லெமூரியா-ஆய்வுக் கட்டுரை--3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

லெமூரியா-  குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-3)

இலக்கியங்களில் சுனாமி-குமரி பற்றிய குறிப்புகள்....

புறநானூறு..122 ஆவது பாடல் மலையமான் திருமுடிக்காரியை கபிலர் பாடியது --தமிழ் இலக்கியத்தில் கடல்கோள் பற்றிய முதல் குறிப்பு இப்பாடலில் உள்ளதாக அறிகிறேன்

.."கடல்கொளப் படா அது .............காரி  நின் நாடே" திருக்கோயிலூரை ஆண்டமன்னன் காரி...இவ்வூர் கடற்கரையிலிருந்து வெகு தூரம்-ஆதலின்'கடல்கொளப் படா அது'-அப்படியென்றால் கடற்கரையிலிருந்த ஊர்கள் கடல்கோள் வயப்பட்டன....என கொள்ளலாம்.

 இனி  'கலித்தொகைகாண்போம்...

 

.“மலிதிரை ஊர்ந்து தன் மண்  கடல் வவ்வலின்

மெலிவு இன்றி மேல் சென்று  மேவார் நாடு இடம்பட

புலியோடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர் தென்னவன்“ (முல்லைக்கலி 104 ஆம் பாடல்)

 

எ - து : தன் நாட்டைக் கடலினுடைய மிக்க திரையேறிக் கைக்கொண்டு விடுகையினாலே தனக்கு நாடு இடமுண்டாம்படியாக மனத்தின் இளைப் பின்றாய்ப் பகைவரைத் தன் வலியினாலே தாழ்க்கவேண்டி அவர்மேலே சென்று அவருடைய புலிப்பொறியையும் விற்பொறியையும் அவர் நாட்டி னின்றும் போக்கி விளங்குகின்ற கயலை அவ்விடத்தே பொறித்த புகழையுடைய கெடாத தலைமையினையுடைய பாண்டியனுடைய பழைய புகழை நிலைபெ.றுத்தின 

 

 

பாண்டியன் , தன நாட்டை  கடல் அலைகள் ஊர்ந்து வந்து (அய்யா...சொல்லாட்ச்சியை கவனியுங்கள்)கவர்ந்து(வவ்வலின் ) கொண்டதால் மேற்கே சென்று சோழனையும் சேரனையும் வென்று மீன் கொடி நாட்டினான். உயிர்ச சேதம் பற்றி இங்கே ஒன்றும் சொல்லப்படவில்லை.(கிழக்குக் கடற் கரையோரம் பாண்டியன் ஆண்டிருக்கிறான்-அதனால்தான் மீன் கொடியானது போலும்).

 

ஆக, கபிலர்-காரி காலத்திலோ  -கலித்தொகை காலத்திலோ  -அல்லது அதற்கு முன்னரோ-தமிழக கடற்கரையின் சில பகுதிகள் கடலால் கொள்ளப்பட்டன என்பது தெளிவு. 

 

ஆனால் அது சுனாமியா...?

 

       நமக்குத் தெரிந்து 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியின் சில பகுதிகள் கடலுக்கு இரையாகின..

அது 'STORM SURGE'

 .....சில ஆண்டுகளுக்கு ஒருமுறை கிழக்குக்கரையைத் தாக்கும் புயற் காற்றால் ஆந்திரம்-ஒரிசா -வங்கம் ஆகிய பகுதிகளும் பேரழிவை சந்திக்கின்றன. ஆனால் இவையெல்லாம் சுனாமியாலா- , அல்லவே.

சுனாமியின் போதும் சரி - STORM SURGE போதும் சரி , ருத்ரதாண்டவம் ஆடிடும் அலைகள் , ஆட்டம் முடிந்தபின் , பின்வாங்கி சென்றுவிடுகின்றன. இவைகளால் நிலம் இழக்கப்படுவது குறைவே.

 

          இனி,  LGM -என அழைக்கப்படும்  "இறுதி  இறுகுபனி  காலம்" ( LAST GLACIAL MAXIMA-LGM) பற்றி நாம் அறிவோம்...

சுமார் 18000  ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒன்று.

