தயங்கி இருந்திருக்கின்றாள். செய்தி கேட்டால் நான், பயப்படுவேன், அழுவேன் என்று நினைத்திருக்கின்றாள். நானோ சிரித்தேன். ”திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் ”
எனக்குள் பாரதி குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் !


பகுதி 13

விரியும் அறிவுநிலை நாட்டுவீர் -அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் -நல்ல
தீரப் பெருந்தொழில் பூட்டுவீர் வீட்டுப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டால் வீரப் பெண்ணாகி விட முடியுமோ? பாரதி உள்ளுக்குள் வாழ்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றான், அவன் இன்னும் சொல்லுகின்றான் -பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

அவன் தாலாட்டில் வளர்ந்தவள் நான். பாவம் இந்த மக்கள்! புதிதாகக் கண்டால் மிரளுகின்றார்கள்.


வதந்தி! அது தீயெனப் பரவும். கிசு கிசுவிற்குத் தனிச் சுவை. அதிலும் அடுத்தவனைபற்றி கேள்விப்படும் பொழுது ஓர் உற்சாகம்! வம்பு பேசுகின்றவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து இரத்த அழுத்தமும் சீராகுமாம்.. ஆனால் அவர்கள் பேசும் வம்புத் தீ அடுத்தவர்க்குப் பாதிப்பை, அவமானத்தை உண்டு பண்ணுகின்றதே! விஷயத்திற்கு வருகின்றேன். என்னைப்பற்றி இரு செய்திகள் கிளப்பிய புகைச்சல் !என் அலுவலகத்தில் உடன் பணி புரியும் சில ஆண்களுடன் சேர்ந்து சினிமா பார்க்கப்போய் விட்டேன். ஒரு பெண் இப்படி கண்ட ஆண் பக்கத்தில் உட்கர்ந்து சினிமா பார்க்கலாமா?
52 ஆண்டுகளுக்கு முன்னால் சமுதாயத்தின் பார்வை.


5400 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்!? அக்கினிப் பிரவேசத்தின் பொழுது ராமனின் நெருப்பு வார்த்தைகள் எனக்கு சீற்றத்தைக் கொடுத்தன. இராவணனின் பார்வை பட்டதாலே சீதையின் பத்தினித் தனம் போய்விட்டதா என்று எழுதியவள்தான் நான்.இன்றைய சூழல் எப்படி மாறிவிட்டது? இந்த மாற்றம் தோன்ற எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்கின்றன!. ஆனால் இப்பொழுது காலச் சக்கரத்தின் வேகம் அதிகம் வேலைக்குச் செல்லும் பொழுது சில நேரங் களில் ஜீப்பில் செல்வோம். அதிகாரி முன்னால் உட்கார்ந்திருப்பார். பின்னால் ஆறு பேர் அமர்ந்திருப்போம். உடல் படுகிறதே என்று சொல்ல முடியாது. பிற ஆடவர்களுடன் வெளிச்செல்வது சமுதாயத்தால் அன்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அடுத்தது பார்ப்போம் இன்னொரு செய்தி வித்தியாசமானது. ஒரு ஆண்பிள்ளையை நான் அடித்துவிட்டேன். சினிமாவிற்கு நான் தனியாகச் சென்றிருந்தேன். அந்த நாளில் அதிகமாக சினிமா பார்ப்பேன். நான் வளர்ந்தது சினிமாக் கொட்டகையைச் சேர்ந்த கடைக்கருகில்தான். ஆரம்ப காலத்தில் பி. யூ. சின்னப்பா பிடிக்கும். பொதுவாகக் குழந்தைகளுக்கு சண்டை போடும் நாயகர்களைப் பிடிக்கும்.


எ,.ஜி.ஆர், அவர்கள், இப்பொழுது ரஜினி அவர்கள் எல்லோரும் சண்டை நாயகர்கள். . சினிமாப்படம் ஓடிக் கொண்டிருந்தது. பின்னால் யாரோ என் சீட்டில் கால் வைத்து சேட்டை செய்வது போல் இருந்தது. பின் திரும்பி முறைத்தேன். மீண்டும் தொடல். வளையலில் கோர்த்திருந்த பின்னை எடுத்துக் குத்தினேன். கால்களை இழுத்துக் கொண்டான். ஆனால் மீண்டும் அதே சேட்டை செய்யவும் என் பொறுமை போய் விட்டது. எழுந்து திரும்பி நின்று அவனை ஓங்கி அடித்து விட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் உடனே என்னை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். அடிபட்டவன் எழுந்து போய்விட்டான். இதுதான் நடந்தது. நான் தனியாகப் போனது முதல் குற்றம். அடுத்து ஓர் ஆண்பிள்ளையைத் தொட்டு அடித்தது இரண்டாம் குற்றம்.நான் அடக்கமில்லதவள்; கெட்டவள். இதுதான் வதந்தி. நான் பேசாமல் விட்டிருக்கலாம். வதந்தியை ஆரம்பித்தவள் நல்லவள் இல்லை. இது போன்று சிலரைப் பற்றிப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் எந்தப் பெண்ணா வது வதந்தியின் சூட்டைத் தாங்காது தன் உயிரை முடித்துக் கொள்ள நேரலாம். இவள் அடக்கப் பட வேண்டும். அதற்கு நான் தான் லாயக்கு. என் வீட்டுத் திண்னையில் உட்கார்ந்திருந்தேன். அந்தப் பாதையாகத்தான் வாய்க்காலுக்குத் தண்ணீர் எடுக்கப் போகவேண்டும். அவள் வந்து கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிட்டேன். நான் கூப்பிடவும் சிரித்துக்கொண்டே அருகில் வந்தாள். உட்காரச் சொல்லி, அரட்டை அடித்தேன். திடீரென்று வதந்தி பற்றி கேட்டேன். அவளைக் குறை கூறாமல் கேட்டதால் அவள் நல்லவள் போல் மற்றவர்கள் பேசுவதாகக் கூறினாள். நானும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் விடைபோல மெதுவாகப் பேசினேன் .பேசப் பேச அவள் முகம் மாறியது.

“சினிமாக் கொட்டகையிலே என்ன செய்ய முடியும் ? (அந்தக்காலத்தில் இக்கால லீலைகள் கிடையாது.) நம்மூர் வாய்க்கால்கரைகளுக்குக் காலையில் மூணு மணிக்கே போறாங்களே. அங்கே போற சில பொம்புள்ளங்க எதுக்குப் போறாங்கண்னு தெரியும். ஒரு நாள் டார்ச், காமிராவுடே வருவேன்னு சொல்லு. படம் புடிச்சு ஊருக்குக் காட்டுவேன். அவங்களும் சினிமாக் கொட்டகைக்கு ஆட்களை அனுப்பட்டும் நான் என்ன செய்யறேன்னு படம் பிடிக்கட்டும். ரெண்டையும் ஊர்லே காட்டலாம். நான் சும்மா சொல்ல மாட்டேன். மானத்தை வாங்கிருவேன். வாயப் பொத்திகிட்டு இனிமேலாவது இருக்கச் சொல்லு. இன்னொருதரம் பேசினதாக் கேட்டேன்னா நான் சொன்னபடி செய்வேன்” அவள் பதறிவிட்டாள்.


அவளுடைய கள்ள உறவு வாழ்க்கை அது. அவளைப் போல் சிலர் இத்தகைய வாழ்க்கை நடத்துவது கேள்விப் பட்டிருக்கின்றேன். இவளும் வம்பு பேசுகின்றவளா என்று தோன்றுகிறதோ? பெண்களைச் சந்தித்தால் வம்பு பேசும் பொழுது கேட்க வேண்டிய நிலை. பிறகுதான் புத்தி சொல்ல முடியும்.. முகம் செத்து எழுந்தவள் ” இனிமேல் அவுங்க பேசாம நான் பாத்துக்கறேன். கோவப் படாதீங்க “ என்று சொல்லி விட்டுப் போனாள்; இனி பயப்படுவாள். சரோஜா அழகான பெண். இளம் விதவை. பத்தாவது வரை படித்தவள். அவர்கள் குடும்பங்களில் இது அதிகமான படிப்பு. அவளுடைய ஊர் ராஜபாளையம். வாடிப்பட்டியில் திருமணம். பதினெட்டில் கல்யாணம், இருபத்தைந்தில் கணவரைப் பறி கொடுத்தாள். நிறைய புத்தகங்கள் படிப்பாள். எல்லாம் வார இதழ் மாத இதழ். நான் பக்கத்தில் குடி வரவும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. தினமும் வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பாள். அவளுடைய நாத்தனார் கோமதி மகளிர் மன்றம் கன்வீனர். நான் வருவதற்கு முன் ஆரம்பித்த மகளிர் மன்றங்கள். அங்கும் பெரிய கூட்டங்கள் நடக்காது. வதந்தி வரவும் அவள்தான் பயந்தாள். அவள் கணவர் வீட்டார் என் வீட்டிற்கு வரக் கூடாது என்று தடை போட்டு விடுவார்களோ என்று அஞ்சினாள். அவளுக்காகவும்தான் நான் அப்படி நடந்து கொள்ள வேண்டியிருந்தது. கூட்டுக் குடும்ப அமைப்பு இருந்த காலம். எப்படி, எதற்காக கூட்டுக் குடும்பம் வந்தது என்று கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சமுதாயம், குடும்பம் என்ற அமைப்புகள் தோன்றிய காலம். தொழிகள் பயிலக் கல்லூரிகள் கிடையா. தலைமுறை தலைமுறை யாகத் தொழில் செய்வார்கள் ;அவர்களுக்கு ஒரு பெயர் இருக்கும். அதுவே சாதிப் பெயராகவும் ஆகியிருக்கின்றது. சில நேரங்களில் தொழில் மாறும் பொழுது பெயரும் மாறும்.எனவே வீட்டுத் தலைமைக்குக்கீழ் குடும்பம் இயங்கிக் கொண்டு வந்தது. அப்பனுக்குப் பின் பிள்ளை தொழிலை எடுத்துக் கொள்வான். இப்பொழுதும் சில இடங்களில் சில குடும்பங்கள் பரம்பரைத் தொழில் என்று தொடர்ந்து செய்வதைப் பார்க்கலாம் .சொத்தும் குடும்பப் பெயரில் இருக்கும். பெரியவர்களை சிறியவர்கள் பாதுகாப்பார்கள். எனவே பிள்ளைகளைச் சார்ந்து நிற்கும் நிலை. பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் கூட்டுக் குடும்பம் வசதியாக இருந்தது. .அந்த நாட்களில் கணவன் ,மனைவி என்று அவர்களுக்குத் தனி அறை கிடையாது. கணவன் மனைவியின் கலப்பு எப்பொழுது என்று கூட மற்றவர்களுக்குத் தெரியாது. அபூர்வமானது இந்த சங்கமம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் கூடினால் இத்தகைய பிள்ளை பிறக்கும் என்ற சாஸ்திரத்தை நம்பினர்.

அதற்கும் முன்னால் குழந்தை பிறப்பிற்காக மட்டுமே கூடுதல் என்றும் சொல்லி வந்தனர். சொல்லப் போனால் என் காலத்தில் கூட அப்பா, அம்மாவிற்குள் இப்படி உறவு இருக்கும், குழந்தை பிறக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. எனவே இத்தகைய குடும்ப வாழ்க்கையால் கூட்டுக் குடும்பம் அமைந்ததில் சோதனை வந்ததில்லை. இப்பொழுது நிலை என்ன? வெவ்வேறு படிப்பு. வெவ்வேறு தொழில்கள். தொழிலுக்காக ஊர்விட்டு ஊர் மாற்றம். ஊடகங்களின் வருகையால் மன மாற்றங்கள். புலம் பெயர்ந்த வாழ்க்கையில் இல்லத்தின் மாற்றம். கூட்டுக் குடும்பம் சலசலக்க ஆரம்பித்து விட்டது. வீட்டுப் பெண் பேச ஆரம்பித்துவிட்டாள். அடங்கிப் போகும் குணமும் மாற ஆரம்பித்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் சண்டைகள். பொருளாதார நெருக்கடி., கணவன், மனைவி சேர்ந்து படுக்கும் பழக்கம்., எனவே இடம் பற்றாமை. பல காரணங்கள் இன்று சோதிக்க ஆரம்பித்துவிட்டன . பாசத்திலே, பழமையின் பழக்கத்திலே தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பிற்கும், திருமணத்திற்கும் இருப்பதைச் செலவழித்து விட்டுத் திணரும் பெரியவர்கள் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பிள்ளைகளைத் திட்டுவது முறையன்று. இது காலத்தின் மாற்றம், கூட்டுக் குடும்ப அமைப்பு ஆட்டம் கண்டு விட்டது. இனி என்ன செய்யப் போகின்றோம்? இன்றைய தலைமுறையைத் திட்டிக் கொண்டிருக்கின்றோம். இது நம் இயலாமை. இந்த மாற்றங்கள் முதியோரை மிகவும் பாதிக்கின்றது. வருங்காலம் எப்படி இருக்கும்? இனி என்ன செய்யப் போகின்றோம்? புலம்பிக் கொண்டிருப்பதால் பிரச்சனை தீரப் போவதில்லை. சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம் .


பன்னாட்டுத் தொழிற்சங்கம் ஒன்றில் மகளிர் நலக்குழு உறுப்பினராக நான்காண்டுகள் பொறுப்பேற்றிருந்தேன். பல நாடுகளில் பெண்களின் வாழ்க்கைபற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை சுவிட்ஸர் லாண்ட்டில் உள்ள ஜெனிவாவிற்குச் சென்றிருந்தேன். எங்கள் தலைவி


ஆன்பார்வொர்டு அவர்கள் ஒன்று கூறினார் – “இந்திய கலாசாரத்தில் எங்களைப் பிரமிக்க வைத்தது உங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. ஆனால் அது இப்பொழுது உடைந்துவிட்டது வருத்தத்திற்குரியது “ மறுக்க முடியாத உண்மை. கூடு கலைந்தது மட்டுமன்றி குடும்பத்தின் அஸ்திவாரமும் பலஹீனமாகிக் கொண்டு வருகின்றது. இன்று மயக்க நிலையில் இருக்கின்றோம். மனம்விட்டுப் பேசுவோம்.


பகுதி 14

அந்தக்காலத்தில் பெண் படிப்பதும் , படித்தபின் பணி செய்வதும் அதிலும் இது போன்று பயணங்களுடன் கூடிய பணி செய்வதும் மிக மிகக் கடினம். வன விலங்குகள் நிறைந்த கானகத்தில் வரும் உலாப் போன்றது. என்னுடன் மேரி, ஜெம்மா என்ற இரு கிராம சேவிகாக்கள். இருவரும் காதலில் சிக்கினார்கள். உடன் வேலை பார்ப்பவர் களுடன் தான். தங்கி இருப்பதோ தனிமையில். மனத்தை மட்டும் இழக்கவில்லை; தம்மையும் இழந்துவிட்டார்கள்.ஒரு சம்பவம் கூற விரும்புகின்றேன்.


மேரிக்கும் அவள் காதலன் சபாபதிக்கும் சண்டை வர ஆரம்பித்தது. மாதாந்திரக் கூட்டம் வந்த மேரி ஒரு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்து விட்டு இடையிலேயே சென்று விட்டாள். அந்தக் கடிதம் கிழே விழுந்து இன்னொருவன் கையில் மாட்டியது. “உங்களை நம்பி ஏமாந்து விட்டேன். எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள். இனி உயிருடன் இருக்கப் போவதில்லை.தூக்குப் போட்டு சாகப்போகின்றேன் “ இதுதான் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.


கடிதத்தை எடுத்தவன் பயந்து போய் அதனை எங்கள் அதிகாரியிடம் கொடுத்துவிட்டான். அவரும் பதறிப்போய் என்னைக் கூப்பிட்டு, “உடனே போங்கம்மா.எதாவது செய்யற துக்குள்ளே போய்க் காப்பாத் துங்க” என்று பதட்டத்துடன் சொன்னார். “ஸார், ஒண்ணும் ஆகாது. கடிதத்தை சபாபதி படிச்சுட்டான். கடிதம் கசங்கி இருக்கு பாருங்க. கோபத்தில் கசக்கிச் சுருட்டி எறிஞ்சிருக்கான். சீக்கிரம் கூட்டத்தை முடியுங்க. இவன் நேரே அவகிட்டே தான் போவான். அவளும் இவன் வருவான்னு காத்துக்கிட்டு இருப்பா. சரியாய்டும்.”


அதிகாரிக்குப் பூரண திருப்தி வரவில்லை. எனினும் சீக்கிரம் கூட்டத்தை முடித்துவிட்டார். சபாபதி விரைந்து வெளியில் செல்வதைப் பார்த்தேன் கதை இத்துடன் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


மறுநாள் காலையில் சபாபதியும் மேரியும் என் வீட்டிற்கு வந்தனர். வந்தவுடன் சபாபதி வாயில் கதவைச் சாத்தினான். என்னைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தான். நான்தான் அந்தக் கடிதத்தை எடுத்து அதிகாரி யிடம் கொடுத்து அவன் மானத்தை வாங்கி விட்டேனாம். நிறுத்தாமல் சத்தம் போட்டுத் திட்டிக் கொண்டி ருந்தான். என் தாயார் அழ ஆரம்பித்து விட்டார்கள். சட்டென்று இடுப்பில் மறைவாக வைத்திருந்த கத்தியை எடுத்து என்னைக் குத்த வந்து விட்டான். மேரி உடனே பாய்ந்து அவனைக் கட்டிப் பிடித்து நிறுத்தினாள். அவள் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் எனக்குக் கத்திக் குத்து விழுந்திருக்கும். நான் பயப்பட வில்லை. அவர்களை உட்கார வைத்துப் பேசினேன். மேரியின் காதலைக் கூறி சபாபதியை அவளைச் சீக்கிரம் மணந்து கொள்ளும்படி புத்திமதி கூறினேன். இதுபோன்ற தாக்குதல்கள் என் வாழ்க்கையில் பல கண்டிருக்கின்றேன். போராளி போராட அஞ்சலாமா?


சபாபதி விரும்பினாலும் அவனால் மேரியைத் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது. இருவரும் சாதியும் மதமும் வேறு. சமூகத்தை மீறும் துணிச்சல் அன்று கிடையாது. செய்தி பரவி விட்ட காரணத்தால் சபாபதிக்குச் சொந்தத்தில் திருமணம் செய்துவைத்து விட்டார்கள். ஏற்கனவே மேரியைக் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த் தத்தைப் புரிந்து கொள்ள வைத்திருந்தேன். எனவே அவள் தற்கொலை செய்து கொள்ள வில்லை. ஜெம்மாவின் காதலும் தோல்வியில் முடிந்தது. இருவரும் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டனர். இப்படி எத்தனை எத்தனை பெண்கள் என் துறையில் அன்று இருந்தார்கள் !


நாங்கள் மூவரும் எவ்வளவு சந்தோஷமாகப் பணி செய்து வந்தோம். தீபாவளி வந்தால் முதல் நாளே என் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அதிகாலையில் எழுந்திருந்து குளித்து முடித்து, புத்தாடை அணிந்து, பலகாரம் சாப்பிடவுடன் மதுரைக்குப் பறந்து விடுவோம். காலைக் காட்சியிலிருந்து தொடர்ந்து நான்கு காட்சிகள் சினிமா பார்ப்போம். இரவுக் காட்சி முடியவும் மதுரை பஸ் ஸ்டாண்டிற்கு வந்து உட்கார்ந்து கொள்வோம். காலையில் 4 மணி பஸ்ஸில் வாடிப்பட்டி திரும்புவோம்.


