நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முனைவர்.க.சுபாஷிணி

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் இரண்டாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.கா.ராஜன் அவர்களின் “ இலங்கை, தென்னிந்தியவிற்கு இடையேயான கடல்கடந்த பண்பாட்டு உறவுகள்” என்ற கட்டுரை.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியக் கடற்கரை பகுதிகள் கடல்கடந்து பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்தன என்ற கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது.

கடல்வழித் தொடர்பால் இரு நாடுகளிலும் காணப்பெறும் மொழி, குகைக்கல்வெட்டுக்கள், நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள், பானையோடுகள் போன்றனவற்றின் ஒத்த அமைப்புக்கள் இரு நிலப்பகுதிகளுக்குமிடையே காணப்படும் பண்பாட்டு ஒற்றுமைகளை உறுதி செய்வதைக் காண்கின்றோம்.

ஒரே வகையிலான இரும்புக்கால ஈமச்சின்னங்களின் எச்சங்கள் இன்று அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன.

கி.மு.3ம் நூ என சுட்டப்படும் மாங்குளம் கல்வெட்டுக்களில் காணப்படும் சாத்து, நிகமம் என்ற சொற்கள் வணிகக் குழுக்களைச்சுட்டுகின்றன. ஆக, வரலாற்று தொடக்ககாலத்திலேயே இத்தகைய வணிக குழுக்கள் இடம்பெயர்ந்து நீண்ட தூரம் சென்று வணிகம் செய்தன என அறியமுடிகின்றது.

பண்டைய வணிக வழிகளில் குவியல்களாகவும் உதிரியாகவும் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் அயலகத்தார் தமிழகம் வந்து வணிகத்தில் ஈடுபட்டமைக்குச் சான்றாக அமைகின்றது.

இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்திய அசோகர் காலத்தில் தான் பிராமி எழுத்துக்கள் இலங்கைக்கு அறிமுகமாகின என்ற கூற்றுக்கு மறுப்பாக அனுராதபுரத்தில் நிகழ்த்திய அகழ்வாய்வில் மகதப் பேரரசுக்கு முன்னரே அதாவது கி.மு 4-5 நூ வாக்கிலேயே பிராமி எழுத்துக்கள் இலங்கையில் இருந்தமையைத் தொல்லியல் ஆய்வுகள் காட்டுவதாக இக்கட்டுரை குறிப்பிடுகின்றது. இன்று மீனவர்கள் என தமிழகத்தில் அறியப்படுவோர் பரதவர்கள் என்பவர்கள். நாவாய், அதாவது கப்பல் வடிவத்துடன் அதனை செலுத்தும் பரதவ சமூகத்து மக்களைச் சுட்டும் ”பரத” என்று பிராமி எழுத்துப் பொறித்த ஒரு பானையோடு இலங்கையில் துவாகலா என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கப்பலைச் செலுத்தும் மாலுமியாகக், கடலை ஆளும் வணிகராக இந்த பரதவ குல மக்கள் இருந்திருக்கின்றனர் என இரு நிலப்பகுதி ஆய்வுகளும் நல்ல சான்றுகளைத் தருகின்றன.

ஒரு கப்பல் தலைவன் ஒருவனின் இரு மகன்களான சேனா, கோத்திகா ஆகிய இருவரும் இலங்கையில் முதன் முதலில் தமிழ் ஆட்சியை நிறுவினர் (கி.மு 177-155) என மகாவம்சம் நூலின் வழி அறிய முடிகின்றது.

இப்படிப் பல ஆய்வுத்தகவல்களை இக்கட்டுரை வழங்குகின்றது. இலங்கை மட்டுமல்லாது ஏனைய கிழக்காசிய நாடுகளில் தொடர்ச்சியான ஆய்வுகள் செய்யப்படுமானால் தமிழகத்திற்கும் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குமான வணிகத் தொடர்புகளும் தமிழின் ஆளுமையும் மேலும் புலப்பட வாய்ப்பு பெருகும் என்ற எண்ணத்தை இக்கட்டுரை வழங்குகின்றது. --Ksubashini (பேச்சு) 10:22, 7 மார்ச் 2017 (GMT)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 7 மார்ச் 2017, 15:52 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 917 முறைகள் அணுகப்பட்டது.