அது சமயம் கடல் மட்டம் தற்போது உள்ளதைவிட 120 மீ குறைந்திருந்தது . இது உலகம் முழுவதும் நிகழ்ந்த நிகழ்வு

நம் மாமல்லபுரத்திற்கு கிழக்கேயும், காரைக்கால் பகுதிக்கு கிழக்கேயும் கடலில்  120 மீ ஆழத்தில் கிடைத்த பவளப்பாறைகளே இதற்க்கு சான்று. 

அதாவது கடந்த 18000 ஆண்டுகளில் கடல் மட்டம் 120 மீ உயர்ந்துள்ளது-ஒரே சீராக அல்ல -சில ஏற்ற இறக்கங்களோடு.

சுமார் ஆறாயிரம் அல்லது எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல்மட்டம் சுமார் ஆறு அல்லது எட்டு மீ உயர்ந்து வந்து ஒரு நிலையை அடைந்தது  . அதன் பின் ஓரிரு மீ உயர்வதும் தாழ்வதுவுமாக நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இது தற்போது பலராலும்  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள புவியியல் உண்மை.

இதன் பின்னணியில் நோக்கும் போது  மலிதிரை ஊர்ந்து வந்து வவ்வியதின் பொருளை உணர முடிகிறது...

 

 மணிமேகலையில் சுனாமி சிந்தனைகள

மணிமேகலைக் காப்பியத்தில் கடல்கோள் பற்றிய குறிப்புகள் பல்வேறு காதைகளில் பரவிக் கிடக்கின்றன.சாத்தனார் பல்வேறு பாத்திரங்கள் வழியாக காவேரிபூம்பட்டிணம் கடலால் அழிந்த செய்தியை நமக்கு தெரிவிக்கிறார்.

பூம்புகார் நகரின் கடற்கரையில் உப்பளத்தின் அருகே மணற்குன்று ஒன்றில் வருந்திக் கொண்டிருந்த மன்னன் கிள்ளிவளவனைப் பார்த்து, சாரணர் ஒருவர், “-----உன் மாநகர் கடல் வயிறு புகூஉம்” (24: 62-63) என்று எச்சரித்ததாக மணிமேகலையின் பாட்டி சித்திராபதி, இராசமாதேவியிடம் கூறுகிறார். இந்தக் குறிப்பு ‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ யில் காணப்படுகிறது.

தொடந்து, மணிபல்லவத்தீவிற்கு ஆபுத்திரனோடு சென்ற மணிமேகலையிடம், அத்தீவிலிருந்த புத்த பீடிகையை காத்துவந்த தீவதிலகை, “பலர் தொழு பாத்திரம் கையில் ஏந்திய , மடவரல் நல்லாய்-நிந்தன் மாநகர் கடல் வயிறு புக்கது”(25: 174-176) என்றும், “வானவான் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது” (25:197)      என்றும், “விரிதிரை வந்து வியன் நகர் விழுங்க, ஒருதனிப் போயினன் உலக மன்னவன்; அருந்தவன் தன்னுடன், ஆய் இழைத் தாயரும் வருந்தாது ஏகி , வஞ்சியுள் புக்கனர்”(25: 203-206)என்றும், கூறுகிறாள். இவை ‘ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை’யில் வருகின்றன.

இதனை அடுத்து, வஞ்சி மாநகர் சென்று அங்கே தவ வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் தன் தாத்தா மாசாத்துவானை பார்க்கும் மணிமேகலை, “-------மாநகர் கடல் கொள, அறவண அடிகளும்  தாயாரும் ஆங்கு விட்டு, இறவாது இப்பதி புகுந்தது கேட்டு -----“, தான் இங்கு வந்துள்ளதாகக் கூறுகிறாள்.(28:79-82).இதற்கு பதிலலிக்கும் மாசாத்துவான் “காவரிப்பூம்பட்டிணம் கடல் கொள்ளும்” (28: 135)என அறிந்தே தான் அங்கே செல்லாமல் வஞ்சியிலே தங்கிவிட்டதாக கூறுகிறார். இக்காட்சிகள் ‘கச்சி மாநகர் புக்க காதையில்’ காணக் கிடைக்கின்றன.