உற்சாகமான வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.


எங்கள் பணியைப் பார்வையிட வரும் மேலதிகாரிகளில் சில மனித மிருகங்களும் இருப்பர். அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டமும் உண்டு. சிலர் தங்கள் கற்பை இழந்து கதறியதும் உண்டு. பெண்கள் நலம் காக்க வந்த பெண்களே தங்கள் பெண்மையை இழக்கும் பரிதாப நிலை அன்றிருந்தது. இன்று நாகரிகம் என்ற போர்வையில் பெண்மையின் சூதாட்டம் நடக்கின்றது.


பெண்கள் நலனையே நினைத்து வந்ததால் குடும்பத்தின் ஒரு பாகமான ஆண்மீது ஏனோ மனத்தில் கோபம் இருந்துவந்தது. இப்பொழுதும் கூட இருக்கின்றது. ஆனால் வாடிப்பட்டியில் இருக்கும் பொழுது இன்னொரு அனுபவம் கிடைத்தது. அப்பொழுது முதல் கொஞ்சம் என் பார்வை நடுநிலைப் பக்கம் போக ஆரம்பித்தது. அதுவரை பெண் என்று மட்டும் நினைத்துக் கொண்டிருந்தவள் குடும்பம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன். பல குடும்பங்கள் சேர்ந்ததுதானே சமுதாயம். எனவே என் அக்கறை சமுதாய நலத்தின்மேல் செல்ல ஆரம்பித்தது.


எனக்கு மாதவி என்று ஒரு தோழி. மதுரையில் அறிமுகமானோம். ரயில்வே ஆஸ்பத்திரியில் நர்ஸாகப் பணியாற்றி வந்தாள் அவள் வீடு சென்ற பொழுது எனக்கு அறிமுகமானவர் ரத்தினம். அவர் அப்பொழுது ஈரோட்டில் நல்ல பதவியில் இருந்தார். ஏற்கனவே மணமானவர். அவரிடம் டைப்பிஸ்டாக வேலை பார்த்தது மாதவியின் அக்கா. ஏழைக் குடும்பம். தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தி ருக்கின்றாள். ரத்தினத்திற்கு மாதவியிடம் ஈர்ப்புத் தோன்றியது. அவள் வீட்டார் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை அடிக்கடி வீட்டிற்குக் கூப்பிட ஆரம்பித்திருக்கின்றனர். அவர் பணக்காரர்; அந்தக் குடும்பத்திற்காக நிறையச் செலவழித்தார்.


மாதவியுடன் உறவு நெருக்கமானது. அவர்கள் வீட்டினரும் அதனை ஆதரித்தார்கள். அவளை நர்ஸுக்குப் படிக்க வைத்தார். இப்பொழுது வேலையும் கிடைத்துவிட்டது. மனைவியின் அனுமதியுடன் அவளை மணக்க இருந்தார். மாதவியும் அவள் வீட்டாரும் ஏற்கனவே ஒப்புக் கொண்டதுதான்.


ஆனால் மதுரையில் புது சிநேகிதன் மாதவிக்குக் கிடைத்துவிட்டான். எனவே ரத்தினத்தை அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். கொஞ்சம் விபரம் கேள்விப் பட்டவுடன் ரத்தினம் வாடிப்பட்டிக்கு வந்தார். என்னை அவசரமாக மதுரைக்குக் கூப்பிட்டார். விபரம் சொல்லவில்லை. மாதவி வீடு பூட்டிக் கிடந்தது. தான் வந்திருப்பதைக் கூறாமல் மாதவி வேலை பார்க்குமிடம் சென்று சாவி வாங்கி வரச் சொன்னார். நான் தனியே சென்று சாவி வாங்கி வந்து கதவைத் திறந்தேன். கட்டிலில் அவள் துணியும் இன்னொரு ஆடவன் துணியும் கிடந்தன. மேலும் இன்னொரு ஆடவனின் வருகைக்கு நிறைய சாதனங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பார்த்த ரத்தினம் ’ஓ’ வென்று அழ ஆரம்பித்தார். பல ஆண்டுகள் பந்தம்.


மாதவி வரவும் சண்டை பெரிதானது. அவளைக் கொன்றுவிட முயற்சி செய்தார். எப்படியோ தடுத்தேன். மாதவியின் இரட்டை வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. போலித்தனம் எனக்குப் பிடிக்காது. ரத்தினத்திடம் நேரிடையாகத் தெரிவித்து விட்டு அவள் இன்னொருவருடன் நேசம் வைத்துக் கொண்டி ருந்தாலும் பரவாயில்லை. மன்னித்து விடலாம். அன்று அவள் கொடூரமாகப் பேசியதிலிருந்து, ஒரு பெண் பணத்திற்காக எப்படியெல்லாம் பேயாக மாறுகின்றாள் என்பதைக் கண்முன்னால் பார்த்தேன்.


இப்பொழுது எனக்கிருந்த அவசரப் பணி கொலையைத் தடுக்க வேண்டும். ரத்தினத்தை அங்கிருந்து கூட்டிச் சென்று விட வேண்டும். எப்படியோ முயன்று வெளியில் கூட்டி வந்து விட்டேன். அவரை மதுரையில் விட்டு வாடிப்பட்டிக்குத் திரும்ப மனமில்லை. ஏற்கனவே அவர் தவறு செய்தவர். ஒரு குடும்பம் இருக்க இன்னொரு குடும்பம் அமைக்க நினைத்தது சரியன்று. இப்பொழுது கொலை செய்து குற்றவாளியானால் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமே பாதிக்கப் பட்டு விடும்.அவரை அவ்வளவு எளிதில் சமாதானப்படுத்த முடிய வில்லை. எப்படியோ முயன்று அவரை அவர் ஊர் பஸ்ஸில் ஏற்றிவிடும் வரை உடன் இருந்தேன்.


பல கொலைகள் திடீரென்று ஏற்படும் உணர்ச்சி வேகத்தில் செய்வது. கொஞ்சம் தாமதித்தால் உணர்ச்சிகள் அடங்கும் பொழுது கொலை வெறியும் அடங்கி விடுகின்றது. ரத்தினமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைய ஆரம்பித்தார். ரத்தினமும் மாதவியும் இருவருமே தவறு செய்தவர்கள். வீட்டுப் பெண்ணைப் பழக விட்டு ஆதாயம் தேடிய மாதவி குடும்பத்தைப்பற்றி என்ன சொல்வது ?


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகளைச் செய்து விடுகின்றோம். அதன் பாதிப்பு அதிகமா னால் பழியை யார் மீது, எதன் மீது போடுவது என்று மனம் அலைபாயும்.
எதிர்பார்க்காத சூழலால் எனக்கு வந்துவிட்ட பொறுப்பு. ஒரு மனிதனின் சோதனைக் காலத்தில் அன்புடன் வழி நடத்த உறவுகள், நட்புகள் தேவை. ரத்தினத்தின் நட்பு ஒரு தொடர்கதை. அவரை அழிவிலிருந்து மீட்டுவிட்டேன் என்று அடிக்கடி கூறுவார். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகள், இழப்புகளின் பொழுது நல்ல நண்பராக இருந்தார். ஆம், அவர் இப்பொழுது இல்லை. இந்த சம்பவத்திற்குப் பின் இரு பக்கமும் பிரச்சனைகளைப் பார்த்தேன்.


அக்காலத்தில் நான் உணர்ந்தது பெரிதும் பாதிக்கப்பட் டிருப்பவள் பெண் என்பதுதான். இருப்பினும் நான் அவசர முடிவு எடுக்கமாட்டேன். என் வேகத்தில் கொஞ்சம் விவேகம் கலந்தது. பள்ளிப் படிப்பைவிட அனுப வங்கள் கற்றுக் கொடுக்கும் படிப்பினைகள் நிறைய. நாம் தான் புரிந்து தெளிவடைய வேண்டும். என் பணிக்காலத்தில் இளைஞர் களையும் சமுதாயப் பணிக்குப் பயிற்றுவித்தது வாடிப் பட்டியில்தான். இளைஞர் என்று கூறும் பொழுது இப்பொழுது நான் இருக்கும் 75ஐ நினைத்து விடாதீர்கள். அப்பொழுது எனக்கு வயது 21 .


பகுதி 15

வாடிப்பட்டி வாழ்க்கை எனக்குப் பல பாடங்களைக் கற்பித்தது. என் திறமைகள் வளரக் காரணமாயிருந்த அனுபவங்கள் என்னிடம் ஓர் பக்குவத்தையும் ஏற்படுத்தியது; யாரும் கற்றுத்தரவில்லை. தானாகவே அமைந்தது. ஒரு குழந்தை முதலில் தவழும், பின் எழுந்திருக்க முயலும், கீழே விழுந்து, எழுந்து நிற்கப் பயிலும். ஓடுவதும் அப்படியே. விழும் பொழுது அழும். ஓடி இலக்கை அடைந்துவிட்டால் சிரிக்கும். அப்படித்தான் நானும் சூழ்நிலையால் உருவாக்கப் பட்டவள்.

வாடிப்பட்டி வட்டாரத்தில் கருப்பட்டி கிராமம் . புதிய அனுபவங்களின் தொடக்க பூமி. அவ்வூரில்தான் நான் முதலில் நடனம் ஆடியது. என் நாடக அரங்கேற்றமும் அங்குதான். முதன் முதலில் அந்த ஊருக்கு பஸ்ஸில் போய் இறங்கினேன். தனியாகப் போயிருந்தேன்; கீழே இறங்கவும் சுற்றிப் பார்த்தேன். அருகில் ஒரு பெட்டிக்கடை. அங்கே நான்கு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்; நான் இறங்கவும் முதலில் வியப்புடன் பார்த்தனர். பின்னால் ஏதோ பேசிச் சிரித்தார்கள்.

அவர்களைச் சில வினாடிகள்தான் பார்த்தேன். உடனே அவர்களை நோக்கி நடந்தேன். சிரித்தவர்கள் அதிர்ந்து போய் விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக் கருகில் சென்று ஒரு சிறு தாளை நீட்டி, “இந்த விலாசத் திற்குப் போக வேண்டும் வீடு எங்கே இருக்கின்றது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.நால்வரில் ஒருவன், “டேய் மணி, இது உங்கள் வீட்டு விலாசம்டா” என்றான். உடனே மணி அதனை வாங்கிப் பார்த்து “இவங்க எங்க அம்மாதான், வாங்க கூட்டிகிட்டுப் போறேன் “என்று சொன்னான். மற்றவர்களிடம் “போய் வருகின்றேன்” என்று சொல்லிவிட்டு மணியுடன் புறப்பட்டேன். அங்கிருந்த இளைஞர்கள் எல்லோரும் ஏறத்தாழ என் வயதுதான் இருக்கலாம். நடந்து போகும் பொழுதே அவர்கள் நால்வரின் விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.


பெற்றோர்கள் விவசாயிகள். பள்ளிப் படிப்பு முடிந்தபின் ஊரிலேயே இருந்து தந்தைக்கு உதவிகள் செய்து வந்தனர். குடும்பத்தில் பெரியவர்கள் இருந்ததால் இவர்களுக்கு வேலைச் சுமை குறைவு . கூப்பிட்ட குரலுக்குப் பிள்ளை. வேலை இல்லாத நேரங்களில் நண்பர்கள் கூடிப் பேசுவார்கள். மணியின் வீடும் வந்து விட்டது. மணியின் தாயார் செல்லம்மாள், மாதர் சங்கத்தின் தலைவி. வீட்டுக்குள் நுழைந்து என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் முகமலர்ந்த வரவேற்பு கிடைத்தது. உடனே மணியை நோக்கி அவன் அம்மா, ‘டேய், போய் செண்பகம் அக்காவைக் கூட்டியா “ என்று சொல்லவும் மணி புறப்பட்டுவிட்டான். செண்பகம் மாதர் சங்கத்தின் கன்வீனர். அந்த கிராமம் கொஞ்ச வசதியான ஊர். ஓரளவு படித்தவர்களும் இருந்தனர். வெளியூருக்குப் போய், கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பையன்களும் உண்டு. ஆனால் பெண்கள் யாரும் ஊரை விட்டுப் போய்ப் படிக்க ஆரம்பிக்கவில்லை.


செண்பகம் வந்துவிட்டாள்; நான் அவளுடன் வீடுகள் பார்வையிடப் புறப்பட்டேன். சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்து மணியிடம், “மணி, உன் சினேகிதப் பசங்களை 2 மணிக்குக் கூட்டிட்டு வரியா?”என்று கேட்டேன். முதலில் அவன் விழித்தான். “கொஞ்சம் பேசணும், உங்க ஊர்லே உங்களை மாதிரிப் பசங்களுக்கு ஒரு சங்கம் ஆரம்பிக் கலாம்னு நினைக்கறேன். அது சம்பந்தமா பேசணும்” என்று நான் கூறவும் அவன் முகம் மலர்ந்து “சரி “என்று கூறினான். பின் செல்லம்மா பக்கம் திரும்பி, “உங்க வீட்டு முன் வாசல்லே உட்கார்ந்து நாங்க பேசலாமா?” என்று கேட்டேன். உடனே அவர்களும் “எங்க ஊருக்கு நல்லது செய்ய வந்திருக்கீங்க. தாராளமா கூட்டி வச்சுப் பேசுங்க. சும்மா ஊரைச் சுத்திக்கிட்டு அலையறா னுங்க. ஏதாவது வேலை கொடுங்கண்னு” ஆலோசனயும் கூறினாள் செல்லம்மா .


என் பணிப்பட்டியலில் இது கிடையாது. இதை நினைத்து அந்த ஊருக்கு வரவில்லை. திடீரென்று தோன்றியது சொன்னேன். அவ்வளவுதான் செண்பகத்துடன் சில வீடுகளுக்குச் சென்று பெண்மணிகளைச் சந்தித்து வழக்கம் போல் பேசிவிட்டு செல்லம்மா வீட்டிற்குத் திரும்பும் பொழுது மணி ஒன்றாகியிருந்தது. சாப்பிட்டுவிட்டு மணியின் நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். இதற்கிடையில் செல்லம்மாவிடம் ஊர் நிலவரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.


இளைஞர்களின் மனப்போக்கைப் புரிந்துகொண்டு அவர்களின் மனித சக்தியை எப்படி சமுதாய நலனுக்குப் பயன்படுத்த முடியும் என்று கற்றுக் கொடுத்தது கருப்பட்டி கிராமம்.


மணியின் நண்பர்கள் வந்தார்கள். அவர்களின் பெயர்கள் செல்வன், ராமன், பெருமாள். முதலில் சாதாரணமாக அரட்டையடித்தேன். பேசப் பேசத் தயக்கம் போய் அவர்களும் சரளமாகப் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது கிரிக்கெட் வளராத காலம். விளையாட்டுகள் பற்றிப் பேசும் பொழுது ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சினிமா பற்றிப் பேச ஆரம்பிக்கவும், உற்சாகமாக உரையாடினர். அவர்களையே கிராமத்திற்கு என்னென்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டச் சொன்னேன்.


கிராமங்களில் பண்டிகைகள், திருவிழாக்கள் வரும். அத்துடன் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜி நாள், பாரதி நினைவு நாள் என்று பல முக்கியமான தினங்கள் வரும். எனவே அவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்று கூறினேன். குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம், அவர்களையும் சிறு கலை நிகழ்ச்ச்களில் பங்கு பெறச் செய்யலாம் . பேச்சுப் போட்டிகள் நடத்தி சிந்தனா சக்தியை வளர்க்கலாம் என்றெல்லாம் சொன்னபொழுது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள். அப்படியே அவர்களை சமுதாயப் பணிக்குக் கொண்டு வந்து விடலாம். வெட்டிப் பேச்சில் மனித சக்தி வீணாவதை நான் விரும்பவில்லை. உழைக்கும் மனிதனுக்குக் களைப்பை நீக்கும் வடிகால் கூத்து. உலகில் எல்லாப் பகுதி மக்களும் வரவேற்கும் கலை கூத்து. சொல்லப்பட வேண்டிய செய்திகளைக் கூத்தின் வாயிலாக எளிதில் வெளிப்படுத்த முடியும்.


எப்படி இளைஞர்களுடன் என்னால் இவ்வளவு எளிதாகப் பழக முடிந்தது ? என்னைப் போன்ற பலரை உருவாக்கிய பெருமை என் ஆசிரியர் கே. பி. எஸ் நாரயணன் அவர்களையே சாரும். நான் படித்தது ஆணும் பெண்னும் சேர்ந்து படிக்கும் பள்ளிக் கூடம். அதுவும் ஒரு சின்ன கிராமத்தில் இருந்த பள்ளிக்கூடம். என் வகுப்பில் நான் ஒருத்தி தான் பெண். என் வகுப்பு மாணவர்களுடன் தயங்காமல் பழகுவேன். சந்தேகம்வரின் வகுப்பறையில் பையனின் அருகில் சென்று கேட்டுக் கொள்வேன். கேலி, கிண்டல் கிடையாது. 65 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு சின்ன கிராமத்தில் ஆண், பெண் பள்ளிக்கூடத்தில் எத்தகைய ஆரோக்கியமான சூழல். பெருமையெல்லாம் ஆசிரியர்களுக்கே உரியது.
ஆசிரியர் - மாணவர் உறவு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ அதற்கு அஸ்திவாரமாக ஆகும் காலம் கல்விப் பருவம். காலச் சுழற்சியில் அடிபட்ட உறவுகளில் ஆசிரியர்- மாணவர் உறவும் ஒன்று .


இளைஞர்களின் சங்கங்கள் என்று கருப்பட்டி, மட்டப்பாறை இரு இடங்களில்தான் தொடங்கினேன். என்னுடன் பணியாற்ற வேண்டிய ருத்ர துளசிதாஸ் அப்பொழுதுதான் பணியில் சேர்ந்தார். இனி அவர் அப்பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். .என்னுடய மேடைப் பேச்சு, பாட்டு, நாடகம் இவைகளால் இளைஞர்களின் பற்றும் கிடைத்தது. மட்டப்பாறையில் எனக்கு வர இருந்த சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றியது இந்த இளைஞர்கள் கூட்டம். இசையும் கூத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவை.


காலம் எவ்வளவு மாறிவிட்டது ! எழுதும் பொழுதே இக்கால நினைவுகள் வந்து மோதுகின்றன ஐம்பது ஆண்டுகளில் இளைய தலைமுறையில் மாற்றங்கள்.


காலம் மாறியிருந்தாலும் சூழலைப் புரிந்து கொண்டு, மனித சக்தியை ஒருங்கிணைத்து ஆக்க பூர்வமான பல காரியங்கள் செய்ய இயலும். ஆனால் மனிதன் சுயநலப்பேயிடம் மாட்டிக் கொண்டிருக்கின்றான். பொருளாசைப்படுகின்றவன் மட்டுமல்ல, நமக்கு எதுக்கு வம்பு என்று தன் அமைதிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து ஒதுங்கின்றவனும் சுயநலக் காரன்தான். ஒவ்வொருவருக்கும் சமுதாய அக்கறை வேண்டும். முடிந்த ஏதோ இன்று இரண்டாவது சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும்.


