ஜெயகாந்தன்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தம் நண்பர் ஜெயகாந்தனுடன் நடந்த  உரையாடல்களை  ஒரு  சுவையான கட்டுரைத் தொடராகத் தருகிறார் சீதாலட்சுமி அம்மா .


பொருளடக்கம்

சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன்

சீதாலட்சுமி - மின்னஞ்சல் முகவரி seethaalakshmi@gmail.com


பகுதி 1

21-12-2009

டாக்டர். ஜெயகாந்தன்!

பட்டம் வழங்கப் போவதாக செய்தி மட்டும்தான் வந்திருக்கின்றது. ஆனால் ஏனோ உடனே அவர் பெயருடன் டாக்டர் பட்டத்தை ஒட்டிப் பார்க்க மனம் விழைகின்றது.

பள்ளிப்படிப்பு கூட முடிக்காதாவர்.

அச்சகத்தில் அச்சு கோர்க்கும் சாதாரண தொழிலாளி.

இவருக்குள் எப்படி இத்தனை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன!.வெளியில் சிதறிக் கிடப்பவை, சிந்தியவை இவர் பார்வைக்கு மட்டும் உயிரோட்டமாகத் தெரிகின்றதே!

மனிதர்களின் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி எங்கிருந்து பெற்றார்!?

இவரைப்பற்றி எழுத என் மனம் கட்டளையிட்டுவிட்டது. என் அன்புக்குரிய நண்பர். 40 ஆண்டுகால நண்பர். குடும்ப நண்பர். எத்தனை சந்திப்புகள்! நாங்கள் கழித்த பொழுதுகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை.ஒருகாலத்தில் எனக்குள் ஒரு ஆசை இருந்தது.

ஜான்சனைப்பற்றி பாஸ்வெல் எழுதியது போல் ஜெயகாந்தனின் உரையாடல்களைத் தொகுத்து எழுத விரும்பினேன். கையிலே டேப் ரிகார்டர் சகிதமாகச் சுற்றியிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் பதிவு செய்திருக்க முடியாது. சிறு அசைவும் கூட அவரிடமிருந்து திடீரென்று வெள்ளமென வரும் வார்த்தைகளின் ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பொழுதே எழுதியிருந்தால் இந்த சமூகத்திற்கு ஓர் அரிய நூல் கிடைத்திருக்கும். இப்பொழுது என் நினைவுப் பெட்டகத்தில் தேடிப் பார்க்கும் வலுக் கூடக் குறைந்து விட்டது. இருப்பினும் தெரிவதையாவது பதிவு செய்ய வேண்டியது என் கடமையெனக் கருதுகின்றேன்.

என் நட்பு வட்டம் மிகப் பெரியது. நான் சந்தித்தவர்களில் உரையாடலில் மிகச் சிறந்தவர் ஜெயகாந்தன்.

HE IS ONE OF THE BEST CONVERSATIONALISTS IN MY LIFE. என்னைப் பற்றி நன்குணர்ந்த , எங்கள் குடும்ப நண்பர் பேராசிரியர் அரசு அவர்கள் கூறியது. ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர். ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர்.

”இந்த இரண்டினைப் பற்றியும் நிறைய எழுதிவிட்டடர்கள். அவருடன் பேசும் பொழுது அவரிடம் கண்டவைகளை, உணர்ந்தவைகளை அவருடன் பழகியவர்கள் எழுத வேண்டும். சீதாம்மா, அவர் உங்களுக்கு நீண்ட கால நண்பர். நினைவில் இருப்பவைகளைப் பதிவு செய்யுங்கள். ஏற்கனவே நீங்கள் மீண்டும் எழுதத் தாமதித்துவிட்டீர்கள்.

தொடர்ந்து உங்களுடன் பழகிய பல அறிஞர்களைப் பற்றி எழுத வேண்டும். உங்கள் அனுபவங்களையும் பதிவு செய்யுங்கள் “ நான் எழுதும் நினைவலைகள் பிறந்த கதை இதுதான்!

சீதாம்மாவின் குறிப்பேட்டில் இனி என்னுடன் பழகிய பலரைப்பற்றி எழுத நினைத்துள்ளேன்.

வரிசையில் முதலில் வந்துவிட்டார் ஜெயகாந்தன்.

அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று நிறைய பேசினேன், எங்களிடையே நட்பு வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும், பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான்.பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.. நாங்கள் இருவரும் அச்சமில்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். ஆடம்பரமில்லாதவர்கள்.

 அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள். மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள், ஏளனமாகக் கருதப் பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்து உண்மைகளை சத்தம் போட்டுக் கூறியவர்.

 அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன. நான் செயலில் இறங்கினேன். இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது.அவர் எண்னங்கள் எழுத்துக்களில் வெளிப்பட்டன

என் பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது மனங்களில் வரைந்த சித்திரம்.  உணர்வுகள்.

என்னுடைய பணியில் எனக்குக் கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம். என் சாதனைகள் என்று கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் இது.கடந்த கால நிகழ்வுகளை மனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி. எனக்கிருக்கும் வாழ்நாட்கள் குறைவு. இருக்கும் மணித்துளிகளை உங்களுடன் கழிக்க விரும்புகின்றேன். ஆம் இப்பொழுது நான் உங்களுடன் வாழ்கின்றேன்!   

பகுதி 2 

23-12-2009

ஜெயகாந்தன்பற்றி எழுதுகின்றேன் என்பதைப் பார்க்கவும் நிலா ரசிகனுக்கு ஒரே குஷி !

“அம்மா, அவர் பற்றி நிறைய எழுதுங்க “

அவன் ஆர்வத்திற்கு ஓர் அர்த்தம் இருக்கின்றது. அதுவும் ஒரு கதை. சிறிது காலத்திற்கு முன்னால் ஜெயகாந்தன் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்த சமயம். செய்தி கேள்விப் பட்டவுடன் மனம் வேதனைப் பட்டது. அமெரிக்காவில் இருந்ததால் உடனே என்னால் பார்க்கச் செல்ல முடியவில்லை. ஷைலஜாவிற்குச் சொல்லி விபரங்கள் விசாரிக்கச் சொன்னேன். அவளும் விசாரித்து எனக்கு விபரங்கள் எழுதினாள்.

ஜெயகாந்தன்பற்றி ஒரு தொடர் உடனே முத்தமிழில் எழுத ஆரம்பித்தேன். ஒரு நாள் சென்னைக்கு அவர் வீட்டிற்குத் தொலைபேசியில் கூப்பிட்டேன். கவுசல்யாதான் எடுத்தார்கள், அன்றுதான் ஆஸ்பத்திரி யிலிருந்து திரும்பி வந்திருக்கின்றார்கள். இருப்பினும் என்னுடன் ஜெயகாந்தன் பேசினார். சரியான நேரத்தில் நான் கூப்பிட்டிருக்கின்றேன்; அது நட்பின் சக்தி. நான் பேசியது அவருக்கு மகிழ்ச்சி. அவர்பற்றி நான் எழுதுவதைத் தெரிவித்து , அது முடிந்ததும் அவருக்குக் கொடுத்தனுப்புவதாகச் சொன்னேன்

ஜெயகாந்தனுக்குக் கலைஞர் உதவி செய்ததுபற்றிப் பத்திரிகை விமர்சனங்கள் கொஞ்சம் கடுமையாக வந்திருந்தன. என் கட்டுரையில் அதற்கு நான் விளக்கம் கொடுத்து எழுதியிருந்தேன். பின்னர் அதனை அச்செடுத்து அவரிடம் சேர்த்தவர் நிலா ரசிகன்.

மீண்டும் ஜெயகாந்தனிடம் பேசிய பொழுது , அப்பொழுது அவர் அதனைப் படித்து முடித்திருந்ததால் அவர் உடனே சொன்னதை என்னால் மறக்க முடியவில்லை -
“சீதாலட்சுமி, இப்படி எழுத உங்களுக்குத் தான் கட்ஸ் இருக்கும்”

உண்மை பேச தைரியம் வேண்டும். இத்தொடரிலும் கடைசியில் கொஞ்சம் விளக்கமாகவே  எழுதுவேன். இப்பொழுது நிதானத்துடன் எழுதுவதால் பல சுவையான, அர்த்தமுள்ள காட்சிகளைக் காட்ட முடியும்.

அடுத்து ஒரு நிகழ்ச்சியிலும் நிலா உடன் இருந்தான். ஒரு வருடத்திற்கு முன்னால் சென்னைக்கு வந்திருந்தேன். என்னால் தனியாக எங்கும் போக முடியாது. டாக்ஸியில் ஏறவும் இறங்கவும் கூட ஒருவர் என்னைப் பிடித்துக் கொள்ள வேண்டும். என்னுடன் இரு கவிஞர்கள் துணை வந்தனர். ஒருவர் நம் நிலா ரசிகன்; இன்னொருவர் கவிஞர் சஹாராத் தென்றல். நிலா எனக்குச் செல்லப்பிள்ளை ; சஹாரா எனக்குச் செல்லப்பொண்ணு. என்னைக் கவனித்துக் கொள்வதில் இருவருக்கும் போட்டி.

இவர்கள் யார்? எனக்கு இரத்த சம்பந்தமில்லாதவர்கள். ஆனால் என்னிடம் அவர்கள் காட்டும் பாசம் இமயத்தைப் போன்றது. இன்றும் என்னுடன் தொடர்பு கொண்டு என் நலம்பற்றி விசாரிப்பார்கள். இவர்கள் இருவருடனும் தான் ஜெயகாந்தன் வீட்டிற்குச் சென்றேன்.

எனக்கு அடுத்திருந்தது ஒருசாய்வு நாற்காலி. அதில் வந்து உட்கார்ந்தார் ஜெயகாந்தன். மற்றவர்கள் எதிரே அமர்ந்தனர். அவர் மனைவியார் வந்து நலம் விசாரித்துவிட்டுக் காபி எடுத்துவரச் சென்றார்கள். அவர் வீட்டிற்குச் செல்லும் பொழுது நானும் அவர் மனைவியும் சமயலறையருகில் உட்கார்ந்து பேசுவோம்; பின்னர்தான் ஜெயகாந்தன் இருக்கும் இடம் சென்று பேசுவேன்.
புறப்படும் முன்னர் கவுசல்யா அறைக்குச் சென்று பேசுவேன். இது அந்த நாள் வழக்கம்.

ஆனால் நாங்கள் சென்ற அன்று ஒரே அறையில் உட்கார்ந்து இருந்தோம். கவுசல்யா வந்து அமர்ந்தார். எங்கள் உரையாடல் அக்காலத்திற்குச் சென்றது.

ஜெயகாந்தன் ஒரு கேள்வி கேட்டார் -
”சீதாலட்சுமி, நாம் முதலில் சந்தித்தது எந்த வருடம்?”
”1970ல் சந்தித்தோம்”

அவ்வளவுதான் ! அதற்குப் பிறகு அவர்தான் பேசினார். இரு கவிஞர்களிடம் எங்கள் சந்திப்புகள், நாங்கள் ஊர்கள் சுற்றியது எல்லாம் விளக்கமாக அவர் கூறிவந்தார். எங்கள் சந்திப்பு, எங்கள் சுற்றுலாவிற்குப் பின்னர் அவர் என்னென்ன கதைகள் எழுதினார் என்பதைக் கவுசல்யா விளக்கி வந்தார். சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்த உரையாடல் அவர் மகன் வரவும் மாறியது.

அவர் அரசியல் பேச ஆரம்பித்தார். என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. நிலாதான் ஏதோ சமாளித்து வந்தான்.நான் ஜெயகாந்தனைப் பார்த்தேன். என் தவிப்பைப் புரிந்த அவர் “gossip” என்றார். ஆமாம், அவர் நினைத்தால் அர்த்தமற்ற பேச்சுகளுக்கிடையிலும் அவரால் அமைதியாக இருக்க முடியும்.

எனக்குள் ஒரு கேள்வி என்னை உறுத்திக் கொண்டிருந்தது. பதில் தெரிந்திருந்தும் கேள்வி உறுத்தியது; கேட்க முடியவில்லை. கேட்கும் சூழலும் இல்லை. ஆனால் அந்த வித்தகர் புரிந்து கொண்டு ஒற்றைச் சொல்லில் ஒரு வார்த்தை உதிர்த்தார். அப்படியே அதிர்ந்து போனேன்.

என் முகக் கலக்கத்தைப் பார்த்து ஒரு சின்ன முறுவல். “பரவாயில்லை” என்று அந்த முறுவலில் புரிந்து கொண்டேன். வெள்ளமென வார்த்தைகளையும் கொட்டுவார்; ஒற்றைச் சொல்லில் பல வார்த்தைகளையும் உள்ளடக்கிக் கூறும் திறமையும் உண்டு அவரிடம். “இன்னுமா என்னைப் புரிந்து கொள்ளவில்லை” என்று கேட்காமல் “பரவாயில்லை” என்று முறுவலால் பதில் கூறியவன் என் நண்பன். எத்தனை பேர்கள் இருந்தாலென்ன? எங்களுக்கிடையில் வாய்மொழி தேவையில்லை. பேசிக் கொள்ள முடியும். இந்த சக்தியை இன்னொருவரிடமும் நான் கண்டிருக்கின்றேன்.

திடீரென்று என்னை நோக்கி, “நாம் இருவரும் சேர்ந்து போய் கலைஞரைப் பார்க்கலாமா?” என்று கேட்டார். இப்பொழுது அவர் கேட்கக் கூடாத கேள்வி கேட்டு விட்டார். துடித்துப் போனேன்.

ஒரு காலத்தில் இருவரையும் சந்திக்க நான் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அன்று நான் விரும்பிய சந்திப்பு இப்பொழுது வாய்க்க இருக்கின்றது. அவர் சுலபமாக் கேட்டுவிட்டார்.

என் கண்முன் ஒரு காட்சி. கலைஞர் முன் நானும் ஜெயகாந்தனும் - எங்கள் மூவரின் மன நிலை எப்படியிருக்கும்?

பகுதி 3

25-12-2009

கற்பனையில் காணும் காட்சிகள் சில விஷயங்களில் கற்பனையாகவே இருந்துவிடுதல் நலம்.என் இயலாமையைத் தெரிவித்துவிட்டு எழுந்து விட்டேன்.நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் காரை நோக்கி நடந்தேன். ஜெயகாந்தனும் உடன் மெதுவாக வந்தார். இருவரும் ஒன்றும் பேசவில்லை. மவுனம் சக்தி வாய்ந்த மொழி; அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

காரில் ஏறும் முன்னர் “போய்வருகின்றேன் “ என்றேன்.

”ஊருக்குப் போகும் முன் வருவீர்களா?”

”நிச்சயம் வருவேன்.”

அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி. இனிமேல் இந்தியாவிற்குத் திரும்ப வருவேனா என்று தெரியாது. ஏனோ என் நெருங்கிய நண்பர்களைச் சந்திக்கும் பொழுது இறுதி விடைபெறுவது போன்ற உணர்வு. அமெரிக்கா புறப்படும் முன்னர் என் கணவருடனும் புனிதத்துடனும் அவரைக் காணச் சென்றேன். கவுசல்யா உடன் இருந்தார். நல்ல கலந்துரையாடல். இந்த முறை விடை பெறும் பொழுது என் கணவர் என் கையைப் பிடித்திருந்தார்.கனத்த மனத்துடன் அங்கிருந்து புறப்பட்டேன்.

சில நாட்களுக்கு முன் அவருடன் தொலை பேசியில் பேசினேன் “குரலையாவது கேட்க முடிகின்றதே” என்றார். இதுதான் வாழ்க்கை! இதுதான் நிஜம்.

விழியனும் வேணுவும் கலந்துரையாடலுக்குப் போயிருந்ததாக வேணு எழுதியிருந்தார். ஜெயகாந்தனுடன் கலந்துரையாடல் சுவாரஸ்யமானது. பார்ப்பதற்கே பரவசமாக இருக்கும்.

ஜெயகாந்தனைப் பார்க்க, அவருடன் பேச பலர் வந்து போவதுண்டு; இயல்பாகப் பேசுவதும் உண்டு. ஓரிருவர் வந்தால் பேசுவதைவிடக் கூட்டமாக சிலர் இருந்தால் திடீரென்று வேகம் வந்துவிடும். காட்டாறு போல் வார்த்தைகள் வரும். எதிரே உட்கார்ந்திருப்பவர் மயங்கி உட்கார்ந்திருப்பர். பலமுறை நான் கண்ட காட்சி. எங்கிருந்து இந்தத் திறனைப் பெற்றார்!? அவர் புத்தகங்கள் படிப்பதை நான் பார்த்ததில்லை;எனக்கு அதுபற்றித் தெரியாது. பிள்ளைப் பருவக் கதைகள் இப்பொழுது எங்கும் காணலாம். அங்கும் அரசியல் வாடை அடிக்கின்றதே தவிர, இந்தத் தத்துவங்கள் பேச எங்கு கற்றார்? அவர் ஒரு சுயம்பு. ஒருவேளை பூர்வ ஜன்மம் என்று சொல்வார்களே, அப்படித் தொடர் சங்கிலியாய் வந்ததுவோ!?

மேடைப் பேச்சில் எதையாவது சொல்லிவிடுவார்; அவை பிரச்சனையாகும். நான் சொல்வது மேடைப் பேச்சையன்று. அவர் தங்குமிடத்தில் நாம் உட்கார்ந்து பேச வேண்டும்; வான் மழைக்குக் காத்திருப்பது போல் காத்திருக்க வேண்டும். அந்தச் சொல்மாரியைத் தான் புகழ்ந்துரைக்கின்றேன்.

ஜெயகாந்தனின் வீடு கே.கே. நகரில் இருக்கின்றது. முன்பு இவருக்கு இன்னொரு இடம் உண்டு. ஆழ்வார் பேட்டையில் பிள்ளையார் கோயிலுக்கு மேல் ஒரு மாடி இவருடைய இடம். காலையில் கடமைகளை முடித்துவிட்டு இங்கு வந்து விடுவார்; இரவில்தான் போவார்.

ஒரு சின்ன அறை, முன்னதாக ஒரு சின்ன ஹால்; அவ்வளவுதான். அந்த ஹாலில் ஒரு பக்கம் பாதியளவில் ஒரு சுவர்;சின்ன அறையில் ஒரு கட்டில், அதில் ஒரு விரிப்பும், ஒரு தலையணையும் இருக்கும்; ஒட்டி ஒரு நாற்காலியும் இருக்கும். இன்னொரு நாற்காலி அந்த குட்டைச் சுவர் அருகில் இருக்கும்.அதிலேதான் இவர் உட்கார்ந்திருப்பார்.

சுவரையொட்டிக் கிழே பார்த்தால் ஒரு சின்ன சந்து; இருபக்கமும் வீடுகள். ஏழைகள் வாழும் தெரு அது; எப்பொழுதும் சத்தம் இருக்கும்; நம் நாயகனுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கும். இடுப்பில் ஒரு கைலி, மேலே சட்டை கிடையாது, ஒரு சின்னத் துண்டு. மீசையை முறுக்கிக் கொண்டு அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

ஹாலில் சிலர் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு சின்ன இடத்தில் இரு சின்ன உலகங்கள்.

ஒரு நாள் அவர்களிடம் கேட்டேன் -

“ஏன் இப்படி இங்கு வந்து உட்கார்ந்திருக்கின்றீர்கள்?”

“அம்மா, அவர் திடீரென்று பேச ஆரம்பிப்பார். அவர் பேச்சைக் கேட்கத்தான் காத்திருக்கின்றோம்”

அவர்கள் பைத்தியக்காரர்களா? ஆமாம், அறிவுப் பைத்தியம். ஜெயகாந்தனிடம் வெட்டி அரட்டையை எதிர்பார்க்க முடியுமா? இப்பொழுது அப்படிப்பட்ட காட்சிகள் கிடையா. அவர் வீட்டின் மாடியில் கூரை வேய்ந்த இடம் இருக்கின்றது. அங்கே சந்திப்புகள் நடக்கின்றன; கலந்துரையாடல்களும் இங்கேதான்; ஆனால் அந்தக் காலத்து அதிரடிக் கச்சேரிகள் இப்பொழுது இல்லை.

அந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அந்தக் குடிலுக்கு வருவார்கள். நாகேஷுக்கு அங்கே வருவது மிகவும் பிடிக்கும். நடிகனென்றால் அறிவுப்பசி இருக்கக்கூடாதா!?

நான் இரு இடங்களுக்கும் சென்றிருக்கின்றேன். நாங்கள் மனம்விட்டுப் பேசுவோம்; ஆன்மிகம் முதல் அரசியல் வரை பேசுவோம். சமுதாயத்துடன் உறவாடுபவள் நான்; எனக்கு உளவியல் பிடிக்கும். அவர் பார்வையும் சமுதாயத்தில்தானே இருக்கும். பல விஷயங்களில் இருவருக்கும் ஒத்த உணர்வுகள் இருந்ததால் நல்ல நண்பர்களாக இருக்க முடிந்தது. மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்; ஆனால் புரிந்து கொண்டு அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டால் நட்பில் விரிசல் வராது.

ஜெயகாந்தன் பார்க்கும் ஒவ்வொன்றும் அவர் கதையில் வந்துவிடும். ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கேயே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் நான் போயிருந்த பொழுது அவர் பார்வையுடன் என் பார்வையும் தொடர்ந்தது.

ஒரு பெண் தலையில் செங்கல்லைச் சுமந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். போகின்ற பாதையில் ஒரு கையால் செங்கல் கூடையைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் இடுப்பில் இருக்கும் வெற்றி லையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு போகின்ற பாதையில் சுவரில் அவள் ஏற்கனவே ஒட்டியிருந்த சுண்ணாம்பை எடுத்து நாக்கில் தடவிக் கொண்டு சென்றாள். இந்தக் காட்சியை அவர் எத்தனை முறை பார்த்திருப்பார்! “சித்தாள் சினிமாவிற்குப் போகின்றாள் “ என்ற கதையில் இக்காட்சி வரும்; இலக்கியவாதிக்கு மண்ணும் உயிருள்ளதே!

அவருடைய கதைகள் ஒன்றிரண்டைப் பற்றிப் பேசிவிட்டுச் சில நிகழ்வுகள் கூற இருக்கின்றேன். நம் காலத்தில் வாழும் ஒரு சில அறிவு ஜீவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். நம்மிடையே அந்தத் திறன் இல்லாவிட்டாலும் ரசிக்கும் திறன் இருக்கின்றதே, அதுவும் சிறப்பானதே!

 

பகுதி 4

04-01-201

அக்கினிப் பிரவேசம்

இந்தக்கதை விகடனில் வரவும் பெரிதும் பேசப்பட்டது. இந்தக்கதையின் கரு ஓர் உண்மை சம்பவத்தையொட்டியது. படைப்பாளிக்குப் பார்க்கும் ஒவ்வொன்றும் சொந்தமாகிவிடும். சின்னக் கதையுடன் மனம் திருப்தி அடையவில்லை. அதனுடைய நீட்சிதான் சில நேரங்களில் சில மனிதர்கள்.

எத்தனைவிதமான மனிதர்கள்! எத்தனை சூழ்நிலைகள்! அலை அலையாய் வந்து போகும் மனிதனின் அவல உணர்வுகள். கங்காவின் பஸ் பயணத்தில் அவள் அனுபவிக்கும் உரசல்களும் இடிகளும் புதிதல்ல. ஆனால் ஒரு பெண்படும் அவஸ்தையை அப்படியே நம்மையும் உணர வைத்திருப்பார். அக்காட்சியைப் படிக்கும் பொழுது எனக்கே உடலில் பூரான் ஓடுவது போன்று ஓர் அறுவறுப்பான தாக்கம். வக்கிர குணத்திற்கு அப்பனும் உடன் பிறந்தானும் கூட விதிவிலக்கில்லை.

இப்படிக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும்; இது பொதுவானதன்று. ஆனால் இது போன்ற பல புகார்கள் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நான் பார்த்த வேலை அத்தகையது.

கங்காவின் மாமாவின் செய்கைகளை வேறு யார் இப்படி எழுதியிருக்கமுடியும்? ஆனால் ஜானகிராமன் எழுதிய மோகமுள் நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

மோக முள் - அடிமனத்தில் ஒளிந்திருக்கும் உணர்வைக் கொக்கி போட்டு வெளியே இழுத்து , அந்தத் தவிப்பை வெளிக்காட்டிய விதம் இன்றும் கதை உலகில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கின்றது. உளவியல் கதைகளுக்கு ஆயுள் அதிகம். படிப்பவனுக்கு அவஸ்தை கொடுத்தாலும் உண்மைகள் உறங்காமல் என்றாவது கண் விழிப்பதைப் பார்க்கும் பொழுது வியக்காமல் இருக்க முடியாது. அந்தரங்கத்தைச் சுண்டி இழுப்பவை. ஜெயகாந்தனின் கதைகள் எல்லாவற்றிலும் மனிதனின் அந்தரங்கத்தைத் தோலுரித்துக் காட்டுவதைப் பார்க்கலாம். அவர் அதில் சமரசம் செய்துகொள்ளமாட்டார்.

பெண்களுக்கு மத்தியில் ஒன்று பேசப்படுவதைக் கேட்டிருக்கின்றேன் -“சின்னப் பசங்களைக் கூட நம்பி வெளியில் போகலாம். ஆனால் கிழங்களை நம்ப முடியாது “ எல்லோரும் அப்படியல்ல; ஆனாலும் பெண் மனத்தில் அப்படி எண்ணம் வந்துவிட்டதற்கு அவள் சின்னப் பெண்ணாக இருக்கும் பொழுது வயதானவர்கள் யாராவது சில்மிஷம் செய்திருக்கலாம், அல்லது அவள் சிநேகிதிக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டிருக்கலாம், அது மனத்தில் தங்கி இப்படி ஒரு கருத்தை அவள் சுமந்து கொண்டிருக்கலாம்.

“சில நேரங்களில் சில மனிதர்கள்” தலைப்பே தனித்துவம் கொண்டது. இது திரைப்படமாக வந்தபொழுது , அதில் அத்தனை பாத்திரங்களும் உயிர் பெற்று நடமாடினர். குறிப்பாக லட்சுமி, கங்காவாகவே மாறிவிட்டார். பொதுவாகப் பிரபலமான கதைகள் திரைப்படமாகும் பொழுது ஒரு விமர்சனம் வரும். “கதை மாதிரி சினிமா இல்லே” ஆனால் இந்தப் படம் மட்டும் சிறப்பாக வந்திருந்தது.

”கங்கா எங்கே போகின்றாள் ?” இது பெற்ற சிறப்பைப் பெறவில்லை. ஆங்கிலத்திலும் இப்படித் தொடர் நிலையில் கதைகள் வரும்பொழுது மூன்றாவதில் தொய்வு காணலாம்.

கல்கியின் நினைவு இங்கே வருகின்றது. பார்த்திபன் கனவு எழுதினார். அதில் அவர் காட்டும் சிற்பக்கூடத்தில் பிறந்தது சிவகாமியின் சபதம். ஓவியக் கூடத்தில் பிறந்தது பொன்னியின் செல்வன். அவரே பொன்னியின் புதல்வர். நாட்டிய மங்கைக்கு உயிர் கொடுக்கவும், நரசிம்ம வர்மனை இளைஞனாக்கிக் காதலனாக்கவும் ஆசை வந்துவிட்டது. அதே போல் பார்த்திபன் வரைந்தஓவியங்களில் சோழர் காலத்துப் பெருமைகளைக் கண்டார். அவருக்குத் தெரிந்த செய்திகள் அனைத்தையும் யார் வாயிலாகவாவது பேச வைத்தார்.

எண்ணங்களைச் சுமக்கும் பொழுது எழுத்தாளன் பிரசவ வேதனையில் தவிப்பான். கோலைப் பிடித்துவிட்டால் வார்த்தைகள் குதித்தோடி வெள்ளமென வடிந்தோடும். மனித உணர்வுகளை அப்படியே ஓவியமாக்குவதில் சிறந்தவர் ஜெயகாந்தன். ஒரு கதை, இரு கதை என்று மற்றவர் எழுதியிருக்கலாம்ம். ஆனால் ஜெயகாந்தனின் கதைகளை அனைத்தும் உளவியலும், சிந்தனைத் திறனும் கலந்தவை. ஒரு மனிதரின் உணர்வுகளின் தாக்கமே ”ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்”.

அவர் எழுதிய பல கதைகள் பிறந்தவிதம் பற்றி என்னுடன் மனம் விட்டுப் பேசி இருக்கின்றார். எங்கள் இருவருக்கிடையில் ஒளிவு மறைவாக எந்த நிகழ்வும் கிடையாது. அந்தரங்கம் புனிதமானது. ஆனாலும் தகுந்த நண்பர்கள் இருந்தால் அந்த அறையைத் திறந்து காட்டுதல் சரியே.

கௌசல்யா ஒரு படித்த பெண்மணி. வானொலி நாடகங்களிலும் மேடை நாடகங்களும் நடித்துவந்தார். மிகச் சிறந்த நடிகை. சேஷாத்ரி குழுவில் இருந்தார். இவர் நடித்த தனிக்குடித்தனம் பின்னால் கே. ஆர். விஜயா நடித்த திரைப் படமாகியது. படம் வந்த காலத்தில் கௌசல்யாவைப் போல் விஜயா அந்த அளவு சிறப்பாக நடிக்கவில்லை என்பர்.

ஜெயகாந்தனிடம் செயலாளராகப் பணியில் சேர்ந்தார் கௌசல்யா. நடிப்பையும் விடவில்லை. இரு அறிவு ஜீவிகளின் சங்கமம்; ஜெயகாந்தனின் துணைவியானார். அப்பொழுதும் சில நாட்கள் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை அழைத்துச் செல்லும் ஜெயகாந்தன் சபாக்களின் வெளியிலேயே இறக்கிவிட்டு வந்து விடுவார். நாடகங்கள் பார்க்க மாட்டார். கௌசல்யா புத்திசாலிப் பெண்மணி. அவராகவே நடிப்பதை நிறுத்திவிட்டார். ஜெயகாந்தன் அவர் நடிப்பதைத் தடுக்கவில்லை.

சில உணர்வுகள் அவர் கதையில் காணலாம்.பிறருக்கு அறிவுரை கூறுவதை விரும்ப மாட்டார் ஜெயகாந்தன். அந்த சொல்லே அவருக்குப் பிடிக்காது. பிறர் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்றால் அவர் பேச்சில் அவரின் மறுப்பு இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். கேட்பவர் முதலில் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சிந்தித்துப் பார்க்கும் பொழுது பின்னர் அதன் யதார்த்தம் புரிந்துவிடும். அவரிடம் போலித்தனம் கிடையாது. முரட்டுத்தனம் உண்டு. நுனிப்புல் மேய்வதைப் போன்று படிப்பவர்களுக்கு அவர் காட்டும் பல அரிய செய்திகள் புலப்படாது. ஒவ்வொரு வரியையும் வார்த்தையையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும்.சில சமயங்களில் மனித உணர்வுகளின் அரிச்சுவடி ஜெயகாந்தன். பல சமயங்களில் வாழ்வியலின், சமூக இயலின் அகராதி.

சில நிகழ்வுகளைக் கூறுவேன். அவரின் பார்வையையும் விளக்குவேன். புரிந்து கொள்வீர்கள். அதற்குமுன் இன்னும் கொஞ்சம் அவர் கதையைப் பற்றிப் பேச வேண்டியிருக்கின்றது.

ஒரு நாள் நானும் என் நண்பர் நிருபர் நாராயணனும் ஜெமினி கணேசனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கே நம் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது.

 

பகுதி 5

07.01.2010

ஜெயகாந்தன் தன் பெயரிலேயே காந்தத்தை வைத்திருக்கின்றார். அவர் பெயரைப் பார்க்கும் பலருக்கும் பதிவை எட்டிப் பார்க்கத் தோன்றுகின்றது. அவரைப் பற்றிப் பல கோணங்களில் எழுதியுள்ளார்கள்.

சாதாரண நிலையிலும் ஒரு விஷயத்தைக் கூறினால் அவர் அதனை எவ்வளவு யதார்த்தமாக எடுத்துக் கொள்கின்றார் என்பதை உதாரணங்களுடன் கூற விரும்புகின்றேன். அவர் எழுத்துக்களைத் தொடர்ந்து ஊன்றிப் படிப்பவருக்கு எப்பொழுதாவது ஓர் அனுபவம் ஏற்படும் -“எப்படி நம்மைப் புரிந்து கொண்டு எழுதுகின்றார்” என்று. அவர் எழுத்தில் எங்கோ நம் நிழலும் பதிவாகியிருக்கும்.
தொடருக்குத் திரும்புகின்றேன்

நிருபர் நாராயணன் womens weekly, womens era போன்ற பல ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு நிருபர். எங்கள் இருவர் தொழிலுக்கும்
சம்பந்தம் இருந்தது. அவரைப்போன்று சில நிருபர்களின் வட்டத்தின் நட்பு எனக்குக் கிடைத்தது. குமுதம் அரசியல் நிருபர் பால்யூ இவர்கள் கூட்டத்திற்கு வருவதில்லை. பால்யூ தனிக்காட்டு ராஜா.ஆனாலும் எல்லோருக்கும் நண்பர். Investigation journalism தனியாக அப்பொழுது அவ்வளவு வளராதகாலம். இந்தியன் எக்ஸ்பிரஸில், வடநாட்டுப் பத்திரிகைள் சிலவற்றில் அது வளர ஆரம்பித்திருந்தது. நாட்டின் பிரதமர் இந்திரா காந்தியையே திணற அடித்தவர் கோயங்கா அவர்கள். தமிழகத்தில் இந்தப் பத்திரிகை நிருபர்களே எல்லாச் செய்திகளையும் சேகரித்து வந்தனர். எனவே நாங்கள் சந்திக்கும் பொழுது சுவையான செய்திகள் நிறையக் கிடைக்கும். என்னுடைய பணிக்காலப் பிரச்சனைகளில் எனக்குப் பக்க பலமாக இருந்தது இந்தப் பத்திரிகையுலகம் தான்.

நாராயணனுக்கு என் மீது மதிப்பு அதிகம். தன் நண்பர்களிடம் என்னைப்பற்றி நிறைய சொல்லி இருக்கின்றார். அவரால் ஆர்வமூட்டப் பட்ட பலரிடமும் என்னைக் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்துவார். அப்படித்தான் ஜெமினி கணேசனின் அறிமுகம் கிடைத்தது.
நான் சென்ற அன்று பொது விஷயங்கள் நிறைய பேசினோம். காதல் பற்றிக் காதல் மன்னன் பேச, பெண்ணியம் பேசும் நான் அவர் கருத்துக்களைச் சாடினேன். நேரம் போனது தெரியவில்லை. அன்று மாலை ஜெயகாந்தன் வீட்டிற்குக் ஒரு நேரம் குறிப்பிட்டு வருவதாகச் சொல்லி இருந்தேன். எனவே விவாதத்தை இடையில் நிறுத்திப் புறப்பட முயன்றேன். காரணம் கேட்ட பொழுது போகும் இடம் சொன்னேன். உடனே அவர் கௌசல்யா புகழ் பாட ஆரம்பித்துவிட்டார். சிறந்த நடிகை மட்டுமல்ல, அறிவார்ந்த பெண் என்றும் சொன்னார்.சில சம்பவங்களைக் கூறியபொழுது அவருக்குக் கௌசல்யாவின் மேல் எவ்வளவு மதிப்பு இருக்கின்றது என்பது புரிந்தது.ஜெயகாந்தனின் கதைகள் சிலவற்றைப் பற்றி அலசிப் புகழ்ந்தார். யாரிடம் பேசினாலும் ஜெயகாந்தன் பெயரைச் சொன்னால் உடனே அவர் எழுத்தைப் பற்றிய விமர்சனம் கேட்கலாம். ஒரு காலக் கட்டத்தில் அவர் எழுத்தின் வீச்சு அப்படி எல்லை கடந்து பரவியிருந்தது.
என் தோழி புனிதமும் கௌசல்யாவைப் பற்றிப் புகழ்ந்து சொல்லி இருக்கின்றார்.புனிதவதி இளங்கோவன் சென்னை வானொலியில் வேலை பார்த்து வந்ததால் அவர்களுக்குள் நெருங்கிய தொடர்பு இருந்தது.

பிறர் கூறி அறிவதற்கு முன் நானே அவர்களுடன் பழகியதால் அவர்கள் தெளிவையும், எதையும் ஆணித்தரமாகக் சொல்லும் விதமும் கண்டு வியந்திருக்கின்றேன் .சில சமயம் ஜெயகாந்தனிடம் பேசுகின்றோமோ என்ற நினைவு கூட வந்திருக்கின்றது. கே.கே. நகர் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடன் கொஞ்ச நேரமாவது தனித்து அமர்ந்து பேசுவேன். நல்ல சிந்தனையாளர். நினைப்பது மட்டுமல்ல அதனை வெளிப்படுத்தும் முறையும் வியக்க வைக்கும். என் கணவரையும் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தியிருக்கின்றேன். அவரும் கௌசல்யாவின் சிந்தனையாற்றலையும், பேசும் தன்மையையும் புகழ்ந்திருக்கின்றார்.

ஜெயகாந்தன் அதிகமாக எழுதிக் கொண்டிருந்த காலம். அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்க்கும் பொழுது ஒரு கற்பனை என் மனத்தில் நிழலாடும். பாரதம் எழுத வியாசருக்கு உதவியவர் விநாயகப் பெருமான். வியாசரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத வேண்டும். அதுவும் புரிந்து எழுத வேண்டும். ஜெயகாந்தனின் படைப்புகள் எதுபற்றிக் கேட்டாலும் வரிக்கு வரி கௌசல்யாவிற்குத் தெரியும். ஜெயகாந்தன் அவர்களைப் பாராட்டும் பொழுது அவருக்குப் பக்கத் துணையாயிருக்கும் கௌசல்யாவைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது.

நம் நாயகர் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை பெற்றுப் பிழைத்து வந்தபின், அவரின் தேவை இன்னும் கூடுதலாயிற்று. பார்வையாளர்களைக் குறைத்துக் கொண்ட காலத்தில் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள அறிவுசார்ந்த ஒரு தோழமை அவசியம் வேண்டும். உடல்நலம் கருதி வெளியிலிருந்து வருபவர்களைச் சிறிது காலம் குறைத்துக் கொண்டனர். இன்று தோழியாய் இருந்து அந்த அறிவு ஜீவியைப் பாதுக்காத்து வருகின்றார். ஜெயகாந்தனைப்பற்றிப் பேசும் பொழுது அந்தப் பெண்மணியை என்னால் நினைக்காமல் இருக்க முடியாது. தொடரிலும் அவர் பெயரைப் பதிவு செய்ய வேண்டியது என் கடமை என நினைத்தேன். இம்முறை சென்னைக்குச் சென்றால் நான், ஜெயகாந்தன், கௌசல்யா மூவர் மட்டும் உட்கார்ந்து நிறையப் பேசவேண்டும் என்று இப்பொழுதே கூறிவிட்டேன். இருவரும் சிரித்துக் கொண்டே சம்மதமும் தெரிவித்துவிட்டனர். முதியவள் நான் முணுமுணுக்க நிறையச் செய்திகள் இருக்கின்றன; அவர்களிடம் புலம்ப வேண்டும்.

இனி நம் ஜெயகாந்தனைப் பார்க்கலாம்.

திடீரென்று அவர் எழுதிய கதைகள் ஒன்றிரண்டாவது படிக்க ஆசை வந்துவிட்டது. கண்களில் முதலில் பட்டது “யுக சந்தி”

கௌரிக்குப் பத்துவயதில் திருமணம், பதினாறு வயதில் விதவை.என் பெரியம்மா மீனாட்சியம்மாளின் நினைவு வந்தது. 7 வயதில் திருமணம். 21 வயதில் விதவை. மிகவும் அழகாக இருப்பார்கள். நீண்ட கூந்தலாம். மொட்டையடித்து மூளியாக்கப் பட்டார்கள்.சாகும் பொழுது 83 வயது. 80 வயது வரை புகுந்த வீட்டில், கணவன் இல்லாத வீட்டில் கடுமையாக உழைத்தார்கள். 81வயதானது.புகுந்த வீட்டார் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. அது ஒரு பெருங்கதை. பிறகு சொல்கின்றேன். கௌரிப்பாட்டியைப் பார்ப்போம்.

கௌரிப் பாட்டிக்குக் குழந்தை இருந்து பேரன் பேத்திகளும் இருந்தனர். ஆசார வாழ்க்கை. அதாவது கட்டுப்பாடான வாழ்கை. காலம் சுழல்வதை யாராலும் மாற்ற முடியுமா? அவள் பேத்தி கீதா திருமணமாகிப் பத்து மாதங்களில் விதவையாகிப் பிறந்தகம் வந்து பாட்டியின் மடியின் முகம் புதைத்துக் கதறி அழுத பொழுது பாட்டி அவளை அரவணைத்துக் கொண்டாள். அதற்குப் பாசம் மட்டும் காரணமன்று. இறந்த காலத்தின் நிகழ்காலப் பிரதிநிதியாய் அவளில் தன்னைக் கண்டாள்.
கீதா வீட்டிற்குள் முடங்காமல் படித்து ஆசிரியர் தொழில் பார்க்க அயல் ஊருக்குச் சென்ற பொழுது பாட்டியும் உடன் சென்றாள். தன் மகனைக் காண கிராமத்திற்கு வந்த பொழுதுதான் அந்தச் செய்தியை அறிகின்றாள். விதவைப் பெண் கீதா மறுமணம் செய்து கொள்ளப் போகின்றாள். தன் பிறந்த வீடு தன்னை ஒதுக்கிவிடும் என்பதைக் கூறி தனக்கு வாழ்வு வேண்டிச்செல்வதை மறைக்காமல் தெரிவிக்க வேண்டியதைக் கடமையாக நினைத்துக் கடிதம் அனுப்பியிருக்கின்றாள். மேலும் கூறுவதை அப்படியே ஜே.கே அவர்களின் வார்த்தைகளில் கூற விரும்புகின்றேன் -  “உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்திற்கு ஆட்பட முடியாமல் வேஷங்கட்டித் திரிந்து , பிறகு அவப்பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணந்திருக்கின்றேன்”.இங்கே அவர் கருத்தாக எதையும் கூறவில்லை. அவள் நினைப்பதைக் கூறிவிடுகின்றார்.

கௌரிப்பாட்டிக்கு விதவை வாழ்க்கையின் கொடுமை தெரியும். தன் பேத்தியுடன் இருக்கப் புறப்பட்டுவிட்டாள்.

எதையும் அறிவுரையாகக் கூறமாட்டார் ஜே.கே. காட்சிகளில் உண்மை உணர்வுகள் புதைந்திருக்கும்.

என் தாயின் நினைவு வருகின்றது. வாடிப்பட்டியில் வேலை பார்க்கும் பொழுது நாடக மேடையில் வேற்று ஆடவன் என்னைத் தொட்டதால் என் கற்பே போய்விட்டது என்று கதறி அழுத அப்பாவி அம்மா பல வருடங்கள் கழிந்த பின்னர் அவர்கள் பார்வையின் கோணம் எப்படியிருந்தது என்பதை அடுத்துக் கூறுகின்றேன்.

என்னிடம் சில பக்குவங்கள் ஏற்பட்டதற்குக் காரணம் ஜெயகாந்தன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பின்னால் நான் கூறப்போகும் சம்பவங்களே சான்றுகளாகும் .

 

பகுதி 6

10.01.2010

குருவம்மா ஒரு கிராமத்துப் பெண். அவள் பட்டப்படிப்பை முடித்து என் துறையில் பணியாற்றச் சேர்ந்தாள். சில மாதங்களில் அவள் வாழ்வில் காதல் புகுந்தது. செய்தி அறிந்த அவள் தந்தை கொதிப்படைந்து அவளைச் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சொந்தக்காரப் பையன் ஒருவனுடன் கட்டாயத் திருமணம் செய்து முடித்துவிட்டார்.

ஒருவர் வாழ்க்கை திருமணத்துடன் முடிவடைவதில்லை. அது ஆரம்பம். பொருந்தாத திருமணம். குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை. நாளுக்கு நாள் அது அதிகமாகவும் கணவனை உதறிவிட்டாள். பெற்றவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் அவள் ஒதுங்கிய இடம் ஒரு போலீஸ் அதிகாரியின்நிழல். குருவம்மாளுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவர் திருமணமாகாதவர். யாராவது அவளை முதலில் பார்க்கின்றவர்களாக இருந்தால் “ எவ்வளவு அடக்கமான பெண். நல்ல பெண் “ என்று போற்றுவார்கள். அவர்களைத் தூற்றுவாரும் இருந்தனர்.

என் மீது அவளுக்குப் பிரியம். என்னுடன் மனம் விட்டுப் பேசுவாள். என் வீட்டிற்குத்தான் வருவாள். என் தாயாரைப் பார்க்க வருவதால் பூ வாங்கி வந்து அம்மா கையில் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்வாள். அவள் வீட்டிற்கு வரும்பொழுது சமையல் அறை சென்று ஏதாவது செய்து எடுத்து வந்து அம்மாவிற்குக் கொடுப்பாள். எங்கள் வீட்டுச் சமையலறைக்கு யாரும் செல்லலாம், சமைக்கலாம். என் அப்பாவின் காந்திக் கட்சியின் சக்தி அது. என் தாயாருக்கு அவளைப் பிடிக்கும்.

குருவம்மாள் ஒருவனைக் காதலித்தாள்; இன்னொருவனை மணந்தாள்; கட்டியவனை உதறிவிட்டு இன்னொருவனின் கையைப் பிடித்துக் கொண்டுவிட்டாள். பழங்கால
மாமியின் அபிப்பிராயம் தெரிய ஆவல் -
“ எங்க காலத்துலே பொண்களுக்கு எந்த வாழ்க்கை அமையறதோ அதுலே ஐக்கியமாயிண்டு வாழ முடிஞ்சுது. இப்போ காலம் மாறிடுத்து. கன்னா பின்னான்னு கண்டவனோட சுத்தாம யாரோ ஒருவனுடன் எப்போ வாழ ஆரம்பிச்சுட்டாளோ அப்பறம் அவளைப் பத்தி பேச என்ன இருக்கு? இப்போ மனம் ஐக்கியமா இருக்கற இடத்துலே நன்னா வாழறா” என் அம்மாவா இப்படி பேசறது?!. ஆமாம். ஓர் ஆடவன் கை பட்டால் கற்பு போச்சுன்னு அழுத அம்மாதான். இதுவே யதார்த்தம். இதுதான் நிஜம். ஒன்றில் பழகிட்ட மனசு இன்னொன்றை ஏற்றுக் கொள்வது எளிதல்ல. ஜே. கே யின் கதை கற்பனையன்று. மாற்றங்களை ஜீரணித்து வருபவர்களில் பாட்டியும் ஒருத்தி. அன்று எழுதப்பட்டவை இப்பொழுது சாதாரணமாகிவிட்டன.

ஆடையின்றி அலைந்தோமே
உண்மை ராசா உண்மை
ஆடை சுத்தி அலைஞ்சோமே
உண்மை ராசா உண்மை.
ஆடை குறச்சு அலையறோமே
உண்மை ராசா உண்மை
ஆடையையும் விட்டலைவானே
உண்மை ராசா உண்மை

இது இந்தக் கிழவியின் புலம்பல். எதையெல்லாம் இழக்கின்றோம் என்பதை உணர்ந்துகொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வரட்டுப் புலம்பல்களும், அசட்டு எழுத்துக்களும் வளர்ந்து வருகின்றன.

நான் ஒரு தவறு செய்துவிட்டேன். என்னைப் பற்றிச் சரியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. “எவளோ ஒருத்தி, அந்தக்கால மனுஷி, படிச்சுட்டு அரசாங்கத்திலே
ஒரு வேலை, அதிலும் பெண்களுக்கு நல்லது செய்யற வேலையாம், மிஷின்லே தைக்கறது, எம்பிராய்டரி வேலை கத்துத் தர்ரது போல வேலை, அப்போ அப்போ எதோ கதை எழுதறது இப் படி இருக்கறவ, ஏதோ படிச்சதையெல்லாம் எழுதறா,பாவம் வயசானவ எழுதட்டும் “ இப்படி என்னைப் பற்றிப் பலரையும் நினைக்க வைத்துவிட்டேன்.

என்னைப் பற்றிய அறிமுகம் தனியாகச் செய்ய வேண்டியது என் கடமை . விரைவில் தனியாக எழுதுவேன். என் நினைவலைகள் என் பணிகளைக் காட்டும் ஒரு திறந்த வெளி. இப்பொழுது இத்தொடர்பற்றிப் பேசலாம்.

என் பணியிடம் மணம் வீசும் மலர்கள் நிறைந்த நந்தவனம் இல்லை. அது ஒரு காடு. அங்கு மான்களும் இருக்கும். சிங்கம், புலியும் இருக்கும். ஒரு லட்சத்திற்கும் மேல் பெண்கள் பணியாற்றும் துறை. தன்னையும் பாதுகாத்துக் கொண்டு பிறரையும் பாதுகாக்க வேண்டிய காலம். மனிதர்களைப் புரிந்து கொண்டால் பிரச்சனைகளை எளிதாகச் சமாளிக்க முடியும். என் மனத்தில் குழப்பம் ஏற்படும்பொழுது நான் தேடிச் செல்லும் இடம் ஜெயகாந்தன் குடில். அவர் எனக்கு ஒரு சுமைதாங்கியல்ல, ஓர் ஊன்றுகோல். என் தள்ளாட்டத்தை ஒடுக்கி நிமிர்த்தும் ஓர் உறுதியான ஊன்றுகோல். நான் கற்கும் பாடசாலை.

என் சுமைதாங்கிகள் மணியனும் சாவியும். துன்பமோ, இன்பமோ நான் போய்ப் புலம்பும் இடம் மணியனும் சாவியும். எனக்கு ஆறுதல் கூறி அமைதிப் படுத்துவார் சாவி. பாராட்டி ஊக்கமளிப்பார் சாவி. மணியனோ ஓடி வந்து என் துயர்களைய எல்லாம் செய்வார். பாராட்ட வேண்டிய இடத்தில் தனக்குக் கிடைத்துவிட்ட பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொள்வார். எங்கள் குடும்பத்தில் அவரும் ஒருவர். என் அண்ணன் மா.ரா. இளங்கோவனும், மணியனும் இல்லாமல் இருந்திருந்தால் இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். என்னைப் புரிந்து கொள்ளவே இந்த சில வரிகள்.

ஜெயகாந்தனிடமிருந்து நான் பெற்ற சக்தியை, அதனால் நான் பெற்ற தெளிவைக் காட்டச் சில சம்பவங்கள் கூறுகின்றேன். சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வளிப்பது என் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இதை அணுக, உளவியல் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

குப்பனுக்கு 16 வயதிருக்கும். சுறுசுறுப்பானவன். பள்ளிப் படிப்பை முழுவதும் முடிக்கவில்லை. அவன் வாழ்க்கையில் ஒரு சம்பவம். அவனுக்குப் புதுப்பாடம் ஒருத்தி கற்றுக் கொடுத்தாள். அவளுக்கு 40 வயது. குப்பனுக்கு அது விளையாட்டாக இருந்தது. அவனுக்குப் பிடித்தும் இருந்தது. அது முதல் அது போன்ற வாய்ப்புகள் வரும் பொழுது மறுக்காமல் விளையாடிக்கொண்டிருந்தான். சில ஆண்டுகளில் கொஞ்சம் ஒதுங்க ஆரம்பித்தான். பின்னர் கொஞ்சம் ஒதுக்க ஆரம்பித்தான். தேர்வு செய்து விளையாடும் மன நிலையும் வந்தது. பின்னர் “சீ” என்று ஒதுக்கித் தள்ளவும் ஆரம்பித்துவிட்டான்.

