பினாங்கின் கதை 8

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பழங்கலத்தில் பழங்கள் - 8
ரெ.கார்த்திகேசு

சுவாமி இராமதாசரும் செந்தமிழ்க் கலாநிலையமும்
(பாகம் 1)

முதலில் இந்தத் தொடரின் தலைப்பை இப்போது விளக்கி விடுகிறேன். "பழங்கலத்தில் பழங்கள்" என்பதை "பழைய பாத்திரத்தில் பழைய கள்" என்று யாராவது விளங்கிக் கொண்டிருந்தால் நான் பொறுப்பில்லை.

இந்தத் தலைப்பு பாரதிதாசனுடையது. பாரதிதாசன் தாம் சிறுவராக இருந்த காலத்தில் ஒரு உறவினர் வீட்டுக்குப் போகிறார். அந்த உறவினர் வீட்டு அம்மா ஒரு கஞ்சப் பிறவி. தன் வீட்டிலுருந்த சில பழங்களை எங்கே பையன் பார்த்துச் சாப்பிட்டுவிடப் போகிறானோ என்று அஞ்சி அவற்றை எடுத்து ஒரு பழைய பாத்திரத்தில் மறைத்து வைக்கிறார். ஆனால் சுப்புரத்தினத்துக்கு அது தெரிந்து விடுகிறது. போய்த் துழாவிப் பார்க்கிறார். கிடைக்கவில்லை.

அந்த எரிச்சலில் எழுந்த பாட்டு இது. முதல் அடி: "பழங் கலத்தில் பழங்களைத்தான் பார்த்துத் தேடிப் பயல் களைத்தான்". அதன் பின் இன்னொரு அடியில் "கிழங்களைத்தான் உதைக்க வேண்டும், கெடு நினைப்பே அதிகமப்பா!" என்றும் எழுதுவார். மூலப் பாடல் என் கையில் இல்லை. ஆகவே நினைவில் இருந்ததை எழுதுகிறேன். கவிஞர்கள் யாரிடமாவது அது இருந்தால் மக்கள் ஓசை ஆசிரியர் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

(பழைய விஷயங்களைக் கிளறிப் பத்திரிகை படிக்கும் இளசுகளைப் போரடிக்க வைக்கும் இந்தத் தொடருக்கு "கிழங்களைத்தான் உதைக்க வேண்டும்" என்ற தலைப்பே சரியாக இருந்திருக்கலாம் எனச் சிலர் முணுமுணுப்பதும் காதில் கேட்கிறது.)

போகட்டும். கு.சோணைமுத்து அவர்களின் குறிப்புக்களிலிருந்து பினாங்கு இந்தியர் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

பினாங்குத் தமிழர்களிடையே மறக்க முடியாத இரு பெயர்கள் "சுவாமி இராமதாசர்" மற்றும் "செந்தமிழ்க் கலாநிலையம்". பினாங்கின் ஆரம்பகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் அடிமட்ட மக்களுக்குப் பெரும் தொண்டு புரிந்தவர்கள் இவர்கள். இனி சோணைமுத்து அவர்களின் சொற்களிலேயே விவரங்கள். மொழி நடையில் சில மாற்றங்கள் மட்டும், நான் செய்திருக்கிறேன்:

செந்தமிழ்க் கலாநிலையம் உருவாகச் சமூகச் சூழலே காரணமாக அமைந்தது. சுவாமி இராமதாசர் பினாங்குக்கு வந்தபோது நகரசபை கடைநிலை ஊழியர்களாக வேலை செய்து வந்த தமிழர்களில் ஒரு சாரார் தாழ்த்தப்பட்டவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வந்தனர். கல்வி அறிவின்மையும் அறியாமையும் அவர்களை அவல வாழ்க்கையில் தள்ளியிருந்தது.

பகலில் கடும் உடல் உழைப்பு; இரவில் மது அருந்தித் தங்களுக்குள்ளே சண்டை சச்சரவுகள் பண்ணுவது, வீட்டையும் வீதியையும் அலங்கோலம் பண்ணுவது, இதுதான் அவர்களின் அன்றாட வாழ்க்கை. தங்களைத் தாழ்ந்தவர்கள் என்று பிறர் ஒதுக்கியுள்ளதை அறியாமல் தங்களுக்குள்ளே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரித்துச் சச்சரவிடுவார்கள்.