இப்போது எனக்குள்ள வயதைப் பார்த்து, சிலர் என்னிடம் “ உங்களுக்கு இக்கால இளஞர்கள்பற்றித் தெரியாது” என்று கூறுகின்றார்கள். சமூக நலப் பணியில் ஓய்வுக்கு வயது கிடையாது என்பது போல் நல்லது செய்ய நினைப்ப வர்களுக்கு எப்படி சாதி, மதம், மொழி, நாடு என்று கிடையாதோ எல்லா வயதினர்க்கும், ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் செய்ய வேண்டும். சுவையான அனுபவம் ஒன்றைக் கூறப்போகின்றேன் -
இக்கால அனுபவம்., இக்கால இளைஞர்களுடன் என் தொடர்பு, உங்களை ரசிக்க வைக்கும் காட்சிகள் காணலாம். நான் கணிணி எப்படி கற்றுக் கொண்டேன் என்பதைச் சொன்னாலே போதும். என் இளைஞர் படை உலகம் முழுதும் இருக்கின் றார்கள். பெரியவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. என்னுடன் அன்புடனும், அக்கறையுடனும் ஏன், ஜாலியாகவும் பழகுவது இளைஞர்கள்தான். கொஞ்ச நேரம் கிராமத்திலிருந்து சென்னை நகர் போகலாம்.பகுதி 16

பிரச்சனைகளையே பேசிக் கொண்டிருந்தால் பித்துப் பிடித்துவிடும். கொஞ்சம் இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு இளைஞர்கள் பற்றி, அதுவும் தற்காலச்சூழலில் அவர்களைக் காணலாம். சங்கிலிப் பிணைப்பைப்போல் சம்பவங்கள் இணைந்துவிடும். சிறிது நேரம் நினைவுகள் இளமை ஊஞ்சலில் ஆடட்டுமே! வேடிக்கை பார்க்கலாம். அதிலும் செய்திகள் இல்லாமலா போய்விடும்! பரபரப்பாக இருந்த வாழ்க்கை பணியில் ஓய்வு பெறவும் சில ஆண்டுகளில் மூட்டுவலியால் வீட்டில் முடங்கி விட்டேன். 2001 ஆண்டு ஜுலை மாதம் மகன் அமெரிக்காவிலிருந்து வரும் பொழுது ஒரு கம்ப்யூட்டர் எடுத்து வந்தான் ; “அம்மா, உங்களுக்ககத்தான் கொண்டு வந்திருக்கேன். தென்காசி போய்ட்டு வர 10 நாட்களாகும். அதற்குள் கொஞ்சமாவது நீங்க படிச்சிருக்கணும். இல்லேன்னா யாருக்காவது கொடுத்து டுவேன்” என்று கூறிவிட்டு எங்கள் வீட்டு காம்பவுண்டில் பின்னால் மாடியில் குடியிருக்கும் பையன்களைக் கூப்பிட்டு “ராஜா, என் அம்மாவுக்குக் கொஞ்சம் கம்ப்யூட்டர் பற்றி சொல்லிக் கொடுங்கள் “ என்றான். மாடிவீட்டுப் பையன்கள் என் பேத்தியின் நண்பர்கள். உடனே கற்பனையில் போய்விட வேண்டாம். பேத்திக்கு மூன்று வயது. வெளியில் போய்விடக் கூடாது என்று காம்பவுண்டு கதவுகளை பூட்டி இருப்போம். இவளோ மாடிக்குப் போய் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். அதனால் இப்பொழுது அவர்களுக்கும் நான் பாட்டி. இதுவரை யாரும் என்னிடம் பேசியதில்லை. இனிமேல் பேசியே ஆக வேண்டும் .


நால்வரும் பொறியியல் வல்லுனர்கள். கீழைக்கரை கல்லூரியில் படித்தவர்கள். ராஜாகான், ஈசா, நயினா, ஷேக், இவர்களுடன் வெளியில் தங்கி முதுகலைப் படிப்பு படிக்கும் அப்பாஸும் அடிக்கடி வந்து தங்குவான். மாடியில் அரட்டைச் சத்தம் கேட்கும். மற்றபடி இருப்பதே தெரியாமல் அடக்கமாக இருப்பவர்கள் .அன்று இரவு ஏழுமணிக்கு ஐவரும் வந்து விட்டார்கள். நான் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தேன். ராஜா என் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் மற்றவர்களும் நாற்காலி, ஸ்டூல் என்று எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள் எனக்கு இத்தனை வாத்தியார்களா?


67 வயது சின்னப் பெண்ணிற்கு 25 வயது கிழ வாத்தியார். சே! எப்பொழுதும் இப்படித்தான். 17 வயதில் படித்த கல்லூரி புனித மேரிகல்லூரி. சன்னியாசிகளுடன் தங்கினேன். 40 வயதில் ராணிமேரி கல்லூரி. சின்னச் சின்னப் பெண்களுடன் வயதானவள் நான். என் ராசி அப்படி. ராஜா என் முகத்தைப் பார்த்து, “என்ன பாட்டி யோசனை? பயமா? சீக்கிரம் நீங்க கத்துக்கலாம் “ என்றான். பாவிங்களா, பாட்டின்னு கூப்பிட்டுகிட்டு பாடம் சொல்லிக் கொடுக்க வந்தீங்களா?


கணிணிபற்றி ஒவ்வொன்றாக ராஜா சொல்ல ஆரம்பிக்கவும் பயம் வர ஆரம்பித்தது. தொல்காப்பியம் மனப்பாடம் செய்ய வேண்டி வந்த பொழுது படிப்பதையே நிறுத்திவிடலாம் என்று நினைத்தவள். கணிணியும் வேண்டாம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். என் எண்ணங்களைப் புரிந்து கொண்டவன் போல், “பயப்படாதீங்க, ஆரம்பத்திலே அப்படித்தான் தோணும். அப்புறம் பாருங்க, நீங்க கம்ப்யூட்டரை விட்டு எழுந்திருக்க மாட்டீங்க “ என்றான் ராஜா. பாவி எந்த நேரத்தில் சொன்னானோ , இப்பொழுது அப்படித்தான் எப்பொழுதும் கணிணியுடன் உட்கார்ந்தி ருக்கின்றேன். அடுத்து ஒரு பெயர் வைக்க வேண்டுமாம். மெயில் ஐடியாம் . எனக்குப் பிடித்தமானவர்களின் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து ஒரு பெயர் சொன்னேன் ( மன்னிக்கவும் . பெயர் சொல்ல மாட்டேன் ). பாஸ்வொர்ட் என் பிறந்த தேதியைக் கொடுத்தேன். Messenger என்று ஒன்றாம் அதனையும் ஏற்படுத்தினான் .“பாட்டி , இதில் உங்களுக்குப் பிரியமானவர்கள் பெயரைப் பதிந்தால் அரட்டையடிக்கலாம் “ என்று சொல்லவும் ஒரே குஷி. தனிமை பறந்துவிடும். அடுத்து அவன் சொன்னதுதான் என்னுடைய புது பந்தம். “பாட்டி, உங்களுக்கு, keyboard, mouse கணிணியில் கவனம், மூன்றும் ஒரே சமயத்தில் வேகமாக இயங்க வேண்டும். அதற்கு நீங்கள் சாட்டிங் போனால் சீக்கிரம் தெரிந்து கொள்ளலாம். அதனால் இப்போ உங்களை நான் சென்னை ஆன் லயன் சாட்டிங் அறைக்குக் கூட்டிப் போகப் போறேன். அங்கே வர்ரவங்ககிட்டே நீங்க அரட்டை அடிக்கணும். நான் சொல்லச் சொல்ல நீங்க டைப் செய்யுங்க “ மனத்தில் ஒரே பரபரப்பு. ஆர்வத்தை உண்டுபண்னிவிட்டான் அடுத்து அவர்கள் பேசியதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன்.


“பாட்டி, இங்கே உங்க சொந்தப் பெயரை சொல்லக் கூடாது, அதுக்கு தனியே பேர் வைக்கணும்” இது ராஜா ;“நமோசா” இது நயினா ;


“அதென்ன நமோசா, சமோசா மாதிரி. பேரு நல்லா இல்லே” இது நான் ;


“பாட்டி, பேரு புதுமையா இருக்கணும், உடனே பசங்க குதி போட்டுக் கிட்டு பேச வருவாங்க. ஊர் கேட்டா ஜப்பான், இங்கே காலேஜ்லே படிக்க வந்திருப்பதா சொல்லுங்க” என்று அப்பாஸ் கூறிவரும் பொழுதே, நவாஸ் “ வயசு கேட்டா 19 ன்னு சொல்லணும்” என்றான்;


அடப்பாவிங்களா, 67 வயது பெண்மணியை 19 வயதுன்னு சொல்ல ணுமாம். என்ன போலித்தனம். “பொய் சொல்ல முடியாது” என்று கத்தினேன். எல்லோரும் சிரித்தார்கள்.


“பாட்டி, உங்க வயசைச் சொன்னா ஒரு பயலும் பேச வரமாட்டான். சும்மா வேடிக்கைக்குத்தானே. அப்போத்தான் உங்களுக்கு ஸ்பீடு வரும் “என்று நிதானமாகச் சொன்னான் ஈசா ;எல்லோரையும் பரிதாபமாகப் பார்த்தேன். என் நிலைமையைப் புரிந்து கொண்ட ராஜா, “பாட்டி, நீங்க எத்தனை கதை எழுதியிருக்கீங்க. அது போல நீங்க அனுப்பறது ஒரு பாத்திரம்னு நினங்க. பேசும் பொழுதுமட்டும் ஜாக்கிரதையாகப் பேசுங்க. வாலுங்க, நீங்க சமாளிச்சுடுவீங்க. நான் தான் பக்கத்தில் இருக்கேனே. நான் சொல்றதை நீங்க அடிச்சா போதும் “ என்று சொல்லி தைரியம் ஊட்டினான் .அப்பொழுது சென்னை ஆன் லயன் சாட்டிங் பிரபலம். மெயில் ஐ டி கொடுக்க வேண்டாம். பெயர்கள் ஓடிக் கொண்டே இருக்கும். நம்மைக் கூப்பிடறவங்ககிட்டே நாம் பேசலாம். என் கணிணி பயணம் ஆரம்பித்தது; முதன் முதலில் சென்னை ஆன் லயனில்தான் முதலில் பேச ஆரம்பித்தவன் பெயர் வம்ஸி. பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம். வயது 21. முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தயக்கம் விலகியது. உரையாடல் வேடிக்கையாக இருந்ததே தவிர விரசமாக இல்லை. விலாசம் கேட்டான் ராஜா சொல்லச் சொல்லத் நானே டைப் செய்து கொண்டிருந்தேன். “ விலாசம் இப்போ கொடுக்க மாட்டேன். கொஞ்ச நாளாகட்டும் “ என்று சொன்னேன். இன்னும் சிலர் கூப்பிட்டாலும் பதில் கூறமுடிய வில்லை. என்னால் ஒருவனுக்கே பதில் அடிக்க நேரம் ஆயிற்று. அன்று ஆரம்பித்த ஒற்றைவிரல் நாட்டியம் தான் இன்று வரை தொடர்கின்றது. அவர்கள் சொன்னது சரிதான். பயிற்சிக்கு எனக்கு சாட்டிங் உதவி செய்தது .அடுத்த நாளும் பயிற்சி தொடர்ந்தது. இரண்டாம் நாள் இன்னொரு புது நண்பன் பெயர் ஜான். பள்ளிப் படிப்பை முடித்துப் பின் அலுவலகத்தில் ஒரு சாதாரண வேலை பார்த்துக் கொண்டே. எம். சி. ஏ வரை அஞ்சல் வழிக்கல்வி மூலம் படித்து ஒரு தொழிலையும் அமைத்துக் கொண்டு மென்பொருள் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தான். உழைப்பால் உயர்ந்தவன் வயது 27. அவனை எனக்கு மிகவும் பிடித்தது. மூன்றாம் நாள் யாரும் வரும் முன்னர் நானே கணிணி முன் உட்கார்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் இரு புதிய நண்பர்கள். அன்றும் வம்ஸியும் ஜானும் வந்திருந்தனர். எல்லோரும் தொலைபேசி எண் கேட்டார்கள் . நான் தயங்காமல் கொடுத்துவிட்டேன். நான் உட்கார்ந்திருக்கும் பொழுதே மாடி வீட்டுப் பசங்க வந்து விட்டார்கள் நான் நடந்ததைக் கூறவும் பதறி விட்டார்கள். “பாட்டி, தப்பு செய்துட்டீங்க. பசங்க வீட்டூக்கு வந்துடுவாங்க” .


“வரட்டுமே, வந்தா, பேத்தி வெளியே போயிருக்கான்னு சொல்லிட்டுப் போறேன். எத்தனை நாள் வருவான். போரடித்து வருவதை அவனே நிறுத்தி விடுவான் “ என்று நான் கூறவும் “ பாட்டி விளஞ்ச பாட்டி “ என்று கூறிச் சிரித்தார்கள். ஆனால் நடந்தது வேறு. வம்சிதான் முதலில் கூப்பிட்டான். பேச ஆரம்பித்து, அதிக நேரம் இருவரும் பேசிக் கொண்டே இருந்தோம். கடைசியில் நான் யார் என்பதைக் கூறினேன். அவன் சொன்ன பதில் எனக்குத்தான் வியப்பை அளித்தது. என் குரலால், நான் சிறு பெண் இல்லை என்பதை யூகித்து விட்டான். ஆனால் பேச்சு சுவாரஸ்யமக இருந்ததால் தொடர்ந்து பேசியிருக்கின்றான் . “அம்மா, நீங்கள் செய்தது சரி. வயதைச் சொல்லியிருந்தால் நிச்சயம் பேச ஆரம்பித்திருக்க மாட்டேன். சாட்லே வர்ரவங்க கெட்டவங்க இல்லே. பொழுது போகணும். சில சமயம் நல்ல பிரண்ட்ஸ் கிடைப்பாங்க. ஆனாலும் இப்போ உங்க கிட்டே பேசினேனே, அவ்வளவு நேரம் பேசி இருக்க மாட்டேன். எத்தனை விஷயம் பேசினோம். உங்க வீட்டுக்கு வருவேன். சொல்லிட்டு வர மாட்டேன். திடீர்னு வருவேன் ‘ என்றான்.. அடுத்துப் பேசியவன் ஜான். அவனும் உண்மை தெரிந்து அதிர்ந்து போகவில்லை. அன்றே வீட்டிற்கு வந்தான். வம்சி சொன்னது போல் திடீரென்று ஒரு நாள் வந்து, “ அம்மா , ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க. பசிக்குது. “குழந்தையாய் கேட்கவும் உருகிப் போனேன். இன்றும் அவன் என் செல்லக் குழந்தையாக இருக்கின்றான் .


சாட்டிங் மூலம் ஒரு மாதத்தில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் 27. மாடி வீட்டுப் பையன்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 32 ஆயிற்று. இவர்களை ஒன்றுபடுத்த ஒரு புதிய திட்டம் தோன்றியது.


பகுதி 17

புனிதவதி இளங்கோவன் அண்ணியாக இருந்தவர், தோழியானார் .நாங்கள் கருத்துக்களில் ஒன்றுபடுவதும் உண்டு, சிலவற்றில் மாறுபடுவதும் உண்டு. அது எங்கள் நட்பைப் பாதித்தது இல்லை.


இளைஞர்களுக்காக நான் நினைத்த திட்டத்தைக் கூறவும் மகிழ்ச்சி யுடன் ஆதரித்தார். அதுமட்டுமன்று, ஒத்துழைப்பும் தருவதாகச் சொன்னார். எனவே நாங்கள் இருவரும் சேர்ந்தே திட்டமிட்டோம். மாதம் ஒரு முறை நடக்கும் கூட்டங்களுக்கும் வந்திருந்து அவர்களே முன்னிருந்து நடத்திக் கொடுத்தார்கள் ஜூலை மாதம் 17ல் கணிணி யைத் தொட்டேன். ஒருமாதத்தில் அரட்டையில் நண்பர்கள் சேர்ந்து விட்டனர். எனவே முதல் ஒன்றுகூடும் கூட்டம் ஆகஸ்டு மாதம் ஆரம்பமாகியது.


முதல் கூட்டத்தின் சிறப்புவிருந்தினர் அஸ்வத்தாமா என்ற குமணன். இவர் வர்த்தக ஒலிபரப்பின் மூலம் இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். சென்னை வானொலியில் செய்திப் பிரிவில் வேலை பார்த்தவர். பின்னால் சொந்தத் தொழிலில் இறங்கி விட்டார். இவர் பெயரைச் சொல்லவும் இளைஞர்கள் உற்சாகமாகி விட்டனர். சொற்பொழிவு கிடையாது. கலந்துரையாடல். விருப்பம் போல் கேள்விகள் கேட்கலாம். அந்தக் கலந்துரையாடல் சுவாரஸ்யமான தாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. புனிதம்தான் பேச்சில் கலந்து கொண்டார் .


அடுத்த கூட்டத்தில் தம்பதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இரு தலைமுறைகளின் கலந்துரையாடல்.இரு தரப்பும் மனம்விட்டுப் பேசினர் ; மூன்றாவதில் இளவயதுப் பெண்கள் வந்தனர். விவாதங்கள் சூடாக இருந்தன. புனிதம் நடுவராக இருந்து வழி நடத்தினார்கள்
நான்காவது சிறப்பு விருந்தினராக சோதிட அறிஞர் திரு ஏ.வி. சுந்தரம் அவர்கள் வந்திருந்தார். ஐ.ஐ.டி யில் வேலைபார்த்துக் கொண்டி ருந்தாலும் சோதிடத்தை விஞ்ஞானம் என்ற கருத்தில் ஆய்வு செய்தவர். இளைஞர்களில் பல மதத்தினர், கடவுள் மறுப்பு கருத்துக் கொண்டவரும் இருந்தனர். அன்றைய விவாதம் மிகவும் அருமையாக இருந்தது.


ஐந்தாம் சந்திப்பு யாராலும் மறக்க முடியாதது. புத்தாண்டு கொண்டாட புதிய வழி. யாஹூ சாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் உலக அளவில் சேர்ந்து விட்டனர். அவர்கள் வெளி நாட்டில் இருந்தனர் அவர்களுக்கு நான் 19 வயதுப் பெண். 2001 டிசம்பர் இரவு 11 மணிக்கு சாட்டில் அவர்கள் வர வேண்டும் என்று சொல்லி இருந்தேன். சென்னை வாசிகளுக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. என் வயதைக் கூறக்கூடாது என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். என் உறவினர்கள், சில குடும்ப நண்பர்கள் குடும்பமாக வந்திருந்தனர். அன்று உணவிற்கும் ஏற்பாடு செய்திருந்தேன்.


