சென்ற நூற்றாண்டின் இணையற்ற பெண் எழுத்தாளர் குமுதினி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

பகுதி 1

குமுதினி என்ற பெயரிலும், காதம்பரி என்ற பெயரிலும் 1935 லிருந்து 1950 வரை ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்த எழுத்தாளர் ரங்கநாயகியைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியுமோ, நான் அறியேன்.. ஆனால் பெண்கள் முன்னேற்றம் அடையாத ஒரு காலகட்டத்தில் ஆசாரமான ஒரு குடும்ப சூழ்நிலையில் அதையும் விட இளமையிலேயே காது கேட்கும் திறனை இழந்த ஒரு துயரமான கட்டத்தில், பெண்களின் முன்னேற்றம், சமூக சிந்தனைகள் கொண்ட கதைகளை எழுதி தனக்கென ஒரு தகுதியை நிலைநாட்டிக் கொண்டு புகழ்பெற்றவர்தான் குமுதினி.. அறியாத ஆறு வயதில் திருமணம், படிக்கும் பால பருவமான 15 வயதிலேயே ஒரு குழந்தைக்குத் தாய், இவையெல்லாம் பொதுவாக அந்தக் காலத்தில் எல்லா பெண்மணிகளுக்குமே ஏற்பட்டிருந்த சாதாரணமான நிகழ்ச்சிதான் என்றாலும் குமுதினியின் வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சோக சம்பவம், அவருக்கு 25 வயது ஆகும்போதே செவிகள் தன் திறனை இழந்ததுதான். ஆனால் தனக்கு ஏற்பட்டிருந்த ஒரு குறையை மிகச் சாதாரணமாக நினைத்து, அந்தக் குறையை நிவர்த்திக்க தன் படிப்பறிவை அதிகமாக்கிக் கொண்டவர் குமுதினி. இதுதான் அவர் நமக்கு எடுத்துச் சொல்லும் மிகப் பெரிய பாடம்.எந்த ஒரு எழுத்திலும் ஆன்மீகம் கலந்துவிட்டால், பாலில் தேன் கலந்தது போலத்தான் இனிக்கும். இந்தத் தேனை மிகச் சுவையாக கலந்து தன் எழுத்தில் வெளிப்படுத்தியவர். இதே உவமையை நகைச்சுவைக்கும் சொல்லலாம். இப்படி நகைச்சுவையும் ஆன்மீகமும் சரிவித விகிதத்தில் கலந்து குமுதினியால் எழுதப்பட்ட கதைகளும் நாடகங்களும் அந்தக் கால ரசிகர்கள் மனதை வெகுவாகக் கவர்ந்தன. அந்தக் காலம் என்றில்லை இப்போது படித்தாலும் வெகுவாகவே ரசிக்கக்கூடிய வகையில் உள்ள கதைகள் அவை. எதிர்காலத்திலும் நிலைக்கும் எழுத்துக்கள் அவை. அவர் எழுத்தின் வெற்றியின் ரகசியம் என்னவென்பதை மட்டும் அவர் ரகசியமாகவே வைத்திருக்கவில்லை. பகிரங்கமாகவே அதை தன் கதைகள் மூலம் வெளிப்படுத்தினார். அதாவது அன்றாட வாழ்வில் நடைபெறும் வெகு ஜன ரஞ்சகமான சின்ன சின்ன சில்லறை விஷயங்களை நகைச்சுவையோடு மட்டுமல்லாமல் அந்த நகைச்சுவையானது சம்பந்தப்பட்டவரை பாதிக்காமலேயோ, அல்லது சம்பந்தப்பட்டவர் பாராட்டும்படியாகவோ எழுதுவதில் வல்லவர். அவர் எழுத்தின் பல சம்பவங்கள் அவர் கேட்டு அனுபவித்து எழுதியது கிடையாது.. ஏனெனில் அவருக்கு காது கேட்காது என்பது மிகப் பெரிய விஷயம், ஆனால் ஒரு விஷயத்தைக் கூர்ந்து பார்த்துக் கவனிப்பதில் மிக வல்லவர். பல மனிதர்களுக்கு சில்லறைத்தனமாகப் படும் விஷயங்கள் இவர் எழுத்துக்குத் தீனி என்றால் அது மிகையே அல்ல. இதோ கல்கி அவர்கள் (1948 ஆம் வருடத்தில் ஒரு முன்னுரைக் கட்டுரையின் மூலம்) குமுதினியின் எழுத்தைப் பற்றி குறிப்பிடுகிறார் பாருங்கள்.“பதினைந்து வருஷத்திற்கு முன்பு ‘குமுதினி’ எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே எனக்கு ஒரே வியப்பாய் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாவகமாகக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ என்று பிரமித்துப் போனேன். ஊர், பேர் முதலியன தெரிந்து போய் விட்டதினால் பிரமிப்பு நீங்கி விடவில்லை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.