இவர்களை நன்னிலைப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முற்போக்கு எண்ணங்கொண்ட சிலர் "வேளாளர் சங்கம்" என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து சமூகச் சீர்திருத்தத்தைத் தொடங்கினர்கள். இப்படியான தொடக்ககாலத் தலைவர்களில் அழகுமுத்து உபாத்தியாயர்,. வேதக்கண்ணு உபாத்தியாயர், காளிமுத்துத் தண்டல், மங்கைத் தண்டல், வீரன், மு.உடையார், காட்டுமயில் ஆகியோரும் அடங்குவார்கள். (1930களில் இந்த அமைப்பு உருவாகியிருக்கலாம்.)

அந்தக் கால கட்டத்தில் பினாங்கு வந்து சேர்ந்த இராமலிங்கம் என்பவர் இவர்களோடு தீவிரமாக இணைந்து இவர்களை வழிநடத்தினார். கற்றறிந்த புலவரான அவர் அவர்களுக்கு அறவுரையும் அறிவுரையும் போதித்தார். கல்வி அறிவினால் மட்டுமே இந்தச் சமூகம் முன்னேற முடியும் என நம்பிய அவர் 7/5/1937இல் "செந்தமிழ்ப் பாடசாலை" என்னும் பள்ளிக் கூடத்தை அமைத்தார். அவரே ஆசிரியராக இருந்து பாடமும் கற்பித்தார். பலர் அதில் சேர்ந்து பாடம் கேட்டுப் பலன் பெற்றாலும் சிலர் குந்தகங்கள் விளைக்கவும் செய்தார்கள். சுவாமியின் கல்விப் போராட்டம் இதனால் தளர்ந்து விடாமல் தொடர்ந்து நடந்தது. இந்த இராமலிங்கமே பின்னர் சுவாமி இராமதாசர் எனவும் விளங்கினார்.

சுவாமிகளுக்கு மொழியும் சமுதாயமும் இரு கண்களாக விளங்கின. சுவாமியின் காலத்தில் ஜாதி வெறி தலைவிரித்தாடியது. பினாங்கு மார்க்கெட் ஸ்த்ரீட்டில் உணவுக் கடைகளில் ஒரு வகுப்பினர் மேஜையிலும் ஒரு வகுப்பினர் தரையிலும் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் இருந்தது. சுவாமி இதை மாற்ற நேரடியாகப் போராட்டம் நடத்தினார். அவரே தற்காப்புக் கலைகளும் அறிந்தவர். யோகா, சிலம்பம், குந்தா, மற்போர், வர்மம் ஆகியவற்றை மாணவர்களுக்குக் கற்றுத் தந்திருந்தார். (மருத்துவம் ஜோதிடம் ஆகியவையும் அவருக்குத் தெரியும்.) அவர்கள் உறுதுணை இருந்ததால் உயர்ஜாதியனரின் மூர்க்கத் தனங்களை அவரால் முறியடிக்க முடிந்தது.

கோயில்களிலும் இந்த ஜாதிப் பாகுபாடு இருந்ததை அவர் போராடி முறியடித்தார்.

பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழும் திருக்குறளும் போதித்தார். இந்து சபாவில் தமிழ்ப் பண்ணையில் இலக்கியம், இலக்கணப் பாடங்கள் கற்பித்தார். சிறைச் சாலையிலிருந்த இந்துக் கைதிகளுக்கு அற்நெறிப் போதனை, நந்நெறிக் கோட்பாடுகளை போதித்தார்.

ஜாலான் சுங்கையில் இன்று புதிய கட்டிடமாக மிளிரும் தமிழ்ப் பள்ளியும் இவரால் ஒரு எளிய பள்ளிக்கூடமாகத் தொடங்கப் பட்டதுதான்.

தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பணிகள் தெற்கே சிங்கப்பூரிலிருந்து வடக்கே பெர்லிஸ் வரை பரவுவதற்கு முன்பே, சுவாமியின் மொழி மற்றும் சமூகச் சீர்திருத்த முயற்சிகள் வடக்கே பினாங்கிலிருந்து தெற்கே சிங்கப்பூர் வரை பரவின. ஈப்போவிலும் குவால லும்பூரிலும் சிங்கையிலும் சுவாமியின் பணிகளால் பலன் பெற்றவர்கள் பலர்.

இவை கு.சோணைமுத்து நமக்கு அளித்துள்ள குறிப்புகள். அடுத்த வாரம் செந்தமிழ்க் கலாநிலைய அமைப்பு பற்றியும் அதன் வளர்ச்சி தளர்ச்சி பற்றியும் எழுதுகிறேன்.

(பகுதி – 8 தொடரும்)

பங்களிப்பாளர்கள்

Karthi மற்றும் Ksubashini

"http://www.heritagewiki.org/index.php?title=பினாங்கின்_கதை_8&oldid=638" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 5 ஜனவரி 2010, 02:00 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,597 முறைகள் அணுகப்பட்டது.