ஜே .கே யுடன் இந்த மன நிலைபற்றிப் பேச்சு வந்தது. ” தவறு என்று திருந்திவிட்டானோ ? “ என்று கேட்டேன். அவர் பதில் முதலில் வியப்பைக் கொடுத்தாலும் அதன் யதார்த்தம் பின்னர் புரிந்தது. “குப்பன் எப்பொழுதும் சரி, தப்பு என்று நினைத்திருக்க மாட்டான். யதார்த்தமாகக் கிடைப்பதை அனுபவித்து வந்திருக்கின்றான். காலம் மாற மாற ரசனைகளும் ஈர்ப்புகளும் மாறுவது இயற்கை. அதற்கேற்ப அவன் செயல்களும் மாறி வந்திருக்கின்றன. வீட்டில் இருக்கும் பெரியவர்களில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இப்படி நடப்பது கூடத் தெரியாதவர்களே அதிகம். தெரிந்தால் அவர்கள் கையாளும் விதத்தில் அவன் திருந்தலாம் அல்லது கொடூரமானவனாகவும் ஆகலாம். இது புதிதில்லை. பெரிதாக வெளியில் தெரிவதில்லை ”ஒரு மனிதனின் குணங்கள் அவர்களது பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட பல அனுபவங்களால் பாதிக்கப்படுவதுண்டு. தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அன்புடன் சாமர்த்தியமாகக் கையாள வேண்டும். “

எனக்குக் கிடைத்த சரியான படிப்பினை இது. ஏற்கனவே இயல்பாக என்னால் யாரையும் நேசிக்க முடிந்தது. வாடிப்பட்டியில் கருப்பன் சிறையிலிருந்து வந்தவுடன் முதலில் வயிற்றுக்கு நிறையச் சோறு போடுவேன். அவனைத் தூங்கச் சொல்லிவிட்டு வெளியில் சென்று அவனுக்கு இரு வேஷ்டி சட்டைகள் காசிருந்தால் வாங்குவேன்; அல்லது நண்பர்கள் வீடுகள் சென்று பழைய உடுப்புகள் வாங்கிவந்து அவனுக்குக் கொடுப்பேன்; கொஞ்சம் காசும் கொடுத்து அனுப்புவேன்.


அவன் ஒரு அடியாள். ஓர் அம்பு. எய்பவன் எவனோ? அவனுக்கு வேறு வேலை கொடுக்கவே பயந்தனர். எனவே கை, கால் வெட்டுவதே அவன் வேலை. அவனிடம் வேறு எங்காவது சென்று திருந்தி வாழச் சொல்லிக் கொண்டிருந்தேன். வாடிப்பாடியை விட்டு மாற்றலானதும் அவனைப்பற்றிய செய்தி தெரியாது.அவன் எங்கோ போய்விட்டான் என்று மட்டும் தெரியும். ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் திடீரென்று ஒரு நாள் அவன் என் வீடு வந்தான். நான் அப்பொழுது இருந்தது கோயம்புத்தூரில்; கர்ப்பமாக இருந்தேன். எனக்குப் பிரசவம் ஆகப் போகின்ற செய்தி அறிந்து பார்க்க வந்திருந்தான்.

அவன் இருக்கும் இடம் எனக்குத் தெரியாதே தவிர அவன் என்னைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தான். இப்பொழுது வேறு ஊர் சென்று கூலி வேலை செய்து பிழைத்து வருவதாகக் கூறினான். தன் நிலையே சரியில்லாததால் திருமணம் செய்து கொள்ளவில்லையாம். எனக்கு நல்லபடியாகப் பிரசவம் ஆகிப் பிழைத்துவர பழனிக்குப் போய் வேண்டிக் கொண்டானாம். பிரசாதம் எடுத்து வந்திருந்தான். பிரசாதம் கொடுத்த அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதேன். தாயைப் போன்ற அவன் பரிவில் நான் நெகிழ்ந்தேன். பலர் மேனியைப் பதம் பார்த்த அந்தக் கைகள் என் கண்ணீரைத் துடைத்தன.மனிதன் பிறக்கும் பொழுது கெட்டவனாகப் பிறப்பதில்லை. கெட்டவனாக்கப் படுகின்றான். நல்லவனாகவும் மாற்றப்பட முடியும். ’பாவத்தை வெறு, பாபியை நேசி’ இது ஏசுநாதரின் பொன்மொழி. இராமாயணத்தை எழுத இறைவன் தேர்ந்தெடுத்தது வால்மீகியைத்தான்.

குற்றவாளிகளிடமும் குறையை மட்டுமே கண்டேன். எனவே என்னால் யாரையும் நேசிக்க முடிந்தது. பல காரணிகளில் ஜே.கேயும் ஒருவர். காழ்ப்புணர்ச்சி வேண்டாம். மறக்க முடியவில்லையா, மன்னித்துவிடுங்கள். அடுத்து ஒரு காவியக் காட்சி காட்டப் போகின்றேன்.

பகுதி 7

10.01.2010

நயமான காட்சி ஒன்றைக் காட்டுவதாகச் சொன்னேன். அதற்குள் நம்மவரின் கதைபடிக்க ஆசை பிறந்துவிட்டது. படிக்க ஆரம்பித்தால் உடனே முடித்து வைக்கும்படியாகவா எழுதுவார் ! நாம் அதில் லயித்து விடுவோம். நம் மனக்குதிரையும் ஓட ஆரம்பிக்கும். நான்மட்டும் விதிவிலக்கா?

படித்த கதை - ஒரு பிடி சோறு.
அவர் கதைகளுக்கு விமர்சனம் செய்யும் நோக்கில் நான் எழுதத் தொடங்கவில்லை. அவருடைய எழுத்துக்கள் பிறந்த இடம், அவர் எண்ணங்கள் புழங்கும் இடம்பற்றிப் பேச ஆசை. அந்த சிம்மம் கர்ஜிக்க ஆரம்பித்தால் அந்த கர்ஜனையின் வலிமை பற்றி எழுதத் துடிப்பு.
ஜெயகாந்தனின் எழுத்துக்கள் யதார்த்தமானவை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. பலரும் சொல்வதுதான். புதுமைப் பித்தன் எழுத்தும் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டும் யதார்த்தமானவை. நடுத்தர குடும்பக்கதைகளை லக்ஷ்மியும் யதார்த்தமாகவே எழுதியுள்ளார். ஜானகிராமனோ ஆத்மாவைத் தட்டி எழுப்புவதில் யதார்த்தமானவர்.
எத்தனை யதார்த்தங்கள்? எல்லாம் ஒன்றா? இல்லை. இல்லவே இல்லை. இப்பொழுது நான் விளக்கங்கள் கூறப் போவதில்லை. ஒரே நாளில் இந்நால்வர் கதைகளையும் ஆளுக்கு ஒன்றாக எடுத்துப் படியுங்கள். நீங்கள் உணர்வீர்கள்.

நான் கொடுக்கும் பழைய சோறு வேண்டாம்.
ஒரு பிடி சோறு கிடைப்பது கூட இயலாத ஒருத்தியின் கதை ஒரு பிடி சோறு. சென்னைக்குப் பிழைக்க வந்தவள் ராசாத்தி. அக்காலத்தில் இப்பொழுது போல் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப் படவில்லை. வருகின்றவர்கள் கட்டட வேலைக்கு கிராமங்களிலிருந்து கூட்டமாக வருவார்கள். கல்லுடைக்க, மண்சுமக்க இப்படிப் பல வேலைகளுக்குச் சித்தாளாக வேலை செய்யப் பெண்களும் வருவர்கள். இவர்களுக்கு எல்லா நாட்களிலும் வேலை கிடைப்பதில்லை.

வயிறு இருக்கின்றதே. பசிக்கச் சோறு வேண்டும். விருந்தன்னமா வேண்டுகின்றார்கள்?!. வேலை இல்லையென்றால் பசிக் கொடுமை. அதனைப் போக்க அவளுக்குத் தெரிந்தது இன்னொரு வியாபாரம். அவளிடம் இருந்த முதலீடு அவள் உடம்புதான். விபச்சாரம் அவள் தொழிலன்று. உடல் இச்சைக்காகவும் அவள் கடை விரிக்கவில்லை. பணம் தேவையென்றால் எவனாவது வருவான், அவன் கேட்பதைக் கொடுத்து இவளுக்கு வேண்டியதைப் பெறுவாள். இது தினசரி வியாபாரமும் இல்லை. அவ்வப்பொழுது அவள் இந்தத் தொழிலையும் செய்து வருவாள். அவளுக்கு ஒரு மகன் மண்ணாங்கட்டி. .முகவரி இல்லாத ஒரு மண்பொம்மை. . இந்த இருவரின் வாழ்க்கைதான் ஒரு பிடி சோறு. இதைப் படித்தவுடன் நான் எங்கோ பயணம் சென்று விட்டேன்.

ஜெயகாந்தன் மாளிகைவாசியல்ல. மண் குடிசைக்குப் போவார்; அங்கு பழைய சோறு சாப்பிடுவார். அப்படிப் போய்த்தான் கதை எழுத வேண்டுமா என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது. அவர் கதையா எழுதினார்? அவர் எழுத்தில் உடன் வாழ்ந்து நம்மையும் உணரவைக்கின்றாரே!. அந்த சக்தி அவருக்கு எப்படி கிடைத்தது?அவருடன் போய் அவர் உணர்வுகள் ஓடும் பாதையை நேரில் பார்த்து உணர்ந்தவள் நான்.எனக்கு எழுதத்தெரியாது. ஆனால் உணர முடியும். அவருடன் நான் சென்ற பயணமும், நான் உணர்ந்ததும் இத்தொடரில் எழுதுவேன்.

என் சொந்த அனுபவம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். சமுதாய அக்கறையுள்ளவர்கள், சீர்மைப் படுத்த என்ணுகின்றவர்களின் சிந்தனை எப்பொழுதும் சமூகத்தையே சுற்றிவரும். முதன் முறையாக நன் என் பத்து வயது மகனைக் கூட்டிக் கொண்டு பம்பாய் சென்றிருந்தேன். அது ஒரு தொழில் அதிபர் வீடு. அவர் தங்கை என் துறையில் வேலை பார்த்து வந்தாள். அவளின் அழைப்பின் காரணமாகச் செல்ல முடிந்தது.
அவர் பெயர் சந்திர மோகன். உழைப்பால் உயர்ந்த மனிதர். கிருஷ்ணன் அவருடைய நண்பர். நெற்றியில் நாமம். எப்பொழுதும் அவர் நா கிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டே இருக்கும். இப்பொழுது அவருக்கு என்னால் சோதனை.. கிருஷ்ணன் வேறு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நான் போன அன்று, இரவில் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்திருந்தோம். நீங்கள் ரசிக்க உரையாடல் மட்டும் போதும் .

“அம்மா. உங்களுக்கு பம்பாயில் எங்கெல்லாம் போக வேண்டும் என்று சொல்லுங்கள். கிருஷ்ணன் உங்களைக் கூட்டிச் செல்வார். அவரை லீவு போடச் சொல்லுகின்றேன். எந்த நேரமானலும் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள். உங்கள் விருப்பம் சொன்னால் போதும்.”

“எனக்கு தாராவி போக வேண்டும். அங்குதான் தமிழர்கள் நிறைய இருக்கின்றார்களாம். அவர்கள் வீடுகளைப் பார்க்க வேண்டும்”

“இந்தத்தமிழ் நாட்டு வாசிகளுக்கே ஒரு பைத்தியம். தமிழன் மட்டும்தானா மனுஷன், மத்தவங்களையும் பாக்கத் தோணலியா ?”, கிருஷ்ணன் கிண்டலடித்தார்.

நானும் சிரித்துவிட்டு,“பிழைக்க வந்த இடத்தில் அவர்கள் ஒண்டிக் கொண்டு வாழ்கின்றார்களாம். அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்க்க வேண்டும். அங்கு ஒரு சாராயக் கடையில் பெண்ணே வியாபாரம் செய்கின்றாளாம். அந்த சாராயக் கடைக்குப் போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்க வேண்டும். அங்கு அவர்களுக்கு ஒரு சங்கக் கட்டடம் இருக்கின்றதாம். அங்கும் போக வேண்டும் “ என்றேன்

“அப்பா சந்திரன், இந்தம்மா என்னைச் சாராயக் கடைக்குக் கூப்பிடறாங்க. அங்கெல்லாம் என்னால் போக முடியாது. சாராய பாட்டில் வேணும்னா நான் வாங்கிட்டு வரேன். ஏம்மா, பிள்ளையார் கோயில் இங்கே விசேஷம் அங்கே போகணுனு தோணல்லியா?

கிருஷ்ணனின் ஆத்திரம் புரிந்தது. நல்ல மனிதர். நான் விளக்கவேண்டும் “கிருஷ்ணன் பிள்ளையார் இல்லாத இடம் ஏது? அதையும் பின்னால் பார்க்கலாம் .மஹாலட்சுமி கோயிலுக்கும் போகவேண்டும்.. நான் ஒரு சமூக சேவகி. வாழும் சூழலைப் பார்க்க வேண்டும். .நான் எங்கு சென்றாலும் குடிசைகள் பக்கம்தான் போவேன். அவங்க எப்படி வாழறாங்கண்ணு பார்க்கணும். எனக்குக் குடிக்க சாராயம் வேண்டும்னா சொல்றேன் “என்றவுடன் எல்லோரும் சிரித்துவிட்டார்கள்

“அப்புறம் வேறு எங்கெல்லாம் போகணுன்ம்னு சொல்லிடுங்கோ.  அதுக்கேத்தாப்பலே  ஏற்பாடு செய்யணும் “ என்றார் சந்திரன்

“சிவப்பு விளக்கு ஏரியா போகணும்.”

“அய்யோ” என்று கத்திவிட்டார் கிருஷ்ணன். சந்திரன் மட்டும் என்னை சுவாரஸ்யமாகப் பார்க்க ஆரம்பித்தார்.

“அங்கே வீடுகளுக்குள் போய் அந்தப் பெண்களுடன் பேசணும்”

“அது ரொம்பக் கஷ்டம்”என்று முறைத்தார் கிருஷ்ணன்.

“அதுக்கேத்த ஆட்களைப் பிடிச்சு போய்ப் பார்க்கலாம். அம்மா கதை எழுதப்போறாங்க போல இருக்கு.”என்று சந்திரன் கூறவும் நான் மறுத்துத் தலையாட்டினேன்.

“பெண்கள் படும் கஷ்டங்கள் எனக்குத் தெரியணும். என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாக்கணும் “ என்றவுடன் சூழ்நிலை அமைதியாயிற்று

“ இன்னும் என்னவெல்லாம் பார்க்கணும்?”

“இதுவரை நைட் கிளப் பார்த்ததில்லை. ஒண்ணு பாக்கணும். பாதி ராத்திரியில் பிளாட்பாரத்தில் தூங்குவாங்களே, அவங்களைப் பாக்கணும். . எழுப்பி பேசல்லாம் வேண்டாம். “

கிருஷ்ணன்தான் நெளிந்து கொண்டிருந்தார். அவர்தானே கூட வரப் போகின்றவர். இந்த அனுபவங்களை விரிவாக நினைவலைகளில் பதிய இருப்பதால் இதற்கு மேல் எழுதவில்லை என்னை யாரும் இதனைப் பார்த்து அறிக்கை கேட்கவில்லை. எங்கெல்லாம் துயர்கள் என்று கேள்விப் படுகின்றேனோ அங்கே அவைகளைப் பார்க்க எண்ணுவது என் இயல்பு. எனக்கும் ஜெயகாந்தனுக்கும் குடிசை வாழ்க் குணங்கள், அதாவது போலித்தனம் இல்லாத வாழ்க்கை. அவர் எழுத்தில் வடித்தார். நான் முடிந்த அளவு செயலில் இறங்கினேன். அவருக்கு எப்பொழுதும் வெற்றி. ஆனால் நான் வெற்றியையும் தோல்வியையும் சந்திக்க வேண்டிவரும்.

ராசாத்தி செய்ததை எவ்வளவு நாசுக்காகச் சொல்லுகின்றார். படுக்கை அறைக் காட்சிகளை அலங்காரப்படுத்தி காட்டவில்லை. ஜானகிராமன் எழுதிய மோக முள்ளை இப்பொழுது எடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தக் கருத்தே ஒரு முள், மோக முள். ஓர் இளைஞனின் மனத்தவிப்புதான் முழுவதும். “இதுக்குத்தானா இவ்வளவும் “

அப்பப்பா, ஆமாம், இதுக்குத்தான் இவ்வளவு தவிப்பும். ஒரு சொல்லில் புரியவைக்கும் விந்தை மனிதர்கள் காலத்தில் வாழ்ந்த பெருமையும் உண்டு. பெண்ணின் உடலை நான்கு பக்கங்களில் பிரித்துப் போட்டு அசிங்கப் படுத்தும் காலத்திலும் வாழ்கின்றோம். சின்னப் பிள்ளைகளும் புத்தகங்களைப் படிக்க முடியாவிட்டாலும் படம் பார்க்க்ன்றார்கள். அவர்களால் முழு உடம்பைப் பார்க்க முடியாது. திகைப்பை விதைக்கின்றோம். மனத்திற்குள் ஒட்டவைத்துப் பார்க்கும் காலத்தில் வாழ்கின்றோம்.
பிள்ளைகளைக் குறை கூற முடியுமா? எங்கள் காலத்தில் உடன் பிறந்தான் இல்லையென்றால் ஆண், பெண் குழந்தைகளின் உறுப்புகள்பற்றி கூடத் தெரியாமல் வளர்ந்து வந்தோம். என் காலத்தில் எல்லாம் பார்த்து வருகின்றேன்.

அடுத்து புதுச்செருப்புக் கடிக்கும்.

ஜெயகாந்தா, நான் கேட்கத் துடிக்கும் கேள்வியை நீ கேட்டுவிட்டாய். உனக்கு டாக்டர் பட்டம் கொடுத்து அந்த பட்டத்திற்குப் பெருமைதேடிக் கொண்டுவிட்டான் மனிதன். அடுத்து அந்தச் செருப்பைப் பார்ப்போம்.


பகுதி 8

17.01.2010

நந்தகோபாலுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகிவிட்டன. ஆனாலும் கணவன் மனைவிக்கிடையில் சுமுகமான உறவில்லை. அவன் விருப்பப்படி அவள் ஈடு கொடுக்கவில்லை. அவனுக்கு எரிச்சல். அவளுக்கோ அலட்சியம். இப்படி இருந்தால் குடும்பம் உருப்படுமா?

ஆத்திரத்தில் அவனுக்கு உறக்கம் வரவில்லை. நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியில் செல்கின்றான். மனைவியோ அலட்சியமாகக் கதவைச் சாத்திவிடுகின்றாள். அதுவும் அவன் ஆண்மைக்குக் கிடைக்கும் அடியாக உணர்கின்றான்.

பிள்ளைப் பருவ நினைவுகள் அவ்வப்பொழுது அவன் நினைவில் வந்து முள்ளாய் உறுத்தும். இரவு நேரத்தில் அம்மா சத்தம் போட்டுக் கத்துவதும் , அப்பா அடிப்பதும் எல்லாம் ஒலிகளாய் இவன் இருக்குமிடம் வரும். பொழுது புலர்ந்துவிட்டால் அதே அப்பாவும் அம்மாவும் ஒன்றும் நடக்காதது போல் பேசும் காட்சிகள் உணர்ச்சியில் ஆழமாகப் பதிந்துவிடும். இன்றும் அவைகள் அவனை ஆட்டிப்படைக்கின்றன.

“பெற்றோர்கள் சண்டையைவிடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனத்தை மிகவும் அசிங்கப் படுத்தின” இது ஜெயகாந்தனின் வார்த்தைகள். விமர்சிக்கலாம். ஆனால் இது யதார்த்தம். என் பிள்ளைப் பருவத்திலும் எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது சரியா தப்பா என்பதில்லை. குழந்தைகள் மனங்களில் எப்படி ஆழமான புண்களாகப் பதிந்துவிடுகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

 அவன் வீட்டைவிட்டுப் போவதும் பிடிக்கவில்லை. ஆனாலும் கடந்தகாலப் புண்களும் இக்கால அடிகளும் அவனைத் துரத்திவிட்டன.அவன் இப்பொழுது போகும் இடம் எங்கே? அதுதான் அவன் கடந்தகாலம்.

 திருமணமாகும் முன் அவனுக்கு அறிமுகமாகின்றாள் கிரிஜா. ஏதோ சின்னச் சின்ன வேலை செய்கின்றாள். உடன் பிறந்த ஒருவனும் எங்கேயோ இருக்கின்றான். ஒற்றை மரமாக ஒருத்தி.எப்படியோ காலம் நகர்கின்றது. மரபு வாழ்க்கை அவளுக்கில்லை. பாதையில் வரும் அனுபவங்களை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கின்றாள்.

நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கின்றது” இது ஜெயகாந்தன். ஒருத்தியல்ல, ஆயிரக் கணக்கான பெண்களை இது போன்ற நிலையினில் பார்த்திருக்கின்றேன். நந்தகோபாலுக்கும் ஒரு நாள் உறவு ஏற்பட்டது. சிறுகதை தொடர் கதையாயிற்று.வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இவள் வீட்டில் சாப்பிட ஆரம்பித்தான்; சொல்லப் போனால் குடும்பமே நடத்தினான். அவள்தான் இவனைத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப் படுத்தினாள். ஆனால் அவனுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங் களுக்குப் பிறகு இப்பொழுது கிரிஜாவைத் தேடி வந்து விட்டான். அவளிடம் தன் உள்ளக் குமுறலைக் கொட்டுகின்றான். அப்பொழுது கிரிஜா பேசுவதில்தான் ஜெயகாந்தனின் தனித்துவம் தெரிகின்றது. அந்தக் காலத்தில் வேறு யாரும் இப்படி எழுதத் துணிந்ததில்லை.

“பாருங்க, வய்பா வர்ரதற்கு டிரெய்ண்ட் ஹாண்டா கேக்குறாங்க.? நான் டிரைண்ட் ஹாண்ட். அதுதான் என் டிஸ்குவாலிகேஷன் “.

இதைவிட ஒரு சாட்டையடி இருக்க முடியுமா ? ஜெயகாந்தனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததால் , அதைக் கொடுப்பவர்கள் உயர்ந்திருக்கின்றார்கள். அடுத்து கிரிஜா கூறுவது ஆண்மகனுக்கு ஒரு பாடம்.

“செருப்புகூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ !. அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களா?!”

இதைவிடப் படிப்பினையை எளிமையாகக் கூறமுடியுமா? “புதுச்செருப்பு கடிக்கும்” கதையைப் படிப்பவரிடமிருந்து இது வெறும் மிகையான கதை என்று உடனே ஒரு விமர்சனம் வரும்.  

அய்யா, பெரியோர்களே, இது இப்பொழுதும் தொடர்கதை. பத்திரிகையில் வருபவைகளைச் சொல்லவில்லை. இது போன்ற பிரச்சனைகள் என்னிடமே நிறைய வந்திருக்கின்றன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். ராஜு கணிணியில் பட்டம் பெற்று டில்லியில் வேலை பார்த்து வந்திருக்கின்றான். அவனுக்குத் திருமணமாகி இதே போன்று அவனுடைய இயல்புக்கு ஒத்துழைப்பு கிடைக்காததால் அவளுக்கு உடல் நோய் என்று சொல்லிப் பிறந்தகம் அனுப்பி விட்டான். அத்துடன் விவாகரத்துக்கும் முனைந்துவிட்டான். தனிமையில் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அரட்டை மூலம் அறிமுகமானான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கதையைக் கூறினான்.

கொஞ்சம் பழகட்டும் என்று காத்திருந்தேன். நடந்த சம்பவங்களைக் கூச்சப்படாமல் சொல்லச் சொன்னேன். என் முதுமையும் அணுகுமுறையும் அவன் நடந்தவைகளை அப்படியே ஒன்றுவிடாமல் கூறினான். இவனுக்கு அவசரம், அவளுக்கு மிரட்சி. இது மட்டும் காரணம் அன்று.இன்றைய ஊடகத்தாக்கங்களும் சூழலும் இளைஞர்களை கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்து நிஜ வாழ்க்கையில் அவர்களைப் புரட்டி எடுக்கின்றன!

இளைஞன் பெண்ணின் விழிகளையும் இதழ்களையும் வருணித்துத் திரும்பத் திரும்பக் கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்றான். கொஞ்சம் முதிர்ந்தவன், அனுபவப்பட்டவன் காதலென்று காம சூத்திரத்தை அறுவை செய்து கூறு போட்டுக் கொண்டிருக்கின்றான். இளைஞர்களில் நிலைபற்றி சில சம்பவங்களைக் கூற விரும்புகின்றேன்.

இவள் கிழவி, இவளுக்கு எப்படி இக்கால இளைஞர்களைத் தெரியும் என்ற கேள்வி எழும்புமே?! சமுதாயப் பணிக்கு ஓய்வு கிடையாது. அந்தப் பணியில் வயதுகள் எல்லையும் கிடையாது.கருவில் உருவாவதற்கு முன்னே அந்த நிலத்தைப் பண்படுத்தும் முதல் பணி ஆரம்பமாகி விடுகின்றது.

கணிணி கற்க ஆரம்பித்தவுடன் அரட்டையில் கூடிய இளஞர்களை வைத்து ஓர் அமைப்பை
உருவாக்கினேன். மாதந்தோறும் கூடுவோம். கூட்டம் இல்லாத நாட்களிலும் வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவர்களுடன் அவர்கள் பிரச்சனைகளும் என்னிடம் வந்தன.

ஒருவன் கதை. தப்பு, கதையல்ல நிஜம் ஒரு நாள் நள்ளிரவில் என் தொலைபேசி ஒலித்தது. எடுத்தால் மோகன் கோபத்துடன் பெண்களைத் திட்ட ஆரம்பித்தான். (உண்மைப் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை) பொறியியல் கல்லூரியில்படிக்கும் பொழுது நான்கு ஆண்டுகளாகக் காதலியாக இருந்தவள் பிரிந்து விட்டாள். இவனுக்கு உடனே வேலை கிடைக்கவில்லை. அமெரிக்காவில் வேலை பார்க்கின்றவன் அவளுக்குப் புருஷனா இருக்கவேண்டும் . அவள் பெற்றோர் அமெரிக்கா மாப்பிள்ளையைக் காட்டவும் மனம் மாறி விட்டாள்.

“வாழ்க்கையில் இது சகஜம். ஸாரி,என் கல்யாணத்திற்கு வா” என்று கூறிப் பத்திரிகையைக் கொடுத்து விட்டுப் போய் விட்டாள்.இவன் குடிக்க ஆரம்பித்துவிட்டான்.  அன்று அவன் பிறந்த நாள். காதலியைத் திட்ட வேண்டும; பெண்ணினைத்தைத் திட்ட வேண்டும். அதனால் என்னக் கூப்பிட்டுத் திட்டுகின்றானாம். “சரி திட்டு” என்றேன். பேசிக் கொண்டிருந்தவன் அழ ஆரம்பித்த்து விட்டான். முடிந்தால் உடனே , வீட்டிற்கு வா என்றேன். விடிந்த பிறகு வருவதாகச் சொன்னான்.

காலையில் அவன் வந்த பொழுதும் போதை தெளியவில்லை. என்னைப் பார்க்கவும் சத்தம் போட்டுக் கதறினான். அவன் புரிந்து கொண்ட காதல்பற்றிப் பேசினான்.  அவன் ஏக்கத்தைப் புலம்பினான். நான் பொறுமையாகக் கேட்டேன். பிறகு அம்மா என்று ஓடிவந்து என் மடியில் தலை வைத்துக் குமுறினான். நான் ஒன்றும் பேசவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கொதிப்பு அடங்கியது அன்று முதல் தினமும் வர ஆரம்பித்தான். கதையிலும் சினிமாவிலும் வரும் காதல், நிஜ வாழ்க்கை இவைகளைப்பற்றி யதார்த்தமாகப் பேச ஆரம்பித்தோம். அறிவுரைகள் யாருக்கும் பிடிக்காது. மனம்விட்டு எதையும் பேச முடிகின்ற இடத்திற்குப்போகத் தயக்கம் இருக்காது என்று சொல்வதை விட அங்கு செல்ல ஆர்வம் பிறக்கும். அவனுக்கு நம்பிக்கை பிறக்க ஆரம்பித்தது. ஏமாற்றத்தைத் துடைத்து விட முடியாது,
.அவனுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும். அப்பொழுது கூட ஏமாற்றத்தின்
வடு இருக்கும்.

 அவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. குழந்தையாய் மகிழ்ந்து எனக்குத் தெரிவித்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. அழகான மனைவி. புகைப்படம் அனுப்பினான். தொலைபேசியில் கூப்பிட்டான். ’அம்மா’ என்றான் அவனுக்குப் பேச்சு வரவில்லை. “சரிடா கண்ணே, எதுவும் பேச வேண்டாம் சந்தோஷமா இரு என்றேன். இப்பொழுது அவனுக்குக் குழந்தைப் பிறந்திருக்கின்றது. உடனுக்குடன் எனக்கு அவன் செய்தி அனுப்பிவிடுவான்.

எங்கள் சந்திப்புகளால், என்னுடைய யதார்த்த அணுகுமுறைகளால் ஒருவன் செத்துவிடாமல் இன்று மகிழ்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.  தேவதாஸ் என்று தன்னை நினைத்துக் கொண்டு காதலுக்காகச் சாவதுத்தான் சரி என்று நினைத்துக் குடித்துக் கொண்டிருந்தான். ஊடகங்களின் தாக்கம் இளைஞர்களை அதிகம் பாதிக்கின்றது. பெரியவர்களும் அந்தக் காலத்தை நினைத்துக் கொண்டு பிள்ளைகளின் மாற்றங்களைப் புரிந்து கொள்லாமல், சரியாக வழி நடத்த முயலாமல் இருப்பதும் ஒரு காரணமாகும். Adolescent psychology ஐப் பொதுப்படையாகப் பேசிவிட முடியாது. ஒவ்வொரு பிரச்சனையையும் தனியாகப் பார்க்க வேண்டும்..உளவியல் என்பது சாதாரணமானதன்று.

இன்னொருவன் பிரச்சனையால் போலீஸ் ஸ்டேஷன்வரை போக வேண்டிய சூழல் வந்தது.
அவனைக் காப்பாற்றியதோடு நானும் சாட்சி சொல்லப் போக வேண்டியதில்லை என்று
சூழலை மாற்றினேன்.. சமுதாயப் பணியில் உயிர் போகும் சூழலும் ஏற்படலாம்.
இந்த சம்பவத்தை அடுத்துக் கூறுகின்றேன்.

 

பகுதி 9

22.01.2010

வாழ்க்கை எப்பொழுதும் யதார்த்தமாக இருந்துவிடுவதில்லை. திடீர்த் திருப்பங்களும், சில நேரங்களில் அதிர்ச்சிகளும் காண நேரிடலாம். பல அனுபவங்கள் பெற்ற என்னையே ஆட்டிவைத்த ஓர் நிகழ்வு. மேலோட்டமாகப் படித்தால் “இந்தம்மா இப்படி வம்பை விலைக்கு வாங்கியிருக்க வேண்டாம்” என்று எண்ணத்தோன்றும். அது தவறில்லை. அதுதான் யதார்த்தம். ஆனால் நான் அச்சப்பட்டு விலகியிருந்தால் சில உயிர்கள் போயிருக்கும். சிலர் சிறைகளுக்குப் போயிருக்கவேண்டும்.

நள்ளிரவு.  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று வீட்டின் காலிங் பெல் அடித்தது. நான் வீட்டில் தனியாக இருந்தேன். ஏற்கனவே போலீஸ் துறையில் வேலை பார்க்கின்ற ஒரு நண்பர் கூறியது நினைவிற்கு வந்தது.

“சமூக சேவைன்னு இப்போதும் ஏதாவது செய்துகிட்டிருக்கீங்க. ராத்திரி யார் வந்து உதவின்னு கேட்டு வந்தா கதவைத் திறக்காதீங்க. தெரிஞ்ச பசங்க வந்தாலும் திறக்காதீங்க. சில புகார்கள் வர 010ஆரம்பிச்சிருக்கு. சில பணக்காரப் பசங்க கூடச் செலவுக்கு அதிகமா பணம் வேண்டி, திருட ஆரம்பிச்சிருக்காங்க. தனியா இருக்கறதுனாலே எதையும் செய்யலாம்”. இந்த சம்பவம் நடந்தது .

நான் எழுந்திருந்து போய் விளக்கு போட்டு பார்த்தேன். முன்னால் கம்பிகளுடன் கூடிய ஜன்னல். வந்திருந்தவன் என் அன்புக்குரிய செல்லப் பிள்ளை சிவா. துடிதுடிப்பு அதிகம். அவன் பக்கத்தில் வேறு யாரோ ஒரு பையனும் நின்று கொண்டிருந்தான்.

”ஏண்டா சிவா, வீட்டுக்கு வர்ர நேரமா இது. காம்பவுண்ட் சுவத்தில் ஏறிக் குதிச்சு வந்திருக்கியே. நல்ல வேளை நான் கிழவி. இல்லேனா ஊர் என்ன நினைக்கும். கதவைத் திறக்க மாட்டேன், போய்த் தொலை.”

”அம்மா, கோவிச்சுக்காதீங்க. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். உங்க கிட்டே என்ன செய்யறதுன்னு கேட்க வந்திருக்கேன். ஒருத்தர் உயிர் ஆபத்துலே இருக்கு. அதான் வந்தேன், திறங்கம்மா.”

அதற்கு மேல் தயக்கம் இல்லை. சிவாவும் என்னைப் போல் ஒரு அசடு. யாருக்காவது கஷ்டம்னா வரிஞ்சு கட்டிக் கொண்டு உதவி செய்வான். கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னேன். அவர்கள் உள்ளே வரவும் வாசல் கதவைப் பூட்டி விட்டேன். உட்கார்ந்த உடனே சிவா பேசினான். அவன் பேசப் பேச அதிர்ச்சியில் என்னால் பேச முடியவில்லை. அதன் சுருக்கம் மட்டும் கூறுகின்றேன்.

வந்தவன் பெயர் குமார். அவனும் சிவாவுடன் கல்லூரியில் படித்து வருகின்றான். மூன்றாம் வருடம். அவனுடைய அப்பா பணக்காரர். மதுரையில் இருக்கின்றார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் தான் குழந்தைகள். மகன்மேல் உயிரையே வைத்திருக்கின்றார். அவனுக்கு ஒரு காதலி. அவள் ஊர் சேலம் பக்கம். (இங்கே ஊர்ப் பெயர்கள் கூட மாற்றி  எழுதியிருக்கின்றேன் ).இருவரும் பல வருடங்களாகக் காதலித்து வந்திருக்கின்றனர். ஒரு முறை இருவரும் திருப்பதிக்குச் சென்றிருக்கின்றனர். இரவு தங்கலில் இணைந்துவிட்டனர். பலன் அந்தப் பெண் கர்ப்பவதியாகி விட்டாள். இப்பொழுது ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. குமாருக்கு இப்பொழுதுதான் சொல்லி இருக்கின்றாள். ஒரு டாக்டரிடம் போயிருக்கின்றார்கள். ஏழு மாதக் குழந்தையை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. வயிற்றில் அறுவை செய்து எடுக்கக் கூடாது. திருமணமாகாத ஒருத்தியின் வயிற்றில் வடு இருப்பது அந்தப் பெண்னுக்கு நல்லதல்ல. எல்லாம் பேசிய பின் சிகிச்சை செய்யவேண்டுமென்றால் ஒரு காகிதத்தில் இருவரும் கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு என்ன ஏற்பட்டலும் டாக்டர் மேல்
பொறுப்புச் சுமத்தக் கூடாது.

இதைக் கேட்கவும் இருவரும் பயந்து விட்டனர். ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் இது போன்று எழுதி வாங்குவது வழக்கம். எனவே டாகடர் சாதாரணமாகக் கேட்டது இவர்களுக்குப் பயத்தைக் கொடுத்து விட்டது. சிவாவிடம் ஆலோசனை கேட்டிருக்கின்றார்கள். அவனும் சின்னப் பையன். ஆலோசனை கேட்க என்னிடம் கூட்டி வந்து விட்டான். செய்தி சொல்லி வரும் பொழுதே என் ஆத்திரமும் வளர்ந்தது. திட்ட ஆரம்பித்துவிட்டேன்.

 “பாவிப் பயலே, போயும் போயும் கோயில் ஸ்தலங்களுக்குப் போயா தப்பு செய்தீர்கள். எல்லாத்துக்கும் அவசரம் ! ஊரெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டப் பிரச்சாரம் நடக்குதே, ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டாமா?” 

“அம்மா, திட்டம் போட்டு செய்யல்லே. சாமி கும்பிடத்தான் போனோம். ராத்திரி ஒரே இடத்தில் தங்கினோம். இதுவரை இப்படி தங்கினதில்லே தப்பு செய்துட்டோம். “இப்படி சொல்லிவிட்டு குமார் அழ ஆரம்பித்துவிட்டான். 

“குமார், அந்தப் பொண்ணு மேலே எனக்கு சந்தேகமா இருக்கு. எந்தப் பெண்ணுக்கும் ஏழு மாதம் ஆகிற வரைக்கும் தான் கர்ப்பமானது தெரியல்லேனு சொல்றது நம்பும் படியா இல்லே. நாளைக்கு அவளயும் கூட்டிக் கிட்டு வா. பேசுவோம். இப்போ நான் ஒண்னும் சொல்ல முடியாது. யோசிக்கணும் “.

அம்மா, எப்படியோ நடந்து போச்சு. அந்தப் பொண்ணுக்கு என்னமாவது ஆனா இவனும் செத்துடுவான். கோவிச்சுக்காதீங்க. என்ன செய்யலாம்னு சொல்லுங்க. செய்யச் சொல்றேன் என்று சிவா அவன் நண்பனுக்காகப் பரிந்து பேசினான்.

மறுநாள் அந்தப் பெண்ணுடன் வரச் சொன்னேன். இப்பிரச்சனையை விட்டு விலக விரும்பவில்லை. அவர்கள் செய்தது சரி , தப்பு என்று சொல்லும் நிலை கடந்துவிட்டது. இரு உயிர்கள் சம்பந்தப்பட்டது. எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் என்றே நினைத்தேன்.

மறுநாள் காதலி மாலாவுடன் குமாரும் சிவாவும் வந்தனர். ஆண்கள் இருவரையும் போகச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணுடன் தனியாகப் பேசினேன்.எப்படி ஒரு பெண் தான் கர்ப்பமாகி இருப்பதை ஏழு மாதம் வரை தெரியாது என்று சொல்ல முடியும் ? நான் வேலை பார்த்த துறையில் கர்ப்பிணிகள் பாதுகாப்புப் பிரிவில் பல ஆண்டுகள் வேலை பார்த்திருக்கின்றேன். மேலும் நான் ஒரு தாய். கேள்விகளின் விபரங்கள் இங்கே தர விரும்பவில்லை. நான் கேள்விகள் கேட்கக் கேட்க அழ ஆரம்பித்துவிட்டாள். கடைசியாக ஒன்று கேட்டேன்.

குமார் பணக்காரவீட்டுப் பையன் என்று தெரிந்து திட்டமிட்டுச் செய்தாயா? இதைக் கேட்கவும் சத்தமாக அழுது கொண்டே வெளியே ஓடினாள். அவளைப் பிடித்துக் கொண்டு குமார் உள்ளே வந்தான். சிவாவும் வந்தான். குமாருக்கு என் மேல் ஆத்திரம்.”அவளிடம் நீங்கள் அப்படி பேசி இருக்கக் கூடாது. உங்கள் உதவி வேண்டாம். அவளுக்கு ஏதாவது ஆனால் நானும் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவேன் “என்று கோபமாகச் சொல்லிவிட்டு புறப்பட்டான். “நில்லு. நிலைமையை இன்னும் மோசமாக்காதே. உட்கார். பேசுவோம்” சிவா அவன் நண்பனைச் சமாதானப் படுத்தி உட்காரவைத்தான்.

மாலாவின் அப்பா ஜாதி வெறி பிடித்தவர். வேற்று சாதிப் பையனுக்குப் பெண் கொடுக்கமாட்டார். குமாரின் அப்பா நல்லவர். மகன் விருப்பத்தை அறிந்தால் முதலில் கோபப்பட்டாலும் பின்னால் சமாதானம் ஆகிவிடுவார். ஆனாலும் எதுவும் தீர்மானமாக நினைக்க முடியாது. எனவே இருவரையும் ஏதாவது கோயிலுக்குச் சென்று உடனே திருமணம் செய்து கொள்ளச் சொன்னேன். என்னை வரச் சொன்னதற்கு மறுத்து விட்டேன். நண்பர்களைக் கூட்டிப் போகச் சொன்னேன். கர்ப்பத்தை இப்பொழுது கலைக்க முயன்றால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்பதை உணர்த்தினேன். இப்பொழுதே கொஞ்சம் வயிறு உப்புசமாக தெரிந்தது. இன்னும் ஒரு மாதம் போனால் மறைக்க முடியாது. குழந்தைப் பிரசவம் பிரச்சனை. அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அந்தப் பெண்ணை வேறு இடத்தில் வைத்துப் பாதுகாக்க உதவி செய்கின்றேன் என்றேன். ஆனால் அவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினேன். குழந்தை பிறந்த பிறகு இரு வீட்டாருக்கும் தெரியப்
படுத்துவதே புத்திசாலித்தனம். திருமணமாகிவிட்டால் போலீஸ் உதவியையும் நாடலாம் என்று சொன்னேன்.

இன்னும் 15 நாட்களில் நான் அமெரிக்கா புறப்பட வேண்டியிருந்தது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் முடித்து , பின்னர் என்னை வந்து பார்க்கச் சொன்னேன். அப்படி செய்தால்தான் நான் புறப்படும் முன் மாலா எங்கே , யாருடன் தங்கலாம் என்பதைச் சொல்வேன் என்றேன். இதைத்தவிர வேறு வழியில்லை. தாமதித்தால் மாலாவின் உயிருக்கும் ஆபத்து, அவர்கள் காதலுக்கும் ஆபத்து என்று கூறிவிட்டேன்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் என்ற ஒன்றை யாருமே நினைக்கமாட்டான். குமார் வந்து போன இரண்டாம் நாள் நானும் என் தங்கை சரசாவும் காஞ்சிக்குக் காமாட்சி தரிசனம் செய்யச் சென்றிருந் தோம். சென்னைக்குச் செல்லும் பொழுதெல்லாம் ஒரு முறையாவது என் அம்மா காமாட்சியைப் பார்க்காமல் வர மாட்டேன். அங்கிருந்து திரும்பும் பொழுது குரோம்பேட்டையில் உள்ள என் தங்கை வீட்டிற்குச் சென்றோம். அங்கே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சிவாவும் குமாரும் அங்கே இருந்தனர். குமார் அழுது கொண்டிருந்தான். பைத்தியம் பிடித்தவனைப் போல் இருந்தான். மாலாவின் அப்பா வந்து மகளைக் கூட்டிச் சென்று விட்டார். எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.. குமாருக்கு உடனே மாலா வேண்டுமாம் அல்லது எலெக்ட்ரிக் ரயிலில் விழுந்து இறந்து விடுவானாம். சிவா அவனைக் கூட்டி வருவதற்குள் மிகவும் கஷ்டப் பட்டிருக்கின்றான். காதல் படுத்தும்பாடு!

எத்தனை அனுபவங்கள் இருந்தும் ஒன்றும் எனக்குக் கை கொடுக்கவில்லை. அப்படியே திகைத்துப் போய்விட்டேன்.


பகுதி 10

24.01.2010

எதிரே அமர்ந்திருந்த சிவாவையும் குமாரையும் திகைப்புடன் பார்த்தது ஒரு நிமிடம்தான். என்ன செய்ய வேண்டும் என்று அனுபவ அறிவு உணர்த்திவிட்டது.சூடான விவாதம் தொடங்கியது -

”குமார், இப்பொழுது என்னிடம் என்ன உதவி எதிர்பார்க்கின்றாய்? தெளிவாகச் சொல்.”

“உங்களுக்கு இருக்கும் செல்வாக்கில் போலீஸ் மூலம் எனக்கு மாலாவை மீட்டுத் தாருங்கள்.”

”போலீசிடம் உனக்கும் மாலாவுக்கும் என்ன உறவென்று கூறுவது?”

”அவள் என் காதலி; அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் அப்பா.”

“சட்டப்படி நீ அவளை இன்னும் மணக்கவில்லை. அவள் அப்பாவிற்கு இருக்கும் உரிமைகூட உனக்குக் கிடையாது. அவள் மேஜரான பெண். அவளை நீ கெடுத்து கர்ப்பமாக்கிவிட்டாய் என்று அவள் சொன்னால் உன்னைக் கைது செய்யலாம்.”

“அவள் அப்படி சொல்ல மாட்டாள்.”

”இப்பொழுது அப்பாவுடன் போயிருக்கின்றாளே! சண்டை போட்டு உன்னிடம் வந்திருக்கலாமே?”

“அவள் பயந்து போய் கூடப்போயிருக்கின்றாள்.”

“அதே பயத்தில் அவள் அப்பா சொல்லிக் கொடுத்தபடி பேச மாட்டாளா?”

இப்பொழுது குமாருக்கு அதிர்ச்சி - மாலா பயத்தில் அப்படி கூறலாம்.

“அப்படியானால் மாலா இனிக் கிடைக்கமாட்டாளா?”

”இந்தச் சூழ்நிலையில் போலீஸ் உனக்கு உதவ முடியாது. நீ தகராறு செய்தால் அவள் அப்பா புகார் கொடுப்பார். உன்னைக் கைது செய்யலாம்.”

”அப்போ ரயில்லே விழுந்து சாகறேன்.”

”எதுக்கும் உனக்கு அவசரம். நீ இருக்கற லட்சணத்துக்குப் பொண்டாட்டி, புள்ளே!  காதல்ங்கறது விளையாட்டில்லே. சொல்றதைக் கேளு. மதுரைக்குப் போ. உன் அப்பா கால்லே விழு. முதல்லே உன்னைத் திட்டுவார். அடிச்சாலும் அதிசயமில்லே. ஆனால் உன்னைச் சாக விடமாட்டார்.
உன் நிலைமையைச் சொல்லு. முதல்லே உன் அக்காகிட்டே எல்லாம் சொல்லிடு. மகனைப் பறி கொடுக்க எந்தப் பெத்த மனசும் ஒத்துக்காது. உடனே பஸ்ஸுலே போ.”

அவன் பதற்றம் குறைய ஆரம்பித்தது.

”சரி அப்பா கிட்டே போறேன். அதுக்குள்ளே மாலாவுக்கு ஒண்ணும் ஆகாதே. என் புள்ளையைக் கொன்னுட்டா?”

”நீங்களும் டாக்டர் கிட்டே போனீங்களே எதுக்கு? கொல்லத்தானே. இப்போ மட்டும் பாசம் பொங்குதோ?!. உன் மாலாவுக்கு ஒண்ணும் ஆகாது. உன் அப்பா பணக்காரர். உனக்கு மாலா கிடைப்பாள்.”

”சரி. ஊருக்குப் போறேன்.”

“சிவா, நீ கூடப் போய் அவனை மதுரை பஸ்ஸில் ஏத்திவிடு. பஸ் புறப்படவும் எனக்கு போன் செய்”. என்று சிவாவிடம் கூறிவிட்டு “மதுரைக்குப் போன பின் அங்கிருந்து சிவாவுக்கு போன் செய். அடிக்கடி அங்கே நடக்கறதை அவன் கிட்டே சொல்லு. இப்போ போ “ என்று குமாரையும் அனுப்பி வைத்தேன்.

அப்பாடா என்று படுத்தேன். உறக்கம் வரவில்லை. பிள்ளைகள் பெற்றோர்களுடன் சேர்ந்து விடுகின்றார்கள். இனி அவர்கள் பொறுப்பு.

பொழுது விடிந்தது. குமார் வீடு போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் அத்துடன் கதை முடியவில்லை. எனக்கு மதுரையிலிருந்து போன்கால். பேசியது குமாரின் அக்கா. வீட்டில் பெரிய சண்டை. இப்பொழுது அப்பாவும் அழ ஆரம்பித்துவிட்டார். எப்படியோ மகனுக்கு மாலாவைத் திருமணம் செய்து வைக்க ஒப்புதல் கொடுத்துவிட்டார்.

மாலாவின் வீட்டிற்குத் தொடர்பு கொண்டால் அங்கு மாலா வரவில்லையென்றும், அவள் அப்பாவும் அங்கில்லையென்றும் தகவல்தான் கிடைத்தது. மாலாவின் வயிற்றில் வளர்வது குடும்ப வாரிசு. அதை அழித்திருந்தால் திருமணம் செய்து வைக்க முடியாது என்று குமாரின் அப்பா சொல்லிவிட்டார். அதனால் குமார் அறைக்குள் போய் இருந்து கொண்டு வெளியில் வருவதில்லை. சாப்பிடவில்லை. அவன் அப்பாவும் இன்னொரு அறைக்குள் போய்விட்டார். எனவே அவன் அக்கா கவலையால், இனிமே என்ன செய்யவென்று கேட்டாள்.

மாலாவின் அப்பா ஜாதி வெறி பிடித்தவராக இருக்க வேண்டும். குமார் பணக்கார வீட்டுப் பையன் என்று தெரிந்தும் மகளை மறைத்து வைத்திருக்கின்றார்  என்றால் அவருக்கு ஜாதிதான் பெரிது என்பது நன்றாகத் தெரிகின்றது. நிச்சயம் கர்ப்பம் கலைக்கப்பட்டுவிடும். அப்படி மட்டும் அவர் செய்துவிட்டால் குமாரின் அப்பா திருமணத்திற்கு நிச்சயம் ஒப்புதல் தரமாட்டார். இதனை விளக்கமாக எடுத்துச் சொன்னேன். எப்படி இருந்தாலும் மணம் செய்து கொடுப்பதாக அப்பாவைச் சொல்லச் சொன்னேன். அதில் குமார் கொஞ்சம் சமாதானம் ஆவான். நாளாக ஆகக் கொஞ்சம் கொஞ்சமாக மனம் தேறிவிடுவான். சண்டை வேண்டாம் என்று சொன்னேன். அதன்பின் போன் வரவில்லை. நான் அமெரிக்கா புறப்படும்வரை போன் வரவில்லை. சிவாவை என்னை வழியனுப்ப வர வேண்டாம்என்று சொல்லிவிட்டேன். அவன் எனக்குப் பல மெயில்கள் அனுப்பினாலும் பதில் அனுப்பவில்லை.

ஓராண்டு கழித்துச் சென்னை சென்ற பின் சிவாவை வீட்டிற்குக் கூப்பிட்டேன். சந்தோஷமாக ஓடி வந்தான் அவனாகக் குமாரைப் பற்றி எதுவும்  பேசவில்லை. நானாகக் கேட்ட பின் நடந்தவைகளைக் கூறினான். மாலாவின் கர்ப்பம் கலைக்கப்பட்டு விட்டது. கொஞ்ச நாட்கள் கழித்துக் கல்லூரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டாள். இப்பொழுது கட்டுப்பாடுகளுடன் கல்லூரிப் படிப்பு.

குமாரும் மாலாவும் பேசிக் கொள்வதில்லை. பரீட்சை முடிந்த அன்றே மாலா காணவில்லை. தேடினால் குமாருடன் இருந்தாள். எப்படியோ திருமணம் செய்து கொண்டு அதனை ரகசியமாக வைத்திருந்தனர். படிப்பு முடியவும் சேர்ந்து விட்டனர். மாலாவின் அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குமாரின் அப்பா அவர்கள் இருவரையும் ஏற்றுக் கொண்டு விட்டார். இதுதான் வாழ்க்கை.

ஜெயகாந்தன் தொடருக்கும் இந்த நிகழ்வுக்கும் என்ன சம்பந்தம்?  ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பைக் கூறப் போகின்றேன்.

முதலில் அவர் பாத்திரம் கங்காவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். என்றோ ஒரு நாள் அவளைக் கெடுத்துவிட்டுப் போனவனைத் தேடிபிடித்து, அவன் திருமணமானவன் என்று தெரிந்தும், அவன் தன்னைச் சின்ன வீடாகக் கூட வைத்துக் கொள்ள மாட்டான் என்றும் தெரிந்தும் அவனுடன் பழகினாளே, எதற்கு? அவளை முட்டாள் என்று சொல்லலாமா? காதல் புகழ் பாடுகின்றவர்கள் வேறு விதமாக நினைக்கலாம். கசப்பான நினைப்பை இனிமையாக்கச் சில வினாடிகள் பேச்சிலே பிறக்கும் பாசத்தை விரும்பிய ஒருத்தி என்று கூறலாமா? கானல் நீரைத் தேடி ஓடிய பைத்தியம் என்றும் சொல்லலாமா? கங்காவைப் போன்ற எத்தனை பெண்களை நாம் காண முடியும்?!