தமிழ் வசனத்தைக் கையாளும் லாவகம் ஒரு புறமிருக்க சாதாரண சின்ன விஷயங்களைப் பற்றி இவ்வளவு ரஸமாக எப்படி எழுத முடிகிறது என்று ஆச்சரியமும் மற்றொரு புறத்தில் வளர்ந்து வந்தது. ஆங்கில நாட்டின் பிரபல ஆசிரியர்களான ஏ.ஜி. கார்டினர், ஹிலாரே பெல்லாக் முதலியோர்கள் இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி ரஸமான கட்டுரை எழுதுவார்கள். அவற்றைப் படிக்கும்போது நாமும் இப்படியெல்லாம் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றும். ஆனால் எழுத உட்கார்ந்தால் எந்தச் சில்லறை விஷயத்தைப் பற்றி எழுதுவது என்றே முடிவு செய்யமுடிவதில்லை. ‘வங்காளப்பஞ்சத்தின் கோர தாண்டவம்” “தென்னாப்பிரிக்கா இந்தியர் படும் அவதி” “பீஜித் தீவில் தோட்ட முதலாளிகள் கொடுமை” முதலிய மகத்தான விஷயங்கள் பற்றி வேண்டுமானால் எழுதலாம். ஆனால் சலவைத் தொழிலாளியிடம் துணி போட்டு வாங்குவது, சமையல் அறையில் ஈ மொய்க்காமல் காக்கும் முறை, வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் வரவேற்று உபசரிக்க வேண்டிய பத்ததி, அடுத்த வீட்டுப் பெண் குழந்தை சங்கீதம் கற்றுக் கொள்ளும் அழகு, ஆகிய சில்லறை விஷயங்களைப் பற்றி எழுதுவது அரிதரிது, மிகவும் அரிது.எனக்குத் தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் ‘குமுதினி’ அவர்கள்தான் இம்மாதிரி சில்லறை விஷயங்களைப் பற்றி ரஸமாக எழுதுவதில் சிறந்த வெற்றி அடைந்திருக்கிறார். மற்றும் பல துறைகளிலும் ‘குமுதினி’ யின் தமிழ்த் தொண்டு நன்கு நடந்து வருகின்றது.”கல்கி மனமுவந்து சிலாகித்த அந்த சில்லறை விஷயங்கள்தான் எப்படிப்பட்டது என்பதையும் ஒரு ‘மாதிரி’ பார்த்து விடுவோமே..இந்த ‘மாதிரி’ பார்ப்பதற்கு முன் சில விஷயங்கள் எழுத மறந்துவிட்டேனே.. அதையும் சொல்லிவிட்டு அவர் எழுத்துக்களைப் படிப்போமே.. என்ன அவசரம்.. (விஷயதானங்கள்: டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்கள்)பகுதி 2