சரியாக இரவு 11 மணிக்கு யாஹூ அரட்டை அறைக்கு நுழைந்தோம். வம்ஸி தான் பொறுப்பு. என்னை விசாரிக்கவும் அவன் சொன்ன பதில் இப்பொழுதும் நினைக்கும் பொழுது சிரிப்பை வரவழைக்கின்றது
“மச்சி, அவ என் தங்கச்சிதான். ஒரே வெட்கம் இங்கே பக்கத்தில் குந்திகிட்டு வேடிக்கை பாக்கறா. நீ நல்லா பாடுவியாமே. பாடு. உன் பாட்டைக் கேட்க ஓடோடி வந்துருக்கோம் ஏமாத்தாதே மச்சி”


வம்ஸியின் பேச்சில் மயங்கிப் பாட ஆரம்பித்து விட்டான். அவ்வளவுதான் ஒவ்வொருவராகப் பாட ஆரம்பித்தனர், புனிதமும் பாடினார்கள். அரட்டைக்கு வந்தவர்களும் உற்சாகமாகப் பாடினர். வம்ஸி தன் நண்பர்களுடன் கானா பாட்டு பாடினான். புது வருடம் பிறக்கும் பொழுது உலக அளவில் வாழ்த்துத் தெரிவித்து கொண்டு கத்தினோம். இன்றும் யாரும் அந்த சம்பவத்தை மறக்க வில்லை; மனத்தில் பதிந்த ஓர் அற்புதமான நிகழ்வு.


ஆறாவது கூட்டத்திற்கு பல துறைகளிலிருந்து அழைக்கப்பட்டு வந்திருந்தனர். மறைந்த திருமதி சத்தியவாணிமுத்துவின் மகள் சித்ரா அரசியல் சார்பில் வந்திருந்தார். மேடைப் பேச்சாளர். திராவிட முன்னேற்றக் கட்சியில் மகளிர் அணியில் இருப்பவர். வந்திருந்த அனைவரும் ஏதாவது பணியிலோ அல்லது சொந்தத் தொழிலோ செய்பவர்கள். அன்று நடந்த விவாதங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. ஜான், மாத்யூ இருவரைத் தவிர யாரும் இன்னும் பணியில் சேராதவர்கள்.


ஏழாவது கூட்டம் சோகமானது. காரணம் அதுவே அவர்களுக்குக் கடைசிக் கூட்டம். நான் மார்ச் மாதம் அமெரிக்கா புறப்பட்டுவிட்டேன் இளைஞர்கள் பழக்கம் வெறும் சந்திப்புதானா? இல்லவே இல்லை. பதவி ஓய்வு பெற்றபின் வெளி உலகத்திலிருந்து தள்ளி இருக்க வேண்டிய நிலை. மாறியிருக்கும் காலத்தை எனக்குக் காட்டியவர்கள் இவர்கள். அதிர்ச்சிகளும் அதிசயங்களும் உணர்ந்தேன். அவர்களும் பாசத்துடன் அம்மா வென்றோ ஆன்டி என்று அழைத்த்னர். பலர் தங்கள் பிரச்சனைகளைக் கூறினர்; முடிந்தமட்டும் தீர்த்து வைத்தேன். இவர்களில் சிலர் அவ்வப்பொழுது வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்வர்.


ராஜா என்றோ வருபவன் இல்லை. வீட்டின் மாடியில் குடியிருப்பவன். ஆசானாய் வந்தவன் நண்பனா னான். பல நாட்கலில் இரவு 12 மணி வரை பேசிக் கொண்டி ருப்போம். நிறைய தமிழ்க் கதைகள் படிப்பான். நல்ல சிந்தனை. எங்களுடைய அலசல்கள் பல கோணங் களில் இருக்கும். வேலையிலிருந்து திரும்பும் ஈஸா முதலில் என்னைப் பார்த்துவிட்டுத்தான் தன் அறைக்குச் செல்வான். என் முகம் வாடியிருந்தால் கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டே செல்வான்.


ஷேக் கொஞ்சம் ஒதுங்கி இருப்பான் ஆனாலும் பாசமுள்ளவன். ஒருநாள் திடீரென்று ஒரு பொட்டலம் கொண்டு வந்து கொடுத்தான். திறந்து பார்த்தால் இரண்டு உளுந்து வடை. அவன் சாப்பிடும் பொழுது ருசியாக இருக்கவும் என் நினைவு வந்ததாம். அதனால் வாங்கி வந்தானாம் .இவர்களில் நயினாதான் வித்தியாசமானவன். அறையைச் சுத்தமாக வைக்கும் வேலைகளை இவன்தான் செய்வான். இன்னும் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. ஆனால் தினமும் காலையில் குளித்துவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் சென்று விடுவான்.


ஒரு நாள் அவனை “எங்கே காலையில் தினமும் போகின்றாய்? ” என்று கேட்டேன். அவன் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன் ; “பாட்டி, தினமும் புரசவாக்கம் பஸ் ஸ்டாண்டிற்குத்தான் போறேன். காலேஜுக்கு அப்பொதான் பொண்ணுங்க வந்து பஸ் ஏறுவாங்க. அவங்கள வேடிக்கை பாக்கத்தான் போறேன் “ நான் சிரித்து கொண்டேன். என் வயதில் மற்றவர்கள் என்ன சொல்லுவர் ? “ஏண்டா ஒழுங்கா வேலை தேடத் தெரியல்லே. இப்படி பொண்ணுங்க பின்னாலே சுத்தினா உருப்புடுவியா? “ இந்த வயது ரசிக்கும் வயது. எதை எதை எப்போ, எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை பெரியவர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டிய காலம்.


நான் மட்டுமல்ல, புனிதமும் மாடிவீட்டுப் பையன்க ளுடன் ஒன்றிப் பழகினார்கள். அந்த அறை சரியான பிரம்மச்சாரி அறை. அங்கே அவர்கள் சி.டி வாங்கி கம்ப்யூட்டரில் போட்டு சினிமாப் பார்ப்பார்கள். சில சமயம் நாங்கள் இருவரும் அங்கு போய் அந்தக் குப்பை மேட்டில் உட்கார்ந்து படம் பார்த்திருக்கின்றோம்.
ராஜா எனக்கு எழுதிய கடிதத்தில் என்னைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்து எழுதியிருந்தான். ஒரு சிறிய பகுதியை மட்டும் இங்கு காட்ட விரும்புகின்றேன் -


“நான் எழுத அமர்ந்துவிட்டேன். .. என்ன எழுதுவது.. ? இதயம் ஆராய்கிறது. முதலில் என் நிலையை நான் தெளிவு படுத்த வேண்டும். இப்போது நான் யார்? ஒரு பாசமிகு பாட்டிக்குப் பேரனா ? ஓர் எழுத்தா ளரின் வாசகனா? விமர்சகனா? ஒரு அறிவுத் தோழியின் தோழனா ? இல்லை ஓர் அறிவுபூர்வ அப்பாவிக்கு ஆலோசகனா ? இல்லை ஒரு மாணவியின் ஆசிரியனா? இல்லை, ஓர் ஆசிரியையின் மாணவனா? முதலில் என் நிலையை நான் தெளிவு படுத்த வேண்டும்! எப்படி இது சாத்தியம் ? இரு உயிர்களுக்கு மத்தியில் இத்தனை உறவுகளுக்கு எப்படி சாத்தியம்? முடிந்ததே , அப்படி இருக்க முடிந்ததே ஒரு பாட்டியாக, ஓர் இலக்கியவாதியாக, விமர்சகராக, மாணவியாக, ஆசிரியராக, ஆலோசகராக, அப்பாவியாக ஒரு பாட்டி. .. , அதிலும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு மூதாட்டி என் வாழ்க்கைப்பயணத்தில் வருவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் வந்தார். அப்படி ஒரு பெண் அத்தனை உறவுகளையும் சுமந்து கொண்டு என் வாழ்வில் வந்தார் “ பாட்டிக்குப் பேரன் எழுதிய கடிதம்.


தலைமுறை இடைவெளி எங்களிடையே நாங்கள் உணரவில்லை. இன்றும் அவன் என் பேரன், என் தோழன், என் ஆசான். ஈசனுக்கு குருவாய் அமரும் சண்முகன் நம் வாழ்க்கையிலும் உண்டு. மாடிவீட்டுப் பையன்கள் அனைவரும் இப்பொழுது துபாயில் வேலை பார்க்கின்றனர். என் ஆசான் என்று குறிப்பிட்ட ராஜாகான் தான் இன்று கீழை ராசா என்ற புனை பெயரில் துபாய் தமிழர்கள் மத்தியில், தமிழ் இலக்கியக் கூட்டங்களில் கவிதை பாடிக்கொண்டு, கதை பேசிக் கொண்டு வலம் வருவதோடு, தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சாருகேசி என்ற வலைப்பூவையும் எழுதி வருகின்றான். நட்புக்கு ஓர் இலக்கணம். சிறந்த சிந்தனையாளன். அண்ணாச்சியின் அன்புத் தம்பி.


என் நினைவில்லத்தில் மணியனும் சாவியும் இருப்பது போல்தான் பெரிய கருப்பனும், ராஜாவும் இருக்கின் றார்கள். அது சாதனையாளர் இல்லம் அன்று; ஓர் அன்புக்குடில்.


பகுதி 18

சென்னையில் கணிணி மூலமாக ஏற்பட்ட இளைஞர்களின் தொடர்பைக் கூட நன்கு திட்டமிட்டு ஆக்க பூர்வ சக்தியாக்கச் செயலாக்கினேன். இன்றும் அவர்கள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின் றார்கள். என் முதுமைத் தோற்றம் அவர்கள் உற்சாகத்தைக் குறைக்க வில்லை. சிறியவர்களோ பெரியவர்களோ யாராயினும் சரி, நம் எண்ணத்தில் நமக்கே தெளிவு வேண்டும். உறுதியும் வேண்டும். எனது இந்த இயல்பிற்கு வித்திட்டது கருப்பட்டி கிராமம் தான்.

ஐம்பது ஆண்டுகளில் இளைய தலைமுறையில் பல மாற்றங்கள்.

கருப்பட்டி கிராமத்தில் இருந்த இளைஞர்களும் கேலியும் கிண்டலும் பேசிக்கொண்டு நண்பர்களுடன் வலம் வந்தார்கள். ஆனால் பெரியவர் களைக் கண்டவுடன் ஒரு மரியாதை தோன்ற அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து வாழும் பெற்றோர்களுடன் வாழ்ந்த வர்கள். ஊரிலும் ஒரு கட்டுப்பாடு. எனவே அந்த அடக்கம் இயல்பாக அமைந்தது. இப்பொழுது சின்னக் குழந்தைகள் உட்பட ஏன், எதற்கு, எப்படி என்று  கேள்விகள் நிறைய கேட்கின்றார்கள். பதில் தெரிந்தாலும் நாம் பதில்கள் கூறுவதில்லை. குழந்தைகள் தானாகப் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றோம். 


என் தங்கையின் பேரன் ராகேஷுக்கு ஆறு வயது இருக்கும். பாட்டி ஆசையாய்ப் பேரனை அணைத்து முத்தமிட்டிருக்கின்றாள். உடனே அவன் “ பாட்டி, முத்தா கொடுக்காதே. புருஷன் பொண்டாட்டிதான் முத்தா கொடுத்துப்பா” என்று கூறவும் இவள் அதிர்ந்து போயிருக்கின்றாள். இதனை அவள் என்னிடம் சொல்லிச் சொல்லிக் குமுறினாள்.


இது அந்தக் குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்தது? குழந்தை தூங்கிவிட்டான் என்று நினைத்து மங்கிய ஒளியில் அப்பா, அம்மா கொஞ்சலைப் பார்த்ததன் விளைவா? அல்லது ஊடகத் தாக்கமா? குழந்தைகளும் இளையவர்கள் மட்டுமா மாறியிருக்கின்றார்கள்!? பெரியவர்களும் தாங்கள் மாறியிருப்பதை உணராமல் இருக்கின்றோம். குழந்தைகள் முன்னால் புருஷன், மனைவி சண்டை . நாமே அவர்களுக்குப் பொய் சொல்லக் கற்றுக்கொடுக்கின்றோம். “அப்பா கிட்டே சொல்லாதே, அப்பா கேட்டா இப்படிச் சொல்லு “ இது அம்மா. “டேய் அம்மா கிட்டே சொல்லதே “ இது அப்பா. நம் நாடகத்தைச் சிறுவர்கள் முன் நடத்துகின் றோம்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் ஹிப்பிகளின்  கலாசாரம் இருந்தது.


கட்டுப்பாடற்ற , சுதந்திரமான வாழ்க்கை. வீட்டை விட்டு சிறு வயதிலேயே பையன்களும் பெண்களும் வெளியே போய்விடுவார்கள். உடை உடுத்துவதிலிருந்து, எல்லாப் பழக்க வழக்கங்களும் நடை முறையில் இருக்கும் பழக்க வழக்கங்களை உடைத்தெறிந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்களையும் மாற்ற ஒரு துறவி அவர்களுடன் பழக ஆரம்பித்தார். சொக்குப் பொடி போடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் நெருங்கினர்.அவர் அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது.துறவி அவர்களிடம் பேச முயன்றார்.

‘ எதற்காக அழைத்தீர்கள்? ’

’ கொஞ்சம் பேசத்தான். எங்களுக்கு புத்திமதி பிடிக்காது. அதற்காகக் கூப்பிடவில்லை. உங்கள்   வாழ்க்கையைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆசை . ‘

’ எதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்? ‘

’  நீங்கள் வித்தியாசமாக இருக்கின்றீர்கள்.காரணம் ஏதாவது உண்டா? ‘

’  ஆமாம், நாங்கள் வித்தியாசமானவர்கள் தான்; எங்களுக்கு மற்றவர்களைப் பிடிக்கவில்லை ‘

’ ஏன்? ’

’ எல்லோரும் போலிகள். எழுதுவது, சொல்லுவது வேறு. நடப்பது வேறு. எதற்கு இந்தப் பொய்கள் ? ‘
  பெரியவர்கள் சொல்வதற்கு மாறாக நடப்பவைகளைப் பட்டியல் போட்டுச் சொல்ல ஆரம்பித்தனர்.

’ நாங்கள் எங்கள் இஷ்டம் போல் இருக்க விரும்பு வோம் . பொய் சொல்லி அல்ல. இப்படித்தான் நாங்கள்  என்று சொல்லி நடக்கின்றோம் ’

பாண்ட் போட்டால் ஒரு கால் நீளம். இன்னொரு கால் குட்டை. உடையைக் கிழித்துவிட்டுக் கொள்வது. ஆணும் பெண்ணும் விலங்குகள் போல் வெளிப்படை யாகப் பழகுவது. எதற்கும் கட்டுப்பாடு கூடாது. மற்றவர்கள் பார்க்கின்றார்களே என்று பார்வைக்குக் கூட மதிப்புக் கொடுக்க விரும்பவில்லை. வீடு வேண்டாம்; வெட்ட வெளி போதும். இதுதான் ஹிப்பிகளின் வாழ்க்கை ! துறவி பொறுமையாக எல்லாம் கேட்டார். பின்னால் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் -

’ உங்களுக்குத் தலைவலி, உடல்வலி வருமா ? ’

’வரும் ’

’உங்கள் இஷ்டம் போல் இருங்கள். வலி வராமல் இருக்க வழி சொல்லிக் கொடுத்தால் கேட்பீர்களா ? இந்த வலி போனால் இன்னும் ஜாலியாக இருக்கலாமே ’

ஹிப்பிகளின் மனத்தைத் தொட்ட வார்த்தைகள்.

’குடிப்பது, போதை மருந்து சாப்பிடுவது, கட்டுப்பாடற்ற வாழ்க்கையினால் வரும் வலிகள் போனால் இன்னும் சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவிக்கலாமே! ’

’ ஏதாவது மருந்து இருக்கா? ’

’ மருந்து இல்லை ஒரு நாளைக்கு ஒரு முறை கொஞ்ச நாட்கள் வாங்க. நான் சொல்றதைச் செய்யுங்க. வலி போய்விடும் .’

’ தினமும் பள்ளிக்கூடம் வர்ரமாதிரி வர எங்களுக்குப் பிடிக்காது ’

’ உங்கள் இஷ்டம்போல் எந்த நேரத்தில் வந்தாலும் சரி. ஆனால் தினமும் வர வேண்டும். உங்கள் உடம்பைச்  சரியாக்கத்தானே வரச் சொல்றேன் .’

’ கூப்பிட்டு லெக்சர் அடிக்க மாட்டிங்களே. பெரியவங்க லெக்சர் கேட்டு கேட்டு அலுத்துப் போச்சு; ’

’ லெக்சர் கிடையாது. கொஞ்ச நேரம் மட்டும் வந்துட்டுப் போங்க. அப்புறம் உங்க இஷடம் போல் போய் வாழுங்க’

துறவியின் பேச்சு வென்றது. முதலில் ஒழுங்கற்று வந்தார்கள்; ஆனால் தினமும் வந்தார்கள். அவர்க ளுக்குத் தினமும் சில பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன. சில நாட்களில் சிறிது குணம் தெரிந்தது.


அப்பொழுது துறவி மீண்டும் பேசினார் – ’ தினமும் வருவதில் கொஞ்சம் வலி போக ஆரம்பித்தி ருக்கின்றது. இனிக் கொஞ்சம் குறித்த நேரத்தில் வரப் பார்க்கவும். கட்டாயம் இல்லை. குறித்த நேரத்தில் பயிற்சி செய்தால் இன்னும் குணமாகலாம் ‘


குறித்த நேரத்தில் வர ஆரம்பித்தார்கள்; ஹிப்பிகளுக்கு அந்தத் துறவியைப் பிடித்திருந்தது. அவர் புத்திமதி எதுவும் கூறவில்லை. அவர்களுடன் அரட்டை யடித்தார். கொடுக்கும் பயிற்சியும் அவர்கள் உடலுக்கு நல்லதே செய்தது. விட்டுப் போன கட்டுப்பாடுகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மீள ஆரம்பித்தனர். பின்னர் சில மாதங்களில் அவர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தனர். அமெரிக்க அரசுக்கு துறவியின் செயல்பாடுகள் வியப்பையும் மகிழ்வையும் கொடுத்தது. துறவியைச் சிறப்புச் செய்தது.


ஹிப்பி கலாசாரம் போய்விட்டது. ஆனால் பள்ளிப் படிப்பு முடியவும் வீட்டிலிருந்து வெளியில் சென்று வாழும் பழக்கம் இருக்கின்றது. 18 வயது இரண்டுங் கெட்டான் வயது. அனுபவங்கள் வேண்டும் என்று பெற்றவரும் சொல்கின்றனர் ; பிள்ளையும் சொல்கின்றான். சட்டம் மட்டும் அன்று, வாழும் முறையிலும் 18ல் சுந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.


அந்தத் துறவி இந்தியாவிலிருந்து போனவர் ,
அவர்தான் ’ ஸ்ரீ சுவாமி சச்சிதானந்த சுவாமிகள் ‘
உயர்திரு பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மதிப்பையும் ஆதரவையும் பெற்றவர். துறவியின் ஆன்மீகப் பணிகளுக்கு உதவி செய்தார். நடிகர் ரஜனிகாந்தின் பெரு மதிப்பைப் பெற்ற குருநாதர் சுவாமிஜி.


ஹிப்பியின் கதை அவரே சொல்லக் கேட்டேன். சென்னையில் பகீரதன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிருபர்கள் கூட்டத்தில் ஸ்வாமிஜியே எல்லாம் கூறினார். அப்பொழுது ஹிப்பிகளின் பிரச்சனை உலக மெங்கும் செய்தியாக இருந்த காலம். ஸ்வாமிஜியுடன் சில அமெரிக்க ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர். அவர்கள் ஹிப்பிகளாக இருந்து இப்பொழுது ஸ்வாமிஜியின் சீடர்களாக மாறியிருந்தனர். அவர்களும் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறினார்கள்.