கதைக்காகப் படைக்கப்பட்ட பாத்திரமா? இல்லை. எங்கோ அவளைப் போன்ற ஒருத்தி
இருக்கின்றாள். எழுத்தாளனுக்குச் சில நேரங்களில் எங்கோ நடக்கும் நிகழ்வுகள் அவனையும் அறியாமல் படிவது உண்டு. இந்த அனுபவத்தை சிலர் உணர்ந்திருக்கக் கூடும். ஒன்றைப் பார்க்கும் பொழுது, இதனை நாம் எங்கோ பார்த்திருக்கின்றோமே என்று நினைப்பு சிலருக்கு வருவதுண்டு. சில பாத்திரங்கள், சில நிகழ்வுகள் அரிதானவை.

சீதாலட்சுமி என்று ஒரு பெண். ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்புகின்றாள். கோயில், குளம் பார்க்காமல், அழகான இடங்களைத் தேடிப் போகாமல், சிவப்பு விளக்கு ஏரியா, சாராயக் கடை, நைட் கிளப், நள்ளிரவு பிளாட்பாரக் காட்சிகள் காண விரும்புகின்றாள். இப்படி எத்தனை பெண்கள் இருக்கின்றார்கள்?!.

உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் அமைதியாகப் பொழுதைப் போக்காமல், ஏதாவது பிரச்சனை என்று கண்டு விட்டால் உடன் ஓடுகின்றாளே! குமாரின் பிரச்சனையை அவள் தேடிப் போகவில்லை. தானாக வந்ததுதான். ஆனாலும் பயந்து ஒதுங்கவில்லை. அவள் பிழைக்கத்தெரியாத முட்டாளா? இப்படி ஒன்றா இரண்டா, எத்தனை எத்தனை பிரச்சனைகளுடன் போராடியிருக்கின்றாள். பித்துப் பிடித்தவளா? எப்படியோ அவள் வித்தியாசமானவள்.

ஆம், நான் வித்தியாசமானவள். எனக்குள் ஒரு பேராசை பிறந்தது. என்னிடம் கொட்டிக் கிடக்கும் பல கதைகளைச் சரியாக வடிக்க ஓர் எழுத்தாளனைத் தேடினேன். பலர் என்னைச் சுற்றி இருந்தாலும் ஒரே ஒரு கோல்தான் அதனை ஓவியமாகத் தீட்ட முடியும் என்று நினைத்தேன்.

ஆம், அந்த எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். நான் அவரைப் பார்க்க விரும்பினேன். அவரைப் பற்றி நிறையத் தெரியும். அவர் கதைகள் எல்லாம் படித்திருக்கின்றேன். ஆனால் அவரைப் பார்த்ததில்லை. முதல் சந்திப்பு நிகழ்ந்த ஆண்டு 1970.என்னுடன் இருந்தவர்கள் பழனியம்மாளும் ராஜியும். உயிரோட்டமான சந்திப்பு.

அடுத்துக் கூறுகின்றேன்.


பகுதி 11

28.01.2010

ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பைச் சுவையாக எழுத நினைத்திருந்தேன். ஆனால்
திடீர்ச் சுழ்நிலை அதனைச் சுடச் சுட செய்தியாக்கிவிட்டது. ஒரு சம்பவம் எழுதலாமா என்று தயங்கிக் கொண்டிருந்தேன். கிடைத்த செய்தி என் தயக்கத்தைத் தூக்கி எறியவும் செய்துவிட்டது.

சமீபத்தில் சங்கரநேத்திராலயா ஆய்வு நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவில் ஜெயகாந்தன் பேசியிருக்கின்றார்.

“பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர்.இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “.

ஜெயகாந்தனின் மேடைப் பேச்சென்றால் திடீர் வெடி வெடிக்கும். அது எப்பொழுதாவதுதான். இந்தப் பேச்சு காற்றோடு போயிருக்கும். ஆனால் பத்திரிகைகளுக்குச் சுடச் சுடச் செய்தி வேண்டுமே!. அவ்வளவுதான். பேட்டிகள், பேட்டிகள் பேட்டிகள் தலைப்பு “ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர் “

ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் திருமது வாசுகி அம்மையார் புள்ளி விபரங்களுடன் ஜே.கே அவர்களுக்குக் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.. இந்த அமைப்பு எப்பொழுதும் எங்கு ஆய்வுகள் நடத்தினாலும் புள்ளி விபரங்களைச் சேகரித்து வைப்பவர்கள். பெண்கள் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் ஓர் அமைப்பு.

அடுத்துச் சாடியிருப்பவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி திருமதி ராமாத்தாள் அவர்கள்.அரசு சார்புடையது.

நான் இருப்பது அமெரிக்கா. தமிழகச் செய்திகளை உடனே எனக்கு அனுப்ப இப்பொழுது சில குழந்தைகள் வந்துவிட்டனர். ஜே. கே அவர்களின் பெயரின் வசீகரம். அவரைப்பற்றி எழுத ஆரம்பிக்கவும் சிலர் எனக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

இரு வாரத்திற்கு முன்னால் துளஸிதாஸுடன் தொலைபேசியில் பேசினேன். அப்பொழுது
அவர் கூறினார் “மீண்டும் ஜே. கே அவர்களின் புத்தகங்கள் நிறைய படிக்க ஆரம்பித்துவிட்டனர். இளைஞர்களுக்கு மத்தியில் மீண்டும் ஓர் எழுச்சி “ என்றார். அவர் எழுத்துக்கள் சிரஞ்சீவித் தன்மை வாய்ந்தவை. . இப்போழுது ஜே. கே அவர்களின் பேச்சால் எழுந்த பிரச்சனைகளைப் பார்க்கலாம்.

பொதுப்படையாகக் குறித்துப் பேசியதுதான் குழப்பத்திற்குக் காரணம். இது ஒரு trend. ஒரு பிரச்சனையைத் தெரிந்து கொள்ள சில வழிகள் இருக்கின்றன. Study or research. பத்திரிகைகளைப் பார்த்து, செவி வழிச் செய்திகளைக் கேட்டு ஒரு முடிவிற்கு வரக் கூடாது. அதாவது அது முழுமையானதல்ல. சில பிரச்சனைகளையாவது உள் புகுந்து கொஞ்சம் பார்த்துவிட்டுப் பேச வேண்டும். இன்னும் ஆழமாகப் போக நினைத்தால் ஆய்வுகள் செய்தாக வேண்டும். ஆய்வுகள் அறிக்கைகளை வைத்துப் பேசும் பொழுது கூட நம் பகுதியில் நாமும் கொஞ்சமாவது ஆய்வு செய்திடல் வேண்டும்.

ஒரு சின்ன உதாரணம் சொல்லுகின்றேன்.

1967ல் தி. ,மு. க ஆட்சிக்கு வந்ததது. அறிஞர் அண்ணா முதல்வராகவும் அவருக்கு ஆலோசகராக வந்தவர் திரு. முருகேச முதலியார் அவர்கள், அறிஞர் பெருமான். அரசுத் துறைகளைப் பற்றி ஆய்வு செய்து ஓர் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதிலே மகளிர் நலத்துறையை மிகவும் குறைவாக மதிப்பிட்டு அறிக்கை கொடுத்திருந்திருந்தார். அதிலே அவர்கள் பெண் ஊழியர்களை அலங்காரப் பதுமைகள் என்று குறிப்பிட்டு விட்டார். அண்ணா அவர்களும் அந்த அடிப்படையில் தமிழ் நாட்டில் உள்ள மகளிர் நலத்துறையை மூடிவிடலாம் என்று முடிவு எடுத்து பத்திரிகைகளில் அறிவிப்பும் செய்துவிட்டார்.

இந்தப் பி்ரச்சனையில் நான் நேரடியாகச் சம்பந்தப் பட்டவள். அப்பொழுது நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட மகளிர் நல அதிகாரியாகப் பணியாற்றி வந்தேன். செய்தி அறிந்து சென்னைக்குக்கு உடனே ஓடினேன்.

பத்திரிகை உலகம் எனக்குக் கை கொடுத்தது. கதைகள் எழுதி பேரும் புகழும் பெற்றதில்லை. காரணம் நான் தொடர்ந்து எழுதவில்லை. ஆனால் நண்பர்கள் அதிகம் கிடைத்தனர். என் கதைகள் அதிகமாக வெளிவந்த பத்திரிகை சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையாகும். அப்படியே அதன் உதவி ஆசிரியர் மா. ரா. இளங்கோவன் பழக்கமானார். அவர் குடும்பத்தில் நானும் ஒருத்தியானேன். அவர்களுக்கு இந்த முருகேச முதலியாரை நன்கு தெரியும். புனிதம் குடும்பத்திற்கு மிகவும் பரிச்சயமானவர். இளங்கோவனை அழைத்துக் கொண்டு திரு முருகேச முதலியார் அவர்களைச் சந்திக்கக் கோட்டைக்குப் போனேன்.

எதற்காக நான் வந்திருக்கின்றேன் என்று சொன்னேன். அவர் மிகப் பெரிய அளவில் உயர்மட்ட அதிகாரி. நான் சாதாரணமானவள். இருப்பினும் என்னை அழைத்துச் சென்றவர் அவருக்கு மிகவும் வேண்டியவர். எனவே என்னைப் பேச அனுமதித்தார்.

நான் கேட்ட முதல் கேள்வி  - அவர் கொடுத்த ஆய்வறிக்கையின் புள்ளிவிபரங்கள் எந்த மாநிலத்தில் சேகரிக்கப் பட்டவை ?.

இதற்கு அவர் எனக்குப் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. இப்படிக் கேட்டதற்கு என் மேல் நடவடிக் கையும் எடுக்கலாம். ஆனாலும் என் குரலின் அழுத்தம் கண்டு உடனே பதில் கொடுத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை என்று.

அப்பொழுதுதான் நான் காந்தி கிராமத்தின் பயிற்சி முறைகளை, கல்லுப்பட்டி பயிற்சி முறைகளை விவரித்தேன். திருச்செங்கோடு ஆசிரமமும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் காந்தீயத்தை விதைத்தி ருந்தது. இங்கெல்லாம் பயின்றவர்கள் அலங்காரப் பதுமைகளாக இருக்க முடியாது என்றேன். உத்தரப் பிரதேச ஆய்வு தமிழகத்திற்குப் பொருந்தாது என்றேன்.தமிழ் நாட்டில்தான் மகளிர், குழந்தைகள் நலத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுச் சிறப்பாக, நாட்டிற்கே முன்னோடியாக இருப்பதை விளக்கினேன். நான் அதை நிரூபிக்கவும் செய்ய முடியும் என்றேன்.

 பாருங்கள் ஆய்வு என்பதில் சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கின்றன. அப்பொழுது எனக்கு ஓரளவே தெரியும். 1979க்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக அப்பிரிவில் இன்னும் தெளிவு பெற்றேன். ஆனாலும் அப்பொழுது என்னால் ஒரு பெரிய அதிகாரியுடன் பேச முடிந்தது. பின்னர் மகளிர் நலத் துறை மூடினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்றேன். ஏன், நானே அதில் முன்னின்று உயிர் மரிப்பேன் என்றேன். பெண்ணியம் மேடையில் முழங்கினால் போதாது. பிரச்சனையைத் தீர்க்கமுறையுடன் செயலில் இறங்க வேண்டும். என் மீது அவர் கோபப் படவில்லை. முதல் காரணம் நான் விவாதத்தில் முறைப்படி விளக்கினேன். அண்ணன் மா.ரா. இளங்கோவன் உடன் இருந்ததால்தான் பேச அனுமதியே கிடைத்தது. அதற்குப் பிறகுதானே என் பேச்சு. என் வாதங்களின் உண்மைகளைப் புரிந்து கொண்டவர் என்னை உட்கார வைத்துவிட்டு, “இதோ வருகின்றேன் “ என்று சொல்லிவிட்டு முதல்வர் அறைக்குச் சென்றார். ”பிறகு வாருங்கள்” என்று அனுப்பவில்லை. சம்பந்தப்பட்ட கோப்பு கையெழுத்திற்காக முதல்வர் மேசையில் இருந்த நேரம்.

ஒரு மணி நேரம் தாமதித்துச் செயல்பட்டிருந்தாலும் கையெழுத்தாகி இருக்கும்.

இருக்கையில் இருக்க முடியவில்லை. என் அண்ணன்தான் என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஆலோசகர் வந்தார்.”அம்மா, சரியான நேரத்தில் வந்தீர்கள். உங்கள் துறைக்கு ஆபத்தில்லை. உங்களை அமைதியாகப் போகச் சொன்னார் முதல்வர் “ என்றார். அறிஞர் அண்ணாவைச் சந்தித்த பொழுது, மேடைப்பேச்சால் மயக்கியிருந்த அந்த மாமனிதரைப் பார்க்கும் பொழுது என்னால் பேச முடியவில்லை. அழுதேன். திராவிட வரலாற்றில் அவருக்கு இணையானவர் கிடையாது. என் துறையைக் காப்பாற்றியதற்காகக் கூறவில்லை.

அவரை விடுத்து தமிழக வரலாறு எழுத முடியாது. மனித நேயம் மிக்கவர். அவர் பெயர் வாழ இந்த ஒன்று போதும்.இந்த விஷயங்களை என் இலாக்காவிற்கோ, வேறு யாருக்கும் சொன்னதில்லை. பேருக்காகப் புகழுக்காக இதைச் செய்யவில்லை. இது பற்றி அறிந்தவர்களில் ஒருவர் இன்னும் உயிருடன் இருக்கின்றார். அவர்தான் புனிதவதி இளங்கோவன். என்னை எங்காவது இதைப் பதியும்படி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர் கணவர் உடன் வரவில்லையென்றால் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. அவருக்குத் தன் கணவர் செய்த உதவி பதியப்பட வேண்டும் என்பது அவா. எனக்கு அத்துடன் இந்த உண்மை தமிழக அரசு சமூக நலத்துறைக்கும் தமிழக அரசுக்கும் தெரிய வேண்டும். தேவைப்படின் பழைய கோப்பினைப் பார்க்கட்டும். அதன் பயணம் எங்கு நிறுத்தப் பட்டது என்பது தெரியும்.

ஜே.கே இன்று மறைமுகமாக உதவி செய்துவிட்டார். புள்ளி விபரங்கள் பற்றிய விபரம் மட்டுமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகின்றவர்கள் நம்மை அண்டி வரும் நோயையும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டியிருக்கின்றது.ஜெயகாந்தன் அவர்கள் பேச்சு கிளப்பியிருக்கும் கேள்விகளுக்கு அடுத்துப் பதில்கள் தருகின்றேன்.

எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்த விதமும், பின்னர் அவர் பேசியதும், இன்னொரு சமயத்தில் பெண்களைப் பற்றிக் கூறியதையும் கூறுகின்றேன்.பெண்ணினம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் நாம் ஏமாறக் கூடாது. நம்மை ஏமாற்றவிடக் கூடாது. நமது தேவைகள் எதுவென்று புரிந்து, நம் சூழ்நிலை மாற்றங்களையும் புரிந்து கொண்டு போராட வேண்டும். நமக்குத் தெரியாமல் நம்மை நோய் பற்றினால் நோயையும் அகற்ற வேண்டும்.” சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “ என்ற ஜெயகாந்தனின் சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு; மனம்விட்டுப் பேசுவோம்.

பகுதி 12

05.02.2010

ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பு

என் தோழி பழனியம்மாள்தான் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது.தாராபுரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனியம்மாள். 1967ல் வெற்றி பெற்ற அவர்கள் ஊட்டிக்குக் குடும்பத்துடன் வந்தார்கள். சீசன் நேரம். திடீரென்று வந்ததால் இடம் கிடைக்க வில்லை. அங்கே மாவட்ட மகளிர் நல அதிகாரியாகப் பணி யாற்றிக் கொண்டிருந்தேன். உதவி கேட்டு வந்தவர்களை உடன் தங்கச் சொன்னேன். அன்று முதல் இன்று வரை எங்கள் நட்புத் தொடர்கின்றது.

ஆசிரியையாகப் பணியாற்றியவர் தந்தையின் விருப்பத்தால் அரசியலில் நுழைந்தார். அப்பொழுதும், தான் பணியாற்றிய துறையில் அதிகம் பற்றுக்கொண்டு இருந்ததால் அவர்கள் நண்பர்கள், பார்வையாளர்கள் பெரும்பாலும் அதே துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுடன் பழகவிட்டு எனக்கு இன்னும் பல புதிய நண்பர்கள் கிடைத்ததை மறுப்பதிற்கில்லை. பழனியம்மாள் மூலம் ராஜியின் நட்புக் கிடைத்தது.

சென்னையில் பல முக்கியமான பத்திரிகை நிருபர்களை அறிமுகப்படுத்தியது ராஜி.
ஜெயகாந்தனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற என் ஆவலைக் கூறவும் ராஜியின் ஆலோசனைபேரில் பழனியம்மாள்தான் ஜெயகாந்தன் அவர்களுடன் பேசியது. அவரும் மறுப்பு எதுவும் கூறாது சந்திக்க ஒப்புக் கொண்டார். பொதுவான ஓர் இடம் ஏற்பாடு செய்தோம் நான், பழனியம்மாள், மற்றும் இன்னொரு நண்பரும் ஜெயகாந்தன் அவர்களை வரவேற்றோம். அந்த நாளை மறக்க முடியாது

1970 வது வருடம். விடுப்பு எடுத்து ராணி மேரிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஜே.கே யின் பெயர் உச்சத்தில் இருந்த காலம். அவர் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பல சிந்தனைகளில் என்னை உணர்ந்திருக்கின்றேன். இருந்தும் அவரைச் சந்திக்க 70ல் தான் முடிந்தது.

காலையில் 11 மணிக்கு வந்தார். இரவு 7 மணி வரை பேசி இருக்கின்றோம். அதிகமாகப் பேசியவள் நான் தான்.எப்படி பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார் என்று ஆரம்பத்தில் வியந்தேன். அவரிடம் கூர்மையான பார்வை மட்டுமன்று. பொறுமையுடன் கேட்கும் திறனும் இருந்தது. அதிலும் ஒருவர் வேதனைகளை, சோதனைகளைச் சொல்லும் பொழுது அவரிடம் ஒரு கனிவைப் பார்க்கலாம். நாம் முட்டாள்தனமாகப் பேசினாலும் நம் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பாரே யல்லாது நம்மைக் குறைத்து மதிப்பிடமாட்டார்.

ஜெயகாந்தனுக்குள் பல ஜெயகாந்தன்கள் உண்டு.

புறப்படும் பொழுது பழனியம்மாள்தான் ஒரு கேள்வி கேட்டார்.

“எங்க சீதா சொன்னது, கதையா எழுதுவீங்களா?

“சீதாலட்சுமி அம்மையாருக்கு என்னிடம் அவைகளைக் கூற வேண்டும் என்ற ஓர் அவா. மனச்சுமையை இப்பொழுது இறக்கிவிட்டார். நான் எழுத மாட்டேன். அவர் புரிந்து கொள்வார்” என்றார் சிரித்துக் கொண்டே
ஆம். அவர் கண்களைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டேன். அந்தப் புரிதல்தான் எங்கள் நட்பை வளர்த்தது. நான் அவரிடம் என் அனுபவங்கள் அனைத்தும் கொட்டினேன். “எழுதலாமா?” என்று கேட்டிருந்தால் “எழுதக்கூடாது” என்று கூடச் சொல்லியிருக்கலாம். மனித மனம் அப்படி.

He is a good listener.

உரையாடலில் எல்லோரையும் மதிப்பார். மாறுதலான கருத்துக்கள் வரும் பொழுது மறுப்புத் தெரிவிக்கத் தயங்கியதில்லை. அவர் கூறும் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தமாட்டார். அதே நேரத்தில் தம் கருத்தில் உறுதியாக நிற்பார். பல முறை அவர் பலருடன் கருத்தாடலில் அவர் நிலையை நேரில் பார்த்த அனுப்வத்தில் கூறுகின் றேன். தனிப்பட்ட ஒருவரைப்பற்றிக் கருத்து கேட்டால் சொல்ல மாட்டார். இதுவும் என் அனுபவத்தில் கண்டது.

ஒரு நிகழ்வைக் கூறுகின்றேன் -
நிகழ்வைக் கூறும் முன்னர் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஜே.கே அவர்களின் பேச்சு எழுப்பிய பிரச்சனைக்கு நிச்சயம் விளக்கங்கள் தருவேன். ஏனென்றால் அப்பிரச்சனையில் என் அனுபவங்களும் ஆய்வுகளும் அதிகம். அதற்கு முன்னுரையாக இந்த நிகழ்வு இருக்கும்.

என் தோழிகளில் ஒருத்தி. அவள் கேரளத்து அழகி. செதுக்கிய சிலையைப் போன்ற மேனி. சுருண்ட , நீண்ட கூந்தல். அழகுக்கு அதிகம் அழகு செய்து கொள்வாள். அழகி என்றே அழைப்போம். (அவள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை) அவள்ஒரு சமூக சேவகி. கவுரவத்திற்காக இந்த சேவகி என்ற பட்டம் சுமக்கவில்லை.

குப்பத்தில் அவள் காட்டும் பரிவினைக் கண்டவள் நான். ஏழைகளுக்குக் கஷ்டம் வரும் பொழுது அவர்களுக் காகப் பாடுபடுகின்றவள். மூக்கை மூடிக் கொண்டு, முகத்தைச் சுளித்துக் கொண்டு குப்பத்தில் நடக்க மாட்டாள். போகும் பாதையில் ஒரு குழந்தை கீழே விழுந்தால் உடனே அந்தக் குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொண்டு மருத்துவரிடம் எடுத்துச் செல்வாள். அந்தக் குழந்தை மூக்கு ஒழுகுகின்றதே, சிரங்கு இருக்கின்றதே என்று அவள் எண்ண மாட்டாள்.

இவற்றை நான் சொல்வதற்குக் காரணம், ஒரு சிலர் சேவைகள் செய்கின்றோம் என்று குப்பத்திற்கு வந்துவிட்டு நடந்து கொண்ட முறைகளையும்
பார்த்திருக்கின்றேன். இவ்வளவு சேவைகள் செய்கின்றவளை யாரும் புகழவில்லை. பதிலாக வம்புகள் அவளைச் சுற்றிவரும். அதைப்பற்றிக் கூட அவளுக்கு வருத்தம் கிடையாது. அவளைப் பற்றி மற்ற ஆண்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை.அவர்கள் மோசமாகப் பேசுவதுதான் அவளுக்கு மனத் துன்பத்தைக் கொடுத்தது. அவர்கள் அணுகுமுறையும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவளிடம் இயற்கையாக இருந்த அழகுடன் அவள் செய்து கொள்ளும் மேக்கப் மற்றவர்களின் கண்களை உறுத்தியது. இது அவள் இயல்பு. இதுவே அவளின் குறை. பல முறை எடுத்துச் சொன்னேன். அதை அவள் ஏற்கவில்லை . அவள் மலையாளத்துக்காரியாக இருந்தாலும் தமிழ் இதழ்களையும் படிப்பாள். அவளுக்கும் பிடித்தமான எழுத்தாளர் ஜெயகாந்தன். அவள் அவரைப் பார்க்க விரும்பினாள். அநேகமாக என் நண்பர்கள் எல்லோரையும் அவள் பார்த்திருக்கின்றாள். என்னுடன் அதிகமாக உடன்வருபவள் அவள்தான். அவள் எங்கும் வேலை பார்க்கவில்லை.
ஏற்கனவே ஜெயகாந்தனிடம் இவளைப் பற்றிப் பேசியிருக்கின்றேன். அவளது மனக்குறையைப் பற்றியும் பேசி இருக்கின்றேன்.

அவளை ஒரு நாள் ஆழ்வார்பேட்டை இடத்திற்கு அழைத்துச் சென்றேன். வழக்கம்போல் அன்றும் சிலர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இவர் குட்டைச் சுவரருகில் உட்கார்ந்திருந்தார் . மாடிப்படியேறி உள்ளே நுழையவும் அவரும் எங்களைப் பார்த்தார். அங்கு அமர்ந்திருந்த மற்ற வர்களும் பார்த்தார்கள். அவர்களுக்கு என்னைத் தெரியும். எனவே சின்னப் புன்னைகை. ஆனால் அவர்கள் பார்வை என் தோழியின் மேல் படவும் முதலில் வியப்பு, பின்னர் ஒருவருக் கொருவர் பார்த்துக்கொண்ட விதம் சரியாக இல்லை.

ஜே.கே. அவர்கள் எங்களை அறைக்குள் அழைத்துச் சென்றார். அறிமுகப்படலம் முடிந்த பின் அவள் சமூகப் பணிகள் பற்றி விசாரித்தார். எவ்வளவு நேரம்தான் அதையே பேச முடியும். அவளோ அவர் கதைகளைப் பற்றியோ, பொது விஷயங்களைப் பற்றியோ பேசாமல் உட்கார்ந்திருந்தாள். மவுனத்தைக் கலைக்க நான் பேச  ஆரம்பித்தேன். எனக்கே அந்த நிமிடங்கள் பிடிக்கவில்லை. ஜே. கே அவர்கள் சாதாரணமாக உட்கர்ந்திருந்தார். சீவனற்ற பொழுது.

புறப்பட்டு விட்டேன். அவர் அவளைப் பற்றி அவளிடம் எதுவும் பேசவில்லை. அடுத்தவர்க்கு அறிவுரைகள் கூறுவது அவருக்குப் பிடிக்காது. ஆனாலும் பிரச்சனைகளைக் கூறிக் கேட்டுக் கொண்ட பிறகும் கூட ஒரு பெண்ணின் சுதந்திர உணர்வில் அவர் தலையிட விரும்ப வில்லை. வெளியில் வந்த தோழி முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.

அந்த வாரமே மீண்டும் அவரைச் சந்திக்கப் போனேன். நான் போனால் பொதுவாக நானும் சுவருக்குப் பக்கத்தில் நாற்காலி போட்டுக் கொண்டு அவரிடம் பேசுவேன். அல்லது அங்கிருப்பவர்களிடம் பேசுவேன். எப்பொழுதாவது சில விஷயங்கள் அவரிடம் தனித்துக் கூற விரும்பினால் அறைக்குள் போய் உட்கார்ந்து பேசுவோம். அன்று நான் எதுவும் கூறும் முன்னர் அறைக்குள் போய் உட்கார்ந்தார். நான் என்ன பேச வந்திருக்கின்றேன் என்பதை அவர் உணர்வார்.

என் தோழியிடம் அவர் சரியாகப் பேசவில்லை, புத்திமதி கூறவில்லை என்று சண்டை போட்டேன். அவரோ சிரித்துக் கொண்டிருந்தார். என் தோழியை அவர் விமர்சிக்கவே இல்லை. அது அவருக்குப் பிடிக்காது. ஆனாலும் நான் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

என்னிடம் அவர் திடீரென்று ஒரு கேள்வி கேட்டார்; அதிர்ந்து போனேன்.

“சீதாலட்சுமி, என்றாவது உங்கள் தோற்றத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பதுண்டா?“

என் கேள்விகளுக்கு கேள்விதான் விடையா ? விடை தெரியவில்லை.

மேலே எதுவும் பேசாமல் வந்துவிட்டேன். ஆனால் ஒரு வாரத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் கிடைத்தன.


 பகுதி 13

07.02.2010

என் நெருங்கிய உறவினர் ஒருவருடன் நானும் என் தோழியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது திடீரென்று என் தோழி அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டாள். எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்த கேள்வி. அவள் கேள்வி கேட்டவர் நான் பெரிதும் மதிக்கும் ஒருவர். அவரோ சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்தார். அவர்களிடையே நடந்த உரையாடலை முடிந்த மட்டும் நினைவில் இருப்பதைப் பதிய விரும்புகின்றேன். அதன் வலிமையை அப்பொழுதுதான் புரிந்து கொள்ள முடியும்.

” சீதா என்னைவிட அதிகமாகப் பழகுகின்றாள். அவளை எல்லோரும் மதிக்கின்றனர். அவளைப்போல் நானும் ஆத்மார்த்தமாக சமூகப் பணி செய்கின்றேன். என்னிடம் ஏன் தவறாக அணுகுகின்றார்கள் ? ”

இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் சத்தம் போட்டே சிரித்துவிட்டார்.

”அவளைப் பாருங்கள். அவள் புடவையும், ரவிக்கையும் !? கொஞ்சமாவது பொருத்தமாக இருக்கா ? ஒழுங்கா டிரஸ் பண்ணக்கூடத் தெரியவில்லை... ”

அவர் முடிப்பதற்கு முன் என் தோழி பேசினாள்.

”அவளுக்கு எத்தனையோ முறை சொல்லிக் கொடுத்தேன். அவள் மாறவே இல்லை .”

”அதுதான் இயல்பு. உங்கள் இருவருக்கும் ஓர் இயல்பு. உங்களுக்கு அலங்காரம் பிடிக்கும். அவளுக்குத் தன்னைப்பற்றியே சிந்தனையில்லாமல் ஊரைப் பற்றித்தான் நினைப்பு. அவள் இயல்பு அவள் செய்யும் வேலைக்குப் பொருந்திவிட்டது. ”

”அப்படின்னா, பெண்ணுக்கு சுவாதந்திரியம் கிடையாதா? ”   (அவள் கேரளத்துப் பெண்)

”உங்களை யார் கட்டாயப் படுத்துகிறார்கள்? உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. அலங்காரமும் அழகும் முதலில் மனிதனை ஈர்ப்பதை மறுக்கவில்லை. ஆனால் அவன் மனத்தில் தங்குவது அதுவன்று.
நீங்கள் ஒரு பணி தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள். உங்களை குப்பத்தில் வேலை பார்க்கவோ, அவர்களுக்காக நீங்கள் நிதி திரட்டவோ உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை. சுதந்திரமாக நீங்கள் எடுத்த முடிவு. அதற்கேற்ப ஆடை, அலங்காரங்கள் இருக்க வேண்டும்; செய்யும் பணிக்குப் பொருந்தும் தோற்றம் அமைய வேண்டும்.”

”ஆண்களுக்காக நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமா ? ”

”இந்தக் கேள்வி சரியில்லையம்மா? ஆணாக இருந்தாலும் அதுதான்.

” ராஜா வேஷம்போடுகின்றவன் கோவணத்துடன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தால் சிரிக்க மாட்டார்களா? ஆணோ, பெண்ணோ யாராயினும் அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்பத் தோற்றத்தையும், பழகும் முறை களையும் வைத்துக் கொள்ள வேண்டும். தோற்றத்தை மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனம்பற்றிக் கவலைப் படக்கூடாது. சமரசம் செய்து கொள்ள வேண்டியது நீங்கள் தான் ”

”அப்படி என்ன மோசமாக அலங்காரம் செய்து கொள்கின்றேன் ? ”

”மோசமில்லை, ஆனால் பொருந்தவில்லை. விருந்துக்கும் விழாவிற்கும் செய்து கொள்ள வேண்டியவைகளை ஏழைகளுக்காக மற்றவர்களைச் சந்திக்கப் போகும்போது செய்தல் கூடாது.”

”அப்போ வேஷம் போடணுமா ?”

” வேஷம் இல்லை. உதாரணத்திற்கு நீங்கள் லிப்ஸ்டிக் போடாமல் வெளி வருவதில்லை. வடநாட்டில் சகஜமாகப் போடுவார்கள் ஆனால் தென்னகத்தில் கிடையாது. அதிலும் தமிழகத்தில் கிடையாது. முகத்திலும் மேக்கப் பவுடரும் அதிகம். நேராக மேடைக்கு நடிக்கச் செல்லுகின்றவர்கள் போல் இருக்கின்றீர்கள். அதனால் சிரிக்கிறார்கள். ”

என் தோழியின் முகம் வாடியது

” தவறாக நினைக்க வேண்டாம். மற்றவரை மயக்கி நிதி வசூல் செய்வதாக அவர்கள் நினைக்க வழி கொடுத்துவிட்டீர்கள். அத்துடன் அலங்காரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவரைப் பார்த்தால் ஆண் சபலத்துடன் முயற்சி செய்யும் எண்ணமும் தோன்றுவது இயல்பு. ”

” ஆண்கள் சின்ன புத்திக்காக என்னை மாத்திக்கணுமா? “

”நீங்க தானே வருத்தப்படுறீங்க ? அவர்கள் என்ன பேசினாலும் வருத்தப் படாதாதீங்க. தப்பா அணுகினா அடிங்க. மதிப்புக் கொடுக்க ணும்னு மட்டும் நினைக்காதீங்க. ‘ஊரோடு ஒத்து வாழ்”னு ஒரு பழமொழி உண்டு. எங்கே வாழ்கின்றோமோ அந்த இடத்துக்கு ஏற்றாற்போல நம்மைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் பிரச்சனை இல்லை.”

அவள் மவுனமாகத் தலையாட்டினாள்.
”சீதா ஊருக்காகத் தன்னை மாற்றிக் கொண்டாள் என்று சொல்ல வில்லை. அவ இயல்பே அதுதான். அவள் வேலைக்கும் அது பொருந்திப்போச்சு .நீங்க இவ்வளவு சேவை செய்தும் உங்க தோற்றம் தான் அதுக்குத் திரை போட்டிருக்கு. கொஞ்சம் மாற்றிக் கொண்டால் உங்களுக்குப் பிரச்சனைகள் வராது. முடிவு எடுக்கும் சுதந்திரம் உங்களுடையதுதான்.”

அன்றைய சந்திப்புக்குப் பிறகு என் தோழியும் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தாள். காந்தி கிராமத்தில் டாக்டர் சவுந்திரம்மா கூறியது நினைவிற்கு வந்தது - “நீங்கள் செய்யப் போவது சமுதாயப் பணி. தோற்றத்தில் எளிமை, பேசிலே கனிவு இரண்டும் இருக்க வேண்டும்”

என்னிடம் இயல்பாக எளிமை இருக்கலாம். ஆனால் அதுவும் சில நேரங்களில் பாதிப்புத் தந்தது. நான் பணி செய்த அலுவலகங்களில் என்னைக் குறை கூறுவார்கள் .

“அம்மா, நீங்க துணை இயக்குனர். மாநில அளவு பதவி. கொஞ்சம் டீஸென்டாக டிரஸ் செய்யக் கூடாதா? ”
அவர்கள் கூற்றும் சரி; என் உறவினர் பேசிய அனைத்தும் சரி.

எனக்கும்தான் படிப்பினை. ஆனால் என்னால் என்னை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. இதில் என் தோழி என்னை விஞ்சி விட்டாள். அவளால் தன்னை மாற்றிக் கொள்ள முடிந்தது .

ஜெயகாந்தன் நேரடியாக எதுவும் சொல்லவில்லை. என்னை ஒரு கேள்வி கேட்டு, பதிலைச் சிந்திக்க வைத்துவிட்டார்.சில நேரங்களில் அது அவர் இயல்பு. அவர் சொல்லிய “சுதந்திர அடிமைகள் “என்னைச் சிந்திக்க வைத்தது. அவர் கூறியதாகச் சொல்லப்பட்ட சில வரிகளை வைத்து அபிப்பிராயம் கூற நான் விரும்பவில்லை. ஆனாலும் மகளிர் அமைப்புகளும் அவர்கள் கருத்துக்களை முன் வைத்திருப்பதால் நானும் சிந்தித்தாக வேண்டும். இது என் கடமை.

ஓர் இளைஞனிடம் கருத்துக் கேட்டேன். அவன் சொன்னது -“மாற்றங்கள் முன்னால் மெதுவாக வந்தன. இப்பொழுது வேகம் அதிகரித்திருக்கிறது. ”  அதிலும் பெண்களிடம் மாற்றங்கள் சுனாமி போல் வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. சோடா புட்டியை  உதாரணம் காட்டலாம்.

நிதானமாகத் திறந்தால் சரி அல்லது வேகமாகத் திறந்தால் சோடா முகத்தை வந்து தாக்கும். வேகமாய் வரும் மாற்றங்களில் மனம் மயங்கலாம். அப்பொழுது சுயமாய்ச் சிந்திக்கும் திறனும் குறையலாம். முன்பு ஆதிக்கத்திற்குள் கட்டுப்பட்டிருந்தவர்கள், இப்பொழுது சுதந்திரப் போக்கில் கட்டுண்டு விட்டதைத்தான் சுதந்திரத்திற்கு அடிமை என்று கூறியிருக்க வேண்டும்.

“Outburst statement because of frustration “ - இதைச் சொன்னவன் அமெரிக்காவில் வாழும் பையன். வேறு யாருமில்லை; என் பேரன்.

ஒரு கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் தெருவில் குடித்துவிட்டுச் சென்றால், அவ்வூர்ப் பெரியவர்கள் அதைக் காணும் பொழுது ஊரே கெட்டுவிட்டது என்பார்கள். அதனால் ஊர் முழுவதும் குடித்துக் கொண்டு அலைகின்றார்கள் என்று அர்த்தமல்ல. ஜெயகாந்தன் அவர்களுக்கும் ஆதங்கம். கீழ் நிலையில் வாழும் பெண்களைக் கூட அனுதாபத்துடனும் அக்கறையுடனும் பார்ப்பவர். எனவே அவர் காணும் மாற்றங்களில் ஏற்பட்ட வெளிப்பாடாக இருக்கலாம். அதனால்தான் சுதந்திர அடிமைகள் என்று முடித்திருக்கின்றார். அவருக்குள் பாரதியும் உண்டு.

எல்லோராலும் இப்படி இணைத்துச் சிந்திக்க முடியுமா?
மகளிர் அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பியதைத் தவறு என்றும் கூற முடியாது. ஒட்டுமொத்த விமர்சனம் அவர்களைக் கொந்தளிக்க வைத்திருக் கின்றது. அவர்கள் கடமையை அவர்கள் செய்தார்கள்.

சமுதாயத்தில் உருண்டு புரண்டவள் நான். ஓய்வு எடுத்து முடங்கி இருக்கும் என்னையும் உசுப்பி விட்டிருக்கின்றது. முடிந்த அளவு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒரு நாளில் முடிக்கும் பணியன்று. ஆனால் ஏதோ ஒரு பாதைக்கு வித்திடலாம். அதனை அலசிப் பார்க்க இது ஏற்ற களமன்று. தனி மேடையில் அந்த ஆவர்த்தனம் வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஜெயகாந்தனுடன் வெளியூர் பயணம் செல்வோம்.

பகுதி 14


“சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?” என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை. அதற்கு ஒரு தனி அர்த்தம் உண்டு. என்னைப்பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த
எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். எங்கள் முதல் சந்திப்புக்குக் காரணம் அதுதான். என் தோழிகள் அமைத்துக் கொடுத்த சந்திப்பு. அவர்கள் வேண்டு கோளுக்கு இணங்க எங்களைப் பார்க்க வந்தார். .அன்று என்னைப் பேச விட்டு அவர் மவுனமாக இருந்தார். என் தோழிகள்தான் இடையில் பேசுவார்கள். ஒன்றிரண்டு வார்த் தைகளை மட்டும் உதிர்த் தார்.(எழுதத்தான் தெரியும் போல் இருக்கின்றது. சரியான உம்மணாம் மூஞ்சி என்று நினைத்துக் கொண்டேன்). நான் எளிதில் உணர்ச்சி வசப் பட்டு விடுவேன். என் குறைகளில் அதுவும் ஒன்று. சமுதாயத்தில் மீது இருந்த கோபத்தில் உரத்துப் பேசிய கணங்களும் உண்டு. அவரோ பொறுமை யாகக் கேட்டுக் கொண்டிருந்தார்

He is a good listener

அவர் எழுத்தின் வலிமைக்கு அதுவும் ஒரு காரணம். அவர் புறப்படும் பொழுது என் தோழி பழனியம்மாள் தான் ஒன்றைக் கேட்டார்கள் .

“சீதா சொன்னவைகளை எழுதுவீர்களா?”


“என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றார்கள். எல்லாம் கொட்டிவிட்டார்கள். இவர்க ளுக்கு ஒரு வடிகால் தேவை. அவர்கள் மனம் இப்பொழுது சமாதானம் ஆகியிருக்கும். இவர்களைப் பற்றி எழுதமாட்டேன்.சீதாலட்சுமியால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்.”


அவர் பார்வையை என் பார்வை சந்தித்த பொழுது அவர் கூற்றின் உண்மையை நான் உணர முடிந்தது. ஆம், என்னைப்பற்றி யாரும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு ஆண்மகனிடம் புலம்பி என்னைக் கோழையாக்கிக் கொண்ட அவமானத் துடிப்பு சிறியதாக உணர்ந்தேன். மனக்குரங்கு குதிப்பதை அடக்கினேன். அதே நேரத்தில் உளவியல் தெரிந்த ஒருவரிடம் பேசியதில் ஒரு திருப்தியும் தோன்றியது. எனக்கு ஒரு நண்பன் கிடைத்துவிட்டான் என்று மனம் குதியாட்டம் போட்டது. எங்கள் நட்பு இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எங்கள் சந்திப்புகளில் நான் வெளிப்படுத்திய செய்திகள் எத்தனை எத்தனை!. ஆனால் அவர் எழுத்தில் என் செய்திகளின் சாயல் கூட வந்ததில்லை. சொன்ன வாக்கின்படி நடக்கின்றார்

He is a gentleman of words

அவரைப்பற்றி, அவர் எழுத்துக்களைப் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். நம்மில் ஒருவராக அவரைப்பற்றி எழுத விரும்புகின்றேன். அவரை நான் கண்ட கோணங்களில் காட்ட விரும்புகின்றேன். ஒவ்வொருவருக் கும் அவரைப்பற்றிய கருத்து இருக்கும். அது அவர்கள் சுதந்திரம். நான் எழுதுபவைகள் அவருடன் பழகிய பொழுது நான் உணர்ந்தவை. எல்லா வற்றையும் எழுதினால் நீண்ட தொடராகிவிடும். . சில காட்சிக ளாவது பார்க்கலாம். அப்படி என்னைப்பற்றி எழுத நான் என்ன தனித் தகுதி படைத்தவளா? அவர் பாத்திரங்கள் சாதாரணமானவர்கள். ஆனால் ஒருவருக்கு ஒன்று, அல்லது சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் பிரச்சனைக் குவியலில் வாழ்ந்த ஒருத்தி. சமுதாயத்துடன் மோதிய ஒரு போராளி.! உருண்டு புரண்டு, மீண்டும் எழுந்து நிமிர்ந்து நின்றவள் நான். எழுத்தாளர் டாக்டர் லட்சுமி அவர்களும் என்னிடம் ஒரு விருப்பம் தெரிவித்தார்கள். “சீதாலட்சுமி, ஒருவாரம் நாம் இருவரும் மகாபலிபுரம் போய்த் தங்குவோம். உங்கள் அனுபவங்கள் எல்லாம் கூறுங்கள் நான் எழுத விரும்புகின்றேன். ‘


அவர்கள் மென்மையானவர்கள் . ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின், பத்திரிகைகளைப் படித்து விட்டு அதிர்ந்தார். மாற்றங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உலகம் யாரையும் பொருட் படுத்தாது மாற்றங்களில் உருண்டு ஓடிக் கொண்டிருக்கும்.


“உங்கள் எழுத்துக்கு நான் பொருந்தமாட்டேன். நான் அடக்கமில்லாத ஒரு பெண். பிரச்சனைகளைக் கூட முரட்டுத்தனமாகவே சந்திக்கின்றவள். ஒரு காலத்தில் என்னைப்பற்றி ஜெயகாந்தன் எழுதவேண்டு மென்று விரும்பினேன். பின்னால் யாரும் எழுதுவதை நான் விரும்பவில்லை. என் ஓட்டம் நின்று களைத்துப் போய் உட்காரும் பொழுது நானே எழுதுவேன்’


ஜெயகாந்தன் எழுத மறுத்த கதையின் நாயகி நான். அவளே பேச வந்துவிட்டாள். கதைப் பாத்திரமும் கதாசிரியனும் சந்தித்துப் பேசுவது கதையில் கண்டிருக்கலாம். இப்பொழுது வாசகர்களும் பார்க்கப் போகி் றார்கள். விசித்திரமான, வேடிக்கையான சந்திப்பு. இனி கற்பனைக் குதிரைகளுக்கு கிராக்கி வந்துவிடும். விமர்சனங்கள் பறக்கலாம். சுவையான பயணம் மட்டுமல்ல சூடான விருந்தும் உண்டு. அவரிடம் செய்திகளைக் கூறும் பொழுது சில கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் இருக்கும். சில கேள்வி களுக்கு நீண்ட விளக்கம் கிடைக்கும். ஆனால் பல கேள்விகளுக்குப் பதில்களாகக் கிடைத்தது ஒன்று சிரிப்பு அல்லது மவுனம் சென்னை மெரீனா கடற்கரை சென்றால் வித விதமான , சுவாரஸ் யமான காட்சிகள். அங்கே டொம்மிக் குப்பம், நொச்சிக் குப்பம் இருக்கின்றதே! போயிருக்கின்றீர்களா? அங்கே ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்து பார்த்திருக்கின்றீர்களா? ஒரு வீட்டில் அரிய காட்சியொன்றை நான் கண்டேன். தாயென்றால் பாலூட்டி சீராடும் அம்மாவை நமக்குத் தெரியும். நான் போன பொழுது வீட்டுக் கதவு பூட்டப் படாமல் சாத்தி இருந்தது. பெயர் சொல்லிக் கூப்பிட் டேன். யாரும் வரவில்லை. மெதுவாகக் கதவைத் திறந்தேன். ஒரு குழந்தை தூளியில் தூங்கிக் கொண்டி ருந்தது. இது ஒரு அதிசயமா என்று கேலியாகப் பார்க்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.பக்கத்து வீட்டுக்காரி வந்தாள்

”எங்கே வள்ளி ?”

”அவள் வீட்டு வேலை செய்யப் போய்ருக்கா. வர நேரமாகும் குழந்தை எழுந்தா யார் பாத்துப்பாங்க ? அது எழுந்திருக்காதும்மா. சாராயம் கொடுத்துத் தூங்க வச்சுட்டுப்போவா.”

பாலூட்டும் தாய் சாராயம் கொடுத்துத் தூங்க வைத்திருக்கின்றாள். இந்தக் கொடுமையை நான் பார்த்த பொழுது துடித்தேன் .


”என்னம்மா செய்றது? பச்சப்புள்ளையை வேலை செய்ற வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது. புருசனும் குடிகாரன். இவதான் சம்பாதிக்கறா. ஏதோ அரை வயத்துக் கஞ்சியாவது கிடைக்குது.”


அரசாங்கத்தை, அல்லது ஆளும் கட்சியைத் திட்டத்தோன்றுகின்றதா? நம் நாட்டு வளர்ச்சியை வரை கோடு போட்டு பார்க்கக் கூடாது. முக்கோணம் போடுங்கள். அதான், குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் போடு வோமே. இந்த முக்கோணம் மூன்று பக்கமும் ஒரே அளவா போடக் கூடாது. அடிப்பாகம் மிக மிகப்பெரிது ஆம், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அதிகம். மத்தியதரக் குடும்பம் ரெண்டுங் கெட்டான்.அரசாங்கத்திடம் கற்பக விருட்சம் கிடையாது. வரிப்பணம் அதிகரிக்க வேண்டும். மேலும் சுமை. அர்த்தம் கெட்டு நாம் நிறையப் பேசுகின்றோம். என்னளவில் செய்ய முடிந்ததைச் செய்தேன். முழுப்பிரச்சனையைத் தீர்க்கும் வலிமை எனக்குக் கிடையாது. கோபம் மட்டும் வந்தது.


இன்னொரு அம்மாவையும் காட்ட விரும்புகின்றேன். கிண்டியிலிருந்து 45B பஸ் பிடித்து நந்தனம் சென்று கொண்டிருந்தேன். அலுவலக நேரம், கூட்டம் அதிகம். சைதாப்பேட்டையில் பஸ் சில நிமிடங்கள் நின்றது. ஒரு பெண் கையில் அழும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது துணியை விலக்கிக் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிக் கொண்டு வந்தாள். என் பார்வைக்கு வந்த பொழுது நான் அதிர்ந்துவிட்டேன். குழந்தையின் ஆசன வாயிலில் சிகப்பாக பெரிய சதைக் கட்டி.என்ன வென்று கேட்கும் முன் பஸ் புறப்பட்டு விட்டது. அன்று முழுவதும் அமைதி இல்லை.


இரண்டு நாட்களில் அவளை எலெக்ட்ரிக் டிரைனில் பார்த்தேன். என் பக்கம் வரவும் காசு கொடுத்து மெதுவாக விசாரித்தேன். அவள் குழந்தையை எக்மோர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றா ளாம். அவர்கள் கவனிக்கவில்லையாம். காசு வசூலித்து வேறு நல்ல டாகடரிடம் காட்டப் போகின்றாளாம் எனக்குப் புரிந்துவிட்டது.


நானே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகின்றேன் என்றேன். திரு திருவென்று விழித்தாள். மெதுவாக நகர ஆரம்பித்தாள். எக்மோர் வந்தது. அவளை இறுகப் பற்றிக் கீழே இறக்கினேன். திமிரி ஓடப் பார்த்தாள். பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்குக் கூப்பிட்டேன். முதலில் தயங்கினார்கள்.” இவள் பெரிய தப்பு செய்யறா. குழந்தையைக் காப்பாத்தணும், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இவளைக் கூட்டிப் போக வாங்க. உடனே நீங்க போய்டலாம். நான் ஒரு பெரிய ஆபீஸர்தான்” என்றேன். பின்னர் தயங்காமல் வந்தனர். அவளைப் பிடித்துக் கொண்டு ரயில்வே போலீஸ் நிலையம் சென்றோம். உள்ளே போகவும் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். உடன் வந்தவர்களை அனுப்பிவிட்டேன். அங்கிருந்து எங்கள் டைரக்டருக்கு போன் செய்து விபரம் கூறவும் அவர்களே போலீஸ் நிலயத்திற்கு தொலை பேசியில் பேசி உதவி செய்யச் சொன்னார்கள். போலீஸ் ஜீப்பில் எக்மோர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அப்பொழுது அங்கே டைரக்டராக இருந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.


விசாரித்ததில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.அவள் துணைக்குத் தங்க வேண்டும் என்று சொன்னவுடன் தங்க மாட்டேன் என்று போய் விட்டாளாம். அவளிடம் உண்மையைக் கூறும்படி மிரட்டவும் உண்மைகள் வெளி வந்தன. அவள் கணவனும் குடிகாரன். குழந்தையைக் காட்டிப் பிச்சை எடுக்கச் சொன்னதும் அவனே தான். புருஷன் அடிப்பான் என்று அழுதாள். இவள் அம்மா மட்டுமல்ல, ஒருவனின் மனைவியும் கூட. பெற்றவளேயானாலும் தான் பெற்ற பிள்ளை வலியால் துடித்தும் பெற்றமனம் இங்கே கல்லாகிவிட்டததைக் காண்கின்றோம்.


தாய்ப் பாசத்தைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுகின்றோம். இந்த வகையி னரை எதில் சேர்ப்பது? இச்சையில் ஆடவன் மிருகமானால் இல்லற சோதனையில் பெண் இயந்திரமாக மாறுகின்றாளே!  பாசம், பரிவு எல்லாம் பதுங்கி விடுகின்றன. குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அவள் கணவனை போலீஸ் உதவியுடன் கூட்டி வந்து எங்கள் டைரக்டர் முன் நிறுத்தினேன். அவனுக்கு மனைவி, குழந்தை வேண்டுமென்றால் அவளை அவன் கொடுமைப் படுத்தக் கூடாது. அல்லது பிடித்து கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என்று கூறவும் பணிந்தான். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. ஆனால் பொண்டாட்டியை அடித்தால் போலீஸ் வந்துவிடும் என்று தெரிந்தததால் திட்டுவதுடன்  நிறுத்திக் கொண்டான். குழந்தை பிழைத்தது. அடிவாங்குவதும் அப்பொழுது நின்றது. ஆனால் இது முழுமையான தீர்வாகுமா?


தீர்வு காணமுடியாத பிரச்சனைகள் எத்தனை எத்தனை! தினமும் பல பிரச்சனைகள் சங்கிலித் தொடராக என்னைத் தேடிவரும். நான் பார்த்த பணி சமூகநலம். நான் ஒரு சமூக மருத்துவர். இலாகா அளவில் முடிந்ததைச் செய்வோம். ஆனாலும்  மனத்தில் திருப்தி இருக்காது. மணியனிடம் போய்ச் சொல்லுவேன்.” அசடு, ஊர்ன்னு சொன்னா எல்லாம்தான் இருக்கும். “ . என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். சாவியிடம் சொன்னனல் உச் கொட்டுவார். ஆரம்பத்தில் கொஞ்சம் சொன்னேன். எதிரொலி இல்லை. ஜெயகாந்தனிடம் ஓடிப் போய் புலம்புவேன். ஒரு நாள் அருகில் இருந்த ஒருவர் “அம்மா பாவம், உளர்றாங்க” என்றார். அன்று முதல் நானும் ஜெயகாந்தனிடம் “உங்களிடம் உளறணும் எப்போ வர “ என்று கேட்க ஆரம்பித்தேன். அவரும் “ எப்போ வேணும்னாலும் வாங்க. உளறுங்க. உளறலைக் கேட்க எனக்கு இரண்டு காதுகள் இருக்கின்றன” என்பார். ஆமாம் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விடலாம். மண்டைக்குள் செலுத்தினால்தானே கோலுக்கு வந்து அது எழுத்தாகும். சமத்துப் பிள்ளையாண்டான். சொல் விளையா டலில் சாம்பியன்.


