பாலைப்பழம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எழுதியவர் : உ. வே. சாமிநாதய்யர்

தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி. கீதா சாம்பசிவம்

__________________________________________________________________________________________________________

மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் நான் பாடங்கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் அப்புலவர் பெருமான் அவ்வப்போது இயற்றிவந்த நூல்களின்ன் அமைப்பையும் அவற்றில் அநாயாசமாக அவர் கற்பனைகளை இயைக்கும் ஆற்றலையும் அறிந்து மகிழ்ந்து வருவேன். நினைத்த மாத்திரத்தில் நினைத்த கருத்துக்களைச் சுவைபட அமைக்கும் அவருடைய கவித்துவ சக்தியைப் பற்றித் தனியே இங்கே எழுதுவது மிகை.


வெள்ளம் புரண்டு செல்லும்போது ஒரு பேராறு அங்கங்கே உள்ள பொருள்களையும் அடித்துத் தனக்குள் அடக்கிக் கொண்டு ஓடுவது போல அப்புலவர் பிரான் அவ்வப்போது கேட்கும் செய்திகளையும் அநுபவிக்கும் அநுபவங்களையும் காணும் காட்சிகளையும் அவருடைய கவிதையிலே அமைத்து விடுவார். இதனை நான் பல நிகழ்ச்சிகளால் உணர்ந்திருக்கிறேன்.


1873-ம் வருஷம் திருப்பெருந்துறைப் புராணத்தை அவர் இயற்றி அரங்கேற்றினார். அந்நூல் இயற்றப்பட்டு வந்த காலத்திலும், அரங்கேறிய காலத்திலும் நான் அவர்களுடன் இருந்து வந்தேன். பட்டீச்சுரத்தில் அப்புராணத்தின் முற்பகுதிகள் இயற்றப்பட்டன. அவ்வூரிலிருந்த ஆறுமுத்தா பிள்ளை யென்னும் செல்வர் பிள்ளையவர்களை ஆதரித்து வந்தார்.


பிள்ளையவர்கள் செய்யுள் இயற்றுவதற்குத் தனி இடம் காலம், தனிமை இவை வேண்டுவதில்லை. எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும், எத்தனைபேர்கள் இருந்தாலும் அவருடைய கவிதை வெள்ளம் பெருகிக்கொண்டே இருக்கும். கோயிலில் சிற்பவேலை செய்யும் சிற்பியும் சித்திரகாரனுங்கூடச் சில சமயங்களில் தங்கள் வித்தகத் தொழிலை மறைவில் இயற்றுவார்கள். அப்புலவர் பிரானோ தம் கவிதைச் சிற்பத்தைக் காலம் இடம் என்னும் வரையறையின்றியே அமைத்து வந்தார்.


திருப்பெருந்துறைப் புராணச்செய்யுட்களிற் சில ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டில் இருந்த காலத்தில் செய்யப் பட்டன. ஆறுமுகத்தா பிள்ளைக்கு மேலைப்பழையாறை என்னும் ஊரில் ஒரு சவுகண்டி இருந்தது. அங்கே சிலசமயங்களிற்போய் நாங்கள் தங்குவதுண்டு. மாலைக்காலத்தில் குளிர்ந்த காற்று வீசும்போது பிள்ளையவர்கள் செய்யுட்களை இடைவிடாமற் சொல்லிக்கொண்டே வருவார். நான் ஏட்டில் எழுதி வருவேன். அவ்வூரிலுள்ள திருமலை ராயன் ஆற்றங்கரையின் வடபால் ஓர் அரசமரம், இருந்தது. அதன் கீழே மேடையொன்று உண்டு. அந்த மேடையில் இருந்து பல செய்யுட்களை அக்கவிஞர் சொல்லியிருக்கிறார். சில சமயங்கள் பட்டீச்சுரக் கோயிலிலும், திருச்சத்திமுற்றக் கோயிலும் கோபுர வாயிலின் இடைகழித்திண்ணைகளிலே இருந்தபோது பல செய்யுட்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டன.


ஒருநாள் பிற்பகலில் பட்டீச்சுரம் ஸ்ரீதேனுபுரேசர் கோயிலில், முதற் பிராகாரத்தில் இரண்டாவது  கோபுர வாயிலில் உட்கார்ந்திருந்தோம். மெல்லெனக் காற்று வீசியது. மனம் மிகத் தெளிவாக இருந்தது. குளிர்ந்த நிழலில் ஜனக்கூட்டமில்லாத இடத்தில் இருந்த அப்போது பிள்ளையவர்கள் திருப்பெருந்துறைப் புராணத்தின் சில பகுதிகளை இயற்றத் தொடங்கினார். நான் ஏட்டை எடுத்து வைத்துக்கொண்டேன்.