அமெரிக்காவில் சுவாமிஜி நிறுவிய அமைப்பின் பெயர் Integral Yoga Institute. இன்று இது பல கிளைகளுடன் செயலாற்றி வருகின்றது .


இன்று அமெரிக்காவில் யோகா வகுப்புகளுக்குச் செல்வோர் அதிகம். பலர் வெவ்வேறு பெயர்களில் யோகா பயிற்சி அளித்து வருகின்றனர். மருத்துவ ரீதியிலும், யோகாவும் தியானமும் மன அழுத்தத்தைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறைவதாகச் சொல்கின்றனர். மதுவோ, தூக்க மாத்திரையோ இல்லாமல் தூங்க முடிகிறது என்கின்றார்கள்; அந்த அளவு விழிப்புணர்வு காணப்படுகின்றது. இந்தியக் கலாசாரத்தின் வேர்கள் ஆழமாக வேரூன்றி இருப்பதால் இந்த நிலை இன்னும் நம்மிடை வரவில்லை. ஆனாலும் அதன் நிழல் வர ஆரம்பித்துவிட்டது.


மாறிவரும் காலத்தைப் புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து தத்தம் குறைகளைக் களைய முயல வேண்டும். பிரச்சனைகள் எல்லா வயதினருக்கும் இருக்கின்றது. விழிப்புடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். நம்மிடம் மெத்தனம் அதிகமாக இருக்கின்றது. இழப்பு வரவிட்டு அழுது பயனில்லை.

வரும் முன் காப்போம்


பகுதி 19

சின்னச் சின்ன செய்திகள், நான் ரசித்தவை, இன்றும் நினைவிற்கு வருபவை ,அண்டைப் பக்கம் செய்திகள், அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை இவைகளை விடுத்தால் என் வாடிப்பட்டி வாழ்க்கை முழுமையாகக் காட்டப்பட்டது என்று சொல்ல முடியாது


அப்படியென்ன வாடிப்பட்டி முக்கியம்? சமூகக் கல்வி அமைப்பாளராக நான் பணியாற்றிய ஐந்தரை ஆண்டுகளில் வாடிப்பட்டியில் நான் இருந்தது ஐந்து ஆண்டுகள். என் வளர்ச்சிக்கு வித்திட்ட ஜன்ம பூமி. நான் செல்ல வேண்டிய பாதைக்கு என்னைத் தயார்ப்படுத்தி அனுப்பிய பட்டிக்காடு. இதன் பின் மாவட்ட அளவில் அதிகாரியாகிப் பறக்க ஆரம்பித்து விடுவேன். எனவே வீட்டுக்குள் நுழைந்து பார்ப்பதையும் விடாமல், ஒன்றிரண்டு காட்சிகளையாவது சொல்லி வருகின்றேன். பின்னர் என் பயணம் பல திக்குகளில் போக வேண்டியுள்ளது. நான் நடிகையானதும் இங்குதான்; எழுத்துலகில் நுழைந்ததும் இங்குதான்; பத்திரிகையுலகின் நட்பும் அரசியல் உலகின் நெருக்கமும் இங்குதான் ஆரம்பம்.


வாடிப்பட்டியில் இருக்கும் பொழுது தமிழ்நாடு அரசிலும் இரு மாற்றங்கள் தோன்றின. பஞ்சாயத் ராஜ் திட்டம் தோன்றி, பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் நிர்வாக முறை வந்தது. மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், மூன்று அமைப்புகள் மூலமாக நடந்து வந்தன. மகளிர் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறையில் மகளிர் நலம், சமூக நல வாரியம் ஆகிய மூன்றையும் இணைத்து மகளிர் நலத்துறையானதும் வாடிப் பட்டியில் பணியாற்றிய பொழுதுதான் நடந்தது. எனவே வாடிப்பட்டிப் பணிக்காலம் முக்கியமானது. பல கோணங்களில் செல்ல வேண்டி இருக்கின்றது. ஒப்பு நோக்குதலும் தேவையாக இருக்கின்றது. சில காட்சிகளை மட்டும் காட்டிவிட்டு என் நாடக உலகம் நோக்கி உங்களை அழைத்துச் செல்ல விரும்புகின்றேன் .

அலங்கா நல்லூர்

இந்தபெயரைக் கேட்டவுடன் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டுதான் .
வாடிப்பட்டிக்கு அருகில் உள்ள ஊர். நானும் ஜல்லிக் கட்டுப் பார்க்கப் போனேன்; பேசத் தெரியாத மாடு, நன்றாக உண்டு கொழுத்த மாடு. கொம்பு சீவி ஜல்லிக்கட்டுக்கு என்றே வளர்க்கப்பட்ட மாடு. சின்ன வாயில் வழியாக வெளியில் வரும் பொழுது தன் மேல் பாய வரும் மனிதக் கூட்டத்தைக் கண்டு வெருள்கின்றது. அச்சத்தில் எதிர் வருகின்றவர்களை முட்டித் தள்ளுகின்றது. இந்த விளையாட்டை நுணுக்கமாகப் பார்த்தேன். முன்னால் செல்லக் கூடாது. லாகவம் புரிந்தவன் பக்கவாட்டில் சென்று அதன் திமிலைப் பிடித்துப் பின் மாட்டை அணைத்துக் கொள்ள வேண்டும். இங்கே கட்டிப்புடி முறை உதவுகின்றது. அவனுடைய அழுத்தமான அரவணைப்பில் தனக்குத் தீங்கில்லை என்று நினைத்த மாடு அவன் தழுவலில் அடங்கிப் போகின்றது. .

தாம்பத்தியத்தில் ஆண் மறந்துவிடும் ஒரு செயல். ஆரம்பகாலத்தில் காட்டும் ஆர்வமும், துடிப்பும் பின்னால் இருப்பதில்லை. குழந்தை எப்படித் தாயின் அரவணைப்பில் சுகம் காண்கின்றதோ, மனைவி கணவனின் அரவணைப்பில் அமைதி காண்கின்றாள். எத்தனை பிரச்சனைகள் வரினும் இந்த ஒரு செயலில் அவள் மனம் சமாதானம் அடைந்துவிடும். ‘கட்டி புடி வைத்தியம்’ என்று கமல் படத்தில் கூறிய பொழுது அதை நகைச்சுவையாக நினைத்துச் சிரித்தோம். ஆனால் அது வாழ்க்கையில் சாதிக்கும் சக்தி அதிகம். அன்புடன் அணைத்தால் எதிரியும் வசமாவான் .

எனக்குச் சிலம்பாட்டம் பிடிக்கும். கம்பைச் சுழற்ற வேண்டிய முறையில் சுழற்றினால் ஒரு சிறு கல் வீசினாலும் அது அவன் மேலே விழாமல் தடுத்துவிடும். உலகம் தோன்றிய நாள் முதலாய் மனிதன் தன்னைப் பாதுக்காக்க எத்தனை வழிகள், எத்தனை ஆயுதங்கள் கண்டுபிடித்துள்ளான் !

விளாம்பட்டி என்ற கிராமத்தில் மணி என்பவரின் வீட்டிற்குச் சென்றேன். ஏற்கனவே அவ்வூர் கிராம நல உழியர் என் ஆர்வங்களைப் பற்றி மணியிடம் கூறியிருந்ததால் அவர் ஓர் அறைக்குக் கூட்டிச் சென்றார் . அப்பப்பா, அது ஓர் ஆயுதக் கிடங்கு போல் ஒரு மூலையில் என்னவெல்லாமோ வைக்கப் பட்டிருந்தன.
முள் வார். பத்தடிக்கு மேல் நீளம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அதைச் சுழற்றினால் யாரும் அருகில் செல்ல முடியாது. தாக்க வருபவனைச் சுழற்றி அடித்தால் அவன் உடம்பின் சதை பிய்ந்து இரத்தம் கொட்டும். அடுத்து சுருள் கத்தி. அதுவும் நீளமானது. கூர்மையானது. பாம்பைப் போல் நெளிய வல்லது. அந்தக் கத்தியைச் சுழற்றினால் எதிரியைத் தாக்குவதோடின்றி , அவன் உடல் பாகங்களே வெட்டுண்டு விழும்.  கைத்தடிகூட ஓர் ஆயுதம். பிடியைக் கழற்றினால் கத்தி சேர்ந்து வரும். எதிரியைக் குத்துவதும் சுலபம். பார்த்தவைகளை எடுத்து மணி அவர்கள் சொன்னது போல் செய்து பார்த்தேன். தூக்கவே கஷ்டமாக இருந்தது. கைத்தடி பரவாயில்லை என்ன ஒரு மாதிரியாகப் பார்க்கின் றீர்கள் . நான் வித்தியாசமானவள்தான்.பின்னால் கொசுவம் வைத்து, தலை முடியைத் தூக்கிச் செருகி நின்றால் பார்ப்பவர் என்னை மதுரைக்கார மறத்தி என்று சொல்லுவார்கள். சொல்லிக் கொண்டே போகலாம். கோயில் சிற்பங்களையும் பார்த்து ரசிப்பேன்;  இப்படி ஆயுதங்களையும் பார்ப்பேன். என் குணம் “தேடல்”

நான் எங்கு சென்றாலும் எதையாவது கூர்ந்து பார்ப்பேன். மனிதர்களைப் படிப்பதும் பிடிக்கும். என் பணி என் தேடல் குணத்திற்குத் தீனி போட்டது. என் பணிக்களம் பல வாய்ப்புகளைத் தானே கொடுத்தது.
அண்டை வீட்டுச் செய்தி. அதாவது அருகில் அமைந்திருந்த வத்தலக் குண்டு வட்டாரத்துச் செய்தி. ஏன் அதைக் கூற நினைத்தேன் என்றால்  அங்கே நடந்த சிறப்புப் பணி எங்கள் வட்டாரத்தில் இல்லை.
நாம் அடிமையாக இருந்த காலத்தில் உதயமான காங்கிரஸ், அரசியல் கட்சி இல்லை. அது ஓர் இயக்கம். சுதந்திரம் பெற எல்லோரும் கூடிச்  செய்த இயக்கம்.. இயக்கத்தில்தான் வேகம் வரும். ஒன்றிய மனமும்,
சுயநலமற்ற குணமும், இருப்பதையெல்லாம் கொடுக்கும் தன்மையும் சேரச் சேர இயக்கத்தின் வலு கூடும். சுதந்திரம் கிடைக்கவும் காங்கிரஸ் பெயரை மாற்றச் சொன்னார் காந்திஜி. ஆனால் இயக்கம் அரசியல் கட்சியானது. அரசியல் களம் குருஷேத்திர சண்டை நிகழும் இடத்தை ஒத்தது. மனித மனங்கள் மாறிவிடும்

பின்னர் சர்வோதயா இயக்கம் வலுப் பெற ஆரம்பித்தது. ஏழைகளின் துயர் துடைக்கத் துடித்தது. நிலமற்றவனுக்கு, இருப்பவன் நிலம் கொடுக்க வேண்டும். அதற்குப் பெயர் பூமிதானம். ஒரு கிராமத்தில் அதிகமான நிலங்கள் ஏழைகளுக்குச் சொந்தமானால், அதாவது செல்வந்தன் உரிமையை விட்டுக் கொடுத்தால் அந்தக் கிராமம் ’கிராம்தான்’ ஆகிவிடும். கூட்டுறவு முறையில் எல்லாப் பணிகளும்
செய்தல் வேண்டும்.

வினோபாஜி அவர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இயக்கத்திற்கு வலுவூட்டினார். அவருடன் இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களை மறக்க முடியாது. யாராலும் அசைக்க முடியாது என்று கூறிவந்த காங்கிரஸ் அரசை மத்தியில் மாற்றவைத்தது அவருடைய இயக்கம். . சில நேரங்களில் சக்தி வாய்ந்த இயக்கங்கள் ஆலமரமாய் இருப்பவரையும் சாய்த்துவிடும்.

சமுதாயத்தில் வேரோடியிருந்த சாதிப் பிணியைத் தொட்டுக்காட்டி சுரணை ஏற்படுத்திய வெண்தாடிக் கிழவரின் அடிபற்றி தொடர்ந்தார் ஓர் அண்ணா .அந்த எழுச்சியும் , விழிப்புணர்வு மிக்க ஊடகமான திரையு லகப் பங்கீடும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது. இன்று வரை திராவிடக் கட்சிகளுக்கு முன்னால் எழுந்திருக்கமுடியாத நிலை, நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பெரியகட்சியின் நிலை
விவசாயச் சங்கத் தலைவராக வந்தார் நாராயணசாமி நாயுடு அவர்கள். அதுவும் ஓர் இயக்கம்.


விவசாயிகளில் ஒட்டு மொத்த உணர்வுகளின் கூட்டம். எந்தக் கட்சியாக இருந்தாலும் விவசாயி என்ற ஒரு குடைக்குள் அணிவகுத்து விட்டனர். . பதவியிலிருந்து கீழ் இறக்கிய காங்கிரஸ் கட்சி, பழி சுமத்தப்பட்ட கட்சியுடன் கூட்டு சேர்ந்த சமயத்தில் மக்கள் திலகமான எம்.ஜி. ஆர் அவர்கள் பாராளு மன்றத் தேர்தலில் தோற்றார். ஆனால் தன் தோல்விக்குக் காரணம் யார் என்பதைத் துல்லியமாக உணர்ந்தார். அவர் உடனே நடவடிக்கை எடுத்தார். அவருக்கும் நாராயணசாமிக்கும் உடன்படிக்கை
ஏற்பட்டது. அதனால் சட்டசபை தேர்தலில் வென்றார்

நாட்டு நடப்பைப் புரிந்துகொள்ள நாம் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை நாட்டுப் பற்று இருந்தால் போதும். நடு நிலையுடன் பார்த்தால் உண்மைகளைப் புரிந்து கொள்வது கடினமல்ல.
சர்வோதயா இயக்கத்தில் வத்தலக் குண்டு வட்டாரம் பங்கேற்றது. அங்கே பூமிதானங்களும், கிராம தானங்களும் நடந்தன. அங்கு பொறுப்பேற்றுக் கொண்டவர்கள். ஜகன்னாத அண்ணாவும் , கிருஷ்ணம்மா அக்காவும்தான். அப்படித்தான் அவர்கள் இருவரையும் எல்லோரும் அப்பொழுது அழைத்து வந்தோம்.
வத்தலக்குண்டு வட்டாரத்தில் அமைப்பாளராக வேலை பார்த்தவள் என் அருமைத் தோழி கஸ்தூரி. அழகிய கண்கள், அமைதிப் புன்னகை.  அவள் ஓர் அனாதைப் பெண்ணாக இருந்தாள். அந்தச் சின்னஞ்சிறு குழந்தையை எடுத்து வளர்த்து, படிக்க வைத்து, மாப்பிள்ளையும் பார்த்து மணமுடித்துக் கொடுத்து அவளை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தது காந்தி கிராம ஸ்தாபகர் டாக்டர் சவுந்திரம் ராமச்சந்திரன். கஸ்தூரியைப் போல் பல பெண்களுக்கு வாழ்வளித்தவர். அன்றிருந்த காந்தி கிராமத்தை நாங்கள் யாரும் மறக்க மாட்டோம்.

கஸ்தூரியால்தான் அண்ணாவையும் அக்காவையும் அறியும் வாய்ப்புக் கிடைத்தது. நான் வேறு வட்டாரத்தில் இருந்ததால் அதிகம் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் சில முறை கஸ்தூரியின் அழைப்பின்பேரில் அக்காவுடன் கிராமங்களுக்குச் சென்றிருக்கின்றேன். அந்த வட்டாரத்தில் இன்னொரு சிறப்புண்டு. சமூக நல வாரியத்தின் கீழ் இயங்கும் ஒரு மையம் இருந்தது. அதன் கிளைகள் சில கிராமங் களில் இருந்தன. அந்த மாதர் சங்க உறுப்பினர்களைத் தன் இயக்கத் துடன் இணைத்துப் பணியாற்றினார் அக்கா.

திரு. ஜகன்னாதன், அவர் மனைவி திருமதி. கிருஷ்ணம்மாள் இருவரும் எளிமையாக உடை உடுத்தி கிராமங்களில் எத்தனை தூரமாயினும் நடந்து பணியாற்றியதை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் அந்த இயக்கத்தின் தொண்டர்கள். அது அரசியல் இயக்கமன்று. அரசியல் ஆடம்பரத்திற்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளாத புனித ஆத்மாக்கள். இன்றும் கிருஷ்ணம்மா அக்கா அதே எளிமையான தோற்றத்தில் காண்பது அந்த இயக்கத்தின் வலிமையைக் காட்டுகின்றது.


புகழுக்காகவும், பணத்திற்காகவும் செய்வதன்று சமுதாயப் பணி. ஆத்மார்த்தமாகச் செய்யவேண்டும்.


பகுதி -20


அரசியல் உலகம் பார்க்கப் போகின்றோம். அரசியல் வாதிகள் ,அரசுப் பணியாளர்கள் இருவரும் மக்களுக்காக, மக்கள் நலப் பணிக்காக இருப்பவர்கள். இந்த இரண்டும் சீராக இருந்தால் நிர்வாகமும் சீராக இருக்கும். நம் அமைப்பு இரட்டை மாட்டு வண்டி கூட இல்லை. மூன்று மாடுகள் இழுத்துப் போகும் வண்டி.  மக்கள் தங்கள் பொறுப்பை மறந்து புழுதிவாரி கொட்டக் கூடாது. ஓர் அரசியல் பிரமுகருடன் நடந்த உரையாடல் இது கற்பனையன்று; நிஜம்

ஏன் லஞ்சம் வாங்குகின்றீர்கள்?

லஞ்சம் என்று ஏன் சொல்லுகின்றீர்கள். வக்கீலுக்கு கொடுக்கும் பீஸ் மாதிரி இது. அவன் அவசரத்துக்கு, தேவைக்கு குறுக்கு வழியில் போகணும்னு நினைக்கறான். எங்க கிட்டே வரான் நாங்க செய்து கொடுக்கற வேலைக்கு பீஸ் வாங்கறோம்.

அவசரம், முறையற்ற கோரிக்கைகள் - இந்த புத்தி; எப்படியும் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் ஆரம்பித்து வைத்தது லஞ்சம். எத்தனை நாட்கள் வெறும் பார்வையாளனாக இருப்பது, அரசாங்கப் பணியாளனாக இருந்தாலும் அவனும் மனிதன். அவனும் குறுக்குவழிப் பணத்திற்கு ஆசைப் பட ஆரம்பித்துவிட்டான்

ஆண்டவனுக்கே லஞ்சம் கொடுக்கின்றோம். நம் பாவங்களுக்குக் கூட்டாளியாக்குகின்றோம். “எனக்கு செய்து கொடு. உன் கோயிலுக்கு வரேன். உன் உண்டியல்லே பணம் போடறேன்” கடவுள் எல்லா வற்றையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றான் .

சுதந்திரம் கிடைத்த பின் பஞ்சாயத்து ராஜ் வந்தது. கிராம அளவு மக்கள் ஆட்சி. அப்பொழுது கட்சியைவிட மக்களுக்கு நம்பிக்கை யாரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். பஞ்சாயத்து தலைவர்கள் பஞ்சாயத்து சேர்மனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் அரசும் அரசியலும் கைகோத்து மக்களுக்கு சேவை செய்தது. ஒரு குடும்பமாக இயங்கியது..