குடிகாரப் புருஷனைப்போல் பொறுப்பில்லா அப்பனாக இருந்துவிட்டால் அங்கும் கொடுமைகளும் நடக்கும். இன்னொருத்தியைப் பற்றி ஒரு புகார். நிலையான வேலை பார்க்கின்ற ஒருத்தி விபசாரமும் செய்கின்றாள் என்று புகார். அவளிடம் பேசினேன். எனக்கு ஒரு ராசி உண்டு.. என்னிடம் பேசுகின்றவர்கள் அவர்கள் துன்பத்தை அப்படியே கொட்டி விடுவார்கள். அவளும் தான் செய்யும் இன்னொரு தொழிலை மறைக்க வில்லை அவள் சொன்னதைச் சொல்லுகின்றேன்.


“என் அப்பா ஒரு சூதாடி. பணம் திருடினதால் வேலை போச்சு. அதனாலே கவலையாம். கவலை மறக்க குடிக்கணுமாம். வீட்டில் இருக்கும் ஒவ்வொன்றாய் காணாமல் போச்சு. காப்பாத்த வக்கில்லாத ஆம்புள்ளைக்கு புள்ளங்க இருக்கலாமா? குடும்பக்கட்டுப்பாடு திட்டத்துலே ஆப்பரேஷன் செய்தால் அவன்  ஆம்புள்ளைத்தனம் போய்டுமாம். புள்ளே பெத்து பெத்து அம்மா உடம்பும் கெட்டது. லூப் போட்டுக் கோன்னு அம்மாகிட்டே சொன்னேன். என் தலைவிதி. அம்மாகிட்டே மக சொல்ல வேண்டியிருக்கு. ஏற்கனவே ஆறு புள்ளங்க. எங்கே தப்போ அப்புறமும் ரெண்டு குழந்தைங்க.பிறந்துச்சு. அம்மா ஆபரேஷன் செய்துட்டாங்க. என் சம்பாத்தியம் முழுசும் குடும்பத்துக்கு.ப் போய்டும். வெட்கம் கெட்ட அப்பன் எங்கே எனக்குக் கல்யானம் செய்து வைக்கப் போறான். கல்யாணம்னா அங்கேயும் நகை காசு இல்லாம நடக்குமா? அதுக்குத்தான் என் கல்யாணத்துக்குப் பணம் சேர்க்க இதை சைட் பிஸினஸாகச் செய்கின்றேன்”


என்னை யாரோ அடிப்பதுபோல் உணர்ந்தேன். அவள் உடல் பசிக்கு இரை தேடவில்லை. திருமணத்திற்குக் காசு வேண்டி விபசாரத் தொழில் ! இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கேட்டிருக்கிங்களா ? பேசும் சக்தி இழந்து
விழித்துக் கொண்டிருந்தேன். அடுத்த அடி விழுந்தது.

“என்னம்மா, அதிர்ச்சியா? உங்களுக்குத் தெரியுமா? இந்த தரகங்கிட்டே வர்ர ஆம்புள்ளங்க கேக்கறது அவங்களுக்குக் குடும்பப் பொண்ணு அல்லது காலேஜ்படிக்கிற பொண்ணு வேணுமாம்.. அவனுக்குக் குடும்பம் இல்லியா?., இவன் மக காலேஜுக்குப் போக மாட்டாளா.!? இவனுக்கு மட்டும் பத்தினி பொண்டாட்டி.வேணும். அடுத்தவன் பொண்டாட்டி இவனுக்கு வேணும்.. பாவிங்க. இவங்க திருந்தாம இருந்தா இனிமே பொண்டாட்டி second hand ஆகத்தான் கிடைப்பா”


இது கற்பனையன்று; இப்படி விதவிதமான எரிமலைக் குமுறலைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.
ஓர் ஆசிரியர் செய்த சைட் வியாபாரம். மாணவர் களுக்கும் உடன் வரும் இளைஞர்களுக்கும் ப்ளூ பிலிம் போட்டுக் காட்டி சம்பாதிப்பது. ஒரு நிருபர் என்னிடம் சொன்னபொழுது நான் நம்பவில்லை. நானும் என் தோழி பேபியும் அவருடன் சென்றோம். என் மனம் கொதித்தது.


தெய்வத்திற்கு முன் வைத்துப் போற்றிவரும் தொழில் ஆசிரியத் தொழில். எனக்கு நாட்டுப் பற்றையும் துணிச்சலையும் கற்றுக் கொடுத்தவர் என் ஆசிரியர். பாரதியை எனக்குள் புதைத்தவர் எங்கள் ஆசிரியர் கே.பி.எஸ் நாராயணன் அவர்கள். இன்றும் எட்டயபுரத்தில் அவரிடம் படித்த மாணவர்கள் அனைவரும் அவரை நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.


எனக்கு மிகவும் பரிச்சயமான மனிதர். ஒருவர் தரகரிடம் குடும்பப் பெண் கேட்டு வீட்டிற்கே அழைத்துச் செல்லப் பட்டார். இவர் உள்ளே நுழையும் பொழுது வீட்டிற்குள் இருந்து ஓர் ஆண் வெளியில் சென்றிருக் கின்றான். கூடத்தில் ஒரு கிழவி சுவரின் பக்கம் முகம் திருப்பி படுத்துக் கொண்டிருக்கின்றாள். இவர் உள்ளே போய் உடலுறவு கொண்டிருந்த பொழுது குழந்தை அழும் சத்தம் கேட்டு உடனே அந்தப் பெண் இவரைப் பிடித்து தள்ளிவிட்டு எழுந்திருந் திருக்கின்றாள். பால் குடிக்கும் குழந்தை. அதன் பின்னர் அவர் விசாரித்த பொழுது அழுதது அவள் குழந்தை, வெளியில் சென்றது புருஷன், கூடத்தில் படுத்திருப்பது மாமியார் என்று சொல்லி இருக்கின்றாள். ஒன்றும் பேசாமல் பணம் கொடுத்து விட்டு வந்து விட்டார். என்னிடம் சொன்ன பொழுது ஓங்கி அடித்துவிட்டேன். அந்த மனிதனுக்கு மனைவி யும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர். சிறு வயது முதல் அவர்கள் குடும்பம் எனக்குப் பழக்கமானது. அவருக்குள் இப்படி ஒரு மிருகம் இருந்தது அன்றுதான் தெரியும்.


கள்ள உறவுக்கு எதுக்கைய்யா குடும்பப்பொண்ணும் கல்லூரி மாணவியும் ? நான் இத்தனை சம்பவங்கள் கூறினால் எதை எழுதுவார், எதை விடுவார்?. இவை களைக் கூறியதற்குக் நான் எத்தகைய பணியில் இருந்தேன் என்பதைப் புரிய வைக்கவும் நம்மைச் சுற்றிக் கொட்டிக் கிடக்கும் குப்பைகளையும் கொஞ்சம் அடையாளம் காட்டவும் விரும்பினேன்.


ஜெயகாந்தனின் பேச்சைக் கேட்க வருகின்றவர்கள் போல் அவரிடம் நிறைய பேச விழைகின்றவர்களும் வருவார்கள். சாதாரணமாகப் பார்க்க வருவார். அவர் பார்வை, அவர் சிரிப்பு, நம் நெஞ்சுக்குள் புதைந்தி ருக்கும் செய்திகளைத் தானே கொத்திக் கொண்டு வந்துவிடும். கோயிலுக்குப் போகின்றோம். கடவுளி டம் நிறையப் புலம்புகிறோம். உடனே அவர் காட்சி யளித்து நம் கவலைகளைப் போக்கி விடுவதில்லை. நம் கவலை களைச் சொல்லும் பொழுது மனத்தை அழுத்தும் பாரம் குறையும். இப்படி எழுதுவ தால் ஜெயகாந்தனைக் கடவுளாக்கி விட்டார் சீதா லட்சுமி என்று நினைத்துவிட வேண்டாம். குறைகளும் நிறைகளும் கலந்த ஒரு மனிதர் ஜெயகாந்தன். ஆனால் அவரிடம் மனம் விட்டுப் பேசும் பொழுது ஓர் ஆறுதல் கிடைக்கின்றது. சில மனிதர்களிடம் சில மின் அதிர்வுகள் இருக்கும். நம்முடன் ஒத்துப் போகாத வர்களை வெறுக்கின்றோம். நமக்கே காரணம் தெரியாது.

அரசியல்வாதிகள் கால்களில் விழும் கலாசாரத்தைப் பார்த்துக் கேலி செய்கின்றவள் நான். ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா? 1986ல் நான் வெளி நாட்டிற்கு முதல் பயணம் செல்லவேண்டி வந்தது. அதுவும் மகளிர் நலன் பேசும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளப் போக வேண்டும். முதல் அமைச்சர் அவர் களிடம் சொல்லிவிட்டுப் போக நினைத்து கோட்டைக் குப் போனேன். அப்பொழுது முதல்வராக இருந்தவர் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர் அவர்கள். அவரைப் பார்க்க நான் நுழையும் பொழுது அவர் வெளியில் செல்ல எழுந்து நின்று கொண்டிருந்தார். அவரை வணங்கிவிட்டு நான் செல்லப் போவதைக் கூறினேன். அவரும் சில விபரங்கள் கேட்டார். அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு விடை அளித்து வந்தவள் திடீரென்று அவர் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்தேன். இது ஓர் அனிச்சை செயல்.


ஜெயகாந்தனிடம் அவர் தங்கி இருக்கும் இடத்தில் போய்ப் பார்த்தால் சிலரால் உணர முடியும். இப்படி எழுதுவதால் கிண்டல் செய்யத் தோன்றும். உங்கள் சிலரிடமும் அந்த சக்தி இருக்கலாம். உங்களை அறியாதவர்கள், புதியவர்கள் கூட உங்களைப் பார்க்கவும் விரும்பலாம். சிலருக்கு வெறுப்புத் தோன்றலாம். நாம் இவற்றை உணர்வதில்லை. ஜெயகாந்தனிடம் உளவியலைத் தர்க்க ரீதியாகப் பேசும் திறமை உண்டு. அந்தப் பேச்சுதான் பாதிக்கப் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கும். இங்கே நான் அவர் மேடைப் பேச்சைப் பற்றிச் சொல்ல வில்லை. எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடாது.


சங்கீதத்தை எடுத்துக் கொள்வோம். சிலருக்கு தோடி ராகம் பிடிக்கும்; சிலருக்கு பைரவி பிடிக்கும். ரசனைகள், ருசிகள் தனிப்பட்டவை. ஒரு காலத்தில் ஜி.என் பி. அவர்கள் சுத்த கர்நாடகத்தில் கலப்பு கொண்டு வருகின்றார் என்று கிசு கிசுத்தனர். டி. கே பட்டம்மாள் மாதிரி எம். எஸ் சுப்புலட்சுமி இல்லை.; பட்டம்மாள் பாடும் பொழுது ராகத்திற்காக சொற் களைப் பிரிக்காமல், அர்த்தம் பிரிந்து நிற்காமல் பாடுவார் என்பார்கள்.


ஜெயகாந்தனைப் பற்றியும் பல விமர்சனங்கள் இருப்பதை அறிவேன். நான் ரசித்ததை, நான் உணர்ந்த வைகளைக் கூறுகின்றேன். அவர் இல்லம், அவர் மற்றவர்களைப் பார்ர்க்கவும், பேசவும் எடுத்துக் கொண்ட ஆழ்வார்பேட்டைக் குடில், இரண்டிற்கும் போயிருக்கின்றேன். அவருடன் கிராமங்களுக்குப் போயிருக் கின்றேன். பயணங்கள் செய்திருக்கின்றேன். அவரின் பரிமாணங்களைப் பார்த்தவர்களில் நானும் ஒருத்தி. என் அனுபவங்களைக் கூறுகின்றேன் . அவ்வளவுதான். மாற்றுக் கருத்துக்களை மதிப்பவள் நான் என்ப தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உண்டு. எழுத்தா ளர்கள் எதனையும் விருப்பம் போல் வளைத்து எழுத முடியும். ஆனால் செயலாற்றுகின்றவர்கள் நிலை அப்படியன்று. பிரச்சனைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றைச் சீராக்க வழி வகைகள் காண வேண்டும். செயல்படுத்தும் பொழுது வெற்றியும் கிடைக்கலாம், தோல்வியுற்றும் திரும்பலாம். விருப்பம் போல் அவ்வளவு எளிதில் முடிக்க முடியாது. ஒரு காலத்தில் நானும் கதைகள் எழுதிக் கொண்டிருந்தவள். எனவே இரண்டின் பலமும் பலஹீனமும் தெரியும்.


அடுத்து எழுதப் போகும் இரு சம்பவங்களுக்கு உளவியல் ரீதியாக ஜெயகாந்தன் கொடுத்த விளக்கங்களை எழுதுவேன்.பகுதி 15

படைப்பதற்கு மட்டுமன்று; படிப்பதற்கும் திறன் வேண்டும். எனக்குப்  படிக்கும் ஆர்வம் வளர்ந்ததுவும் ஒரு கதையே


பாரதி இல்லத்தில் பிறந்தது ஆர்வம்
-------------------------------------


சிறுமியாய் இருக்கும் பொழுது மாலை நேரங்களில் எங்கள் தெருவில் இருக்கும் சாம்பு மாமாவிடம் போய் உட்கார்ந்து கொள்வேன். அவர் பாரதி பாடல்களை எனக்குப் பாடக் கற்றுத்தருவார். அதுவும் பாரதி எப்படி பாடினாரோ அதே ராகங்களில் , அதே பாணியில் சொல்லித் தருவார். பாட்டின் அர்த்தங்களையும் விளக்குவார்.அப்பொழுது சுதந்திரம் பெறாத காலம். எனவே எங்கள் பாட்டுக்களில் வேகம் அதிகம் இருக்கும். கையில் ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்துச் செல்வேன். அவர் சொல்லும் பாட்டுக்களை எழுதிக் கொள்வேன். அவர் முழுப் பெயர் திரு. சாம்பசிவ அய்யர், பாரதியின் தாய்மாமன். படிக்கும் ஆர்வத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டவர் அந்த மாமா தான்.ஆர்வம் பிறந்த இடம் பாரதி பிறந்த இல்லம்.


கல்கியின் சந்திப்பு ஆசைக்கு வித்திட்டது
--------------------------------------------------

பாரதிக்கு நினைவு மண்டபம் கட்டும் விஷயமாக எட்டயபுரத்திற்கு ராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும் வந்திருந்தனர். அரண்மனை விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தனர். என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் மும்முறை சிறைக்குச் சென்றவர். எனவே எட்டய புரத்திற்கு வரும் தலைவர்கள் அரண்மனையில் தங்கினால் போய்ப் பார்ப்பார். மேலும் எங்கள் ஊர் ராஜா, வரும் விருந்தினர்களைக் கவ னிக்கச் சிலருக்குப் பொறுப்பு கொடுத்து வைத்திருந்தார். அவர்களில் அப்பாவும் ஒருவர்.அவர் போகும் இடங்களுக்கு என்னையும் கூட்டிச் சென்று அவர்களை நமஸ்காரம் செய்யச் சொல்லுவார். அன்றும் வழக்கம் போல் ராஜாஜி அவர்களையும் கல்கி அவர்களையும் நமஸ்காரம் செய்தேன். திரும்பி வரும் பொழுது இருவரைப் பற்றியும் அப்பா நிறைய பேசினார். அந்த வயதில் மனத்தில் பதிந்தது கல்கி கதை எழுதுகின்றவர் என்பதுதான். அதன் பின்னர் அப்பா வாங்கிப் போடும் விகடன், கல்கியைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த வயதிலேயே கல்கி யின் வரலாற்றுக் கதைகளை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்


கற்பனைத் தேரில் ஏற்றிவிட்டவன் பாரதி
-----------------------------------------------------
பாரதி திருமணமான பிறகு எட்டயபுரம் வந்தபொழுது தான் பிறந்த இல்லத்திற்கருகில் உள்ள வீட்டில் கொஞ்ச காலம் குடியிருந்தார். அதே வீட்டில் நாங்களும் குடியிருந்தோம். என்னைக் கற்பனையில் மிதக்கப் பழக்கிய வீடு. அவன் தொட்ட இடமெல்லாம் நான் தொட்டு மகிழ்ந்தேன்  மாடியென்ற ஓர் சின்ன அறை. கற்பனையில் பாரதியுடன் அரட்டை.


கொல்லைப்புறமும் சின்னதுதான். அதனால்தான் காணி நிலம் வேண்டினானோ? அவன் நினைவுகள் என்னைத் தாலாட்டின. ஏழு வயதில் எனக்குக் கிடைத்த விளையாட்டுத் தோழன் பாரதி.


இலக்கியமும் வரலாறும் என்னைப் பிடித்துக் கொண்டன
---------------------------------------------------------------------
நான் படித்த பள்ளியும் பாரதி படித்த பள்ளி. எங்கள் ஆசிரியர்களும்  பாரதியைப்பற்றி அதிகமாகப் பேசுவார்கள். அந்தக் காலத்துச் சூழ் நிலையில் இருந்த சுதந்திர தாகம் அப்படி பேச வைத்தது.
துரைராஜ் என்று ஓர் ஆசிரியர். என் அப்பாவுக்குச் செல்லப் பிள்ளையானார். காரணம் அவர் நிறைய புத்தகங்கள் படிப்பார். என் தந்தை எனக்கு வரலாற்றுப் புத்தகங்கள் கொடுத்தால் என் ஆசிரியர்
இலக்கியப் புத்தகங்கள் கொடுத்தார்.


புதுமைப்பித்தனிடம் அழைத்துச் சென்றவர் சிதம்பர ரகுநாதன்
----------------------------------------------------------------------
முத்து என்று இன்னொரு ஆசிரியர் வந்தார். திரு. பாஸ்கரத் தொண்டைமான், மற்றும் தொ. மு. சி. ரகுநாதன் ஆகிய இருவரும் இவருக்குத் தாய்மாமன்களாவார். வாத்தியார் துரைராஜின்  தங்கையை முத்து மணந்தார். அதனால் நெல்லைக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. பெரியவரை ஒரு முறை பார்த்திருக்கின்றேன். ஆனால் ரகுநாதன் அவர்களைப் பல முறைப் பார்க்க முடிந்தது. பழகவும் முடிந்தது. அவருடைய எழுத்துவன்மை அப்பொழுது எனக்குத் தெரியாது. நான் ஒரு பள்ளி மாணவி.
பாரதியைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்பார். கல்கி கதை படிப்ப தைச் சொன்னேன் அப்பொழுது அவர் எனக்குச் சில பத்திரிகைகள், புத்தகங்களைக் கொடுத்து நான் படிக்க வேண்டும் என்று சொன்னார்.
வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டியன இருக்கும் புத்தகங்கள் என்றார். அத்தனையும் புதுமைபித்தன் எழுதியவைகள். எட்டயபுரம் சென்று அவைகளைப் படித்தேன். ஆனாலும் அப்பொழுது எனக்கு கதைபடிக்கப் பிடித்தது. புத்தகங்களைப் பத்திரமாக வைத்திருந்தேன்.


ஜெயகாந்தன் வருகை
-------------------------
படித்து முடித்து களப் பணிக்குச் சென்றவுடன் திடீரென்று பெரிய மனுஷியாகிவிட்டதைப் போன்று உணர்ந்தேன். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பணி. சமுதாயத்துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். புதுமைப்பித்தனை மீண்டும் படிக்க ஆரம்பிக்கவும். ஜெயகாந்தனின் எழுத்துக்களும் உடன் புகுந்தன. ஏனோ அவர்கள் இருவரும் எனக்கு உறவுகளாய் உணர்ந்தேன். அப்பொழுது ஒருவர் உயிருடன் இல்லை. இன்னொருவரின் முகம் பார்த்ததில்லை;
நான் செல்லும் மூலை முடுக்குகளுக்குக்கூட என் சிந்தனையுடன் அவர்கள் எழுத்துக்களும் தொடர்ந்தன


வியப்பளித்த தி.ஜ ரா
------------------------
நான் வேலைக்குப்போன இடத்தில் சோமமகாதேவன் என்ற ஓரு எழுத்தாளரும் பணியாற்றிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியவர். எல்லாம் கிராமியக் கதைகள். அவருக்கு நாடக உலகத்திலும் பயிற்சி உண்டு. அக்காலத்தில் இத்தகைய திறனுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைகள் தரப்பட்டன. அவர் என் படிக்கும் ஆர்வம் பார்த்து இன்னொரு பெயரைக் கூறிப் படிக்கச் சொன்னார். தி.ஜானகிராமன் அவர்களின் எழுத்தைப் படிக்க ஆரம்பித்தது அப்பொழுதுதான். அவர் எழுத்து எனக்கு பிரமிப்பைக் கொடுத்தது. இவர்கள் எல்லாம் மனிதர் களுக்குள் புகுந்து , உணர்ந்து பார்த்து வந்து
எழுதுகின்றார்களோ என்ற வியப்பு. இவர்களால் எனக்குள் ஓர் ஆசை உதித்தது. நானும் ஒரு நாள் மனித மனங்களைப்பற்றி எழுத வேண்டும் என்பதே நானும் எழுத்தாளர்கள் குடும்பத்தில் ஒருத்தியானது.

இன்னொரு எழுத்தாளரும் அங்கு வேலை பார்க்க வந்து சேர்ந்தார். அவர் பெயர் ருத்ர.துளசிதாஸ். இன்று 47 புத்தகங்களுக்குச் சொந்தக் காரர். அவர் என்னை எழுதத்தூண்டியது மட்டுமன்றி என்னை எழுத வைத்து, என் கதையைப் பத்திரிகைக்கும் அனுப்பினார். மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. இன்னொரு எழுத்தாளரையும் கண்டுபிடித்தார். ஓ.எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரிலும் அருள் சுடர் என்ற பெயரிலும் பல கதைகள் வெளி வந்திருக்கின்றன. விகடனில் என்னுடைய ஒரு கதை முத்திரை பெற்றதென்றால் அவரு டைய பல கதைகளுக்கு முத்திரை கிடைத்தன. அவர் மகளுக்குப் பூரணி என்று பெயர் வைத்தார். அப்பொழுது எங்கள் நண்பர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர் வெளிவந்து கொண்டி ருந்தது. நாங்கள் தேனாறு என்ற கையெழுத்துப் பத்திரிகையும் நடத்திவந்தோம். நாங்களும் மதுரையில் இருக்கும் நா.பார்த்தசாரதி உட்பட சில எழுத்தாளர்களும் சேர்ந்து ஒரு சிறுகதைப் புத்தகம் வெளியிட்டோம்.


 நட்புக்கு இலக்கணமாய் வந்தார்கள் மணியனும் சாவியும்
-------------------------------------------------------------
வளர்ச்சிப் பணிகளைப் பார்க்க விகடன் ஒரு பத்திரிகையாளரை
அனுப்பியிருந்தது. அவர்தான் மணியன். அவரைக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. அன்று ஆரம்பித்த நட்பு அவர் சாகும் வரை நீடித்தது. என் குடும்பத்தில் ஓர் அங்கமானார். மணியன் விகடனில் வேலை பார்க்கும் பொழுது அவருக்கு மிகவும் பிடித்தமானவர் ஜெயகாந்தன். இருவரும் கடற்கரைக்குச் சென்று உட்கார்ந்து பேசுவார்கள் என்று மணியன் கூறியிருக்கின்றார். விகடன் அலுவலகம் சென்றபொழுது சாவியும் அறிமுகம் ஆனார். அவர் நட்புக்குரிய நல்ல மனிதர். அவரும் எனக்கு நெருங்கிய நண்பரானார். சாவியும் மணியனும் இரு வேறு திசைகளில் திரும்பிய பொழுதும் என்னுடன் கொண்ட நட்பைமட்டும் மாற்றவில்லை.


இந்தத் தொடரின் நாயகன் ஜெயகாந்தனை மட்டும் பார்க்க பல வருடங்களாயின. 1970ல் தான் பார்க்க முடிந்தது. ஆனால் அவர் படைப்புகள் 60க்கு முன்னால் என்னிடம் வந்துவிட்டன. புத்தகங்களும் அவைகளின் படைப்பாளிகளும் எனக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை. பிரபலமான எழுத்தாளர் ஒருவரை ஒரு மூதாட்டி தன் நண்பர் என்று கூறுவதை நம்புவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இப்பொழுது கதை சொல்லிவிட்டதால் நம்பிக்கை பிறந்திருக்கும்..என் வாழ்க்கைப் பயணத்தில் சக பயணிகள் பலர் பத்திரிகை உலகைச் சேர்ந்தவர்கள்.அவர்களில் முதன்மையானவர்கள் மூவர். ஜெயகாந்தன், மணியன், சாவியுமாவார்கள்.


ஜெயகாந்தனின் சில கதைகள் உருவானதைப்பற்றிப் நாங்கள் பேசி யிருக்கின்றோம். பொதுவாக அவர் கதைகளைவிட என் அனுபவங் களைப்பற்றி அதிகம் பேசினோம். அரசியலும் பேசுவதுண்டு. என் அனுபவங்கள் ஒன்றுக்கு அவர் கூறிய கருத்துக்களைப் பார்க்கலாம்


மோகமுள்ளின் அவதாரங்கள்
---------------------------
தி.ஜ.ராவின் கதைகள் எனக்குள் தங்கி என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன. மோகமுள்ளில் பாலுவின் மன நிலையை யதார்த் தமாகக் கொண்டு சென்றிருந்தார். அப்படியும் இருக்க முடியுமா என்று எனக்குள் தவித்த கேள்விக்கு வேறு ரூபத்தில் ஒருவரைப் பார்க்க நேரிட்டது. அவர் பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்னர் நாற்பது வயதான பெண்மணி ஒருத்தி புதிய விளையாட்டை அவருக்கு அறிமுகப் படுத்தினாள். அவருக்கு அது பிடித்திருந்தது. அந்த விளையாட்டிற்கு யார் கூப்பிட்டாலும் மகிழ்வுடன் பங்கு கொண்டார். நாட்கள் செல்லச் செல்ல வட்டம் குறுகியது. அந்த வட்டமும் புள்ளி வடிவாகி, அவரைத் தேடி வருகின்றவர்களை விடுத்து அவர் விரும்புகின்றவர்களுடன் விளையாட்டைத் தொடர்ந்தார். அந்த பட்டியலும் குறுகி , சிறுத்து மறைந்தும் போனது. ஜே .கே யுடன் இந்த மன நிலைபற்றிப் பேச்சு வந்தது.” தவறு என்று திருந்திவிட்டானோ ? “ என்று கேட்டேன். அவர் பதில் முதலில் வியப்பைக் கொடுத்தாலும் அதன் யதார்த்தம் பின்னர் புரிந்தது.


“ எப்பொழுதும் சரி, தப்பு என்று நினைத்திருக்க மாட்டான். யதார்த் தமாகக் கிடைப்பதை அனுபவித்து வந்திருக்கின்றான். காலம் மாற மாற ரசனைகளும் ஈர்ப்புகளும் மாறுவது இயற்கை. அதற்கேற்ப அவன் செயல்களும் மாறி வந்திருக்கின்றன “
இது எல்லோருக்கும் பொருந்துமா?


அப்படிச் சொல்ல முடியாது. சிலர் வாழும் சூழலில் தங்களுக்கென்று ஒழுக்க விதிகளை வகுத்துக் கொண்டு இது சரி, இது தவறு என்று தங்களை மாற்றிக் கொள்பவர்களும் உண்டு.


இப்படியும் ஒரு மனிதன்
-----------------------
இப்படிப் பேசிக்கொண்டு வரும் பொழுதே எனக்கு ஒருவனின் நினைவு வந்தது. அவன் பெயர் பெரிய கருப்பன். மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவன். ஒரு செல்வந்தரின் அடியாள். எஜமான் காட்டுகின்ற ஆளின் கையை, காலை வெட்டி ஜெயிலுக்குப் போகின்றவன். அவன் சிறைக்குப் போயிருக்கும் காலத்தில் அவன் தாய்க்கு ஜீவனத்திற்குப் பணம் கொடுத்து விடுவார். எனவே கருப்பனுக்கு அது ஓர் வேலை. பாவ புன்ணியம்பற்றி அவனுக்குத் தெரியாது. அவனைப் பெற்றவளும்  மகனின் வேலையாகத் தான் நினைத்தாள். சிறையிலிருந்து வரும் பொழுது முதலில் என் வீட்டிற்குத் தான் வருவான். அவனுக்கு நான், அவன் அன்பான அக்கா. அவன் செய்வது தவறு என்று நான் தான் சொல்லிக் கொண்டு வந்தேன்.


பழகிபோச்சு அக்கா. பாவ புண்ணியம்லாம் நேக்குத் தெரியாது. எஜமான்  சொல்றதைச் செய்வேன். அவன் ஒரு அம்பு. அவ்வளவுதான் இத்தகைய அடியாட்களைக் கொத்தடிமை என்று தான் நினைக்கத் தோன்று கின்றது. மனிதர்கள் இப்படியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதுதான் உண்மை .


அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போக விட்டு அவனுடன் தொடர் பில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து அவன் என்னைத் தேடி கோயமுத்தூருக்கு வந்தான். அப்பொழுது நான் கர்ப்பிணி. அவனைப் பார்க்கவும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


’எப்படிக் கண்டு பிடிச்சு வந்தே? எங்கே இருக்கே? கல்யாணம் ஆச்சா?’


’நீங்க எங்கே போனாலும் உங்களைப் பத்தி நான் விசாரிச்சுக்கிட்டு வந்தேன். நீங்க போனப்புறம் நீங்க சொன்னது என்னை உறுத்திக்கிட்டே இருந்தது. இதே ஊரில் இருந்தா எங்க எஜமான் சொல்றதைக் கேட்டுத் தான் ஆகணும். நான் ஊரை விட்டே போய்ட்டேன். நான் இருக்கற லட்சணத்துக்கு கல்யாணம் எதுக்கு? அக்கா, இப்போ கூலி வேலை செய்து பிழைக்கறேன். நீங்க புள்ளே உண்டாயிருக்கர விஷயம் கேள்விப்பட்டேன். பழனி கோயிலுக்குப் போய் நம்ம முருகன் சாமியை உங்களுக்காக வேண்டிக்கிட்டு பிரசாதம் கொண்டாந்திருக்கேன். இந்தாங்க ’


அவன் பேச்சு என்னை நெகிழ வைத்தது. அவன் கைகளில் பிரசாதம்.
அந்தக் கைகளில் முகம் புதைத்து அழுதேன். குழந்தை மனமும் பாசமும் என்னை உருக்கிவிட்டது. அந்தக் கைகள் பலரை வெட்டிய கைகள். ஆனால் எனக்கு? என் மீது பாசம் கொண்ட ஒரு குழந்தையின் கைகளா அல்லது பரிவு காட்டும் தாயின் கரங்களா?!அந்தக் கைகள் உணர்த்திய அன்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது.


சில நேரங்களில் சில மனிதர்கள்
இது கதையல்ல இதுதான் நிஜம்


பகுதி 16


“இலக்கியம் கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வை மதிப்பிட

முயலும் ஒரு துறை “  - ஜெயமோகன்


வாழ்க்கையைக் கற்பனைச் சிறகென்ற கோலினால் மெருகுபடுத்தி வரையும் ஓவியமே இலக்கியம். வாழ்வின் ஆதார உணர்வுகளை உயிர்ப்புடன் எழுதப்படும் பொழுது அவை அழியாத்தன்மை பெறுகின்றது. அது எல்லோராலும் முடிவதன்று.  வாழ்க்கையை ஊடுருவிக் காட்டிய ஒரு சிலரில் நம் ஜெயகாந்தனும் ஒருவர். எழுத்துக்களால் நம்மிடம் நெருக்கமாகிவிடுவர் படைப்பாளிகள்.  அவர்களைப் பார்க்க வேண்டு மென்பதோ, பழக வேண்டுமென்பதோ தேவையில்லை. நாம் ரசிப்பது அவர்கள் படைப்புகளை. சிலருக்குப் படைத்தவனுடன் பழகும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, அவனுடைய பல முகங்களையும் காண முடிகின்றது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் , எல்லா முகங்களும் அழகாய் இருக்கும் என்று உத்தரவாதத்துடன் சொல்ல முடிவதில்லை. தனிப் பட்ட வாழ்க்கையை இங்கு நான் குறிக்கவில்லை. அவர்கள் அந்தரங்கம் நமக்கு வேண்டாம். எழுதத் தெரிந்தவர்கள் சிலருக்குப் பேசத் தெரிவ தில்லை. சிலர் பேசினால் இவரா இப்படி அருமையாக எழுதுகின்றார் என்று தோன்றும். ஆனால் மற்றும் சிலருடன் உரையாடும் பொழுது அவர் இன்னும் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வில்லையே என்ற ஆதங்கத்தை உண்டு பண்ணி விடுவார்கள். ஜெயகாந்தனிடம் நான் உணர்ந்தது இது.
என் தோழி ஒருத்தி சமகால எழுத்தாளர்கள் பெயர்களைக் கூறி அவர் களைப் பற்றியும் நான் எழுதப் போகின்றேனா என்று கேட்கின்றாள்.
நான் இங்கு யாரைப்பற்றியும் திறனாய்வு செய்யவில்லை என்று மீண்டும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். என் சமுதாயப் பணியில் நான் கண்டபிணிகளைப் பார்த்த பாதிப்பில் ஓடிச் சென்று இளைப் பாறிய இடம் ஜெயகாந்தன் குடில். பயணத்தில் சிலர் எட்டிப் பார்க்க லாம். அவ்வளவு தான். ஆனால் ஒன்றை ஒப்புக் கொள்கின்றேன். 90 வரைக்கும் அநேகமாகத் தமிழகப் பத்திரிகைளில் வந்தவை களைப் படித்திருக்கின்றேன்.அதன்பின் தமிழகத்தை விட்டு வெளியிடங்களில் வாழ வேண்டிய சூழலால் படிப்பது குறைந்துவிட்டது. விருப்பு  வெறுப்பு என்று என் படித்தலில் கிடையாது. எல்லாம் படிப்பேன். எப்படியும் ஒரு செய்தியாவது இருக்கும். சமுதாய அக்கறை உள்ளவன் எதையும் என்ன வென்று பார்க்காமல் ஒதுக்கமாட்டான் .


சில நேரங்களில் சில மனிதர்கள்
இது கதையின் தலைப்பு.

ஒவ்வொருவனின் வாழ்க்கையிலும் அவனே கூட ஒவ்வொரு நேரத்தில் ஒரு விதமாக இருப்பான். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. இந்தத் தலைப்பை என்று பார்த்தேனோ அன்று முதல் அதை நினைக்காத நாளில்லை. இது உளவியல் ரீதியாக எனக்கு உதவி செய்தது. குற்றவாளிகளைக் கூட அவர்கள் செய்த தவறுகளாக நினைத்து அவர்களுடன் இயல்பாகப் பழக முடிந்தது. பெரிய கருப்பனைப் போன்றவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.


நான் பணிக்கு வந்த மறு நாள் ஒருவனால் கெடுக்கப்பட்ட ஒருத்தி எனக்குக் கூறிய அறிவுரை “எல்லாரும் கெட்டவங்க இல்லே. ஆனா எப்போ கெட்டது செய்வாங்கன்னு தெரியாது. பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்” படிப்பிலும் பதவியிலும் என்னைவிடக் குறைந்தவள். ஆனால் அவள் கூறியதுதான் எனக்குக் கிடைத்த அரிய படிப்பினை.

இதே கருத்தை “சில நேரங்கள் சில மனிதர்கள்” என்ற ஒற்றை வரியில்  அழகாகச் செதுக்கியவர் நம் ஜெயகாந்தன். பொதுவாக ஒரு சிலரின்  கதைத்தலைப்புகள் மனத்தைவிட்டு நீங்காது  நிலைத்து விடுகின்றன. இன்னொரு தலைப்பு தி.ஜ.ராவின் “மோகமுள்.” ஆனால் இதனைச் சேர்த்து நினைக்க வில்லை. மோகம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது என்ற உண்மை நெஞ்சில் முள்ளாய்த் தங்கிவிட்டது. ஏற்கனவே ஆணினம் மேல் இருந்த கோபஉணர்வு, சமுதாயத்தில் சில அவலங்களைப் பார்க்கப் பார்க்க, ஆண் சிறு தப்புச் செய்தால் கூடச் சீறும் குணம் வளர்ந்துவிட்டது. வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவள், கணவனால் கைவிடப்பட்டவள், ஆதரவற்ற பெண்கள் இவர்களுக்குப்  புனர் வாழ்வு அமைத்துக் கொடுக்கும் பணி என்னுடையது. தினமும் அத்தகைய புகார்களைக் கேட்க வேண்டி வந்ததால் குற்றவாளிக் கூண்டில் ஆண் இனத்தை நிறுத்திப் பார்த்து வந்தேன். மோகம் என்பது பெண்ணுக்கும் உண்டு என்பதை அனுபவங்கள் காட்டிக் கொடுக்கவும் என் சீற்றம் குறைந்தது. சின்னஞ்சிறு பெண்ணைக் குதறி விட்டு, பின் கொன்று குப்பைத்தொட்டியில் வீசும் ஆணை எப்படி வெறுக்கின்றேனோ அதை விட வயதான ஒருத்தி பள்ளிப் படிப்புக்கூட முடிக்காதவனை விளையாட்டு என்று சொல்லிக் கெடுக்கும் பெண்னை அதிகமாக வெறுக்கின்றேன். இருவரையும் என்னால் மன்னிக்க முடியவில்லை. ஏனோ திடீரென்று ஜெயகாந்தன் கதை படிக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. அமெரிகா வரும் பொழுது எத்தனை புத்தகங்கள் தான் எடுத்துவருவது? ஆனால் ஜெயகாந்தன் புத்தகங்கள் மூன்று இருந்தன.  ஆனால் அவற்றைப் பார்க்க விரும்பாமல் கணினியில் மதுரைத் திட்டம் போய் என் பார்வையை ஓட்டினேன்.


யுகசந்தி


என் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. அதற்குக் காரணம் உண்டு. முதலில் அந்தக் கதையைக் கொஞ்சம் சேர்ந்துப் பார்ப்போம் . பத்து வயதில் திருமணம், பதினாறு வயதில் விதவையான கௌரிப் பாட்டிக்குக் குழந்தை இருந்து பேரன் பேத்திகளும் இருந்தனர். ஆசார வாழ்க்கை. அதாவது கட்டுப்பாடான வாழ்கை. காலம் சுழல்வதை யாராலும் மாற்ற முடியுமா? அவள் பேத்தி கீதா திருமணமாகி பத்து மாதங்களில் விதவையாகி பிறந்தகம் வந்து பாட்டியின் மடியின் முகம் புதைத்துக் கதறிஅழுத பொழுது பாட்டி அவளை அரவணைத்துக் கொண்டாள். அதற்கு பாசம் மட்டும் காரணமல்ல. இறந்த காலத்தின் நிகழ்காலப் பிரதிநிதியாய் அவளில் தன்னைக் கண்டாள்.


கீதா வீட்டிற்குள் முடங்காமல் படித்து, ஆசிரியர் தொழில் பார்க்க அயல் ஊருக்குச் சென்ற பொழுது பாட்டியும் உடன் சென்றாள். தன் மகனைக் காண கிரமத்திற்கு வந்த பொழுதுதான் அந்த செய்தியை அறிகின்றாள்.


விதவைப்பெண் கீதா மறுமணம் செய்து கொள்ளப் போகின்றாளாம்.. பிறந்த வீடு தன்னை ஒதுக்கிவிடும் என்பதை உணர்வாள். தனக்கு வாழ்வு வேண்டிச் செல்வதை மறைக்காமல், தெரிவிக்க வேண்டியதைக் கடமையாக நினைத்துக் கடிதம் அனுப்பியிருக்கின்றாள். மேலும் கூறுவதை அப்படியே ஜே.கே அவர்களின் வார்த்தைகளைக் கூற விரும்புகின்றேன்.


“உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்திற்கு ஆட்பட முடியாமல் வேஷங்கட்டித் திரிந்து , பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத் தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கின்றேன். ஆமாம், , ரொம்ப சுயநலத்தோடு செய்த முடிவு தான். எனக்காகப் பாட்டியைத் ததிவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து தியாகம் செய்துவிட்டார்கள்! “ கீதா இப்படியாகி வந்த பிறகுதான் பார்வதி அம்பியையும் ஜனாவையும் பெற்றெடுத்தாள். அதற்கென்ன அதுதான் வாழ்கின் றவர்களின் இயல்பு. வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரித்து அரித்துப்புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா? மொட்டையடிப்பதை விடுத்துப் பின்னல் போட அனுமதித்தவர், வெள்ளைத்துணியை கலர்த்துணியாக உடுத்தும் பொழுது ஒத்துக் கொண்டவர் வாழ்வுக்கு ஏங்கும் இயல்பில் மட்டும் கலாசாரம் போய்விட்டதாகக் கத்தும் போலித்தனத்தை கௌரிப் பாட்டியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டில் எதிர்ப்பு வரவும்,  “நான் பிறந்த யுகம் வேறடா” என்று கூறிவிட்டு புது யுகம் போய்விட்ட  பேத்தியைக் காணப் புறப்பட்டுவிட்டாள். இரு யுகங்களின் சந்திப்பு நிகழ்ந்தது.


புதிய வார்ப்பு

இந்தக் கதையிலும் அதே இதய ஒலியைக் கேட்கலாம் .
பதினேழு வயது நிரம்பாத இந்துவிற்கு வேணு மீது காதல். அவனுடன்  புறப்பட்டுவிட்டாள். விஷயம் தெரியவும் பெற்றவன் இருவரையும் பிடித்து விட்டான். வேணுவின் மேல் திருட்டுப் பட்டமும், சின்னப் பெண்னை ஏமாற்ற நினைத்த குற்றமும் சொல்லிச் சிறைக்கு அனுப்பினான். மகளையே காதலனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லச் செய்தான். வேணு அரசாங்கச் சிறையில். இந்துவும் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டாள். தினமும் சொல்லம்புகளால் காயப்படுத்தி அவளை நடைப் பிணமாக்கினான் தகப்பன். வாழ வேண்டிய பெண் ஏக்கத்தில் தவிக்க பெற்றவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்க இங்கும் மனப் போராட்டம். சிறையி லிருந்து திரும்பிய வேணு வரவும் அவனுடன் இப்பொழுது பயமின்றிப் புறப்பட்டு விட்டாள். இந்து வேணுவிடம் சொன்னது “நாம் செய்தது, அப்ப செய்தது தப்பாக இருக்கலாம். அந்தக் காரியம் தப்பாப் போனதற்கே காரணம் நாம அதை அப்போ செய்தது தான். நான் அப்போ என் வாழ்க்கை யைத் தீர்மானிக்கற வயசிலே இல்லே. அதே காரியத்தை நான் இப்போ செய்யல்லேன்னா வாழ்க்கை கெட்டே போய்டும். எனக்கு வயசு வந்தாச்சு “ இவள் ஒரு புதிய வார்ப்பு.  இரண்டு கதைகளிலும் ஒரு காட்சி ஒற்றுமையைக் காட்டுகின்றது.


வீட்டில் வாழ முடியாமல் இருக்கும் பெண் இருந்தால் பெற்றவர்கள்  கூடத் தங்கள் நெருக்கத்தைக் காட்டுவது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.  எனக்கு வயது எழுபத்தைந்தாகிவிட்டது. நானே மூன்று நிலை களைக்  கண்டிருக்கின்றேன். நான் கிராமத்துப் பெண்.எங்கள் காலத்தில் அப்பாவும் அம்மாவும் சேர்ந்தால் தான் பிள்ளை உண்டாகும் என்று தெரியாது. அம்மா வயிற்றில் இருக்கும் பாப்பா வருவதைக் கூட, “சாமி வருவார். அம்மா வயத்தை தொடுவார். டபக்குன்னு பாப்பா வந்துடும் “ என்று கூறுவார்கள்..


கல்யாணமாகாத பெண் வீட்டில் இருந்தால் பையன் களுக்குக் கூடத் திருமணம் செய்வதை ஆதரிக்க மாட்ட்டர்கள். முதலில் பெண்ணின் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பார்கள். அடுத்து வந்த காலம் “ரெண்டுகெட்டான் காலம். “என்று அவர்கள் பாணியிலேயே கூறலாம். சுழலின் தாக்கம் மனத்தில் ஏக்கத்தை உண்டாக்கியது இந்த காலத்தில்தான் புதுமைப் பித்தன், தி. ஜ.ரா, ஜெயகாந்தன் போன்றவர்கள் மனப் புழுக்கத்தைச் சுற்றி அதிகமாக எழுதினர்.
இப்பொழுது பெண்ணிற்குச் சமாளிக்கத் தெரியும்.

ஒரு நிஜத்தை ஏற்கனவே உங்கள் முன் காட்டினேன் இதே சூழலால் மனக் குமுறல் மட்டுமல்ல, நிலையான வருவாய் இருந்தும் விபசா ரத்தைத் தொழிலாய் எடுத்தஅந்தப் பெண் மட்டும் அப்படிப்பட்ட முடிவை ஏன் எடுத்திருக்க வேண்டும்? கண்ணியமான காதலன் கிடைக்க வில்லையா? கதைகளில் நல்ல நாயகனைக் காட்டிப் புது யுகம் காட்டலாம். ஆனால் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. ஏற்கனவே வருவாய் இருக்கும் பொழுது ஒரு பெண் விபசாரத்தைச் சட்டென்று தன் தொழிலாக எடுக்க மாட்டாள். ஏதோ நடந்திருக்க வேண்டும்.

நான் ஒன்றும் அவளைக் கேட்கவில்லை. அந்த நிலையில் அதிகம் கேட்கக்கூடாது என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அந்த நாள் சமூக சேவகி திருமதி அம்புஜமாள் அவர்கள் எங்களுக்குக் கொடுத்த பயிற்சி. ஒருத்தி மனக் குமுறலுடன் முன்னால் வந்து நிராதரவாய் நிற்கும் பொழுது கேள்விகள் கேட்கக் கூடாது .


“அவளே நொந்து போய் வந்திருக்கா. நீயும் குதறாதே.முதல்லே உள்ளே கூட்டிண்டு போய்ச் சாப்பிடச் சொல்லு; தூங்கட்டும். ரெண்டு நாள் ஆனா அவளே சொல்லுவா” அந்தக் காலத்தில் எங்களுக்குக் கிடைத்த வழிகாட்டிகள் மிக உயர்ந்தவர்கள். பெயருக்காக “சமூக சேவை” என்று சொல்கின்றவர்களல்லர்.
விசாரணை செய்த என்னால் அவளுக்கு மாப்பிள்ளை தேடித் திரு மணம் செய்து வைக்க முடியாது. ஆனால் ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும் . இது கதையல்ல. விருப்பப்படி முடிவு செய்து விட முடியாது. ஆனாலும் ஏதாவது செய்ய வேண்டும். எனக்குத் தோன்றிய வழி ஒன்று தான்.  “உனக்கு வேறு ஊருக்கு மாறுதல் வாங்கித் தருகின்றேன். அங்கே உனக்குப் புது வாழ்வு கிடைக்கலாம். அப்பா, அம்மா பத்திக் கவலை வேண்டாம். பட்டுத் திருந்தட்டும். உன்னால் முடிந்த அளவு பணம் மட்டும் அனுப்பு. பொறுப்பைத் தலையில் சுமக்க வேண்டாம். இந்த வாழ்க்கை வேண்டாம்மா”
நான் கூறியதை கேட்டவுடன் ஓவென்று அழுதாள். அது நிஜ அழுகை.

அவள் விடும் கண்ணீர், ஏதோ ஒரு வெறுப்பில் இந்த அவல வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருப்பாள் எனத் தெரிந்தது. அவளை அணைத்துக் கொண்டேன். மார்பில் முகம் புதைத்து அழுதாள். அவளுக்கு அப்பொழுது அந்தத் தாய்மைப் பரிவு தேவையாக இருந்தது. இடம் மாறினால் அவளுக்கும் புதிய வாழ்வு கிடைக்கலாம். எல்லாம் ஒரு நம்பிக்கைதான். வாழ்க்கையின் அச்சாணிதானே நம்பிக்கை.  என்னால் பிரச்சனைகளை விட்டு ஓட முடியாது. எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. ஆனால் முயற்சி செய்யாமல் விடமாட்டேன். நான் கதாசிரியர் அல்ல. சமூகத்தில் அதன் நலம் விரும்பும் ஒரு போராளி. செயலில் இறங்க வேண்டும்.

ஆமாம், யுகசந்தி என்ற தலைப்பைப் பார்க்கவும் சிரித்தேனே. காரணம் தெரிய வேண்டாமா? அது ஒரு வேடிக்கையான சம்பவம். அடுத்துக் கூறுவேன்.


பகுதி 17

இயற்கையின் படைப்பில் மனிதன் ஓர் அபூர்வப் பிறவி. அவனிடம் சக்திகள் குவிந்து கிடக்கின்றன. பலஹீனங்களும் உண்டு. நம்மில் எத்தனை பேர்கள் தங்களை முற்றும் அறிந்திருக்கின்றோம் ?
என் பணிகளுக்காகப் பல சிறப்புப் பயிற்சிகள் பெற்றவள் நான். எப்பொழுதும் மனத்தில் சிந்தனைகள் தோன்றி என்னைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும். பிறர் எழுதும் கதைகளுடன் உரையாடிக் கொண்டிருப்பேன்.

புதுமைப்பித்தன் –

நான் ரசித்தவர்களில் அவரும் ஒருவர்.
புதுமைப் பித்தன் எழுத்துக்களில் வேகமும் ஆத்திரமும் உணர்ந்திருக் கின்றேன். தான் எழுதும் பாத்திரத்துடன் ஒன்றிப்போய் சமுதாயத்தின் மீது அக்கினிக் குழம்பை வாரி வீசுவார். நானும் சீக்கிரம் உணர்ச்சி வயப்பட்டு விடுவேன். அதன்பலன் வேகத்தில் விவேகம் வீழ்ந்து விடும். பக்குவம் ஏற்பட பல ஆண்டுகளாயின. பிறர் எழுத்தைப் படிக்கும் பொழுதும், சிலர் பேச்சுக்களைக் கேட்கும் பொழுதும் நிஜத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன்.


“கதை அளக்கின்றார்கள் “ என்று ஒரு சொல் வழக்கில் வரும். புதுமைப் பித்தனிடமோ, ஜெயகாந்தனிடமோ அந்த சமரசம் கிடையாது. அவர்கள் எண்ணியது எழுத்தில் வந்துவிடும். எழுத்துலகில் ஜெயகாந்தன் வந்த காலத்தில் புதுமைப்பித்தன் நினைவும் உடன் வந்ததை மறுக்க இயலாது. ஜெயகாந்தனிடம் சிறிது வித்தியா சத்தைக் கண்டேன். ” வாழைப்பழத்தில் ஊசி சொருகுவது போல் “ என்று சொல்வார்களே , அந்தத் தன்மையை சில கதைகளில் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் கடுமை எள்ளளவும் குறைந்தி ருக்காது. அவர் கதைகளை மேலெழுந்தவாறு படித்து விட்டுப் போட்டு விடமுடியாது. மனத்தை ஆழ்ந்து செலுத்திப் படிக்க வேண்டும். அல்லது முத்துக்கள் இருப்பதைப் பார்க்க முடியாது. அழுத்தம் கொடுத்து எழுதிய உரையாடல்கள் வரும்.