முதலில் அவர் எழுதிய கதை கட்டுரைகளை அவர் நேரடியாகவே பத்திரிகைக்கு அனுப்பினாரில்லை. காரணங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்துவராவிட்டாலும் அந்தக் காலத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்று எல்லோருமே சொல்வர். மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர் குமுதினியார் என்றாலும், அன்பும், அக்கறையும், பாசமும் நிறைந்த கணவர் உதவி அதிகம் கிடைக்கப்பெற்றவர். இல்லத்தில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் சோறூட்டம் சமயம் என்பது, அந்தக் குழந்தைகளைப் பொறுத்தவரை ஒரு பொன்னான தருணம். அப்போதுதான் குமுதினியார் அத்தனை குழந்தைகளையும் உட்காரவைத்து அந்த மழலைகளுக்கு கதைகள் சொல்லி சோறு போடும் நேரம், முதல்நாள் 'தொடரும்' போட்டுவிட்டு, பாதியில் சஸ்பென்ஸோடு சாப்பாட்டுக் கடை முடிந்ததும் சுவாரஸியத்தை அப்படியே முடக்கிவிட்டு அடுத்தநாளில் தொடரப்போகும் கதைகள் என எல்லாக் குழந்தைகளுமே ஆவலோடு அந்தச் சாப்பாட்டுக் கடை எப்போது மறுபடியும் திறக்கப்படுகிறதோ என்ற தருணத்துக்காக காத்துக் கிடப்பர்.இந்தச் சமயத்தில்தான் தானும் சில கதை கட்டுரைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. குமுதினியின் தந்தைக்கு (எஸ்.ஜி.ஸ்ரீனிவாச ஆச்சாரியா) ஒரு சிறு வருத்தம் உண்டு. சின்னவயதில் படிப்பு அதிகம் சொல்லிக் கொடுக்காமலேயே இல்லற வாழ்வில் மகளைத் தள்ளிவிட்டோமே என்று வருத்தப்படுவாராம். ஆனால் அந்தக் கவலையை ஒன்றுமில்லாமல் செய்து இல்லத்திலேயே படிப்புக்கான அத்தனை வசதிகளையுமே செய்து கொடுத்தவர், குமுதினியை மணந்துகொண்ட (தாத்தாசாரியார் குடும்ப வாரிசான) ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன். கணவர் உந்துதல் மிகப் பெரிய கவசமாக குமுதினியைக் காத்தது என்றாலும், அவர்தம் மாமியாருக்கு இவை அவ்வளவாக பிடிக்கவில்லையாம். ‘குழலூதும்’ அடுப்படியிலேயே வேலைகள் அதிகமிருக்க, படிப்பு கதை கட்டுரை நாடகம் இதெல்லாம் எழுதத் தொடங்கினால் பெண்டிருக்கு அதிகம் கஷ்டத்தை அதிகரிக்குமே தவிர, அவை தேவையோ என்று கூட சற்று வாத்சல்யத்துடன் நினைத்திருக்கலாம். குமுதினியின், அதாவது ரங்கநாயகியாரின் குடும்பம் சாஸ்த்ரோக்தனமான மிகவும் ஆச்சாரமான குடும்பம் அதுவும் கூட்டுக் குடும்பம் என்ற வகையிலும் இந்த விஷயங்கள் நோக்கப்படவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவர் ஆதரவுடன் அதிகாலை தொடங்குவதற்கு முன்பே யாரும் அறியாமல் எழுதிவிட்டு, அவைகளைத் தன் கணவரிடம் ஒப்படைப்பாராம். (‘பிரம்மாவின் பட்சபாதம்’, இவருடைய முதல் படைப்பு என்பர்) அவரும், அதனை ரகசியமாகவே தன் மாமனாரான ஸ்ரீனிவாச ஆச்சாரியாரிடம் கொடுக்க, மாமனார் தன்னுடைய வீட்டு விலாசம் வைத்து, ஆனந்தவிகடனுக்கு அனுப்பி வைப்பார்.குமுதினி என்ற புனைபெயரில் வெளியிடப்படுவதால் இவரது இல்லத்தில் எவருக்கும் இது பற்றி தெரியவே தெரியாது. ரங்கநாயகியாரின் ஓரகத்தியார்களே இவரிடம் ‘உனக்குத் தெரியுமோ, யாரோ குமுதினியாம், நன்றாக கட்டுரை, கதை எழுதுகிறாளாம்’ என்று தன்னிடம் சைகை மூலம் அல்லது கெட்டியாகப் பேசும்போது இவருக்கு உள்ளூற குஷியும் பயமும் கூட கலந்து இருக்கலாம். ஆனந்தவிகடன் சன்மானமாக மூன்று ரூபாய் அல்லது ஐந்து ரூபாய்கள் இவர் மாமனார் வீட்டு விலாசத்திற்கு வரும். அதைத் திரும்பக் கொண்டு வந்து ரகசியமாக மாப்பிள்ளையிடம் சேர்ப்பிக்கப்பட்டு இவருக்கு வந்து சேரும். ஆனால் இந்த லீலை ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அதே சமயத்தில் குமுதினி என்ற பெயரும் புத்தகவாசகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடவே, இவர் ‘குட்டு’ உடைபட்டபோது, இவருடைய இல்லத்தாருக்கும் ஆச்சரியம் அதிகம் வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான். அதைவிட அதிசயம் என்னவென்றால், மாமியாரே தன் மருமகளைப் பாராட்டி அண்டை வீட்டாருடன் பேசும் நிலையிலும் அவர் எழுத்தும் பிரபலமும் குமுதினியாரை வைத்துவிட்டது. இப்போது புரிந்திருக்கலாம், கல்கி ஏன் தன் முன்னுரையில், ‘இவர் யாரோ, என்ன பேரோ, எந்த ஊரோ எனப் பிரமித்துப் போனதாக’ சங்கீத பாணியில் எழுதினது. சரி.. இப்போதாவது அவரது எழுத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமே..குமுதினியார் சில சின்ன சின்ன விஷயங்களை வைத்து அதனால் நாம் படுகிற அவதிகள் பற்றி மறைமுகமாக நையாண்டித் தனம் கலந்து ஒரு கட்டுரை எழுதினார். இது ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இந்தக் கட்டுரையைப் படித்ததும் நம் இல்லத்தரசிகளிடமே அதைக் காண்பித்துக் கேட்டால் போதும்.. ‘ஆமா! அந்த மாதிரி சேல்ஸ்மேன் ஒருத்தனைக் கண்ல பட்டா அனுப்பிச்சு வையுங்க.. இந்த வீட்ல இந்த மாதிரி விஷயங்களை நான் பார்த்து பார்த்துச் செய்யறுதுக்குள்ளே போதும் போதுமென்றாகி விடுகிறது.’ என்பார்கள். ரொம்ப சின்ன விஷயம்தான். குமுதினியாரின் எழுத்து மூலம் அதைப் படியுங்களேன். கட்டுரை பேரே சில்லறை சங்கதிகள் லிமிடெட் தான்..’சில்லறைச் சங்கதிகள் லிமிடெட் நான் சென்னைக்குப் போகும் சமயமெல்லாம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே என்னுடைய பாட்டி எனக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிப்பார். அவற்றில் ஒன்று ‘கதவை எப்போதும் தாளிட்டு வா.. இல்லாவிட்டால், அதை வாங்கு, இதை வாங்கு என்று தொந்திரவு செய்து கொண்டே இருப்பார்கள்’ என்பது. நானும் அவள் சொல்லுகிற விதமே செய்வது வழக்கம். அப்படிச் செய்தும் கூட சிற்சில சமயம் கதவைத் தட்டி உள்ளே இருப்பவர்களைக் கூப்பிட்டுத் தங்களுடைய போலிச் சரக்குகளை விற்கப்பார்க்கும் பலரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால், இந்த முறை ஒருதினம் பகல் வேளையில் வாசற்கதவை யாரோ தட்டின சமயம் நான் மிக ஜாக்கிரதையாக கதவை அரை அங்குலத்திற்குத் திறந்து எட்டிப்பார்த்தேன். அங்கு யாரோ புது மனிதன் நிற்பதைக் கண்டு, ‘ஏதாவது விற்க வந்திருக்கிறாயென்றால் எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றேன். ‘நான் விற்க வந்திருப்பது சாமான்களல்ல.. சௌகரியத்தையே விற்க வந்திருக்கிறேன்.. உங்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால் ஒரு பைசா கூட கொடுக்கவேண்டாம். நான் சில்லறைச் சங்கதிகள் லிமிடெட் கம்பெனியின் ஏஜெண்ட்.’ என்றான் வந்தவன்.

நான் கதவை மற்றோர் அரை அங்குலம் திறந்து ‘என்ன’ என்று கேட்டேன். ‘ஒவ்வொரு மாதமும் ஒரு சொற்பத் தொகையை நீங்கள் எங்களுடைய கம்பெனிக்குக் கட்டினால் போதும்.. உடனே எங்களுடைய கம்பெனி ஆட்கள் ஒருவன் மூலமாக உங்களுடைய சில்லறை விஷயங்களை எல்லாம் கவனித்துக் கொள்ளும். குழாயிலே ஜலம் வீணாகக் கொட்டாமல் அவ்வப்போதுப் பார்த்துக் குழாயை மூடி, அநாவசியமாக எரியும் எலெக்ட்ரிக் விளக்குகளை அணைத்து, எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்பவர் மிகுதியாய் ‘வைத்துவிட்டு’ப் போகும் சீயக்காய் ஜலத்தை மோட்டார் டிரைவருக்குக் கை கழுவக் கொடுத்து, பல் தேய்க்கும் பேஸ்ட் உலர்ந்து போகாமல் அதனுடைய டியூப் மூடியைத் தேடிப் பார்த்து அதை எப்போதும் இறுக மூடிவைத்து, ஸோப்புக் கிண்ணத்தின் அடியில் தங்கும் ஜலத்தை வடித்து, வாடின வாழை இலைகளைப் பொறுக்கி முன்னால் செலவிற்கு எடுத்துக் கொடுப்பார்கள்’

‘இவ்வித தொண்டு செய்கிற கம்பெனி ஒன்று வேண்டியதுதான்’ என்றேன்.