திருநாட்டுப் படலத்தில் பாலை நிலத்தின் வருணனை வரும் இடம். குளிர்ந்த இடத்தில் குளிர்ச்சியாக உள்ள நேரத்தில் வெம்மையான பாலைநிலவருணனை பாடப்பெற்றது. கடவுளின் சிருஷ்டியாகிய பாலைநிலம் வெம்மையாகத் தான் இருக்கிறது. ஆனால் கவிஞரது சிருஷ்டியாகிய பாலைநிலம் நமக்குக் குளிர்ச்சியாகவும் இனிமை தருவதாகவும் உள்ளது. கடவுள் படைப்பாகிய பாலையை நாம் நினைக்கவும் அஞ்சுவோம்; அதிலே செல்லுவதற்கு மனம் நடுங்கும்; கவிஞர் படைக்கும் பாலையிலோ நாம் பலமுறை சென்று சென்று இனிமை காண்போம். கம்பராமாயணத்தில் 'கருதின் வேம் உள்ளமும்' என்று பாலை வனத்தைக் கம்பர் வருணிக்கின்றார்; அவ்வருணனையைப் படிக்கும் நமக்கு உள்ளின் உள்ளம் இனிமையையே அடைகின்றது.


பிள்ளையவர்கள் பாலை வருணனையைத் தொடங்கினார்; அது 'நினைப்பினுஞ் சுடும் விறல்' உடைய தென்று ஆரம்பித்தார். பாலைநிலத்தை அவர் தம் உள்ளத்திலே சிருஷ்டித்துக்கொண்டார்.


"அங்கங்கே ஈந்தின் இலையினால் வேய்ந்த சிறு சிறு குடிசைகள் காணப்படும். அவற்றில் மறத்தியரும் மறவர்களும் வாழ்வார்கள். மறவர்கள் துர்க்கையை வழிபட்டு உடல்வலியை மிகுதியாகப் பெறுவார்கள். அவர்கள் பாலைநிலத்திலே வாழ்ந்தாலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற மற்ற நிலங்களில் உள்ள பொருள்களும் அவர்களிடம் இருக்கும். பாலைநிலவழியே செல்லுபவர்களைக்கொள்ளையிட்டு அவர்கள் சம்பாதித்தவை அவை. அங்கே சிறிய கற்களை உண்டு வாழும் தூதுணம்புறாக்கள் மிக உயரத்திலே பறக்கும். அவற்றைக் கண்டு மறவர் களிப்பர். அவர்கள் வழிப்பறி செய்யும் கொடுமையான இயல்பினரானாலும் சில சமயங்களிலே உபகாரம் செய்வதும் உண்டு. அங்கே விளையும் கர்ச்சூரப் பழத்தையும் நெல்லிக்காயையும் வருவோருக்கு அளிப்பர். பாதிரி மரங்கள் பல அந்நிலத்தில் வளரும்."


இத்தகைய கருத்துக்களை அமைத்துச் செய்யுட்களை இயற்றி வந்தார் கவித்தலைவர். நான் இடையி டையே சில விஷயங்களைக் கேட்பேன். அவர் விளக்கமாக விடை கூறுவார். அவருடைய கவிதை மேலும் பெருக லாயிற்று ;

"பால நிலத்தில் வேப்பமரங்கள் தழைத்து வளர்ந்தன. அவை தென்னாட்டைக் காக்கும் பாண்டியன் தம்மலரை அணிவதையறிந்து பெருமையடைந்து பரந்திருந்தன. அன்றியும் முன்பு வரகுணபாண்டியர் திருவிடை மருதூரில் தம் பழத்தைக்கண்டு சிவலிங்கத்தில் நினைவைப் பெற்று மகிழ்ந்ததை உணர்ந்து தம் கிளைகளிற் பல கனிகளைத் தாங்கின."


இவ்வாறு கவிஞர் கற்பனையை அமைத்தார். பிறகு அகப்பொருட் செய்திகள் வந்தன: "தம் தலைவி யரைப் பிரிந்து அவ்வழியே சில தலைவர்கள் செல்வார்கள். பெண்பருந்து வெயிலால் வெப்பமுற்றுத் துன்புறுவதை அறிந்து வருந்திய ஆண் பருந்து அதன் மீது தன் சிறகை விரித்து நிழல் செய்வதைக் கண்டு, அவ்வாண் பருந்து பெண்ணின்பால் வைத்த அன்பின் மிகுதியை நினைந்து வியந்து, 'நாம் நம் காதலி யரைத் துறந்து வந்தோமே! இப்பறவைக்குள்ள அன்பு நமக்கு இலதாயிற்றே!' என்று நாணமுற்று, மேலும் செல்வதை அத்தலைவர்கள் ஒழிவார்கள். சில மகளிர் தம் சுற்றத்தினரை நீத்து விட்டுத் தம் காதலருடன் அந்நிலத்தின் வழியே செல்வார்கள். அவர்கள் பாலைநில வெம்மையால் துன்புறுவார்கள். அப்போது அங்கே வளர்ந்துள்ள கோங்கிலவ மரங்கள் வெடித்த காய்களினின்றும் பஞ்சை உதிர்த்து அவர்களுடைய மெல்லடியின் வருத்தத்தை நீக்கும். சுற்றும் பல வெம்மை நிறைந்த பொருள்கள் உள்ள பாலையில் அக்கோங்கிலவு நிற்றல் அரக்கரே நிரம்பிவாழும் இலங்கையில் விபீஷணன் இருந்ததை ஒக்கும்."