புதுச்செருப்பு கதையினைப் பார்ப்போம்-

நந்தகோபாலுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகி விட்டன ; ஆனாலும் கணவன் மனைவிக்கிடையில் சுமுகமான உறவில்லை. அவன் விருப்பத்திற்கு அவள் ஈடு கொடுக்கவில்லை. அவனுக்கு எரிச்சல். அவளுக்கோ அலட்சியம். இப்படி இருந்தால் குடும்பம் உருப்படுமா? ஆத்திரத்தில் அவனுக்கு உறக்கம் வர வில்லை. நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியில் செல் கின்றான். மனைவியோ அலட்சியமாகக் கதவைச் சாத்தி விடுகின்றாள். அதுவும் அவன் ஆண்மைக்குக் கிடைக்கும் அடியாக உணர்கின்றான்.

பிள்ளைப் பருவ நினைவுகள் அவ்வப்பொழுது அவன் நினைவில் வந்து முள்ளாய் உறுத்தும். இரவு நேரத்தில் அம்மா சத்தம் போட்டுக் கத்துவதும், அப்பா அடிப்பதும் எல்லாம் ஒலிகளாய் இவன் இருக்கு மிடம் வரும். பொழுது புலர்ந்துவிட்டால் அதே அப்பாவும் அம்மாவும் ஒன்றும் நடக்காதது போல் பேசும் காட்சிகள் உணர்ச்சி யில் ஆழமாகப் பதிந்துவிடும். இன்றும் அவை அவனை ஆட்டிப் படைக்கின்றன.

“பெற்றோர்கள் சண்டையை விடவும் அந்தப் பெற்றோ ரின் சமாதானங்கள் அவன் மனத்தை மிகவும் அசிங்கப் படுத்தின” இது ஜெயகாந்தனின் வார்த்தைகள். மேலும் விமர்சிக்கலாம். ஆனால் இது யதார்த்தம். என் பிள்ளைப் பருவத்திலும் எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது சரியா தப்பா என்பதில்லை. குழந்தைகள் மனங்களில் எப்படி ஆழமான புண்களாகப் பதிந்து விடுகின்றன் என்பதைச் சிந்திக்க வேண்டும்.


அவன் வீட்டைவிட்டுப் போவதும் பிடிக்கவில்லை. ஆனாலும் கடந்த காலப் புண்களும் இக்கால அடிகளும் அவனைத் துரத்தின. அவன் இப்பொழுது போகும் இடம் எங்கே? அதுதான் அவன் கடந்த காலம்.


திருமணமாகும் முன் அவனுக்கு அறிமுகமாகின்றாள் கிரிஜா. ஏதோ சின்னச் சின்ன வேலை செய்கின்றாள். உடன் பிறந்த ஒருவனும் எங்கேயோ இருக்கின்றான். ஒற்றை மரமாக ஒருத்தி.எப்படியோ காலம் நகர்கின்றது. மரபு வாழ்க்கை அவளுக்கில்லை. பாதையில் வரும் அனுபவங்களை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கின்றாள்.

“ நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கின்றது” இது ஜெயகாந்தன். ஒருத்தியல்ல, ஆயிரக்கணக்கான பெண்களை இது போன்ற நிலையினில் பார்த்திருக் கின்றேன்.

நந்தகோபாலுக்கும் ஒரு நாள் உறவு ஏற்பட்டது. சிறுகதை தொடர் கதையாயிற்று. வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இவள் வீட்டில் சாப்பிட ஆரம்பித்தான். சொல்லப் போனால் குடும்பமே நடத்தினான். அவள்தான் இவனைத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப் படுத்தினாள். ஆனால் அவனுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு இப்பொழுது கிரிஜாவைத் தேடி வந்து விட்டான். அவளிடம் தன் உள்ளக் குமுறலைக் கொட்டுகின்றான். அப்பொழுது கிரிஜா பேசுவதில்தான் ஜெயகாந்தனின் தனித்துவம் தெரிகின்றது.

“பாருங்க, வய்பா வர்ரதுக்கு டிரெய்ண்ட் ஹாண்டா கேக்குறாங்க.? நான் டிரெய்ண்ட் ஹாண்ட்; அதுதான் என் டிஸ்குவாலிகேஷன் “

இதைவிட ஒரு சாட்டையடி இருக்க முடியுமா ? ஜெயகாந்தனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததால், அதைக் கொடுப்பவர்கள் உயர்ந்திருக்கின்றார்கள்.

அடுத்து கிரிஜா கூறுவது ஆண்மகனுக்கு ஒரு பாடம்.

“செருப்புக்கூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ ! அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்கு வாங்களா?!”

இதைவிடப் படிப்பினையை எளிமையாகக் கூற முடியுமா? “புதுச் செருப்புக் கடிக்கும்” கதை தாம்பத் தியத்தின் நாடியைப் பிடித்துக் காட்டுகின்றது. அவளிடம் அவன் எதை எதிர்பார்த்தான்? அவளுக்கு மட்டும் அது முதல் இரவு. அவனுடைய அணுகல் அவளை மிரட்டி விட்டதா? அல்லது விருப்புடன் இணங்க வேண்டியவளிடம் எரிச்சலையும் கசப்பையும் உண்டு பண்ணிவிட்டானா? குற்றம் யார் பக்கம்?
இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? இந்தக் காலத்திலும் நடக்கின்றது. ஆரவாரமின்றி மவுனமாக வந்து அமைதியை அழித்து விடும் பிரச்சனை இது. ஒரு நாளில் முடிந்துவிடக் கூடியதுமில்லை .

நம்மைச் சுற்றி நடப்பவைகளைக் கொஞ்சம் பார்க்கலாம். பொழுது போக்கிற்காக எழுதுபவர் அல்லர் ஜெயகாந்தன். புத்திமதிகள் கூறுவதும் அவருக்குப் பிடிக்காது. ஆனால் அவர் உரையாடல், கதையில் வரும் உரையாடல், காட்சிகளைக் காட்டும் பொழுது மவுனமாக நடத்தும் உரையாடல். எல்லாம் நம்மைக் கொஞ்சமாவது சுயதரிசனம் செய்ய அழைத்துச் செல்லும்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் கணினியில் ஒரு நட்பு. அவன் பெயர் ராஜு ( பெயர் மாற்றியிருக் கின்றேன் ). அவன் திருமணமாகி விவாகரத்தும் செய்து விட்டான். யாராவது ஒரு பெண்ணைப் பார்க்கச் சொன்னான். விவாகரத்திற்குக் காரணம் கேட்டதற்கு , மணம் முடிந்த பிறகே அவளுக்குப் பைத்தியம் என்று தெரிந்தது என்று கூறினான். உடனே அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் பழகப் பழக அவனாக நடந்த வைகளைச் சொல்ல ஆரம்பித்தான். அவன் அணுகல்களுக்கு அவன் எதிர்பார்த்த ஒத்துழைப்புக் கிடைக்காததால் எரிச்சலில் அவளைப் பைத்தியம் கிறுக்கு என்று திட்டியி ருக்கின்றான். ஒரு நாள் அடித்தி ருக்கின்றான். திட்டும் அடிகளும் தொடர்ந்தன. இன்பமாக இருக்க வேண்டிய மணித்துளிகள் அந்தப் பெண்ணிற்குத் துன்பமாக மாறவும் மனநோயாக மாறி இருத்தல் கூடும். இது என் அனுமானமே.

’சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை’ என்னும் பழமொழி வழக்கில் உண்டு. ஆனால் அதனால் பலரின் தாம்பத்தியத்தில் விரிசல் ஏற்படு கின்றதே ! காம சாஸ்திரம் தோன்றியது இந்த மண்ணில்தான். பொதுப்படையாக எதுவும் கூற முடியாத பிரச்சனை. திருமணத்திற்குப் பின் சிறிது காலமாவது இருவரும் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்தல் அவசியம். அப்பொழுது ஏற்படும் இணக்கமும் இசைவும் தாம்பத்தியத்தின் அஸ்திவாரமாகும். இணை கோடுகளாக இருப்பதைவிட இணைந்த கோடுகளாக ஆக்கிக் கொண்டால் முதுமையிலும் சுகம் காணலாம்.

நான் ஊட்டியில் பணி புரிந்த காலத்தில் பார்சி இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் அறிமுகமானது. திருமதி. மாஸ்டர் அவர்கள் மகளிர் நலப் பணிகளில் ஆர்வமுள்ளவர். ஒரு நாள் குன்னூரில் நடக்கும் ஒரு விழாவிற்குச் சென்றிருந்தோம். இரவு 8.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் கூப்பிடுவதாகத் தகவல் கிடைத்தது. தொலை பேசியில் அணுகிய பொழுது பிரச்சனை தெரிந்தது. மிஸ்டர். மாஸ்டர் அவர்கள் இரவு எட்டு மணிக்குள் மனைவி வீடு வந்து சேராததால் கலெக்டரை அணுகி என்னைப் பற்றி புகார் கூறியிருக் கின்றார். உடனே மனைவியை வீட்டில் கொண்டு சேர்க்க வேண்டுகோளும் விட்டிருக்கின்றார். சீக்கிரம் எங்கள் பணியை முடித்துக்கொண்டு ஊட்டிக்கு விரைந்தோம்.

அந்த அம்மாவின் வீட்டில் அவருடைய கணவர் மனைவியை எதிர் நோக்கி வாசல்புறத்தில் அமர்ந் திருந்தார். மனைவியைப் பார்க்கவும் எழுந்து வேகமாக வந்து மனைவியைக் கட்டிப் பிடித்து முத்தமழை பொழிய ஆரம்பித்தார். அந்த அம்மையாரும் தன்னை மறந்து கணவரின் ஆலிங்கனத்தில் ஒன்றி அவரும் முத்த மழை பொழிய ஆரம்பித்தார். நான் ஒருத்தி இருப்பதை உணரும் நிலையில் அவர்கள் இல்லை. அந்த இறுக்கம் ஒரு சம்பிரதாயமானதாகத் தெரிய வில்லை. இரு உள்ளங்களின் ஆத்மபூர்வமான இணைப்பைக் கண்டேன். கணவருக்கு வயது  எண்பத்தைந்து; மனைவிக்கு எண்பது.

அங்கே இளமையின் துள்ளலில் முதுமை ஓடி விட்டி ருந்தது. இதுதான் அன்பு. இதுதான் காதல் . சிறிது நேரப் பிரிவைக் கூடத் தாங்க முடிய வில்லை. அவர்களின் தாம்பத்தியத்தின் அஸ்திவாரம் உறுதியானது.
கணவன் - மனைவி அந்தரங்கத்தின் அந்தப்புரத்தில் வெட்கப்பட ஒன்றுமில்லை. அங்கே ஏற்படும் சங்கமம் இயற்கையின் நியதி.

பூஜை அறைக்குள் போக சில ஒழுங்கு முறைகள் என்றால், படுக்கை அறைக்கும் சில விதிமுறைகள் உண்டு. சிந்திக்கும் நேரம் அதுவல்ல என்றாலும் வாழ்க்கையின் முதல் படியில் கால் வைக்கின்றோம் என்ற அக்கறை உணர்வுடன் இருத்தல் அவசியம். முதுமையிலும் இளமை வேகம் காணலாம்.
பெரும்பாலானோர் வாழ்க்கை எப்படி இருக்கிற தென்றால் காலையில் எழுந்திருக்கவும் காலைக் கடன்களை முடித்துப் புற வாழ்க்கைக் கடமைகளைச் செய்யப் புறப்பட்டுச் சென்று, மாலையில் திரும்பவும் வீட்டிலும் சில பணிகள் முடித்து இரவில் தாம்பத்ய இணைப்பையும் இரவுக் கடனாக முடிக்கின்றான்; “ரொட்டீன்” வாழ்க்கையாக்கி விடுகின் றான். சீக்கிரமே சலிப்பும் வந்து விடுகின்றது. பின்னர் புதுமையைத் தேடிப் புறப்பட்டு விடுகின்றான். இல்லறத்தின் நல்லறம் போய் விடுகின்றது.

குடும்பப் பிரச்சனைகளில் கவுன்ஸ்லிங் என்னுடைய கடமைகளில் ஒன்று. ஆரம்பத்தில் காட்டும் ஆர்வத்தை ஆண் இழக்கவும் குடும்பத்தில் பூமிக்கடி யில் ஓடும் நீரோட்டம்போல் பிரச்சனைகளும் தோன்றி வீடு நிம்மதியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து விடுகின்றது. இங்கே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். உணர்வுகளின் தடுமாற்றம் ஆணுக்கு மட்டுமா? முன்பு கலாசாரக் கோட்டைக்குள் இருந்தபொழுது கூடப் பெண்ணிடமும் தடுமாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இப்பொழுது ஓரளவு சுதந்திரம் அடைந்து வெளிவந்து விட்டாள். இப்பொழுது பெண்ணும் குறுக்குப் பாதையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றாள். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இது ஓர் அபாய அறிவிப்பு.

பிரபலமான இரு குடும்பங்கள். ஒருத்தி டிரைவருடன் ஓடிப்போய் மூன்றாண்டுகள் வாழ்ந்துவிட்டுத் திரும்பியிருக்கின்றாள். இன்னொ ருத்தி தெருவில் சாமான்கள் விற்கும் ஒருவனுடன் ஓடிவிட்டு இரண் டாண்டுகள் கழித்து வீடு திரும்பியிருக்கின்றாள். கணவன்மார்கள் புகழுக்காகவும், பொருளுக்காகவும் வீட்டை ஒதுக்கியதில் பெண்கள் திசைமாறிச் சென்று விட்டார்கள். தவறு செய்தவர்களாயினும் குழந்தை களுக்காக அப்பெண்களைக் குடும்பம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. குழந்தைகளின் மன நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனக்கு ஓர் இளைஞன் அறிமுகமானான். கெட்டிக்காரப் பையன். அம்மா அம்மா என்று ஆசையுடன் சுற்றி வருவான். அவன் முகத்தில் ஒரு சோகம் எப்பொழுதும் இருக்கும். ஆராய்ந்ததில் அவனுடைய தாயாருக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவனுடைய அப்பா வெளிநாட்டில் வேலை பார்த்துப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். பிள்ளையின் மனத்தில் காயம். பெற்றவளைப் பற்றி யாரிடம் குறை கூற முடியும்.?!

உயர்ந்த பதவியில் ஒருவர். அவர் எப்பொழுதும் வேலை வேலை என்று தன் குடும்பத்தைப் பற்றிக்கூட எண்ணாமல் கடுமையாக உழைத்து வந்தார். நாளடை வில் மனைவி ஒரு பெரிய இடத்துப் பிள்ளையுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு விட்டாள். அந்தப் பிள்ளையின் குடும்பத்தார் வீட்டை விட்டு விரட்டி விட்டனர். அவனோ இவர்கள் வீட்டிற்கே வந்து விட்டான். அந்தப் பெரிய மனிதரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரே வீட்டில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இவைகள் அனைத்தும் நிஜம். ஆம், நம் தமிழ் மண்ணில்தான் இவைகள் நடந்து கொண்டிருக் கின்றன. காரணம் என்ன? என்னை ஒரு இடத்தில் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். நான் பேச்சில் கெட்டிக்காரி. அதுவும் உளவியல் தெரிந்து பேசியதால் என்னைப் பல தரப்பினரும் பேசக் கூப்பிடுவர். என்னைக் கூப்பிட்ட இடத்தில் பல தொழில்கள் செய்கின்றவர்கள், வியாபாரிகள், படித்த அறிஞர்கள் என்று ஒரு கலைவையாக இருந்தனர். அவர்கள் விரும்பும் தலைப்பில் முதலில் பேசுவேன். பின்னால் அவர்கள் கேள்விகள் கேட்பார்கள்; நான் பதில் கூறுவேன். இங்கே என்னை ஒரு பெண் என்று நினைத்துத் தயங்கமாட்டார்கள். இவை வாழ்க்கைப் பிரச்சனைகள். என்னை ஒரு சமூக மருத்துவராகக் கருதி மனம் திறந்து பேசுவார்கள். நான் கொஞ்சம் கடுமையாகப் பதில் சொன்னாலும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.

பிரச்சனை இதுதான். காலை முதல் இரவு வரை கடுமையாக வேலை பார்த்து வரும் கணவனை வீட்டிற்குத் திரும்பும் பொழுது புன்னகையுடன் வர வேற்பதில்லை. அலங்கார உடைகளுக்கோ, ஆபரணங் களோ அவர்கள் கேட்பதெல்லாம் வழங்கப் படுகின்றது; ஆனால் மனைவி அன்பும் கனிவும் காட்டுவ தில்லை. இதுதான் குற்றச்சாட்டு .

உங்கள் தினசரி வேலைகளை நேரம் குறிப்பிட்டுச் சொல்லி வாருங்கள்.

காலையில் எழுந்திருந்து எல்லாம் முடித்து 8 மணிக்குள் கடைக்குப் புறப்பட வேண்டும். இரவு கடை 9 மணிக்குச் சாத்தி, கணக்கு முடிக்க இரவு 10 மணியாகின்றது. கொஞ்சம் சிரமபரிகாரம் செய்ய நண்பர் களுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப இரவு 12 மணியாகிவிடும். உங்கள் மனைவியும் சும்மா இருந்திருக்க மாட்டார்கள். உங்களையும் குழந்தைகளையும் அனுப்பும் வரை வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டும். வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் மேற்பார்வை செய்ய வேண்டும். பின்னர் மற்ற வேலைகளை முடிக்க நண்பகல் ஆகி விடும். சிறிது படுக்கலாம்; பின்னர் எல்லோரும் திரும்பி வருவார் கள் அப்பொழுது முதல் மீதி வேலைகள் முடிய இரவாகி விடும். களைப்பு அவர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்கள் நண்பர்களைத் தேடிப்  போவதில்லை.

ஆண்கள் சொல்லும் சிரமபரிகாரம் குடிப்பது. வீட்டிற்கு வரும் பொழுதே குடித்துவிட்டுப் போவீர்கள். தூக்கத்தில் இருப்பவள் இடை யில் எழுந்து வந்து கதைவைத் திறக்கின்றவளால் எப்படிச் சிரிக்க முடியும்? அவள் மனைவி. சின்ன வீடாக இருந்தால் சிரிப்பாள். பெண்ணுக்குத் துணியும் நகையும் கணவனின் அன்புக்குப் பிறகுதான். கடைக் கணக்கை பார்த்து விட்டு நேராக வீட்டிற்குப் போங்கள். சிரித்த முகத்துடன் வரவேற்கும் மனைவியைப் பார்க்கலாம்.


அவளும் ஒரு மனுஷி. கீ கொடுக்கவும் சிரிக்க அவள் பொம்மை இல்லை. தூங்குவதற்கு மட்டும்தான் வீடு என்று இருக்காதீர்கள். உங்கள் குடும்பம். வாழுங்கள். அங்கே நீங்கள் இருக்க வேண்டும். மனைவி குழந்தை களுடன் தினமும் கொஞ்ச நேரம் சேர்ந்து இருக்க வேண்டும். எத்தனை ஆண்கள் இப்படி இருக்கின்றீர்கள் என்று உங்களையே கேட்டுப் பார்க்கவும். அப்புறம் மனைவியைக் குறை கூறுங்கள்.


தாம்பத்தியத்தில் இரு பக்கமும் குறைகள் உண்டு. ஆனால் அதிகமாகத் தவறுகள் செய்கின்றவன் ஆண். வரலாற்றில் அவன் எடுத்துக் கொண்ட சலுகைகள் இப்பொழுது மிரட்டுகின்றன. ஆண் , பெண் இருபால ரும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் தாம்பத்தி யத்தில் விரிசல் ஏற்படுவதைத் தவிர்த்தல் முடியாது.

மனிதா, உன் வாழ்க்கை உன் கையில் ;
உன் அமைதி உன் கையில் !

காலம் மாறிவிட்டது. மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் கணவன். அசட்டையாக இருந்தால் பின்னால் மனம் உடைந்து போக நேரிடும்.


இக்கதையில் இல்லறத்தின் பல அர்த்தங்களைக் காணலாம். ஆண்மகன் இன்னொரு தவற்றையும் செய்து வருகின்றான். அதனை “பிணக்கு” என்ற கதையில் ஜெயகாந்தன் சுட்டிக் காட்டியிருக்கின்றார். தெரிந்து கொள்ள வேண்டியவற்றைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்; தெரிந்து கொள்வோம். புரிந்து கொள்வோம்.பகுதி 18

வீணையிலிருந்து சுகமான சங்கீதம் கேட்க வேண்டுமென்றால்
வீணை நரம்புகளை விரல்கள் முறையாக மீட்டத் தெரிந்திருக்க
வேண்டும்.அவசரப்பட்டோ அலட்சியத்திலோ இசைத்தால் அபஸ்வரம்தான் கேட்கும்.
தாம்பத்தியத்தின் இனிமையை பிணக்கில் அருமையாகக் காட்டியுள்ளார் நம்மவர்.
பிணக்கின் கணக்கைப் பார்க்கலாம்
மருமகள் சரசா தன் கணவன் அறைக்குப் பால் எடுத்துச் செல்லும் பொழுது கைலாசம்பிள்ளையின் பார்வையும் தொடர்ந்தது. அவள் அறைக்குள் நுழைந்து கதவை மூடவும் அவர் பார்வையும் கதவில் முட்டி நின்றது.
வெட்கம், பயம்,துடிப்பு, காமம்,வெறி,சபலம்,பவ்யம்.பக்தி, அன்பு
இத்தனையும் கொண்டு வடிவம் பெற்ற ஒர் அழகுப் பெண் அங்கிருந்து அருகில் வரவும் கைலாசம் அவளைத் தாவி அணைக்கப் பார்க்கின்றார்.
மனையாள் தர்மாம்பாளின் வாலைக் குமரித் தோற்றம். கற்பனையில் மிதக்கும் கைலாசம் பிள்ளைக்கு அறுபதுக்கு மேல் வயதாகின்றது. ஆச்சி தர்மாம்பாள் தன் பேரக்குழந்தைகளைக் கவனித்துக் கொண்டி ருந்த பொழுது கைலாசம் தன் வாலிபப் பிராய நினைவுகளில் மனத்தை மேயவிட்டு மவுனமாக உட்கார்ந்திருந்தார்.
பால் தம்பளரை தர்மாம்பாள் நீட்டிய பொழுது சட்டென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டார் .
“பிள்ளை இல்லாத வீட்லே கெழவன் துள்ளியாடறானாம. கையை விடுங்க“
“யாருடி கெழவன்?.”என்று மனைவியின் கன்னத்தில் தட்டியபடி சிரித்தார்.
“ இல்லே, இப்போத்தான் பதினேழு முடிஞ்சு பதினெட்டு நடக்கு. பொண்ணு பாக்கவா ? ”
“எதுக்கு நீதான் இருக்கியே” அவள் முந்தியைப் பிடித்து இழுத்தார்.
“ஐயே, என்ன இது ! “
மறுபடியும் சிரிப்புதான். கிழவர் பொல்லாதவர் ,கற்பனைக் குதிரை வேகமாகப் பறக்கின்றது. கைலாசம் தன் மனைவியைக் காணும் பொழுது தன்னையும் கண்டார்.
கிழவரின் கை மனைவியின் தோளை ஸ்பரிசித்தது.
அந்த தம்பதிகளிடையே ஒரு சிறு மனத்தாங்கல் கூட நிலைத்து நின்றதில்லை; ஒரு சச்சரவு என்பதில்லை. ’சீ எட்டி நில்’ என்று அவர் சொன்னதில்லை; சொல்லி இருந்தால் அவள் தாங்குவாளா என்பது இருக்கட்டும்; அவர் நாக்கு தாங்காது. சிரிப்பும் விளையாட்டுமாகவே வாழ்க்கையைக் கழித்து விட்டார்கள் ; இதுவரை ஆரோக்கியமான தாம்பத்யம் நடந்தது.
இப்பொழுது கைலாசம் நாவில் சனி உட்கார்ந்தது.
ஆரம்பகாலத்தில் தர்மாம்பாள் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது தாசி கோமதியுடன் நீலகிரிக்குச் சென்றதைச் சொல்லுகின்றார். அதுவும் எப்படி?
“அந்தக் காலத்துலே அவளுக்குச் சரியா யாரு இருந்தா ? தாசின்னா தாசிதான்“ இது அவர்.
“நானும் எத்தனியோ பேரைப் பார்த்திருக்கேன். ஆம்புள்ளைனா நீங்க தான் “ இது அந்தப் பெண்.
கைலாசம் பிள்ளை பேசப் பேச தர்மாம்பாள் பொடிப்பொடியாகச் சிதைந்து கொண்டிருந்தாள்.
தர்மாம்பாள் கிழவிதான்; கிழவியானாலும் பெண்ணில்லையா ?
அன்று முதல் அவள் அவருடன் பேசுவதில்லை. அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்றாலும் பிறர் மூலம் அவற்றைச் செய்தாள். உயிர் ஒடுங்க ஆரம்பித்தது. கடைசி நிமிடங்களில்கூட அவர் தன் வாயில் விட்ட பாலை விழுங்காமல் பல்லை இறுகமூடி உயிரை விட்டாள். எத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த இன்ப வாழ்க்கை ஒரு நொடிப் பொழுதில் மாயமாய் மறைந்துவிட்டது !
ஏன்?
இது ஒரு தற்செயல் நிகழ்வு; ஆனாலும் விஷ வார்த்தைகள் தாம்பத் தியத்தை அழித்துவிட்டது. அறிவுரை கூறும் நீதிக் கதையன்று; ஆனாலும் படிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடும் அவலக் காட்சி. பல குடும்பங்களில் வேண்டுமென்றே நடைபெறும் துன்பியல் நாடகம். பெண்ணைச் சீண்டிப்பார்க்கும் இந்த ஆசை வரலாமா?
இளமைக் கால அனுபவங்களாக செய்திகள். வெளியூர் சென்று வந்தால் வித விதமான கற்பனை பொய் மூட்டைகள். அடுத்தவன் பெண்டாட் டியின் சிறப்பைக் கூறி “பொண்டாட்டின்னா அவளைப் போல் இருக் கணும் “ என்ற ஒப்பீட்டு வருணனைகள், ஒன்றா இரண்டா? பிணக்கு வராது; காயப் படும் பெண் மரத்துப் போவாள். அவள் ஜடத் தன்மை பார்த்து வெறுப்புக் கொண்டு பரபரப்பைத் தேடி மனம் அலைந்து
அவனும் தொலைந்து போவான்.  இப்படி நினைத்துப் பார்க்கலாமே .

’ஏங்க, உங்க சின்ன வயசுக் கதை நல்லா இருக்கு. எல்லாருக்கும் சின்ன வயசே ஜாலிதான். நான் படிக்கும் போது குமார்னு ஒரு பையன்.. என்னைச் சுத்தி சுத்தி வருவான் ’

அவள் சொல்ல ஆரம்பிக்கவும் அவன் முகம் முதலில் சுருங்கும்.
’நாங்க ஊரைச் சுத்துவோம். கோயில்லே உட்கார்ந்து அரட்டை ....’.
’சரி போதும்’ அவன் பொறுமையை இழக்க ஆரம்பித்துவிட்டான்.
’ நாங்க சினிமாவுக்கும் போவோம்; அவன் பொல்லாதவன்; நிறைய சேட்டை செய்வான் ’
’ போதும்டி நிறுத்து. இவ்வளவு கேவலமானவளா ? முன்னாலே தெரிஞ்சிருந்தா கல்யாணம் நடந்திருக்காது’

அவன் பேசினால் அவள் கல்லாய் இருக்கணும்; அவள் பேசினால் அவன் மட்டும் எரிமலையாகலாம். பெண்ணும் மனிதப் பிறவிதானே. பெண்ணச் சீண்டிவிடவேண்டும்; அவளுக்குக் கோபம் வரவேண்டும். என்ன வக்கிரமான ஆசை!  அழகு மனைவியை மறந்து பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த மாதவியை விட்டுப் பிரிந்து கோவலன் சென்றதற்கும் இது போன்ற வரிப் பாடல் தானே காரணம்.

இல்லறம் நல்லறமாக நடக்க நாவையும் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கு உரிமையானவரை அடுத்தவர் பார்ப்பதைக்கூடத் தாங்காது மனம். இது இருபாலருக்கும் பொருந்தும்.


என் பணிக்காலத்தில் பெரும்பாலான குடும்பச் சண்டைகளுக்கு உளறல்கள் காரணமாக இருந்ததைப் பார்த்திருக்கின்றேன்.  உடலும் உள்ளமும் உரமாக இருக்க, எழுபதிலும் இளமையாக இன்பம் அனுபவிக்க இது போன்ற அசட்டுப் பிணக்குகள் நேராது பார்த்துக் கொள்ள வேண்டும்.  குடும்பத்தில் விரிசல் வந்தால் துன்பம் அவர்களுடன் நிற்காது. கோபத்தில் அவள் குழந்தைகளை அடிப்பாள். அவர்கள் தேவைகளைக் கவனிப்பது கூடப் பாதிக்கப்படும். சில வினாடி உளறல்கள் குடும்ப அமைதியைச் சாகடிக்கும் விஷப்பூச்சிகளாகி விடும்.

பிணக்கு கதை நமக்குணர்த்துவது ஒரு பெரிய படிப்பினை.  இருபத்து நான்கு வயதில் அறுபது வயது வாழ்க்கையினைப்  படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார் ஜெயகாந்தன்.

இளமையில் முதுமையின் துள்ளல்.

இன்னொன்றையும் சொல்ல விரும்புகின்றேன். என் தோழி ஒருத்தியின் கணவ்ர் அடிக்கடி வெளி நாடு செல்வார். வந்த பின் வகை வகையாக அவர் பல நாட்டுப் பெண்களை அனுபவித்ததாக நிறைய அளப்பார். அவளோ சண்டை போடாமல் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாளாம்.. அவள் கணவருக்குக் கோபம் வந்து விட்டது ; ஏன் தெரியுமா? அவர் சொன்னதைக் கேட்டு அவள் சண்டை பிடிக்கவில்லையாம்.
அவளுக்கு அவர் மேல் ஆசை இல்லையாம். இப்படியும் ஆண் மனம் இருக்கின்றது !
மனக்குரங்கின் மகிமையே மகிமை; அது எப்படியெல்லாம் தாவும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.
புதுச் செருப்புக் கடிக்கும் கதையிலும் இன்னொரு குணத்தையும் சொல்லாமல் காட்சியாகக் காட்டுகின்றார்.  அவர் கதைகளில் அவர் உரையாடல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. நேரடிச் சந்திப்பு களிலும் நடக்கும் உரையாடல்களும் அப்படியே. சில நேரங்களில் அவர் காட்சிகளைப் பேச வைத்து விடுவார்.  ஆறு மாத காலம் ஒருத்தியுடன் இருந்து பார்த்தும் ஏமாற்றம்,

அதனால் ஏற்பட்ட புகைச்சலில் திணறி வீட்டை விட்டு இன்னொரு பெண்ணிடம் ஓடி வருகின்றான். கிரிஜா அவனுக்குப் புதியவள் அல்ல. வந்தவன் உடனே அவளுடன் உடலுறவு கொள்ளவில்லை. குமுறு கின்றான்; புலம்புகின்றான். எதற்காக வந்தான்? ஒடிந்து போன நிலை யில் அவன் சாய ஓர் இடம் வேண்டும். பரிவுடன் அவனைத் தேற்ற ஒரு தோழமை வேண்டும். காயப்பட்ட மனம் ஒத்தடம் பெற வேண்டும். இப்படியும் மனிதன் ஆறுதல் தேடுகின்றான்

வெளிப்படையாக ஜெயகாந்தன் எதுவும் கூறவில்லை. ஆனால் வேறு ஒரு கதையில் இது கூறப்பட்டிருக்கின்றது. ஒரு பெண்ணின் கூற்று; அதுவும் ஒரு விலைமாதின் கூற்று. அந்தக் கதையின் பெயர்  -  GODS CALL GIRL

கார்லா என்ற ஒரு விலைமாது சுய சரிதையில் எழுதியிருக்கின்றாள்.
கதையின் தொடக்கம் முதல் கடைசி வரை கடவுளையும் சுமந்து செல்கின்றாள். கடவுளின் விலைமகளாக இருந்தவள் கடவுளின் பெண்ணாகின்றாள். தெள்ளிய நீரோட்டமாகத் தங்கு தடையின்றிக் கதை செல்கின்றது. அதில் சம்பவங்களைவிட உள்ளத்தின் உலாவைக் மிகுதியாகக் காணலாம். அடுத்து அந்தக் கதையைப் பார்க்கலாம். நம் ஜெயகாந்தன் கோபித்துக் கொள்ளமாட்டார்.


பகுதி 19

சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று ஏறத்தாழ ஓராண்டு காலம் வசிக்க நேர்ந்தது. சிட்னியில் தங்கி இருந்தேன்.


சிட்னி

ஒரு காலத்தில் திறந்தவெளிச் சிறைச்சாலை ; பல்லாயிரக்கணக்கான பெண் கைதிகள் இறக்குமதி செய்யப்பட்டனர். அங்கே பணி செய்ய மட்டுமன்று; வேலை செய்பவர்கள் முதல் கைதிகள் வரை அங்கே இருந்த ஆண்களின் இச்சையைத் தீர்க்கவும் பணிக்கப்பட்டு விபச் சாரிகள் என்ற ஒரு புதிய சமூகத்தையும் உண்டு பண்ணிய வரலாற்றுச் செய்தியை சிட்னி பெற்றிருக்கின்றது. இச்செய்தியை மறுப்பவரும் உண்டு. பெண்களை அதற்காகத் தருவிக்கவில்லை என்ற  கூற்றும் உண்டு. எதுவானால் என்ன, வந்த பெண்களின் வாழ்க்கை மாறியதென்னவோ உண்மை. கலங்க வைக்கும் கதைகள் நிறைய உண்டு. ஒரு நாட்டை அடைந்தவுடன் நான் போக விரும்பும் இடம் நூலகம். அந்த நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முயல்வேன் .

சமுதாயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வரலாற்றில் தெளிவு வேண்டும் என நினைப்பவள் நான்.
வழக்கம்போல் சிட்னியிலும் நூலகம் சென்றேன். புத்தகங்களைப் பார்த்து வரும்பொழுது என்னைக் கவர்ந்து இழுத்தது ஒரு தலைப்பு; அது என்னைத் திடுக்கிட வைத்தது. புத்தகத்தைக் கையில் எடுக்கவும் சட்டென்று நான் அக்கம் பக்கம் பார்த்தேன்.

சே, நானும் அவ்வளவுதானா? இது ஓர் அனிச்சைச் செயல் என்றாலும் என் செயல் எனக்கே பிடிக்கவில்லை. சில நேரங்களில் சிலரில் நானும் ஒருத்தியாய் உணர்ந்தேன்.
கையில் உள்ள புத்தகத்தைப் பார்த்து சிலர் மதிப்பீடு செய்வார்கள்.

அமெரிக்காவிற்கு முதன் முறையாகச் சென்ற பொழுது அங்கிருந்த நூலகம் சென்றேன். அங்கிருந்த பொறுப்பாளர் என்னை அழைத்துச் சென்ற இடம் இறைவன், தத்துவங்கள் பற்றிய புத்தகங்கள் இருக்கும் பகுதிக்கு. என் வயதைப் பார்த்து நான் படிக்க வேண்டியவைகளை அந்த அம்மா தீர்மானித்தது.
ஒரு பார்க்கிற்கு என் மருமகள், பேரக் குழந்தைகளுடன் சென்றிருந் தேன். அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நான் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தைப் பார்ப்பதும், கொஞ்சம் வேடிக்கை பார்ப்ப துமாக இருந்தேன். அப்பொழுது என்னருகில் ஒரு பெண்மணி வந்து உட்கார்ந்தார். என் கையில் இருந்த புத்தகம் டேனியல் ஸ்டீல் எழுதியது. அதைப் பார்க்கவும் அந்த அம்மாளின் முகத்தில் புன்னகை. தொடர்ந்து டேனியல் ஸ்டீல் பற்றி ஒரே புகழாரம்.

இன்னொரு இடத்தில் வேறு புத்தகம் எடுத்துச் சென்றிருந்தேன். யாரும் அந்த புத்தகம்பற்றி எதுவும் பேசவில்லை. நம்மூர் எழுத்தாளர் லட்சுமி போல் குடும்பக் கதைகளால் பெண்கள் மனத்தைக் கவர்ந்தவர் டேனியல் ஸ்டீல். ஆக உலகத்தில் எப்பகுதியாயினும் அவர் வாசிக்கும் புத்தகத்திலிருந்து ஒருவரை மதிப்பீடு செய்யும் மனப்போக்கு மட்டும் பொதுவாக இருப்பதைப் பார்த்தேன். அந்த நினைப்பில் தான் சிட்னியில் புத்தகத்தை கையில் எடுக்கவும் என்னையும் அறியாமல் அக்கம் பக்கம் பார்க்கத் தோன்றிவிட்டது. அந்தப்புத்தகம் தான் ‘GODS CALL GIRL’ . வீட்டிற்கு எடுத்துச் சென்றவுடன் படிக்க ஆரம்பித்தவள் அதில் அப்படியே ஆழ்ந்து போனேன்.

கார்லா என்ற ஒரு விலைமாதின் சுய சரிதை. தங்கு தடையின்றி நடை சென்றது. சொல்லியிருந்த விதம் எவரையும் ஈர்க்கும்; கொச்சையாக எதையும் எழுதவில்லை. சரியா தவறா என்று வாசகர்களை நினைக்கக் கூட விடாமல் சேர்ந்து பயணம் செய்ய  வைத்து முடிவில் அவளுடன் உட்கார வைத்து விடுகின்றாள்.

கதையின் சுருக்கம் பார்ப்போம்.

கான்வென்டிலிருந்து பாலியல் தொழிலுக்குச் செல்லும் ஒரு பெண்ணின் பயணம். ஹாலண்டில் பிறந்து பன்னிரண்டு வயதில் மெல்பர்ன் வந்த ஒரு பெண்ணின் கதை.  உடன்பிறந்தவர்கள் பலர். தாய் ஒரு ஆசிரியை; கத்தோலிக்க மதம். அவளது ஆறாம் வயதில் அவளைப் பெற்றவனால் அவள் கெடுக்கப் படுகின்றாள். கெடுத்தபின் அவளிடம் “ யாரிடமும் சொல்லாதே. ஜீசசுக்குப் பிடிக்காது. “என்று கூறி பயமுறுத்தினான். இது ஒரு நாள் கூத்து இல்லை. இது தொடர்ந்து நடந்தது. பெற்றவள் வாழ்ந்த உலகம் வேறு. அவளுக்கு அவள் கணவனைத் திருப்திப் படுத்த வேண்டும். அதுதான் கடவுளுக்குப் பிடிக்கும் என்று அவளுக்குச் சொல்லப்பட்டி ருந்தது. குழந்தைகள் கூடப் பாவத்தின் சின்னங்கள் என்று நம்ப வைக்கப்பட் டிருந்தது. கணவனைத் திருப்தி படுத்துவது ஆண்டவனுக்குப் பிடித்தமான ஒன்று. அவள் அம்மா வாழ்ந்த வழி அது.

நாம் தமிழ்க் கலாசாரம், இந்தியக் கலாசாரம் என்று சொல்வது உலகத்தில் பெண்ணுக்குப் பொது விதி. காலம் மாற மாற பல இடங்களில். அவள் நிலையில் மாற்றங்கள் சிறுகச் சிறுகத் தோன்றி விட்டன.
இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த இன்னொரு செய்தி கூட வியப்பை அளித்தது. ஆண், பெண்ணின் கூடல் பிள்ளை பெறுவதற்காக மட்டும் என்ற கொள்கை பற்றியும் எழுதியிருக்கின்றாள். அமெரிக்காவிற்குப் பின் தான் ஆஸ்திரேலியாவின் உதயம். புலப்பெயர்வு மனிதனுக்கு மட்டுமன்று; அவன் வரும் பொழுது அவன் தன்னிடம் தங்கிய கலாசார மூட்டைகள், நம்பிக்கை எல்லாம் கொண்டு சென்றிருக்கின்றான்.
கார்லாவின் அம்மாவைப் பார்க்கலாம் அம்மாவின் அன்போ அரவணைப்போ இல்லை. தன் கணவன்தான் உலகம் என்ற வாழ்க்கை. இத்தனைக்கும் படித்தவள்; பள்ளி ஆசிரியை. சின்ன வயதில் சீரழிக்கப்பட்ட பெண் கார்லா. படிக்கப் போன இடம் கான்வென்ட். அங்கும் அவளுக்கு கிடைத்த அனுபவம் கசப்பானது.
கண்டிப்பு நிறைந்த ஆசிரியை. அவரும் ஓர் கன்னியாஸ்த்ரி. வகுப்பறையில் சில கண்கள் வரையப் பட்டிருந்தன. ஜீசசின் கண்களாம்; பாவம் செய்கின்றார்களா என்று பார்க்கும் கண்களாம். கடவுளின் பார்வை கூட அவளுக்கு அச்சமளித்தது. அன்பே உருவான கடவுள் அச்சப்படுத்து பவராகவே தொடர்ந்து சித்திரிக்கப்பட்டார்.  முத்தமிட்டால் கர்ப்பம் தரித்துவிடும் என்றார் ஒரு சிஸ்டர்.

கார்லா தன்னைக் குற்றவாளியாக நினைத்தே ஒவ்வொரு வினாடியையும் கழித்தாள். அச்ச உணர்வில் அமைதி இழந்தாள். எதற்காக ஈடன் தோட்டத்தையும் தோற்றுவித்து, அங்கு சாப்பிடக் கூடாத கனியையும் ஏன் இறைவன் படைத்தான்? அத்தனை கேள்வி கள் பிறந்தன; பதில்தான் கிடைக்கவில்லை. கேள்விகள் மட்டும் கூடிக் கொண்டிருந்தன.
அன்பையும் அமைதியையும் தேடி அவள் கன்னி மாடத்தில் சேர்ந்தாள். அங்கும் அமைதி கிட்டவில்லை. அந்த வாழ்க்கையில் ஒட்டவில்லை. அங்கிருந்து ஓடுகின்றாள். புகலிடம் தந்தவனை மணக்கின்றாள். ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகின்றாள். இந்த நிலையில் அவளுக்கு ஒருவனிடம் காதல் பிறக்கின்றது. கணவனைப் பிரிந்து காதலனுடன் வாழ்கின்றாள்; அந்த வாழ்வும் நிலைக்கவில்லை. ஒரு விபத்தில் காதலன் மரிக்கின்றன். மனமுடைந்து போகின்றாள் .
விபசாரத் தொழிலில் இருக்கும் ஓர் ஏஜண்டிடம் வேலைக்குச் சேர்கின்றாள். நாளடைவில் அவளும் அத்தொழிலில் இறங்கி விடு கின்றாள். அதன்பின் அவள் வாழ்க்கையில் மாறுதல் இல்லை. வயதாகும் வரை அத்தொழிலில் இருந்து பின்னர் தன் மகள் குடும் பத்துடன் தங்கி இருக்கும் ஊருக்கே வந்து வாழத் தொடங்குகின்றாள்.
எச்சூழ்நிலையிலும் அவள் மனம் மட்டும் கேள்விகள் கேட்பதை நிறுத்தவில்லை. அவள் உணர்வுகளை அவள் சொல்வதிலிருந்து பார்ப்போம் . அவள் விரும்பிய அன்பு அவளுக்குக் கிடைக்கவில்லை
“நான் இயல்பானவளாக மாறுவேனா? என்ன முயன்றும் என் உணர்வுகளை மூளையிலிருந்து விடுவிக்க முடியவில்லை. அது எலாஸ்டிக் போன்று திரும்பத் திரும்ப வந்து ஆட்டிப் படைக்கின்றது.”
ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுக்க அறிவுரைகள் கிடைக்கின்றன.
அவளும் மனத்தைத் திருப்ப நினைக்கின்றாள். ஆனால் மனமோ
அவள் கட்டுப்பாட்டில் இல்லை; தன்னை ஏதோ ஒரு தீய சக்தி இப்படி இழுத்து வந்ததாக நினைக்கின்றாள். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பு அனுபவங்களின் தாக்கம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. அவள் பயணத்தில் இறைவனின் எண்ணத்தையும் உடன் சுமந்தாள். உள்ளுக்குள் இருக்கும் சின்னப் பெண் எழுந்து அவளுக்கு ஆறுதல் கூறுகின்றாள்.இந்த மனப் போராட்டத்தில் காலம் ஓடிவிடு கின்றது. ஆனால் எப்படியோ பக்குவம் வந்துவிடுகின்றது. எழுத ஆரம் பிக்கின்றாள்.
ஜெயகாந்தனின் ராசாத்திக்கு இத்தகைய ஆராய்ச்சிகள் கிடையா. ஒரு பிடி சோறு வேண்டும். வேலை கிடைத்த நேரம் கல்லைச் சுமந்தாள் .
அது கிடைக்காத போது மனிதனை நாடினாள். அவள் ஒரு குடிசை
வியாபாரி. தத்துவம் அவள் நினைவில் தோன்றாது. அது ராசாத்திக்கு வியாபாரம். கிரிஜாவின் நிலை வேறு. கொஞ்சம் படித்தவள். செங்கல் வீட்டில் குடியிருக்கின்றாள். அவளுக்குத் தேவையான பொழுது மட்டும் போதும். அவள் மனம் அவளுக்குக் கட்டுப்பட்டது. சிந்திக்க முடிகின்றது; சிந்தனைச் சிதறல்கள் பார்க்க முடிகின்றது .

கார்லாவின் வாழ்க்கை வித்தியாசமானது. சின்ன வயதில் பெற்றவனே கெடுத்து அவள் மனத்தைக் குதறிவிட்டான். அரவணைக்க வேண்டிய அம்மாவோ அவள் கணவனே உலகம் என்று இருந்து விடுகின்றாள்.  ஒதுங்கிய கன்னி மாடமும் உதவவில்லை. எனவே அவள் தன் உணர்வுகளுக்கு இடமளித்து ஓட ஆரம்பித்தாள். ஆசிரியையின் மகள்; ஆசிரமத்தில் படித்தவள். கொஞ்ச நாட்கள் துறவி
வேஷங்கட்டியவள். அதனால் மனம் அலைபாய்கின்றது. அவள் எழுத்துக்களில் அவளைக் காண முயல்வோம். உள்ளமும் ஆத்மாவும் வேறானவை. அவற்றின் அதிர்ச்சி அலைகள் வெவ்வேறான‌வை. உள்ளத்தின் கட்டமைப்புகள் அவள் வாழ்க்கைப் போக்கில் நேரிய முறையில் பேணப்பட வில்லை. இந்த உணர்ச்சி களின் ஈடுபாட்டில் திருப்திப்படும் ஆசையை அவள் தவிர்த்தால், கடவுளோடு அவள் ஐக்கியமாக முடியும்.

ஷேக்ஸ்பியர் சொன்னது நினைவிற்கு வருகின்றது .
“வாழ்வில் தனிமை உணர்ச்சியின்றி எப்போதும் எதுவும் நல்லதும் அல்ல, தீயதும் அல்ல. சிந்தனைதான் அப்படி எண்ண வைக்கிறது” என்று சொல்கிறார் .
காலம் ஓடுகின்றது
"உண்மையை நீ அறிந்து கொள்ளும் போது உனக்கு விடுவிப்புக் கிடைக்கிறது." - ஏசு கிறிஸ்து.
முதுமையில் இந்த வலையினின்றும் விடுபட்டு மகள் தன் குழந்தைகளுடன் வசிக்கும் இடம் புறப்பட்டு விடுகின்றாள். அப்பொழுது அவளிடம் எந்தக் குற்ற உணர்ச்சியும் கிடையாது; உணர்ச்சிகளை வென்றாள். மெய்யான பாடத்தைக் கற்றுக் கொண்டாள் அவள்.
சுயத்தன்மையை ஏற்றுக் கொள்வது (நேர்மைப் பண்பே தீயவற்றை முற்றிலும் நீக்க வல்லது). கடவுளின் (படைப்புப்) பெண்ணைக் காண‌‌ அவள் கடவுளின் அழைப்புப் பெண்ணை நோக்கினாள்.
அவள் வாழ்க்கை வண்டி, நிலைக்கு வந்து அமைதியாக நின்றுவிட்டது

இப்பொழுது எழுதுவதில் இன்பம் காண்கின்றாள்.
ஒரே செயல். அதற்கு எத்தனை கோணங்கள்!
குடிசை வாழ் பாலியல் தொழில் பெண்களைச் சந்தித்திருக்கின்றேன். பம்பாய் சிவப்புவிளக்கு ஏரியாப் பெண்களைச் சந்தித்துப் பேசி இருக் கின்றேன். தொழில் செய்யும் பொழுது சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொண்டு தண்டனை அனுபவிக்க அவர்கள் வைக்கபபட்டிருக்கும் சிறைகளுக்குப் போய் பேசி இருக்கின்றேன். உளவியல் ரீதியாக அவர்கள் உணர்வுகளை, அவர்கள் வாழ்க்கையினைக் கண்டேன். அவர்களை எப்படி வழி நடத்துவது?
1990 ல் தமிழக அரசு பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து ஆயிரக்
கணக்கான பெண்களை விடுவித்து மறுவாழ்வு கொடுக்க முயன்றது. எத்தனை பிரச்சனைகள்! எத்தனை சிக்கல்கள்! விமர்சனம் எளிதாகச் செய்துவிடலாம். பாலியல் பிரச்சனை உலகில் எங்குமே அழியாமல் இருக்கின்றது.
அப்பப்பா , இந்த மனம் மனிதனைப் படுத்தும் பாடு!
கார்லா கதை சொன்னதற்கு முக்கியக் காரணம் ஒன்றுண்டு. அதனைக் கூறியாக வேண்டும். ஓய்வுக்கு ஒதுங்கிய நிலையிலும் எழுபது வயதான காலத்திலும் அவளைச் சில வாடிக்கைக்காரர்கள் வந்து பார்ப்பதும் சில நாட்கள் தங்கிச் செல்வது பற்றியும் எழுதியிருக் கின்றாள்.
அப்பொழுது அவள் ஆண்மனத்தைப் பற்றி கூறுகின்றாள். அவளைத் தேடி வருகின்றவர்கள் உடல் சுகத்தை நாடவில்லை; மனத்திற்கு இதம் தேடி வந்திருக்கின்றார்கள். அந்த நம்பிக்கை எப்பொழுது உதயமானது ? உடலுறவுக் காலங்களில் உள்ளம் எங்கே, எப்படி இயங்கு கின்றது? சில பெண்களிடம் இருக்கும் அந்த அலை வரிசையை ஆண் புரிந்து கொண்டு விட்டால் அவளையே எப்பொழுதும் ஆண்மனம் நாடுகின்றது. சரியா தப்பா, எப்படி என்ற வாக்குவாதத்தில் இப்பொழுது இறங்க விரும்பவில்லை.

கார்லாவின் கதையின் முடிவில் ஆண்மனத்தை ஓரளவு தொட்டுக் காண்பிக்கின்றாள்.
ஜெயகாந்தன் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. கூறவும் மாட்டார்.
கார்லா ஆண் மனத்தை, குணத்தை படம்பிடித்துக் காட்டுகின்றாள்; அவளே கதையின் நாயகி. அவளே கதையின் ஆசிரியை. அவளால் முடியும்.
மனம் விட்டுப் பேச ஒரு தோழமை வேண்டும். ஏன் ஆணைத் தேடிப்போகக் கூடாதா? பெண்மையுடன் கூடிய தோழமை வேண்டியிருக்கின்றது. பெண் என்ன செய்வாள்? அவளுக்கு ஆறுதல் வேண்டாமா? தாய்மையின் சுகம் ருசித்தவள். அது அவளுக்குத்
தெம்பு கொடுக்கின்றது. ஏற்கனவே மூளைச் சலவை செய்யப் பட்டவள்.
குடும்பத்துடன் கட்டிப் போடப்பட்டவள். அது அவளுக்குப் பழகிப்
போய்விட்டது. இது இந்தக் காலத்துக்குப் பொருந்துமா ? சொல்ல முடியாது. வீட்டுப் பறவைக்கு இப்பொழுது சுதந்திரம் கிடைத்துவிட்டது. அவளும் ஆறுதலைத் தேடி வெளியில் செல்லலாம். அத்தகைய கதைகளும் வரும்; வர ஆரம்பித்துவிட்டன.
நல்ல குடும்பத்தில் பிறந்தவள், வசதியானவள் ஏன் விலைமாதாக மாறினாள்? அவள் உள்ளுணர்வு மட்டும் காரணமா? அந்த உணர்வைத் தூண்டி , அவளை அந்த முடிவிற்கு ஓட்டியது எது?
படித்த தாய். அதுவும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியையின் மகள். பல சகோதர சகோதரிகள். கிறிஸ்தவப் பள்ளி, அதுவும் கன்னியா ஸ்த்ரீகள் ஆசிரியைகள். கன்னி மாடத்தில் துறவியாகவும் ஒண்டு கின்றாள். ஏன் இந்தத் தொழிலில் தள்ளப் பட்டாள் ? அவள் எழுத்தைப் பார்த்தால் முட்டாள் பெண்ணாகத் தெரியவில்லை. பெற்ற தகப்பன் ஆரம்பித்து அவள் போன இடங்களில் எல்லாம் சொல்லாலும் காட்சிகளாலும் அவள் அச்சுறுத்தப் பட்டாள்.  சூழ்நிலைத் தாக்குதலில் தடம் புரண்டு போய்விட்டாள்

சில நேரங்களில் சில மனிதர்களில் கங்கா முதலில் அப்பாவிப் பெண்; ஆனால் பின்னால் படித்து உயர் நிலைக்கு வந்துவிடுகின்றாள். அந்தஸ்துள்ள உத்தியோகம். அப்படியிருந்தும் கெடுத்தவனை ஏன் தேடுகின்றாள்? அவனுடன் பழகுவதால் வாழ்வு கிடைக்காது என்று தெரிந்தும் பழகுகின்றாள் ஏன்?
அடுத்து நாம் கங்காவின் கதையை அலசுவோம்.