உங்களுடைய வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்வதற்கு வேண்டிய உதவியெல்லாம் நாங்கள் செய்யத் தயார். வீட்டில் மளிகை சாமான்கள் முற்றிலும் தீர்ந்து போவதற்கு இருபத்துநான்கு மணி நேரத்திற்கு முன்பே, புதுச் சரக்கு வாங்கி வைப்பதற்கு உத்தரவாதம் தருகிறோம். புருஷர்களின் வேஷ்டி, ஷர்ட்டு முதலியவைகளைக் கிரமமாக உபயோகிக்க எடுத்துக் கொடுத்து, ஜதையில் ஒன்று மாத்திரம் முன்னாடியே கிழிந்துவிடாமல் பார்த்துக் கொள்வோம். இது மெத்தை உறை, தலையணை உறைகளுக்கும் சேர்ந்ததாகும். நாளடைவில் எங்கள் கம்பெனியால் உங்களுக்கு ஏற்படும் பண லாபத்தைக் கவனித்தால், எங்கள் கம்பெனிக்குக் கொடுக்கும் சொற்பத் தொகையைப் பொருட்படுத்தமாட்டீர்கள். பெண்களுக்கு அவர்கள் பழைய ரவிக்கைகளைக் கண்டு அலுப்பு ஏற்படுவதற்கு இரண்டு நாள் முன்பாகவே அவற்றை எடுத்துத் தூர எறிந்து விடுவோம். சாவிக்கொத்தை அடிக்கடிப் பார்த்து உபயோகமற்ற சாவிகள் பல அதில் சேர்ந்து கனமாகிவிடாமல் பார்த்துக் கொள்வோம். எந்தச் சாவி அநாவசியமோ அதை உடனே எடுத்து எறிந்து விடுவோம்’


“அவ்விதம் செய்ய இதுவரை ஒருவரும் துணிந்ததே கிடையாதே!” என்றேன்.

“ஆமாம். மற்றும் நாங்கள் கவனிக்கும் சில்லறை விஷயங்களாவன: தினசரிப் பத்திரிகையின் பக்கங்களைச் சரியாகப் பார்த்து மடித்து வைப்போம். அஞ்சனப் பெட்டி, எண்ணெய் ஜாடி, நெய், சர்க்கரை ஜாடிகளை அவ்வப்போது பார்த்து மூடுவோம். அலமாரி, பீரோக்களின் கதவுகளை மூடுவோம்.. சீப்பில் தங்கும் மயிர், அழுக்கு முதலியவற்றை நீக்குவோம்..”

“ஆச்சரியமாயிருக்கிறதே! உங்களுடைய கம்பெனிக்கு மாதம் எவ்வளவு கட்டவேண்டும்?” என்று நான் கேட்டேன்.


“இத்துடன் இன்னும் முதல் கிளாஸ் மெம்பரானால் அதற்கு வேறு பிரத்யேகத் தொண்டு செய்வோம். அவை, உங்கள் வீட்டில் யாராவது உங்களைப் பார்க்கவந்தால் அச்சமயம் எங்களுடைய கம்பெனியின் ஆட்கள் ஒருவர் கூட இருப்பார். உங்களில் ஒருவர் ‘அன்றைக்கு நான் ஏதோ கேள்விப்பட்டேன்.. ..’ என்றாவது, ‘ஏதோ படித்தேனே.. ..’ என்றாவது சொல்லிவிட்டு, கேள்விப்பட்டதும், படித்ததும் என்னவென்று ஞாபகத்திற்கு வராமல் கஷ்டப்படும் சமயம், எங்கள் கம்பெனிக்காரர் உடனே, ‘நீங்கள் அன்றைக்குக் கேள்விப்பட்டது கோடி வீட்டுச் சுப்பம்மாளின் தம்பி மனைவிக்கு சீமந்தம் என்பதே’ என்றும், ‘நீங்கள் படித்தது முந்தாநாள் பத்திரிகையில் அடுத்தவாரம் சென்னையில் மழை அதிகமாயிருக்கும் என்ற செய்தியே’ என்றும் ஞாபகப்படுத்துவார்.”

“நிஜமாகவே இதெல்லாம் செய்வீர்களா?” என்று நான் கேட்டேன்.

“இது மாத்திரமா.. இன்னும் எவ்வளவோ செய்வோம். உங்கள் சிரமமெல்லாம் போய்விடும். சந்தோஷமாய், கவலையில்லாமல் ஜீவிக்கலாம்!” என்றான்.