வாடிப்பட்டியின் முதல் சேர்மனாக வந்தவர் திரு. பாலகுருவா ரெட்டியார். நல்லவர், அன்புள்ளம் கொண்டவர். எங்கள் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். இவர் பின்னால் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் அவர்கள் முதல்வராக இருக்கும் பொழுது சுற்றுலா சேர்மனாக ஆனார். எம். ஜி. ஆர் அவர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். எந்தப் பதவியில் இருந்தாலும் அதே அன்புள்ளத்துடன் அனைவரிடமும் பழகினார்.

எங்கள் வட்டாரத்திற்குப் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு முறை வந்தார். என்ன சுறுசுறுப்பு! கம்பீரமான தோற்றம் ! அவர் மேடையில் பேச எழுந்த பொழுது மைக் சரியாக இல்லாமல் விழ இருந்தது. உடனே அவருக்குக் கோபம், திட்டிக் கொண்டே, மைக்கைக் கவனிக்க வேண்டியவன் வருகைக்குக் காத்திராமல் அவரே சீர் செய்தார். அதனை நான் ரசித்தேன். ஒரு தந்தையின் கோபம்.

எங்கள் மாவட்டத்திலும் ஒரு காந்திஜி இருந்தார். அவர்தான் திரு கக்கன் அவர்கள். கக்கன்ஜீ என்று மரியாதையாகக் கூறுவோம். மனிதர்களைக் கூறும் பொழுதும், திட்டங்களைக் கூறும் பொழுதும். டில்லி ஹிந்தி ஒட்டிக் கொண்டி ருக்கும். எளிமையும் இனிமையும் ஒருங்கே நிறைந்தவர். விழாவிற்கு என்று வந்தாலும் கனிவுடன் “நல்லா இருக்கீங்களா ? “என்று விசாரிப்பார்; ‘ வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை கள் ஏதாவது உண்டா ?’ என்று கேட்பார். பிரச்சனை களை உண்டு பண்ணுகிறவர் மத்தியில் இப்படி ஒருவர் ஆட்டோவில் வந்தவன் இன்று கார், பங்களாவுடன் சொகுசாக வாழ்கின்றான். ஆனால் கக்கன்ஜி அவர்கள் கடைசி வரையில் தன் நிலை மாறாது வாழ்ந்தார் .

நேர்மையுடன் வாழ்கின்றவர்களை மேடையில் புகழ்வோம். ஆனால் கீழே இறங்கியவுடன் அவனை ஏளனமாகப் பார்த்து ,”பிழைக்கத் தெரியாதவன்” என்று கேலி பேசுவோம். கக்கன்ஜி அவர்கள் அடுத்தவன் பணத்தில் தன்னை வளர்த்துக் கொள்ளாத குணக்குன்று.

அரட்டைக் குழு இளைஞர்களில் ஒருவன் கூறியது; “படிப்பு முடியவும் நான் அரசியலில் சேர்ந்துவிடுவேன். சீக்கிரம் பணம் சேர்க்கலாம். மத்த வங்களை மிரட்டலாம். நம்மைக் கண்டா பயப்படுவாங்க. எதுக்காக ஒருத்தன் கிட்டே வேலை பார்க்கணும்.” அவன் பொறியியல் கல்வி கற்கும் மாணவன் .

வன்முறை வாழ்க்கையில் கவர்ச்சி. உழைக்காமல் மிரட்டியே இலகுவாகச் சம்பாதிக்கலாம். அடுத்தவர்க்கு அச்சம் தரும் வாழ்க்கை யினை நோக்கி இளம் உள்ளங்கள் நகர ஆரம்பித்தி ருக்கின்றன. படித்து முடித்துவிட்டுத் தானே வேலைக்குப் போக முடியும். எதற்குக் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்? மாற்றம் இளைஞர்களிடம் மட்டுமா ?

பெண்ணை அடக்கமாய் வைத்துப் பாதுகாத்த நிலை மாறி திறந்தவெளி அரங்கில் உலாவ விட்டு, சொகுசு வாழ்க்கைக்கு நப்பாசைப் படும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கூட ஆரம்பித்திருக்கின்றது.

தன் வீட்டுக் கதவைத் தட்டி, தீமைகள் உள்ளே நுழையும் வரை மனிதன் மெத்தனமாக இருகின்றானே! நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்? “நெஞ்சு பொறுக்குதில்லையே “ என்று கத்தத் தோன்றுகின்றது .அப்பொழுது அரசியல் மிரட்டவில்லை. காந்திஜியின் உண்ணாவிரத சக்தி அப்பொழுது செத்துப் போக வில்லை. களத்திற்குப் போவோம். அமைச்சர்கள் வரும் விழாவிற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பு எங்களுடையது. விழா மேடைக்கருகில் இருந்து கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மந்திரி வர நேரமானால் நான் மேடையேறிப் பாடத் தொடங்கி விடுவேன். கே.பி. சுந்தராம்பாள், டி. எம். சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இவர்கள் பாடிய பாடல்களைப் பாடுவேன். இன்னும் நேரமாகும் என்று தெரிந்தால் கதா காலட்சேபம் செய்ய ஆரம்பித்து விடுவேன். கிராமங்களில் என்னால் நெருக்கமாக இருக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் என் பாட்டும் பேச்சும் தான். இசையில் மயங்காதோர் உண்டோ?!

இன்னொரு புது அனுபவமும் கிடைத்தது. நிலக் கோட்டை சட்டமன்ற உறுப்பினாரக இருந்த ஏ.ஸ். பொன்னம்மாள் அவர்கள்தான், நான் வாடிப்பட்டியில் இருக்கும் பொழுதுதான் முதல் முறையாகத் தேர்தலில் நின்று ஜயித்தார்கள் அன்று அவர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? அடக்கம், சாந்தம், பேசக் கூடத் தயக்கம், பெண்மையின் நளினம் எல்லாம் கொண்ட பெண். எனக்கு அக்காவானார்கள். இப்பொழுது அவர்கள் தோற்றமே வேறு. அனுபவத் தீயில் உருக்கியெடுத்த உரத்த பெண்மணி. எனக்கு நேரம் வாய்த்த பொழுது அவருடன் நிலக் கோட்டைக்குப் போயிருக்கின்றேன்.


அக்கால அரசியல் மேடை. நாங்கள் அங்கே போகவும் ஒரு காகிதம் கொடுத்தார்கள். முன் வாரத்தில் வந்து போயிருந்த எதிர்க் கட்சியின் மேடையில் விரித்த குற்றச்சாட்டுப் பட்டியல். அதற்கு இப்பொழுது இவர்கள் பதில்கள் கூறவேண்டும் . நாங்கள் இருவரும் உட்கார்ந்து கேள்விகளுக்குப் பதில்கள் தயாரித்தோம். இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. கேள்விகள்கூட சிந்தித்துப் பேச வேண்டாம் வசை மாரிக்கு எதற்கு மூளையைச் சிரமப்படுத்த வேண்டும்?

அரசியல் பேச்சுக்கு உண்மைகள் தேவையில்லை. உரத்த குரல் போதும். கொச்சைப் பேச்சுக்களால் மனத்தின் இச்சையைத் தீர்க்கும் களம். அதிலும் பெண் அரசியலில் இருந்தால் ஆண்களுக்குப் பேசக் காவியமே கிடைத்து விடும். இந்தியாவில் எந்த பெண் அரசியல் வாதியைப் பேசாமல் இருந்திருக் கின்றாகள்.?! மக்களுக்கு என்ன செய்யப் போகின்றோம் என்று கூறுவதைவிட , நிந்தைக் கச்சேரிகள் தான் அதிகம் .

சில இடங்கள் போய்ப் பார்த்ததிலேயே அரசியல் களத்திற்கு நான் பொருந்தாதவள் என்பதைப் புரிந்து கொண்டேன். என்னைப்போன்று வெளிப்படையாகப் பேசுகின்றவர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை ;
அரசியல் பாடத்திற்கு வித்திட்டதும் வாடிப்பட்டி வாழ்க்கையே. பிற்காலத்தில் அரசியல் புதைகுழி என்னை இழுத்த பொழுதும் தப்பும் அளவு மனத்திடத்திற்கு உரமிட்டது வாடிப்பட்டி அனுபவங்கள்
தான். என் பயணத்துடன் வரப்போகின்றவர்கள் என் இந்தக் கூற்றைப் புரிந்து கொள்வார்கள்.

ஏ. எஸ் .பொன்னம்மாள் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். எனக்கு ஒரு ராசி உண்டு. அதுவும் வாடிப்பட்டியி
லிருந்துதான் ஆரம்பம். தலித் வகுப்பிலிருந்து வந்த அரசியல்வாதிகள் பலர் எனக்கு நல்ல நண்பர்களாயிருந்தனர். பொன்னம்மாள் அக்கா என்னை மறக்கவே இல்லை.

என் நாடக உலகிற்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். விழிப்பு ணர்வு ஏற்படுத்த நாடகக் கலை பெரிதும் உதவியது.மதுரை மாவட்டத்தில் எங்கள் செட் தான் புகழ் வாய்ந்தது. “வாடிப்பட்டி செட் “ என்ற முத்திரை குத்தப்பட்டது. நாடகத்தில் நான் நடித்ததால் பலர் மனத்தில் இடம் பெற்றேன். சில சோதனைகள் வரினும் , இதனால் எனக்குக் கிடைத்த பயன்கள் அதிகம் என்பதை ஒப்புக் கொள்கின்றேன். இன்றும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிக்க விரும்புவேன்.


கிழவிக்கு என்ன பாத்திரம் என்று சிரிப்பு வருகின்றதா? குமுதத்தில் வந்த சீதாப்பாட்டி சிரிக்க வைக்க வில்லையா? எவ்வளவு ஆசை பாருங்கள் ? இந்த ஆசை இருந்தததால்தான் கொஞ்சம் கூட அச்சமின்றி ,சென்னை கலைவாணர் அரங்கில் , கலைஞர் முன்னிலையில் நான் நடித்தேன். என் நண்பர் சாவியும் வந்திருந்தார். அப்பொழுதும் என் வயது 41. அந்த நாடகத்தின் நாயகியே நான்தான்.

எங்கள் நாடகத்தின் சிறப்புக்குக் காரணமானவரின் பெயர் சோம மகாதேவன். பத்திரிகைளில் வேலை பார்த்தவர். ஏறத்தாழ 400 சிறு கதைகள் வெளிவந்தி ருக்கும். மண்வாசனை வீசக் கதை எழுதியவர் சோம மகாதேவன். நாடகக்கம்பெனிகளில் சேர்ந்து பல மேடைகளில் தோன்றி யவர். வயதான காலத்தில் அரசு அவருக்குக் கிராம நல ஊழியர் பணி கொடுத்தது. சிறப்புத் தகுதிகள் உள்ளவர்களுக்கு வயதிலும் கல்வியிலும் சலுகை உண்டு. அப்படி அவர் திறமையால் வேலைக்கு வந்தவர். அவர்தான் எங்கள் நாடக மாஸ்டர். சொல்ல நிறைய இருக்கின்றது .


பகுதி 21

நாடக அனுபவங்களை நினைத்துப் பார்க்கின்றேன் ; கல்லூரி நாட்களில் நான் பங்கு கொண்ட நாடகம் இரண்டு. ஓரங்க நாடகங்கள். ஒன்று கண்ணகி வழக்குரைத்த காட்சி. இன்னொன்று வீரத்தாய். இரண்டிற்கும் வசனம் எழுதியதுடன், கண்ணகி யாகவும், வீரத்தாயாகவும் நடித்தேன். மேடை நாடகங்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படியே பாத்திரத்துடன் ஒன்றிப் போய்விடுவேன்.

வாடிப்பட்டியில் நான் நடித்த நாடகத்தின் பெயர் மனமாற்றம். சாதாரணக்கதை ஆனால் அர்த்தமுள்ள வசனங்கள். விழிப்புணர்விற்காக எழுதப் பட்டவை. பார்க்கும் பொழுது அது பிரச்சார நாடகமாகத் தோன்றாது. அந்த அளவில் சோம மகாதேவன் வசனங்களைக் கவனுத்துடன் எழுதுவார்.

கதைச் சுருக்கம்

ஒரு பண்ணையார். பணத்தாசை பிடித்தவர். இரக்க மற்றவர். அவரால் கிராமத்தில் பாதிக்கப் பட்டவர்கள் நிறைய. அவருக்கு ஒரு தம்பி; அவன் மனித நேய மிக்கவன்; ஊருக்கு நல்லது செய்கின்றவன். நல்ல திற்கும் கெட்டதிற்கும் இடையில் நடக்கும் போராட் டங்கள். பண்னையாரின் மனைவி இறந்து பல வருடங்கள் தனியாக வாழ்ந்து வந்தவர், பின்னர் வயதில் சின்னப் பெண் ஒருத்தியை மணந்து
கொண்டார். அவள் நல்ல குணவதி. போராட்ட அலைகளில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகின்றது. பண்னையார் திருந்துகின்றார். அவருடைய இளைய மனைவியாய் நடித்தேன்.


நாடகம் தொடங்கும் முன் ஒரு நடனம் ஆடுவேன். அது நாடகத்துடன் சம்பந்தமில்லாதது . உத்தமபுத்திரனில் பத்மினி ஆடிய “காத்திருப்பான் கமலக் கண்ணன் “ ஆட்டம் நான் ஆடுவேன். அக்காலத்தில் கிராம போன் கிராமங்களில் இருக்கும். எனவே ரிகார்டு வாங்கி, ஒலிக்கச் செய்து ஆடுவேன். உடனே ரிகார்டு டான்சரா என்ற நையாயாண்டிச் சிரிப்பா? ரிகார்டு டான்சர் என்றால் அதற்கு நல்ல பெயர் கிடையாது. எனக்கு ரசிகர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக ஆரம்பித்தது.


கருப்பட்டியில்தான் நடனமும் நாடகமும் முதலில் அரங்கேறின. ஐந்தாவதாக வடுகபட்டி கிராமத்தில் நாடகம் போடும் பொழுது என் தாயாரைக் கூட்டிச் சென்றிருந்தேன். நாடகம் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது என் தாயார் ஒன்றும் பேசவில்லை. நானும் மவுனமாக இருந்தேன்; வீட்டிற்குள் நுழைந்தவுடன் “ஓ” என்று கத்தி அழ ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை .

”என்னம்மா, உடம்பு சரியில்லையா? ”

”உடம்புக்கு வந்து என்னைக் கொண்டு போனா நன்னா இருக்குமே! இப்படி ஒரு பொண்ணைப் பெத்ததுக்கு உயிரோட இருக்கணுமா? ”

எனக்கு தூக்கிவாரிப்போட்டது ,
”நான் என்னம்மா தப்பு செய்தேன் ?”

”இன்னும் என்னடி பாக்கி? எவனோ உன்னைத் தொடறான். கற்பு போச்சேடி. உனக்கு வெக்கம் மானம் கிடையாதா? ”

”அது நாடகம்மா ”

”என்ன எழவோ ! எங்க காலத்துலே புடவைகூட நழுவறது தப்பு, பாவம்னு சொல்லுவோம். படிச்சுட்டா இப்படி எல்லாத்தையும் உதுத்துடணுமா ? இந்தக் கண்ராவிகளைப் பாத்துண்டு உயிரோடே இருக்கறத விட செத்துத் தொலைக்கலாம் .”


நான் திகைத்துப் போய்விட்டேன். நாடகத்தில் மனைவி செத்தவுடன் பண்ணையார், மனைவியின் தலையை மடியில் கிடத்தி குமுறிக் குமுறி அழுவார். அப்பொழுது ஒரு நேரம்தான் தொடல்; அக்காட்சி அம்மாவை உலுக்கி இருக்கின்றது. இப்போ அம்மாவை சமாதானப் படுத்த வேண்டிய நிலை. நடிக்கவே கூடாது என்றார்கள். எப்படியோ பேசிச் சமாளித்தேன். “இனிமேல் ஆண்களை என்னைத் தொடவிடாமல் நடிக்கின்றேன் “ என்று வாக்குறுதி கொடுத்தேன். பின்னர்தான் அவர்கள் சமாதானம் ஆனார்கள். முழுமனத்துடன் ஒப்புதல் கொடுக்கவில்லை என்று உணர்வேன்.


என் மனம் சமாதானமாகவில்லை. “கற்பு” சாடலின் எதிரொலி ஒரு கதையில் இசைத்தது.’ பூலோக யாத்திரை’ என்ற கதையில் கற்புக்கு ஒரு விளக்கம் கொடுத்து எழுதினேன். கதைக்கு ஒரு சிறு பொறி போதும்.


அம்மாவைப் புரிந்து கொள்ள முடிந்தது. என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறிச் சென்றுவிட்டார். ஐந்து வருடங்கள் வரவில்லை. அப்பா போகும் பொழுது அம்மாவிற்கு 18 வயது. எனக்கு வயது ஒன்று. என் மாமாவிற்குப் படிப்பு வரவில்லை. எனவே பாட்டியின் பராமரிப்பில் அம்மா, நான் என் மாமா இருந்தோம். புருஷனைப் பிரிந்து இருக்கும் சின்னப் பெண்ணைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்தார்கள். அம்மா எங்கும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப் படவில்லை. வீட்டிலே இருந்து அப்பளம் இடுவார்கள். அவர்கள் உலகம் ஒரு சின்ன அறை. கோயிலுக்குப் போக வேண்டுமென்றாலும் பாட்டி அல்லது மாமாவின் துணையுடன் செல்ல வேண்டும். எட்டயபுரத்தில் வாழும் பொழுது கூட அயல்வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள்.


நான் வேலைக்குப் போகவிட்டு என்னுடன் வந்து தங்க ஆரம்பிக்கவிட்டுத்தான் வெளி உலகம் பார்க்க ஆரம்பித்தார்கள். வாடிப்பட்டியில் வேலை பார்க்கும் பொழுது வீட்டு வாடகை 15 ரூபாய். மாதத்திற்கு அரிசி உட்பட 27 ரூபாய் ஆகும். சந்தைக்குச் செல்லும் பொழுது எட்டணாவிற்கு ஒரு வாரத்திற்குக் காய்கறி வாங்கலாம். அப்பொழுது நான் கைத்தறிப் புடவைதான் உடுத்துவேன். 7 ரூபாய் முதல் 10 ரூபாய்க்குப் புடவை வாங்குவேன். அந்தக் காலச் சூழலும் வாழ்க்கையும் எளிமையாக இருந்தன, ஆனாலும் சில விஷயங்கள் புதிராக இருந்தன.


எங்கெங்கோ திரிந்து , எப்படியோ வாழ்ந்த மனிதர்கள் ஓரிடத்தில் நிலைப்பட்டுத் தனக்குள் அமைத்துக் கொண்ட விதிகள் தளர ஆரம்பித்த காலம். சில பழக்க வழக்கங்கள் புரியவில்லை என்பதுடன் சில பிடிக்காமல் போக ஆரம்பித்தது . இன்னும் சில, பிஞ்சு மனத்தில்
முள்ளாகத் தங்க ஆரம்பித்தது.