இதனை அடுத்து வரும் ‘தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை’யில், வஞ்சி நகர் வந்து தன்னை வணங்கிய மணிமேகலையிடம், அறவண

அடிகள் “-----நகர் கடல் கொள்ள , நின் தாயரும் யானும் –இப்பதி படர்ந்தனம்” என்று கூறுவதாக, சாத்தனார் சுட்டிக் காட்டுகிறார்.(29: 35-36)

இதுகாறும் எடுத்துக்காட்டிய மேற்கோள்களிலிருந்து, சீத்தலை சாத்தனார் வாழ்ந்த காலத்திலோ அல்லது அதற்கு சற்று முன்போ, கவேரிபூம்பட்டிணத்தை கடல் கொண்டது என்று எண்ண முடிகிறது.

“ஆங்குவிட்டு இறவாது இப்பதி புகுந்தது கேட்டு” எனும் தொடரின் மூலம் ‘கடல்கோளில் பலர் இறந்திருக்கலாம்’ என்றும் எண்ணத் தோன்றிகிறது.

சங்ககாலத்திலும், பின் வந்த இரட்டைக்காப்பியங்கள் காலத்திலும் சிறந்த துறைமுகநகரமாகவும், மிகச்சிறந்த வணிகப் பெருநகரமாகவும் விளங்கிய பூம்புகார் பற்றிய சிறப்பான செய்திகள் அதன்பின் தோன்றிய இலக்கியங்களில் அவ்வளவாக இல்லை. ஆதலின் கி.பி. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் பூம்புகார் கடலால் கொளப்பட்டது என ஊகிக்க இடமுண்டு.

“விரிதிரை வந்து வியன் நகர் விழுங்கியது”----

-படிப்படியாக மில்லிமீட்டர் மில்லிமீட்டர் அளவில் உயரும்  கடல்மட்டம் நிகழ்வு அல்ல இது.

நிலம் பிறழ்ந்து அதனால் ஏற்பட்ட கடல் கோளாகக் கருதவும் வாய்ப்பில்லை . அதற்கேற்ற தரவுகள் கிட்டவில்லை.

புயல்- சூறாவளி பற்றிய செய்தியும் இல்லை...

ஆகா, இது சுனாமியாக இருக்கக்கூடும்.

“இறவாது இப்பதி புகுந்தது கேட்டு”

உயிர் இழப்புகள் பல இருந்திருக்கலாம். 

 

     சிலம்பில் குமரிக் கோடு

 “அடியிற் றன்னளவு அரசர்க்கு உணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொறாது , பஹுருளியாருடன் பன்மலையடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள, வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி”(சிலம்பு-மதுரை-காடுகாண் )

சிலம்பில் இந்தப்பாடல் மட்டுமே கடல்கோள் பற்றி குறிப்பதாக உள்ளது, நான் அறிந்தவரை.

இந்தப் பாடலின் அடிப்படையில் மொழிஞாயிறு  தேவநேயப் பாவாணர் தன்  நூல்களில் குமரிக்கண்டம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.

அவர் சொன்னார் என்பதிற்காக அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பது முறையன்று.

பாவாணர் உட்பட பல தமிழறிஞர்கள் ‘குமரிக்கோடு’-என்பதற்கு ‘இமயம் போன்று பெரிய மலை’  என பொருள் கொள்கிறார்கள்.

கோடு என்பதற்கு நீர்க்கரை என்றும் வளைவு என்றும்  பொருள் உண்டு.. 

 நீர்க்கரை என்று பொருள் உண்டு என அரும்பதவுரையாசிரியர் கூறுகிறார். அகர முதலியும் தெரிவிக்கிறது.

கோடியக்கரை = வளைந்த கரை

மந்தரை சூழ்ச்சி படலத்தில் கூனியை குறிப்படும் கம்பர் “உள்ளமும் கோடிய கொடியாள் “ என்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் கேரளத்திலும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். கொல்லங்கோடு, குறுந்தங்கோடு,இடைக்கோடு என பலப்பல கோடு என முடியும் ஊர்கள். .எல்லாம் நீர்க்கரைகளில் உள்ளன. மலை என்று ஒன்று எங்கும் இல்லை.

குமரி மலை – குமரிக் கண்டம் போன்ற சொற்கள் மேர்கணக்கிலோ-கீழ்க் கணக்கிலோ-காப்பியங்களிலோ- பக்தி இலக்கியங்களிலோ எங்கேணும்  கண்டதுண்டா-இருப்பின் தெரிவியுங்கள். ஆதலின் குமரிக் கோடு என்பதற்கு வளைந்த குமரி கடற்கரை என்றே பொருள் என எண்ணத் தோன்றுகிறது.