நான் கதவை நன்றாகத் திறந்தேன். “உள்ளே வந்து உங்கள் கம்பெனியின் விலாசத்தையும் சந்தா விகிதத்தையும் உடனே சொல்லுங்கள்” என்றேன்.பகுதி 3

குமுதினியார் சொன்னது, எழுதினது அந்தக் காலகட்டத்தில் என்றாலும் இன்னமும் மேலே கண்ட சில்லறைத் தொந்திரவுகள் நமக்கு இருந்துகொண்டே இருக்கின்றனதான். ஆனால் பாருங்கள்.. இந்த சில்லறை விஷயங்கள் எல்லாம் நம் பார்வையில் தினம் தான் படுகின்றன.. ஆனால் நம் கண்ணுக்குத் தெரியவில்லையோ.. அல்லது தெரிந்தும் புத்தி அதை ஏற்றுக் கொள்வதில்லையோ.. என்னவோ.அடுத்து நாம் பார்க்கப்போவது ராமரைக் கலியாணம் செய்து கொண்டு தன் புக்ககம் வந்த சீதை, அயோத்தியிலிருந்து தன் தாய்க்குக் கடிதம் எழுதும் விஷயங்கள் பற்றி.. குமுதினியார் எழுதியது ஒரு சின்னக் கடிதக் கட்டுரைதான்.. ஆனால் ராமாயணத்தின் ஒரு அழகான பகுதியையே அதில் காட்டிவிடுவார்..சீதா பிராட்டியின் கடிதங்கள்

கடிதம் 1

மிதிலாதிபதியான ஜனகரின் பட்டமகிஷிக்கு அயோத்தியிலிருந்து சீதாதேவி எழுதி விடுத்த கடிதம். அம்மாவுக்கு அநேக தண்டனிட்டு அடியாள் சீதை வணக்கத்துடன் விக்ஞாபித்துக் கொள்வது.. உபயகுசலோபரி.. நீ அனுப்பின ஆட்களும் ரதமும் வந்தன. தீபாவளிக்கு எங்கள் எல்லோரையும் மிதிலைக்கு வரவேண்டுமென்று நீ ஆக்ஞாபித்ததாகத் தூதுவன் கூறினான். இங்கே நிகழ்வதெல்லாம் அறிந்தால் அவ்விதம் நாங்கள் வருவது எவ்வளவு சிரமமான செய்கையென்று உணர்வாய். மாமனாரவர்கள் சதாகாலமும் ‘மாண்டவியின் மாமியார் கைகேயி தேவி’யின் கிருகத்திலேயே இருக்கிறார். என் மாமியாருக்கு ‘அசாத்தியக் கோபம்’. அதை வெளியே காண்பிக்காமல் பூஜையிலும் பிராம்மண போஜனத்திலும் இறங்கியிருக்கிறார். விடியற்காலயிலேயே எழுந்து ஸ்நாநம் செய்துவிட்டு அவருக்கு உதவி செய்யவேண்டியதாக இருக்கிறது. நாள் முழுதும் வேலை. சற்றும் ஓய்வு கிடையாது.


கலியாணமாகி வந்ததுமே மைத்துனர் பரதரை அவர் மாமா வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். சத்ருக்கனர் விஷயம் தெரிந்ததுதான், அண்ணாவின் பின் ‘வால்’. அவர்கள் திரும்பிவந்து, நாங்கள் எல்லோரும் அனுமதி பெற்றுக் கொண்டு மிதிலைக்குப் புறப்பட்டால் தீபாவளிக்கு வந்து சேர முடியுமோ என்னவோ தெரியாது. சந்தேகமாயிருக்கிறது. எல்லாம் யோசித்ததில் தீபாவளியை அயோத்தியிலேயே கழிப்பது உத்தமம் என்று உன் மாப்பிள்ளை தீர்மானித்திருக்கிறார். இதைப் பற்றி மாமனாரவர்களிடமிருந்து அப்பாவுக்கு ஒரு கடிதம் வரும். எங்களுக்குப் பீதாம்பரங்களை இங்கே அனுப்பு. உன் மாப்பிள்ளைக்கு மஞ்சள் பட்டுதான் பிடிக்கிறது. ஆகையால் அதையே வாங்கி அனுப்பவும்.


இங்கே எங்கள் மாப்பிள்ளை ருச்யசிருங்கருக்குத் தீபாவளிக்காக ஒரு புதுமாதிரி சுவர்ண கங்கணம் செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. அந்த மாதிரி உன் பெரிய மாப்பிள்ளைக்கு ஒன்று அனுப்பு. இதைக் கொண்டு வரும் ஆட்களுடன் அவ்வித வேலை தெரிந்த தட்டான் ஒருவனைக் கூட்டியனுப்பியிருக்கிறேன். இந்த விஷயம் ‘நான் எழுதினதாகத் தெரியவேண்டாம்’.


எனக்கு சிந்தூர வர்ணப் புடவை தயாரித்திருப்பதாக எழுதியிருக்கிறாய். இங்கே அயோத்தியில் எல்லாரும் ரொம்ப நாகரீகமாக துணி உடுத்துகிறார்கள். யவன தேசத்து வர்த்தகர்கள் கொண்டுவரும் பீதாம்பரங்களாம். கரை சின்னதாகப் போட்டு மிக நேர்த்தியாயிருக்கின்றன. நாத்தனார் சாந்தை நீலாம்பர வர்ணத்தில் ஒன்று உடுத்தியிருந்தாள். எனக்கு அது மாதிரி வேண்டுமென்று விருப்பமாயிருக்கிறது. நீ எனக்குக் கலியாணத்தின்போது வாங்கிக் கொடுத்த புடவைகளுக்கெல்லாம் கரை அதிக அகலம். அவைகளை இப்போது எனக்கு உடுத்துவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. எல்லாரும் பரிகாசம் செய்கிறார்கள். அந்த மாதிரி வாங்கி அனுப்பாதே. பூஜ்யரான தந்தைக்கு என் நமஸ்காரங்கள்.
விநயத்துடன் இங்ஙனம்
சீதை