இங்ஙனம் பாலை நிலத்திலுள்ள வேம்பு, கோங்கு என்னும் மரங்களைப்பற்றிய செய்திகள் வெளிவந்த பின்னர் அக்கவிஞர் அந்நிலத்துக்குப் பெயரளித்த பாலைமரத்தைப் பற்றி எண்ணலானார்.

"பாலைமரத்தை நீர் பார்த்திருக்கிறீரா?" என்று ஆசிரியர் என்னைக் கேட்டார்.

"ஆம், பார்த்திருக்கிறேன்; அதன் பழத்தைக் கூடச் சிறுபிராயத்தில் உண்டிருக்கிறேன்" என்றேன்.

"பழம் ருசியாக இருக்குமா?" என்று அவர் கேட்டார்.

"தித்திப்பாக இருக்கும். அதில் ஒருவகையான பசை உண்டு. அதனால், பழத்தைத் தின்றால் உதடு ஒட்டிக் கொள்ளும்" என்றேன் நான்.


பிள்ளையவர்களுடைய முகம் மலர்ந்தது. அவர் என்னிடம் கேட்ட விஷயத்தைச் 'சுடச் சுட' உபயோ கித்துக்கொள்ள எண்ணினார். நான் இளம் பிராயத்தில் வீதியிலே விலைக்கு விற்ற பாலைப் பழத்தை நெல்லைக் கொடுத்து வாங்கி உண்ட துண்டு. அப்பொழுது பெற்ற அநுபவத்தையே நான் சொன்னேன். என் மூலமாக அறிந்த அந்தச் செய்தியை அவர் தம்கவிதையிலே பொருத்திவிட்டார்;


"நம்முடைய பெயரை இந்த நிலம் அடைந்ததென்ற மகிழ்ச்சியால் அந்நிலத்தில் பாலை மரங்கள் மிகுதியாக வளர்ந்து பழுத்தன. அங்கே சென்று அம்மரத்தின் பழத்தை உண்டதால் இனிமை மிகுதியினால் அது வாயினின்றும் வெளிப்படாது. உண்டோருடைய இதழ்கள் அதனை வெளிவிடாமல் பொருந்திக் கொள்ளும்" என்ற கருத்தையமைத்து,

"ஓங்கு நம்பெயர் இந்நிலம் உற்றதென்றுறந்து
வீங்கு பாலைகள் ஆலயிற்பழுப்பன மேன்மேல்
ஆங்கு மேலியக் கனியுணின் வெளிபடாததரம்
நீங்குறமலோட்டத்தொடும் பொருந்துதல் நிசமே"
(உறந்து=மிகுதியாகி; அதரம்=கீழுதடு; ஓட்டம்=மேலுதடு)

என்ற செய்யுள் அவர் வாக்கிலிருந்து எழுந்தது. அதைக்கேட்டதும் எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. நான் பாலைப்பழத்தை உண்ட காலத்தில் சிறிதளவே இனிமை உண்டாயிருக்கும். இந்தப் பாட்டைக் கேட்டபோதோ அளவற்ற இனிமையை அனுபவித்தேன். ஒருவகையான பெருமிதங்கூட என் உள்ளத்தில் எழுந்தது; 'நாம் சொன்ன விஷயமும் இப்புலவர் பிரானது அங்கீகாரத்தைப் பெற்று இலக்கியத்தில் இடம்பெற்றது' என்ற திருப்தி தோன்றியது; அந்தப்பாலை நில வருணனை முழுவதையும் நானே பாடியிருந்தால் எவ்வளவு சந்தோஷம் உண்டாகுமோ அவ்வளவு சந்தோஷம் எனக்கு உண்டாயிற்று.


திருப்பெருந்துறைப்புராணத்திலே இவ்வாறு ஒட்டிக்கொண்ட பாலைப்பழம் எனக்கு என் இளம் பிராயத்தையும் பிள்ளையவர்களோடு பழகிய காலத்தையும் ஒருங்கே நினைப்பூட்டி நிற்கின்றது.
பங்களிப்பாளர்கள்

Dev

"http://www.heritagewiki.org/index.php?title=பாலைப்பழம்&oldid=1827" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 22 பெப்ரவரி 2010, 23:01 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,479 முறைகள் அணுகப்பட்டது.