பகுதி 20


கங்கா அக்கினிப் பிரவேசத்தில் குளித்து எழுந்தவள்; சில நேரங்களில் சில மனிதர்களால் பாதிக்கப்பட்டவள்; பாதையில் வந்த கார் சவாரி யால் வாழ்வைப் பறி கொடுத்தவள். அவளைக் கொஞ்சம் பார்க்கலாமே . நடந்த சம்பவத்தை கங்கா வெறுக்கவில்லை, அவன் கொடுத்த சுயிங்கத்தைக் கூடத் துப்பவில்லை என்று கதையை ஆய்வு செய்தவர்கள் நுணுக்கமாக அலசி இருக்கின்றார்கள். அவள் ரெண்டுங் கெட்டான் நிலைக்கு எத்தனை விமர்சனங்கள்!


அக்கினிப் பிரவேசம் சிறுகதையின் நீட்சிதான் சில நேரங்களில் சில மனிதர்கள். எழுத்துலகில் இத்தகைய அமைப்பு புதிதன்று; ஆங்கிலத்தில் நிறையவே உண்டு. தமிழில் கொஞ்சம் வித்தியாசமானது . கல்கியின் பார்த்திபன் கனவிலிருந்து பூத்தவை சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும். பார்த்திபனின் கனவிலே பொன்னியின் புதல்வர் தம்மைப் புதைத்து விட்டார்; தம் மண்ணின் கதையைத் தமிழனின் பொற்காலமாகக் காட்டி மகிழ்ந்தார்.


ராஜ ராஜன் ஒரு சிறந்த மன்னன் என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் கிடையாது; ஆனால் அடுப்பங் கரை அம்மணிகள் கூட வரலாற்றை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் கல்கி.சிற்பக் கூடத்தில் சிலைகளோடு சிலையாகி, அந்த மன்னனின் மனிதக் காதலுக்கு அப்பொழுதே வித்திட்டு சிவகாமியின் சபதம் பிறக்கச் செய்தார்.


அக்கினிப் பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்களாகிப் பின்னர் கங்கா எங்கே போகின்றாள் என்று கங்காவுடன் பயணம் செய்தவர் ஜெயகாந்தன். அந்த அளவு கங்கா பாத்திரம் அவரை ஆட்கொண் டிருந்தது.


வீதியில் நடந்தது ஒரு விபத்து. உடன் பிறந்தவன் அவளைக் கீழ்த் தரமாகப் பேசி விரட்டுகின்றான். “சொல்” என்பது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஓர் ஊர்தி. மனிதன் அதனை எப்படியெல்லாம் கையாளு கின்றான்! கார்லாவின் அப்பால் அந்தச் சின்னஞ் சிறு பெண்ணின் மனம் காயப்படுகின்றது. வழி நடத்த வேண்டிய கன்னிமார்களும் காயத்தைப் புண்ணாக்குகின்றார்கள். அந்தப் புண் புரையோடவும் புத்தியின் தெளிவு பாதிக்கப்பட்டு விடுகின்றது.


துறவறம் போயும் அவள் உணர்வுகள் அவளைத் துரத்துகின்றன. அன்பு காட்டும் கணவன் கிடைத்தும் நல்ல வாழ்க்கையில் மனம் ஒட்ட வில்லை. அந்த அளவு சொற்களாலும் காட்சிகளாலும் சுழற்றப்பட்டு, சமுதாயத்தால் வெறுக்கப்படும் ஒரு குழியில் விழுகின்றாள். மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நான்கு நிலையிலும் அவள் அமைதி காண முடியாமல் அச்சத்தின் பிடியில் சிக்கியதில் அவள் வாழ்க்கை சிதை கின்றது.


கங்காவுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்றார் அவள் மாமன். அந்த மாமனோ சபல புத்திக்காரன். அவன் பார்வையால் அவளை நிர்வாணப் படுத்தி ரசிக்கும் ஒரு கிழவன். அவன் தொடலிலும் தடவலிலும் உடல் நெளிந்து மனம் குமைந்து வாழ்ந்து எப்படியோ படித்து முடிக்கின்றாள். உரம் வாய்ந்த பெண். அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடிந்ததே! அவளுக்கு நல்லதொரு வேலையும் கிடைத்துப் பெரிய பதவியிலும் அமர்கின்றாள்.


ஒரு நிர்வாகிக்குத் தெளிவும், உறுதிப்பாடும் தேவை. குழப்ப மன நிலையில் உள்ளவர்களால் சீரிய முறையில் நிர்வாகம் செய்தல் இயலாது. நான் ஒரு நிர்வாகியாக இருந்தவள்.


கங்கா எப்போது, எப்படி முட்டாளானாள்? பிரபு மணமாகி, தன் குடும் பத்துடன் வாழ்ந்து வருகின்றான். அவனுடன் பழக்கம் ஏற்பட்டால் பாசம் வளரும்; ஆனால் வாழ்வு கிடைக்காது. இப்பொழுது வெறும் வடு மட்டும் இருக்கின்றது. ஆனால் பிரிவும் ஏமாற்றங்களும் ஏற்படும் பொழுது ஆழமான புண் ஏற்படுமே! இது தெரியாத முட்டாள் பெண்ணா கங்கா? துன்பத்தை விலை கொடுத்து வாங்குவார்களா? கங்கா அந்த எல்லைக்கு எப்படித் தள்ளப்பட்டாள்? சபல மாமாவின் அசிங்கப் பார்வையும், அடிக்கடி அவர் தொடல், தடவல்களும் தாங்கிய காலத்திலும் மனம் படிப்பில் ஒன்றி இருந்தது.

பஸ் பயணத்தில் வக்கிரமனம் படைத்த ஆண்களின் சேட்டைகளில் அவள் படும் அருவருப்பும், உடன் பிறந்த அண்ணனையும் அந்த வரிசை யில் சேர்த்து
நினைக்கும் கங்கா, சபல மாமாவின் செய்கைகளால் உடலில் பூரான் ஊறும் உணர்வுகளோடு அவ்வீட்டில் வாழ்கின்றாள். மனம் தளராது படித்து முடிக்கின்றாள். அப்படிப்பட்டவள் ஏன் தோல்வி நோக்கிப்
போகின்றாள் ?

’கரைப்பார் கரைத்தால் கல்லும் தேயும்’ மனித மனமும் அத்தகையதே! சபல மாமாவின் கொடிய நாக்கு அவளைச் சீண்டுகின்றது ; சொற்கள் கத்தியை விடக் கூர்மையானவை. “உன்னைக் கெடுத்தவனைத் தேடிக் கண்டு பிடி” என்ற எகத்தாளமான சொற்கள் அவளை விரட்டுகின்றன. அவள் தேடலில் கெடுத்தவ னையும் கண்டு பிடித்து விடுகின்றாள். அப்புறம் என்ன செய்ய? அதற்கும் மாமனின் சீண்டலும் குத்தலும் சொற்களாக வந்து அவளைத் துரத்துகின்றது. ” நீ அவனுக்குப் பொண்டாட்டியாக முடியுமா? கான்கு பைனாகத்தான் இருக்க முடியும.” கெட்டிக்கார கங்காவை அவர் சொற்களால் கொன்று விடுகின்றார்.

பிரபுவுடன் பழகுகின்றாள். அலுவலகத்தில் “மை மேன்” என்று கூறி மகிழ்கின்றாள். அவன் பிரிய முடிவு செய்த பொழுது வலுவில் அவள் தன்னையே கொடுக்கத் தயாராகி விடுகின்றாள். தடுமாற்றம். பிரபுவோ அவளை நெருங்காமலேயே பிரிந்து சென்று விடுகின் றான். அவன் குடித்து வைத்துச் சென்ற கப் முன்னால் இருக்கின்றது. “கல்ப்” என்ற ஒற்றைச் சொல்லில் மலைத்து நின்று விடுகின்றாள்.


மனித பலஹீனங்களை மறுக்கவில்லை. கெடுத்த வனைத் தேடிப் போவதும், தெரிந்தும் ஏமாறுவதும் , கங்காவின் பாத்திரப் படைப்பை என்னால் முழுமை யாக ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. அந்தக் காலம் என்று மிகவும் பின் செல்லக் கூடாது. 56ல் நான் சமுதாயப் பணிக்கு வந்து விட்டேன்; ஆனால் முற்றிலும் ஒதுக்கவும் முடியவில்லை.


என் குடும்பத்திலேயே ஓர் அவலம் நடந்தது
அவளுக்கு 17 வயது. தந்தை கிடையாது. தாயோ மாமன் வீட்டிற்குச் சென்று விட்டாள். இவள் தன் சித்தியின் வீட்டில் தங்கி இருந்தாள். அப்பொழுது ஒருவன் அவளுக்குக் காதல் கடிதம் எழுதிவிட்டான். கோபக்கார சித்தப்பா அவளை அடித்திருக்கின்றார். அந்தப் பெண் மனமுடைந்து கிணற்றில் விழுந்துவிட்டாள். உடனே அவளைத் தூக்கி காப்பாற்றி இருக்கின்றார்கள். ஊரார் முன் கேவலப் படுத்திவிட்டாள் என்று இனிமேல் வைத்துக் கொள்ள முடியாது என்று அவளை என் வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டுச் சென்று விட்டார்கள்..


அவளை அதற்கு முன் நான் பார்த்ததே கிடையாது. 18 வயது முடியாத நிலையிலிருந்த அவளை வேறு ஒரு விதிப்படி ஒரு வேலையில் அமர்த்தி விட்டேன். இது நடந்தது 63ல். சோதனைக் காலம் முடிந்து, திருமண மாகி இப்பொழுது பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றாள்.


காலம் மாறிக் கொண்டே இருக்கின்றது. கங்கா நன்றாகப் படித்து, உயர் பதவியிலும் அமர்ந்த பின்னரும் தன் மன உறுதியை இழந்தது என்பது என் மனத்திற்குப் பொருந்தவில்லை.


இந்தக் காலத்துப் பெண்கள் வேறு வழியில் வாழ்க்கையைத் தேடிக் கொள்வார்கள். அவள் படிப்பிற் கும் பதவிக்கும் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்க முடியும். கதையின் உரையாடல்கள் சக்தி வாய்ந்தவை. இப்படியும் மனிதர்கள் என்று மனத்தைச் சமாதானம் செய்து கொள்ளலாம். சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படியும் இருக்கலாம்!


ஜெயகாந்தனுக்கு கங்காவின் மீது ஓர் ஈடுபாடு. அக்கினிப் பிரவேசம் விரிந்து, சில நேரங்களில் சில மனிதர்களைப் பார்த்து கங்கா எங்கே போகின்றாள் என்று தொடர்ந்தார். ஆனால் மூன்றவதில் அத்தனை சுவாரஸ்யம் இருக்க வில்லை .

சொற்கள்

ஜெயகாந்தனின் சொற்கள் சுடுகின்றன. அவருடைய வேகத்தில் பாத்திரங்களை வைத்து பொம்மலாட்டம் ஆடுகின்றார் .அழிக்க முடியும் சக்தி வாய்ந்த சொற்களால் ஆக்கவும் முடியும்.
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு

மனிதன் நா காப்பதில்லை.

இரு சம்பவங்களைக் கூற விரும்புகின்றேன். அமெரிக்காவிற்கு முதன் முறை சென்ற பொழுது நடந்த ஒரு சம்பவம் –
மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மார்ஷல் என்ற ஒரு சிறிய இடம். அங்கு என் மகன் வேலை பார்த்து வந்தான். அவர்கள் குடியிருந்த இடம் அடுக்கு கட்டடத்தில் ஒரு பகுதி. அதே கட்டடத்தில் அலீசியா என்ற ஓர் அமெரிக்கப் பெண் என் மருமகளுக்கு சிநேகிதியானாள். அவள் கணவர் பிராட் ஒரு பத்திரிகை நிருபர். எங்கு சென்றாலும் நிருபர்களின் சிநேகம் எனக்குக் கிடைத்துவிடும். அவர்களுக்கு சேய்ரா என்று இரண்டு வயது பெண் குழந்தை. அலீசியா ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தாள். ப்ராட் மாலை நேரத்தில் தன் மகளுடன் வீட்டிற்கு முன் இருக்கும் புல் வெளிக்கு வருவான். குழந்தை அங்கே விளையாடிக் கொண்டி ருக்கும். நாங்கள் இருவரும் அங்கே அமர்ந்து கொண்டு உலகச் செய்திகளை அலசுவோம் .

திடீரென்று ஒரு நாள் என் மருமகள் கவலையுடன் அலீசியா தம்பதிகள் விவாகரத்துச் செய்து கொள்ள இருப்பதாகக் கூறினாள். இருவரும் நல்லவர்கள். எங்கே இந்த பிரச்சனை முளைத்தது? காதலும் திடீரென்று வரும்; கல்யாண முறிவும் அப்படியே.

அன்று மாலை பிராடுடன் பேசும் பொழுது எங்கள் இலக்கியம் என்று ஆரம்பித்து சிலப்பதிகாரம் கதை சொன்னேன். கண்ணகியின் வாழ்க்கை அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. வேறொரு பெண்ணுடன் சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துவிட்டுத் திரும்பிய கணவரை ஏன் ஏற்றுக் கொண்டாள் என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.

தமிழர் வாழ்வில் காதல், கற்பு பற்றி விளக்கினேன். பார்வைகளின் சங்கமமோ, ஈர்ப்போ காதலாகி விடாது என்றேன். அது காதலின் தொடக்கம். ஆழமான காதல் கொண்டவர்கள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வார்கள் என்றேன்.

சின்னப் பிரச்சனைக்கும் பிரியும் தம்பதியர் பெரிதாக எந்த வாழ்க் கையைப் பெற்றுவிட முடியும்? அப்படி ஓடுகின்றவர்களும் ஓரிடத்தில் நின்று விடுகின்றார்கள். அப்பொழுது சமரசம் செய்து கொள்ள முடிகின் றவர்கள் ஆரம்ப வாழ்க்கையிலேயே ஒத்துப் போய் வாழ்ந்தால் அவர்க ளுக்குப் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு சீராக இருக்கும். இந்திய மண்ணில் தம்பதிகளுக்குள் பிணக்கு இருப்பினும் ஒரு பாசப் பிணைப் பில் கட்டுண்டு வாழ்வார்கள். நான் சொல்லச் சொல்ல பிராடு என்னைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந் திருந்தான்.

காதலுக்குப் புதுப் புது விளக்கங்கள் கூறினேன். சொற்களை வைத்து  விளையாடினேன். காதல் அற்புதமானது. அதைப் பேணிக் காப்பதில் தான் அதன் வலிமை வளரும். உதறிக் கொண்டிருந்தால் காதல் நைந்து விடும். பாதுகாக்கப்படும் காதலின் சுகமே தனி. அப்பப்பா, என்னவெல்லாமோ பேசினேன். என் இலக்கு அவர்கள் பிரியக் கூடாது. அவ்வளவுதான். இருட்டவும் இருவரும் எழுந்து சென்றோம்.
இரவு ஏழு மணிக்கு அலீசியாவும் பிராடும் வந்தார்கள். அவளிடம் ஏதோ ஒரு படப்படப்பு இருந்தது. என்னிடம் கண்ணகி கதை கேட்டாள்.

அத்தனை ஆண்டுகள் கணவன் வரவில்லையென்றால் டைவர்ஸ் செய்திருக்கலாமே என்றாள்.
கண்ணகி கோவலனை டைவர்ஸ் செய்வதுபோல் கற்பனையில் மகிழ்ந்தேன்; பத்தினிக்குக் காப்பியம் எழுதிய அடிகளார் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திலகவதியார் கதை சொன்னேன். திருமணம் மட்டும் நிச்சயிக்கப் பட்டிருந்தது. போருக்குச் சென்ற இடத்தில் மணமகன் மாண்டு போனான். மணமாகாவிட்டாலும் மணம் பேசி முடித்தவனை எண்ணித் திலகவதி தனித்தே வாழ்ந்த கதை கூறவும் அவர்களுக்குப் பிரமிப்பு வந்தது. காதல் என்பது உதட்டளவில் ஏற்படுவதன்று. ஒருவரையொருவர் உண்மையாகக் காதலித்திருந்தால் அவர்களால் பிரிய முடியாது என்றேன். ஏதேதோ சொன்னேன். எனக்கு இலட்சியம் எப்படியாவது அவர்கள் பிரிந்துவிடாமல் இருக்க ஒரு முயற்சி செய்ய வேண்டும்.


மவுனமாக எழுந்து சென்றனர். மறு நாள் மீண்டும் வந்தனர். முகத்தில் ஒரு தெளிவு. அவர்கள் விவாகரத்துச் செய்து கொள்ளப் போவதில்லை என்ற தீர்மானத்தைக் கூறினார்கள். இந்தத் தீர்மானம் நிரந்தரமாக இருக்கும் என்று நான் நினைக்க வில்லை. முடிவு ஒத்தி போடப்பட்டது; அவ்வளவுதான். இன்னும் கொஞ்ச நாட்கள் குழந்தைக்கு அப்பா, அம்மா சேர்ந்து இருப்பார்கள். இங்கே சொற்களின் விளையாட்டு ஆக்க பூர்வமான ஒரு காரியத்திற்கு உதவியது.


மூன்று வருடங்களுக்கு முன் இந்தியா வந்திருந்த பொழுது ஒரு சம்பவம் நடந்தது. கணினி அனுபவம் கிடைத்த பிறகு எனக்கு நிறையப் பிள்ளைகள் கிடைத்து விட்டார்கள். அவர்களில் ஒருவன் நான் சென்னைக்குச் செல்லவும் தொலை பேசியில் கூப்பிட்டான்.

“அம்மா, உங்களிடம் ஒரு அபிப்பிராயம் கேட்கவேண்டும்.
லிவ்விங் டுகெதெர் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ? “
கேள்வி கேட்டவனுக்கு வயது இருபத்து மூன்று; பதில் கூற வேண்டியவரின் வயது எழுபத்திரண்டு.
இது கிண்டல் கேள்வியா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் ஒரு கிழவி எப்படி பதில் சொல்லுவாள்?
” பாவி, நீ உருப்படுவியா? இந்த வயசுக்கு இப்படி ஒரு புத்தியா? “
நான் இதை எப்படி அணுகினேன் என்பதை அடுத்துக் கூறுகின்றேன் .

சொற்களின் அருமை தெரிந்து நல்லபடியாகப் பேசலாமே!


பகுதி 21

“ லிவ்விங் டுகெதெர் “ பற்றி என்ன நினைக்கிறீங்க?

இந்தக் கேள்விக்கு நான் சரியான பதில் கொடுக்க வேண்டும்.
மேல் நாடுகளில் இது வேகமாகப் பரவி வரும் கலாசாரம். அங்கே கல்யாணம் செய்துக்காம செக்ஸ் வச்சுக்கறது, பிள்ளை பெறுவது சகஜமா போச்சு. அப்படிப் பிறக்கிற குழந்தைங்கள ஓர் அவமானச் சின்னமா பாக்குறதில்லே. அவளை யாரோ ஒருவன் கல்யாணம் செய்துக்கற போதும் அந்தப் பிள்ளை யையும் ஏத்துக்கறான். இங்கே என்ன நடக்கும்? அப்படிச் சேர்ந்து வாழ்ந்தா எப்படி சொல்லுவாங்க ?
“ஒரு பெண்ணை வச்சுக்கிட்டிருக்கான் “  அடுத்து அவளை “வப்பாட்டி”ன்னும் சொல்லுவாங்க. கவுரவமாச் சொல்ல மாட்டங்க. குழந்தை பிறந்துச்சோ அவ்வளவுதான், கேலி பேசியே சாக அடிப்பாங்க. ஆரம்பத்திலே தைரியமா இருக்கறவனும் மானம் போச்சுன்னு அவளையும் குழந்தையையும் வெறுக்க ஆரம்பிச் சுடுவான். முதல்லே தெரியாது; வீராப்பு பேசும் வாய் அப்போ அடைச் சுடும். நம்ம நாட்டுக்கு இது அவ்வளவு சரியில்லே. ஏதோ அங்கும் இங்கும் நடக்கறதை வச்சு முடிவுக்கு வரக்கூடாது.

தொலைபேசி சிறிது நேரம் மவுனமாக இருந்தது;

” அம்மா, உங்களைப் பார்க்க எப்போ வரலாம்? ”
அவன் என்னைப் பார்க்க வந்தான். கால்களில் விழுந்து நமஸ்காரமும் செய்தான். அவன் முகத்தில் வெட்கம் கலந்த ஒரு சிரிப்பு .

”அம்மா, வேறு யாராவது இருந்தா திட்டி இருப்பாங்க. நானும் கிழவின்னு பதிலுக்குச் சொல்லி இருப்பேன். பொறுமையாக நீங்க சொன்னது எனக்குப் பிடிச்சது. அது உண்மைதான்மா ”

நான் திட்டியிருந்தால் அவன் அது போன்ற வாழ்க்கையைத்தான் தேடியிருப்பான். தயங்கும் இளம் உள்ளங்களுக்குச் சொல்லும் விதத்தில் உண்மைகளைக் கூறினால் அவர்கள் சிந்திக்க முயல்வார்கள்.
எப்படி எனக்கு இந்தப் பக்குவம் வந்தது? படித்ததாலோ, பயிற்சிகள் பெற்றதாலோ வந்துவிடவில்லை. அனுப வங்களால் மெருகேற்றப்பட்ட மனம். சில சமயம் சிலரின் சந்திப்பு களும் நம்மிடையே மாற்றத்தை வரவழைத்துவிடும். திட்டம் ஏதுமின்றி நடக்கும் நிகழ்வுகளில் மனித மனம் புதைந்து உருமாறி விடுவது முண்டு.

மனத்தில் புகைச்சல் ஏற்பட்டுவிட்டால் நான் ஓடி ஒதுங்கும் இடம்

ஆழ்வார்ப்பேட்டை குடில். அங்கே நான் செலவழிக்கும் நிமிடங்கள் பதினைந்து முதல் முப்பது நிமிடங்களாகத்தான் இருக்கும். எனக்கு நேரம் கிடைப்பதும் அரிது. அதே நேரத்தில் மனத்தைச் சீர் செய்து கொள்ள நான் சந்திப்பவர் ஜெயகாந்தன். எதற்காக வருகின்றேன் என்று சொல்லுவதும் கிடையாது. அவரும் காரணம் கேட்கமாட்டார். எங்களி டையே ஒரு புரிதல் உண்டு; அவ்வளவுதான். பேசி முடிந்ததும் அவர் உதிர்க்கும் சில சொற்களில் ஏதோ உண்மை கண்டு விட்டதைப் போல் திரும்பிவிடுவேன். இது எப்படி?

ஜெயகாந்தனின் குருபீடம் அருமையான அர்த்தமுள்ள சிறுகதை. ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே நம்மை ஆட்டிப் படைக்கின்றது.

ஒரு பிச்சைக்காரன், சோம்பேறி, சுயமரியாதை இல்லாதவன்; நாற்றமடித்து வீதிகளில் அலைபவன். ஒரு குழந்தை சாப்பிடுவதைக் கூட நாயைப் போன்று பார்ப்பவன். குடித்து முடித்து வீசி எறியும் பீடி களைப் பொறுக்கிப் புகைப்பவன். சந்தைக்கு வரும் தாய், தன் குழந் தைக்குப் பால் கொடுக்கும் பொழுது வெறித் தனமாகப் பார்த்து ரசிப்பவன். ஆடையை விலக்கி அலங்கோலமாகப் படுத்துக் கொண்டு பார்ப்பவரைப் பயமுறுத்துபவன். சத்திரத்தில் ஒதுங்கிய ஒருத்தியிடம் சுகம் கண்ட பின் அவள் குஷ்டரோகி என்று தெரிந்தும் அலட்சியமாக நினைத்து, மீண்டும் தேடிப் போய் அவளைப் பயமுறுத்தி ஓடச் செய்தவன் .
இவன்தான் கதையின் நாயகன். இப்படிப்பட்ட ஒருவனை முன்னி றுத்திப் படிப்பவரையும் மிரள வைக்கின்றார் ஜெயகாந்தன்.

இங்கே அழகை வருணிக்கவில்லை. அருவருப்பைக் கொடுக்கும் ஒரு  மனிதனைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகின்றார். படிப்பவர் மனத்திலும் ஒரு வெறுப்பை ஊட்டிய பின்னர் கதையின் கருவிற்கு வருகின்றார். பிச்சைக்காரன் எதிரில் யாரோ ஒருவன் வந்து “சுவாமி “ என்று அழைக்கின்றான். இந்தக் காட்சியை ஜெயகாந்தன் மூலமாகப் பார்ப்பதே சிறந்தது.

புகையை விலக்கிக் கண்களைத் திறந்து பார்க்கின்றான் ; எதிரே ஒருவன் கைகளைக் கூப்பி உடல் முழுவதும் குறுகி, இவனை வணங்கி வழிபடுகிறமாதிரி நின்றிருந்தான். இவனுக்குச் சந்தேகமாகித் தனக்குப் பின்னால் ஏதேனும் சாமி சிலையோ, சித்திரமோ இந்தச் சுவரில் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்து நகர்ந்து உட்கார்ந்தான். இவனது இந்தச் செய்கையில் ஏதோ ஓர் அரிய பொருளைச் சங்கேதமாகப் புரிந்து கொண்டு, வந்தவன் மெய்சிலிர்த்து நெக்குருகி நின்றான். இவன் எதற்குத் தன்னை வந்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறான் பைத்தியமோ? என்று நினைத்து உள்சிரிப்புடன் “என்னாய்யா இங்கே வந்து கும்பிடறே? இது கோயிலு இல்லே - சத்திரம். என்னைச் சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா? நான் பிச்சைக்காரன்“ என்றான் திண்ணையில் இருந்தவன்.

“ஓ! கோயிலென்று எதுவும் இல்லை. எல்லாம் சத்திரங்களே! சாமியார்கள் என்று யாருமில்லை, எல்லாரும் பிச்சைக்காரர்களே!” என்று அவன் சொன்னதை உபதேச மொழிகள் மாதிரி இலக்கண அலங்காரத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லிப் புதிய புதிய அர்த்தங்கள் கண்டான் தெருவில் நின்றவன்.
தெருவில் நின்றவனைத் திண்ணையில் இருந்தவன் பைத்தியக்காரன் என்று நினைத்தான். வந்தவனோ மேலும் இவனை , “சுவாமி, என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் “ என்று வேறு கேட்டுக் கொண்டான் .

இவனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. இருப்பினும் அடக்கிக் கொண்டு வந்தவனை டீ வாங்கி வரச் சொல்லுகின்றான்;அவனிடம் காசு இருப்பதைப் பார்க்கவும் பீடியும் வாங்கி வரச் சொல்லுகின்றான்.
வந்தவன் முருகன் கோயிலில் மடப்பள்ளிக்குத் தண்ணீர் இறைத்துப் பணி புரிபவன். அவனுக்கு மூணு வேளைச் சாப்பாடும் நாலணவும் கிடைத்து வந்தது.

அவன் சொல்வதைக் கேட்போம் –
”எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு.இந்த வாழ்க்கைக்கு அர்த்த மில்லேன்னு தெரிஞ்சும் உடம்பைச் சுமந்துகிட்டுத் திரியற சுமையைத் தாங்க முடியல்லே. துனபத்துக்கெல்லாம் பற்றுதான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கு ஒருவிதப்பற்றும் இல்லே.ஆனாலும் நான் துன்பப்படறேன். எந்த வழியிலே மீட்சின்னு எனக்குத் தெரியலே. நேத்து என் கனவிலே நீங்க பிரசன்னமாகி “இந்தச் சத்திரந்தான் குருபீடம். அங்கே வா”ன்னு எனக்கு கட்டளை இட்டீங்க குருவே!  நீங்க இதெல்லாம் கேட்கறதனாலே சொல்றேன். நீங்க அறியாததா ? விடியற்காலையிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன். என் பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது.”

அப்போது குரு சொன்னான் “பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா - ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான். ஒரு கேள்விக்கு எம்மாம் பதில்” என்று ஏதோ தத்துவ விசாரம் செய்கிற மாதிரி பிதற்றினான். சீடன் அதைக் கேட்டு மகா ஞானவாசகம் மாதிரி வியந்தான் .


சீடன் அன்று முதல் தினமும் வர ஆரம்பித்தான். இருந்தவனுக்குச் சேவை செய்தான். இப்பொழு தெல்லாம் அவன் வீதியில் திரிவதில்லை. வந்தவன் குளிப்பாட்டி, உணவு படைத்துத் தனிமையில் விடாமல் உடன் இருந்தான். சூழ்நிலை மாறத் தொடங்கிவிட்டது.


அவன் பேசுகிற எல்லா வார்த்தைகளிலும் அவனே புதிதாகப் புரிந்து கொள்ளுகிற மாதிரி பலவிதமான அர்த்தங்கள் கண்டு இந்தச் சீடன் புளகாங்கிதம் அடைவதைச் சந்தைக்கு வருகிற சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சிலர் குருவை அடையாளம் கண்டு, இவன் யாரோ ஒரு சித்தன் என்று அப்பொழுதே நினைத்ததாகவும் அப்படிப்பட்டவர்கள் இப்படியெல் லாம் கந்தலுடுத்தி, அழுக்குச் சுமந்து, எச்சில் பொறுக்கித் திரிவார்கள் என்றும் தன்னைப் பற்றி இவனுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிவித்தார்கள். அதைத் தெரிந்து கொள்வதற்கே ஒருவருக்குப் பக்குவம் வேண்டுமென்றும் அந்தப் பக்குவம் இந்தச் சீடனுக்கு இருப்ப தாகவும் கூறிச் சீடனைப் புகழ்ந்தார்கள். அதில் சிலர் இப்படியெல்லாம் தெரியாமல் இந்த சித்த புருஷனைப் பேசியதற்காக இப்போது பயம டைந்து இவனிடம் மானசீகமாகவும், கீழே விழுந்து பணிந்தும் மன்னிப்பு வேண்டினார்கள். இவனுக்கு டீயும், பீடியும், பழங்களும் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தனர். பக்தர்கள் கூட்டம் பெருக ஆரம்பித் தது. இவனுடைய ஒவ்வொரு அசைவையும் ரசித்துப் பேசினர். இது வரை பாராமலிருந்ததைப் பாவமாகக் கருத ஆரம்பித்தனர்.


என்னடா உலகம்!
இதுதான் உலகம்!
யாருக்காவது காரணம் தெரியுமா?
இருந்தவனோ நின்றவனோ காரணங்களா?
யாரை யார் குறை கூறுவது?
அருள்வாக்கு நாயகர்களின் பெருக்கத்திற்கு யார் காரணம்?!
அவர்களைப் பேராசைக் குழிகளில் தள்ளுவதும் யார்?
யாரையும் மோசம் செய்ய இந்த நாடகம் நிகழவில்லை.இயல்பாக நடந்த ஒரு நிகழ்வு. அப்பொழுதும் இப்பொழுதும் வர்ணம் தீட்டுவது மனிதனே!


காட்சியிலிருந்து கதைக்குப் போவோம். கதாசிரியன் அல்லவா? கதை முடிக்க வேண்டுமே. தொடங்கியவன் முடிக்கட்டும்.

இவன் கனவிலே ஒரு குரல்
உனக்கு சிஷ்யனாக வந்திருக்கின்றானே அவன்தான் உண்மையில் குரு. சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கின்றான். அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்தி ருக்கின்றான். எந்த பீடத்தில் இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகின் றானோ அவன் குரு. கற்றுக் கொள்கின்றவன் சீடன். பரம சிவனின் மடிமீது உட்கார்ந்து கொண்டு ,முருகன் அவருக்குக் கற்றுத் தரவில்லையா? அங்கே சீடனின் மடியே குருபீடம், அவனை வணங்கு.


சிஷ்யன் போய் விட்டான்; தேடியும் காணவில்லை.
இவன் சுற்றித் திரிகின்றான். இப்பொழுது எல்லோரும் இவனை வணங்குகின்றனர். மரியாதை செலுத்துகின்றனர்.

பித்தன் இங்கே சித்தனாகிவிட்டான்!

எப்பேர்ப்பட்ட தத்துவத்தைக் கதையில் காட்டிவிட்டார்.
எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள்?
ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் வாழ்வில் இத்தகைய உபதேசங்கள் கிடைக்கின்றன; ஆனால் மனிதன் அசட்டை செய்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றான். கடவுளே நேரில் வந்தாலும் அவரைப் பகல் வேஷக்காரன் என்று உள்ளே தள்ளிவிடுவோம் அல்லது எள்ளி நகை யாடுவோம். நம் பாட்டுக்கு எவன் இசைந்து தாளம் போடுகின் றானோ அவனைத்தான் நாம் ஏற்றுக் கொள்வோம். நம்மை ஏமாற்றுபவரைக் கூடப் புரிந்து கொள்ள அக்கறையில்லை. ஏமாளியாய், பைத்தியக்காரராய் நடமாடிக் கொண்டிருக் கின்றோம்.


குருபீடம் மதிப்பு வாய்ந்தது. அது உண்மைக்கும் சக்திக்கும் உரிய இடம். இப்பொழுது போலித் தனத்திற்குரிய இடமாக ஆன்மிகத்திலிருந்து அரசியல் வரை பல தோற்றங்களில் எங்கும் வியாபித் திருக்கின்றது. மனிதனின் முக்கிய வியாபார கேந்திரமாகிவிட்டது. காலம்தான் மனிதனுக்குப் புத்தி புகட்ட வேண்டும். உணர்ந்து திருந்தினால் வாழ்வான்; அல்லது வீழ்வான்.


எனது தேடல் என் பிள்ளைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. ஒன்றா இரண்டா, மனத்தில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடித் திரிந்தேன். பலரைச் சந்தித்தேன். சிலரிடம் விடை கண்டேன். என் வாழ்க்கையில் புற்றீசல் போல் கேள்விகள் பிறந்து கொண்டே இருந்தன. எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் வியப்பைத் தரும் அளவில் அமைந்தன. தேடிப்போனதும் உண்டு. தானாக வந்ததும் உண்டு.


ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பிலேயே ஒரு சிந்தனைச் செல்வரைச் சந்தித்த மனநிறைவு ஏற்பட்டது. அன்று தொடங்கி இன்றுவரை, ஆமாம், அமெரிக்கா வந்த பிறகும் உள்ளம் குமுற ஆரம்பித்தால் அவருடன் பேசுவேன்.

சில நாட்களுக்கு முன் நடந்த உரையாடல்.
முதுமையும் நோயும் என்னை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டன. இத்தனை அனுபவங்கள் இருந்தும் மனக் குரங்கு அப்படி ஓர் ஆட்டம் போடுகின்றது. யாருக்கும் என் மீது பிரியம் இல்லை; அக்கறையில்லை என்ற நினைப்பு. எல்லோரும் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்ற குறை. என்னை என்னால் அடக்க முடியவில்லை. உடனே ஜெயகாந்தனுடன் தொடர்பு கொண்டு வழக்கம் போல் புலம்பினேன்.
” சீதாலட்சுமி, ஏன் மற்றவர் ஒதுக்கிவிட்டார்கள் என்று நினைக் கிறீர்கள்? நாம்தான் ஒதுங்கி இருக்கின்றோம். இப்படி நினையுங்கள். விருப்பம் நம் கையில் என்று நினைத்தால் இழப்பு என்று தோன்றாது ”
எப்பேர்ப்பட்ட உண்மை !

அடுத்த கேள்வி.
யாரையும் பார்க்க முடியவில்லை
குரலையாவது கேட்க முடிகின்றதல்லவா?
பொங்கி எழுந்த மனம் அடங்கியது. புன்னகையும் வந்தது.


ஜெயகாந்தன் இப்பொழுது எழுதுவதில்லை. முன்பு போல் கலந்துரை யாடல்கள் அதிகம் இல்லை. அவர் ஒதுங்கி வாழ்கின்றார். ஆனால் அவர் எழுத்து மற்றவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் அவரிடம் சொல்வளம் இருக்கின்றது. கூரான சிந்தனை இருக் கின்றது. ஒற்றைச் சொல் , மந்திரச் சொல் இன்னும் இருக்கின்றது. தோற்றத்தில் முதுமை இருக்கின்றதேயொழியச் சிந்தனையில் இன்னும் இளமையின் துள்ளல் மாறவில்லை.


எனக்கு இத்தகைய நட்புக் கிடைத்தது என் அதிருஷ்டம்.
சிறுகதை மன்னன் என்றால் அது ஜெயகாந்தனே.
அவரைப்பற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கின்றது.

பகுதி 22

என்னை ஈர்த்த இன்னொரு கதை !


நந்தவனத்தில் ஓர் ஆண்டி


சத்திரத்தில் இருந்த ஒரு பிச்சைக்காரனைக் காட்டி வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிய வைத்தார், இப்பொழுது இடுகாட்டிற்கே அழைத்துச் சென்று விடுகின்றார். மனிதன் இறுதியில் மண்ணோடுதானே கலந்து மறைகின்றான்.

ஜெயகாந்தனின் உலா , பட்டினங்களின் பங்களாக்களைச் சுற்றுவதை விடக் குப்பத்துக்கும், இது போன்ற இடங்களுக்கும் போவதில் ஒரு தனி ஆர்வம் காட்டுகிறது. பொதுவாக அவரிடம் ஒதுக்கப்பட்டவர்களிடத் திலும், ஒடுக்கப்பட்டவர்களிடத்திலும் தனி அக்கறையைக் காண்கின்றோம்.


இந்தக்கதை படித்தவுடன் ஏதோ ஒரு தாக்கம். அப்படியே அமர்ந்து விட்டேன். மனத்தை யாரோ பிசைவது போன்ற ஒரு அவஸ்தை.


கதைக்களன் ஓர் இடுகாடு.

என் முதுமை காரணமா? வெறுப்பும் சலிப்பும் என்னை ஆட்டிப் படைத்தன; பேசாமல் படுத்துவிட்டேன். அப்பொழுதும் மனம் சிந்தனை யிலிருந்து விலகவில்லை. கதையின் ஒவ்வொரு வரியும் என் நினைவில் வந்து மோதின.
ஏன் இப்படி எழுதுகின்றார்?
எப்படி இதனை இப்படியாகக் காணமுடிகின்றது?
ஜெயகாந்தனின் அக்கறை சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களையே சுற்றிவரும். சிக்கலான உணர்வுகளையும் கூட யதார்த்தமாகக் காண்பார். அவர் படைக்கும் பாத்திரங்களுடன் உறவு கொண்டு ஒன்றிவிடுவார். அவரைக் குறை சொன்னால் கூடப் பொறுத்துக் கொள்வார்; அவர் படைத்த பாத்திரங்களைக் குறைகூறப் பொறுக்க மாட்டார்.
சம்பவங்களைவிடத் தனி மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
உரையாடல்கள் அவரின் இதயக் குரல். பிச்சைக்காரனின் திண்ணை, தொழுதற்குரிய கோயில் இரண்டிலும் அவரால் தத்துவங்கள் காண முடியும். இடுகாட்டில் மனித மனத்தைச் சித்திரமாக வரைந்த ஓவியமே ”நந்தவனத்தில் ஓர் ஆண்டி”

தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோன்றும்; ஆனால்  அது ஓர் இடுகாடு. ஆண்டியின் உழைப்பில் அது ஒரு நந்தவனம் ; அவன் பெயர்தான் ஆண்டி; அவனுக்கு மனைவியும் உண்டு. மேற்கு மூலையில் பனை ஓலைகளால் வேய்ந்த ஒரு சிறு குடில் அவன் இல்லம். ஆண்டி ஒரு வெட்டியான்.அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக்  குழிவெட்டுவது அவன் தொழில். அதற்காக அவன் முனிசிபா லிட்டியிலிருந்து பெறும் கூலிப் பணம் ஏழு ரூபாய். அந்த வீடும் கொடுத்திருக்கின்ார்கள். அவனுக்கு சோகம் தெரியாது. குழிகள் வெட்டும் பொழுதும் கூடப் பாடிக்கொண்டே வேலை செய்வான். அவனைப் பற்றிக் கதாசிரியர் கூறுவதைப் பார்ப்போம்.


ஆண்டி வித்தியாசமானவன். மகிழ்ச்சி என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக் கொண்டே இருக்கும் அவனை ” ஒரு மாதிரி ” என்று நினைத்தார்கள்.

மாந்தரின் மனவோட்டத்தை குருபீடத்திலும், இடுகாட்டிலும் அவர் .

சுட்டிக் காட்டுவது யதார்த்தம்; ஆயினும் அது சிலருக்கு ஆத்திரம் கொடுத்து விடுகின்றது. ஜெயகாந்தனின் உரையாடல்களும், அவர் தீட்டும் காட்சிகளும் காட்டும் உள்ளுறை தத்துவங்களைச் சிலர் விமர்சிப்ப துண்டு. இறைவனையே விமர்சிப்பவர் நாம். ஜெயகாந்தன் சாதாரண மனிதர். எதைப்பற்றியும் கவலைப் படாமல் உள்ளத்தில் உணர்வதை முலாம் பூசாமல் எழுதுபவர். கதைக்குச் செல்வோம். ஆண்டி கடுமையான உழைப்பாளி. பாடிக் கொண்டே வேலை செய்வான் -


நந்தவனத்தில் ஒரு ஆண்டி. - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி -அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி


இந்தப்பாட்டிற்கு அவனுக்குப் பொருள் தெரியாது. எப்பொழுது இந்தப் பாட்டை யார் கற்றுக் கொடுத்தது என்பதெல்லாம் அவனுக்கு  இப்போது நினைவில்லை. ஆனாலும் எப்பொழுதும் அவன் இதனை உற்சாகத்துடன் பாடிக் கொண்டிருப்பான்.


நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக் கொண்டு முதன் முதலில் உச்சரித்தோம் என்று கூற முடியுமா? ஆனால், ஏதோ ஒரு விசேஷ வார்த்தையைக் குறிப்பாக எண்ணி னோமானால் நம்மில் எவ்வளவோ பேர் சொல்லிவிடுவோம். அந்த இடுகாட்டிற்கு வருவது குழந்தைகளின் பிரேதங்கள். குழி வெட்டு வது அவனுக்கு சிரமமில்லை. மற்ற நேரத்தில் அவன் உழைத்ததில் உருவானது அந்த நந்தவனம்.

பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள் துக்கத்துடன் வரும் பொழுது இவன் மட்டும் அதன் தாக்கம் எதுவுமின்றி மலர்ச்சியுடன் இருப்பான். எனவே மற்றவர்களுக்கு அவன் ஒரு மாதிரியானவன்தான்.
ஊராரின் புத்திர சோகம் அவனுக்குப் புரிந்ததே இல்லை. ரோஜாச் செடிக்குப் பதியன் போடுவது போலப் பாட்டுப் பாடிக் கொண்டே குழி பறிப்பான். அருகிலிருக்கும் அந்தப் பச்சிளங் குழந்தையின் பிரேதத்தைப் பார்த்தும், குழந்தையைப் பறிகொடுத்தவன் குமுறிக்கொண்டிருப்பதைப் பார்த்தும் இவன் பதறாமல் பாடிக் கொண்டிருப்பான்.சீ இவனும் மனிதனா என்று நினைத்து “இவன் ஒரு மாதிரி” என்று பேசிக் கொள்வர்.
ஒரு நாள் அவன் மனைவி முருகாயி சொன்ன செய்தி அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவள் சொன்ன கனவை அவன் புரிந்து கொண்டுவிட்டான். அவர்களிடையே புது ஜனனம் ஒன்று தோன்றப் போகின்றது. அவன் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் பொழுது தெருவில் போன ஒரு பண்டாரம் பாடிய பாட்டுதான் இது. அப்படியே அவன் மனத்தில் பதிந்துவிட்டது. அவனுக்கு அதன் பொருள் தெரியாது.


இருளன் மகனாய்ப் பிறந்தான். மகிழ்ச்சியில் திளைத்தான். தனது மதலையை மார்புறத்த தழுவிய ஆண்டியின் கரங்கள் ஊராரின் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழி பறித்தன. குழி பறித்து முடிந்த பின் நேரே தன் குடிசைக்கு ஓடுவான். தூளியில் தூங்கும் இருளனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான்; கூத்தாடுவான்.


எத்தனையோ பெற்றோரின் ஆனந்தக் கனவுகளுக்கெல்லாம் புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில் மரணம் என்ற மாயை மறந்து  ஜனனம் என்ற புதரில் மட்டும் லயித்துக் கொண்டிருந்த ஆண்டியின்
வாழ்விலும் ஓர் இழப்பு நேர்ந்தது.


காலம் போன ஒரு நாளில் எதிர்பாராமல், நினைவின் நப்பாசை கூட  அறுந்து போன காலமற்ற காலத்தில் வாராமல் வந்து அவதரித்து, ஆசை காட்டி விளையாடி கனவுகளை வளர்த்த இருளன் எதிர்பாராமல்
திடீரென்று இரண்டு நாள் கொள்ளையிலே வந்தது போலவே போய் விட்டான்.


வேப்ப மரத்தடியில் கட்டித் தொங்கும் வெறும் தூளியினருகே முழங்கால்களில் முகம் புதைத்து குந்தி இருக்கிறான் ஆண்டி.

எங்கோ வெறித்த விழிகள்...என்னென்னமோ காட்சிகள்...
எல்லாம் கண்டவை .. இனி காண முடியாதவை . வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும்........ தூளியிலிருந்து உறக்கம் கலைந்த பின்  தூளிக்கு வெளியே தலையை நீட்டி வெளியே தொங்க விட்டுக் கொண்டு கன்னங்குழியும் சிரிப்புடன் அப்பா என்ற அழைத்ததும்.  செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவனறியாமல் பின்னே வந்து திடீரென்று பாய்ந்து புறம்புல்லி உடலைச் சிலிர்க்க வைத்து மகிழ்வித்ததும் ..... எதிரிலிருக்கும் தட்டத்து சோற்றில் வேகமாய்த் தவழ்ந்து வந்து தனது  பிஞ்சுக் கைகளை இட்டுக் குழப்பி விரல்களுக்கிடையே சிக்கிய இரண் டொரு பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக் கொட்டிக் கைதட்டிச் சிரித்துக் களித்ததும் ..
நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவு பகல் பாராமல் நாளெல்லாம் கிடந்து உறங்கியதும் ..
பொய்யா..? கனவா..? மருளா..? பித்தா..? பேதைமையா..?

ஆண்டியின் சித்தம் மட்டுமன்று, படிப்பவரையும் சிலையாக்கும் இரத்த வரிகள்! குழந்தை செத்த வீட்டில் மனம் ஒலிக்கும் ஒப்பாரிப் பாட்டு இது. இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளை யாடிய பொருளெல்லாம், அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம், ஆண்டியின் புலன்களில் மோதி மோதிச் சிலிர்க்க வைத்துக் கொண்டி ருந்தன. தாய்மையின் துடிப்பு. இடுகாட்டு வாழ்க்கையில் அவன் கண்ட ஒரே சொர்க்கம் வீழ்ந்துவிட்டது. இழப்பின் மதிப்பு மிக அதிகம்.

அவன் இருப்பது இடுகாடு. அவன் வீட்டிலேயும் ஒரு சாவு. அபூர்வ மாகக் கிடைத்த பரிசைக் காலம் அவனிடமிருந்து பறித்து விட்டது. மனம் பேதலிக்காமல் என்ன செய்யும் ? இனி அவன் உணர்வில் காணும் காட்சிகளை அவர் வருணிக்கின்றார்.

மார்பை அழுத்திக் கொண்டு மண்வெட்டியை எடுத்தான். கால்களை அகட்டி நின்று , கண்களை மூடிக் கொண்டு மண்வெட்டியை ஓங்கி பூமியில் புதைத்தான் .
நந்த வனத்தில் ஒரு ஆண்டி
அந்தப் பாட்டு ... அவன் பாடவில்லை  !


ஊரார் பிணத்துக்குக் குழி பறிக்கும் போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்துவருமே அந்தப் பாட்டு.
பாடியது யார்?

மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி பூமியைக் கொத்தினான்
நந்தவனத்தில் ஒரு ஆண்டி
மீண்டும் அந்தக் குரல்
யாரது .. ?

புலன்களையெல்லாம் அடக்கிக் கொண்டு மீண்டும் மண்வெட்டியால் பூமியை வெட்டினான். மீண்டும் ஒரு குரல் -
நந்தவனத்தில் ஒரு ஆண்டி -அவன்
நாலாறுமாதமாய் குயவனை வேண்டி


அய்யோ, அர்த்தம் புரிகிறதே !
மண்வெட்டியைத் வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
தூணைப் பிளந்து கிளம்பிய நரசிம்ம அவதாரம் போன்று பூமியை, புதைகுழி மேடுகளைப் பிளந்து கொண்டு ஒரு அழகிய சின்னஞ்சிறு  பாலகன் வெளிவந்தான்.  கைகளைத் தட்டி தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துக் கொண்டே பாடியது சிசு -


நந்தவனத்தில் ஒரு ஆண்டி

குரல்கள் ஒன்றாகி, பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின. அந்த மயான பூமியில்எத்தனையோ காலத்திற்கு முன்பு புதையுண்ட முதல் குழந்தை முதல் நேற்று மாண்டு புதையுண்ட கடைசிக் குழந்தை வரை  எல்லாம் உயிர் பெற்று உருப்பெற்று ஒன்றாகச் சங்கமித்து விம்மிப் புடைத்து விகஸித்த குரலில், மழலை மாறாத மதலைக் குரலில் பாடிக் கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழ நின்று ஆடின.
வான வெளியெல்லாம் திசை கெட்டுத் தறி கெட்டுத் திரிந்து ஓடின.  ஆண்டி தன்னை மறந்து சிரிக்கின் றான்.
அவன் ஆசை மகனும் அந்தக் குழாமில் இருக்கின்றான். தாவிப் பிடிக்க  ஓடுகின்றான். ஆனால் அவனோ கைக்கெட்டவில்லை. அவன் இல்லை. அவன் மட்டுமல்ல; அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி இருந்தனர்.
ஜீவ ஆத்மாக்களின் சங்கமம்; அங்கே பேதமில்லை.
என்னுடையது என்றும் , வேறொருவனுடையது என்றும், அவன் என்றும், அதுவென்றும்,இதுவென்றும் பேதம் காண முடியாத அந்த சமுத்திரத்தில் இருளனை மட்டும் எப்படி இனம் கண்டுவிட முடியும்?

ஆண்டி தவித்தான்.
அவன் சாதாரணமான மனிதன்.
.புனரபி ஜனனம் புனரபி மரணம்
இது மயான பூமியா?
இல்லை
அது ஞான பூமி
தினம் தினம் மரணங்களைப் பார்த்தும் மனிதன், ஆசைகளுக்கும் பாசத்திற்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டு அல்லாடுகின்றானே !
ஆம். மனிதன் அப்படித்தான்.

ஆண்டியோ தினம் தினம் குழந்தைப் பிணங்களைப் பார்த்திருந்தாலும் ஆசைக்கு ஒரு மகனைக்காட்டிப் பாசத்தையும் புரிய வைத்து அவனை மோசம் செய்து, இருந்த ஒன்றையும் பறித்துக் கொண்டது காலம். அவனால் என்ன செய்ய முடியும் ? அழத்தான் முடியும்.