என் அப்பாவிடம் பல சிறந்த குணங்கள் இருந்தாலும், சில குணங்கள் மனத்திற்குப் பிடிக்கவில்லை. அது மட்டுமன்று. நாட்டுப் பற்றையும் , எளிமையும் கற்றுக் கொடுத்த அதே மனிதரால்தான் ஆண்வர்க்கத்தின் மீது கோபமும் வளர்ந்தது.. அவருடைய அர்த்தமற்ற முன் கோபங்கள் என்னை முரட்டுப் பெண்ணாக்கியது. அவருக்குக் கோபம் வந்தால் உடனே அடிப்பார். அதே பழக்கம் என்னையும் ஒட்டிக் கொண்டது. அக்குறை களை விட நான் பட்ட பாடு சொல்லி மாளாது. மாநில அளவில் உயர் பதவியில் இருக்கும் பொழுது கூட கோபத்தில் ஒருவனை அடித்துவிட்டேன்.


அடுத்து அம்மாவின் அசட்டுத்தனம். கோபத்தில் அம்மாவை அப்பா அடிப்பார். ஆனால் அம்மா அவரைச் சுற்றி வந்து நமஸ்காரம் செய்து மன்னிப்பு கேட்பாள். தவறு செய்பவர் ஆண். பெண் ஏன் அர்த்த மில்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும் ? அம்மாவிற்கு அப்பா ஒரு தெய்வம். அக்காலத்தில் பெண்ணுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம். இதை நான் எழுதும் பொழுது இப்படியெல்லாம் இருக்காது என்று இக்காலத் தலைமுறைகளில் சிலருக்குத் தோன்றுகின்றதா ?  பெற்றோர்கள் செய்யும் சில அசட்டுக் காரியங்கள் பிள்ளைப் பருவத்தில் குழந்தைகளின் மன வளர்ச்சியை எவ்வளவு பாதிக்கின்றது என்பதை அவர்கள் உணர்வ தில்லை. இன்றும் எத்தனையோ வீடுகளில் தெரியாமல் நடக்கும் இது போன்ற பிழைகள் தொடர்கின்றன.


சமுதாயம் மாறத் தொடங்கிய காலத்தில் பிறந்தவள் நான். பெண்ணை அடக்கி வைத்தவனும் ஆண். அவளிடம் சுதந்திர உணர்ச்சிக்கு வித்திட்டவன் ஆண். பாரதிக்கு முக்கிய பங்குண்டு. அவன் ஊர்க்காரி
மாறியதில் என்ன வியப்பிருக்கும்? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு நாய்களுக்கு போடச் சொன்னான்.
வெட்கம் கெட்ட பெண்ணை நினைத்துப் பாருங்கள். உங்களால் ரசிக்க முடிகின்றதா? ஆண் ரசிக்க வேண்டும் என்பதற்காகப் பெண்ணுக்கு நாணம் வேண்டுமா? பெண் இப்படி கேட்பதைவிட ஆணே இப்படி கேட்கின்றான். மனிதன் பல சமயங்களில் முட்டாளாகி விடுகின்றான். தான் பேசுவது, செய்வது தனக்கே தீமையாகி விடும் என்று ஆரம்பத்தில் உணர்வதில்லை. நாம் போடும் பல வளர்ச்சித் திட்டங்களிலும் சில பாதகம் செய்திருக்கின்றன.


தவறு செய்வது நாம் மட்டும் தானா? கடவுளை நினைக்கின்றேன்.அவரும் தவறுகள் செய்திருக் கின்றார். நான் கடவுளை நம்புகின்றவள். ஆனலும் அவர் மீதும் கோபம் வரும். அடிக்கடி மனக் கூண்டில் அவரை நிறுத்திக் கேள்விகள் கேட்பேன். இக்குணமும் சிறு வயது முதல் ஆரம்பம். என் கதைகளில் அநேக மாக உளவியலை ஒட்டி வரும். முதல் கதையின் பெயரே “உயிர் மேல் ஆசை”. என் கதைகளில் விகடனில் முத்திரை பெற்ற கதையின் பெயர் “ ஆசைப் பந்தல் “ இப்படி மனத்தைக் காட்டி எழுதும் பொழுது கடவு ளையும் வம்புக்கிழுக்க ஆரம்பித்தேன். பல கதைகளில் பரமன் நாயகராக வருவார். அவரைப் பாடாய்ப் படுத்தும்  காட்சிகளை அமைப்பேன். அவரோ விளையாட்டாய் வந்து விட்டு என்னை நோக்கி ஒரு கேலிப் புன்னகை வீசி விட்டுச் சென்று விடுவார். அவர்தான் தீராத விளையாட்டுப் பிள்ளையாச்சே!


அம்மாவால் வீசப் பட்ட சொல்லம்பு “ கற்பு “; அதை என் கதையில் கொண்டு வந்து எழுத்தால் சாடினேன். பரமனைச் சாட்சியாக உட்கார வைத்தேன். அக் கதையின் பெயர் “ பூலோக யாத்திரை”. நாமும் கொஞ்ச நேரம் கதை பேசலாமே!

பகுதி 22

கதை பேச நினைத்தேன்; ஆனால் நாடக உலகம் பிடித்து இழுக்கின்றது.

பிறிதொரு சமயம் கதை பேசலாம்.


பெண் பாத்திரத்திற்கு ஆள் இல்லாததால், மனமாற்றம் நாடகம் போய் வரப்புத்தகராறு நாடகம் அரங்கேற்றினர். பெண் பாத்திரம் கிடையாது. நாடகத்தில் நடித்தவர்கள் அனைவரும் அதே வட்டாரத்தில் வேலை பார்த்து வருகின்றவர்களாவர். வெளியிலிருந்து ஆட்களைக் கூப்பிடு வது கிடையாது. எல்லா கிராமங்களிலும் வரப்புத் தகராறு இருந்தது. அண்ணன் தம்பி  சண்டைகளில் கோர்ட்டுக்குப் போய் , இருக்கும் சிறிய நிலத்தையும் பறிகொடுப்பார்கள் .சோம மகாதேவன் திக்குவாய்ப் பேச்சோடு இதிலும் மூத்தவராக வருவார்.. அவரைப்போல் கொன்னவாயனாக யார் நடித்தும் நான் பார்த்ததில்லை. இந்த நாடகத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.


ஆனால் சோழவந்தானில் நாடகம் நடக்க வேண்டிய நேரத்தில் பிரச்சனை கிளம்பிவிட்டது. மக்கள் நாடகத்தை நடத்த விடவில்லை. வாடிப்பட்டி வட்டாரத்தில் சோழவந்தான்தான் பெரிய கிராமம். நாடகம் என்றவுடன் பக்கத்து கிராமங்களிலிருந்தும் ஆட்கள் வந்து விட்டனர். திறந்த வெளியரங்கு; எம். ஆர். ராதாவின் நாடக அமைப்பைப் போன்று எங்கள் நாடக மேடைக்குப் பெரிய அலங்காரம் இருக்காது. நாடகம் தொடங்க வேண்டிய நேரத்தில் எழுந்து நின்று ஒரே கூச்சல். அவர்கள் என்ன சொல்லிக் கத்தினார்கள் தெரியுமா? “எங்கள் எஸ் ஈ. ஓ டபிள்யூ அம்மாவை நடிக்கச் சொல்லுங்கள். அந்த அம்மா நடிக்கல்லேன்னா நாடகம் நடத்தவிட மாட்டோம் “ மைக்கில் நான் பேசி சமாதானம் செய்ய முயன்றேன்; முடியவில்லை. ஆக நான் நடித்தாக வேண்டும். புதிதாக பெண் பாத்திரம் உருவாக்க வேண்டும். ரிஹர்சல் கிடையாது. என்னுடன் பேசுகின்றவர்கள் சமாளிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும் .சட்டென்று ஒரு யோசனை தோன்றி உள்ளே போனேன். கொன்னவாய்ப் புருஷன் சோம மகாதேவனுக்கு அடங்காப்பிடாரி பொண் டாட்டியாய் நடிப்பது. ஒரு சீன் போதும். மக்களைத் திருப்திப் படுத்திவிடலாம். எங்கள் நம்பிக்கையைப் பாருங்கள் .


இதுதான் சீன் -
வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். கணவன் வக்கீலுக்கு வீட்டிலிருக்கும் நெய்ச் சட்டியைக் கொடுக்க விரும்பி அதனை ரகசியமாக எடுத்து மெதுவாக நகர்கின்றான். ஏற்கனவே பொறுப் பில்லாத கணவனைத் திட்டிக் கொண்டு பெருக்கிக் கொண்டிருக் கின்றாள். அவன் போவதைப் பார்க்கவும் விளக்கு மாற்றை வீசி எறிந்துவிட்டுச் சண்டை போட ஆரம்பித்துவிடுகின்றாள். அவனது கொன்ன வாய்ப் பேச்சும் இவளின் ஆங்காரமான் பேச்சும் ஜனங்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.


கோபத்தை அடக்க முடியாமல் புருஷன் அடிக்க கை ஓங்கி விடுகின்றான். அவன்தான் தொட முடியாதே! அவன் அடித்துவிட்டாற் போல் ஓவென்று கத்தி ஒப்பாரிப் பாட்டுப் பாட ஆரம்பித்துவிடுவாள் -

புளியங்கொம்பைத் தேடியல்லோ
புளியங்கொம்பைத் தேடியல்லோ
புவிமேல் தவம் கிடந்தேன்
புவிமேல் தவம் கிடந்தேன்
அடி என்னைப் பெத்த ஆத்தா !
நான் பிடிச்ச கொம்பு முருங்கைக் கொம்பா
போனவிதம் கண்டேனே
போனவிதம் கண்டேனே
அடி என்னைப் பெத்த ஆத்தா !!

இது பெரிய பாட்டு. மேடையிலேயே இட்டுக் கட்டிப் பாடினேன் ;இந்த வேஷத்திற்கு பெரிய மேக்கப் தேவையில்லை. ஏற்கனவே கைத்தறிச் சேலைதான் உடுத்துவேன். புடவைக்கட்டைமட்டும் மாற்றினேன். பின்னால் கொசுவம் வைத்துக் கட்டினேன். தலை முடியை அவிழ்த்துச் செருகுக் கொண்டை போட்டுக் கொண்டேன். சண்டை ஆரம்பிக்கவும் இடுப்பில் செருகியிருந்த முந்தானையை உதறிச் சண்டையை ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் எழுத்தாளர்கள். எங்களுக்குள் எங்கள் சாமர்த்தியத்தில் போட்டி. கடைசியில் முடி அவிழ்த்து ஒப்பாரி பாட்டு ஆரம்பிக்கவும் கூடியிருந்த கூட்டம் முழுவதும் ஒரே கைதட்டல். அந்த மணித்துளிகளின் அனுபவங்களை இப்பொழுதும் மனம் அசைபோடும் பொழுது புல்லரிக்கின்றது.

நாடகத்தில் நடிப்பது தனி இன்பம்.. தனிப்பட்ட திறமைகளைக் காட்டும் களம். பார்ப்பவரும் சரி, பங்கு கொள்பவரும் சரி, இருபக்கமும் இன்பத்தைக் கொடுப்பது கூத்து. மேடையில் ஒரு பெண் ஏறிவிட்டால் பலரின் கவனத்திற்கு வந்து விடுவாள். எனக்கும் சிறு சிறு சோதனைகள் ஏற்பட்டன. ஆனால் என்னுடன் பழகிய இளைஞர்களால் அவைகள் ஆரம்பத்திலேயே பொசுங்கி விட்டன. ஆனாலும் சில இடங்களில் தீங்கு ஏற்படும் சூழல் வரினும் என்னை அரணாகப் பாதுகாக்க என் தம்பி பெரிய  கருப்பன் இருந்தான். என் கலைத் திறமையால் எனக்கேற்பட்ட ரசிகர்கள் அன்று இருந்த நிலையிலிருந்து உயர் நிலைக்குப் போயினும், அவர்கள் என்னைச் சந்தித்தபொழுது மறக்காமல் பரிவைக் காட்டினர்.

மதுரையில் நாடகம் போட நேர்ந்தது. இதுவரை கிராப்புறங்களில்தான் எங்கள் நாடகங்கள் நடந்து வந்தன. வரப்புத்தகராறு நாடகம் தான். அன்று  நானும் நடிப்பதாக இருந்தது. எனவே மேடையில் பின்புறத்தில் இருந்தேன். அப்பொழுது என்னிடம் எங்கள் சப் கலெக்டர் வந்து ஓர் உத்தரவு பிறப்பித்தார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது ; Twincle twincle little star -அந்தப் பாடலை ஆனந்த பைரவி ராகத்தில் பாட வேண்டுமாம். உத்தரவுகள் எப்படியெல்லாம் வருகின்றன பாருங்கள்! சங்கீதம் கற்றவள் தான். ஆனால் ராகங்களில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது. முடியாது என்று சொல்ல என்னாலும் முடியாது; “ஸார், ஆனந்த பைரவியில் பாடினால் ராகம் மாறினாலும் மாறும். புன்னாகவராளியில் பாடட்டுமா? “ “சரி” என்று தலையாட்டிவிட்டு உடனே பாடிக் காட்டச் சொன்னார். நடிப்பு, பாட்டு எல்லாம் திடீர் சோதனை களாகத்தான் வந்தன. நான் பாடிக் காட்டினேன். அவர் சமாதானம் ஆகவில்லை. மீண்டும் இன்னொரு முறை பாடச் சொன்னார். நான் மீண்டும் பாடிக்காட்டவும் அவர் முகம் மலர்ந்தது. அன்றைய மேடையில் அதிகம் கை தட்டல் களைப் பெற்றது அந்தப் பாட்டுதான். ஆங்கிலப் பாட்டை கர்நாடக ராகத்தில் என்னைப் பாடச் சொன்னவர் திரு. டி. என் சேஷன்,ஐ.ஏ.எஸ் அவர்கள். அவர் அப்பொழுது எங்களுக்கு சப் கலெக்டராக இருந்தார். தேர்தல் ஆணையாளராக இருந்த பொழுது அவரின் கண்டிப்பான குணத்தை எல்லோரும் அறிவார்கள். அவர் இதயத்திற்குள் கனிவான சங்கீதமும் உண்டு. அவர் பெயர் கேள்விப்படும் பொழுதெல்லாம் இந்த நினைவு வரும்.


அவரைப் போல் திரு எம்.எஸ். திரவியம், ஐ.ஏ.எஸ் அவர்களும் சப் கலெக்டராக இருந்தார். அவர் காலத்தில் எங்கள் நாடகங்களுக்கு வந்து எல்லோ ருடனும் தரையில் முன்னால் உட்கார்ந்து நாடகம் பார்ப்பார். அவர் தலைமைச் செயலாளரான பின்னும் பார்த்திருக் கின்றேன். அக்கால நாடகங்களைப் பற்றிப் பேசுவார். நாடகம் மிகவும் சக்தி வாய்ந்தது. பாட்டு, நடனம், நடிப்பு என்று மேடைகளில் அடிக்கடி தோன்றி யதால் கிராமத்து மக்களிடையே எனக்கும் ரசிகர்கள் அதிகமாயினர். நான் சாதாரணமானவள். மேலும் எங்கள் நாடகங்களும் தெருக்கூத்தைப் போலவே இருந்தன.எங்களுக்கே இந்தக் கவர்ச்சி அலை யென்றால் சினிமாவில் இருப்பவர்களைக் கண்டு மக்கள் மயங்குவதில் வியப்பு ஒன்றும் இல்லை. மக்களின் மயக்கம் சினிமா மனிதர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது.


பகுதி 23

இப்பொழுது என் நாடக வாழ்க்கை முடியப் போகும் நிலையில் ;
நாடகம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் ஒரு நாடகம் முழுமையாக மேடை ஏறுவதற்குள் எத்தனை பாடுபடவேண்டும் என்ற அனுபவமும் எனக்கு கிட்டியது. வாடிப்பட்டியிலிருந்து சென்று பல ஆண்டுகள் கழித்து காஞ்சியில் ஓரங்க நாடகத்தில் நடித்தேன். அதுவும் ஒரு திடீர் ஏற்பாடு. அதற்குப் பிறகுதான் பெரும் சோதனை ஏற்பட்டது .செங்கல்பட்டு மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றி கொண்டிருந்த காலம். எங்கள் அமைச்சர் திரு.சி.எம் அண்ணாமலை. அவர் சொந்த ஊர் காஞ்சிபுரம். நாங்கள் மாவட்ட அளவில் பெண்களுக்கு ஒரு பெரிய மாநாடு ஏற்பாடு செய்தோம். அமைச்சருக்கு அந்த மாநாட்டிற்கு முதல்வர் கலைஞரை அழைக்க விருப்பம். கலைஞர் வர ஒப்புக் கொண்டார். கலைவாணர் அரங்கில் விழா ஏற்பாடு. அமைச்சர் என்னை நாடகம் போடச் சொன்னார். நான் முடியாது என்று சொன்னேன் .காரணங்கள் பல. இப்பொழுது மாவட்ட அளவில் அதிகாரி. எனவே நடிக்க முடியாது என்று மறுத்தேன். மேலும் சென்னையில் கலை வாணர் அரங்கில் கலைஞர் தலைமையில் நாடகம் என்றால் அது சாதாரணமாக இருக்கக் கூடாது. என்னால் மற்றவர்களைச் சேர்த்து நாடக ஒத்திகை போட முடியாது. மேலும் விழா ஏற்பாடுகளில் நான் தான் முன் நிற்க வேண்டும். விழா முடியவும் உடனே மேக்கப் போட்டு நடிக்க முடியாது. நேரம் இருக்காது என்றேன். பிரச்சனைகளை முதல்வ ரிடமே கூறும்படி எங்கள் அமைச்சர் சொன்னார். வேறு யாருக்கும் இந்த தர்ம சங்கடம் வந்திருக்காது  முதல்வரை நான் சந்தித்தேன். அவரிடம் பிரச்சனைகளைக் கூறிய பொழுது சிரித்துக் கொண்டார். முதலில் நாடகம் போடச் சொன்னார். மேக்கப் கலைக்காமல் விழா மேடைக்கு வர வேண்டியிருக்கும் என்றேன். பரவாயில்லை என்று சொல்லிவிட்டார். சாவியையும் அழைக் கச் சொன்னார். சினிமாக்காரரும் பத்திரிகை ஆசிரியரும் சேர்ந்து போடும் நாடகம் என்பதைப் புரிந்து கொண்டேன்.இப்பொழுது என் திறமைக்கு சவால். சென்னை மாநாகரில் சினிமா உலகில் திறமை பெற்ற ஒருவர், பல பத்திரிகையாளர்கள், இன்னும் பல பெரிய பிரமுகர்களுக்கு முன் நாடகம்போட வேண்டும். நான்நடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. நாற்பது வயதுக்கு மேல் என்னை எப்படி நாயகி ஆக்குவது? பல வேலைகளுக்கு மத்தியில் எப்படி ஒத்திகை நடத்துவது? நாடகப் பயிற்சி இல்லாதவர்களை ஒன்று
படுத்திச் செய்ய இயலுமா? முதலில் மலைத்தேன். ஆனால் பின் வாங்க விரும்பவில்லை ;
மனோகர் ட்ரூப், சேஷாத்ரி ட்ரூப் இரண்டிலிருந்தும் நடிப்பதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்தேன். நாடக ஸ்கிர்ப்டை அவர்களிடம் கொடுத்தேன். அவர்களில் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்தேன். முடிந்த பொழுது மட்டும்தான் ஒத்திகையில் நான் கலந்தேன். நானே எழுதிய வசனங்கள் என்றாலும் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அது என் குறை. ஆனால் நடிக்க வந்தவர்கள் அனைவரும் தொழில் முறை நடிகர்கள். எனவே என்னைச் சமாளித்துக் கொள்வார்கள்.