இப்படிப் பொருள் கொண்டால் குமரி முனைக்குத் தெற்கே ஒரு அகண்டம் இருந்தது எனும் பேச்சே எழவில்லை.

இனி, பஹுருளியாறு ---இந்த ஒரு பாடலிலும் , புறநானூறில் ஒன்றிலும்

(“பஹுருளியாற்றின் மணலினும் பலவே”) தவிர வேறு எங்கேணும் இந்த ஆற்றைப் பார்த்ததுண்டா? இருந்தால் தெரிவியுங்கள்- ‘இலக்கியம் காலத்தை காட்டும் கண்ணாடி’ , காவேரி காப்பியங்களில் எங்கெல்லாம் பாய்கிறாள். 

பரளியாறு என்று ஒரு சிற்றாறு தென் பகுதியில் உண்டென அறிகிறேன்.

கொடுங்கடல்- என்பதற்கு கொடிய கடல் என்று பொருள் கொள்ள வேண்டுமா-

அல்லது வளைந்த கடல் என்று கொள்ளலாமா?

வளைந்த வாளை கொடுவாள் என்கிறோமே...

கொடுக்காய்ப் புளி , வளைந்த காய் அல்லவா....

(கொடு + கடல்=  கொடுக்கடல் /   கொடுங்கடல் ?.......)

இனி, இதுவரை கிடைத்துள்ள  புவியியல் தரவுகளின் அடிப்படையில் பல நூறு அடிகள் உயரமுள்ள மலைத்தொடர் குமரி முனைக்குத் தெற்கே இருந்ததாகவோ பின்னர் அது கடலில் மூழ்கியதாகவோ நம்ப இயலவில்லை.

Journal of Bio-Geography (2000) 27, 1153-1167 இதழில்  உள்ள கட்டுரையைப் பாருங்கள்.

கீழேயுள்ள கூகுள் பதிமத்தையும் கவனியுங்கள்.

குமரி முனை –மணப்பாடு-இடிந்தகரை-ராமேஸ்வரம் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் மூலம் சுமார் 3200 /4000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதிகளில் கடல் மட்டம் சுமார் மூன்று மீ உயர்ந்திருக்கக்கூடும் எனத்தெரிகிறது(ஒரேயடியாக அல்ல –படிப்படியாக) . அப்போது கடல் நீர் பல சதுர கி.மீ நிலப் பரப்பில் விரிந்து பரவியிருக்கும்..நாகரீகம் தோன்றத் துவங்கிய காலத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வு செவி வழிச் செய்தியாக பல தலைமுறை  கடந்து  கலித்தொகையில் ‘ஊர்ந்து வவ்வல்’ என இடம் பெற்றிருக்கிறது. சிலம்பாசிரியர் அதை ‘ கொடுங்கடல் கொள்ள’

என சொல்லி விட்டார். உரையாசிரியர்கள் ஏழ்தெங்க நாடுகளை சேர்த்து விட்டார்கள்.பின் வந்தவர்கள் நம் காலத்தில் இமயமலை போன்ற பெரிய மலைகளையும், கங்கை போன்ற பெரிய ஆறுகளையும் காட்டிவிட்டார்கள்.

ஆக, குமரிக் கண்டம் –குமரியாறு- குமரிநாடு பற்றிய குறிப்புகள் ஏதும் பண்டைய இலக்கியங்களில் இல்லாத காரணத்தால், இவையாவும் இடைக்கால் உரையாசிரியர்களின் கற்பனையே என் எண்ணத் தோன்றுகிறது.”குமரிக் கண்டம்” எனும் பெயரில் சில தமிழ் ஆர்வலர்கள் வெளியிடும் படங்களும் (காண்க: ஜெயபாரதன் அவர்களின் இடுகைகள்)  ஊகங்களின் அடிப்படையில் உருவானவையே.

 


கட்டுரை ஆக்கம்: திரு சிங்கநெஞ்சம் சம்பந்தம்


--Geetha Sambasivam (பேச்சு) 09:06, 4 மே 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 மே 2014, 14:36 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,493 முறைகள் அணுகப்பட்டது.