கடிதம் 2

அம்மாவிற்கு விக்ஞாபனம். க்ஷேமம். உனக்குக் கடிதம் எழுதிய பிறகு நாத்தனார் சாந்தையைப் பார்த்தேன். நீலாம்பர வர்ணம் ஸ்திரமாக இருப்பதில்லையாம். ‘வெளுத்து’ விடுகிறதாம். ஆகையால் எனக்கு அந்த வர்ணத்தில் பீதாம்பரம் வேண்டாம். முதலில் உத்தேசித்தவிதம் சிந்தூரவர்ணப் புடவையையே அனுப்பு. அல்லது தாம்பர வர்ணத்தில் ‘வெளுக்காமலிருக்கும்’ என்ற உத்தரவாதத்துடன் பீதாம்பரம் அகப்பட்டால் வாங்கியனுப்பவும். ஒருமுறை உடுத்திய வர்ணத்தையே திரும்பத் திரும்ப உடுத்துவதென்றால் அலுப்பாயிருக்கிறது. உன் சௌகரியப்படி செய். நான் தொந்திரவு கொடுக்கவிரும்பவில்லை. நீலாம்பர வர்ணம் மட்டும் வாங்காதே..
அடியாள் சீதை


கடிதம் 3

அம்மாவிற்கு விக்ஞாபனம். க்ஷேமம். திடீரென்று மாமனாரவர்களுக்கு யோசனை தோன்றியிருக்கிறது. உன் மாப்பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போவதாகச் சொல்கிறார். பந்தலில் உங்கள் ஆசீர்வாதத்துடன் புடவை வைக்கவேண்டுமே.. எந்த மாதிரி அனுப்புகிறாய்? நவமல்லி வர்ணம் நன்றாயிருக்குமா. பந்தலில் வைப்பதாகையால் நன்றாயிருக்கவேண்டும். ‘மான் புள்ளிகள்’ மாதிரி வேலைப்பாடு செய்த புடவைகள் சட்டென்று அகப்படுமா? அல்லது முன்னால் சொல்லிப் போடச் சொன்னால் மட்டும் கிடைக்குமா? குயில் வர்ணம் மயில் வர்ணமெல்லாம் மாமியாரவர்களுக்குப் பிடிக்கிறதில்லை. வ்யாக்ரவர்ணம் வேஷம் போட்டாற் போலிருக்கும். என்ன செய்யப் போகிறாயோ, எனக்குத் தெரியவில்லை. ‘இந்தப் புடவைகளைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து என் மூளை கலக்கமடைந்துவிட்டது’. ஒரு ‘தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை’. உசிதப்படி செய்.
உன் பிரிய சீதை.


குறிப்பு: அல்லது தீபாவளிப் புடவை, பட்டாபிஷேகப் புடவை இரண்டையும் சேர்த்து ஒரு பெரிய புடவையாக வாங்கி அனுப்பு.


கடிதம் 4

அம்மாவிற்கு,
ஒரு புடவையும் அனுப்பவேண்டாம். ‘எல்லாம் தீர்ந்துவிட்டது’. நாங்கள் வனவாசம் செய்யப் போகிறோம். பரதருக்குத்தான் பட்டாபிஷேகம். இதைக் கொண்டு வருவபவன் எல்லா விவரமும் சொல்வான். எனக்கு ஒரே ஒரு ‘மரவுரி’தான் இருக்கிறது. காட்டில் மழையில் நனைந்துவிட்டால் கட்டிக் கொள்ள வேறு கிடையாது. ஆகையால் முடிந்தால் ஒரு மரவுரி அனுப்பு. சௌகரியப்பட்டால் வெத்தலும் அப்பளமும் அனுப்பு. உன் அப்பளந்தான் நன்றாயிருக்கிறதென்று மாப்பிள்ளை சொன்னார். நாங்கள் சித்ரகூடத்திற்குப் போகிறோம். இது ஒருவருக்கும் தெரியவேண்டாம். அவசரம்.
சீதை


குறிப்பு: இனி புடவைகள் வர்ணத்தைப் பற்றி சிந்திக்கவேண்டாம். எனக்கு மனதில் அதிக நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. பெண்களெல்லாருமே வனவாசத்துக்குப் போனால் எவ்வளவு நலம் என்று தோன்றுகிறது. வாழ்க்கையின் கவலையில் பாதி குறைந்துவிடும்.
சீதை


பகுதி 4

இந்தக் கட்டுரையை குமுதினியார் எழுதியிருப்பதால் அவருக்குப் புடவைகள் மீது தீராத ஆசை என்று யாரும் எண்ணவேண்டாம். அவர் காந்தீயவாதி.. காந்தி கதர் உடுத்தச் சொன்னார் என்பதற்கு நல்ல தடிப்பாக கதர்புடவை மட்டுமே கட்டுபவர். ஆனால் பொதுவாக மகளிருக்கு ஆடைகள் மேல் உள்ள அபிலாஷையை யாருமே புண்படாதவகையில் சீதாபிராட்டி மூலமாக ஒரு கடித வடிவில் நையாண்டி செய்து எழுதுவது என்பது இவர் ஒருவருக்கே கை வந்த கலை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பெண்கள் விஷயத்தை ஒரு பெண்மணியே எடுத்துச் சொல்லும்போது அது கூடுதலாகவும் சிறப்பு பெறுமென்றும் அறிந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். இப்படி இதிகாசக் கதாநாயகிகளை, இந்தக் காலத்தில் இருக்கும் பெண்மணியின் மனநிலையையும் சேர்த்துப் பார்த்து எழுதுவதில் குமுதினியார் சிறந்து விளங்கியிருக்கிறார்.இப்படித்தான் தமயந்தி கூட தன் தாய்க்கு கடிதம் எழுதுவாக ஒரு கட்டுரை எழுதுகிறார். நகைச்சுவையே பிரதானம்.வேறு ஒன்றுமில்லை. தமயந்தி சுயம்வரத்தில் சில வரங்கள் நளனுக்குக் கிடைக்கப்பெற்றதில் சமையல் கலை அதிலும் ருசியான சமையல் விஷயங்களில் நளனார் அத்துப்படி. இதனால் அந்தப்புரத்தில், அதுவும் மன்னாதி மன்னர் நளன் சாப்பிடும் விஷயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் வந்துவிடுவதாகவும், இந்த பதார்த்தம் சரியாக சமைக்கப்படவில்லை, இந்த புளியோதரையில் வெந்தயப்பொடி கூடுதல், இதை இன்னமும் சுவையாக சமைத்திருக்கலாம் என்றும் சமையல் செய்வோரிடம் அடம் பிடிப்பதாகவும், அவர்களெல்லாம் இவருக்குப் பயந்து ஓடிவிட்டதாகவும், இதனால் கணவன் சரியாக சாப்பிடுவதில்லை, சமயத்தில் பசி பொறுக்கமுடியாமல் திருட்டுத்தனமாக நள்ளிரவில் சமையல்கட்டுக்குச் சென்று தானே சமைத்து உண்பதாகவும் இந்த விஷயம் யாருக்காவது தெரிந்தால் இது ஒரு அரசருக்கு நல்லதா என்று கேட்பார்கள் என்றும் அம்மாவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறாள். புளியோதரையில் வெந்தயப்பொடி போடும் விஷயம் கூட தெரியாத தனக்கு சமையல் விஷயம் தெரியாதைகையால், என்ன செய்வது என்று புரியாமல் முழிப்பதாகவும், தமயந்தி கடிதம் எழுதுகிறாள்.அத்துடன் அவள் அம்மாவில் வீட்டில் நிறைய தொந்திரவு கொடுத்துக் கொண்டிருக்கும் அம்மாவின் அத்தைப் பாட்டி சும்மாதானே இருக்கிறாள்.. அவளை இங்கே அனுப்புக’ என்றும் கடிதம் போடுகிறாள். அதன்படி அத்தைப்பாட்டியும் நளன் வீட்டு (அரண்மனை) சமையலறையில் ஆஜர். இதன் பிறகும் தமயந்தி தன் அன்னைக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அதை நீங்களே படியுங்கள்:

“அம்மா!


அத்தைப் பாட்டி வந்து சேர்ந்தாள். அன்றைய தினமே எனக்கு சுதினமாயிற்று. அவள் சமையல் செய்கிறாள். அரசர் வாய் பேசாமல் சாப்பிட்டுவிட்டுப் போகிறார். காரணம், அவள் சமைப்பது என்னவென்று அறியமுடியாததே.. அதை அறிந்தாலல்லவா அதில் குற்றம் சொல்லலாம்? அத்தை அசாத்திய செட்டு. முதல்நாள் விஞ்சிய பதார்த்தங்களைக் கூட வீணாக்குவதில்லை. மிஞ்சிய பருப்பு, ரசம், கீரை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் போட்டு ஒரு புதுவிதக் குழம்பாக செய்து விடுகிறார். இதில் என்ன சரக்குகள் கலந்திருக்கின்றன.. எதனால் இவ்வித வாஸனை உண்டாகிறது என்பதை எவராலும் கண்டுபிடிக்கமுடிவதில்லை.. முன்பின் பார்த்திராத வஸ்துக்களையெல்லாம் அரசர் உட்கொண்டுவிட்டு, அது எவ்விதம் சமைக்கப்பட்டிருகிறெதன்று சிந்தனையிலேயே ஆழ்ந்தவராய் கை கழுவிச் செல்கிறார். எல்லாரும் சௌக்கியமாய் இருக்கிறோம்.
இப்படிக்கு உன் பிரிய தமயந்தி”குமுதினியார் கதைகள் கட்டுரைகள் எத்தனைக்கத்தனை புகழ்பெற்றதோ அவர் எழுதிய நாடகங்களும் அவர் எழுத்தின் புகழ் பாடின. ‘விஸ்வாமித்திரர்’ என்ற ஒரு நாடகம், ஒரு பெண்ணின் அசத்தலான புத்தி சாதுர்யத்தையும், நகைச்சுவையையும் ஒன்றே கலந்து எழுதப்பட்டிருக்கும். அரிச்சந்திரன் கதைதான் நாடகத்துக்குப் பிரதானம், என்றாலும் அரிச்சந்திரன் பாத்திரத்துக்கு இந்த நாடகத்தில் வேலையே இல்லை என்பதுதான் இங்கு விசேஷம். கதாநாயகன், கதாநாயகி எல்லாமே சந்திரமதிதான். அரிச்சந்திரன் மனைவியான சந்திரமதி தன் கணவன் அநியாயமாக விசுவாமித்திரரின் சாபத்துக்கும் கோபத்துக்கும் பலியாவதைக் கண்டு பொறுக்காமல், தங்கள் நாட்டைப் பிடுங்கிக்கொண்ட விசுவாமித்திரரையே, தன் புத்தி சாதுர்ய திட்டங்களால் வீழ்த்தி எப்படி அவராகவே திருப்பித் தரவைக்கிறாள் என்பது தான் நாடகம். குமுதினியாருக்கு சத்தியவான் ‘சாவித்திரி’யை மிகவும் பிடிக்கும். ஒரு பெண் தீவிரமாக முயற்சித்தால், மானிடர் கண்களுக்கு தெரியாத யமகிங்கரர்களையும் பின் தொடர்ந்து செல்லலாம் என்று வழிகாட்டியவள் சாவித்திரி. கடைசியில் தன் புத்தி சாதுரியத்தால் யமனையே பணியவைத்தவள் அந்த சாவித்திரி என்ற வகையில், தமயந்தி பாத்திரத்தையும், எவருக்குமே பணியாத விசுவாமித்திரரையும் பணியவைக்கும் யுக்தியையும் அவள் மூலம் தெரிவித்து, ஒரு உண்மையான ‘பெண்ணியத்தை’ தம் எழுத்துக்கள் மூலம் உணர்த்தியவர்.திவான் மகள் என்பது குமுதினி எழுதிய ஒரே நாவல். 1942 இல் எழுதப்பட்ட இந்த நாவல் அப்போதே ஒரு புரட்சிகரமான பெண்ணீய நாவல் எனக் கருதப்பட்டது. காரணம் அவர் அந்த நாவலில் ஜாதி மறுப்பு, கலப்புத் திருமணங்களை ஆதரித்து எழுதியவை. சமூகப் பொறுப்பு ஒவ்வொரு பெண்மணியிடமும் வேண்டும் என நினத்து இந்த நாவலை எழுதினார். குழந்தை வளர்ப்பு, அறிவியல் சிந்தனை இவை கட்டாயமாக பெண்ணின் வாழ்வில் ஒரு மாபெரும் அங்கமாக இருக்கவேண்டும் எனும் அவர் ஆதங்கம் இவர் எழுத்தில் புரியும்.மொழிமாற்ற நூல்களையும் நமக்குத் தந்தவர் குமுதினியார். காந்தீயத் தாக்கத்தால் வார்தா ஆசிரமத்துக்குப் பலமுறை சென்று தங்கியவர். காந்தியத் தத்துவமான கிராம இயக்கம் இவரை வெகுவாக கவர்ந்தது. ஜே.சி. குமரப்பா வின் ஆங்கில நூலான வில்லேஜ் மூவ்மெண்ட் இவரால் தமிழாக்கம் செய்யப்பட்டது. குமரப்பாவின் இன்னொரு நூல், பிரெசிப்ட் ஆஃப் ஜீஸஸ், ஏசுநாதர் போதனை என்ற பெயரில் மொழிமாற்றம் செய்தார். ரவீந்தரநாத தாகூரின் இந்தி நூலான ‘யோகா யோக்’ நூல் இவரால் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆனந்தவிகடனில் தொடராக வெளியிடப்பட்டது. இவர் வெளிநாட்டுப் பயணங்களில் தான் கண்டதை பயணக் கட்டுரைகள் மூலம் அழகாக எடுத்துச் சொன்னவர். காந்தீயம் இவரை வெகுவாக கவர்ந்ததால், அந்த சேவை தங்கள் ஊரிலும் தொடரப்பட ‘சேவா சங்கம்’ என்ற பெயரில் 1948 இல் திருச்சியில் சமாஜம் அமைத்தவர்.காந்தியின் திடீர் மரணம் குமுதினியாரை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அடுத்த சிலவருடங்களில் அவர் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு துயரநிகழ்ச்சி அவர் எழுதும் ஆற்றலை வெளிப்படுத்தமுடியாமல் செய்துவிட்டது. நம்மாழ்வார் பாடல்களை (நூறு பாடல்கள் மட்டும்) பிற்காலத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பாரதி தமிழ் வளரவேண்டுமானால், மற்ற மொழிச் செல்வங்களைத் தமிழுக்கும், தமிழ்ச் செல்வங்களை மற்ற மொழிகளுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்று சொன்னபடி செய்தவர் குமுதினியார். 1905 ஆம் ஆண்டில் தமிழ் இலக்கிய வானில் உதித்த ஒரு பெண் நட்சத்திரம் 1986 ஆம் ஆண்டில் தன்னை மறைத்துக் கொண்டது.சமீபத்தில் 2005 ஆம் ஆண்டில் குமுதியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடிய அவர் கும்பத்தினர், அவர் எழுதிய தமிழ் நூல்களை ‘A Kumudhini Anthology’ என்ற பெயரில் டாக்டர் பிரேமா நந்தகுமாரின் மகளும், குமுதினியாரின் பேத்தியுமான அஹனா லக்ஷ்மி மூலம் மொழி மாற்றம் செய்துள்ளனர். குமுதினியார் எந்த ஒரு கட்டுரை என்றாலும், அதன் முடிவுக்குப் பின்னால் குறிப்பு அல்லது பின் குறிப்பு ஒன்று எழுதுவார். அதைப் போலவே, குமுதினியாரைப் பற்றிய கட்டுரை இது என்பதனால், நானும் கூடவே அவர் வழியில் ஒரு பின் குறிப்பு கொடுக்க விரும்புகிறேன்.பி.கு.
2007 ஆம் ஆண்டில், எழுத்தாளர் தேவன் அவர்களில் ஐம்பதாவது நினைவு ஆண்டு என்பதால், அவரைப் பற்றிய ஒரு தொகுப்புக் கட்டுரை ஒன்றை எழுதினேன் (மேற்கண்டதைப் போல). எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் தலையானவர் தேவன். இதில் என்ன பொருத்தம் என்றால் குமுதினியின் எழுத்தும், தேவனின் எழுத்தும் நிறைய விஷயங்களில் ஒத்துப் போகும் என்பதுதான். இருவரும் ஒரே சமயத்தில் பத்திரிகையில் எழுதத் தொடங்கி, எழுதி முடித்தவர்கள் கூட. அகால மரணம் இளமையிலேயே தேவனை அள்ளிக் கொண்டு போனது ஒரு துயரமான நிகழ்ச்சி. தேவன் மேடை நாடகங்கள், சரித்திரத் தொடர் எழுதவில்லை. குமுதினியார் நாடகங்கள் தேவனின் தொடர்கதைகளைப் போலவே புகழ்பெற்றவை. இருவருமே ஜனரஞ்சகமான எழுத்திலும் சரி, நகைச்சுவையிலும் சரி, ஆன்மீக விவரங்களிலும் சரி, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல, என்பதை இருவர் எழுதிய எழுத்துக்களையும் படித்தவர்களுக்குப் புரியும். தேவன் ஆண்கள் உலகத்தில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் என்றால், பெண்கள் உலகத்தில் குமுதினி அந்தச் சமயத்திலே தமிழ் எழுத்தில் ஒரு மகாராணி என்று மிகத் தைரியமாகச் சொல்லலாம்.


திவாகர்.


பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 10 நவம்பர் 2009, 17:53 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,062 முறைகள் அணுகப்பட்டது.