நாடக அரங்கிற்கும் பங்களா செட், வீடு செட் சேஷாத்ரி க்ரூப்பீல் வாங்க முடிவு செய்தது. ம்யூசிக்கிற்கு அப்பொழுது மேடையில் கொஞ்சம் பிரபலமான சந்திரன் க்ரூப்பை ஏற்பாடு செய்தேன். அதே போன்று லைட், மேடை நிகழ்வுகளை ஒழுங்காகக் கவனிக்க அனுபவம் உள்ள ஒருவரையும் ஏற்பாடு செய்தேன். நாடகம் என்றால் எளிதன்று. இத்தனை அனுபவங்களும் இப்பொழுதுதான் எனக்குக் கிடைத்தன. வென்று காட்ட வேண்டும் என்ற தீவிரம் ஏற்பட்டு விட்டது .


புதுப் புது உத்திகளும் தோன்ற ஆரம்பித்தன. நாடக நேரம் 90 நிமிடங்கள் . முதல்வர் வரும் பொழுது வரவேற்பு உரை போல் வசனங்கள் எழுதினேன். பராசக்தி வசனங்களையும் இடையில் சேர்த்தேன். முதல்வர் உள்ளே நுழையும் பொழுதே பேச்சு ஆரம்பமாகிவிடும். அவர் உட்கார்ந்த பின்னும் பேச்சு தொடரும். அதாவது நாடக முக்கிய பாத்திரமான அம்மா பற்றி வசனம். அம்மா என்றால் எப்படி நாம் உருவகித்திருக்கின்றோம் என்று. இந்த வசனத்தை நான் தான் திரை மறைவில் வாசித்தேன். அம்மா பற்றிய சில வரிகள் முடியவும் அரங்கத்தில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டேன். மற்ற வசனங்களை ஒரு நடிகை வாசித்தாள் .


திரை தூக்கப்படும் பொழுது முழுதாக விளக்குகள் எரியாது. நாற்காலி மேல் ஒளி விழும் அளவு ஏற்பாடு. அரங்கத்தை நோக்கி உட்கார்ந்திருக்க மாட்டாள். அவள் பின் புறம்தான் தெரியும். ஆனால் அவள் விடும் சிகரெட் புகை மட்டும் வெளியில் வரும். ஆம் அந்த அம்மா அப்பொ ழுது சிகரெட் குடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவள் திரும்பி எழுந்திருக்கவும் ஒரே கைதட்டல். இடுப்பில் கைலி, காலர் பனியன், பாப் முடியலங்காரம். கையில் சிகரெட். அவள் அலட்சிய பாவத்துடன் நடைபயில்வது , இப்பொழுதும் அவள் மேல்மட்டும் ஒளிபாய்ச்சப் படும். வசனங்கள் மைக்கில் ஓடிக் கொண்டிருக்கும். அவள் கணவன் விஸ்கி பாட்டுடன் வருவான். இருவரும் உட்கார்ந்து குடிக்க ஆரம்பிப்பார்கள் .


இனி உங்களுக்கிடையில் நான் இருக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வசனங்கள் பேசுகின்றவர் நிறுத்திவிடுவார். எல்லா விளக்கு களும் இப்பொழுது எரிய ஆரம்பித்துவிடும். மாடியுள்ள பங்களா செட். கதையில் இந்த அம்மாவின் குணத்தை வசனத்தில் முதலிலேயே கூறப்பட்டு விடும். இத்தனையும் சில வினாடிகளில் முடியும். விளக்குகள் எரிய ஆரம்பிக்கவும் ஒரே கைதட்டு.


தொழில் முறை நாடகமாகச் செய்திருந்தேன். ஆங்கிலத்தில் ஒரு பாட்டு எழுதி அதையும் நான் பாடினேன் repeat the song of joy என்று  ஆரம்பிக்கும். வந்தவர்கள் அனைவருக்கும் வியப்பு. ஓர் அரசு நிகழ்ச்சியில் இப்படி ஒரு நாடகமா என்று ஆச்சரியப் பட்டனர். யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை. லைட் முதல் எல்லாம் நான் சிந்தித்து ஏற்பாடு செய்தது. கதை, வசனம், டைரக்க்ஷன், நடிப்பு, இசை என்று சர்வமும் நானே . முதல் சீன் எப்படியோ அதே போல் கடைசி சீனையும் உணர்ச்சி மயமாக அமைத்திருந்தேன். அந்த அம்மாவின் மகள் கொலை செய்யப் படுவாள். பதறிப்போய்க் கத்துவாள். அவளு டைய நல்ல மகன் வந்து அவள் குறைகளைக் கூறுவான். நீ அம்மாவா, நீ அம்மாவா என்ற உணர்ச்சி மிகுந்த வசனங்கள். அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.


முதலில் நான் நடிக்க நினைத்தது வேறு. புடவைத் தலைப்பைக் கிழித்துக் கொண்டு ஓடவேண்டும். நானோ ஓடாமல் , புடவையைக் கிழித்துக் கொண்டு பயங்கரமாயப் பைத்தியக்காரச் சிரிப்பைச் சிரித்துக் கொண்டே கீழே விழுந்து உருண்டேன். என்னை மறந்து இப்படி நடித்தேன். பாத்திரத்துடன் அப்படி ஒன்றிப் போனேன். அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது. ஆம், நான் நடிப்பின் உச்சத்திற்குப் போய் விட்டேன். இடையில் ஒரு வேடிக்கையும் சேர்ந்தது. அரங்கத்தில் மறைவாக நின்று கொண்டு நாடகத்தைப் பார்த்து வந்த பத்து வயது சிறுவன் அம்மா என்று மேடைக்குள் ஓடி வந்து விட்டான். ஆம் அவன் என் மகன். போலீஸ் வந்து அவனைக் கூட்டிச் சென்றது .


நாடகம் முடியவும் வேகமாக அங்கிருந்து விலகினோம். கூட்டத்திற்கு மேடையைச் சீராக்க வேண்டும். கலைஞர் மேடைக்கு வந்துவிட்டார். ஏதோ ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வதைப் போல் சாதார ணமாக ஏற்பாடுகளைக் கவனித்தார். அரிதாரம் கலைக்காமல் விழா நிகழ்ச்சிகளைக் கவனித்தேன். முதலில் ஒரு சிரிப்பு கலைஞர் முகத் திலும் சாவி முகத்திலும் கண்டேன். அன்று கலைஞரின் பேச்சு முழுவதும் நாடகம் பற்றித்தான் இருந்தது. வசனங்களை அவ்வளவு அழகாக விமர்சித்தார். சினிமாவிற்கு வசனம் எழுதியே வாழ்க்கையில்  முன்னுக்கு வந்தவரல்லவா. ஆம் அவர் ஒரு கலைஞர். அவரை நான் அப்படித்தான் இன்றுவரை பார்க்கின்றேன் .

ஒரு சாவித்திரியை நாம் இழந்துவிட்டோம். நடிப்பு உலகத்திற்கு இவள் வந்திருக்க வேண்டும்” கலைஞர் சாவியிடம் கூறி சாவி என்னிடம் கூறியது. வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம். கிடைத் தது போல் ஒரு மன நிறைவு. ஒரு முதல்வர் முன், அதிலும் ஒரு கலைஞர் முன், மேலும் சென்னையில் முக்கிய மான கலைவாணர் அரங்கில் தலை நகர பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாநில அளவு அதிகாரிகள், பிரமுகர்கள், பெண்மணிகள் முன் நாடகம் போடுவது எளிதல்ல. மிகச் சிறந்த அனுபவம். இன்றும் மனம் அந்த கணங்களை எண்ணி மகிழ்கின்றது. இனிப்பான நினைவுகள்.


மேடை நாடகத்தில் எனக்கேற்பட்ட பெரிய சவாலில் வென்றேன். அதுவே நான் நடித்த கடைசி நாடகம். என் நாடக வாழ்க்கை அன்று முடித்துக் கொண்டேன். சிகரம் சிகரமாக இருக்கட்டும். மீண்டும் அந்த நாடகத் தைப் போடச் சொல்லி பல இடங்களிலிருந்து வேண்டுகோள் வந்தது. நான் மறுத்துவிட்டேன். ஒரு நாள் அனுபவம் போதும். அந்த ஒரு நாளுக்காக நான் உழைத்தது மூன்று மாதங்கள்.
என்னால் முடிந்ததா? ஆம் முடிந்தது. வென்றேன்.எனது பத்திரிகையுலகு தொடர்பினால்தான் அரசு, அரசியல் இரண்டிலும் உயர் நிலை மனிதர்களிடமும் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பத்திரிகை பலம் வாய்ந்தது. அதைப் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். முடிந்த மட்டும்பத்திரிகை ஆதரவு பெற்றிட முயல்வர்.


பட்டிக்காட்டுப் பெண்ணிற்கு எப்படி பத்திரிகையுலகத்தில் செல்வாக்கு  கிடைத்தது? சில கதைகள் வெளிவந்தால் செல்வாக்கு என்று அர்த்தமா?  வாடிப்பட்டிக்கும் தலைநகருக்கும் தூரம் அதிகம். எப்படி ஒரு சாதாரணப் பெண்ணால் சாதிக்க முடிந்தது? நாம் அந்தக் காட்சியைப் பார்க்காமல் இருக்கலாமா? இனி சீதாவின் பத்திரிகை உலக சகாப்தம் பார்க்கப் போகின்றோம்.


பகுதி 24


நாடகம் மிகவும் சக்தி வாய்ந்தது.
இன்னொரு சம்பவமும் கூற வேண்டும்.


உலக வங்கி ஊட்டச் சத்துதிட்டம் மதுரை மாவட்டத்தில் தான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தது. அந்தப் பணியைச் செய்யும் பொறுப்பில் உதவி இயக்குனர்களாக நானும் வசந்த குமாரியும் இருந்தோம். மதுரையில் நான், தலைமை அலுவலகத்தில் வசந்த குமாரியும் உதவி இயக்குனர்களாக இருந்தோம்.  அமெரிக்காவிலிருந்து தணிக்கைக் குழு வந்தது. அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் பெயர் ஜிம். மிகவும் கெட்டிக்காரர். அவரிடம் மாவட்ட வரைபடத்தைக் கொடுத்துவிடவேண்டும். எங்கு போக வேண்டுமென்று ஜீப்பில் ஏறும் பொழுதுதான் கூறுவார். போய்க் கொண்டிருக்கும் பொழுதே பாதையை மாற்றுவார். ஊருக்குள் சென்றாலும் மையத்தை பார்வையிட்ட பின் ஆங்கிலம் தெரிந்த
ஒருவரைக் கூப்பிட்டுக் கொண்டு ஊருக்குள் சென்று குடும்பங்களைப் பார்த்துப் பேசுவார் .


அப்படிப் பட்டவருடன் போய்க் கொண்டிருக்கும் பொழுது வாடிப்பட்டி  வட்டாரத்தில் ஒரு கிராமத்தில் மையத்தைப் பார்வையிட்டார்.  அங்கிருந்த பணியாளர் அவ்வளவு திருப்திகரமாக மையத்தை வைத்திருக்கவில்லை.  என்னிடம் ஒரு குணம் உண்டு. உண்மைகளை மறைக்க மாட்டேன். அதே நேரத்தில் பலஹீனங்களின் காரணங்களைத் தெரிந்து வைத்திருப்பேன். முயற்சி செய்யும் பொழுது சில திருந்தும் . சில திருந்தாது. இது உலகம் எங்கினும் பொதுவானதே.  நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிராமத்துப் பெரியவர்களில் சிலர் வந்தனர். பணியாளரைப் பற்றியும் மையத்தைப் பற்றியும் குறைகள் கூறினர். பேசிக் கொண்டு வரும் பொழுதே அவர்கள் சொன்ன செய்தி ஒன்றுதான் அனைவ ரையும் வியப்பில் ஆழ்த்தியது .


“மேலதிகாரிங்க கொஞ்சம் அக்கறையுடன் பாத்துக்கிட்டா இப்படி இருக்காது. முன்னாலே எங்க ஊரிலே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்க மாதிரி இதுவரை யாரும் வரல்லே. எல்லார்கிட்டேயும் நல்லாப் பழகு வாங்க. எங்க சுத்துபட்ட கிராமங்கள்ளேயும் எல்லாருக்கும் அந்த அம்மாவைத் தெரியும். நல்ல பாடுவாங்க, நடிப்பாங்க, ஆடுவாங்க. எங்களுக்கு அவங்க பாட்டு, நடிப்பு ரொம்பப் பிடிக்கும் “
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவர்கள் யாரைச் சொல்லுகின்றார்கள் என்று புரிந்தது. மெதுவாக நான் வசந்த குமாரியிடம் விபரம் சொன்னேன். உடனே அவர்களே ஊர்க்காரர்களைப் பார்த்து “அவங்க பேர் என்ன?’ என்று கேட்டுவிட்டார்கள் .


” சீதாலட்சுமி அம்மா. எங்க ஊர் எஸ் ஈ .ஓ அம்மா ”


“ இங்கே நிக்கறாங்களே, அவங்கதான் நீங்க சொல்ற சீதாலட்சுமி அம்மா ”


இப்பொழுது அவன் விழித்தான் "  அவங்க நல்லா இருப்பாங்களே! "


கடவுளே, அவ்வளவு அசிங்கமாகவா ஆயிட்டேன் ! 20 ஆண்டுகளில் நான் நிறைய மாறிவிட்டேன் என்பது புரிந்தது. அது சரி, வேலைகளைப் பற்றி புகழ்ந்தால் சரி, இவரோ நாட்டியத்தையும் நாடகத்தையும் புகழ்கின்றார். மனித மனத்தில் கூத்து எவ்வளவு ஆழமாகப் போய் உட்கார்ந்து கொள்கின்றது!

வசந்தகுமாரி ஊராருக்கு விளக்கிவிட்டு ஜிம்முக்கும் நடந்தவைகளைக்  கூறினார்கள். பின்னர் ஜிம் அவரிடம் அந்தக்கால செய்திகளைப் பற்றியும் ,என்னைப் பற்றியும் விசாரித்தார். அந்தத் திட்டத்தில் “communication “ என்ற ஒரு பிரிவு உண்டு. என்னிடமும் விசாரித்தார். சுதந்திரம் கிடைத்தவுடன் விழிப்பு ணர்விற்காக இந்தியா மேற்கொண்ட திட்டங்களை விளக்கினேன். அதனைக் கேட்டபின்னர் இப்பொழுதும் அதே வேகத்துடன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் கூறினார். அவருக்கு நான் மிகவும் பிரியமானவளானேன்.


இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் ஒருவரின் நினைவைப் பசுமையாகத் தக்க வைக்கும் வல்லமை கூத்துக்கே உண்டு.  அப்பப்பா, கூத்து மனிதனை எப்படி தனக்குள் அடிமைப் படுத்தி விடுகின்றது! மக்கள் திலகம் மக்களுக்குத் திலகமானதே அவரின் திரையுலகப் பாத்திரங்கள்தானே. வாடிப்பட்டியில் என் மேடைப் பேச்சில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அடுக்குத் தொடர்ப் பேச்சு போய், பேச்சுத் தமிழில் பேச ஆரம்பித்து விட்டேன். என்னுடைய பேச்சில் கவரப்பட்டவர்கள் பலர். அதன் காரணமாக என்னை அரசியலுக்கு அழைத்தவர்கள் பலர். அப்பொழுது திருமதி .அனந்தநாயகி மேடைகளில் வேகமாகப் பேசுவார். என் பேச்சு அவர் பேசுவதைவிட நன்றாக இருக்கின்றது என்று கூறுவர்.


நாடகம் ஒரு கூட்டு முயற்சி. சட்டென்று அரங்கேற்றிவிட முடியாது. ஓரங்க நாடகத்திற்கும் சில நியதிகள் உண்டு. என் வாழ்க்கையில் என் பேச்சுத்திறன்தான் முக்கியப் பங்கு வகித்தது. அதன் ஈர்ப்பிலேதான் பலருடைய மதிப்பையும் நட்பையும் பெற்றேன். பணிக்கால சோதனைகளில் எனக்கு உதவியாக இருந்தது பேச்சும் பத்திரிகையுலகமும்.  பத்திரிகை உலகம் என்றவுடன் எழுத்தாளர்களாக இருக்கவேண்டு மென்ப தல்ல. மாவட்ட அளவில் அதிகாரியாகப் பணியாற்றும் பொழுது ஊராட்சித் தலைவர் முதல் பாரளு மன்றத்தலைவர்கள் வரை எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எங்களிடம் வருவார்கள். நாங்களும் போவோம். பல பிரச்சனைகள் வரும். அவை பத்திரிரிகைகளில் மோசமான விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால்  பத்திரிகை நிருபர்கள் தொடர்பு மிக மிக முக்கியம். ஒரு மாவட்ட அதிகாரி நல்ல முறையில் பணியாற்ற, அமைதியுடன் செயல்பட மாவட்ட ஆட்சியாளரின் நன்மதிப் பையும் பத்திரிகை நிருபர்களின் நட்பையும் பாதுகாக்க வேண்டும். இதில் சுணக்கமாக இருப்பவர்கள் நல்ல பெயர் எடுக்க முடியாது. இது தொழில் தந்திரம்.


நம்மிடையே ஒருவர் சாட்சியாக இருக்கின்றார். அவர்தான் நம் தமிழ்த்தேனி அவர்கள். நான் சென்னைக்கு வரும் பொழுது என்னுடன் வந்து கொண்டிருந்த தமிழ்த் தேனியுடன் ஓர் இல்லம் சென்றோம். அங்கே இருந்தவர் பெயர் சரோஜா. என்னைப் பார்த்தவுடன் அழுது கொண்டே காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். உடனே தன் மருமகள் மூவரையும் அழைத்து நமஸ்காரம் செய்யச் சொன்னாள். “என்னை வாழ வைத்த அம்மா “ என்று அறிமுகம் செய்தாள். நான் இல்லாமல் போயிருந்தால் அவளோ அவள் பிள்ளை களோ இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்றாள். ஒரு காலத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். இன்று பங்களா, மூன்று கார்கள் என்று மாம்பலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின் றாள்.


இத்தனையும் தம்பி தமிழ்த் தேனிக்கு முன்னால்தான் நடந்தது. அழிந்து போக இருந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்தது, எப்படி? என்  பத்திரிகை பலம் மற்றவரைப் பயமுறுத்தியது. அடுத்து விளக்கமாகக் கூறுகின்றேன்.  பத்திரிகை கத்தியைவிடக் கூர்மையானது. அதன் கூர்மை அதன் சுதந்திரத்தில் இருக்கி ன்றது. அதிகாரத்தில் இருந்தவர்கள் என்னிடம் காட்டிய மரியாதை, அது எனக்கன்று; என் பின் நின்ற பத்திரிகை உலகமே காரணம். அடுத்து அதனையும் விளக்குகின்றேன். 


தெள்ளிய நீரோடையாகப் போய்க் கொண்டிருந்த நினவலைகள் இனி வேகம் எடுக்கும். சில நேரங்களில் சுனாமி அலைகளையும் பார்க்கலாம். பால்யூவின் ஆசையை அவர் மறந்த பின் நிறைவேற்றுகின்றேன். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

--Ksubashini 18:37, 27 பெப்ரவரி 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Dev மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 5 ஏப்ரல் 2010, 05:32 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,322 முறைகள் அணுகப்பட்டது.