இப்பொழுதெல்லாம் குழந்தைப் பிணம் வரும்பொழுது அழுகின்றான்.
மற்றவர்களுக்கு இப்பொழுதும் அவன் “ஒரு மாதிரி“ தான் .

நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.
அன்று அவனை நினைத்ததிலாவது ஒரு அர்த்தம் கூற இயலும்.! இப்பொழுதும் இதென்ன கேலிச் சொல்?
நாம் எல்லோருமே ஒரு மாதிரிதான்
ஆண்டவனையே நம் வியாபாரத்தில் கூட்டாளியாக்குகின்றோம்;
சொல்லாலும் செயலாலும் படைத்தவனையே கல்லாக்கிவிட்டோம்.
இவனை ஏன் படைத்தோம் என்று படைத்தவனே திகைத்து நிற்கின்றான்.
நாம் ஒரு மாதிரிதான்.
நினைத்தால் ஒருவனைக் கோபுரத்தில் ஏற்றுகின்றோம்; பிடிக்க வில்லையென்றால் அவனையே குப்புறத் தள்ளுகின்றோம்.
இயக்கம் என்றும் இலட்சியம் என்றும் தத்துவம் பேசுவோம். கோடி கோடியாய் நாம் சம்பாதிப்போம். உணர்ச்சி சொற்களை வீசி எளிய வனைத் தீக்குளிக்கச் செய்வோம். உடனே அந்தப் பிணத்திற்கு மாலை சூட்டி அதிலும் வரவு பார்ப்போம்.
நாமும் ஒரு மாதிரிதான்
சுயநலமும் சுரண்டலும் கொடிகட்டிப் பறக்கின்றது.
பித்தனைச் சித்தனாக்குவோம்; அப்பாவியைப் பித்தனாக்குவோம்.
ஏமாற்றுகின்றான் என்று தெரிந்தும் ஏமாறுகின்றோம்.
ஏமாற்றுபவனும் ஒரு மாதிரி; ஏமாறுகின்றவனும் ஒரு மாதிரி.
ஒவ்வொருவரும் தம்மை சுயதரிசனம் செய்து கொள்வோம்.
இக்கதை என்னை அழவைத்தது; கொதிப்படைய வைத்தது. நான் அழமட்டும்தானே செய்கின்றேன் !
நானும் ஒரு மாதிரி.

தொடரைமட்டும் நிறுத்த முடியவில்லை; தொடர்ந்து அவருடன் பயணம் செல்லப் போகின்றோம்.


பகுதி - 23


“இதயம் பேசுகிறது” மணியன்


என் இனிய நண்பர். அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளையிட்டுவிட்டார்; என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை.


கரும்பு தின்னக் கூலியா என்ற பழமொழிக்கேற்ப இருந்தது அந்தக் கட்டளை. ஆம், எங்கள் நண்பர் ஜெய காந்தன் மதுரைக்கு வருகின்றார். அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் போகும் இடங்களுக்கெல் லாம் நானும் உடன் செல்ல வேண்டும். அவர் சென்னைக்கு ரயில் ஏறும்வரை அவர் வசதிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மணியன் எப்பொழுது மதுரைக்கு வந்தாலும் டி.வி.எஸ் விருந்தினர் இல்லத் தில்தான் தங்குவார். அப்பொழுது டி.வி. எஸ் நிறுவனத் தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர் திரு.தேசிகர். சாமர்த்தியசாலி. நான் அப்பொழுது மதுரையில் உலக வங்கித் திட்டத்தில் உதவி இயக் குனராகப் பணி புரிந்து வந்தேன். தேசிகர் எனக்கும் நன்றாகத் தெரிந்தவர்.


இது நடந்த வருடம் 1981

ஜெயகாந்தனுக்கு அதே விருந்தினர் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தோம். அந்த நிறுவத்தினரே காரும் கொடுத்திருந்தார்கள்.

ஜெயகாந்தனுடன் சில நாட்கள்.

இந்தச் சிங்கத்தை எப்படி சமாளிக்கப் போகின்றேன் என்று மணியனிடம் கேட்ட பொழுது, ‘ரொம்ப அலட் டிக்காதே. அந்தச் சிங்கத்தைச் சமாளிக்கும் சாமர்த்தி யம் உனக்குண்டுன்னு தெரியும்” என்று கூறி என்னை அடக்கிவிட்டார்.
ஜெயகாந்தனை வரவேற்க ரயிலடிக்குச் சென்றிருந்தேன். அவருடன் இன்னொருவரும் வந்தார், பெயர் மறந்துவிட்டேன். மணி என்று வைத்துக் கொள்வோம். அடையாளத்திற்கு ஒரு பெயர். ஜெயகாந்தனின் தேவைகளைக் கவனிக்க ஒருவர் உடன் கூட்டிவந்தது கண்டு நான் புன்னகைத்தேன். அவரும் என் பார்வை போன திக்கையும் பார்த்து, என் எண்ணங்களின் ஓட்டத்தையும் புரிந்து கொண்டு ஒரு சிரிப்பைக் காட்டினார். இருவரும் சிரிப்புகளால் எண்ணங்களைப் பறிமாறிக் கொண்டோம்.

விருந்தினர் இல்லத்தில் அவரை விட்டு விட்டு மதிய உணவு நேரம் வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட் டேன். எனக்குக் காலையில் கொஞ்சம் வேலைகள் இருந்ததால் உடன் இருக்க முடியவில்லை. என் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய பொழுது அதற்குள் சிலர் அங்கு கூடி அவருடன் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டேன். ஜெயகாந்தன் வருகை யைச் சிலருக்கு தேசிகன் கூறியதன் விளைவு. பெயரில் காந்தம்; அவருடன் கலந்துரையாட எத்தனை ஆர்வம் ! இக்காட்சியை அவர் எங்கு சென்றாலும் கண்டிருக் கின்றேன்.

நாங்கள் கிளம்பியாக வேண்டும்.

ஒரு கிராமத்துப் பிரச்சனை
அந்தப்பிரச்சனை காட்டுத்தீயைப்போல் பரவிவிடும் நிலையில் இருந்தது. பத்திரிக்கைகாரர்கள் பிரச்ச னைக்குப் பல வர்ணங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர். மணியனுக்கும் ஆர்வம். அதன் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினார். அதற்கு ஜெயகாந்தனே பொருத்தமானவர் என்று நினைத்து அனுப்பியிருந்தார். அவர்கள் இருவரும் நண்பர்கள். எனவே அவரும் மறுப்புக் கூறாமல் புறப்பட்டுவிட்டார். மதிய உணவு சாப்பிட்டுப் புறப்பட பிற்பகல் மூன்று மணியாகி விட்டது.

கார் ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் அவரவர் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டி ருந்தோம். சிறிது நேரமன்று. சில மணி நேரம் அப்படி அமர்ந்திருந்தோம். இருவரும் சுயநிலைக்கு வந்த பின்னரும் அவர் என்னுடைய புதிய பணிகளைப் பற்றித்தான் விசாரித்தார்.

சில குறிப்பிட்ட பிரச்சனைகளைப் பற்றிப் பேசினோம்.
நாங்கள் போக வேண்டிய முதல் இடம் வந்தது. அங்கே சந்திக்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு நேராகக் குற்றாலம் சென்றோம்.

அங்கே தான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.
இரவு 8.30 மணி.
இறங்கியவுடன் ஜெயகாந்தன் ஒரு கோரிக்கை வைத்தார். முன்னதாக இது பயணத்தில் சேர்க்கப் படவில்லை. திடீரென்று கேட்கவும் அப்படியே அதிர்ந்து போனேன் .

“சீதாலட்சுமி, காலையில் நான் ஒரு கசாப்புக் கடைக்குப் போக வேண்டும். ஆடு வெட்டும் முன் போக வேண்டும். சாயபுவிடம் முன்னதாகப் பேச வேண்டும். ஆடு வெட்டும் பொழுதும் இருக்க வேண்டும், ஏற்பாடு செய்யுங்கள் “

அவர் இதனைக் கேட்ட நேரத்தைப் பாருங்கள். இதற்கு மேல் நான் தேடிப்போய் ஏற்பாடு செய்ய வேண்டும்,. மதுரையிலேயே சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா? அவரை எப்படித் திட்டுவது? மணியனைத் திட்ட நினைத்தாலும் அவரும் சென்னையில் இருக்கின் றார். மறுக்கவும் மனமில்லை. பெண்ணால் முடிய வில்லை என்று நினைத்துவிட்டால் என் தகுதி என்ன வாகிறது? வீராப்பு பேசும் பொம்பு ளையாச்சே.

அவரை மணியுடன் அவர் அறைக்கு அனுப்பிவிட்டு நான் கசாப்புக் கடை பற்றி விசாரிக்கச் சென்றேன். கண்டு பிடிக்காமல் இருப்பேனா? தமிழ் நாடே என்னு டையது போல் ஒரு திமிர்.. எப்படியோ எல்லா ஏற்பாடு களையும் செய்துவிட்டுத் தங்கும் இடம் வந்தேன்.
அவர் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

கதவைத் தட்டவும் மணி திறந்தான். நான் உட்காரவில்லை.செய்த ஏற்பாடுகளைக் கூறி விட்டு, “கார் டிரைவருக்கும் சொல்லிவிட்டேன். மணியைக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வாருங்கள் “ என்றேன்.
“நீங்கள் வரவில்லையா?”
அவரை முறைத்துப் பார்த்தேன். அவர் சிரித்துக் கொண்டே ,” சரி சரி, நான் போய்விட்டு வருகின்றேன் “ என்று சொன்னார்.

நான் என் அறைக்குச் சென்றேன். வெளியில் அன்று நல்ல மழை. அருவிச் சத்தம் வேறு. ஏனோ இயற்கை யே பேயாட்டம் போடுவது போன்று ஓர் உணர்வு. என் உணர்விற்கேற்ற பின்னணி இசை


மேஏஏஏஏஎ ........

ஐயோ, ஆடு அழுவது போன்று ஓர் எண்ணம். யாருக்காவது காயம் பட்டால் கூட அந்த இரத்தத்தைப் பார்க்க மாட்டேன். இப்பொழுது ஓர் ஆட்டை யாரோ வெட்ட வருவது போலவும் , அந்த ஆடு அழுவது போலவும் காட்சிகள் வந்து என் நிம்மதியைக் கெடுத்துவிட்டது. இப்படி ஒரு கோரிக்கை வைப்பார் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஏதோ கிராமத்திற்குச் செல்லப்போகின்றோம் என்று நினைத்து வந்தவளுக்கு இப்படி ஒரு இம்சையா?
இரவு நகர்ந்து பொழுதும் விடிந்தது நான் தூங்கவே இல்லை; சீக்கிரம் குளித்துவிட்டு மழையையும் மலையையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கற்பனை வரவில்லை
ஜெயகாந்தனின் கதைகளை நினைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. அவர் கதையொன்றின் காட்சி மனத்திரையில் ஓட ஆரம்பித்தது. ஆண் குருவி பேனில் அடிபட்டுச் செத்து விழ, அதைப் பார்த்த பெண் குருவி பதைபதைத்ததை எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது.


ஜெயகாந்தன் காட்டும் காட்சி

அந்தப் பெண் குருவி தவிச்ச தவிப்பு இருக்கே .“கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடைகெட்ட அரக்கனுக்குமில்லாத சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு படச்சவன்னு இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு இருக்கும் பொழுது பாசம்னும் ஒண்ணை உண்டாக்கு வானா ? “

இப்படி எழுதின ஜெயகாந்தன் ஏன் கொலைக் களத்துக் குப் போகி்றார்? நானும் பல முறை கடவுளைக் குற்ற வாளிக் கூண்டில் ஏற்றி கேள்விகள் கேட்பேன்.

ஜெயகாந்தன் ஏற்கனவே எழுதிய ’அக்கிரஹாரத்துப் பூனை’ கதையும் நினைவிற்கு வந்தது. அக்கிர ஹாரத்தில் ஒரு பூனை நிறைய சேட்டைகள் செய்து வந்தது. ஒருவனுக்கு அதன் கொட்டத்தை அடக்க வேண்டுமென்ற ஆத்திரம்.

கொன்றுவிடவும் நினைத்தான். ஆனால் கொல்ல முடிய வில்லை. எனவே ஓர் கோணிக்குள் அடைத்துக் கொண்டு செல்லும் பொழுது ஓர் சாயபுவைப் பார்க்கின்றான்.

“பூனை ரொம்பவும் லூட்டி அடிக்கறது.அதுக்காக அதைக் கொன்னு டறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்”

“நீங்கதான் ஆடெல்லாம் வெட்டுவேளே; அதனாலே நீங்களே இதை வெட்டணும்”

“பூனையை இதுவரை நான் வெட்டினதில்லே. ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே. நான் வெட்டித் தரேன், நீங்க சாப்பிடுவீங்களா ?”

“உவ்வே ! வெட்டிக் குழியிலே புதச்சுடலாம்”

”நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன் ? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடல்லேன்னா நான் வெட்டவும் மாட்டேன்.நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறீயா”

”ஓ, பார்த்திருக்கேனே ! ஏதோ மந்திரம் சொல்லி வெட்டு வீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே”

”மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம் பிக்கறப்போ ஆண்டவனைத் தொளுவறது இல்லையா ? அதுதான். வெட்றது விளையாட்டில்லே. தம்பி. அதுதான் என் குடும்பத்துக்குக் கஞ்சி ஊத்தற தொளில்.அதுக்காவ உங்கிட்டே காசு, கீசு கேக்கல்லே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி.எதையும் வீணாக்கக் கூடாது.வீணாக்கினா அது கொலை. அது பாவம். என்னா சொல்றே?”

” இன்னிக்குமட்டும் விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்”

“ வெளையாட்டுக்குக் கொலை செய்யச் சொல்றியா ..த்சு த்சு ! வெளையாட்டுக்குக் கொலை செய்ய ஆரம்பிச்சா, கத்தி பூனையோடு நிக்காது.தம்பி, நான் உன்னைக் கேட்கறேன், வெளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன ?”

எப்பேர்ப்பட்ட தத்துவம்!
எவ்வளவு எளிதாகக் காட்டிவிட்டார்!
புதிதாக இனி என்ன பார்க்கப் போகின்றார்?

இந்தக் கதை எழுதிய வருடம் 1968


மணி வந்து கூப்பிட்டான் ; ஜெயகாந்தன் ஏதோ யோக நிஷ்டையில் இருப்பது போன்று கண்மூடி அமர்ந்தி
ருந்தார்.

அவரைப் பார்க்கவும் என் கோபம் பறந்துவிட்டது. அதுமட்டுமன்று. அவர் முன்னால் பவ்யமாக உட்கார் ந்துவிட்டேன். அவராகப் பேசும் வரை காத்திருக்க வேண்டும் என்று என் மனக்குரல் அறிவித்தது.
அவர் கண்விழித்தாலும் அவர் மனம் எங்கோ சஞ்சரிப்பதை உணர முடிந்தது. குற்றாலத்தில் இன்னொரு பேரருவியைப் பார்க்கப் போகின்றேன் என்று என் உள்ளுணர்வு உணர்த்தியது. அருவி கொட்ட ஆரம்பித்தது .

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்த விருந்து. அன்று பதிவு செய்ய என்னிடம் சாதனங்கள் இல்லை. நினைவிலே இருப்பதின் சுருக்கம் மட்டுமே தர முடிகின்றது. சாயபுவுடன் மனம் விட்டுப் பேசி இருக்கின்றார். முதலிலேயே சொல்லி வைத்திருந்ததால் உரையாடல் திருப்திகரமாக நடந்தி ருக்கின்றது.


அவர் கண்ட காட்சியும் அவர் உணர்வுகளும் -

“சீதாலட்சுமி, ஆடு வரும் பொழுது கண்களைப் பார்த்தேன். அதன் அசைவுகளைப் பார்த்தேன். அதற்கு தான் சாகப் போகின்றோம் என்று தெரிந்திருக்கின்றது; ஆனால் பயமில்லாமல் மெதுவாக வந்து நின்றது.
“உனக்கு என் உயிர் தானே வேண்டும் எடுத்துக் கொள்” என்று சொல் வதைப் போல் நின்றது. அதற்கு ஐந்தறிவு என்கின்றார்கள். ஆனால் அதன் உள்ளுணர்வு மனிதனைப்போல் இருக்கின்றது. மனிதன் கூட மரணம் வரும் பொழுது பயப்படுவான். ஆனால் மிருகம் தயாராகி விட்டது. பற்றற்ற துறவியாய், ஞானியாய் கண்டேன் .

உயிர் எடுக்கப்போகும் மனிதனிடம் கொலை வெறி இல்லை. சாத்வீக நிலை. கடமை வீரனாகத் தெரிந் தான். தன் தொழிலைத் தொடங்கும் முன் இறைவனை வேண்டிய பொழுது அவனும் ஞானியாகவே தோன்றினான்.

அது கொலை பூமியன்று: ஞான பூமி.
உயிர் கொடுப்பவன் யார் ?
உயிர் எடுப்பவன் யார் ?
உயிர் எங்கே போகின்றது?
விலகும் உயிரைப் பிடித்து நிறுத்த முடியுமா ?
உயிர் என்று வந்து விட்டால் அது மிருக உயிர், மனிதர் உயிர் என்று பேதம் உண்டா?
தெளிவு பிறந்துவிட்டால் உயிர் உடலில் இருந்தாலும் அது வெளியில் பறந்தாலும் ஒன்றே என்ற நிலை வந்துவிடுகின்றது. அது ஆடானாலும் புரிந்து கொண்டு அமைதி காத்தது .

“ஆட்டின் கண்கள் பேசின சீதாலட்சுமி. புல்லரித்துப் போனேன். வெட்டுண்ட தலை கீழே விழுந்த பொழுதும் அதன் விரிந்த கண்கள் வாழ்வின் அர்த்தத்தைக் கூறின”.
தன் கடமையை முடித்தவன் முகத்திலும் சாந்தம் !
அந்த சூழல், அந்த நிகழ்வு அதிசயத்தைக் காட்டியதே யொழிய அச்சத்தைக் கொடுக்கவில்லை .”

ஜெயகாந்தன் பேசிக் கொண்டே இருந்தார். ஏதோ ஞானோபதேசம் கேட்பதைப் போன்று அடக்கமாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அன்றைய பேச்சு போல் என்றும் அவரிடம் நான் கேட்டதில்லை.

சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிவிடுவார். திடீரென்று பேசுவார்.

பிறப்பு, இறப்பு, இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை என்று நிறைய பேசினார். அலைபாயும் மனித உணர்வுகள்பற்றிக் கூறினார். வாயாடிப் பெண் நான். ஆனால் வாய்மூடி உட்கார்ந்திருந்தேன்.

அன்று அரங்கம் எடுத்துக் கொண்டது ஐந்து மணி நேரம்.
அவர் மட்டுமே பேசினார்

அது ஒரு சுகானுபவம்; அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்கத் திறனில்லாப் பெண்மணி.
அற்புதங்கள் எப்பொழுதாவதுதான் நடக்கும்.
இன்றும் என் மதிப்பில் உயர்ந்தவர் ஜெயகாந்தன்
அவருடைய பன்முகங்களைக் கண்டிருக்கின்றேன்.

பகுதி - 24

மணி பெயருக்கேற்றவன் , நேரத்தின் அருமை தெரிந்து என்னை மெதுவாக சுய நிலைக்குக்கொண்டு வந்தான். விண்ணிலே சஞ்சாரம் செய்த ஜெயகாந்தனும் மண்ணுக்கு வந்துவிட்டார். நேரம் கருதி விரைவாகச் சாப்பிட்டுவிட்டு கிராமத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டோம்.

இப்பொழுது கிராமத்துப் பிரச்னைகளைப் பற்றி பேசினோம்.;

நாங்கள் செல்ல வேண்டிய கிராமமும் வந்தது .
மாலை நேரம். மஞ்சள் வெய்யில். நல்ல இதமான காற்று. ஊரின் நுழை வாயிலில் ஒரு மண்மேடு இருந்தது. அங்கே இரண்டு பெரிய வர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளிக் காரை நிறுத்தினோம். ஜெயகாந்தன் மெதுவாக நடந்து சென்று அந்தப் பெரியவர்கள் பக்கம் போனார். இவர் வருவதைப் பார்த்த பெரியவர்கள் எழுந்திருக்க முயன்றனர். உடனே ஜெயகாந்தன் “உட்காருங்கோ” என்று கூறிவிட்டு அவரும் அவர்களுடன் மண் மேட்டில் உட்கார்ந்து விட்டார்.

“என்னய்யா எங்க ஊர்ப்பக்கம் ஏதாவது விசேச முங்களா?”

“இல்லே இல்லே. அந்தம்மா பெண்கள் குழந்தைகள் நலத்தில் வேலை பாக்கறவங்க. தடுப்பூசியெல்லாம் குழந்தைகளுக்குப் போடறாங்களாண்ணு கேட்க வந்திருக்காங்க.”

ஜெயகாந்தன் சாமர்த்தியமாக என் பணியைக் காரணம் காட்டிவிட்டார்,

“பொம்புள்ளங்க வர்ர நேரம் தான்”

ஆமாம் , கூலி வேலை முடிந்து கிராமத்து ஜனங்கள் திரும்ப ஆரம்பித் திருந்தனர் (அதற்காகத்தானே இந்த நேரமாகப் பார்த்து வந்தது )காலித் தூக்குச் சட்டியைத் தோளில் தொங்கவிட்டு , சுள்ளிகள் கட்டைத் தலை யில் சுமந்து கொண்டு வரும் பெண்களைப் பார்த்தேன்.

நான் ஜெயகாந்தனை விடுத்து மெதுவாக அவர்கள் பின்னால் போக ஆரம்பித்தேன். 25 ஆண்டுகள் அனுபவம். என்னால் மிகவும் எளிதாகப் பழகிட முடியும். உழைப்பிலே அசதி இருந்தாலும் அவர்களுடன் கூட நடந்த என்னிடமும் சரளமாகப் பேசிக் கொண்டு சென்றனர். மணியன், சாவி, பகீரதன் இன்னும் பலருடன் கிராமங்களுக்குச் சென்றிருக்கின்றேன்.

காருக்கருகில் நிற்கும் தோரணையில் மற்றவர்கள் ஒதுங்கி நின்றே பேசுவர். ஆனால் ஜெயகாந்தனோ அவர்களில் ஒருவராக உடன் உட்கார்ந்து விடுவார். அவர்கள் கொடுப்பதை முக மலர்ச்சியுடன் வாங்கிச் சாப்பிடுவார். அங்கே எந்த வேற்றுமையும் இருக்காது. அவருடன் சென்ற அனுபவங்களை நான் நேரில் பார்த்தவள்.

போகும் பாதையிலும் கண்ணில் படுவதை உடனே மனத்தில் படம் பிடித்துவைத்துக் கொள்வார். இது அவர் முயற்சியல்ல. அவர் இயல்பு . அந்த ஒன்றுதலினால் தான் உயிர்ப்புள்ள உரையாடல்களை, காட்சிகளைக் காட்ட முடிகின்றது. இவர் எழுத்துக்கு ஆய்வுகள் தேவை யில்லை. மனித மனத்துடன் இணைய வேண்டும். அனுபங்களில் உளவியல் தானே புரிந்து விடும். ஜெயகாந்தனுடன் பழகியவர்கள் அவரைப்பற்றி எழுத வேண்டும். ஆனால் எழுதுபவர்கள் சரியான புரிதல்தன்மை கொண்டவராக இருத்தல் அவசியம்.

ஜெயகாந்தன் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

சில வீடுகளுககுச் சென்று பேசிவிட்டு அவர்கள் சமையல் முடிக்கவும் பேசலாம் என்று கூறிவிட்டு மண் மேட்டுப் பக்கம் வந்தேன். அதே நேரம் பஸ்ஸிலிருந்து இறங்கிய இருவர் அங்கே வந்தனர். ஜெயகாந்தனைப் பார்க்கவும் ,”அய்யா, நீங்களா?” என்று ஜெயகாந்தனிடம் கேட்டு விட்டு அவ்வூர்ப் பெரியவர்களிடம், “இந்த அய்யா கதை எழுதறவரு. அதுவும் நம்ம ஏழை ஜனங்களைப் பத்தி அதிகமாக எழுதறவரு “ என்றார்கள்.

(ஜெயகாந்தன் கதை படித்திருந்தவர் ஒருவர் அங்கு வந்தது மிகவும் உபயோகமாக இருந்தது. வாலிபர்களையும் வசீகரம் செய்யும் ஓர் எழுத்தாளர் )

“ஓ, அப்படியா, சந்தோஷம் அய்யா. கொஞ்ச நாளா பத்திரிகைக்காரங்க தொல்லை அதிகமாப் போச்சு. அதான் ஊருக்குப் புதுசா வர்ரவங்க கிட்டே பேசக் கூட யோசிக்க வேண்டியிருக்கு.”

”பேசும்பொழுது உங்க தயக்கத்திலேருந்து புரிஞ்சு கிட்டேன். அந்தம்மா பேசிட்டு வரவும் நாங்க கிளம்பி டறோம். உங்களுக்குக் கஷ்டம் வேண்டாம் .”

” ஐயோ, அப்படி இல்லேங்க. அதுவும் எங்க மேலே இரக்கப் பட்டு, எங்க கஷ்டத்தை எழுதறவரை அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவோமா? ”


எப்படியோ பேச்சு சரளமாக ஆரம்பித்துவிட்டது. மனம் விட்டுப் பேச ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நடந்த கதையையும் கூறி விட்டனர். இளைஞர்களின் ஆத்திரம் புரிந்தது ;

கலந்துரையாடலின் சுருக்கம் இதுதான் .

அந்த ஊரில் தாழத்தப்பட்ட வகுப்பினர் மட்டும் வாழ்ந்து கொண்டி ருந்தனர். சில இளைஞர்கள் வெளியூர் சென்று படித்து இப்பொழுது வெளியூரில் வேலையும் பார்க்க ஆரம்பித்திருந்தனர். அவர்களில் ஒருவன் கொஞ்ச தூரத்தில் இருந்த ஊரில், உயர் குலப் பெண் ஒருத்தியைக் காதலித்துவிட்டான். மறைமுகச் சந்திப்புகள் தொடர்ந்தன. கொஞ்சம் எல்லை மீறிப் பழகியதில் அந்தப் பெண் கர்ப்பவதியாகி விட்டாள். (இந்தச் செய்தி மட்டும் நான் பெண்களிடம் அறிந்தது)

அந்த ஊர்க்காரர்களுக்கு இவர்கள் காதல் விஷயம் தெரிந்ததவுடன் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. பையனைப் பிடித்து கொன்றுவிடத் துடித்தனர். சூழலைப் புரிந்து கொண்ட இளைஞன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். ஆனால் அந்த ஊர்க்காரர்கள் கிராமத்தில் வைத்துக் கொண்டு மறைக்கின்றார்கள் என நினைத்து கூட்டமாக வந்து, “அவனை எங்களிடம் கொடுக்க வேண்டும்; அல்லது ஊரையே கொளுத்தி விடுவோம் “ என்று கூச்சலிட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதனால் மிரட்டலும் அடிதடி கலாட்டாவும் தொடர ஆரம்பித்திருக் கின்றது. செய்தி வெளியே கசியவும் பிரச்சனை பெரிதாகப் பேசப்பட ஆரம்பித்து விட்டது.


சம்பந்தப்பட்டவன் கிராமத்தில் இல்லை. செய்தியும் வெளிவந்து விட்டது. விஷயத்தை ஆறப்போட்டுச் செய்யலாம் என்று முடிவு எடுத் திருக்கலாம்; ஆனால் என்றோ ஒரு நாள் பிரச்சனை பெரிதாகும் என நினைத்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த வழிகளைச் செய்து ஊரை அடக்கி வைத்து விட்டனர். இப்பொழுது இதுவரை எங்கும் பிரச்சனை இல்லை. ஒரு காதல், இரு ஊர்களின் சாதிச் சண்டையானது. நீறு பூத்த நெருப்பாக அவ்வப்பொழுது  புகைந்து கொண்டிருக்கின்றது. யாரும் ஊதி விடாமல் இருந்தால் புகை அடங்கிவிடும் .


ஜெயகாந்தன் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கொஞ்சம் தள்ளி நான் உட்கார்ந்திருந்தேன். அவருக்கு முதலில் ஒரு குவளையில் டீ கொண்டு வந்து கொடுத்தார்கள். பின்னால் ஒரு கலயத்தில் சுடுகஞ்சி யும் வந்தது. அவரும் மறுக்காமல் அவர்கள் கொடுப்பதை வாங்கி ருசித்துச் சாப்பிட்டார். ஜெயகாந்தன் ஏழைகளுடன் கலந்துறைபவர். அவர்களில் ஒருவராக ஆகிவிடுவதால் எந்த தயக்கமும் இல்லாமல் அவர்கள் அவருடன் மனம் விட்டுப் பேசுவதும் சிரிப்பதுவும் இயல்பாகின்றது. குடிசைகளுக்குள் போவதில் அவர் தயங்கியதே இல்லை. விளம்பரத்திற்காக ஏழை களைப் பார்க்கப் போகவில்லை. அதனால்தான் அவர் கதைகளில் பிச்சைக்காரன், இடுகாட்டுப் புலையன், கசாப்புக் கடைக்காரர் போன்றவர்களை அப்படியே காட்ட முடிகின்றது.


கற்பனைக் குதிரையில் போய்க் கொண்டிருந்த என்னை அருகில் நடந்த ஒரு பேச்சு இழுத்துவிட்டது.
இளைஞன் ஒருவன் ஆத்திரத்துடன் முனகிக் கொண்டிருந்தான். அருகில் இருந்த ஒரு பெரியவர் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.

” மனுஷன் பொறக்கும் போது சாதி கிடையாதுன்னு சொல்லுவாங்க. எப்படியோ வந்தாச்சு. அப்போக் கூட இப்படி சண்டை வல்லே. இப்போ நலலது செய்யறதா நினைச்சு தப்பு பண்ணிகிட்டு வராங்க. அதனாலே சாதிச் சண்டை இப்போ அதிகமாய்டுத்து ; நாம சும்மா இருக்கறதா சாகறது நல்லதாப்பா? அவங்க பண பலம், ஆள்பலம் எல்லாம் உள்ளவங்க. நாமதான் நிறைய சாவோம். நீங்க நல்லா படிங்க. படிப்பு ஒண்ணு தான் நம்ம கஷ்டத்தைப் போக்கும். பள்ளிக் கூடத்திலே ஒண்ணத்தானே உட்காருதீங்க. எல்லாம் காலப் போக்கில் சரியாகும். கட்சிக்காரங்க விளையாட்டுலே மனுஷன் சாகக் கூடாதுப்பா. ”


அவர் படித்தவராகத் தெரியவில்லை. படிப்பைவிட அனுபவங்கள் மனிதனுக்கு எப்படி தெளிவைக் கொடுக்கின்றது!. கிராமத்து மண் மேட்டில் உபதேசப் பொன் மொழிகள்! மீண்டும் ஜெயகாந்தனின் கதையில் வரும் ஒரு காட்சி மனக் கண்முன் தோன்றியது.

பிளாட்பாரத்தில் உட்கார்ந்து மாந்திரிகத் தொழில் செய்யும் ஒரு பாபா, ஒரு கிராமத்தானிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.

“மந்திரேம் மாயம் எல்லாம் ஒருபக்கம் தள்ளுய்யா. வாக் ஸுத்தம் ஓணும். சுத்தமான வாக்குதான் மந்திரம். மனஸ் சுத்தமா இருக்கணும். கெட்ட நெனப்பு, இவனே அயிச்சுடணும், அவனெ ஒழிச்சுட ணூம்னு நெனக்கிற மனஸ் இருக்கே - அதான்யா ஷைத்தான்.ஷைத்தான் இங்கே கீறான்யா இங்கே ! வேறே எங்கே கீறான்? ஆண்டவனும் இங்கேதான் கீறான்.நல்ல நென்ப்பூ ஆண்டவன். கெட்ட நென்ப்பூ ஷைத்தான்” என்று மார்பில் தட்டி நெஞ்சை உணர்த்துகிறார்.


“துட்டுக்கோசரம் வவுத்துக்காக அக்குரமம் பண்றது நம்ம தொயில் இல்லே”


தன் தொழில்பற்றி விபரம் கூறிவிட்டு மேலும் தொடர்கிறார் -
” இன்னொருத்தனுக்கு கெடுதி நெனக்காதே.நீ கெட்டுப்பூடுவே. நல்லதே நெனை.ஆண்டவனைத் தியானம் பண்ணு. எதுக்கோசரம் ஆண்டவ னைத் தியானம் பண்ணூ சொல்றேன். ஆண்டவனுக்கு அதினாலே லாபம் வரூது இல்லேடா, இல்லே. உனுக்குத்தான் லாபம் வருது.கெட்ட விசயங்களை நெனக்கறதுக்கு நீ யோசனை பண்ணமாட்டே. ஆண்டவனை நெனச்சுக் கிடான்னா மேலேயும் கீயேய்யும் பாத்துக்கினு  யோசனை பண்றே. எல்லாத்துக்கும் நல்ல மனஸ் ஓணும்.”


ஞானங்களும் நல்லுபதேசங்களும் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக் கின்றன. மகான்களையும், வேத வித்துக்களையும், நீதி நூல்களையும் நாடிச் சென்று ஞானம் பெற எல்லா மனிதருக்கும் முடிவதில்லை. எனவே இந்த மாதிரி மனிதர்களின் மூலம், அது மூர்மார்க்கட் நடை பாதையில் கூட வினியோகிக்கப்படுகிறது.
இந்த பாபா ஒரு ஞானவான் தான் “
72ல் ஜெயகாந்தன் எழுதிய “நடைபாதையில் ஞானோபதேசம் “ கதையில் சில வரிகள் இப்போது நினைவில் வந்து மோதின. கிராமத்து மண்மேட் டிலும் உபதேசங்கள் வினியோகிக்கப்படும் விதத்தைக் கண்டேன்.
இது காலத்திற்கேற்ற புது உபதேசம் .
காரில் திரும்பும் பொழுது எங்களால் பேச முடியவில்லை. மனங்கள் கனத்துப் போயிருந்தன. இருவருக்கும் காரணங்கள் தெரிகின்றன. தெரிந்து என்ன பயன்?
மனிதன் தோன்றி இரண்டு லட்ச ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்பொழுது அவனுக்கு மொழி கிடை யாது. ஆடையின்றித் திரிந்தான்; உறவுகள் என்று ஒன்றில்லை; புலம் பெயர்ந்து சென்று கொண்டே இருந்தான் கூட்டம் பெருகப் பெருக அதிகார ஆசைகள் முதல் பல ஆசைகள் வந்தன. உழைக்கும் கூட்டம்
பிரிக்கப்பட்டது.
காலச் சக்கரம் பல பிரிவினைகளைத் தோற்றுவித்தது. இப்பொழுது சலுகைகள் என்ற பெயரில் நூறாக இருந்தது நானூறாக ஆகிவிட்டது
இது யார் குற்றம்?
படித்தவர்களும் சாதி வேண்டும் என்கின்றார்கள். நிர்வாகத்தில் இடங்க ளைக் குறுக்கினால் அதிகக் கவனம் செலுத்த முடியும் என்று நினைத் தனர். அதே அடிப்படையில் சாதிகளைப் பிரித்து நல்லது செய்ய முடியுமென நினைக்கின்றனர். இரண்டும் ஒன்றா?
பள்ளியில் எல்லா சாதிக் குழந்தைகளும் தான் படிக்க வருவார்கள். குழந்தைகள் என்றால் விளையாடுவது போல் சண்டைகளும் போட்டுக் கொள்வார்கள். அவர்கள் பிஞ்சு மனங்களில் சாதி நினைத்து இவை களைச் செய்யவில்லை. மேல்சாதிக்காரன் பிள்ளை அடிபட்டு விட்டால் அது பிரச்சனையாகிவிடும்.. ஒரு காலத்தில் குரு குலத்தில் ஆசிரியர் களுக்கு இருந்த மதிப்பு இன்று ஆசிரியர்களுக்கு இருக்கின்றதா? மேல் சாதிக்காரன் அதனைப் பெரிய சாதிச் சண்டையாக்கி விடுவான். பிள்ளைச் சண்டை ஊர்ச் சண்டையாகிவிடும்.
ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனிப் பள்ளி வர வேண்டும் .
கோயில் மரியாதையிலும் சண்டை வரும். எனவே ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி கோயில் வேண்டும்
தனித்தனிச் சுடுகாடும் வேண்டும்.
இத்தனைக்கும் இடம் வேண்டும்.
ஏற்கனவே விளை நிலங்கள் வீடுகளாகிக் கொண்டிருக்கின்றன.
விவசாயத்திற்கும் இடம் வேண்டும். என்னதான் பணம் இருந்தாலும் உணவுக்கு தானியம் வேண்டாமா?
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?
இப்பொழுது ஒரு ஊர் என்று எடுத்துக் கொண்டால், பல கட்சிகள், பல ரசிகர் மன்றங்கள், பல சாதிகள் என்று இருக்கின்றன. யாரோ இருவருக் கிடையில் சண்டை வந்தால்கூட மேலே சொன்ன ஒரு குடைக்குள் வந்து அது பெரிதாகி, பக்கத்தில் பரவி, பல இடங்களிலும் கொந்தளிப்பு ஏற்படுகின்றதே?
இதுதான் சாதி ஒழிப்பா?
கடவுள் வேண்டாம் .அவன் கல்லாகவே இருக்கட்டும்; ஆனால் மனிதனுக்கு அமைதி வேண்டாமா? ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோரும் சில தவறு களைச் செய்து வருகின்றோம். நம்மை நாம் உணர வேண்டாமா?
மகாத்மா காந்திஜி எழுதிய சில வரிகள் நினைவிற்கு வருகின்றன.
மகாத்மா காந்தியின் சரிதை -.
அதில் “அவனோ பிடிவாதமாக இருந்ததோடு என்னையும் எதிர்த்து மிதமிஞ்சிப் போகப் பார்த்தான்.கடைசியாக இருந்த ரூல் தடியை எடுத்து அவன் கையில் ஓர் அடி கொடுத்தேன்.அவனை அடித்த போதே என் உடம்பெல்லாம் நடுங்கியது. பையன்கள் எல்லாருக்குமே இது புதிய அனுபவம். அப்பபையன் கதறி அழுதான். தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். அடிக்க வேண்டிய நிலமை எனக்கேற்பட்டதைக் குறித்து நான் அடைந்த மன வேதனையை அவன் அறிந்து கொண்டான். அன்று நான் ரூல் தடியை உபயோகித்தது சரியா தவறா என்பது குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாதவனாகவே இருக்கிறேன். ஒரு வேளை அது தவறாகவே இருக்கலாம். என்றாலும் பலாத்காரத்தை உபயோகித்ததற்காக நான் இன்னும் வருத்தப் படுகின்றேன். என்னுள் இருக்கும் ஆன்ம உணர்ச்சிக்குப் பதிலாக மிருக உணர்ச்சியையே காட்டிவிட்டதாக நான் அஞ்சுகிறேன் “
தன் தவற்றை உணர்வது அரிய செயல். அதிலும் அதனை வெளிப் படையாக ஒப்புக் கொள்வது மிகவும் அரிய செயல். இதிலும் நாம் என்ன செய்கின்றோம்?
நாம் தவறே செய்வதில்லை என்று சாதிக்கின்றோம். அத்துடனும் நிற்கவில்லை. காந்திஜிக்கு “மகாத்மா” என்ற பெயர் சரியா என்று கேலி பேசுகின்றோம். அவரவர்க்கு அவரவர் தலைவர்கள், பிடித்தமானவர்கள் என்றிருக்கின்றார்கள். தாராளமாக வானளாவப் புகழ்ந்து கொள்ளட்டும். பிறரைத் தூற்றி இன்பம் காண்பது சரியா? எந்த அளவு காழ்ப்புணர்ச்சி களை வளர்த்து வருகின்றோம் ?
இதே சமுதாயத்தில்தான் நம் குழந்தைகள் வளர வேண்டும். நாமும் நம் குடும்பமும் வாழ வேண்டிய சமுதாயம் இது. பணமும் அதிகார மும் இருந்தால் போதும் என்று நினைப்பது சரியா?
புத்தியைத் தீட்ட வேண்டியவன் கத்தியைத் தீட்டப் பழகுவான். வன் முறையும், வக்கிர புத்தியும், செக்ஸ் வெறியும் பிள்ளைப் பருவத் திலேயே ஊட்டுவது கொடுமையில்லையா? ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
பிறர் மீது பழி சுமத்தித் திரிவதைவிட ஒவ்வொருவரும் தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அழிந்துவரும் மனித நேயத் தைக் காக்க வேண்டும்.
காட்டுத்தீ போல் காழ்ப்புணர்ச்சி பரவி வருவதைக் கண்டால் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவனும் கவலைப் படுவான்.
கவலைப்படவேண்டும்.
கார் மதுரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. எங்கள் நெஞ்சங்களில் எண்ணங்கள் அழுத்தியதால் இருவராலும் பேச முடியவில்லை; வெகு நேரம் கழித்துப் பேசினோம். அப்பொழுதும் சமுதாயத்தைப் பற்றிப் பேசவில்லை.மதுரைப் பயணம் முடிந்து சென்னைக்குப் புறப்படும் வரை நாங்கள் சாதாரணமாக எங்கள் குடும்பங்களைப்பற்றித்தான் பேசினோம்.

பின்னால் என்றோ ஒரு நாள் இந்த அழுத்தம் வெடிக்கும்

பகுதி -25

குறிப்பேட்டைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை சம்பவங்கள்! இத்தனையும் எழுத என் காலம் போதாது. சந்தித்த மனிதர்கள்தான் எத்தனை?! அத்தனை பேர்களைப் பற்றியும் எழுத முடியுமா? இயலாத காரியம்.
ஜெயகாந்தனை முதலில் ஏன் தேர்ந்தெடுத்தேன் ? அவர் என்னைப் புரிந்து கொண்ட நண்பர். சமுதாயத்தில் அல்லல்படும் மக்களிடம் பரிவு கொண்டவர். அவரைப்பற்றி எழுதும் பொழுது சமுதாயத்தின் பல கோணங்களை என்னால் உடன் காட்ட முடியும். அதனால்தான் அவர் பெயர் மட்டும் எழுதித் தொடங்காமல் என் குறிப்பேடு என்பதையும் இணத்துக் கொண்டேன். பல செய்திகளைத் தர முடிகின்றது.
பேராசிரியர் அரசு அவர்கள் ஜெயகாந்தனின் உரையாடலைப் பற்றி எழுதச் சொன்னார். சந்திப்புகளின் போது நடந்தவைகளுடன், அவர் கதைகளில் வருபவைகளையும் எடுத்துக் காட்டினேன். மக்களிடம் அவர் அணுகுமுறையைப் பயணத்தில் பார்க்க முடிந்தது.
அக்ரஹாரத்தில் பூனை எழுதிய பல ஆண்டுகளூக்குப் பிறகு ஆடு வெட்டப் படும் களம் சென்றாரே, ஏன்? எண்ணியதை ஒப்பிட்டுப் பார்க்கவா? அல்லது அக்காட்சியை முழுமையாக நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பா?
அவர் ஆய்வுகள் செய்வதில்லை என்று ஒரு சிலர் கூறுவர். அவருக்கு அவை தேவையில்லை. எங்கோ பார்த்து, உணர்ந்தவை அவர் எழுத்தில் வந்து கலந்துவிடுகின்றன. ஏதாவது கற்பனையில் எழுதிவிட்டாலும் அக்காட்சியைத் தேடிச் சென்று பார்க்கின்றாரே? இதற்கு மேல் என்ன ஆய்வுகள் செய்ய வேண்டும்?
பிராமணர்கள் எழுதும் பத்திரிகைகளில் எழுதுவதால் அவர் அந்தப் பேச்சு வழக்கில் எழுதுகின்றார் என்று சொல்வதையும் கேட்டிருக் கின்றேன்.
ஒரு சம்பவம் கூற வேண்டும்.
ஜெயகாந்தன் நான் வேலை பார்க்கும் ஊர்களுக்கு வந்தால் என் வீட்டிற்கு வராமல் போகமாட்டார். வீட்டுக்கு வந்தால் என் அம்மாவுடன் தான் பேசிக் கொண்டிருப்பார். என்னுடன் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கும் பொழுது பேசலாமாம். என் அம்மாவுடன் பேசுவது அப்படி முடியுமா? அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டால் அதுவே ஒரு கதையாகிவிடும்.
ஒரு நாள் என் அம்மா என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.
“பாப்பா, இவர் அக்கிரஹாரத்துப் பிள்ளையா?”
“இல்லேம்மா, இவர் அக்கிரஹாரத்தில் வளர்ந்த பிள்ளை”
” அப்படியென்றால் குப்பத்து பாஷை பேசுகின்றாரே? குப்பத்தில் வளர்ந்தவரா? ”
புதுச்செருப்புக் கடிக்கும் கதையில் ஒரு கலப்பட பாஷை பேசுகின் றாரே, அங்கே எப்படிப் போனார்?
முஸ்லீம்களின் உரையாடல்கள் சரளமாக வருகின்றதே, அங்கும் வாழ்ந்திருப்பாரோ?
ஓர் எழுத்தாளன் ஒன்றை எழுதும் பொழுது அந்தப் பாத்திரத்துடன், அவன் வாழும் சூழலுடன் ஒன்றிப்போய் விடுவான். எழுதும் பொழுது என்றோ பதிந்தவை, அவன் உணர்வில் கலந்தவை அவனையும் அறியாமல் குதித்தோடி வந்துவிடும். உதாரணத்திற்காகச் சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டினேன். இன்னும் பல கதைகள்பற்றி எழுத முடியவில்லையே என்ற குறை எனக்குண்டு. அவரைப்பற்றி
எழுதியவர்கள் அதிகம். அந்த விமர்சனங்களே கூட இலக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
“இந்தம்மா என்ன ஒரே அடியாகப் புகழ்ந்து கொண்டிருக்கின்றார்களே!”
என்று தோன்றினால் அது தவறில்லை. மீண்டும் சொல்லுகின்றேன்.
எங்களுக்குள்ளும் நிறையக் கருத்து வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக அரசியலில் நாங்கள் ஒத்துப் போனதில்லை. ஆனாலும் சில தருணங் களில் ஒத்த உணர்வு வந்ததையும் மறுக்கவில்லை.
காங்கிரஸ் மேடைகளில் பேசிக் கொண்டிருந்தகாலம் அது; அரசியலை வைத்து ஒருவரை விமர்சிப்பார். நானோ அந்த அரசியல்வாதியிடமும் ஏதாவது நல்லது தெரிந்தால் அது குறித்துப் பேசுவேன். அரசியல் காரணமாக ஒட்டு மொத்தமாக ஒருவரைக் கண்டனம் செய்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அப்படித்தான் பேச வேண்டும். நான் அரசியல்வாதியல்ல. சுதந்திரமாக எண்ணலாம்,
எழுதலாம்.
ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டும் கூறவிரும்புகின்றேன்.
எமெர்ஜென்சி காலம். மறைந்த திருமதி. இந்திராகாந்தியை அவர் போற்றிப் புகழ்ந்த காலம். அவருக்குள் பெருந்தலைவர் காமராஜர் மீதும் பாசம் உண்டு. சிறிது காலம் அவர் வெளியில் வராமல் இருந்த பொழுது இவர் தவித்த தவிப்பை நான் நேரில் கண்டிருக்கின்றேன். “வீட்டுச் சிறையாக இருக்குமோ ?” என்று நான் கேட்டதற்குக்கூட அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு பக்கம் அம்மையார். இன்னொரு பக்கம் பெருந்தலைவர். என்ன சொல்ல முடியும்!?
தர்ம சங்கடம் இதுதான்.
திராவிடக் கட்சியைப் பெரிதும் விமர்சித்தவர்.
கலைஞரைப் பற்றி அப்பொழுது பேசிய பேச்சுக்கள் எல்லாம் தெரிந்த கலைஞர் எப்படித்தான் கூப்பிட்டுப் பணமுடிப்புக் கொடுத்தாரோ !?
கலைஞர் அவர்களின் அரசியலில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனாலும் அவரின் வேறு சில தன்மைகளைப் பார்த்து ரசித்தவள் நான். எனவே ஜெயகாந்தனுடன் அந்தக்காலத்திலேயே வாக்குவாதம் செய்திருக்கின்றேன்.
ஜெயகாந்தன் பணமுடிப்பைப் பெற்றதாலும், அவர் மகனுக்கு வேலை பெற்றதாலும் அவர் கலைஞரிடம் விலை போய்விட்டார் என்ற கடுமை யான விமர்சனங்களுக்காளானார். உடல் நிலை மோசமாகவும் அவருடைய மருத்துவச் செலவு முழுவதும் கலைஞர் அவர்கள்
மேற்கொண்டார். அப்பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன். உடனே இதுபற்றிய என் கருத்தை அன்றே பதிவு செய்தேன்.
கலைஞர் செய்த உதவிகளால் ஜெயகாந்தன் திராவிடக் கழகத்திற்குப் பிரச்சார பீரங்கியாகிவிட மாட்டார். இது எனக்குத் தெரியும். ஏன் கலைஞருக்கும் தெரியும். அவர் ஏன் உதவிகள் செய்தார்? அவரும் ஜெயகாந்தனின் ரசிகன். இதை அன்றே எழுதினேன்.
சமீபத்தில் கலைஞர் ஓர் இடத்தில் “விரைவில் ஓய்வு பெற்று அதன் பின் ஜெயகாந்தனுடன் பேசிப் பொழுதைக் கழிக்க விரும்புகின்றேன்” என்று கூறியது பத்திரிகைகளில் வந்தது. அதே போன்று கவிஞர் வைர முத்துவுடனும் பேசிக் காலம் கழிக்க விரும்புவதையும் சொல்லி இருக்கின்றார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பன் முகங்கள் உண்டு.
கலைஞர் தமிழை ரசிப்பார்
கலைகளை ரசிப்பார்
சினிமாவை ரசிப்பார்
அரட்டையை ரசிப்பார்
அவரும் ஒரு சாதாரண மனிதர்.
அதைப்புரிந்து கொண்டுதான் அன்றே அவரை ஜெயகாந்தனின் ரசிகன் என்றேன்.
.இன்னொரு தகவலும் கூற வேண்டும்
குமுதம் பத்திரிகையில் அரசியல் நிருபராகப் பணியாற்றியவர் பால்யூ அவர்கள். கழகத்திற்கு அந்த பத்திரிகை ஒத்துவராத ஒன்று. பால்யூ ஓய்வு பெற்றபின் நோய்வாய்ப்பட்டார். அப்பொழுது ஒரு நாள் அவரைக் காண திரு வீரமணி அவர்கள் சென்றிருந்தார். எல்லா அரசியல் தலைவர்களிடமும் நல்ல பெயர் எடுத்தவர் பால்யூ. எனவேதான் திரு வீரமணி ,வீட்டிற்கு வந்து அவரைப் பார்த்துச் சென்றார். அதுமட்டு மன்று; பால்யூவின் உடல் நிலைபற்றி கலைஞரிடம் கூறியிருக்கின் றார். உடனே கலைஞர் அவர்கள் பால்யூவுடன் தொலைபேசியில் நலம்
விசாரித்திருக்கின்றார்; அத்துடன் நிதி உதவியும் செய்திருக்கின்றார்.
இது பத்திரிகையில் வராத செய்தி. பால்யூவே என்னிடம் கூறிய செய்தி.
ஆதனால்தான் சொல்லுகின்றேன். ஒரு மனிதனை ஒட்டு மொத்தமாக என்னால் வெறுத்து ஒதுக்க முடியாது. தவறு காணும் பொழுது நிச்சயம் சொல்லத் தயங்கியதும் இல்லை.
சமீபத்தில் சங்கர நேத்திராலயா ஆய்வு நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மிகச் சொற்பொழிவில் ஜெயகாந்தன் பேசியிருக்கின்றார் -
“பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகி விட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “

ஜெயகாந்தனின் மேடைப் பேச்சென்றால் திடீர் வெடி வெடிக்கும். அது எப்பொழுதாவதுதான். இந்தப் பேச்சு காற்றோடு போயிருக்கும். ஆனால்  பத்திரிகைகளுக்குச் சுடச் சுடச் செய்தி வேண்டுமே! அவ்வளவுதான்.
பேட்டிகள், பேட்டிகள் பேட்டிகள் தலைப்பு “ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர் “


ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் திருமதி வாசுகி அம்மையார் புள்ளி விவரங்களுடன் ஜே.கே அவர்களை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். இந்த அமைப்பு எப்பொழுதும் எங்கு ஆய்வுகள் நடத்தினாலும் புள்ளி விவரங்களைச் சேகரித்து வைப்பவர்கள். பெண்கள் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் ஓர் அமைப்பு.
அடுத்துச் சாடியிருப்பவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி திருமதி ராமாத்தாள் அவர்கள். அரசு சார்புடையது.
நான் இருப்பது அமெரிக்கா. தமிழகச் செய்திகளை உடனே எனக்கு அனுப்ப இப்பொழுது சில குழந்தைகள் வந்துவிட்டனர். ஜே. கே
என்னும் பெயரின் வசீகரம். அவரைப்பற்றி எழுத ஆரம்பிக்கவும் சிலர் எனக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர்.
பொதுப்படையாகக் குறித்துப் பேசியதுதான் குழப்பத்திற்குக் காரணம்.
நானும் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவள். அரசுப்
பணியிலிருந்து ஓய்வு பெறலாம்; ஆனால் சமுதாயப் பணிக்கு ஓய்வில்லை. ஏதோ ஒரு வடிவில் இப்பொழுதும் என்னால் முடிந்த தைச் செய்து வருகின்றேன். அந்த அக்கறையில் அவர்கள் நிலையைக் கவனித்து வருகின்றேன் .

