நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 10

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முனைவர்.க.சுபாஷிணி

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.கி.இரா.சங்கரன் அவர்களின் “ தமிழகத்தின் கடல்சார் வரலாற்றில் வணிகப் பொருள்கள்” என்ற கட்டுரை.

​தமிழக எல்லை தாண்டி அருகாமையில் இருக்கும் இலங்கையில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது போல எகிப்தின் செங்கடல் துறைமுகங்களில் தமிழ் தொல்லெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. காலத்தால் பிற்பட்ட உரைகல் ஒன்று தாய்லாந்தில் கிடைத்துள்ளது. இவை வெவ்வேறு பகுதிகளில் தமிழர்கள் பன்னெடுங்காலமாக வணிகம் தொடர்பில் கடல் பயணங்களை மேற்கொண்டமையை உறுதி செய்வனவாக இருப்பதை இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.

கடல்வணிகத்தில் சந்தையாக்கப்பட்ட பொருட்களாக உயிருள்ள பொருட்களான பறவைகள், விலங்குகள், மற்றும் மருத்துவ குணம் கொண்ட கற்பூரம் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. கற்பூரத்தின் மருத்துவத் தன்மைகளின் சிறப்பினால் இவை பெரிதாக வணிகப்பொருளாகின.

கடற்வணிகத்தில் இடம்பெற்ற மற்றொரு பொருள் பாக்கு. இதுவும் அதன் மருத்துவ குணத்திற்காகவே வணிகப்பொருளில் முக்கியப் பொருளாக அமைந்தது.

அரபு நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவற்றுள் குதிரைகள் முக்கியமானவை. பத்துப்பாட்டு, காவிரிபுகும் பட்டினத்திற்கு கப்பலிலிருந்து புரவிகள் வந்திறங்கியதாக குறிப்பிடுவதைக் கட்டுரை சுட்டுகிறது. சிம்மவிஷ்ணு வழிவந்த காஞ்சி பல்லவர்கள் தங்கள் செப்பேடுகளில் குதிரைகளைக் கொண்டு அஸ்வமேதயாகம் செய்ததாகச் சொல்லிக் கொள்கின்றார்கள்.

தென்னகத்திலிருந்து ரோமிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் தேக்கு, கருங்காலி மரங்களும் முக்கியமானவை.

மனிதர்களும் அடிமைகளாக வணிகப்பொருட்களாக இருந்துள்ளனர். சிறார்கள், இளம் பெண்கள் ஆகியோர் மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர். காலனித்துவ ஆட்சியின் போது தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பிஜி, மேற்கிந்திய தீவுகளுக்கு மக்கள் அடிமைகளாகச் சென்றனர்.

உலக வரலாற்றின் பன்முகத்தன்மையை அறிந்து கொள்ள கடல்வணிகம் தொடர்பான ஆய்வுகள் முக்கியம் என்றும் கடல்பாதைகளை விளக்கும் கடல்சார் வரலாற்றினை கண்டறிவது உடனடித் தேவை என்றும் இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.

--Ksubashini (பேச்சு) 10:45, 7 மார்ச் 2017 (GMT)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 7 மார்ச் 2017, 16:15 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 859 முறைகள் அணுகப்பட்டது.