பணி செய்யும் காலத்திலேயே ஒரு பிரச்சனையை ஆய்வு செய்யும் முறைகளுக்குப் பயிற்சி பெற்றவள்.
பெண்கள் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என்று சொன்ன கருத்து சரி யன்று . அது ஒரு மாயத்தோற்றம். பெற்றவர்களே தங்கள் மகளை ஊர்ப் பொதுமையாக ஆக்கும் கொடுமை மாறவில்லையே! பதின்மூன்று வயதுச் சிறுமிக்கு ஊருக்குப் பொது மகளாகக் கோயிலில் வைத்துத் தாலி கட்டினார்கள். சம்பவம் நடக்கும் பொழுது எங்கும் பரபரப்பு. ஏதேதோ நடவடிக்கைகள். ஆனால் முடிவு என்ன என்று எத்தனை பேர்கள் தொடர்ந்து பார்த்தார்கள்? எங்கோ இருக்கும் எனக்குத் தெரிந்த உண்மை அதே மண்ணில் இருப்பவர்களில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?


இப்பொழுது அந்தச் சிறுமி பொது மகளாகிவிட்டாள்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் நடத்திய போராட்டம், வாங்கிக் கொடுத்த சட்டம் அதன் பயனை இழந்து நடை முறையில் வேறு வடிவில் நடக்கின்றதே! சாதியை ஒழிக்கின்றோம் என்று கூறுபவர்கள் இந்தப் புதுச் சாதியை ஒழிக்க என்ன செய்தார்கள்? மூடப்பழக்கத்தை ஒழிக்கின்றோம் என்று கூறி வலம் வருவோர் என்ன செய்துவிட்டார் கள்? ஆரம்பத்தில் பத்திரிகைச் செய்திகளில் விளம்பரம் வந்தால் போதுமா? இதுதான் சமுதாயச் சீர்திருத்தமா?

எங்கள் பாதுகாப்பு இல்லங்களும், சேவை இல்லங்களும் நிரம்பி வழிகின்றதே, ஏன்? கணவன் மனைவி சண்டைகளைக் கவனிக்க ஒரு தனிப் பிரிவே இப்பொழுது எங்கள் துறையில் இயங்கி வருகின்றது. எத்தனை பிரச்சனைகள் எங்களைத் தேடிவருகின்றன. இன்னும் பெண்ணின் நிலைமை ஒரு சோதனைக் களமாக இருக்கின்றது. ஒரு சிலரின் முன்னேற்றத்தை வைத்து மொத்தக் கணக்காகக் காட்ட முடியாது.
தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பெண்கள் கூடச் சுடிதார் போட்டுக்  கொண்டு வலம் வரும் பொழுது அவர்கள் வசதியாக வாழ்வது போல் இருக்கும் தோற்றம் ஒரு மாயத் தோற்றம்.


அரசுப் பணியிலோ, தனியார் துறையிலோ பெண்களின் நிலை பல இடங்களில் ஊதிய வித்தியாசம், பதவி உயர்வு பெற பல தடுப்புச் சுவர்கள் இவைகள் இருப்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்? சினிமா, தொலைக்காட்சி, மாடலிங் இவற்றில் பெண்கள் ஆடம்பரமாகத் தெரிகின்றார்கள். இவர்களில் எத்தனை பேர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்கின்றது? நடிகைகளும் பெண்கள் இல்லையா? மனித உணர்வுகள் பொதுவானவை.


பொருள், போகம், புகழ் இவற்றுக்கு ஆண்கள் அடிமையாக இருக்கின் றார்களே! இது மனிதனின் புத்தி. வீட்டுக்குள் இருக்கும் வரை அவளை இது அண்டவில்லை. அவளும் மனித ஜாதி. அந்த பலஹீனம் அவளிட மும் வருவது இயல்பு. ஆனாலும் எல்லோரையும் அந்த வளையத்துக் குள் கொண்டு வந்தது முறையன்று.


சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இது சரியான களம் அல்ல. அதுமட்டுமன்று; இதுபற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கின்றது. தனி மேடை அமைத்துச் செய்ய வேண்டிய கச்சேரி. ஜெயகாந்தனின் முழுப்பேச்சும் தெரியாது. ஆனாலும் இந்தக் கருத்துக் களுக்கு மற்றவர்கள் கொடுத்திருக்கும் மறுப்புகளை யும் படித்து என் கருத்தையும் தெரிவித்தேன். தமிழகம் செல்லும் பொழுது அவரிடம் நிச்சயம் இதுபற்றிப் பேசுவேன்.


சமீப காலமாக அவர் வெளியில் அதிகம் செல்ல முடியவில்லை;  பார்வையாளர்களையும் தவிர்த்து வருகின்றார். முக்கியமான நிகழ்ச் சிகளில் பங்கு கொள்வதும் , முக்கியமானவர்களிடம் பேசுவதும் மட்டும் தொடர்கின்றது. அவர் உடல் நிலைக்கு ஓய்வு தேவை. இந்த இடை வெளியால் மாற்றங்களின் தோற்றத்தை அவரால் சரியாக உணர முடியவில்லையா?


இப்பொழுது எங்களுக்குள் மோதல்; அது சரி, சுதந்திர அடிமை என்று ஏன் கூறியிருக்கின்றார்? இந்த வார்த்தை அவரின் முழுக் கூற்றையும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய சூழலைத் தோற்றுவித்துள்ளது.


சிந்தித்தேன். அதுமட்டுமன்று, ஒருவனிடம் இதைக் கூறி அவன் கருத்தைக் கேட்டேன். ஜெயகாந்தன் கூறியதில் தவறில்லை என்று கூறி, விளக்கமும் கொடுத்தான். அவன் வேறு யாருமில்லை. அமெரிக்க மண்ணில், சுதந்திரக் காற்றில் வளரும் என் பேரன்தான் விளக்கம் கூறியது. அதுமட்டுமல்ல. அந்த விளக்க உரை என்னைச் சிந்திக்கவும் வைத்தது.


அடுத்து அதன் விரிவைப் பார்க்கலாம்.

பகுதி - 26

ஒரு சமயம் ஆழ்வார்ப்பேட்டைக் குடிலுக்கு நானும் என் கணவரும் சென்ற பொழுது என் மகனையும் கூட்டிச் சென்றிருந்தேன். என் மகனுக்கு அப்பொழுது பதி னான்கு வயது. ஆனாலும் அவனும் என்னைப் போல் படிக்கத் தெரிந்த நாள் முதலாய் வாரப்பத்திரிகைகள், மாத இதழ்களுடன் கதைப் புத்தகங்களும் படிப்பான். அவன் ஜெய காந்தனிடன் கேட்ட ஒரு கேள்வி என்னை யும் என் கணவரையும் தூக்கிவாரிப்போட வைத்தது .

“மாமா, உங்க கதை ஒண்ணும் புரியல்லே; எங்களுக்குப் புரியறமாதிரி எழுதினா என்ன?”

“நீ ரொம்பச் சின்ன பையன். உன் அம்மாகிட்டே கேட்டிருந்தா அவங்க உனக்கு அர்த்தம் சொல்லி இருப்பாங்களே”

என் மகன் பேச வாயைத் திறந்தான். ஆனால் அதற்குள் என் கணவர் அவனைத் தமக்கருகில் இழுத்து சைகை யால் அவனைப் பேச விடவில்லை. இதை ஜெய காந்தன் கவனித்தாரா என்று நானும் பார்க்கவில்லை. அப்பொழுதே என் மகன் கல்கி, சாண்டில்யன் கதைகள் படிக்கின்றவன். அவனுடைய மகன், அதாவது என் பேரன் தன் பதினாறு வயதில் ஜெயகாந்தனின் மேடைப் பேச்சுக்கு அர்த்தம் சொன்னான். கால இடைவெளியில், மனிதனின் சிந்தனாசக்தி எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டது என்று வியந்தேன்.

Frustration ! என் பேரன் சொன்ன முதல் வார்த்தை.
தமிழில் சொன்னால் விரக்தி ! பின்னால் நீண்டதொரு விளக்கமே கொடுத்தான். “பலவிஷயங்களுக்கு அடிமையாகி விட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை” இது ஆற்றா மையில், ஆதங்கத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. பெண் வெளிவருவதும், விருப்பம்போல் அலங்காரம் செய்து கொள்வதும் மட்டும் பெண்ணின் நிலை முன்னேறிவிட்டதாகாது. இது ஒரு சோடாபுட்டி திறக் கப் டுவது போல். இத்தனை நாட்கள் அடைபட்டுக் கிடந்தவர்கள் சுதந்திரக்காற்றை நுகரவும் மகிழ்ச்சியில் கொஞ்சம் அதிகமாகவே தங்களைக் காட்டிக் கொள்கின் றனர். கவனமின்றி சோடா பாட்டிலைத் திறந்தால் முகத்தில் அடிபடும். அதே போல சுதந்திரத்தையும் புரிந்து கொண்டு நடக்காவிட்டால் பாதிக்கப் படுவது பெண்களே. கிடைத்த சுதந்திரத்தில் தன்னிலை மறப்பது ஆபத்தானது. இத்தகைய சுதந்திரத்திற்கு அடிமையாகி விடுவது கொடுமை. இதைத்தான் ஜெயகாந்தன் கூறியிருக்கின்றார். இன்றைய போக்கு எந்தச் சிந்தனை யாளனையும் வருந்தச் செய்வதே.

நானும் பேரனும் நிறைய பேசி விவாதித்தோம். அவனும் பல நாடுகளைப் பார்த்துவிட்டான். அமெரிக்கா ஒரு சுதந்திர பூமி. இப்பொழு தெல்லாம் வயதுக்கு மீறிய வளர்ச்சியும் காண முடிகின்றது. அவன் உறவுகள் இந்தியாவில் இருக்கின்றனர். அந்த உள்ளம் ஒப்பிட்டுப் பார்த்திருக்கின்றது. அதனால்தான் இப்படி பேச முடிந்தது.

பெண்கள் முழுமையாக சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால் “சுதந்திர அடிமை “என்ற சொல்லின் அர்த்தத் தைப் புரிந்து கொள்ள வேண்டும். நானும் ஒரு போராளி. பெண்ணியம் பேசுகின்றவள். இன்று காணும் காட்சிகள்தானா முன்னேற்றத்தின் அடையாளங்கள்?


கல்வி கற்பதில் கொஞ்சம் முன்னேற்றம். வீட்டுக்குள் தான் பெண் என்ற நிலையிலும் சிறிது மாற்றம். பெண் என்று சொல்லும் பொழுது அது நகர்ப்புறம் மட்டும் பார்த்துப் பேசுதல் சரியன்று. நம் நாட்டில் கிராமங் கள் அதிகம். விவசாயத்தில் வேலை பார்க்கும் பெண்கள், கட்டட வேலை போன்ற பணிகளில் தினக்கூலி பெறும் பெண்கள், ஆலைகளிலும், , உடைகள் தைப்பது போன்ற சிறு கைத்தொழில்களிலும் வேலை பார்க்கும் பெண்கள் சொல்லிக் கொண்டே போகலாம். எண்ணிக்கையில் அதிகமா னவர்கள் இவர்கள் தான். இவர்கள் நிலை என்ன?


சினிமா, தொலைக்காட்சி, மாடலிங் இருக்கும் பெண்க ளின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி பார்த்தால் மிகவும் குறைவு. விட்டில் பூச்சி விளக்கில் விழுவது போல் கவர்ச்சிக்குப் போய் எத்தனை பெண்களின் வாழ்க்கை ஏமாற்றத்திலும், நிம்மதியற்ற வாழ்க்கை யிலும் முடிந்திருக் கின்றது. பட நாயகர்களைப்போல் நாயகிகள் வாழ்க்கை கிடையாது.. சிறிது காலமே பிரகாசிக்க முடிந்த தொழில். அதிலும் எத்தனை பிரச்சனைகள் !?


பெண்களின் இன்றைய வாழ்க்கை தொகுத்து விளக்கி எழுதப் பட வேண்டும். உழைக்கும் பெண்கள் சார்பிலே நான்காண்டுகள் பன்னாட்டு அமைப்பில் இருந்த பொழுது பல நாட்டுப் பிரச்சனைகளையும் ஆய்வு செய்திருக்கின்றேன். சுருங்கச் சொல்ல முடியாதது. ஒன்று மட்டும் என்னாலும் கூற முடிகின்றது


Exploitation ! சூழ்நிலையில் சுருட்டல் அல்லது சுரண்டல் என்று சொல்ல லாமா? இது யாரால் என்ற கேள்வி தேவையில்லை. முதலில் பெண்ணே உணர வேண்டும். அவளுடைய தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பெண் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அமைப்புகளும் ஆரம்பத்துடன் தங்கள் பணியை நிறுத்தாமல் தொடர்ந்து கண்கானித்து ஆவன செய்ய வேண்டும். உடனுக்குடன் போராடி உரியவர்களிடம் பிரச்சனைகளை எடுத்துப்போய்த் தீர்வு காண முயல வேண்டும்.

முதலில் அரசியலில் பெண்கள் நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். மனம் கொதிக்கின்றது. அரசியலில் பெண்களின் தலைமை எத்தனை சாடல் களுக்குள்ளாகின்றது. அரசியல் என்றால் தாக்குதல் இல்லாமல் இருக்காது, தெரியும். கொள்கைகளைக் குறை சொல்லட்டும்; தவறுக ளைச் சுட்டிக் காட்டட்டும்.  நன்றாகத் திட்டிக் கொள்ளட்டும். ஆனால் ஒரு பெண்ணை ஆணுடன் சேர்த்துக் கொச்சைத்தனமாகப் பேசுவது சரியா? அழகு தமிழில் ஆபாசத்தை விஷமாகக் கலக்கின்றார்களே!


ஒரு சம்பவம் கூறியாக வேண்டும். 1990 -ஆம் ஆண்டு. ஒரு அரசியல் பிரமுகர் ஒரு பெண்னை மிகக் கேவலமாகப் பேசினார். பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அப்பொழுது நான் பங்களூரில் இருந்தேன். என் தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடமாகிக் கட்டிலில் கிடந்தார்கள். அவர்களை முழு நேரம் கவனித்து வந்தேன். இந்தச் செய்திகளைப் படித்த வுடன் என்னால் இருக்க முடியவில்லை. என் தாயாரைக் கவனிக்க ஒருவ ரைத் துணைக்கு வைத்து விட்டு சென்னைக்கு ஓடி வந்தேன். வந்தவுடன் திருமதி சரோஜினி வரதப்பனிடம் குமுறினேன். இன்னும் பல பெண் களைச் சந்தித்தேன். மவுனமாக இருக்கக் கூடாது  என்று கூறினேன். உடனே ஒரு கண்டனக் கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது. கூட்டம் சிறியது தான்; ஆனாலும் பெண் அரசியலுக்கு வந்தால் இப்படி கேவலப்படுத்தக் கூடாது என்று ஒருமித்துக் கூறி னோம். நாங்கள் நடத்தியது அரசியல் கூட்டமன்று; அது போதாது என்று தோன்றிற்று. ஒரு மகளிர் அமைப்பின் சார்பில் ஓர் அறிக்கை யும் கொடுத்தோம், ” நீயா சொன்னாய்? ” என்று . அந்த அறிக்கையில் எங்கள் மன வலியை விளக்கமாக எழுதி அனுப்பி யவள் நான்தான். இன்றும் அந்தப் பத்திரிகை அலுவலகத்தில் அதன் படி இருக்கும்.


இதை நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் பெண்கள் அவச் சொல்லால் பழிக்கப்படும் பொழுது பெண் அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும். அரசியல் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தா லும் கீழ்த்தரமான பேச்சை அனுமதிக்கக் கூடாது


ஒரு அரசியல்வாதி தன் கட்சியைச் சேர்ந்த பிரமுகரி டம், “அவனுக்கு சரியாகப் பேசத் தெரிய வில்லை “ என்று புகார்சொன்ன பொழுது பிரமுகர் கூறிய பதில்.” இப்படிப் பேசுகின்றவர்களும் வேண்டும், அப்படிப் பேசுகின் றவர்களும் வேண்டும்” என்பதுதான். நடுத் தெருவில் அரசியல் மேடை களில் பெண்ணை வார்த்தைகளால் நிர்வாணப்படுத்திப் பேசுவதும் அதைக் கேட்டு மக்கள் கைதட்டிச் சிரிப்பதுவும் கொடுமையாகப் பட வில்லையா? இதுவா நாம் கற்ற நாகரீகம்? இது ஒரு வகையான விபசாரமாகத் தெரிகின்றதே! அசிங்கப் பேச்சை ரசித்தவன் அவன் முகத்தை தன் மனைவியிடன், மகளிடம், ஏன் தாயிடம் எப்படி காட்ட முடிகின்றது?!

ஒரு பெண் அரசியல்வாதி ஒரு ஆணை விமர்சிக்கும் பொழுது, “உனக்கு எத்தனை சொந்த வீடுகள்?, எத்தனை சின்ன வீடுகள்,? எத்தனை ஒட்டு வீட்டுகள்?” என்று கேட்டால் அந்த ஆண்கள் தன் முகத்தை எப்படி மறைப்பார்கள்?. பெண்களுக்கு இப்படிப் பேசும் வழக்கம் இல்லாதிருப்பது அவர்களுக்கு ஆதாய மாகிவிட்டது.

பெண் அமைப்புகள் அரசியலுக்கப்பால் இது போன்ற பிரச்சனைகளைக் கண்காணித்து கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்.

ஜெயகாந்தனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அவர் பேசியது சரியில்லை என்று துடிக்கின்றோமே ! அரசியல்மேடைகள் ஆபாசப் பேச்சுக்களை அனுமதித்துக் கொண்டு இப்படி மவுனமாக இருப்பது சரியா?

திருமதி இந்திராகாந்தி அம்மையாரையும், செல்வி  ஜெயலலிதா அவர்களையும் இதே தமிழகத் தில் எப்படியெல்லாம் பேசினார்கள்?! வெளிப்படையாக எழுத முடியவில்லை. கூசுகின்றது. நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல. அரசியல்வாதிகள் எல்லோரையும் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன். இந்த முதியவள் ஒரு தாயாய் இருந்து வேதனையுடன் வேண்டிக் கொள்கின்றேன்-

“ பெண்மேல் இது போன்று சேற்றை இறைக்காதீர்கள்”
“ஒரு பெண் நள்ளிரவில் தெருவில் தனியாகப் போய்விட்டு என்று பத்திரமாகத் திரும்புகின்றாளோ அன்றுதான் சுதந்திரநாடு என்று சொல்ல வேண்டும்.”
சொன்னவர் யாரென்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். எட்டு வயதுச் சிறுமிகூட பாலியல் கொடுமைக்காளாகிப் படுகொலை செய்யப்பட்டு  குப்பையில் வீசப்படும் கொடுமை தொடர்கின் றதே ! பெண்சிசுக் கொலை இன்னும் நிற்கவில்லையே!? எல்லாத்துறைகளிலும் பெண்கள் நுழைந்துவிட்டார்கள். உண்மை, மறுக்கவில்லை; ஆனால் எத்தனைபேர் இப்படி உயர் நிலையில் இருக்கின்றார்கள் ? இவர்கள் அடையாளப் பொட்டுகள். முன் னேற்றப்பாதையில் பெண்போக வேண்டிய தூரம் மிக மிக அதிகம். இதுவே நான் அதிகமாகச் சொல்லிவிட்டேன். தனி அரங்கத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டும்.

ஜெயகாந்தன் இதுவரை எழுதிய கதைகளில் பெண் களை அனுசரணையுடன்தான் பார்த்திருக்கின்றார். விபசாரி ளைக் கூட வெறித்தனத்தில் அதைச் செய்ய வில்லை, வயிற்று பிழைப்புக்காகச் செய்வதா கவே காட்டுகின்றார்.

ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் என்ற கதை யில்கூட ஒரு பெண்ணின் நிலையில் இருந்து கொண்டுதான் கல்யாணி என்ற பாத்திரத்தை நகர்த்துவார்; ரங்கனையும் யதார்த்தமாகக் காட்டுவார்
கதைகளில் மட்டுமன்று; வாழ்க்கையிலும் பெண்களி டம் அவர் காட்டும் மரியாதையைப் பார்த்திருக் கின்றேன்.

சிலரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் வாழ்க்கை நடை முறையில் நடந்து கொள்வதற்கு வித்தியாசங்கள் இருக்கும். ஜெயகாந்தன் குடும்பத்துடன் பழகியவள் நான். ஜெயகாந்தனும் என் குடும்பத்துடன் பழகியவர். எங்கள் இருவரின் குறைகளும் நிறைகளும் இருவரும் அறிவோம். அவரைபற்றி அறிய சில காட்சிகளைக் காட்ட விரும்புகின்றேன்

எனக்கு ஒரு தோழி. கேரளத்து அழகி. சமுதாயப்பணியில் சிறந்தவள். ஆனால் அவளின் தோற்றம் பல ஆண்களின் கவனத்தை ஈர்த்து அவளைத் தவறாக நினைக்க வைத்தது. வெறும் நினைப்புடன் இருந்தி ருந்தால் பரவாயில்லை. ஆனால் அவள் போகு மிடங்களில் அவளத் தவறாக அணுகினர். அவள் வருத்தத்துடன் என்னிடம் கசப்பு அனுபவங்களைக் கூறுவாள்.இவைகளுக்குக் காரணமும் அவளே. மேடை நாடகத்திற்குச் செல்வது போன்ற ஒப்பனை. நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் “இதற்கு எனக்கு சுதந்திரம் கிடையாதா” என்று கேட்பாளே தவிர அவள் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. பிரச்சனைகளும் தொடர்ந் தன.


ஜெயகாந்தனிடம் எல்லாம் கூறி ”அவளை அழைத்து வருவேன்; புத்தி மதி கூறுங்கள்” என்று சொன்னேன். அப்பொழுது அவர் மவுனமாக இருந்தார். அவளைக் கூட்டிச் சென்றேன். அவளும் அவரிடம் மனம் விட்டுப் பேசினாள். ஆனால் அவர் பதிலே கூறவில்லை. எனக்கு அவர் மீது கோபம் வந்தது. அங்கிருந்து அவளைக் கூட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன்.

பின்னால் அவரைச் சந்திக்கும் பொழுது சண்டை போட்டேன். அவர் சிரித்துக் கொண்டே “அலங்காரம் செய்து கொள்வதுஅவர்கள் விருப்பம். ஒருவர் சுதந்திரத்தைப்பற்றி இன்னொருவர் விமர்சனம் செய்யலாமா? ” என்று கேட்டார். அவர் அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை; அடுத்து அவர் கேட்ட ஒரு கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது.
“சீதாலட்சுமி, என்றாவது உங்கள் தோற்றம் பற்றி யோசித்திருக் கின்றீர்களா? முரண்பட்ட மனிதர்களிடம் பழகுகின்றீர்கள். நீங்கள் யார் யாரிடம் பழகுகின்றீர்கள் என்பதும் அவர்களுக்கும் தெரியும். உங்களை ஏன் மதிக்கின்றார்கள்?” என் கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களும் கேள்விகளே.

நான் எறிந்த அம்பு என் மேலேயே திரும்பப் பாய்ந்தது. என் நெருங்கிய உறவினர் ஒருவர் என் தோழியிடம் அவள் அலங்காரத்தைப்பற்றி விளக்கினார். விழாக்களுக்கு, திருமண வைபவங்களுக்கு போகும் பொழுது அலங்காரங்கள் செய்வது தவறில்லை. செய்யும் பணி சமுதா யப்பணி. அப்பொழுது அலங்கரித்துக் கொண்டு சென்றால் ஆளைக் காட்டிப் பணம் கேட்பது போலத்தான் நினைப்பார்கள். அணுகலும் மோசமாகத்தான் இருக்கும். அதில் சுதந்திரம் பேசுவது சரியா?

எதுவும் அந்தச் சூழலுக்குப் பொருந்தி இருக்க வேண்டும். ஒன்று தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது வருவதை எதிர் கொள்ள வேண்டும். புலம்புவதில் அர்த்தமில்லை; அவர் என் தோழியுடன் நிறுத்தி யிருந்தால் பரவாயில்லை. என்னைப் பற்றியும் பேச ஆரம்பித்தார் . “இப்பொழுது கூட இந்த சீதாவைப் பாருங்கள். புடவையும் ரவிக்கையும் பொருத்தமான நிறத்தில் இருக்கின்றதா? அவளுக்குத் தன்னைப்பற்றிய சிந்தனையே கிடையாது. அதுவும் சரி என்று சொல்ல மாட்டேன். அலுவல கங்களுக்குப் போகும் பொழுது கொஞ்சம் நாகரிகமாக உடை அணிய வேண்டும். நான் அலங்காரத்தைச் சொல்லவில்லை. ஆனாலும் அவள் பழகும் முறையும் அவள் பேச்சும் அவள் குறையை மறந்து அவளுடன் எல்லோரும் பழகுகின்றனர். தோற்றத்தால் மரியாதையும் பெறலாம்; மரியாதை யையும் இழக்கலாம். தோற்றத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அனுபவத்தில் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரம் என்று எதை யும் செய்தல் கூடாது. கடல் சுதந்திரம் வேண்டிக் கரையைத் தாண்டினால் என்னவாகும்?

இந்த சந்திப்பில் என் தோழி மாறிவிட்டாள். ஆனால் என்னால் மாற முடிய வில்லை. இப்பொழுதும் பல நாடுகள் சுற்றிய பொழுதும் உடைகள், அலங்காரத்தில் எனக்கு அக்கறை வரவில்லை. இது என் சுபாவம் .நான் கேட்டுக் கொண்டும் ஒரு பெண்ணுக்குப் புத்திமதி கூற அவர் விரும்ப வில்லை. அதே நேரத்தில் என்னைக் கேள்விகள் கேட்டு அதையே பதில் களாகக் காண வழிவகுத்திவிட்டார். பெண் மனத்தைப் புண்படுத்த மாட்டார் . அவரது வாழ்க்கைத் துணைவிகள் இருவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் மூவரிடமும் பேசிவிட்டுத் தான் வீட்டை விட்டுப் புறப்படுவேன்.தனித்தனியாகச் சில வினாடிக ளாவது அரட்டையடிக்க வேண்டும். என் தோழி ருக்மிணி அவர் வீட்டுக் கருகில் குடி இருக்கின்றாள். இப்பொழுது அவளும் அந்தக் குடும்பத் துடன் பழக ஆரம்பித்திருக்கின்றாள். அவள் எப்பொழுது சென்றா லும் மூவரும் என்னைப் பற்றி விசாரிப் பதைக்கண்டு அவளுக்கு வியப்பு ! உடனே எனக்கும் தகவல் அனுப்பிவிடுவாள்.

சென்னையில் அக்காலத்தில் பிரபலமாக இருந்த நாடக் குழுக்களில் ஒன்றான சேஷாத்திரி குழு நாடங்களில் ஜெயகவுசல்யா நடித்துவந்தார். வானொலி நாடகங்களிலும் நடித்தார். படித்தவர். ஜெயகாந்தனுக்கு உதவி யாளராக வந்தார். கவுசல்யாவும் சிறந்த சிந்தனை யாளர். அவர் பேசினால் சில நேரங்களில் ஜெய காந்தனுடன் பேசுகின்றோமோ என்று தோன்றும். அந்தப் பெண்ணைத் துணைவியாக வரவேண்டும் என்று விரும்பினார் ஜெய காந்தன். நினைப்பு வந்த அதே வினாடியில் தன் எண்ணத்தை கவு சல்யாவிடம் வெளியிட்டார். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் கொடுத்து விட்டார்.ஒரு நொடியில் நடந்த ஒப்பந்தம். உறவிலும் இணைந்தனர்.


ஜெயகாந்தனுக்கு காதல்செய்வது, அதற்காகக் காத்தி ருப்பது, பின்னால் ஓடுவது இவற்றில் பொறுமை கிடையாது. எண்ணத்திற்கு முரணாகத் தெரிந்தால் விலகிவிடுவார். மனத்தில் சுமையாக்கி அல்லல்பட மாட்டார்.

அவர் முதல் திருமணத்தைப் பற்றியும் பேசியிருக்கின்றார் ; மாமன் மகள். அதாவது அவருக்கு முறைப் பெண். மாமனோ இவருடைய கல்விக் குறையையும், நிலையான வேலையின்மையையும் அடிக்கடி சுட்டிக் காட்டிப் பேசி இருக்கின்றார். எப்படி இவனுக்குத் தன் மகளைக் கொடுப்பது என்றும் சொல்லி இருக்கின் றார். நம் ஜெயகாந்தன் நேராகத் தன் முறைப் பெண்ணி டம் சென்றார் “இங்கே பாரு, உங்கப்பா சொல்றது சரி. எனக்கு நிலையான வேலை இல்லை. அதனால் நீ படித்து சீக்கிரம் ஒரு வேலை யைத் தேடிக் கொள் ;உனக்கு வேலை கிடைத்தவுடன் நமக்குக் கல்யாணம்”

மனத்தில் நினைத்துவிட்டால் அதைச் சொல்லிவிட வேண்டும். அத்தை மகன் சொல்லிவிட்டாரே! முறைப்பெண்னும் படித்து டீச்சராகி விட்டார். மாமனுக்குப் பாசம் இல்லாமல் போகுமா? உடனே திருமணத்தை நடத்தி வைத்தார். கவுசல்யாவை நடிக்கக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. அவருக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார். நாடகத்திற்கு கவுசல்யா நடிக்கப் போகும் காலங்களில் இவரே கொண்டுபோய் விடுவார். கவுசல் யாவாகவே நடிப்பதை நிறுத்தினார். வீட்டில் பெண்களை மரியாதை யுடன் நடத்துவார். சுதந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் தெரிந்த குடும்பம்.

அவரைப்பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இவற்றை எழுதுகின்றேன். கடைசியாக அவர் வீட்டிற்குச்சென்ற பொழுது என்னுடன் நிலா ரசிகனும், சஹாராத் தென்றலும் வந்திருந்தனர். அப்பொழுது நடந்த சுவையான காட்சிகள் சில காணலாம்.

அடுத்துப்பார்ப்போம்.

பகுதி -27

நிலாரசிகனும், சஹாராத் தென்றலும் குழுமம் அளித்த செல்லப் பிள்ளைகள். இருவரும் கவிஞர்கள். எங்கு சென்றாலும் இக்கவிதை களைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பேன். ஜெயகாந்தன் இல்லத்திற்கும் அப்படியே சென்றேன். ஏற்கனவே ஒரு முறை நிலா ரசிகனை அங்கு அனுப்பியிருக்கின்றேன். எத்தனை முறையானாலும் அவர் வீட்டிற்குச் செல்வதில் தனி மகிழ்ச்சி என்று கூறுவான்.


ஜெயகாந்தனே வரவேற்றார். உடல்நலம் மோசமாகி சிகிச்சைபெற்று உயிருடன் மீண்டவர். அவரைப் பார்க்கவும். பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன். அவர் உட்கார்ந்த நாற்காலிக்கடுத்து நான் உட்கார்ந்து கொண்டேன். எதிரில் பக்கவாட்டில் இருந்த சோபாவில் அவர்கள் இருவரும் உட்கார்ந்தனர். வழக்கம் போல் டீச்சரம்மா உடனே வந்து சில வினாடிகள் பேசிவிட்டு  விருந்தோம்பலுக்கு வேண்டியன செய்ய உள்ளே சென்றுவிட்டார். அறிமுகம் செய்து கொண்டிருக்கும் பொழுது கவுசல்யா வந்து , அந்த அறையின் வாசலை யொட்டி இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தார். திடீரென்று ஜெயகாந்தன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.


‘சீதாலட்சுமி, நாம் எந்த வருடம் முதலில் சந்தித்தோம்?’

‘ 70ல் ‘

அதற்குப் பிறகு நான் பேசவில்லை ;அவரே எங்கள் சந்திப்புகள், நாங்கள் சேர்ந்து போன பயணங்கள் போன்றவற்றை வந்தவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார். விவரங்கள் ஒருவர் வாய்வழிமட்டும் வரவில்லை.. கவுசல்யாவும் சேர்ந்து விளக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொன்றிற்கும் பிறகு தொடர்ந்து வந்த கதைகள், கதைகளில் அவர் காட்டிய காட்சி களைக் கவுசல்யாதான் விளக்கிக் கொண்டிருந்தார். ஒன்றையும் விடாமல் மனைவியிடம் கணவர் கூறியிருக்கின்றார். ஜெயகாந்தனின் குறிப்பேட்டைப் போல் காட்சியளித்தார் கவுசல்யா. ஒரு கணவனுக்கு மனைவி தோழியாகவும் இருக்க வேண்டும் என்ற சொல்லப்படுவது தெரியும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவு வைத்துக் கொண்டு ஜெயகாந்தனின் மனக்குரலாய் ஒலித்துக் கொந்திருந்தார் கவுசல்யா. குற்றாலத்தில் கசாப்பு கடைக்குப் போகவேண்டும் என்று சொன்னபொழுது நான் தவித்த தவிப்பைக் கூடச் சொல்லியிருக்கின்றார். அந்த அதிசய தம்பதிகளை வியப்புடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன் .

இப்பொழுது அவருக்கு முதுமையும் நோயும் வந்துவிட்டது. பேச வருகின்றவர்கள் கூட கவுசல்யாவிற்குத் தெரிந்து வரவேண்டும். கண்ணை இமை காப்பது போல் காத்து வருவதையும் உணர்ந்தேன். திடீரென்று ஒரு சம்பவம் எனக்கு நினைவிற்கு வந்தது. எனக்கு நாராயணன் என்று ஒரு நண்பர் உண்டு அவர் பெண்களைப் பற்றி எழுதும்  ஆங்கிலப் பத்திரிகைகளின் நிருபர். நானும் அவரும் நடிகர் ஜெமினி கணேசனைப் பார்க்கச் சென்றிருந் தோம். எங்கள் உரையாடல் காரசாரமான விவாதத்திற்குப் போய்விட்டது. நேரம் பறந்து கொண்டிருந்தது. நான் போக வேண்டும் என்றேன். ஏனெனில் ஜெயகாந்தனைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்தேன். எனக்கு எதுவும் சொன்ன நேரப்படி நடக்க வேண்டும்.


ஜெயகாந்தன் பெயரைக் கேட்கவும் அவரைச் சில நிமிடங்கள் புகழ்ந்தார்.  அதன்பின் கவுசல்யாபற்றி ஒரு கதாகாலக்ஷேபமே செய்துவிட்டார். அவர் ஒரு சிறந்த நடிகையென்றும் அவர் நடிப்பதை நிறுத்தியது கலை உலகிற்கு நஷ்டம் என்றும் சொன்னார். அவர் நடித்த தனிக்குடித்தனம் நாடகம்தான் திரைப்படமாகியது. கவுசல்யா மாதிரி கே.ஆர் விஜயா கூட அப்படி நடிக்கவில்லை. அந்த அளவு அற்புதமாக நடிக்கும் திறன்பெற்ற ஒரு பெண்மணி என்று புகழ்ந்தார்.


அத்தகைய திறன் பெற்ற ஒரு பெண்மணி, சிவத்துடன் சக்தி ஐக்கியமானதைப் போல் ஜெயகாந்தனுடன் எண்ணத்திலும் ஒவ்வொரு உணர்வி லும் ஐக்கியமாகி இருப்பதைக் கண்டு பிரமிப்பு அடைந்தேன். அந்த அளவு கணவரின் ஒவ்வொரு அசைவையும் புரிந்து வைத்திருந்தார். அந்தக் கணங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகின்றார்.

பெண்ணுக்கு மரியாதை தருகின்றவர் ஜெயகாந்தன். பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜெயகாந்தனின் மகன் வந்து சேர்ந்து  கொண்டார். பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது. ஜெயகாந்தனும் கவுசல்யாவும் பேசவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் பேசினேன். பிறகு கருத்தாடல் போன பாதை பிடிக்கவில்லை. இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜெயகாந்தனை நான் பார்த்த பொழுது “gossip”  என்று சிரித்துக் கொண்டே மெதுவாகச் சொன்னார்.


“நாம் இருவரும் சேர்ந்து கலைஞரைப் போய்ப் பார்க்கலாமா?”  என்று அவர் கேட்ட பொழுது தலையாட்டி என் இயலாமையைத் தெரிவித்தேன்.ஒரு காலத்தில் நான் விரும்பியதை நினைத்துத்தான் அவர் இப்பொழுது என்னைக் கேட்டார். அரசியல் வட்டத்திலிருந்து விலகி இப்பொழுது அமைதியாக இருக்கின்றேன். என் முகத்தில் எழுந்த கேள்விக் குறியைப் பார்த்து, “நான் இப்பொழுதும் அதே ஜெயகாந்தன் தான்”என்றார்.


நான் புறப்பட எழுந்தேன். மெதுவாக நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு கார் நோக்கிச் சென்றேன். ஜெயகாந்தனும் கேட் வரைத் தொடர்ந்து வந்தார். காருக்குள் ஏறும் முன் அவரைப் பார்த்தேன்
” ஊருக்குப் போகும் முன் வருவீர்களா? ”
” நிச்சயம் வருவேன் ”
காரில் ஏறிவிட்டேன். எங்களையே பார்த்துக் கொண்டிருந்த இரு கவிஞர்களும் “நட்புக்கு இத்தனை சக்தியா?” என்று கேட்டனர். பதில் கூறாமல் கண்கலங்க உட்கார்ந்திருந்தேன். எனக்கும் வயதாகி விட்டது. உயிருக்கு யார் உத்தரவாதம் அளிக்க முடியும்? ஏதோ அவரும் கேட்டார், நானும் பதில் சொன்னேன். ஏதேதோ சிந்தனைகள் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன. சிங்கம் வீட்டுக்குள் அடங்கிவிட்டதா? ஒரு ஜன்னல் இருந்தாலும் அது வழியே சென்று உலகைக்காட்டும்  திறமை பெற்றவர். அவர் ஜன்னலைப்பற்றி எழுதிய கதை மனத்தில் நிழலாடியது .

“இந்த ஜன்னல் வழியாக யார் மொதல்லே பார்த்திருப்பா ? மொதல்லே என்னத்தைப் பாத்துருப்பா ? எனக்கு ஞாபகம் இருக்கற மொதல் நெனவே இந்த ஜன்னல் வழி பாத்ததுதான். ஜன்னலண்டை நின்னுண்டு யாரையோ பாக்கறேனாம். அங்கெ யாரும் இல்லே. அரச மரத்தடியிலே தும்பிக்கையும் தொந்தியுமா ஒரு பிள்ளையார்தான் உட்கார்ந்திருந்தார். பிள்ளையாரைப் பாத்துண்டு நானும் உக்காந்திருக்கேன் பிள்ளையார் மாதிரி. அவர் தெய்வப் பிள்ளையார். நான் மனுஷ்யப் பிள்ளையார்”


ஆழ்வார்ப்பேட்டைக் குடிலுக்குக் கீழே ஒரு கோயிலும் உண்டு. இந்த  ஜெயகாந்தன் பிள்ளையாரும் குட்டைச் சுவருக்கருகில் உட்கார்ந்து கொண்டு அந்த சின்னத் தெருவைப் பார்த்துக் கொண்டே இருப்பார். அங்கே மனிதர்கள் நடமாட்டம் உண்டு. சத்தம் உண்டு. இங்கே கே. கே நகர் வீட்டிலோ ஒரே அமைதி.


“இந்த வீடு ஒரு ரயில் மாதிரி. நான் பிரயாணம் போறேன். எல்லாம் ஓடறது. ரயில்லே போகச்சே நாம் ஓடிண்டிருக்கோம். ஆனா தந்திக் கம்பமும் மரமும் ஓடற மாதிரி இருக்கோன்னோ. ஜன்னல் வழியா பாத்தா அவா ஓடற மாதிரி இருக்கு. யாராவது ஒருத்தர் ஓடினா சரி தான்”
” ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் ”  - இப்பொழுது இவருக்குப் பொருந்தும் தலைப்பு
இப்பொழுதும் அவர் மனத்தில் உலகம் சுழன்று கொண்டுதான் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தமான கதை – ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ புத்தகம் இப்பொழுது என் கையில் இல்லை. அதைப் பற்றி எழுத ஆரம்பித்தால் தொடர் இன்னும் நீண்டுவிடும்.


மனத்தில் ஒரு சுமை இருப்பது போன்று உணர்வு. வீட்டிக்குச் சென்ற பொழுது கோமதியும் அவள் கணவன் சந்துருவும் வந்திருந்தார்கள். கோமதியைப் பார்க்கவும் எனக்கு மகிழ்ச்சி பொங்கியது. திடச் சித்தம் உள்ளவள் இந்த சந்துரு என்னமா ஆடினான் ? எப்படி யிருந்தவன் இப்படி மாறிவிட்டான் என்பதில் வியப்பு. அவன் ஒரு காலத்தில் சபல புத்திக்காரன். மனைவியை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. சட்டென்று ஜெய காந்தனின் கதை ஒன்றில் வரும் காட்சி நினைவில் தோன்றியது.
ஒரு கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் உரையாடல்  -
” நீ என்னைப்பத்தி என்ன நினைக்கறே ? “
” என்னோட புருஷன்னு நினைக்கறேன் ”
” என் மேலே உனக்கு ஏதாவது கோபம் இல்லே வருத்தம்....”
 “ம்ஹம் ”
கவலை
இல்லை
” ஏன் இல்லை ?”
”ஏன் இருக்கணும் ?”
அவனது கேள்விகளுக்கெல்லாம் அவளால் பதில் சொல்ல முடிந்தது.  அவனது கேள்விகளுக்குப் பதிலாய் ஒரு கேள்வியையே திருப்பி போட்ட பொழுது அந்தக் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
(கேள்விக்குக் கேள்வி விடையாய்த் தருவது ஜெயகாந்தன் வழக்கம். நான் அனுபவித்திருக்கின்றேன்.)
அவன் ஆர்வத்திற்கு ஓர் அடி.
பதில் கூறமுடியாத நிலையில் தன் இயலாமையில் அவளிடம் ஏதோ உயர்வை உணர்ந்தான். அவளை அவன் ரசிக்க ஆரம்பித்தான் ;
இந்த ரசனைகளைப்பற்றி எத்தனை எழுதினாலும் போதவில்லை.
ஒரு வழக்குச் சொல் உண்டு. ஓடுகின்றவரைத்தான் விரட்டுவார்கள். எதிர்த்து நின்றால் அடங்கி விடுவார்கள். மனிதன் இல்லறத்துக்கும் இது பொருந்துமோ ? பொதுப்படையாகக் கூறிவிட முடியாது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். சில நேரங்களில் சில மனிதர்கள்!
அப்பப்பா போதும். கொஞ்சம் ஜெயகாந்தனைப் பற்றிய நினைவுகளி லிருந்து ஒதுங்கி வந்தவர்களைக் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் ஊருக்குப் புறப்படும் முன்னர் அவர் வீட்டிற்குச் சென்றேன். இம்முறை என் கணவரும், என் தோழி புனிதவதி இளங்கோவனும் உடன் வந்தார்கள். முதலில் டீச்சரம்மா வந்து கொஞ்ச நேரம் எங்களுடன் பேசினார்கள். பின்னர் ஜெயகாந்தனும் என் கணவரும் பேசினார்கள். கவுசல்யா வரவும் புனிதத்தின் முகம் மலர்ந்தது
என் தோழி புனிதவதி இளங்கோவன் அவர்கள் வானொலியில் வேலை பார்த்து , பின்னர் ஓய்வு பெற்றவர்கள். நாடகப் பிரிவில் இருந்ததால் அவர்களுக்குக் கவுசல்யாவை நன்றாகத் தெரியும். அவ்வளவுதான் இருவரும் மலரும் நினைவுகளில் எங்களை மறந்துவிட்டனர். ஆனால் நாங்களும் அந்த நினைவுகள் சென்ற திசையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். என் கணவர் அந்த உரையாடலை மிகவும் ரசித்தார்.
எனக்கும் பல புதிய செய்திகள் கிடைத்தன. இந்த சந்திப்பில் ஜெய காந்தனுடன் அதிகம் பேச முடியவில்லை. பார்த்ததில் ஒரு மன நிறைவு.
வெளியில் வந்தவுடன் என் கணவர் கவுசல்யாவைப் பற்றிக் கூறியது
” Very intelligant ... sharp “
ஜெயகாந்தன் இப்பொழுது ஏன் எழுதுவதில்லை?
பலரும் நினைப்பதுதான்
எந்த எழுத்தாளனுக்கும் ஒரு காலக் கட்டத்தில் ஓட்டம் நின்று விடு கின்றது. ஒரு சிலர்தான் விதிவிலக்கு. எழுதுபவன் மாறிவிடுகின் றானா அல்லது அந்த எழுத்தைப் படிக்கும் மனிதர்களின் ரசனைகளின் மாற்றங்களா? என் கணவருக்குப் பதில் சொல்ல வேண்டும் .
இப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் நையாண்டி அரசியல், சினிமா, ஆன்மீகம் இப்படியெல்லாம்தான் வருகின்றன. சிறுகதைகள் ஒன்றி ரண்டு வந்தாலே அதிசயம். தொடர்கதை படிக்கும் பெண்கள் தொலைக் காட்சிப் பெட்டிக்குமுன் ஐக்கியமாகிவிட்டார்கள். மற்றவர்களைக் கணினி தன் பக்கம் ஈர்த்துவிட்டது. மிச்சமுள்ளவர்களுக்கும் வெட்டிப் பேச்சும் சினிமாவும் இருக்கின்றன; ஆனால் இப்பொழுது புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கின்றது .
கலைஞனுக்கு ரசிகர்கள் தேவை.
எழுத்தாளனுக்கு வாசகர்கள் தேவை ..
அப்பொழுதுதான் உற்சாகமாக அவர்கள் தங்கள் திறமையைக் காட்டும் ஆர்வம் பெறுவர். இப்பொழுது சூழல் மாறிவிட்டது. பிரபலமான ஒன்றைக் கேலியாக விமர்சனம் செய்தால், கேலி செய்பவ ரும் பிரபலமாகி விடுவார். எழுத்து, பேச்சு, அரசியல் எல்லாவற்றிலும் இதே நிலைதான்.


இப்பொழுதும் ஜெயகாந்தனின் புத்தகங்களுக்கு மவுசு உண்டு. எழுதியது போதும் என்று தனக்குள் சமாதானம் செய்து கொண்டு எழுத்தாளர்கள்   ஒதுங்கி விடுகின்றார்கள். அவர் எழுதுவதில் ஏன் தேக்க நிலை என்று நான் கேட்டதில்லை.  இந்த நாட்டில் பத்திரிகையில் எழுதுகின்றவன் பணக்காரனாக முடியாது. என் கணவரிடம் ஒரு பெரிய விளக்கமே கொடுத்தேன். அவரும் அதனை ஒப்புக் கொண்டார்.

ஜெயகாந்தனுடன் நடந்த உரையாடல்களில் பெரும் பகுதி என் பணியிடத்துப் பிரச்சனைகள்தான். அக்கினி பிரவேசம், அதனைத் தொடர்ந்த கங்காவின் கதை பற்றிப் பேசியிருக்கின்றோம். அவர் பத்திரிகை உலகில் உச்சத்தில் இருந்த பொழுது எனக்கு அவர் பழக்கமில்லை. பழகியபிறகு அவர்  எழுத்தில் அதிகமாக உரை யாடியது அவர் எழுதிய ’ஜெய ஜெய சங்கர’ பற்றித்தான். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவர் அதனை எழுதி வரும் பொழுது நான் காஞ்சியில் இருந்தேன். சங்கர மடத்திற்குப் பக்கம் வீடு. செங்கல்பட்டு மாவட்ட அதிகாரி யாக இருந்தேன். காஞ்சிக்கு வருகின்ற பார்வையாளர்களில் பலர் மடத்திற் கும் செல்வதுண்டு. நானும் உடன் செல்ல வேண்டியிருக்கும். மஹாப் பெரியவரைப் பார்க்கத் தேனம்பாக்கமும், கலவைக்கும் செல்வதுண்டு
அந்தத் தொடரை எழுதும் பொழுது எழுந்த விமர்சனங்கள் கொஞ்ச மல்ல. ஆனால் அதுபற்றி எதுவும் அவரிடம் நான் பேசியதில்லை. உணர்ச்சிப் பிரவாகமாக ஓடிவரும் சிந்தனையை தடுக்கவோ, அல்லது திசை மாறிச் செல்ல வைப்பதோ எனக்கு உடன்பாடில்லை. எப்பொழுதும் நான் பேசுவேன். அவர் பதில் கூறாமல் சிரித்துக்
கொண்டே கேட்பார். இப்பொழுது அவர் பேசிய பொழுது நான் மவுனம் காத்தேன். அவருக்கும் பல விமர்சனங்கள் தெரியும். இந்தக் கதை எழுதும் பொழுத்துதான் அவரிடம் ஒரு தவிப்பைக் கண்டேன். அவர் நினைத்தவை, சொன்னவையெல்லாம் எழுத்தில் முழுமையாகக் கொண்டு வரவில்லை .

ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவ நேரம் வந்தவுடன் இடுப்பு வலி எடுக்கவும் ஒரு தவிப்பு இருக்குமே அது போன்ற ஒரு நிலையை அவரிடம் கண்டேன். பலருக்கும் அவர் எழுத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். மாற்றுக் கருத்து என்பது உலகில் இயல்புதானே !

’ஜெய ஜெய சங்கர’ இதை ஜெயகாந்தனின் ஆத்ம ராகமாய் உணர்ந்தேன்.
அவருடைய புத்தகங்கள் நான்கும் எப்பொழுதும் என்னுடன் இருக்கும்.  எனவே அவை பற்றி எழுதாமல் ஜெயகாந்தன் தொடரை என்னால் முடித்தல் இயலாது.

புத்தகத்தைத் திறந்தேன் .முன்னுரைக்கு முன்னே முதன்மையாகக் காணப்பட்ட வரிகள் என்னை அங்கேயே தங்க வைத்தன. மஹாப்பெரியவரின் வாசகங்கள். எக்காலத்திற்கும் பொருந்தும் அறிவுரைகள்.
மனித நேயமும், உலக நன்மையும் ஒவ்வொருவரின் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

ஈஸ்வரோ ரக்ஷது!

” பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும்தான் இன்றையப் பெளராணிகர்கள். சூதரும் பெளராணிகர்களும் எப்படி பிரச்சாரம் செய்தார்களோ அவ்விதமே செய்ய வேண்டியது இன்றையப் பத்திரிகைக்காரர்கள், எழுத்தா ளர்களின் கடமை .ஜனங்களுக்குப் பிடித்ததையே சொல்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாச்சாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல.  ஜனங்களுக்கு ஆத்மாவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதயபூர்வமான  எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு அதில்  ருசி பிறக்கும். “நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்கிற கடமை  உணர்ச்சியைப் பெற வேண்டும்.இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெற வேண்டும் .”

                                                     

                                                                    -   ஸ்ரீ சந்திரசேகரேந்திர  ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
பங்களிப்பாளர்கள்

Dev மற்றும் Ksubashini

"http://www.heritagewiki.org/index.php?title=ஜெயகாந்தன்&oldid=6533" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2011, 07:04 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 26,309 முறைகள் அணுகப்பட்டது.